Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

“திரும்பி வருகிறோம் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்”

“திரும்பி வருகிறோம் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்”

நீங்கள் முன்பு யெகோவாவை வணங்கி வந்தவரா? மறுபடியும் அவரை சேவிக்க ஆசைப்படுகிறீர்களா? ஆனால், அவர் உங்களை ஏற்றுக்கொள்வாரா என்று தயங்கி நிற்கிறீர்களா? இந்தக் கட்டுரையையும் அடுத்த கட்டுரையையும் தயவுசெய்து கவனமாகப் படியுங்கள். அவை உங்களுக்காகவே விசேஷமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

“உ ங்க மனச காயப்படுத்திட்டேன், திரும்பவும் உங்களுக்குச் சேவை செய்ய ஆசைப்படுகிறேன். யெகோவாவே, தயவுசெய்து என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று ஒரு பெண் ஜெபம் செய்தார். இவர் யெகோவாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டவர். இவருடைய நிலைமையை நினைத்து உங்கள் உள்ளம் உருகுகிறதா? ஒருவேளை நீங்கள் இப்படிக் கேட்கலாம்: ‘தம்மை வணங்குவதை நிறுத்திவிட்ட ஒருவரைப் பற்றி கடவுள் எப்படி உணருகிறார்? அவர்களை ஞாபகத்தில் வைத்திருப்பாரா? அவர்கள் மறுபடியும் தம்மிடம் “திரும்பிவர” வேண்டுமென்று விரும்புகிறாரா?’ இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பைபிளில் எரேமியா எழுதி வைத்திருக்கிறார். அந்தப் பதில்கள் நிச்சயமாக உங்கள் மனதிற்கு இதமளிக்கும்.எரேமியா 31:18-20-ஐ வாசியுங்கள்.

எரேமியா எழுதிய இந்தப் பதிவின் சூழமைவைக் கவனியுங்கள். எரேமியா வாழ்ந்ததற்கு பல ஆண்டுகளுக்கு முன், கி.மு. 740-ல் இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யங்களை அசீரியர்கள் சிறைபிடித்து செல்ல யெகோவா அனுமதித்தார். * ஏனென்றால், அந்த ஜனங்கள் படுமோசமான பாவங்களைச் செய்துவந்தார்கள். பல தடவை தீர்க்கதரிசிகளை அனுப்பி யெகோவா அவர்களை எச்சரித்தும் மனந்திரும்பவே இல்லை. அவர்கள் திருந்துவதற்காகத்தான் யெகோவா இந்தக் கஷ்டத்தை அனுமதித்தார். (2 இராஜாக்கள் 17:5-18) தங்கள் கடவுளையும் வீட்டையும் நாட்டையும் விட்டு பிரிந்த பின் அந்த ஜனங்கள் மாறினார்களா? யெகோவா அவர்களைச் சுத்தமாக மறந்துவிட்டாரா? அவர்கள் மனம் மாறினால் யெகோவா திரும்பவும் அவர்களை ஏற்றுக்கொண்டு தாய்நாட்டிற்கு அழைத்து வருவாரா?

‘நான் மனம் வருந்தினேன்’

நாடுகடத்தப்பட்ட ஜனங்கள் தவறை உணர்ந்து மனந்திரும்பினார்கள். அவர்கள் மனம் நொந்து புலம்பியதை யெகோவா பார்த்தார். எப்பிராயீமுடைய, அதாவது இஸ்ரவேலருடைய, உள்ளக்குமுறலை, மனமாற்றத்தை யெகோவாவே விவரிக்கிறார்.

“எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்” என்று யெகோவா சொல்கிறார். (வசனம் 19) கெட்ட வழியில் போனதால் வந்த விளைவுகளை நினைத்து அவர்கள் புலம்பியது யெகோவாவின் காதுக்கு எட்டியது. ‘புலம்பிக்கொண்டிருப்பது’ என்ற வார்த்தை “அசைவது” என்ற அர்த்தத்தையும் கொடுக்கும் என்று ஓர் அறிஞர் சொல்கிறார். அந்த ஜனங்களுடைய நிலைமை எப்படியிருந்தது என்றால், ஊதாரி மகன் ஒருவன் கெட்ட வழியில் போனதால் வந்த கஷ்டத்தை நினைத்து வேதனையில் தலையை அசைப்பது போல இருந்தது. அப்பா வீட்டிற்குத் திரும்பி போக ஏங்குவது போல இருந்தது. (லூக்கா 15:11-17) அவர்கள் என்ன சொல்லிப் புலம்புகிறார்கள்?

“நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்.” (வசனம் 18) தங்களுக்கு கிடைத்த தண்டனை சரியானதுதான் என்பதை அந்த ஜனங்கள் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் கீழ்ப்படியாத மாட்டைப் போல் இருந்தார்கள். இந்த ஒப்புமையைப் பற்றி ஒரு புத்தகம் இப்படி சொன்னது: அந்த மாடு “முரண்டு பிடிக்காமல் நுகத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் அதற்கு அடி கிடைத்திருக்காது.”

“என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.” (வசனம் 18) அந்த மக்கள் தங்களைத் தாழ்த்தி கடவுளை நோக்கிக் கூப்பிட்டார்கள். பாவத்தில் மூழ்கிப்போயிருந்தவர்கள் இப்போது தங்களைத் திருத்திக்கொண்டு கடவுளுக்குப் பிரியமாக நடக்க விரும்புகிறார்கள். “நீங்கள்தான் எங்கள் கடவுள். நாங்கள் திரும்பி வருகிறோம், தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இந்த வசனத்தை கன்ட்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன் மொழிபெயர்த்திருக்கிறது.

“மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன். . . . வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன்.” (வசனம் 19) பாவம் செய்ததை நினைத்து அந்த மக்கள் மனம் வருந்தினார்கள். தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். கூனிக்குறுகினார்கள், அருகதையற்றவர்களாக உணர்ந்தார்கள், நெஞ்சில் அடித்துக்கொண்டார்கள்.—லூக்கா 15:18, 19, 21.

இஸ்ரவேலர்கள் மனந்திரும்பினார்கள். அவர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது, தங்கள் பாவங்களை கடவுளிடம் அறிக்கையிட்டார்கள், தங்களைத் திருத்திக்கொண்டார்கள். அவர்களுடைய மனமாற்றம் கடவுளின் இதயத்தைக் கரைத்ததா? அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா?

“அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன்”

யெகோவாவுக்கு இஸ்ரவேல் மக்கள்மீது தனி பாசம் இருந்தது. “நான் இஸ்ரவேலின் தகப்பன், எப்பிராயிம் என் தலைப்பிள்ளை” என்று அவர் சொன்னார். (எரேமியா 31:9, NW) உண்மையாகவே மனந்திரும்பி வரும் ஒரு மகனை எந்த அப்பாவால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியும்? ஒரு அப்பாவாக யெகோவா தம் மக்கள் மீது இருக்கும் பாசத்தை எப்படி வார்த்தைகளில் வர்ணிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

“எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.” (வசனம் 20) அன்பில் நனைந்த வார்த்தைகள் இவை! கண்டிப்பும் அன்பும் உள்ள ஒரு அப்பா, பிள்ளைகள் தவறு செய்யும்போது மறுபடியும் மறுபடியும் எச்சரிப்பார். அது அவருடைய கடமை. அதைத்தான் யெகோவாவும் செய்தார், அவர்களுக்கு “விரோதமாய்” பேசினார், அதாவது அவர்களை எச்சரித்தார். ஆனால், அவர்கள் பிடிவாதமாக அவர் பேச்சைக் கேட்க மறுத்தபோது நாடுகடத்தப்பட அனுமதித்தார். அவர்களைத் தண்டித்தார் ஆனால், மறந்துவிடவில்லை. அவர்களை நினைத்துக்கொண்டே இருந்தார். அன்புள்ள அப்பா ஒருபோதும் தன் பிள்ளைகளை மறக்க மாட்டார். தன் மக்கள் உண்மையாக மனந்திரும்பியதைப் பார்த்த யெகோவா எப்படி உணர்ந்திருப்பார்?

“என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன்.” (வசனம் 20) யெகோவா தம் பிள்ளைகளுக்காக ஏங்கினார். அவர்கள் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியது அவருடைய உள்ளத்தைத் தொட்டது. அவர்கள் எப்போது தம்மிடம் திரும்பிவருவார்கள் என்று ஆசை ஆசையாய்க் காத்திருந்தார். இயேசு சொன்ன கெட்டக் குமாரன் உவமையில் வரும் அப்பாவைப் போல யெகோவாவும் “மனதுருகி” அவர்களை வரவேற்க ஆவலாய் இருந்தார்.—லூக்கா 15:20.

‘யெகோவாவே, தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்’

எரேமியா 31:18-20-ல் உள்ள வார்த்தைகள் யெகோவாவின் கருணையையும் இரக்கத்தையும் அழகாக படம்பிடித்துக் காட்டுகின்றன. தமக்குச் சேவை செய்தவர்கள் தம்மை விட்டுப் போனாலும் அவர்களைக் கடவுள் ஒருநாளும் மறக்க மாட்டார். அப்படிப்பட்டவர்கள் கடவுளிடம் திரும்பி வர நினைத்தால்? கடவுள் “மன்னிக்கத் தயாராய் இருக்கிறார்.” (சங்கீதம் 86:5 NW) இருதயப்பூர்வமாக மனந்திரும்பி வருபவர்களை அவர் ஒருநாளும் ஒதுக்கித்தள்ள மாட்டார். (சங்கீதம் 51:17) அவர்களை வரவேற்பதற்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்.—லூக்கா 15:22-24.

கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த பெண்மணி யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல தன் பங்கில் முயற்சி செய்தார். அருகில் இருந்த யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்திற்கு சென்றார். ஆரம்பத்தில், அவருக்குத் தடையாக இருந்த சில தயக்கங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. “எனக்குத் தகுதியே இல்லனு நினைச்சேன்” என்கிறார். சபை மூப்பர்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டினார்கள், உற்சாகமளித்தார்கள், மீண்டும் யெகோவாவுடன் அன்பான பந்தத்தை அனுபவிக்க உதவினார்கள். “யெகோவா என்னை ஏத்துக்கிட்டத நினைச்சி ரொம்ப சந்தோஷப்பட்டேன்” என்று மனம் நிறைய நன்றிகளோடு சொல்கிறார்.

முன்பு யெகோவாவை வணங்கி வந்தவர்களில் நீங்களும் ஒருவரா? மீண்டும் அவரை சேவிக்க நினைக்கிறீர்களா? யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு உங்களை அழைக்கிறோம். “திரும்பி வருகிறோம் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்பவர்களை, யெகோவா கருணையோடும் இரக்கத்தோடும் இரு கரம் நீட்டி வரவேற்கிறார். (w12-E 04/01)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 5 சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, கி.மு. 997-ல் இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிந்தது. இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யமாக யூதாவும், பத்து கோத்திர வடக்கு ராஜ்யமாக இஸ்ரவேலும் பிரிந்தது. பத்துக் கோத்திரத்தில் எப்பிராயீம் முக்கியமான கோத்திரமாக இருந்ததால் இஸ்ரவேலை எப்பிராயீம் என்றும் அழைத்தார்கள்.