Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆன்மீகச் சொத்தை மதிக்கிறீர்களா?

ஆன்மீகச் சொத்தை மதிக்கிறீர்களா?

‘கடவுள் . . . புறதேசத்தார்மீது தம் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தம்முடைய பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதியைப் பிரித்தெடுத்தார்.’—அப். 15:14.

1, 2. (அ) ‘தாவீதின் கூடாரம்’ எது, அது எப்படி திரும்பக் கட்டப்படும்? (ஆ) இன்று யெகோவாவின் ஊழியர்களாக ஒன்றுசேர்ந்து சேவை செய்கிறவர்கள் யார்?

 வருடம் கி.பி. 49. சரித்திரத்தில் திருப்புக் கட்டமாக அமைந்த ஆளும் குழுவினரின் கூட்டம் அப்போது நடந்தது. சீடரான யாக்கோபு அக்கூட்டத்தில் இவ்வாறு சொன்னார்: “கடவுள் முதல் தடவையாகப் புறதேசத்தார்மீது தம் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தம்முடைய பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதியைப் பிரித்தெடுத்த விதத்தைப் பற்றி சிமியோன் [பேதுரு] நன்றாக விவரித்துச் சொன்னார். தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலுள்ள வார்த்தைகள் அதை ஆமோதிக்கின்றன; எப்படியென்றால், ‘இவற்றுக்குப் பிற்பாடு நான் மறுபடியும் வந்து, கீழே விழுந்திருக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்ப எடுத்துக் கட்டுவேன்; சேதமடைந்தவற்றைச் சரிசெய்து, அதை மீண்டும் நேராக நிறுத்துவேன்; இவர்களில் மீந்திருக்கிற ஆட்கள், என் பெயரால் அழைக்கப்படுகிற சகல தேசத்து மக்களோடும் சேர்ந்து யெகோவாவாகிய என்னை ஊக்கமாய்த் தேடுவதற்காக அப்படி நிறுத்துவேன் என்று யெகோவா சொல்கிறார்; இதையெல்லாம் செய்கிறவர் அவரே. இதையெல்லாம் பூர்வ காலத்திலிருந்து அறிந்திருப்பவரும் அவரே’ என்று எழுதப்பட்டிருக்கிறது.”—அப். 15:13-18.

2 யூதாவின் கடைசி ராஜாவான சிதேக்கியா வீழ்த்தப்பட்டபோது ‘தாவீதின் கூடாரம் [அதாவது, ராஜ வம்சம்]’ வீழ்ந்தது. (ஆமோ. 9:12) என்றாலும், அந்த “கூடாரம்” தாவீதின் சந்ததியில் வரவிருந்த நித்திய ராஜாவான இயேசுவால் திரும்பக் கட்டப்படும். (எசே. 21:27; அப். 2:29-36) அந்தக் கூட்டத்தின்போது ஆமோஸ் தீர்க்கதரிசனத்திலிருந்து யாக்கோபு குறிப்பிட்டபடி, கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யப்போகிறவர்கள் யூதர்களிலிருந்தும் புறதேசத்தாரிலிருந்தும் கூட்டிச்சேர்க்கப்பட ஆரம்பித்தார்கள். இன்று, அவர்களில் மீதியானவர்களும் இயேசுவின் ‘வேறே ஆடுகளான’ லட்சக்கணக்கானோரும் ஒன்றுசேர்ந்து, பைபிள் சத்தியத்தை அறிவித்து வருகிறார்கள்.—யோவா. 10:16.

யெகோவாவின் மக்கள் சந்திக்கும் சவால்

3, 4. பாபிலோனில் யெகோவாவின் மக்கள் உண்மையோடிருக்க எவை உதவின?

3 யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபோது ‘தாவீதின் கூடாரம்’ வீழ்ந்துபோனது. அவர்கள் 70 வருடங்கள் (கி.மு 607 முதல் கி.மு 537 வரை) அங்கு இருந்தார்கள். பொய் மதத்துக்கு பேர்போன பாபிலோனியாவில் யூதர்களால் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க முடிந்தது. சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகில், யெகோவாவின் மக்களாகிய நாமும் அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோம். (1 யோ. 5:19) இதற்கெல்லாம் கடவுள் தந்திருக்கும் ஏராளமான ஆன்மீக சொத்துகளே காரணம்.

4 அந்த ஆன்மீக சொத்துகளில் கடவுளுடைய வார்த்தையும் ஒன்று. பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களிடம் முழு பைபிள் இருக்கவில்லை. ஆனால், பத்து கட்டளைகள் உட்பட திருச்சட்டத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். ‘சீயோனின் பாட்டுகளும்’ பல நீதிமொழிகளும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. யெகோவாவின் பூர்வகால ஊழியர்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். ஆம், அவர்கள் சீயோனை நினைத்து அழுதார்கள்; யெகோவாவை அவர்கள் மறக்கவில்லை. (சங்கீதம் 137:1-6-ஐ வாசியுங்கள்.) இவையே பொய்க் கோட்பாடுகளும் பழக்கவழக்கங்களும் நிறைந்திருந்த பாபிலோனில், ஆன்மீக ரீதியில் உயிர்த்துடிப்புடன் இருக்க அவர்களுக்கு உதவின.

திரித்துவம் ஒன்றும் புதிதல்ல

5. பூர்வ பாபிலோனியரும் எகிப்தியரும் திரித்துவத்தை நம்பியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

5 பாபிலோனியரின் வழிபாட்டில் திரித்துவம் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. பாபிலோனியரின் மும்மூர்த்தி தெய்வங்களில் ஒன்று: சின் (சந்திரக் கடவுள்), ஷாமாஷ் (சூரியக் கடவுள்), இஷ்டார் (கருவள மற்றும் போர் தேவதை). பூர்வ எகிப்தில் பொதுவாக, ஒரு கடவுள் ஒரு தேவதையைத் திருமணம் செய்து ஓர் ஆண்பிள்ளையைப் பெற்றதாக நம்பப்பட்டு வந்தது. “இந்த மூன்று பேரும் சேர்ந்து திரித்துவத்தின் பாகமாகிறார்கள். தந்தை எல்லாச் சமயத்திலும் முதன்மை ஸ்தானத்தில் இருப்பதில்லை. தேவதையே உள்ளூர் மக்களின் பிரதான கடவுளாகக் கருதப்பட்டதால், சில சமயங்களில் தேவதையின் கணவனாக இருப்பதில் தகப்பன் திருப்தியடைந்தார்” என்று நியூ லாரோஸ் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி சொல்கிறது. உதாரணமாக, ஓர் எகிப்திய மும்மூர்த்தி தெய்வம்: கடவுள் ஆஸிரிஸ், தேவதை ஐஸிஸ், மகன் ஹோரஸ்.

6. திரித்துவம் என்றால் என்ன, இந்தத் தவறான கோட்பாட்டை நாம் ஏன் நம்புவதில்லை?

6 கிறிஸ்தவமண்டலத்தாரும் திரித்துவத்தை நம்புகிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒரே கடவுள் என்று குருமார்கள் சொல்கிறார்கள். இது யெகோவாவின் பேரரசுரிமையைத் தாக்குவதுபோல் இருக்கிறது; அதாவது அவருக்கு மூன்றில் ஒரு பங்கு உரிமை மட்டுமே இருப்பதுபோல் காட்டுகிறது. யெகோவாவின் மக்கள் இந்தத் தவறான கோட்பாட்டை நம்புவதில்லை. ஏனென்றால், “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய கடவுளாகிய யெகோவா ஒரே யெகோவா” என்ற பைபிள் வார்த்தைகளை நம்புகிறார்கள். (உபா. 6:4, NW) இந்த வார்த்தைகளை இயேசுவும் மேற்கோள் காட்டியிருப்பதால், உண்மை கிறிஸ்தவர் யாராவது இதை மறுக்க முடியுமா?—மாற். 12:29.

7. திரித்துவத்தை நம்பும் ஒருவரால் ஏன் கடவுளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் பெற முடியாது?

7 “எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று தம் சீடர்களிடம் இயேசு சொன்னார். (மத். 28:19) திரித்துவக் கோட்பாடு இந்தக் கட்டளைக்கு முரணானது. அப்படியானால் ஒருவர் ஞானஸ்நானம் பெற்று ஒரு யெகோவாவின் சாட்சியாக விரும்பினால், தகப்பனாகிய யெகோவாவின் உன்னத ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய மகனாகிய இயேசுவின் ஸ்தானத்தையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு, கடவுளுடைய சக்தி திரித்துவத்தின் பாகமில்லை என்பதையும் நம்ப வேண்டும். (ஆதி. 1:2) திரித்துவத்தை நம்பும் ஒருவரால் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் பெற முடியாது. நம்மிடமுள்ள ஆன்மீக சொத்து, கடவுளுக்கு அவமரியாதை ஏற்படுத்துகிற இந்தப் போதனையிலிருந்து நம்மை பாதுகாத்திருப்பதால், நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

ஆவியுலகத்தொடர்பு மீண்டும் தலைதூக்குகிறது!

8. தெய்வங்கள் மற்றும் பேய்கள் பற்றிய பாபிலோனியரின் கருத்து என்ன?

8 பாபிலோனிய மதங்களில், பொய்க் கோட்பாடுகள்... தெய்வங்கள்... பேய்கள்... ஆவியுலகத்தொடர்பு... போன்றவற்றிற்கு பஞ்சமே இல்லை. த இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: ‘பாபிலோனிய மதத்தில், தெய்வங்களுக்கு அடுத்து பேய்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மனிதர்களுக்கு உடலளவில் அல்லது மனதளவில் பல தொல்லைகளைக் கொடுக்கும் சக்தி அந்தப் பேய்களுக்கு இருந்ததென நம்பப்பட்டது. அந்த மதத்திலிருந்த பெரும்பாலானோர் பேய்களின் தொல்லைகளிலிருந்து எப்பாடுபட்டாவது விடுபட கடும் முயற்சி எடுத்திருப்பதாகக் தெரிகிறது. இந்தப் பேய்களைத் துரத்த உதவும்படி தெய்வங்களிடம் மக்கள் மன்றாடியிருக்கிறார்கள்.’

9. (அ) பாபிலோனிலிருந்து திரும்பி வந்த யூதர்கள், பொய் மதக் கோட்பாடுகளுக்கு எப்படி இரையானார்கள்? (ஆ) பேய்களோடு தொடர்புகொள்வதால் வரும் ஆபத்திலிருந்து நாம் எப்படிக் காக்கப்படுகிறோம்?

9 பாபிலோனிலிருந்து திரும்பி வந்த யூதர்களில் பலர், பொய்க் கோட்பாடுகளுக்கு இரையானார்கள். கிரேக்க கோட்பாடுகள் பிரபலமடைந்தபோது நிறைய பேர் அதையும் ஏற்றுக்கொண்டார்கள். அதாவது, நல்ல பேய்களும் உண்டென நம்பினார்கள். இப்படி பேய்களின் செல்வாக்குக்கு ஆளானார்கள். ஆனால், நம்மிடமுள்ள ஆன்மீக சொத்து, பேய்களோடு வேண்டுமென்றே தொடர்புகொள்வதால் வரும் ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. எப்படி? பாபிலோனின் ஆவியுலக பழக்கவழக்கங்களைக் கடவுள் வெறுக்கிறார் என்பது நமக்குத் தெரியும். (ஏசா. 47:1, 12-15) அதோடு, யெகோவா சொல்வதுபோல் ஆவியுலகத்தொடர்பை நாம் தவிர்க்கிறோம்.உபாகமம் 18:10-12-ஐயும் வெளிப்படுத்துதல் 21:8-ஐயும் வாசியுங்கள்.

10. மகா பாபிலோனின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் என்ன?

10 பாபிலோனியர் மட்டுமல்ல, பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோனைச் சேர்ந்தவர்களும் ஆவியுலகத்தொடர்பில் ஈடுபடுகிறார்கள். (வெளி. 18:21-24) த இன்டர்பிரிட்டர்ஸ் ஆஃப் த பைபிள் சொல்கிறது: ‘ஒன்றுக்கும் மேற்பட்ட பேரரசை அல்லது கலாச்சாரத்தை [மகா] பாபிலோன் ஏற்றுக்கொண்டிருக்கிறது. மகா பாபிலோன் என்று சொல்லும்போது, அது ஓர் இடத்தை அல்ல, அங்கே கொடி கட்டி பறந்த விக்கிரகாராதனையையே குறிக்கிறது.’ (தொகுதி 1, பக்.338) ஆவியுலகத்தொடர்பு, விக்கிரகாராதனை மற்றும் பிற பாவங்கள் நிறைந்த மகா பாபிலோன் இன்றுவரை நீடித்திருக்கிறது, ஆனால் ரொம்ப நாள் தாக்கு பிடிக்காது.வெளிப்படுத்துதல் 18:1-5-ஐ வாசியுங்கள்.

11. ஆவியுலகத்தொடர்பைப் பற்றி என்ன எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?

11 “மாயமந்திர பழக்கவழக்கங்களை நான் சகித்துக்கொள்ள மாட்டேன்” என்று யெகோவா சொன்னார். (ஏசா. 1:13, NW) ஆவியுலகத்தொடர்போடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்கள் 19-ஆம் நூற்றாண்டில் அதிகமாக இருந்தன. சீயோனின் காவற்கோபுரம், மே 1885 இதழ் சொல்கிறது: ‘இறந்தவர்கள் இன்னொரு உலகில் உயிர்வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒன்றும் புதிதல்ல. பூர்வகால மதங்களிலும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. புராணக்கதைகள் எல்லாமே இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையே.’ பேய்கள் இறந்தவர்களைப் போல் வேஷம்போட்டு மக்களிடம் பேச முயன்றிருக்கின்றன. இப்படி மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் கறைபடுத்தியிருக்கின்றன என்றும் அந்த இதழ் சொல்கிறது. ஆவியுலகத்தொடர்பைப் பற்றி பைபிள் சொல்வதென்ன? என்ற ஆங்கில சிறுபுத்தகத்திலும் இதுபோன்ற எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டன. இன்றும் நம் பிரசுரங்களில் இந்த விஷயம் வலியுறுத்தப்படுகிறது.

செத்தவர்கள் கீழுலகில் வதைக்கப்படுகிறார்களா?

12. இறந்தவர்களின் நிலையைப் பற்றி கடவுளுடைய தூண்டுதலால் சாலொமோன் என்ன சொன்னார்?

12 ‘சத்தியத்தை அறிந்திருக்கிற அனைவருக்கும்’ இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும். (2 யோ. 1) “செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி [அதாவது, சிறந்தது]. உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” சாலொமோன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாமும் ஒத்துக்கொள்வோம்.—பிர. 9:4, 5, 10.

13. கிரேக்க கலாச்சாரமும் மதமும் யூதர்களை எப்படிப் பாதித்தது?

13 இறந்தவர்களின் நிலையைப் பற்றி யூதர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். மகா அலெக்ஸாண்டருடைய தளபதிகள் கிரீஸைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டபோது, கிரேக்க மதத்தையும் கலாச்சாரத்தையும் புகுத்தி, சீரியாவுடன் யூதாவை இணைக்க முயற்சி செய்தார்கள். அதன் விளைவாக, யூதர்கள் அவர்களுடைய பொய்க் கோட்பாடுகளை நம்ப ஆரம்பித்தார்கள். ஆத்துமா அழியாது என்றும் பாவிகள் கீழுலகத்தில் வதைக்கப்படுகிறார்கள் என்றும் நம்பினார்கள். கீழுலகைப் பற்றிய இந்தக் கருத்தை கிரேக்கர்கள் ஏற்றுக்கொண்டதற்கு பாபிலோனியர்கள்தான் காரணம். “கீழுலகம் . . . கொடுமைகள் நிறைந்த ஓர் இடம், . . . அசுர பலமிக்க, மூர்க்க குணமுள்ள கடவுள்களும் பேய்களும் ஆதிக்கம் செலுத்தும் இடம்” என்று த ரிலிஜன் ஆஃப் பாபிலோனியா அண்ட் அசீரியா என்ற புத்தகம் சொல்கிறது. ஆம், ஆத்துமா அழியாது என்று பாபிலோனியர்கள் நம்பினார்கள்.

14. சாவு மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி யோபுவுக்கும் ஆபிரகாமுக்கும் என்ன தெரிந்திருந்தது?

14 உத்தமராய் வாழ்ந்த யோபுவிடம் பைபிள் இருக்கவில்லை; என்றாலும், இறந்தவர்களின் நிலையைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதுமட்டுமா, யெகோவா அன்புள்ள கடவுள் என்றும் தான் இறந்தாலும் தன்னை உயிர்த்தெழுப்ப ‘ஆவலோடு காத்திருப்பார்’ என்றும் அறிந்திருந்தார். (யோபு 14:13-15, NW) ஆபிரகாமுக்கும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருந்தது. (எபிரெயர் 11:17-19-ஐ வாசியுங்கள்.) இறந்த ஒருவரைத்தான் உயிர்த்தெழுப்ப முடியும். அதனால்தான், கடவுள் பயமுள்ள இந்த ஊழியர்கள் ஆத்துமா அழியாது என்ற கோட்பாட்டில் நம்பிக்கை வைக்கவில்லை. இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளவும் அதில் நம்பிக்கை வைக்கவும் கடவுளுடைய சக்தியே அவர்களுக்கு உதவியது. இந்தச் சத்தியங்களும் நம் ஆன்மீக சொத்துகளில் அடங்கும்.

‘மீட்புவிலையினால் விடுதலை’—முக்கியம்

15, 16. பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நாம் எப்படி விடுதலை பெறுகிறோம்?

15 ஆதாமிடமிருந்து சொத்தாகப் பெற்ற பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்ய கடவுள் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார். அதை, நம்மிடம் தெரிவித்திருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும், அல்லவா? (ரோ. 5:12) ‘மனிதகுமாரன் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்குமே வந்தார்’ என்பதும் நமக்குத் தெரியும். (மாற். 10:45) ‘கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையினால் விடுவிக்கப்படுவோம்’ என்பதை அறிவது எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது!—ரோ. 3:22-24.

16 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்களும் புறதேசத்தாரும், பாவங்களிலிருந்து மனந்திரும்பி, இயேசு அளித்த மீட்பு பலிமீது விசுவாசம் வைக்க வேண்டியிருந்தது. இல்லையென்றால், அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காது. இன்றும் அதுவே உண்மை. (யோவா. 3:16, 36) திரித்துவம், அழியாத ஆத்துமா போன்ற பொய்க் கோட்பாடுகளிலேயே ஒருவர் புரண்டுகொண்டிருந்தால் மீட்பு பலியிலிருந்து நன்மையடைய முடியாது. ஆனால், நம்மால் முடியும். ஏனென்றால், கடவுளுடைய “அன்புக்குரிய . . . மகன் செலுத்திய மீட்புவிலையினால் விடுதலையை, அதாவது பாவ மன்னிப்பை, நாம் பெறுகிறோம்.”—கொலோ. 1:13, 14.

யெகோவாவின் பெயருக்கென்ற மக்களாக வாழுங்கள்!

17, 18. யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தை எதிலிருந்து தெரிந்துகொள்ளலாம், அதனால் நமக்கு என்ன நன்மை?

17 நாம் நம்பும் உண்மை போதனைகளைப் பற்றியும் கடவுளுடைய ஊழியர்களாக நாம் பெற்ற அனுபவங்களை, ஆசீர்வாதங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். உலகெங்கும் யெகோவாவின் மக்கள் எப்படிச் சுறுசுறுப்பாய் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை இயர்புக்கிலிருந்து தெரிந்துகொள்ளலாம். விசுவாசம் செயலில், பகுதி 1, 2 ஆங்கில வீடியோக்களிலும் யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்திலும் நம்முடைய வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது. அன்பான சகோதர சகோதரிகளைப் பற்றிய அருமையான அனுபவங்களும் நம் பத்திரிகைகளில் வருகின்றன.

18 எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடவுள் விடுவித்ததைப் பற்றி இஸ்ரவேலர்கள் யோசித்துப் பார்த்தபோது பயனடைந்தார்கள். அதேபோல், நாமும் யெகோவாவின் சாட்சிகளின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் பயனடைவோம். (யாத். 12:26, 27) வயதான காலத்தில் மோசே, யெகோவா செய்த அற்புதங்களைப் பற்றி இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொன்னார்: “பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.” (உபா. 32:7) ‘யெகோவாவின் ஜனங்களும் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய’ நாம், அவரைப் புகழ்ந்து, அவர் செய்த மகத்தான செயல்களை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். (சங். 79:13) அதோடு, நம் சகோதர சகோதரர்களின் சரித்திரத்தைப் படிக்கும்போது, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம்; எதிர்காலத்திற்காகவும் திட்டமிடுகிறோம்.

19. ஆன்மீக ஒளியைப் பெற்றிருக்கிற நாம் என்ன செய்ய வேண்டும்?

19 இருளில் தட்டுத்தடுமாறிய நமக்கு, ஆன்மீக ஒளியைத் தந்திருப்பதற்காகக் கடவுளுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (நீதி. 4:18, 19) ஆகவே, அவருடைய வார்த்தையைக் கருத்தாய் படிப்போமாக! சத்தியத்தை ஆர்வத்தோடு மற்றவர்களுக்கு அறிவிப்போமாக! அப்போது, சர்வலோகப் பேரரசரான யெகோவாவை சங்கீதக்காரன் ஜெபத்தில் புகழ்ந்ததுபோல நாமும் புகழலாம்: “கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப் பற்றியே மேன்மைபாராட்டுவேன். தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்து வந்தேன். இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.”—சங். 71:16-18.

20. என்ன விவாதம் நம்முன் இருக்கிறது, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

20 யெகோவாவின் பேரரசுரிமைக்கும் நம்முடைய உத்தமத்தன்மைக்கும் உள்ள தொடர்பை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். யெகோவாதான் சர்வலோகப் பேரரசர் என்றும் நம் உள்ளப்பூர்வமான பக்திக்கு அவரே தகுதியானவர் என்றும் அறிவிக்கிறோம். (வெளி. 4:11) கடவுளுடைய சக்தியின் உதவியோடு, சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம், நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுகிறோம், துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம். (ஏசா. 61:1, 2) கடவுளுடைய மக்கள்மீதும் முழு மனிதகுலத்தின்மீதும் ஆதிக்கம் செலுத்த சாத்தான் எவ்வளவுதான் முயன்றாலும், ஆன்மீக சொத்தை நாம் பொன்னென மதிப்போமாக! உத்தமத்தை விட்டுவிடாதிருக்க திடத்தீர்மானமாய் இருப்போமாக! சர்வலோகப் பேரரசரான யெகோவாவை இப்போதும் எப்போதும் புகழ்வோமாக!சங்கீதம் 26:11; 86:12-ஐ வாசியுங்கள்.