Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நற்செய்தியாளராக உங்கள் வேலையை நிறைவேற்றுங்கள்

நற்செய்தியாளராக உங்கள் வேலையை நிறைவேற்றுங்கள்

“நற்செய்தியாளரின் வேலையைச் செய், உன் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்று.”—2 தீ. 4:5.

1. யெகோவாவை மிகச் சிறந்த நற்செய்தியாளர் என்று ஏன் சொல்லலாம்?

 முதன்முதலில் நற்செய்தியை அறிவித்தவர் யெகோவா தேவன்தான். அவர் மிகச் சிறந்த நற்செய்தியாளர். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தவுடனே யெகோவா ஒரு நற்செய்தியை அறிவித்தார். அதாவது, பிசாசாகிய சாத்தான் அழிக்கப்படுவான் என்று சொன்னார். (ஆதி. 3:15) அதன் பிறகும் பல நூற்றாண்டுகளாக தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் மூலம் பல நற்செய்திகளை அறிவித்திருக்கிறார். தம்முடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தையும் சாத்தானால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் எப்படி நீக்குவார், முடிவில்லா வாழ்வை மக்கள் எப்படிப் பெறுவார்கள் என்றெல்லாம் அறிவித்திருக்கிறார்.

2. (அ) நற்செய்தியாளரின் வேலையில் தேவதூதர்களுடைய பங்கு என்ன? (ஆ) நற்செய்தியாளர்களுக்கு இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?

2 தேவதூதர்களும் நற்செய்தியாளர்களே. அவர்கள் நற்செய்தியை அறிவிப்பதோடு அதை அறிவிக்க மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். (லூக். 1:19; 2:10; அப். 8:26, 27, 35; வெளி. 14:6) பிரதான தூதரான மிகாவேலைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர் இயேசுவாக பூமியில் இருந்தபோது நற்செய்தியை அறிவிப்பதில் மனிதர்களுக்குச் சிறந்த முன்மாதிரி வைத்தார். சொல்லப்போனால், நற்செய்தியை அறிவிப்பதே அவருடைய வாழ்க்கையின் உயிர் நாடியாக இருந்தது!—லூக். 4:16-21.

3. (அ) நாம் என்ன நற்செய்தியை அறிவிக்கிறோம்? (ஆ) நற்செய்தியாளர்களான நாம் என்ன கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்?

3 நற்செய்தியாளரின் வேலையைச் செய்யும்படி இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 28:19, 20; அப். 1:8) “நற்செய்தியாளரின் வேலையைச் செய், உன் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்று” என்று பவுல் தன் சக வேலையாளான தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கொடுத்தார். (2 தீ. 4:5) இயேசுவைப் பின்பற்றுகிற நாம் என்ன நற்செய்தியை அறிவிக்கிறோம்? நம் பரலோகத் தகப்பனான யெகோவா நம்மை நேசிக்கிறார் என்ற நம்பிக்கையூட்டும் சத்தியத்தை அறிவிக்கிறோம். (யோவா. 3:16; 1 பே. 5:7) அவரது அன்புக்கு அவருடைய அரசாங்கமே அத்தாட்சி. ஆகவே, அந்த அரசாங்கத்தின் கீழ் வாழத் தகுதியை வளர்த்துக்கொண்டால், கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், நீதியாக வாழ்ந்தால் யெகோவாவின் நண்பராகலாம் என்று நாம் சந்தோஷமாக அறிவிக்கிறோம். (சங். 15:1, 2) எல்லாவித துன்ப துயரங்களையும் நீக்கிப்போட யெகோவா ஆவலாகக் காத்திருக்கிறார். முன்பு அனுபவித்த வேதனைகளின் மனத்தழும்புகளையும் நீக்கிப்போடுவார். எப்பேர்ப்பட்ட நற்செய்தி! (ஏசா. 65:17) நாம் நற்செய்தியாளர்களாக இருப்பதால் இந்த இரண்டு முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்: இன்று மக்கள் நற்செய்தியைத் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? நற்செய்தியாளர்களாக நம் வேலையைத் திறம்பட செய்வது எப்படி?

மக்கள் ஏன் நற்செய்தியைக் கேட்க வேண்டும்?

திறம்பட்ட கேள்விகள் ஒரு விஷயத்தை ஏன் நம்புகிறார்கள் என்பதை யோசிக்க வைக்க உதவுகிறது

4. கடவுளைப் பற்றி என்ன கட்டுக்கதைகளைச் சிலர் சொல்கிறார்கள்?

4 ‘உங்க அப்பா உன்னையும் உன் குடும்பத்தையும் அம்போனு விட்டுட்டு போயிட்டாரு’ என்று யாராவது உங்களிடம் சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். ‘அவர் ஈவிரக்கமில்லாதவர், ஒட்டுறவு இல்லாதவர், எல்லாத்தையும் ரகசியமா வெச்சுப்பார்’ என்றெல்லாம் மற்றவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறார்கள். ‘அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்றதெல்லாம் வீண், ஏன்னா, அவர் செத்துட்டார்’ என்றும்கூட சிலர் சொல்கிறார்கள். கடவுளைப் பற்றியும் இதுபோன்ற கட்டுக்கதைகளையே பலர் சொல்கிறார்கள். கடவுள் ஒரு புரியா புதிர், அவரைப் பற்றி யாருக்குமே தெரியாது, அவர் கொடுமைக்காரர் என்று பல விதமாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம். உதாரணத்திற்கு, கெட்டவர்களைக் கடவுள் நரகத்தில் போட்டு சதா வதைப்பார் என மதத் தலைவர்கள் சிலர் கற்றுக்கொடுக்கிறார்கள். இயற்கை பேரழிவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதற்குக் கடவுள்தான் காரணம் என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள். இவற்றில் நல்லவர்களும் கெட்டவர்களும் சிக்கி உயிரிழக்கிறார்கள்; இருந்தாலும் இதெல்லாம் தெய்வத்தண்டனை என்றே சொல்கிறார்கள்.

கேள்விகள் மனதார, இதயப்பூர்வமாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள உதவுகிறது

5, 6. பரிணாமக் கொள்கையும் பொய்க் கோட்பாடுகளும் மக்களை எப்படிப் பாதித்திருக்கின்றன?

5 சிலர் கடவுள் இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, பரிணாமக் கொள்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆதரிப்போர், உயிரினங்கள் தானாகவே தோன்றியது, அவற்றை யாருமே வடிவமைக்கவில்லை எனச் சொல்கிறார்கள். படைப்பாளர் என்று யாருமே கிடையாது; மனிதன் மிருகத்திலிருந்து பரிணமித்தவன், அதனால்தான் சில சமயங்களில் மிருகத்தனமாக நடந்துகொள்கிறான் என்றும்கூட சிலர் சொல்கிறார்கள். பலம் படைத்தவர்கள் பலவீனரை ஆட்டிப்படைப்பதற்குக் காரணம் இயற்கைதான் என்றும் வாதிடுகிறார்கள். எனவே, அநியாயமும் நாமும், நகமும் சதையும் போல என்று பலர் நினைப்பதில் ஆச்சரியமில்லை. அதனால்தான், பரிணாமத்தை நம்புகிறவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையே இருப்பதில்லை.

6 இந்தக் கடைசி காலத்தில் மனிதர்களின் அவலத்திற்கு இந்தப் பரிணாமக் கொள்கையும் மற்ற பொய்க் கோட்பாடுகளும்கூட காரணம் என்று சொல்லலாம். (ரோ. 1:28-31; 2 தீ. 3:1-5) மனிதன் கற்பிக்கிற இந்த விஷயங்களெல்லாம் நற்செய்தியே அல்ல. சொல்லப்போனால், அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டபடி, இவற்றை கேட்டு கேட்டு மக்களுடைய “மனம் இருளடைந்திருக்கிறது, கடவுள் அருளுகிற வாழ்வைப் பெறாதபடி அவர்கள் விலக்கப்பட்டிருக்கிறார்கள்.” (எபே. 4:17-19) அதோடு, பரிணாமக் கொள்கையும் பொய்க் கோட்பாடுகளும், கடவுளிடமிருந்து வரும் நற்செய்தியைக் கேட்கவிடாமல் மக்களைத் தடுக்கின்றன.—எபேசியர் 2:11-13-ஐ வாசியுங்கள்.

கேள்விகள் யோசித்துப்பார்த்து சரியான முடிவுக்கு வர உதவுகிறது

7, 8. நற்செய்தியை மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு ஒரே வழி என்ன?

7 யெகோவாவோடு மக்கள் நல்லுறவை வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், கடவுள் இருக்கிறார் என்பதை அவர்கள் முதலில் நம்ப வேண்டும். அவரைப் பற்றி அறிந்துகொள்வதால் பல நன்மைகளும் இருக்கின்றன. கடவுள் இருப்பதை நம்புவதற்கு படைப்புகளை ஆராய்ந்து பார்க்கும்படி நாம் அவர்களிடம் சொல்லலாம். படைப்புகளைப் பற்றி திறந்த மனதோடு ஆராய்ந்து பார்த்தால் அதில் கடவுளுடைய ஞானமும் வல்லமையும் பளிச்செனத் தெரிவதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். (ரோ. 1:19, 20) கடவுள் படைத்த ஒவ்வொன்றும் எவ்வளவு அற்புதமானவை என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு எப்படி உதவலாம்? உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி உதவலாம். ஆனால், சில முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ள படைப்புகளைப் பற்றி ஆராய்ந்தால் மட்டும் போதாது. உதாரணத்திற்கு, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? எதற்காக பூமியைப் படைத்தார்? என்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா? போன்ற கேள்விகளுக்குப் படைப்பிலிருந்து பதில்களைத் தெரிந்துகொள்ள முடியாது.

8 கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய நற்செய்தியை மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு ஒரே வழி பைபிளை ஆழ்ந்து படிப்பதுதான். கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவது நமக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம்! ஆனால், சத்தியத்தை அவர்களுடைய நெஞ்சில் பதிய வைப்பதற்கு ஆதாரங்களைக் காட்டினால் மட்டும் போதாது, அவர்கள் மனதார நம்பும் விதத்தில் பேச வேண்டும். (2 தீ. 3:14) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி நாம் இதைச் செய்யலாம். அவர் கேள்விகளைத் திறம்பட பயன்படுத்தினார். நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?

சிறந்த நற்செய்தியாளர்கள் கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துகிறார்கள்

9. நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

9 நற்செய்தியாளரின் வேலையைச் செய்கையில், இயேசுவைப் போல் நாம் ஏன் கேள்விகளைக் கேட்க வேண்டும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: சிகிச்சைக்காக நீங்கள் ஒரு டாக்டரிடம் போகிறீர்கள். அறுவை சிகிச்சை செய்தால் உங்களுடைய நோய் முற்றிலும் குணமாகிவிடும் என்று அவர் சொல்கிறார். அதை நீங்கள் நம்புவீர்கள். ஆனால், உங்களுடைய வியாதி என்னவென்றே கேட்காமல் அப்படிச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்பவே மாட்டீர்கள். அவர் எவ்வளவு பெரிய டாக்டராக இருந்தாலும், முதலில் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பார், நீங்கள் சொல்வதையும் காதுகொடுத்து கேட்பார். அதன் பிறகே என்ன செய்ய வேண்டுமென சொல்வார். அவ்வாறே, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு நாமும் கேள்விகளைத் திறம்பட கேட்க வேண்டும். அவர்களுடைய ஆன்மீக நிலையைப் பற்றி நன்கு தெரிந்துகொண்ட பிறகே நம்மால் அவர்களுக்கு உதவ முடியும்.

மக்களின் மனதை எட்டுவதற்கு அவர்கள் மனதார நம்பும் விதத்தில் பேச வேண்டும்

10, 11. இயேசு கற்பித்த விதத்தைப் பின்பற்றும்போது நம்மால் எதைச் சாதிக்க முடியும்?

10 மாணாக்கரைப் பற்றி புரிந்துகொள்ளவும் அவரை உரையாடலில் ஈடுபடுத்தவும் பொருத்தமான கேள்விகளைக் கேட்பது சிறந்தது; இதை இயேசு அறிந்திருந்தார். உதாரணமாக, மனத்தாழ்மையைப் பற்றி சீடர்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்த இயேசு, முதலில் சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டார். (மாற். 9:33) ஒருசமயம் பேதுருவிடம் அவர் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு இரண்டு தெரிவுகளையும் கொடுத்தார். அதில் சரியானதைத் தேர்ந்தெடுக்கும்படிச் சொன்னார். இதனால் பேதுரு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். (மத். 17:24-26) மற்றொரு சமயம், சீடர்களின் இருதயத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்வதற்காக சில நோக்குநிலை கேள்விகளைக் கேட்டார். (மத்தேயு 16:13-17-ஐ வாசியுங்கள்.) மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வெறுமனே சொல்வதற்குப் பதிலாக இப்படிக் கேள்விகளைப் பயன்படுத்தியதன் மூலம் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு மாற்றங்களைச் செய்ய உதவினார்.

11 இயேசுவைப் பின்பற்றி திறம்பட கேள்விகளைப் பயன்படுத்தும்போது, குறைந்தபட்சம் மூன்று விஷயங்களை நாம் சாதிக்கிறோம். மக்களுக்கு மிகச் சிறந்த விதத்தில் எப்படி உதவலாம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். ஆட்சேபணை தெரிவிக்கும் ஆட்களைச் சமாளிக்கிறோம். நன்மைகளை எப்படிப் பெறலாமென மனத்தாழ்மையுள்ள மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். கேள்விகளை எப்படித் திறம்பட பயன்படுத்தலாம் என்பதற்கு மூன்று சூழ்நிலைகளை இப்போது பார்க்கலாம்.

12-14. நற்செய்தியைத் தைரியமாக மற்றவர்களிடம் சொல்ல உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவலாம்? உதாரணம் கொடுங்கள்.

12 ஒன்று: உங்கள் டீன்-ஏஜ் மகன், படைப்பில் தனக்கிருக்கும் நம்பிக்கையைப் பற்றி சக மாணவர்களிடம் சரியாகப் பேச முடியாமல் போனதாகச் சொல்கிறான். ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்வீர்கள்? நற்செய்தியை நம்பிக்கையோடு சொல்ல நீங்கள் நிச்சயம் அவனுக்கு உதவுவீர்கள். அவனைக் குறை கூறுவதற்குப் பதிலாக அல்லது அவனுக்கு உடனடியாக ஆலோசனை கொடுப்பதற்குப் பதிலாக இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நோக்குநிலைக் கேள்விகளைக் கேளுங்கள். இதை எப்படிச் செய்யலாம்?

13 உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டை அவனோடு சேர்ந்து வாசித்த பிறகு, அதிலுள்ள எந்தக் கேள்வி அவனுடைய ஆர்வத்தை ரொம்பவே தூண்டியது எனக் கேட்கலாம். படைப்பாளர் மேல் அவன் நம்பிக்கை வைத்திருப்பதற்கும், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்புவதற்கும் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா எனச் சிந்தித்துப் பார்க்கும்படியும் அவனிடம் சொல்லலாம். (ரோ. 12:2) நீங்கள் சொல்லும் காரணங்களையே அவனும் சொல்ல வேண்டியதில்லை என்பதை அவனிடம் சொல்லுங்கள்.

14 நீங்கள் பேசிய விதமாகவே சக மாணவனிடம் பேசும்படி அவனை உற்சாகப்படுத்தலாம். அதாவது, படைப்பைப் பற்றிய சில விஷயங்களை சக மாணவனிடம் சொன்ன பிறகு, அவனுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள சில நோக்குநிலைக் கேள்விகளைக் கேட்க வேண்டும். உதாரணத்திற்கு, உயிரின் தோற்றம் என்ற சிற்றேட்டில் பக்கம் 21-லுள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை வாசிக்கும்படி அவனிடம் சொல்லலாம். அதன் பிறகு, உங்கள் மகன் அவனிடம் இப்படிக் கேட்கலாம்: “இந்த உலகத்தில் எத்தனையோ அதி நவீன கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம்விட டிஎன்ஏ-வால் அதிக தகவல்களைச் சேகரித்து வைக்க முடியும் என்பது உண்மைதானே?” ஆம் என்றுதான் அவன் சொல்வான். பிறகு உங்கள் மகன் இவ்வாறு கேட்கலாம்: “கம்ப்யூட்டரை உருவாக்கவே ஒரு மனிதன் தேவைப்படுகிறான் என்றால் டிஎன்ஏ மட்டும் தானாக வந்திருக்குமா?” இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து உங்கள் மகனோடு ஒத்திகை பார்த்தால் இன்னும் திறம்பட்ட விதத்தில் பேசுவதற்கு அவன் கற்றுக்கொள்வான். கேள்விகளைத் திறம்படப் பயன்படுத்த உங்கள் பிள்ளைக்கு பயிற்சி அளிக்கும்போது அவன் ஒரு சிறந்த நற்செய்தியாளராவான்.

15. நாத்திகருக்கு உதவ கேள்விகளை எப்படிப் பயன்படுத்தலாம்?

15 இரண்டு: கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை சிலநேரம் நாம் ஊழியத்தில் சந்திக்கிறோம். ‘நான் ஒரு நாத்திகன்’ என்று ஒருவர் சொல்கிறார். நீங்கள் உடனே உரையாடலை நிறுத்திவிட்டு வந்துவிடாமல், எவ்வளவு நாட்களாக அவர் நாத்திகராக இருக்கிறார், ஏன் அப்படி நினைக்கிறார் என்று கேட்கலாம். அவருடைய பதிலைக் கேட்டுவிட்டு, இந்த விஷயத்தைப் பற்றி இந்தளவுக்கு யோசித்திருப்பதற்காக அவரைப் பாராட்டுங்கள். படைப்பைப் பற்றிய ஆதாரங்களைத் தரும் பிரசுரங்களைக் கொடுத்தால் படிப்பாரா என்று கேட்கலாம். அவர் நியாயமாக யோசித்துப் பார்ப்பவராக இருந்தால் கண்டிப்பாக படிக்க ஒத்துக்கொள்வார். உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் அல்லது உயிர் படைக்கப்பட்டதா? (ஆங்கிலம்) சிற்றேட்டை அவரிடம் கொடுக்கலாம். நற்செய்தியை ஒருவர் இதயப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு கனிவாக, சாதுரியமாக கேள்விகள் கேட்பது பேருதவியாய் இருக்கும்.

16. மாணாக்கர் புத்தகத்திலிருந்து பதிலை வாசித்தாலே போதும் என்று நாம் ஏன் நினைக்கக் கூடாது?

16 மூன்று: பைபிள் படிப்பின்போது மாணாக்கர் பாராவில் இருக்கும் பதிலை மட்டும் சொல்கிறார். அதுவே போதும் என்று நீங்கள் நினைப்பீர்களா? அப்படிச் செய்வது அவருடைய ஆன்மீக வளர்ச்சியை நாமே தடுப்பதுபோல் இருக்கும். அவர் தியானித்துப் பார்க்காமல் பதிலைச் சொல்லும்போது ஆன்மீக விஷயங்கள் அவர் மனதில் வேர்விடாது. எதிர்ப்புகள் வரும்போது, வெப்பத்தால் கருகிவிடும் செடியைப் போல ஆகிவிடுவார். (மத். 13:20, 21) அப்படிப்பட்ட நிலை ஏற்படாமலிருக்க, கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பற்றி மாணாக்கர் என்ன நினைக்கிறார் என்று கேளுங்கள். அவற்றை மனதார ஏற்றுக்கொள்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க முயலுங்கள். மிக முக்கியமாக, ஒரு விஷயத்தை அவர் ஏன் ஏற்றுக்கொள்கிறார் அல்லது ஏன் மறுக்கிறார் என்பதை அவரையே சொல்லச் சொல்லுங்கள். பிறகு, பைபிள் வசனங்களை ஆராய்ந்து பார்த்து அவராகவே சரியான முடிவுக்கு வர உதவுங்கள். (எபி. 5:14) கேள்விகளைத் திறம்பட பயன்படுத்தினால், மாணாக்கர்கள் விசுவாசத்தில் வேரூன்றியிருப்பார்கள்; யாராவது எதிர்த்தால், வேறு வழிக்கு இழுத்தால் உறுதியாய் நிற்பார்கள். (கொலோ. 2:6-8) நற்செய்தியாளரின் வேலையை முழுமையாக நிறைவேற்ற நாம் வேறென்ன செய்யலாம்?

சிறந்த நற்செய்தியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்

17, 18. இருவராக ஊழியம் செய்யும்போது எப்படி ஒருவருக்கொருவர் உதவலாம்?

17 பிரசங்க வேலைக்கு சீடர்களை இரண்டிரண்டு பேராக இயேசு அனுப்பினார். (மாற். 6:7; லூக். 10:1) தன்னுடன் ‘தோளோடு தோள் சேர்ந்து நற்செய்தியை அறிவிப்பதில் கடினமாக உழைத்தவர்களை’ ‘சக வேலையாட்கள்’ என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (பிலி. 4:3) இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து ஊழியத்தில் மற்றவர்களுக்கு உதவும் ஓர் ஏற்பாடு 1953-ல் ஆரம்பமானது.

18 இருவராக ஊழியம் செய்யும்போது ஒருவருக்கொருவர் எப்படி உதவலாம்? (1 கொரிந்தியர் 3:6-9-ஐ வாசியுங்கள்.) உங்களோடு வரும் பிரஸ்தாபி வசனத்தை வாசிக்கும்போது நீங்களும் பைபிளை எடுத்துப் பாருங்கள். பிரஸ்தாபி பேசும்போது அவரைக் கவனியுங்கள், வீட்டுக்காரர் பேசும்போது அவரைக் கவனியுங்கள். நீங்களும் உரையாடலை நன்கு கவனித்தால்தான் வீட்டுக்காரர் ஏதாவது ஆட்சேபணை தெரிவிக்கும்போது உடனிருக்கும் பிரஸ்தாபிக்கு உதவ முடியும். (பிர. 4:12) ஒன்றை நினைவில் வையுங்கள்: உடனிருக்கும் பிரஸ்தாபி நன்கு நியாயங்காட்டி பேசும்போது, இடையில் குறுக்கிட்டு பேசாதீர்கள். அப்படிச் செய்தால், பிரஸ்தாபி சங்கடப்படுவார், வீட்டுக்காரரும் குழம்பிப்போவார். சில சமயங்களில், நீங்களும் உரையாடலில் கலந்துகொள்வது சரியாக இருக்கலாம். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் ஓரிரு குறிப்புகளை மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு நிறுத்திவிடுங்கள். பிறகு, உடனிருக்கும் பிரஸ்தாபியைப் பேச விடுங்கள்.

19. நாம் எதை நினைவில் வைக்க வேண்டும், ஏன்?

19 ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்குச் செல்கையில் எப்படி ஒருவருக்கொருவர் உதவலாம்? இன்னும் சிறந்த விதத்தில் எப்படிப் பேசலாம் என்பதைப் பற்றி பேசுங்கள். பிராந்தியத்தில் உள்ளவர்களைப் பற்றிக் குறை பேசாதீர்கள். மற்ற சகோதர சகோதரிகளின் குறைகளையும் விமர்சிக்காதீர்கள். (நீதி. 18:24) நாம் மண்பாண்டங்கள்தான் என்பதை நினைவில் வைக்க வேண்டும். கடவுளுடைய அளவற்ற இரக்கத்தால்தான், நற்செய்தியை அறிவிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். (2 கொரிந்தியர் 4:1, 7-ஐ வாசியுங்கள்.) நற்செய்தியாளர்களாக நம் வேலையை மிகச் சிறந்த விதத்தில் செய்வதன் மூலம் அந்தப் பாக்கியத்தைப் பொன்னென போற்றுவோமாக!