Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய வார்த்தையால் நன்மை அடையுங்கள், நன்மை செய்யுங்கள்

கடவுளுடைய வார்த்தையால் நன்மை அடையுங்கள், நன்மை செய்யுங்கள்

‘எல்லாவற்றைப் பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணுகிறேன்.’ —சங். 119:128.

1. கடவுளுடைய வார்த்தையை நாம் ஏன் முழுமையாக நம்ப வேண்டும்?

 பைபிள் மாணாக்கர் ஒருவர் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள தகுதி பெற்றிருக்கிறாரா என்பதைத் தீர்மானிக்க மூப்பர்கள் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்: ‘பைபிளை கடவுளுடைய வார்த்தை என நம்புகிறாரா?’ * ஆம், அவர் பிரஸ்தாபி ஆவதற்கு பைபிளை முழுமையாக நம்ப வேண்டும். சொல்லப்போனால், கடவுளுடைய ஊழியர்கள் எல்லோருமே பைபிளை நம்ப வேண்டும். ஏன்? பைபிள்மீது நம்பிக்கை வைத்து ஊழியத்தில் அதைத் திறம்பட பயன்படுத்தும்போது, யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டு மீட்படைய மற்றவர்களுக்கு உதவ முடியும்.

2. கற்றுக்கொண்ட விஷயங்களை நாம் ஏன் ‘விடாமல் கடைப்பிடிக்க’ வேண்டும்?

2 அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை தீமோத்தேயுவுக்குச் சிறப்பித்துக் காட்டினார். “பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி” என்று எழுதினார். இங்கு ‘விஷயங்கள்’ என பவுல் எழுதியது பைபிள் சத்தியங்களைத்தான். அவை நற்செய்தியில் விசுவாசம் வைக்க தீமோத்தேயுவுக்கு உதவின. அதேபோல் நமக்கும் உதவுகின்றன; அதோடு அந்தச் சத்தியங்கள் ‘ஞானத்தைத் தந்து . . . மீட்புக்கு வழிநடத்த’ எப்போதும் கைகொடுக்கின்றன. (2 தீ. 3:14, 15) பைபிள் கடவுளுடைய சக்தியால் அருளப்பட்டது என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைக்க நாம் பொதுவாக 2 தீமோத்தேயு 3:16-ஐ (வாசியுங்கள்) பயன்படுத்துவோம். ஆனால், அந்த வசனத்தில் நமக்குப் பயனுள்ள குறிப்புகளும் இருக்கின்றன. அதை இப்போது விலாவாரியாகப் பார்க்கலாம். யெகோவா கற்பிக்கும் விஷயங்கள் எல்லாமே ‘செம்மையானவை’ என்பதை முழுமையாக நம்ப அது நமக்கு உதவும்.—சங். 119:128.

“கற்பிப்பதற்கு . . . பிரயோஜனமுள்ளவை”

3-5. (அ) பேதுரு கொடுத்த பேச்சைக் கேட்ட கூட்டத்தார் என்ன செய்தார்கள், ஏன்? (ஆ) தெசலோனிக்கேயில் இருந்த அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் என்ன? (இ) இன்று நாம் ஊழியம் செய்கையில் எது மக்களின் மனதைக் கவருகிறது?

3 “தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் நான் உங்களிடம் அனுப்புகிறேன்” என்று இஸ்ரவேல் மக்களிடம் இயேசு சொன்னார். (மத். 23:34) தம்முடைய சீடர்களைப் பற்றியே இயேசு குறிப்பிட்டார். ஏனென்றால், ஊழியத்தில் வேத வசனங்களைப் பயன்படுத்த அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தார். கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று இந்த ‘போதகர்களில்’ ஒருவரான அப்போஸ்தலன் பேதுரு, எருசலேமில் ஒரு பெரிய கூட்டத்தாருக்கு முன் பேச்சு கொடுத்தார். அப்போது எபிரெய வேதாகமத்திலிருந்து சில வசனங்களை மேற்கோள் காட்டினார். அந்த வசனங்களை அவர் விளக்கியபோது, அவை அங்கிருந்த அநேகருடைய “உள்ளத்தைத் துளைத்தன.” அதனால், தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டார்கள். சுமார் மூவாயிரம் பேர் கிறிஸ்தவர்களாக ஆனார்கள்.—அப். 2:37-41.

4 மற்றொரு போதகரான அப்போஸ்தலன் பவுல் எருசலேமுக்கு அப்பால் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்தார். உதாரணத்திற்கு, மக்கெதோனியாவிலுள்ள தெசலோனிக்கே நகரில் ஜெபக்கூடத்திற்கு வந்தவர்களிடம் அவர் பேசினார். “மூன்று ஓய்வுநாட்களாக வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார். கிறிஸ்து பாடுகள் படுவதும், பின்பு உயிர்த்தெழுவதும் அவசியமாக இருந்ததென்று . . . மேற்கோள்கள் காண்பித்து அவர்களிடம் விளக்கினார்.” விளைவு? யூதர்களில் “சிலரும் . . . கிரேக்கரில் ஏராளமானோரும்” விசுவாசிகளானார்கள்.—அப். 17:1-4.

5 இன்று கடவுளுடைய ஊழியர்கள் பைபிளைப் பயன்படுத்துகிற விதத்தைப் பார்த்து அநேகர் மனம் கவரப்படுகிறார்கள். சுவிட்சர்லாந்தில், நம் சகோதரி ஒருவர் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசித்துக் காட்டியபோது வீட்டுக்காரர், “நீங்க எந்த மதத்த சேர்ந்தவங்க?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சகோதரி, “நாங்க ரெண்டு பேரும் யெகோவாவின் சாட்சிகள்” என்று பதிலளித்தார். “அதுதானே பார்த்தேன், யெகோவாவின் சாட்சிகள தவிர வேற யாரு வீட்டுக்கு வந்து பைபிள் வசனத்த வாசிச்சு காட்டப் போறாங்க?” என்றார்.

6, 7. (அ) சபையில் போதிப்பவர்கள் பைபிளை எப்படி நன்கு பயன்படுத்தலாம்? (ஆ) பைபிள் படிப்பின்போது வசனங்களை நன்கு பயன்படுத்துவது ஏன் மிக முக்கியம்?

6 நாம் போதிக்கும்போது பைபிளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம்? சபையில் போதிக்கும்போது தகுந்த பைபிள் வசனங்களைப் பயன்படுத்துவதன் மூலம். முக்கிய வசனங்களின் சாராம்சத்தைச் சொல்வது... பிரிண்ட்அவுட்டிலிருந்து அல்லது செல்ஃபோனிலிருந்து வாசிப்பது... போன்றவற்றைத் தவிர்த்து பைபிளைத் திறந்து வாசியுங்கள், சபையாரையும் அப்படிச் செய்ய உற்சாகப்படுத்துங்கள். அதோடு, வசனங்களைப் பொருத்திக் காட்ட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்; அப்போதுதான் அவர்களால் யெகோவாவிடம் நெருங்கி வர முடியும். சபையாரை ரசிக்க வைப்பதற்காக புரியாத உதாரணங்களை, அனுபவங்களைச் சொல்லி நேரத்தை வீணாக்காமல் கடவுளுடைய வார்த்தையை நன்கு விளக்குங்கள்.

7 பைபிள் படிப்புகளை நடத்தும்போது நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்? பிரசுரங்களிலுள்ள வசன மேற்கோள்களை விட்டுவிடக் கூடாது. அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் வசனங்களை வாசிக்கும்படி மாணாக்கரை உற்சாகப்படுத்த வேண்டும், அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். எப்படிச் செய்யலாம்? வசனங்களுக்கு நீண்ட விளக்கம் கொடுத்தால் பெரிய சொற்பொழிவு ஆற்றுவதுபோல் இருக்கும்; அதனால், அந்த வசனங்களைப் பற்றிய மாணாக்கரின் கருத்தைக் கேட்கலாம். எதை நம்ப வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் அவரிடம் சொல்வதற்குப் பதிலாக, அவராகவே சரியான தீர்மானம் எடுக்க, சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேட்கலாம். *

“கடிந்துகொள்வதற்கு . . . பிரயோஜனமுள்ளவை”

8. பவுலுக்கு என்ன போராட்டம் இருந்தது?

8 பொதுவாக ‘கடிந்துகொள்வது’ மூப்பர்களுடைய பொறுப்பு என நாம் நினைக்கலாம். உண்மைதான், ‘பாவம் செய்துவருகிறவர்களை . . . கடிந்துகொள்ளும்’ பொறுப்பு மூப்பர்களுக்கு இருக்கிறது. (1 தீ. 5:20; தீத். 1:13) ஆனால், நம்மையே கடிந்துகொள்வதும் முக்கியம். உதாரணமாக, பவுல் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவருக்குச் சுத்தமான மனசாட்சியும் இருந்தது. (2 தீ. 1:3) என்றாலும், அவர் இவ்வாறு எழுதினார்: “என் மனதின் சட்டத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலுறுப்புகளில் இருப்பதைக் காண்கிறேன்; என் உடலுறுப்புகளில் உள்ள பாவத்தின் சட்டமாகிய அது என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது.” இந்த வசனங்களின் சூழமைவைப் படிக்கும்போது பவுலுக்கு என்ன போராட்டம் இருந்தது என்பதை நன்கு தெரிந்துகொள்ளலாம்.ரோமர் 7:21-25-ஐ வாசியுங்கள்.

9, 10. (அ) பவுலுக்கு என்ன பலவீனங்கள் இருந்திருக்கலாம்? (ஆ) அதை எப்படி மேற்கொண்டிருக்கலாம்?

9 பவுலுக்கு என்ன பலவீனங்கள் இருந்தன? அதைப் பற்றி பவுல் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனாலும், தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், முன்பு ‘கொடுமை செய்கிறவனாய் இருந்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். (1 தீ. 1:13) அந்தச் சமயத்தில் கிறிஸ்தவர்கள்மேல் கோபக்கனல்களை வீசிக்கொண்டிருந்தார். ‘அவர்கள்மீது மூர்க்கவெறி கொண்டிருந்ததாக’ அவரே ஒத்துக்கொண்டார். (அப். 26:11) பவுல் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டார். இருந்தாலும், சில சமயங்களில் தன்னுடைய உணர்ச்சிகளையும் கோபத்தில் பேசும் பேச்சையும் கட்டுப்படுத்துவது அவருக்குப் பெரும் போராட்டமாக இருந்திருக்கலாம். (அப். 15:36-39) அதை மேற்கொள்ள எது அவருக்கு உதவியது?

10 தன்னையே கடிந்துகொள்ள பவுல் என்ன உத்தியைக் கையாண்டாரென கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 9:26, 27-ஐ வாசியுங்கள்.) பைபிள் ஆலோசனை எனும் உளியைக் கொண்டு தன்னைச் செதுக்கிச் சீராக்கினார். ஆலோசனை தேடி வேதவசனங்களைப் புரட்டியிருப்பார்... அதைக் கடைப்பிடிக்க உதவும்படி யெகோவாவிடம் மன்றாடியிருப்பார்... தன்னை மாற்றிக்கொள்ள கடினமாக முயற்சி செய்திருப்பார். * பவுலின் இந்த உதாரணம் நமக்குப் பேருதவியாய் இருக்கும். ஏனென்றால், நாமும் அவரைப் போலவே நம் பலவீனங்களோடு போராடிக்கொண்டிருக்கிறோம்.

11. சத்திய பாதையில்தான் நடக்கிறோமா என்று ‘எப்போதும் சோதித்துப் பார்ப்பது’ எப்படி?

11 யெகோவாவைச் சேவிப்பதில் நாம் ஒருகாலும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. மாறாக, சத்திய பாதையில்தான் நடக்கிறோமா என்று ‘எப்போதும் சோதித்துப் பார்க்க’ வேண்டும். (2 கொ. 13:5) கொலோசெயர் 3:5-10 போன்ற வசனங்களைப் படிக்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பாவம் செய்வதற்கான தூண்டுதலை ஒழித்துக்கட்ட கடும் முயற்சி செய்கிறேனா அல்லது ஒழுக்க விஷயத்தில் பலவீனமாகி வருகிறேனா? இன்டர்நெட்டை அலசும்போது ஒரு ஆபாசமான வெப்சைட் வந்தால் அதை உடனே “க்ளோஸ்” செய்கிறேனா அல்லது ஆபாச வெப்சைட்டுகளைத் தேடிப் போய் பார்க்கிறேனா?’ பைபிளில் உள்ள ஆலோசனைகளை நமக்கென்று எடுத்துகொண்டு கடைப்பிடிக்கும்போது “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க” முடியும்.—1 தெ. 5:6-8.

“காரியங்களைச் சரிசெய்வதற்கு . . . பிரயோஜனமுள்ளவை”

12, 13. (அ) என்ன நோக்கத்தோடு ‘காரியங்களைச் சரிசெய்ய’ வேண்டும், இதற்கு இயேசுவின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்? (ஆ) மற்றவர்களோடு ‘காரியங்களைச் சரிசெய்யும்போது’ எப்படிப் பேசக் கூடாது?

12 ‘காரியங்களைச் சரிசெய்தல்’ என மொழிபெயர்க்கபட்டிருக்கும் கிரேக்க சொற்றொடர் “ஒன்றை நல்லதாக்க, சரிசெய்ய அல்லது சரியான, நேர்த்தியான நிலைக்கு மீண்டும் கொண்டுவர” என்ற அர்த்தங்களைத் தருகிறது. சில சமயங்களில் நம்மையோ நம் செயல்களையோ யாராவது தவறாகப் புரிந்துகொள்ளலாம். அப்போது அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, “வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும்” இயேசு பழகுவதைப் பார்த்த யூத மதத் தலைவர்கள் குறை கூறினார்கள். அதற்கு இயேசு, “ஆரோக்கியமானவர்களுக்கு அல்ல, நோயாளிகளுக்கே மருத்துவர் தேவை. அதனால், ‘பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்” என்றார். (மத். 9:11-13) அவர் கடவுளுடைய வார்த்தையை எல்லோருக்கும் பொறுமையோடும் அன்போடும் விளக்கினார். எனவே, யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்பதைத் தாழ்மையுள்ள மக்கள் அறிந்துகொண்டார்கள். (யாத். 34:6) ‘காரியங்களைச் சரிசெய்ய’ கடவுளுடைய மகன் எடுத்த முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்தது; ஆம், அநேகர் நற்செய்திமீது விசுவாசம் வைத்தார்கள்.

13 மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதை இயேசுவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளலாம். மனக்காயம் அடைந்த ஒருவர் ‘உங்ககிட்ட ஒரு விஷயத்த பேசி சரிசெய்யணும்’ என்று கோபமாகச் சொல்லலாம். இப்படிச் செய்யும்படி 2 தீமோத்தேயு 3:16 சொல்வதில்லை. ஏனென்றால், “வேதவசனங்கள்” கோபப்பட்டு பேசுவதை ஆதரிப்பதில்லை. “பட்டயக்குத்துகள்போல்” கோபமாகப் பேசுவது எப்போதும் அதிக வேதனையைத்தான் தரும், எந்த நன்மையையும் தராது.—நீதி. 12:18.

14-16. (அ) பிரச்சினைகளை ‘சரிசெய்ய’ மற்றவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவலாம்? (ஆ) பிள்ளைகளுக்கு வேத வசனங்களைப் பயன்படுத்தி ‘காரியங்களைச் சரிசெய்வது’ ஏன் மிக முக்கியம்?

14 பொறுமையாக, கனிவாக எப்படி ‘காரியங்களைச் சரிசெய்வது’? அடிக்கடி சண்டைபோடும் ஒரு தம்பதி சபை மூப்பர் ஒருவரை அணுகி உதவி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அந்த மூப்பர் என்ன செய்வார்? ஒருதலைப்பட்சமாகப் பேசாமல், பைபிள் நியமங்களை அந்தத் தம்பதிக்கு விளக்கிக் காட்டலாம்; ஒருவேளை குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தின் 3-ஆம் அதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டலாம். மூப்பர் பேசிக்கொண்டிருக்கும்போதே, எந்த ஆலோசனையை நன்கு பின்பற்ற வேண்டும் என்பதை அந்தக் கணவரும் மனைவியும் புரிந்துகொள்வார்கள். சில நாட்கள் கழித்து, சூழ்நிலை எப்படி இருக்கிறதென அந்த மூப்பர் கேட்பார். தேவைப்பட்டால் இன்னும் சில ஆலோசனையும் கொடுப்பார்.

 15 பிள்ளைகள் சத்தியத்தில் நிலைத்திருக்க பெற்றோர்கள் எப்படி ‘காரியங்களைச் சரிசெய்யலாம்?’ தகாத நட்பு வைத்திருக்கும் டீன்ஏஜ் மகளுக்கு நீங்கள் உதவுவதாக வைத்துக்கொள்ளுங்கள். முதலில், உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை இருப்பது தெரியவந்தால், அவளோடு அதைப் பற்றி பேசலாம். ஒருவேளை, விழித்தெழு! பத்திரிகையில் வருகிற இளைஞர் கேட்கும் கேள்விகள் கட்டுரைகளிலும் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி, 2-லும் (ஆங்கிலம்) உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி பேசலாம். அதன் பிறகும், அவளோடு கூடுதல் நேரம் செலவிடலாம். ஊழியத்தில் கலந்துகொள்ளும்போதோ குடும்பத்தாரோடு பொழுதுபோக்கில் ஈடுபடும்போதோ அவளுடைய மனநிலை எப்படி இருக்கிறதென நன்கு கவனியுங்கள். நீங்கள் பொறுமையாக, கனிவாக நடந்துகொள்ளும்போது அவள்மீது உங்களுக்கு அன்பும் அக்கறையும் இருப்பதைப் புரிந்துகொள்வாள். அப்போது உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, தகாத நட்பை விட்டுவிடுவாள்.

பைபிளைப் பயன்படுத்தி, அன்போடு பிள்ளைகளை ‘சரிசெய்யயும்போது,’ அவர்கள் படுகுழியில் விழுவதைப் பெற்றோர்கள் தடுக்கலாம். ( பாரா 15-ஐப் பாருங்கள்)

16 இதேபோல் பொறுமையாக, கனிவாக நடந்துகொள்ளும்போது உடல்நலப் பிரச்சினையால் வாடுவோரை, வேலை இழந்து தவிப்போரை, சில பைபிள் போதனைகள் புரியாமல் குழம்பிபோய் இருப்போரை நம்மால் உற்சாகப்படுத்த முடியும். கடவுளுடைய வார்த்தையை உபயோகித்து ‘காரியங்களைச் சரிசெய்யும்போது’ யெகோவாவின் மக்கள் நிறைய நன்மைகளை அனுபவிக்கிறார்கள்.

‘நீதிநெறியின்படி கண்டித்துத் திருத்துவதற்கு பிரயோஜனமுள்ளவை’

17. கண்டித்துத் திருத்தப்படும்போது அதை ஏன் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்?

17 “எவ்விதக் கண்டிப்பும் அச்சமயத்திற்குச் சந்தோஷமாகத் தோன்றாது, துக்கமாகவே தோன்றும்; என்றாலும், அதனால் பயிற்றுவிக்கப்பட்டவர்களுக்கு அது பிற்பாடு சமாதான பலனைத் தரும், அதாவது நீதியான வாழ்வைத் தரும்.” (எபி. 12:11) சிறு வயதில் பெற்றோர்கள், தங்களைக் கண்டித்து திருத்தியது பிரயோஜனமாக இருந்ததென சத்தியத்தில் வளர்க்கப்பட்ட அநேக சகோதர சகோதரிகள் ஒத்துக்கொள்கிறார்கள். மூப்பர்கள் மூலமாகவும் யெகோவா கண்டித்துத் திருத்துகிறார். இது வாழ்வளிக்கும் பாதையில் நிலைத்திருக்க நமக்கு உதவும்.—நீதி. 4:13.

18, 19. (அ) ‘நீதிநெறியின்படி கண்டித்துத் திருத்துவதற்கு’ நீதிமொழிகள் 18:13-லுள்ள ஆலோசனையைப் பின்பற்றுவது ஏன் மிக முக்கியம்? (ஆ) தவறு செய்தவர்களிடம் மூப்பர்கள் சாந்தமாக, அன்பாக பேசும்போது பெரும்பாலும் என்ன நன்மை விளையலாம்?

18 மிகச் சிறந்த விதத்தில் கண்டித்துத் திருத்துவது ஒரு கலைதான். தம்முடைய “நீதிநெறியின்படி” கண்டித்துத் திருத்த வேண்டுமென கிறிஸ்தவர்களுக்கு யெகோவா சொன்னார். (2 தீ. 3:16) எனவே, பைபிள் நியமங்களின் அடிப்படையில்தான் நாம் இதைச் செய்ய வேண்டும். ஒரு நியமத்தை நீதிமொழிகள் 18:13-ல் பார்க்கலாம்: “காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.” எனவே, மிக மோசமான பாவம் செய்த ஒருவரிடம் மூப்பர்கள் பேச வேண்டியிருந்தால், விஷயத்தை நன்றாக விசாரித்து, எல்லா உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். (உபா. 13:14) அப்போதுதான், “கடவுளுடைய நீதிநெறியின்படி” கண்டித்துத் திருத்த முடியும்.

19 “சாந்தத்தோடு” திருத்தும்படியும் கடவுளுடைய வார்த்தை மூப்பர்களுக்கு அறிவுரை தருகிறது. (2 தீமோத்தேயு 2:24-26-ஐ வாசியுங்கள்.) சிலசமயம், ஒருவர் யெகோவாவுக்கு நிந்தையையும் அப்பாவி ஆட்களுக்கு காயத்தையும் ஏற்படுத்திவிடலாம். அப்படிப்பட்டவருக்கு ஒரு மூப்பர் கோபத்தோடு ஆலோசனை கொடுத்தால் அதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. மாறாக, ‘கடவுளுடைய கருணையை’ மூப்பர்கள் காட்டும்போது, தவறு செய்தவர் மனந்திரும்பத் தூண்டப்படலாம்.—ரோ. 2:4.

20. பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்தும்போது பெற்றோர்கள் என்ன நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்?

20 பிள்ளைகளை ‘யெகோவாவுக்கு ஏற்ற முறையில் . . . கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்க்க’ பெற்றோர்கள் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். (எபே. 6:4) ஒரு அப்பா தன்னுடைய மகனைப் பற்றி ஒருசிலர் மட்டும் சொல்வதை வைத்து அவனை தண்டிக்கக் கூடாது. அதோடு, ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் கடும் கோபத்திற்கு இடமே இல்லை. “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என்பதால், பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்தும் பொறுப்புடையவர்கள் இந்த இனிய குணங்களை வெளிக்காட்ட கடும் முயற்சி செய்ய வேண்டும்.—யாக். 5:11.

யெகோவா தந்திருக்கும் அரிய பரிசு

21, 22. யெகோவாவின் வேதத்தை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டும் என்ன வார்த்தைகள் சங்கீதம் 119:97-104-ல் உள்ளன?

21 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாயிருப்பதாக தேவபக்தியுள்ள ஒருவர் சொன்னார். (சங்கீதம் 119:97-104-ஐ வாசியுங்கள்.) காரணம்? அதை ஆழ்ந்து படித்ததால் ஞானத்தை, நுண்ணறிவை, புரிந்துகொள்ளுதலை அவர் பெற்றார். மற்றவர்களுக்கு வேதனை உண்டாக்கும் பொல்லாத வழிகளைவிட்டு விலக அதன் ஆலோசனைகள் அவருக்கு உதவின. வேதத்தை ஆழ்ந்து படிப்பது அவருடைய மனதுக்கு இனிமையாகவும் நிறைவாகவும் இருந்தது. கடவுள் கொடுத்த ஆலோசனைகள் வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்ததால், எப்போதும் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்க அவர் உறுதிபூண்டார்.

22 ‘வேதவசனங்கள் எல்லாவற்றையும்’ நீங்கள் உயர்வாய் மதிக்கிறீர்களா? கடவுள் தம் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதில் விசுவாசத்தை வளர்க்க இது உங்களுக்கு உதவும். பாவம் செய்துவருவதால் வரும் படு மோசமான பாதிப்புகளிலிருந்து அதன் ஆலோசனைகள் உங்களைப் பாதுகாக்கின்றன. மற்றவர்களுக்கு வசனங்களைத் திறம்பட விளக்கும்போது, அவர்கள் வாழ்வுக்கான பாதையைக் கண்டுபிடிப்பார்கள், அதிலே தொடர்ந்து நடப்பார்கள். சர்வ ஞானம் படைத்த அன்புக் கடவுளாகிய யெகோவாவைச் சேவிக்கிற நாம், ‘வேதவசனங்கள் எல்லாவற்றையும்’ முழுமையாகப் பயன்படுத்துவோமாக!

^ யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 80-ஐப் பாருங்கள்.

^ இயேசு போதிக்கையில் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அடிக்கடி கேட்டார். பிறகு பதிலுக்காகக் காத்திருந்தார்.—மத். 18:12; 21:31; 22:42.

^ பலவீனங்களை மேற்கொள்ள உதவும் நிறைய ஆலோசனைகள் பவுல் எழுதிய கடிதங்களில் இருக்கின்றன. (ரோ. 6:12; கலா. 5:16-18) மற்றவர்களுக்குச் சொன்ன ஆலோசனைகளை அவரே முதலில் கடைப்பிடித்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.—ரோ. 2:21.