Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சத்தியத்தில் தனிமரமாக இருந்தாலும் சந்தோஷம் தழைக்கும்

சத்தியத்தில் தனிமரமாக இருந்தாலும் சந்தோஷம் தழைக்கும்

சத்தியத்தில் தனிமரமாக இருந்தாலும் சந்தோஷம் தழைக்கும்

‘உன்னால் உன் [துணை] மீட்படையலாம் அல்லவா?’ —1 கொ. 7:16.

பதில் கண்டுபிடிக்க முடியுமா?

தனியாக சத்தியத்தில் இருப்பவர்கள் தங்களுடைய குடும்பத்தில் சமாதானம் நிலவ என்ன செய்யலாம்?

ஒரு கிறிஸ்தவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள தன் குடும்பத்தாருக்கு எப்படி உதவலாம்?

சத்தியத்தில் தனியாக இருப்பவர்களுக்குச் சக கிறிஸ்தவர்கள் எப்படி உதவலாம்?

1. ஒருவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது குடும்பத்திலுள்ள சிலர் எப்படிப் பிரதிபலிக்கலாம்?

 “‘பரலோக அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது’ என்று பிரசங்கியுங்கள்” என இயேசு தமது அப்போஸ்தலர்களிடம் சொல்லி அனுப்பினார். (மத். 10:1, 7) இந்த நற்செய்தியை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு சமாதானமும் சந்தோஷமும் கிடைக்கும். இருந்தாலும், பிரசங்க வேலையை அநேகர் எதிர்ப்பார்கள் என்றும் அப்போஸ்தலர்களிடம் இயேசு சொன்னார். (மத். 10:16-23) அந்த எதிர்ப்பு குடும்பத்தாரிடமிருந்து வரும்போது அது தாளா வேதனையே.மத்தேயு 10:34-36-ஐ வாசியுங்கள்.

2. சத்தியத்தில் தனியாக இருப்பவர்களுக்குச் சந்தோஷம் ஏன் எட்டாக் கனி அல்ல?

2 அப்படியென்றால், சத்தியத்தில் தனியாக இருப்பவர்களுக்குச் சந்தோஷம் எட்டாக் கனியா? இல்லவே இல்லை! சிலருடைய குடும்பங்களில் கடுமையான எதிர்ப்புத் தலைதூக்கினாலும், எல்லாருமே அத்தகைய எதிர்ப்பைச் சந்திப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதோடு, குடும்பத்தாரின் எதிர்ப்புத் தொடர்கதையாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. விசுவாசத்தில் இருப்பவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதில்தான் சந்தோஷம் அடங்கியிருக்கிறது—குடும்பத்தார் எதிர்ப்புத் தெரிவிக்கையிலும் சரி ஆர்வம் காட்டாதிருக்கையிலும் சரி. மேலும், தமக்கு உண்மையாய் இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார், இக்கட்டான சூழ்நிலைகளிலும் சந்தோஷமாய் இருக்க உதவுகிறார். அதற்கு அவர்கள் தங்களுடைய பங்கில் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள் உள்ளன: (1) வீட்டில் சமாதானம் நிலவ உழைக்க வேண்டும், (2) குடும்பத்தார் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள உள்ளப்பூர்வமாய் உதவ வேண்டும்.

வீட்டில் சமாதானம் நிலவ உழையுங்கள்

3. வீட்டில் சமாதானம் நிலவ ஒரு கிறிஸ்தவர் ஏன் கடினமாய் உழைக்க வேண்டும்?

3 வீட்டில் சமாதான சூழல் நிலவினால், சத்தியத்தைக் குடும்பத்தார் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. (யாக்கோபு 3:18-ஐ வாசியுங்கள்.) அவர்கள் எல்லாருமே தூய வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், வீட்டில் சமாதானம் நிலவ ஒரு கிறிஸ்தவர் கடினமாய் உழைக்க வேண்டும். இதற்கு அவர் என்ன செய்யலாம்?

4. மனசமாதானத்தை இழந்துவிடாதிருக்க கிறிஸ்தவர்கள் என்னென்ன செய்யலாம்?

4 கிறிஸ்தவர்கள் மனசமாதானத்தை இழந்துவிடக் கூடாது. இதற்காக உள்ளப்பூர்வமாய் ஜெபம் செய்ய வேண்டும்; அப்போது ஈடில்லா “தேவசமாதானம்” கிடைக்கும். (பிலி. 4:6, 7) யெகோவாவைப் பற்றி மேன்மேலும் கற்றுக்கொண்டு, பைபிள் நியமங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது சந்தோஷமும் சமாதானமும் பெருகும். (ஏசா. 54:13) சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்போதும்கூட சந்தோஷமும் சமாதானமும் கிடைக்கும். இதுபோன்ற ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட சத்தியத்தில் தனியாக இருப்பவர்களுக்கு வழி இல்லாமல் இல்லை. உதாரணத்திற்கு, என்ஸா என்ற சகோதரியை எடுத்துக்கொள்வோம். * இவருடைய கணவர் சத்தியத்தை மூர்க்கத்தனமாய் எதிர்க்கிறார். என்றாலும், இவர் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஊழியத்திற்குப் போகிறார். இவர் சொல்கிறார்: “மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நான் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார், நல்ல பலன்களைத் தந்திருக்கிறார்.” இத்தகைய ஆசீர்வாதங்கள் சமாதானத்தையும் திருப்தியையும் சந்தோஷத்தையும் இவருக்குத் தருகின்றன.

5. சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோடு சமாதானத்தை வளர்த்துக்கொள்வது ஏன் கஷ்டமாக இருக்கலாம், பிரச்சினை எழும்போது என்ன செய்வது முக்கியம்?

5 சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோடு சமாதானத்தை வளர்த்துக்கொள்ள நாம் ஊக்கமாய் முயற்சி எடுக்க வேண்டும். இது கஷ்டமாக இருக்கலாம்; ஏனென்றால், சில சமயங்களில் அவர்கள் செய்யச் சொல்கிற காரியங்கள் பைபிள் நியமங்களுக்கு எதிராக இருக்கலாம். அந்த நியமங்களைக் கடைப்பிடிப்பதில் நாம் உறுதியாய் இருக்கும்போது அவர்கள் கோபப்படலாம்; ஆனாலும், என்றாவது ஒருநாள் குடும்பத்தில் சமாதானம் பிறக்கலாம். மறுபட்சத்தில், பைபிள் நியமங்களுக்கு முரணாக இல்லாத காரியங்களைச் செய்ய நாம் முரண்டு பிடித்தால், குடும்ப உறவில் வீணாக விரிசல்தான் விழும். (நீதிமொழிகள் 16:7-ஐ வாசியுங்கள்.) பிரச்சினை எழும்போது அதற்கான பைபிள் அறிவுரைகளைத் தெரிந்துகொள்ள உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் வெளியிட்டுள்ள பிரசுரங்களை ஆராய்வதும், மூப்பர்களின் உதவியை நாடுவதும் முக்கியம்.—நீதி. 11:14.

6, 7. (அ) யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்கிறவர்களை அவர்களுடைய குடும்பத்தார் சிலர் ஏன் எதிர்க்கலாம்? (ஆ) ஒரு கிறிஸ்தவரோ பைபிள் மாணாக்கரோ வீட்டில் எப்படி எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டும்?

6 வீட்டில் சமாதானம் நிலவ ஒருவர் யெகோவாமீது நம்பிக்கை வைப்பது முக்கியம், சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதும் முக்கியம். (நீதி. 16:20) புதிதாக பைபிளைப் படிப்பவர்கள்கூட இப்படிச் செய்வது அவசியம். சிலர் தங்கள் மணத்துணை பைபிள் படிப்பதை எதிர்க்காதிருக்கலாம்; அது குடும்பத்துக்கு நல்லது என்றும்கூட நம்பலாம். ஆனால், வேறு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கலாம். இப்போது யெகோவாவின் சாட்சியாக இருக்கும் எஸ்தர் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். தனது கணவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தபோது அவருக்குப் பயங்கர கோபம் வந்ததாக அவரே சொல்கிறார். “அவருடைய புத்தகங்களை வீசி எறிந்துவிட்டேன் அல்லது தீ வைத்துக் கொளுத்திவிட்டேன்” என்கிறார். ஹாவர்ட் என்பவரும் ஆரம்பத்தில் தன் மனைவி பைபிள் படிக்கையில் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “மனைவி ஏமாந்துபோய் வேறு மதத்தில் சேர்ந்துவிடுவாளோ என்றுதான் எல்லாக் கணவர்களும் பயப்படுகிறார்கள். அந்தப் பயத்தில், என்ன செய்வதென்று தெரியாமல் மனைவிமீது வெறுப்பைக் கொட்டுகிறார்கள்.”

7 மணத்துணை எதிர்க்கிறார் என்பதற்காக பைபிள் படிப்பை நிறுத்த வேண்டியதில்லை என்பதை பைபிள் மாணாக்கருக்குப் புரிய வைக்க வேண்டும். துணையிடம் சாந்தத்தையும் மரியாதையையும் காட்டுவதன் மூலம் பெரும்பாலும் அவரால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். (1 பே. 3:15) “நான் எதிர்ப்புத் தெரிவித்தபோது என் மனைவி ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று ஹாவர்ட் சொல்கிறார். அவருடைய மனைவி இவ்வாறு கூறுகிறார்: “பைபிள் படிப்பதை விட்டுவிடச் சொல்லி என் கணவர் வற்புறுத்தினார். என்னை யெகோவாவின் சாட்சிகள் நன்றாக ஏமாற்றிவிட்டதாகச் சொன்னார். அவருடன் வாக்குவாதம் செய்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கலாம், ஆனால் எப்படி என்றுதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’ எனச் சொன்னேன். பின்பு, நான் படிக்கும் புத்தகத்தை வாசித்துப் பார்க்கும்படி அவரிடம் சொன்னேன். அவரும் வாசித்தார், அதிலுள்ள உண்மைகளை அவரால் மறுக்க முடியவில்லை. அதுமுதல் அவருடைய கண்ணோட்டம் அடியோடு மாறியது.” ஒரு கிறிஸ்தவர் கூட்டங்களுக்கோ வெளி ஊழியத்திற்கோ போகும்போது சத்தியத்தில் இல்லாத அவரது துணை தனிமையில் வாடலாம் அல்லது மணவாழ்க்கையே முறிந்துவிடும் என நினைக்கலாம். இதை அந்தக் கிறிஸ்தவர் எப்போதும் மனதில் வைத்துக்கொண்டு, தன் துணையிடம் அன்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்; அவரது துணையின் கவலையைப் போக்க இது பெரிதும் உதவும்.

உண்மை வழிபாட்டை ஏற்றுக்கொள்ள உதவுங்கள்

8. சத்தியத்தில் இல்லாத மணத்துணையை உடையவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் என்ன அறிவுரை கொடுத்தார்?

8 மணத்துணை சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக அவரைவிட்டுப் பிரிந்து போகக் கூடாதெனக் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கொடுத்தார். * (1 கொரிந்தியர் 7:12-16-ஐ வாசியுங்கள்.) மணத்துணை என்றாவது ஒருநாள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்பதைக் கிறிஸ்தவர் மனதில் வைப்பது சந்தோஷத்தை இழந்துவிடாதிருக்க உதவும். என்றாலும், தன் துணைக்குச் சத்தியத்தைப் புரிய வைக்க முயற்சி எடுக்கையில் அவர் கவனமாக இருப்பது முக்கியம்; இதை பின்வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.

9. குடும்பத்தாரிடம் சத்தியத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கையில் எதைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்?

9 பைபிள் சத்தியத்தைப் படிக்கும்போது, “பார்க்கிற ஒவ்வொருவரிடமும் அதைப் பற்றிச் சொல்ல ஆசைப்பட்டேன்!” என்று ஜேஸன் சொல்கிறார். பைபிளில் கற்றுக்கொண்ட விஷயங்கள் சத்தியம் என்பதை ஒரு பைபிள் மாணாக்கர் புரிந்துகொள்ளும்போது, சந்தோஷம் தாளாமல் அதைப் பற்றியே சதா பேசிக்கொண்டிருக்கலாம். குடும்பத்திலுள்ள மற்றவர்களும் உடனடியாகச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் எதிர்பார்க்கலாம்; ஆனால், அவர்கள் சத்தியத்தை எதிர்க்கலாம். ஜேஸனிடம் ஆரம்பத்தில் பொங்கி வழிந்த ஆர்வத்தைப் பார்த்த அவருடைய மனைவிக்கு எப்படி இருந்தது? “எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது” என்கிறார் அவர். கணவர் சத்தியத்திற்கு வந்து 18 வருடங்களுக்குப் பிறகு சத்தியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சகோதரி, “மெதுமெதுவாகத்தான் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது” என்று சொல்கிறார். ஒருவேளை, உங்கள் பைபிள் மாணாக்கருடைய மணத்துணை உண்மை வழிபாட்டை ஏற்றுக்கொள்ள கொஞ்சமும் மனதில்லாதிருக்கலாம். அப்படியென்றால், அவரிடம் எப்படிச் சாதுரியமாகப் பேசலாம் என்பதை மாணாக்கருக்கு ஏன் சொல்லிக் கொடுக்கக் கூடாது? அதை நீங்கள் இருவரும் ஏன் அடிக்கடி பேசிப் பார்க்கக் கூடாது? “எனது போதனைகள் மழையைப் போன்று வரும், பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும், மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும் . . . வரும்” என்று மோசே சொன்னார். (உபா. 32:2, ஈஸி டு ரீட் வர்ஷன்) சத்தியத்தை எந்நேரமும் அடைமழை போல் கொட்டுவதற்குப் பதிலாக ஏற்ற நேரங்களில் துளித்துளியாகச் சொல்வது பெரும்பாலும் அதிக பலனைக் கொடுக்கும்.

10-12. (அ) சத்தியத்தில் இல்லாத மணத்துணையை உடைய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு என்ன அறிவுரை கொடுத்தார்? (ஆ) 1 பேதுரு 3:1, 2-லுள்ள அறிவுரையை பைபிள் மாணாக்கர் ஒருவர் எப்படிக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொண்டார்?

10 சத்தியத்தில் இல்லாத கணவரை உடைய கிறிஸ்தவ மனைவிகளுக்கு அப்போஸ்தலன் பேதுரு கடவுளுடைய தூண்டுதலால் இவ்வாறு அறிவுரை கொடுத்தார்: “உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், உங்கள் கற்புள்ள நடத்தையையும் நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து உங்கள் நடத்தையினாலேயே விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்; ஆம், நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே அவர் விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்.” (1 பே. 3:1, 2) கணவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால்கூட அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமும் ஆழ்ந்த மரியாதை காட்டுவதன் மூலமும் அவரைச் சத்தியத்திடம் மனைவியால் கவர முடியும். அதேபோல், சத்தியத்திலுள்ள ஒரு கணவர் தன் மனைவி எவ்வளவுதான் எதிர்த்தாலும் கடவுள் எதிர்பார்க்கிற விதத்தில் நடந்துகொண்டு அன்பான குடும்பத் தலைவராக இருக்க வேண்டும்.—1 பே. 3:7-9.

11 பேதுருவின் புத்திமதியைப் பின்பற்றுவதால் வரும் பயனை ஏராளமான அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. செல்மா என்ற பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது அவருடைய கணவரான ஸ்டீவுக்குப் பிடிக்கவில்லை. தான் கோபப்பட்டதாகவும் பொறாமைப்பட்டதாகவும் பயப்பட்டதாகவும் ஸ்டீவே ஒப்புக்கொள்கிறார். செல்மா சொல்கிறார்: “சத்தியத்தைப் படிப்பதற்கு முன்புகூட என் கணவருடன் வாழ்வது முள்மேல் நடப்பதைப் போல் இருந்தது. மூக்குக்கு மேல் அவருக்குக் கோபம் வரும். நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்ததும் இன்னும் பயங்கரமாகக் கோபப்பட ஆரம்பித்தார்.” எது செல்மாவுக்கு உதவியது?

12 தனக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரியிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு பாடத்தைப் பற்றி செல்மா சொல்கிறார்: “ஒருநாள் பைபிள் படிப்பில் கலந்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. ஏனென்றால், அதற்கு முந்தின நாள் ராத்திரி ஒரு விஷயத்தை என் வீட்டுக்காரருக்குப் புரிய வைக்க முயன்றபோது அவர் என்னை அடித்துவிட்டார்; எனக்கு ஒரே கவலையாகிவிட்டது, என்மீதே பரிதாபமும் ஏற்பட்டது. நடந்ததையெல்லாம் அந்தச் சகோதரியிடம் சொன்னேன், என் மனது எந்தளவு புண்பட்டிருந்தது என்பதையும் சொன்னேன்; அப்போது அவர் என்னை 1 கொரிந்தியர் 13:4-7-ஐ வாசிக்கச் சொன்னார். நான் வாசித்துவிட்டு, ‘அன்பான இந்தக் காரியங்கள் எதையுமே என் கணவர் எனக்குச் செய்வதில்லை’ என்றேன். அந்தச் சகோதரியோ வேறு விதமாக என்னைச் சிந்திக்க வைத்தார்; ‘இந்த அன்பான காரியங்களில் எதையெல்லாம் நீங்கள் உங்கள் கணவருக்குச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘எதையுமே செய்வதில்லை; அந்த மனுஷனோடு வாழ்வதே பெரிய விஷயம்’ என்றேன். அந்தச் சகோதரி மென்மையாக, ‘செல்மா, இப்போது உங்களில் யார் கிறிஸ்தவராக ஆவதற்கு முயற்சி செய்கிறீர்கள்? நீங்களா உங்கள் கணவரா?’ என்று கேட்டார். என்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்; என் கணவரிடம் அதிக அன்பாக நடந்துகொள்ள எனக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். மெல்லமெல்ல நிலைமை மாற ஆரம்பித்தது.” 17 வருடங்களுக்குப் பிறகு ஸ்டீவ் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்.

மற்றவர்கள் எப்படி உதவலாம்?

13, 14. சத்தியத்தில் தனியாக இருப்பவர்களுக்குச் சபையிலுள்ள மற்றவர்கள் எப்படி உதவலாம்?

13 மழைத் துளிகள் ஒவ்வொன்றும் மண்ணை நனைத்து செடிகொடிகள் வளர வழிசெய்வதைப் போல, சபையிலுள்ள ஒவ்வொருவரும் சத்தியத்தில் தனியாக இருப்பவர்களின் சந்தோஷத்திற்கு வழிசெய்யலாம். “சகோதர சகோதரிகள் காட்டிய அன்புதான் சத்தியத்தில் நிலைத்திருக்க எனக்கு உதவியது” என்று பிரேசிலைச் சேர்ந்த எல்வீனா சொல்கிறார்.

14 சபையார் காட்டும் கனிவும் அக்கறையும், சத்தியத்தில் இல்லாதவரின் மனதைத் தொடலாம். நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி சத்தியத்தைக் கற்றுக்கொண்டு 13 வருடங்களுக்குப் பிறகு கிறிஸ்தவரானார்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு யெகோவாவின் சாட்சியுடன் அவருடைய வண்டியில் நான் போய்க்கொண்டிருந்தபோது அது ரிப்பேராகி நின்றுவிட்டது. பக்கத்து கிராமத்தில் இருந்த யெகோவாவின் சாட்சிகளை அவர் தேடிக் கண்டுபிடித்தார்; அன்றைக்கு ராத்திரி நாங்கள் அங்கேயே தங்குவதற்கு அவர்கள் வசதி செய்துகொடுத்தார்கள். ஏதோ சிறுவயதிலிருந்தே எங்களுக்குத் தெரிந்தவர்கள்போல் கவனித்துக்கொண்டார்கள். என் மனைவி சதா சொல்லிக்கொண்டிருந்த கிறிஸ்தவ அன்பை அந்த நிமிடம் நான் ருசித்தேன்.” இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தன் கணவர் சத்தியத்திற்கு வந்து 18 வருடங்கள் கழித்து சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்; “யெகோவாவின் சாட்சிகள் எங்கள் இருவரையும் விருந்துகளுக்கு அழைப்பார்கள். என்னையும் அவர்களில் ஒருவரைப்போல்தான் நடத்தினார்கள்” என்று அவர் சொல்கிறார். * அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு நபர் பல வருடங்களுக்குப் பிறகு யெகோவாவின் சாட்சியாக மாறினார்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “சகோதர சகோதரிகள் எங்களைச் சந்திக்க வீட்டுக்கு வருவார்கள் அல்லது அவர்களுடைய வீட்டுக்கு எங்களை அழைப்பார்கள். அவர்கள் காட்டிய அன்பையும் அக்கறையையும் என்னால் கவனிக்க முடிந்தது. முக்கியமாக, நான் ஆஸ்பத்திரியில் இருந்த சமயத்தில் அதைக் கவனிக்க முடிந்தது; நிறையப் பேர் என்னைப் பார்க்க வந்தார்கள்.” சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரிடம் இது போன்ற அக்கறையை நீங்கள் காட்ட முடியுமா?

15, 16. சத்தியத்தில் தனியாக இருப்பவர் சந்தோஷத்துடன் இருக்க எது உதவலாம்?

15 சத்தியத்தில் தனியாக இருப்பவர் பல வருடங்களாக நல்ல குணங்களைக் காட்டினாலும்கூட, சாதுரியமாகச் சாட்சி கொடுத்தாலும்கூட, அவருடைய மணத்துணையோ பிள்ளைகளோ பெற்றோர்களோ உறவினர்களோ சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் எனச் சொல்ல முடியாது. அவர்களில் சிலர் சத்தியத்தின்மீது துளியும் ஆர்வம் காட்டாதிருக்கலாம் அல்லது தொடர்ந்து கடுமையாய் எதிர்க்கலாம். (மத். 10:35-37) என்றாலும், சத்தியத்தில் உள்ளவர் கிறிஸ்தவக் குணங்களை வெளிக்காட்டும்போது அது மிகச் சிறந்த பலனை அளிக்கலாம். முன்பு சத்தியத்தில் இல்லாத ஒரு கணவர் இவ்வாறு சொல்கிறார்: “சத்தியத்தில் இருப்பவர் காட்டும் அருமையான குணங்கள், சத்தியத்தில் இல்லாத மணத்துணையின் மனதையும் இருதயத்தையும் எப்படித் தொடும் என்று சொல்ல முடியாது. எனவே, மணத்துணை சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டாரென நினைத்து முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்.”

16 சத்தியத்தைக் குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட சத்தியத்தில் இருப்பவர் சந்தோஷமாக இருக்க முடியும். ஒரு சகோதரி தன் கணவருக்குச் சத்தியத்தைப் புரிய வைக்க 21 வருடங்களாக முயன்றும் பயனில்லாமல் போயிருக்கிறது; அவர் இவ்வாறு சொல்கிறார்: “எப்போதும் என்னால் சந்தோஷமாய் இருக்க முடிகிறது; ஏனென்றால், யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொள்ள முயற்சி செய்கிறேன், அவருக்கு உண்மையாய் நிலைத்திருக்கிறேன், அவருடன் உள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள பாடுபடுகிறேன். தனிப்பட்ட படிப்பு படிப்பது, கூட்டங்களுக்குப் போவது, ஊழியத்தில் கலந்துகொள்வது, சபையிலுள்ளவர்களுக்கு உதவுவது போன்ற ஆன்மீகக் காரியங்களில் என்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொள்கிறேன்; இவையெல்லாம் யெகோவாவிடம் என்னை நெருங்கிவரச் செய்திருக்கின்றன, என் இருதயத்தைக் காத்துக்கொள்ளவும் உதவியிருக்கின்றன.”—நீதி. 4:23.

முயற்சியை விட்டுவிடாதீர்கள்!

17, 18. சத்தியத்தில் தனியாக இருப்பவர்கள்கூட எவ்வாறு நம்பிக்கையுடன் இருக்க முடியும்?

17 சத்தியத்தில் தனியாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் முயற்சியை விட்டுவிடாதீர்கள். ‘யெகோவா தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்’ என்பதை மறந்துவிடாதீர்கள். (1 சா. 12:22) நீங்கள் அவரோடிருக்கும்வரை அவர் உங்களோடிருப்பார். (2 நாளாகமம் 15:2-ஐ வாசியுங்கள்.) எனவே, ‘யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிருங்கள்.’ ஆம், ‘உங்கள் வழியை யெகோவாவுக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.’ (சங். 37:4, 5) “ஜெபத்தில் உறுதியாயிருங்கள்,” எல்லா விதமான கஷ்டங்களையும் சகித்திருக்க நம்முடைய அன்பான பரலோகத் தகப்பன் உதவுவார் என நம்பிக்கையாய் இருங்கள்.—ரோ. 12:12.

18 வீட்டில் சமாதானம் நிலவ நீங்கள் எடுக்கிற முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு யெகோவாவின் சக்திக்காக மன்றாடுங்கள். (எபி. 12:14) ஆம், வீட்டில் சமாதானம் நிலவ நீங்கள் வழிசெய்ய முடியும்; இதனால், உங்கள் குடும்பத்தாரும்கூட ஒருநாள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளலாம். ‘எல்லாக் காரியங்களையும் கடவுளுடைய மகிமைக்கென்றே செய்யும்போது’ நீங்கள் சந்தோஷத்தையும் மன சமாதானத்தையும் பெறுவீர்கள். (1 கொ. 10:31) இப்படியெல்லாம் செய்ய நீங்கள் முயற்சி எடுக்கையில், சபையிலுள்ள சகோதர சகோதரிகள் உங்களுக்குப் பக்க துணையாக இருக்கிறார்கள் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது!

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 4 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 8 மணத்துணை எல்லைமீறி நடந்துகொள்கையில் சட்டப்படி பிரிந்து போவது தவறென பவுல் சொல்லவில்லை. அது ஒருவருடைய தனிப்பட்ட தீர்மானம், ஆனால் மிக முக்கியமான தீர்மானம். கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கங்கள் 251-253-ஐப் பாருங்கள்.

^ பாரா. 14 சத்தியத்தில் இல்லாதவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதை பைபிள் தடை செய்வதில்லை.—1 கொ. 10:27.

[கேள்விகள்]

[பக்கம் 28-ன் படம்]

உங்கள் மத நம்பிக்கைகளை விளக்க சரியான நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்

[பக்கம் 29-ன் படம்]

சத்தியத்தில் இல்லாத மணத்துணையிடம் அக்கறை காட்டுங்கள்