Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

“நான் உன்னை மறப்பதில்லை”

“நான் உன்னை மறப்பதில்லை”

யெகோவா தேவனுக்கு தம் மக்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? எந்தளவுக்கு அக்கறை இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடிந்த ஒரே நபர், யெகோவாதான்! அவருடைய புத்தகமான பைபிளில் அவர் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏசாயா 49:15-ல் உள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள்.

யெகோவா தம்முடைய மக்கள்மீது இருக்கிற ஆழமான உணர்ச்சிகளை விளக்குவதற்கு, ஏசாயா மூலம் தத்ரூபமான ஓர் உதாரணத்தைச் சொல்கிறார். மனதைத் தொடும் இந்த உதாரணத்தில் யோசிக்க வைக்கும் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்: “ஒரு ஸ்திரீ தான் பெற்ற பிள்ளைக்கு இரங்காமல் பால் குடிக்கும் தன் குழந்தையை மறப்பாளோ?” (திருத்திய மொழிபெயர்ப்பு) இதைக் கேட்ட உடனே, ‘பாலூட்டும் ஒரு தாயால் தன் பச்சிளங்குழந்தையை எப்படி மறக்க முடியும்?’ என்று நினைப்பீர்கள். அந்தக் குழந்தை இரவும் பகலும் தாயையே நம்பியிருக்கும். எது வேண்டுமென்றாலும் அம்மாவுக்கு ‘குரல்கொடுக்கும்’! ஆனால், யெகோவா கேட்ட கேள்வியில் இன்னும் அர்த்தம் பொதிந்துள்ளது.

ஒரு தாய் தன் குழந்தைக்கு ஏன் பாலூட்டுகிறாள், அதன் ஒவ்வொரு தேவைகளையும் ஏன் கவனித்துக்கொள்கிறாள்? அதன் அழுகையை அடக்குவதற்காகவா? இல்லை. ‘தான் பெற்ற பிள்ளைமீது’ இயல்பாகவே ‘இரக்கம்’ இருப்பதால்தான். (யாத்திராகமம் 33:19) அம்மாவே கதியென்று இருக்கும் பிஞ்சு குழந்தையிடம் ஒரு தாய் காட்டும் பாசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது!

ஆனால், சோகத்திலும் சோகமான விஷயம் என்னவென்றால் இன்று சில தாய்மார்கள் தாய்ப்பாலுக்காக ஏங்கும் தங்கள் குழந்தையிடம் இரக்கம் காட்டுவதில்லை. அதனால்தான், “இவர்கள் மறந்தாலும்” என யெகோவா சொல்கிறார். நாம் வாழும் இந்த உலகில் அநேக ஆண்களும் பெண்களும், “நம்பிக்கை துரோகிகளாக, பந்தபாசம் இல்லாதவர்களாக” இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) தாய்மார் சிலர் தங்களுடைய பிஞ்சு குழந்தைகளைச் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிடுவதை, கொடுமைப்படுத்துவதை, அல்லது அநாதைகளாக விட்டுவிடுவதைப் பற்றி சில சமயங்களில் நாம் கேள்விப்படுகிறோம். ஏசாயா 49:15-ஐ ஒரு பைபிள் ஆராய்ச்சி நூல் இவ்வாறு விளக்குகிறது: “தாய்மார்கள் பாவம் செய்யும் இயல்புடையவர்கள். அதனால், சில சமயங்களில் அவர்களிடம் இருக்கும் தீயகுணம் அவர்களுடைய அன்பை அடக்கிவிடுகிறது. ஆக, மனித அன்பிலேயே மேலான இந்த தாயன்புகூட மங்கிவிடலாம்.”

ஆனாலும், “நான் உன்னை மறப்பதில்லை” என்று யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். இப்போது, ஏசாயா 49:15-ல் யெகோவா கேட்ட கேள்வியின் கருத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பாவ இயல்புள்ள ஒரு தாயைவிட தாம் பன்மடங்கு இரக்கமுள்ளவர் என்பதை அவர் இங்கு தெளிவுபடுத்துகிறார். ஆம், பாவ இயல்புள்ள தாய்மார் சில சமயங்களில் தங்களுடைய கைக்குழந்தைகள்மேல் இரக்கம் காட்டுவதில்லை. யெகோவாவோ, தம்முடைய உதவியை நாடுவோருக்கு இரக்கம் காட்ட ஒருபோதும் மறப்பதில்லை. ஆகவே, ஏசாயா 49:15 சம்பந்தமாக, மேற்குறிப்பிடப்பட்ட ஆராய்ச்சி நூல் இவ்வாறு சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை: “கடவுளின் அன்புக்கு இதைவிட வலிமையான ஒரு வர்ணனையை பழைய ஏற்பாட்டில் காண முடியாது.”

யெகோவா எந்தளவு ‘கரிசனை உள்ளவர்’ என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு ஆறுதலளிக்கிறது, அல்லவா? (லூக்கா 1:78) அப்படிப்பட்ட கடவுளிடம் எப்படி நெருங்கி வரலாமென நீங்களும் கற்றுக்கொள்ளலாமே! அன்புள்ளம் கொண்ட கடவுள் தம்மை வழிபடுவோருக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்.”—எபிரெயர் 13:5. (w12-E 02/01)