Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“என்னால் எப்படி ஊழியம் செய்ய முடியும்?”

“என்னால் எப்படி ஊழியம் செய்ய முடியும்?”

“என்னால் எப்படி ஊழியம் செய்ய முடியும்?”

உலகெங்கும் எத்தனையோ சகோதர சகோதரிகள் தீராத வியாதியால் கஷ்டப்பட்டு வருகிறார்கள்; ஆனாலும், பிரசங்க வேலையைத் தவறாமல் செய்வதில் சிறந்த முன்மாதிரிகளாக விளங்குகிறார்கள். உதாரணமாக, லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸில் வசிக்கும் டால்யா என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தச் சகோதரிக்குக் கிட்டத்தட்ட 35 வயது. பிறந்ததிலிருந்தே மூளை வலிப்பு நோயால் (cerebral apoplexy) அவதிப்படுகிறார். இதனால் இவருக்குப் பக்கவாதம் வந்துவிட்டது. அதோடு, பயங்கரமாக வாய் குழறிவிட்டதால் இவரது குடும்பத்தார் மட்டும்தான் இவர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இவரது அம்மா காலினாதான் இவரைக் கவனித்துக்கொள்கிறார். டால்யாவுக்குப் பல கஷ்டங்கள், கவலைகள்; என்றாலும், நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார். எப்படி?

அவரது அம்மா சொல்கிறார்: “1999-ல் என் சொந்தக்காரப் பெண் அபால்யூனியா எங்களைப் பார்க்க வந்தாள். அவள் ஒரு யெகோவாவின் சாட்சி; அதனால், நிறைய பைபிள் விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தாள். டால்யா அவளிடம் பல கேள்விகள் கேட்டாள். கொஞ்ச நாளில், டால்யா அவளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். டால்யா என்ன சொல்கிறாள் என்பதை விளக்க நானும் அவ்வப்போது அந்தப் படிப்பில் கலந்துகொள்வேன். டால்யா கற்றுக்கொண்ட ஒவ்வொரு விஷயமும் அவளுக்குப் பலன் தந்தது, அதைக் கண்ணாரக் கண்டேன். சீக்கிரத்தில், எனக்கும் பைபிளைக் கற்றுத்தரும்படி கேட்டேன்.”

டால்யா பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்; ஆனால், ஒரு கேள்வி மட்டும் அவர் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. கடைசியில், வாய்திறந்து அதை அபால்யூனியாவிடம் கேட்டுவிட்டார்; ஆம், “இந்தப் பக்கவாதத்தை வைத்துக்கொண்டு என்னால் எப்படி ஊழியம் செய்ய முடியும்?” என்று கேட்டார். (மத். 28:19, 20) அதற்கு அபால்யூனியா, “பயப்படாதே, யெகோவா உனக்கு உதவுவார்” என்று நம்பிக்கை அளித்தார். உண்மையில், யெகோவா உதவுகிறார்.

அப்படியென்றால், டால்யா எப்படி ஊழியம் செய்கிறார்? பல வழிகளில். கடிதங்கள் மூலம் சாட்சி கொடுக்க மற்ற சகோதரிகள் அவருக்கு உதவுகிறார்கள். என்ன எழுத வேண்டுமென முதலில் டால்யா சொல்கிறார். அதன்பின், அதை ஒரு கடிதமாக அந்தச் சகோதரிகள் எழுதுகிறார்கள். மொபைல் ஃபோனில் மெசேஜ் அனுப்புவதன் மூலமாகக்கூட டால்யா சாட்சி கொடுக்கிறார். சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கிற சமயங்களில் சகோதர சகோதரிகள் அவரை வெளியே அழைத்துச் செல்கிறார்கள்; பூங்காக்களிலும் தெருக்களிலும் பார்க்கிற நபர்களிடம் அவர் சாட்சி கொடுக்கிறார்.

டால்யாவும் அவரது அம்மாவும் சத்தியத்தில் நல்ல முன்னேற்றம் செய்திருக்கிறார்கள். இருவரும் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, அதன் அடையாளமாக நவம்பர் 2004-ல் ஞானஸ்நானம் பெற்றார்கள். செப்டம்பர் 2008-ல், வில்னியஸில் போலிஷ் மொழி தொகுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அங்கு நிறையப் பிரஸ்தாபிகள் தேவைப்பட்டதால் டால்யாவும் அவரது அம்மாவும் அந்தத் தொகுதியோடு சேர்ந்துகொண்டார்கள். டால்யா சொல்கிறார்: “சில சமயங்களில், ‘மாதம் பிறந்து இவ்வளவு நாளாகியும் இன்னும் ஊழியத்திற்குப் போகவில்லையே’ என நினைத்துக் கவலைப்படுவேன். ஆனால், அதைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்த உடனேயே யாராவது வந்து என்னை ஊழியத்திற்குக் கூட்டிக்கொண்டு போவார்கள்.” நம் அன்புச் சகோதரி டால்யா தன் நிலையைப் பற்றி எப்படி உணருகிறார்? அவரே சொல்கிறார்: “இந்த வியாதி என் உடலை முடக்கிவிட்டது, ஆனால் என் உள்ளத்தை முடக்கிவிடவில்லை. யெகோவாவைப் பற்றி என்னால் சாட்சி கொடுக்க முடிவதை நினைத்து ரொம்பச் சந்தோஷப்படுகிறேன்!”