Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லா “கிறிஸ்தவர்களும்” உண்மையான கிறிஸ்தவர்களா?

எல்லா “கிறிஸ்தவர்களும்” உண்மையான கிறிஸ்தவர்களா?

எல்லா “கிறிஸ்தவர்களும்” உண்மையான கிறிஸ்தவர்களா?

லகத்தில் எவ்வளவு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? 2010-ல், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 230 கோடி கிறிஸ்தவர்கள் இருந்ததாக ஒரு புத்தகம் சொல்கிறது. (அட்லஸ் ஆஃப் க்லோபல் கிறிஸ்டியானிட்டி ) அந்தக் கிறிஸ்தவர்கள், 41,000-த்துக்கும் அதிகமான பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததாகவும், அந்த ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி கோட்பாடுகளும் விதிமுறைகளும் இருந்ததாகவும் அதே புத்தகம் சொல்கிறது. இப்படி எக்கச்சக்கமான பிரிவுகள் இருப்பதால், ‘யார்தான் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள்?’ என்று நினைத்து நிறைய பேர் குழம்பிப்போய்விடுகிறார்கள், இல்லையென்றால் வெறுத்துப்போய்விடுகிறார்கள்.

இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் இன்னொரு நாட்டுக்குப் போகிறீர்கள் என்றால், அதிகாரிகள் விசாரிக்கும்போது உங்கள் பெயர், நாடு போன்றவற்றைச் சொன்னால் மட்டும் போதாது, அதை நிரூபிக்கவும் வேண்டும். அதற்கு உங்களுடைய அடையாள அட்டையை, ஒருவேளை பாஸ்போர்ட்டை, காட்ட வேண்டியிருக்கும். அதே மாதிரி, ஒரு கிறிஸ்தவர் இயேசு கிறிஸ்துவை நம்புவதாகச் சொன்னால் மட்டும் போதாது, அதை நிரூபிக்கவும் வேண்டும். அதை அவர் எப்படிச் செய்யலாம்?

இயேசு இறந்து கிட்டத்தட்ட 10 வருஷங்களுக்குப் பிறகுதான், “கிறிஸ்தவர்கள்” என்ற வார்த்தை புழக்கத்துக்கு வந்தது. “தெய்வீக வழிநடத்துதலால், [கிறிஸ்துவின்] சீஷர்கள் முதன்முதலாக அந்தியோகியாவில்தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்” என பைபிள் சரித்திர வல்லுநரான லூக்கா எழுதினார். (அப்போஸ்தலர் 11:26) அப்படியென்றால், கிறிஸ்துவின் சீஷர்கள்தான் கிறிஸ்தவர்கள். இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருப்பதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ‘அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும், தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், இயேசு மாதிரியே நடந்துகொள்ள மனமுள்ளவராக இருக்க வேண்டும்’ என்று ஒரு பைபிள் அகராதி சொல்கிறது. (தி நியூ இன்டெர்நேஷனல் டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்ட்டமென்ட் தியாலஜி ) அதனால், இயேசுவின் எல்லா போதனைகளையும் அறிவுரைகளையும் முழுவதுமாகப் பின்பற்றி நடக்கிறவர்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் இன்று இருக்கிறார்களா? அவர்களை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்? அதைப் பற்றி இயேசுவே என்ன சொல்லியிருக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். இயேசு சொன்ன ஐந்து விஷயங்கள் அவருடைய உண்மையான சீஷர்களை அடையாளம் கண்டுபிடிக்க எப்படி உதவும்… ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படி இயேசு சொன்ன மாதிரியே நடந்துகொண்டார்கள்… இன்று அவர்களைப் போலவே நடந்துகொள்ளும் கிறிஸ்தவர்கள் யார்… என்றெல்லாம் அடுத்துவரும் கட்டுரைகளில் பார்ப்போம்.