Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவிடம் நெருங்கிக்கொண்டே இருங்கள்

யெகோவாவிடம் நெருங்கிக்கொண்டே இருங்கள்

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக். 4:8.

1, 2. (அ) மக்களை சாத்தான் எப்படி மோசம்போக்குகிறான்? (ஆ) கடவுளிடம் நெருங்கி வர எது நமக்கு உதவும்?

 மனிதர்கள் தம்மிடம் நெருங்கி வர வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்; அந்தத் தேவையோடுதான் அவர்களை அவர் படைத்திருக்கிறார். ஆனால், ‘யெகோவா எனக்குத் தேவையில்லை’ என்று நாம் நினைக்க வேண்டுமென சாத்தான் விரும்புகிறான். ஏவாளை அவன் மோசம்போக்கின நாள்முதல், அந்தத் தவறான கருத்தைப் பரப்பி வந்திருக்கிறான். (ஆதி. 3:4-6) மனிதகுலத்தில் பெரும்பாலோரும் காலங்காலமாக அந்தத் தவறான கருத்தை நம்பி மோசம்போயிருக்கிறார்கள்.

2 நாமோ அதை நம்பி மோசம்போக வேண்டியதில்லை. “அவனுடைய சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவைதானே.” (2 கொ. 2:11) தவறான தீர்மானங்கள் எடுக்கத் தூண்டுவதன் மூலம் யெகோவாவிடமிருந்து நம்மைத் தூரமாக விலக்க சாத்தான் முயற்சி செய்கிறான். என்றாலும் வேலை, பொழுதுபோக்கு, குடும்பம் ஆகியவை சம்பந்தமாக நம்மால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தொழில்நுட்பம், ஆரோக்கியம், பணம், பெருமை ஆகியவற்றைக் குறித்த சமநிலையான மனப்பான்மை ‘கடவுளிடம் நெருங்கி வர’ நமக்கு எப்படி உதவும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.—யாக். 4:8

தொழில்நுட்பம்

3. தொழில்நுட்ப சாதனங்கள் எப்படி நல்ல விதத்திலும் தவறான விதத்திலும் பயன்படுத்தப்படலாம் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.

3 பட்டிதொட்டியிலிருந்து பெரிய பட்டணங்கள்வரை இன்று அதிநவீன எலக்ட்ரானிக் சாதனங்களுக்குப் பஞ்சமே இல்லை. அப்படிப்பட்ட சாதனங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் நமக்குப் பிரயோஜனமாய் இருக்கும். தவறான விதத்தில் பயன்படுத்தினால் பரலோகத் தகப்பனோடு நமக்குள்ள பந்தம் முறிந்துவிடும். உதாரணத்திற்கு, கம்ப்யூட்டர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கையிலுள்ள இந்தப் பத்திரிகை கம்ப்யூட்டர்களின் உதவியோடுதான் தயாரிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஆழமான ஆராய்ச்சிக்கு உதவுகிற... தொலைத்தொடர்புக்குக் கைகொடுக்கிற... புத்துயிரூட்டும் பொழுதுபோக்கை அளிக்கிற... சாதனம் என்றெல்லாம் கம்ப்யூட்டரை வர்ணிக்கலாம். அதேசமயத்தில், ஆட்களை வசிய வலையில் சிக்க வைக்கிற சாதனம் என்றும்கூட அதை வர்ணிக்கலாம். அதிநவீன சாதனங்களுக்கு அதிபதிகளாக வேண்டும் என்ற ஆசையை வர்த்தக கில்லாடிகள் மக்கள் மனதில் விதைக்கிறார்கள். லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்க வேண்டுமென்ற வெறியில் ஓர் இளைஞன் தன்னுடைய சிறுநீரகத்தையே ரகசியமாக விற்றுப்போட்டான்! அற்ப விஷயத்திற்காக ஆரோக்கியத்தையே அடகு வைத்தான்! அடிமுட்டாள்தனம், அல்லவா?

4. கம்ப்யூட்டர்முன் அளவுக்கதிகமான நேரத்தைச் செலவிட்ட ஒரு கிறிஸ்தவர் பிற்பாடு என்ன செய்தார்?

4 தொழில்நுட்ப சாதனங்களைத் தவறாகவோ அளவுக்கதிகமாகவோ பயன்படுத்துவதன் மூலம் யெகோவாவோடு உங்களுக்குள்ள பந்தத்தை முறித்துக்கொள்வது அதைவிட முட்டாள்தனம். யோன் என்ற 28 வயது கிறிஸ்தவர், “ஆன்மீகக் காரியங்களுக்காக ‘பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என பைபிள் சொல்வது எனக்குத் தெரியும். ஆனால், கம்ப்யூட்டர் விஷயத்தில் எனக்கு நானே எதிரி” என்கிறார். * விடியவிடிய கம்ப்யூட்டர்முன் விழித்திருப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. “களைப்பினால் கண் சொக்கினாலும், கம்ப்யூட்டரைவிட்டு நகராமல் அட்டை போல் ஒட்டிக்கொண்டிருந்தேன். ‘சாட்’ செய்வது, வீடியோ படங்களைப் பார்ப்பதுசிலசமயம் மோசமான படங்களைப் பார்ப்பதுஎன நேரத்தை வீணடித்தேன்” என்று அவர் சொல்கிறார். இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட யோன் என்ன செய்தார்? தூங்க வேண்டிய நேரம் வரும்போது கம்ப்யூட்டர் தானாகவே ஆஃப் ஆகிவிடும்படி அதை ‘செட்’ செய்தார்.எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.

பெற்றோர்களே, தொழில்நுட்ப சாதனங்களை ஞானமாகப் பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்

5, 6. (அ) பெற்றோர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? (ஆ) பிள்ளைகள் நல்ல சகவாசத்தை அனுபவிக்க பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

5 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு செயலையும் நீங்கள் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்கள் கம்ப்யூட்டர்முன் உட்காரும்போது கட்டாயம் நீங்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக கம்ப்யூட்டர்முன் அவர்களைத் தனியாக விட்டுவிடாதீர்கள்; அப்படிச் செய்தீர்களென்றால் வன்முறைமிக்க விளையாட்டுகளில், ஆவியுலகத்தொடர்பு பழக்கத்தில், கெட்ட சகவாசத்தில் மூழ்கிவிடுவார்கள். அதுமட்டுமல்ல, ‘அப்பா அம்மாவே கண்டுகொள்வதில்லை, அதனால் நான் எதைப் பார்த்தால் என்ன?’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளைப் பொத்திப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு—அவர்கள் பிஞ்சு வயதிலிருந்தாலும்சரி பருவ வயதிலிருந்தாலும்சரி! யெகோவாவிடமிருந்து அவர்களைத் தூர விலக்குகிற எதையும் அவர்களிடம் அண்ட விடாதீர்கள். மிருகங்கள்கூட தங்கள் குட்டிகளை ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றன. ஒரு தாய்க் கரடி தன் குட்டிகளுக்கு ஆபத்து வருவதைப் பார்க்கும்போது என்ன செய்யுமெனக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!—ஓசியா 13:8-ஐ ஒப்பிடுங்கள்.

6 சபையில் முன்மாதிரிகளாகத் திகழும் சிறியோர் பெரியோரிடம் உங்கள் பிள்ளைகளைப் பழக விடுங்கள்; அப்படிப்பட்ட நல்ல சகவாசத்திற்காக ஏற்பாடு செய்யுங்கள். என்றாலும், உங்கள் பிள்ளைகள் உங்களோடு நேரம் செலவிடவே ஆசைப்படுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்! எனவே, சிரித்து மகிழ, கூடி விளையாட, சேர்ந்து வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள். அப்போது, குடும்பமாக ‘கடவுளிடம் நெருங்கி வருவீர்கள்.’ *

ஆரோக்கியம்

7. நாம் எல்லோரும் ஆரோக்கியமாய் இருக்க ஏன் முயற்சிக்க வேண்டும்?

7 “எப்படியிருக்கீங்க?” ஆட்கள் சர்வ சகஜமாகக் கேட்கிற கேள்வி இது. ஏதோவொரு சுகவீனத்தால் எல்லோரும் கஷ்டப்படுகிறோம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. முதல் தம்பதியர் யெகோவாவிடமிருந்து தங்களைத் தூரமாக விலக்கிக்கொள்ள சாத்தானுக்கு இடம்கொடுத்ததால், அவர்களுடைய பிள்ளைகளான நாம் எல்லோருமே நோய்வாய்ப்படுகிறோம். நமக்கு நோய் வந்தால் சாத்தானுக்குக் கொண்டாட்டமாகிவிடும்; காரணம்? நோயினால் கஷ்டப்படும்போது நம்மால் யெகோவாவுக்குச் சரியாகச் சேவை செய்ய முடியாதே! அதுவும், நாம் இறந்துபோய்விட்டால், அவருக்குச் சுத்தமாகச் சேவை செய்ய முடியாதே! (சங். 115:17) அதனால்தான், ஆரோக்கியமாய் இருப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையுமே செய்ய வேண்டும். * அதோடு, நம் சகோதர சகோதரிகளின் ஆரோக்கியத்திலும் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும்.

8, 9. (அ) ஆரோக்கிய விஷயத்தில் எல்லைமீறி போகாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? (ஆ) சந்தோஷமாய் இருப்பது ஏன் நல்லது?

8 என்றாலும், எல்லைமீறி போகாதபடி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் நற்செய்தியைப் பற்றி ஆர்வமாகப் பேசுவதைவிட உணவுக்கட்டுப்பாட்டு முறைகளையும், சிகிச்சை முறைகளையும், மருத்துவப் பொருள்களையும் பற்றி அதிக ஆர்வமாகப் பேசுகிறார்கள்! மற்றவர்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு அப்படிப் பேசுகிறார்கள். ஆனால், ராஜ்ய மன்றத்தில்... மாநாட்டு மன்றங்களில்... நிகழ்ச்சிக்கு முன்போ பின்போ மருத்துவப் பொருள்களை, அழகு சாதனப் பொருள்களை அல்லது சில சிகிச்சை முறைகளைப் பற்றிப் பேசுவதும் சிபாரிசு செய்வதும் சரியல்ல. ஏன்?

9 ஆன்மீக விஷயங்களைக் கலந்துபேசுவதற்காகவும், கடவுளுடைய சக்தி தருகிற சந்தோஷத்தை அதிகமாய் அனுபவிப்பதற்காகவும்தான் நாம் கூட்டங்களுக்குப் போகிறோம். (கலா. 5:22) ஆரோக்கியக் குறிப்புகளை வழங்குவதற்கோ, மருத்துவப் பொருள்களைச் சிபாரிசு செய்வதற்கோ அல்ல. அச்சமயங்களில், சிகிச்சை முறைகளைப் பற்றி மற்றவர்கள் நம்மிடம் கேட்கும்போதுகூட, அதைப் பற்றிப் பேசுவது சரியல்ல; அப்படிப் பேசுவது கூட்டங்களுக்குப் போவதற்கான நோக்கத்தையே கெடுத்துவிடும், மற்றவர்களுடைய சந்தோஷத்தையும் கெடுத்துவிடும். (ரோ. 14:17) எவ்விதமான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவருடைய தனிப்பட்ட தீர்மானம். யாராலுமே எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது, கைதேர்ந்த மருத்துவராலும் முடியாது! அவரும் வயதாகி, வியாதிப்பட்டு ஒருநாள் இறந்துவிடுவாரே! நம்முடைய ஆரோக்கியத்தைப் பற்றி அளவுக்கதிகமாகக் கவலைப்படுவது நம் ஆயுளில் ஒரு நொடியைக்கூட கூட்டாது. (லூக். 12:25) சந்தோஷமுள்ள இருதயமோ நமக்கு அருமருந்து என பைபிள் சொல்கிறது.—நீதி. 17:22.

10. (அ) யெகோவாவின் கண்களுக்கு எது அழகானது? (ஆ) பூரண ஆரோக்கியம் நமக்கு எப்போது கிடைக்கும்?

10 நம்முடைய தோற்றத்தைக் குறித்து அக்கறையாக இருப்பது நல்லதுதான். அதற்காக நாம் வயதாகிவிட்டதற்கான அடையாளங்களை அழிக்க அரும்பாடுபடத் தேவையில்லை. அந்த அடையாளங்கள் முதிர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும், அகத்தின் அழகிற்கும் அத்தாட்சிகள்! உதாரணத்திற்கு, “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 16:31) நம்முடைய புறத்தோற்றமல்ல அகத்தோற்றம்தான் யெகோவாவின் கண்களுக்கு அழகானது; நமக்கும் அதே கண்ணோட்டம் இருக்க வேண்டும். (1 பேதுரு 3:3, 4-ஐ வாசியுங்கள்.) எனவே, புற அழகைக் கொஞ்சம் மெருகூட்டுவதற்காக தேவையில்லாத, ஆபத்தான அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்வதோ மருத்துவ முறைகளை நாடுவதோ ஞானமாக இருக்குமா? ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே’ உண்மையான அழகுக்கு அஸ்திவாரம்! வயதுக்கும் ஆரோக்கியத்திற்கும் அப்பாற்பட்டதுதான் உண்மையான அழகு! ஆம், அகத்தின் அழகே முகத்தில் பளிச்சிடும். (நெ. 8:10) தொலைந்துபோன பூரண ஆரோக்கியமும் இளமையின் வனப்பும் புதிய உலகத்தில்தான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். (யோபு 33:25; ஏசா. 33:24) அந்நாள் வரும்வரை, ஆரோக்கியம் சம்பந்தமாக நாம் ஞானமான தீர்மானங்களை எடுக்க வேண்டும், யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் வைக்க வேண்டும்; அப்படிச் செய்தோமானால், வாழ்க்கையை ருசிப்போம், ஆரோக்கியத்தைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்பட மாட்டோம்.—1 தீ. 4:8.

பணம்

11. பணம் எப்படி நம்மை யெகோவாவிடமிருந்து தூர விலக்கிவிடும்?

11 பணங்காசு வைத்திருப்பதில் தவறில்லை, நியாயமான வழிகளில் அதைச் சம்பாதிப்பதிலும் தவறில்லை. (பிர. 7:12, NW; லூக். 19:12, 13) ஆனால், ‘பண ஆசை’ யெகோவாவிடமிருந்து நம்மை நிச்சயம் தூர விலக்கிவிடும். (1 தீ. 6:9, 10) “இவ்வுலகத்தின் கவலை,” அதாவது அன்றாடத் தேவைகளைக் குறித்த அதீத கவலை, ஆன்மீக ரீதியில் நம்மை அப்படியே நெருக்கிப்போட்டுவிடும். அதோடு, “செல்வத்தின் வஞ்சக சக்தியும்,” அதாவது செல்வம்தான் நிரந்தர சந்தோஷத்தை, பாதுகாப்பைத் தருமென்ற தவறான எண்ணமும், நம்மை அவ்வாறே நெருக்கிப்போட்டுவிடும். (மத். 13:22) கடவுளுக்காகவும் செல்வத்திற்காகவும் ஒரே சமயத்தில் “ஒருவனாலும்” உழைக்க முடியாதென்று இயேசுவே தெளிவாகச் சொன்னார்.—மத். 6:24.

12. இன்று மக்கள் எவ்வழிகளில் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள், அவ்வழிகளை நாம் எப்படித் தவிர்க்கலாம்?

12 பணம்தான் எல்லாமே என்று நினைப்பது, தவறு செய்ய நம்மைத் தூண்டிவிடலாம். (நீதி. 28:20) திடீர் பணக்காரர் ஆகும் எண்ணத்தில் சிலர் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குகிறார்கள் அல்லது ‘மல்டிலெவல் மார்க்கெட்டிங்’ திட்டங்களில் சேர்கிறார்கள், சபையிலுள்ள மற்றவர்களையும் அதில் சேர்ந்துகொள்ளும்படி தூண்டுகிறார்கள். இன்னும் சிலர், முதலீடு செய்தால் ஏகப்பட்ட லாபம் பார்க்கலாம் என்ற போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துபோகிறார்கள். எனவே, பேராசைக்குப் பலிகடா ஆகிவிடாதீர்கள். உஷாராக நடந்துகொள்ளுங்கள். திடீர் பணக்காரராக முடியுமென யாராவது சொன்னால் நம்பிவிடாதீர்கள், அது வெறும் பித்தலாட்டம்தான்.

13. பணத்தைப் பற்றிய யெகோவாவின் கண்ணோட்டம் அநேகருடைய கண்ணோட்டத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது?

13 “கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும்” நம் வாழ்க்கையில் முதலாவது வைத்தால், அன்றாடத் தேவைகளுக்காக நாம் எடுக்கும் நியாயமான முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார். (மத். 6:33; எபே. 4:28) வேலையில் பம்பரமாகச் சுழன்று சுழன்று களைத்துப்போன பின்பு, சபைக் கூட்டங்களில் தூங்கி விழுவதோ பணத்திற்கு என்ன செய்வது என்று கவலைப்பட்டு உட்கார்ந்திருப்பதோ அவருக்குப் பிடிக்காது. ஆனால், வேலை செய்வதில் இன்று குறியாக இருந்தால்தான் நாளை கவலையில்லாமல் சொகுசாக வாழ முடியுமென அநேகர் நினைக்கிறார்கள். அதே எண்ணத்தைத் தங்கள் பிள்ளைகள்மீதும் திணிக்கிறார்கள். ஆனால், அத்தகைய எண்ணம் மதிகேடானது என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். (லூக்கா 12:15-21-ஐ வாசியுங்கள்.) இது நமக்கு கேயாசியை நினைப்பூட்டலாம்; பேராசையில் புரண்டுகொண்டே கடவுளுடைய அன்பில் அகமகிழலாம் என அவன் தப்புக்கணக்கு போட்டான்.—2 இரா. 5:20-27.

14, 15. பணம் பாதுகாப்பு தருமென்று நம்புவது ஏன் முட்டாள்தனம்? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

14 சில கழுகுகள் தங்கள் கால் நகங்களில் ஒரு பெரிய மீனைத் தூக்கிக்கொண்டு பறக்க முயன்றும் முடியாமல், மீனையும் விட்டுவிட மனதில்லாமல் அப்படியே தண்ணீரில் மூழ்கி செத்துப்போயின. அதுபோன்ற ஒன்று கிறிஸ்தவர்களுக்கு நேரிட வாய்ப்பிருக்கிறதா? அலெக்ஸ் என்ற மூப்பர் சொல்கிறார்: “உலக மகா கஞ்சன் நான். ஷாம்பூவைக் கொஞ்சம் அதிகமாக ஊற்றிவிட்டால்கூட, கொஞ்சத்தை மறுபடியும் பாட்டிலுக்குள்ளேயே போட்டுவிடுவேன்.” இப்படியிருந்த அலெக்ஸ் ஒருமுறை பங்குச் சந்தை வியாபாரத்தில் இறங்கினார்—வேலையை விட்டுவிட்டு பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில்! ஆனால், வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களையும், பங்கு நிலவரங்களையும் பற்றி அலசி ஆராய்வதிலேயே மூழ்கிப்போனார். தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும் கடனாக வாங்கிய பணத்தையும் வைத்து ஆய்வாளர்களுடைய சிபாரிசின் பேரில் லாப நோக்கத்துடன் பங்குகளை வாங்கினார். வருத்தகரமாக, அவற்றின் விலை ஒரேயடியாகச் சரிந்தது. “போட்ட பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென்ற வெறி எனக்குள் உண்டானது; பங்குகளின் விலை அதிகரிக்கும் என்ற நப்பாசையில் தொடர்ந்து அதில் முதலீடு செய்தேன்” என்கிறார் அவர்.

15 மாதங்கள் உருண்டோடின; அலெக்ஸினால் வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை—ஆன்மீகக் காரியங்களில்கூட! அவருடைய தூக்கம் கெட்டதுதான் மிச்சம். பங்குகளின் விலை அதிகரிக்கவே இல்லை. சேர்த்து வைத்த பணமெல்லாம் கரைந்தது, சொந்த வீடும் கைவிட்டுப்போனது. “என் குடும்பத்தை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டேன்” என அவர் தன்னையே நொந்துகொள்கிறார். ஒரு முக்கியமான பாடத்தை அவர் கற்றுக்கொண்டார்: “சாத்தானுடைய உலகத்தில் நம்பிக்கை வைக்கிற எல்லோருமே பெருத்த ஏமாற்றம் அடைவார்கள்.” (நீதி. 11:28) சேமிப்பின்மீது, முதலீட்டின்மீது, பணம் சம்பாதிக்கிற திறன்மீது நம்பிக்கை வைப்பது ‘இந்த உலகத்தின் கடவுளான’ சாத்தான்மீது நம்பிக்கை வைப்பதற்குச் சமம். (2 கொ. 4:4; 1 தீ. 6:17) பிற்பாடு அலெக்ஸ் “நற்செய்திக்காக” தன் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டார். இதனால், குடும்பமாக யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வந்தார், சந்தோஷத்தைக் கண்டார்.மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.

பெருமை

16. எந்த விஷயங்களுக்காக நாம் பெருமைப்படலாம், வீண் பெருமையடிப்பது ஏன் கூடாது?

16 நல்ல விஷயங்களுக்காகப் பெருமைப்படுவதில் தவறில்லைதான். உதாரணத்திற்கு, நாம் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதில் எப்போதுமே பெருமைப்பட வேண்டும். (எரே. 9:24) நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கும், ஒழுக்கநெறிகளை விட்டுவிடாதிருப்பதற்கும் அது நமக்கு உதவும். ஆனால் வீண் பெருமையடிப்பது, அதாவது நம்முடைய சொந்த கருத்துகளுக்கோ ஸ்தானத்திற்கோ அளவுக்கதிக முக்கியத்துவம் கொடுப்பது, யெகோவாவிடமிருந்து நம்மைத் தூர விலக்கிவிடும்.—சங். 138:6; ரோ. 12:3.

சபையில் பொறுப்புகளைப் பெற ஏங்குவதற்குப் பதிலாக, ஊழியத்தில் சந்தோஷமாக ஈடுபடுங்கள்!

17, 18. (அ) மனத்தாழ்மை காட்டிய மற்றும் பெருமைபிடித்த நபர்களின் பைபிள் உதாரணங்களைக் குறிப்பிடுங்கள். (ஆ) பெருமைக்கு இடமளிக்காத ஒரு சகோதரருடைய அனுபவத்தைச் சொல்லுங்கள்.

17 பைபிளில், பெருமைபிடித்தவர்களின் உதாரணங்களும் இருக்கின்றன, மனத்தாழ்மை காட்டியவர்களின் உதாரணங்களும் இருக்கின்றன. தாவீது ராஜா மனத்தாழ்மையோடு யெகோவாவின் வழிநடத்துதலை நாடினார், அதனால் ஆசி பெற்றார். (சங். 131:1-3) பெருமைபிடித்த ராஜாக்களான நேபுகாத்நேச்சாரையும் பெல்ஷாத்சாரையும் யெகோவா தாழ்த்தினார். (தானி. 4:30-37; 5:22-30) இன்று நம்முடைய மனத்தாழ்மைக்கும் சில சோதனைகள் வரலாம். உதவி ஊழியரான ரையான் என்பவர் (32 வயது) வேறு சபைக்கு மாற்றலாகிச் சென்றார். சீக்கிரத்திலேயே அந்தச் சபையில் மூப்பராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தார். ஆனால், ஒரு வருடமாகியும் அது நடக்கவில்லை. அப்போது, அந்தச் சபை மூப்பர்கள்மேல் ரையான் கோபப்பட்டாரா? மனக்கசப்படைந்தாரா? கூட்டங்களுக்குப் போவதை நிறுத்திவிட்டாரா? யெகோவாவிடமிருந்தும் அவருடைய மக்களிடமிருந்தும் தன்னைத் தூர விலக்கிக்கொண்டாரா? நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

18 “நெடுங்காலமாய்க் காத்திருப்பதால் ஏற்படுகிற சோர்வை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய கட்டுரைகளை நம்முடைய பிரசுரங்களில் தேடிக் கண்டுபிடித்து எல்லாவற்றையும் படித்தேன்” என்கிறார் ரையான். (நீதி. 13:12) “பொறுமையையும் மனத்தாழ்மையையும் காட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர ஆரம்பித்தேன். என்னைச் செதுக்கி சீராக்க யெகோவாவை நான் அனுமதிக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்” என்றும் சொல்கிறார். அதன்பின், ரையான் தன்னைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு சபையிலும் வெளியிலும் இருப்பவர்களுக்குச் சேவை செய்வது பற்றி யோசிக்கத் தொடங்கினார். சீக்கிரத்திலேயே ஏராளமான நல்ல பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தார். “ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு மூப்பராக நியமிக்கப்பட்டேன், அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஊழியத்திலேயே அதிக மும்முரமாக ஈடுபட்டுவந்ததால், மூப்பராவதைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கவே இல்லை” என்றும் அவர் சொல்கிறார்.சங்கீதம் 37:3, 4-ஐ வாசியுங்கள்.

யெகோவாவிடம் நெருங்கியே இருங்கள்!

19, 20. (அ) நாம் கற்றுக்கொண்ட ஏழு அம்சங்களும் யெகோவாவிடமிருந்து நம்மைத் தூர விலக்கிவிடாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? (ஆ) யெகோவாவிடம் நெருங்கியே இருந்த யார் யாருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றலாம்?

19 இந்தக் கட்டுரையிலும் முந்தைய கட்டுரையிலும் கலந்தாலோசிக்கப்பட்ட ஏழு அம்சங்களுமே நம்முடைய வாழ்க்கைக்கு அவசியம்தான், ஆனால் அவற்றில் நமக்குச் சமநிலை தேவை. யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதில் நாம் பெருமைப்படலாம். சந்தோஷமான குடும்பமும் நல்ல ஆரோக்கியமும் யெகோவா தருகிற மாபெரும் பரிசுகள். வேலையும் பணமும் நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்கு அவசியம். பொழுதுபோக்கு நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கும், தொழில்நுட்பம் நமக்குப் பிரயோஜனமாயிருக்கும். ஆனால், அவற்றில் ஏதோவொன்றைத் தவறான சமயத்தில் நாடுவதும், அளவுக்கதிகமாக அடைய ஆசைப்படுவதும், நம்முடைய வணக்கத்திற்கு இடையூறாக இருக்க அனுமதிப்பதும் யெகோவாவிடமிருந்து நம்மைத் தூர விலக்கிவிடும்.

யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிட எதையுமே அனுமதிக்காதீர்கள்!

20 சாத்தான் அதைத்தான் விரும்புகிறான். என்றாலும், அப்படிப்பட்ட பேராபத்து உங்களுக்கோ உங்கள் குடும்பத்திற்கோ வராதபடி உங்களால் தடுக்க முடியும். (நீதி. 22:3) யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள், நெருங்கியே இருங்கள். இவ்வாறு நெருங்கிவந்த அநேகருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. ஏனோக்கும் நோவாவும் ‘உண்மைக் கடவுளோடு நடந்தார்கள்.’ (ஆதி. 5:22; 6:9; NW) மோசே “காணமுடியாதவரைக் காண்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார்.” (எபி. 11:27) இயேசு எப்போதும் தம் பரலோகத் தகப்பனுக்குப் பிரியமான காரியங்களையே செய்து, அவருடைய ஆதரவைப் பெற்றார். (யோவா. 8:29) இப்படிப்பட்டவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். “எப்போதும் சந்தோஷமாக இருங்கள். இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள். எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்.” (1 தெ. 5:16-18) யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிட எதையுமே அனுமதிக்காதீர்கள்!

^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ அக்டோபர்-டிசம்பர் 2011 விழித்தெழு! பத்திரிகையில், “இளந்தளிர்கள் பொறுப்புள்ள இளைஞர்களாக...” என்ற அட்டைப்பட கட்டுரைகளைப் பாருங்கள்.

^ ஜூலை-செப்டம்பர் 2011 விழித்தெழு! பத்திரிகையில், “ஆரோக்கிய வாழ்வுக்கு ஐந்து வழிகள்” என்ற அட்டைப்பட கட்டுரைகளைப் பாருங்கள்.