Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவரா’?

நீங்கள் ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவரா’?

“கிறிஸ்து இயேசு . . . நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார்; . . . அவருக்கே உரிய மக்களாகவும் நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாகவும் ஆகும்படி நம்மைத் தூய்மையாக்கினார்.”—தீத். 2:13, 14.

1, 2. யெகோவாவின் சாட்சிகளுக்கே உரிய பெருமை என்ன, அதைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

 எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக ஏதாவது ஒன்று செய்து விருது பெறும் ஒருவரை மக்கள் கௌரவிக்கிறார்கள். உதாரணமாக, நாடுகளுக்கிடையே சமாதான உறவை ஏற்படுத்துவதில் வைராக்கியமாக ஈடுபட்ட சிலர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். அப்படியென்றால், மக்கள் படைப்பாளரோடு சமாதான உறவுக்குள் வர கடவுள் நம்மைத் தூதுவர்களாகப் பயன்படுத்துவது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட கௌரவம்!

2 யெகோவாவின் சாட்சிகளாக இந்தப் பெருமை நமக்கு மட்டுமே சேரும். கடவுளும் கிறிஸ்துவும் கொடுத்த கட்டளைப்படி “கடவுளோடு சமரசமாகுங்கள்” என்று மக்களிடம் நாம் கெஞ்சிக் கேட்கிறோம். (2 கொ. 5:20) மக்கள் தம்மிடம் நெருங்கிவர உதவுவதற்கு, யெகோவா நம்மைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் 235-க்கும் அதிகமான நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் கடவுளோடு நல்லுறவை அனுபவித்து வருகிறார்கள், முடிவில்லா வாழ்வைப் பெறும் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார்கள். (தீத். 2:11) “விருப்பமுள்ள எவனும் வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள” வரும்படி நாம் மனதார அழைக்கிறோம். (வெளி. 22:17) இந்த வேலையை நமக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்து மும்முரமாகச் செய்துவருகிறோம். எனவே, ‘நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமுள்ள மக்கள்’ என்று சொல்வதற்கு நாம் தகுதியானவர்களே! (தீத். 2:14) நற்காரியங்களைச் செய்வதில் நாம் வைராக்கியமாக இருப்பதால், மக்கள் யெகோவாவிடம் ஈர்க்கப்படுகிறார்கள். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். அதற்கு ஒரு வழி பிரசங்க வேலை.

யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றுங்கள்

3. “கர்த்தருடைய வைராக்கியம்” நமக்கு என்ன நம்பிக்கையை அளிக்கிறது?

3 கடவுளுடைய மகனின் ஆட்சி சாதிக்கப் போகிற விஷயங்களைப் பற்றி ஏசாயா 9:7 இப்படிச் சொல்கிறது: “சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.” மனிதருக்கு மீட்பளிக்க நம் பரலோக தகப்பன் மிகுந்த ஆவலோடு இருக்கிறார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. யெகோவாவே வைராக்கியத்தைக் காட்டுகிறார் என்றால் அவர் நமக்குக் கொடுத்திருக்கும் வேலையை முடிக்க நாம் எந்தளவு வைராக்கியத்தையும் ஆர்வத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும்! கடவுளைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் பற்றியெரிகிறது. இதுவும் யெகோவாவுடைய வைராக்கியத்தின் ஒரு வெளிக்காட்டே. அப்படியென்றால், யெகோவாவின் சக வேலையாட்களான நாம் நற்செய்தியை அறிவிப்பதில் முழுமையாக ஈடுபட உறுதிபூண்டிருக்கிறோமா?—1 கொ. 3:9.

4. ஊழியத்தில் வைராக்கியத்தோடு மும்முரமாக ஈடுபடுவதில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?

4 இயேசு காட்டிய வைராக்கியத்தையும் சிந்தித்துப் பாருங்கள். ஊழியத்தில் வைராக்கியத்தோடு மும்முரமாக ஈடுபடுவதில் அவர் தலைசிறந்த முன்மாதிரி. கடும் எதிர்ப்பின் மத்தியிலும் வைராக்கியத்தோடு பிரசங்க வேலையில் ஈடுபட்டார்; வேதனையில் துடிதுடித்து சாகும்வரை அந்த வைராக்கியத்தை விட்டுவிடவில்லை. (யோவா. 18:36, 37) மரணம் நெருங்க நெருங்க, யெகோவாவைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டுமென்ற வைராக்கியம் அவருக்குள் இன்னும் பற்றியெரிந்தது.

5. அத்திமரத்தைப் பற்றிய உவமையில் சொல்லப்பட்டது போல இயேசு எப்படி நடந்துகொண்டார்?

5 உதாரணமாக, இயேசு ஊழியம் செய்ய ஆரம்பித்து மூன்று வருடங்கள் முடியும் சமயத்தில் அத்திமரத்தைப் பற்றிய ஓர் உவமையைச் சொன்னார். திராட்சை தோட்டத்தில் நடப்பட்டிருந்த அந்த அத்திமரம் மூன்று வருடங்களாக கனி தரவில்லை. அதன் முதலாளி அதை வெட்டிப்போடும்படி தோட்டத்தொழிலாளியிடம் சொல்கிறார். அதற்கு அவர் உரம் போட்டுப் பார்க்க காலம் அனுமதிக்கும்படி முதலாளியிடம் கேட்கிறார். (லூக்கா 13:6-9-ஐ வாசியுங்கள்.) இயேசு இந்த உவமையைச் சொன்ன சமயத்தில் அவருக்குக் கொஞ்சம் சீடர்களே இருந்தார்கள். ஆனால், அந்தத் தோட்டத்தொழிலாளி சொன்னதைப் போல, தமக்கு மீதியிருந்த சுமார் ஆறு மாதங்களில் யூதேயாவிலும் பெரேயாவிலும் நற்செய்தியை சுறுசுறுப்புடன் பிரசங்கித்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தங்கள் ‘காதுகளால் கேட்காமல்’ போன சொந்த ஊர் ஜனங்களை நினைத்து கண்ணீர்விட்டார்.—மத். 13:15; லூக். 19:41.

6. ஊழியத்தில் நாம் ஏன் தீவிரமாக ஈடுபட வேண்டும்?

6 நாம் கடைசி நாட்களின் கடைசி கட்டத்தில் வாழ்வதால் பிரசங்க வேலையில் இன்னும் எந்தளவு தீவிரமாக ஈடுபட வேண்டும்! (தானியேல் 2:41-45-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் சாட்சிகளாய் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! மனிதர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர பரிகாரம் கிடைக்கப் போவதைப் பற்றி நாம் மட்டுமே பிரசங்கிக்கிறோம். “நல்லவர்களுக்கு ஏன் கெட்ட காரியங்கள் நடக்கிறது?” என்ற கேள்வி பதிலளிக்க முடியாத ஒன்று என செய்தித்தாள் எழுத்தாளர் ஒருவர் சொன்னார். ஆனால், இந்தக் கேள்விக்கு பைபிளில் பதில் இருப்பது நமக்குத் தெரியும். எனவே, கேட்க மனமுள்ள எல்லோருக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கு நாம் பைபிளிலிருந்து பதிலளிக்கிறோம். கிறிஸ்தவர்களாக இது நம் கடமை, அரும்பெரும் பாக்கியமும்கூட. இந்த வேலையைச் செய்ய, ‘யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்பட’ வேண்டும். (ரோ. 12:11) அப்போது யெகோவாவின் ஆசீர்வாதம் நமக்கு இருக்கும்; அவரை அறிந்துகொள்ளவும் நேசிக்கவும் மற்றவர்களுக்கு உதவவும் முடியும்.

சுயதியாக மனப்பான்மை யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும்

7, 8. நம்முடைய சுயதியாக மனப்பான்மை கடவுளுக்கு எப்படி மகிமை சேர்க்கிறது?

7 அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் ஊழியத்திற்காக, “தூக்கமில்லா இரவுகள், பட்டினிகள்” என்று சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். (2 கொ. 6:5) நம் சகோதர சகோதரிகள் இதேபோன்ற சுயதியாக மனப்பான்மையைக் காட்டியிருக்கிறார்கள். வேலை பார்த்துக்கொண்டே ஊழியத்திற்கு முதலிடம் கொடுக்கும் பயனியர்களை நினைத்துப் பாருங்கள். அயல் நாட்டு சேவையில் தங்களையே ‘பானபலியாக ஊற்றியிருக்கும்’ மிஷனரிகளையும் நினைத்துப் பாருங்கள். (பிலி. 2:17) யெகோவாவுடைய மந்தையைக் கவனிப்பதற்காக உண்ணாமல், உறங்காமல் அயராது உழைக்கும் மூப்பர்களை மறந்துவிட முடியுமா, என்ன? எப்பாடுபட்டாவது கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் வருகிற வயதானவர்கள், வியாதிப்பட்டவர்கள்கூட நம் மத்தியில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் காட்டும் சுயதியாக மனப்பான்மையைப் பார்க்கும்போது நம் நெஞ்சம் நெகிழ்கிறது, அல்லவா? இந்தச் சுயதியாக மனப்பான்மையைப் பார்க்கிற மற்ற ஆட்களும் ஊழியத்தின் மதிப்பை உணர்ந்துகொள்கிறார்கள்.

8 பிரிட்டன், லிங்கன்ஷரிலிருந்து வெளிவரும் போஸ்டன் டார்கெட் என்ற செய்தித்தாளுக்கு சாட்சியல்லாத ஒருவர் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “வர வர மக்களுக்கு மதத்தில் நம்பிக்கையே இல்லை. . . . சர்ச் பாதிரிகள் நாள் முழுக்க என்னதான் செய்கிறார்களோ? கிறிஸ்துவைப் போல அவர்கள் வெளியில் இறங்கிப் போய் மக்களைச் சந்திப்பதில்லை . . . இதைச் செய்கிற ஒரே மதத்தவர் யெகோவாவின் சாட்சிகள்தான். அவர்கள் மக்களைச் சந்தித்து உள்ளப்பூர்வமாகச் சத்தியத்தைப் பிரசங்கிக்கிறார்கள்.” சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருக்கும் ஜனங்கள் மத்தியில் நாம் நம்முடைய சுயதியாக மனப்பான்மையால் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறோம்.—ரோ. 12:1.

ஊழியத்திற்கு நீங்கள் செல்வதே மற்றவர்களுக்குச் சிறந்த சாட்சியாக இருக்கும்

9. ஊழியத்தில் வைராக்கியத்தோடு நற்காரியங்களைச் செய்ய எது நம்மைத் தூண்டும்?

9 ஆனால், ஊழியத்தில் நம்முடைய வைராக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதுபோல் தெரிந்தால் என்ன செய்வது? பிரசங்க வேலை மூலமாக யெகோவா என்ன சாதித்து வருகிறார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. (ரோமர் 10:13-15-ஐ வாசியுங்கள்.) விசுவாசத்தோடு யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டுவோருக்கே மீட்பு கிடைக்கும். ஆனால், நாம் பிரசங்கிக்கவில்லை என்றால் மக்கள் எப்படி யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டுவார்கள்? இதைப் புரிந்துகொள்வது, வைராக்கியத்தோடு நற்காரியங்களைச் செய்ய நம்மைத் தூண்டும், அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை முழுமூச்சோடு பிரசங்கிக்கவும் தூண்டும்.

நல்நடத்தை யெகோவாவிடம் மக்களை ஈர்க்கிறது

உங்கள் நேர்மையும் கடின உழைப்பும் மக்களின் கண்ணில் படாமல் போகாது

10. நம்முடைய நல்நடத்தை மக்களை யெகோவாவிடம் கவர்ந்திழுக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?

10 கடவுளிடம் மக்களை ஈர்ப்பதற்கு, வைராக்கியமாக ஊழியம் செய்தால் மட்டும் போதாது. நல்நடத்தையும் முக்கியம். “எங்களுடைய ஊழியத்தில் யாரும் குறை காணக்கூடாது என்பதற்காக நாங்கள் எவருக்கும் எவ்விதத்திலும் இடையூறு உண்டாக்காமல்” வாழ்கிறோம் என்று பவுல் எழுதினார். (2 கொ. 6:3) நம்முடைய சுத்தமான பேச்சும் நேர்மையான நடத்தையும் கடவுளுடைய போதனைகளை அலங்கரிக்கும். அதனால் மற்றவர்கள் யெகோவாவை வழிபட விரும்புவார்கள். (தீத். 2:10) கிறிஸ்துவைப் போல் நாம் நடந்துகொள்வதைப் பார்த்து சத்தியத்திடம் ஈர்க்கப்பட்டவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

11. நம் நடத்தையைப் பற்றி ஏன் ஜெபம் செய்து யோசித்துப் பார்க்க வேண்டும்?

11 நம்முடைய செயல்களைப் பார்த்து போற்றுவோரும் உண்டு, தூற்றுவோரும் உண்டு. எனவே, வீட்டிலோ வேலையிலோ பள்ளியிலோ எங்கிருந்தாலும் நம் ஊழியத்தை, நடத்தையை யாரும் குறை சொல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமென்றே பாவம் செய்து வந்தால் மோசமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். (எபி. 10:26, 27) ஆகவே, நாம் எப்படி நடந்துகொள்கிறோம், மற்றவர்கள் நம்மைப் பார்த்து என்ன நினைப்பார்கள் என்பதை ஜெபம் செய்து யோசித்துப் பார்க்க வேண்டும். ஒழுக்க நெறிகளில் தறிகெட்டு வருகிற இந்த உலகில், “தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை” நல்மனமுள்ள ஆட்கள் தெள்ளத்தெளிவாகக் காண்கிறார்கள். (மல். 3:18) ஆம், மக்கள் கடவுளோடு சமரசமாவதற்கு நம்முடைய நல்நடத்தை மிக முக்கியம்.

12-14. விசுவாசப் பரீட்சைகளில் நாம் சகித்திருப்பதால் மற்றவர்கள் எப்படி பயனடைவார்கள்? உதாரணம் கொடுங்கள்.

12 உபத்திரவங்கள், கஷ்டங்கள், அடிகள், சிறைவாசங்கள் என எல்லாவற்றையும் தான் கடந்து வந்ததாக கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டார். (2 கொரிந்தியர் 6:4, 5-ஐ வாசியுங்கள்.) விசுவாசப் பரீட்சைகள் வரும்போது நாம் சகித்திருப்பதைப் பார்ப்பவர்கள் சத்தியத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்பு, அங்கோலாவில் யெகோவாவின் சாட்சிகளைத் துடைத்தழிக்க முயற்சி எடுக்கப்பட்டது. இரண்டு சாட்சிகளையும் சத்தியத்தில் ஆர்வம் காட்டிய 30 பேரையும் எதிரிகள் சுற்றி வளைத்தார்கள். இரத்தம் சொட்ட சொட்ட அவர்களைச் சாட்டையால் அடித்தார்கள். பெண்களையும் பிள்ளைகளையும்கூட விட்டுவைக்கவில்லை. ஊரே கூடி நின்று அதை வேடிக்கை பார்த்தது. இப்படிச் செய்தால்தான் மக்கள் பயந்துபோய் சாட்சிகள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், நடந்ததே வேறு. நிறைய பேர் வந்து தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி சாட்சிகளிடம் கேட்டார்கள். அதன் பிறகு, பிரசங்க வேலை விறுவிறுப்படைந்தது, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரித்தது, சகோதரர்களின் முயற்சிக்கு கைமேல் பலனும் கிடைத்தது.

13 ஆம், எதிர்ப்பின் மத்தியிலும் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதைப் பார்த்து பலர் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் தைரியமாக இருந்ததைப் பார்த்து நிறைய பேர் கடவுளோடு சமரசமானார்கள். (அப். 5:17-29) நம்முடைய விஷயத்திலும் அதுவே உண்மை. சரியானதைச் செய்வதில் நாம் உறுதியாய் இருப்பதைப் பார்க்கும் சக மாணவர்கள், கூட வேலை பார்ப்பவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் பைபிள் படிக்க ஆரம்பிக்கலாம்.

14 பல்வேறு இடங்களில், நம் சகோதரர்கள் சிலர், துன்புறுத்தலை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆர்மீனியாவில், நடுநிலை காத்துக்கொண்டதால் சுமார் 40 சகோதரர்கள் சிறையில் இருக்கிறார்கள். வரக்கூடிய மாதங்களில் இன்னும் நிறைய பேரை சிறையில் தள்ள வாய்ப்பிருக்கிறது. எரிட்ரியாவில், 55 சகோதர சகோதரிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் 60 வயதைத் தாண்டியவர்கள். தென் கொரியாவில், சுமார் 700 சாட்சிகளைச் சிறையில் தள்ளியிருக்கிறார்கள். இந்த நிலைமை 60 வருடங்களாக நீடிக்கிறது. இவர்களுடைய விசுவாசம் கடவுளுக்கு மகிமை சேர்க்கட்டும், சத்தியத்தை ஏற்றுக்கொள்ள நல்மனமுள்ளவர்களைத் தூண்டட்டும் என நாம் ஜெபம் செய்வோமாக!—சங். 76:8-10.

15. நம்முடைய நேர்மையான நடத்தை மக்களை சத்தியத்திடம் ஈர்க்கும் என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.

15 நம்முடைய நேர்மையும் மக்களை சத்தியத்திடம் கவர்ந்திழுக்கும். (2 கொரிந்தியர் 6:4, 7-ஐ வாசியுங்கள்.) ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: பஸ்ஸில் சென்ற ஒரு சகோதரி டிக்கெட் எடுக்கத் தயாரானபோது அவருடைய சிநேகிதி, கொஞ்ச தூரமே பயணிப்பதால் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை என்று சொன்னார். ஒரு ஸ்டாப் தூரமாக இருந்தாலும் எடுத்தே ஆக வேண்டும் என்று சகோதரி சொன்னார். பிறகு சிநேகிதி இறங்கிவிட்டார். பஸ் டிரைவர் சகோதரியைப் பார்த்து “நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியா?” என்று கேட்டார். “ஆமா, ஏன் அப்படி கேட்குறீங்க?” என்றார் சகோதரி. “நீங்க பேசிட்டிருந்ததை நான் கேட்டேன். யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் இப்படி எல்லா விஷயத்திலேயும் நேர்மையா இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.” சில மாதங்களுக்குப் பிறகு அவர் இந்தச் சகோதரியை ஒரு சபைக்கூட்டத்தில் பார்த்து “என்னைத் தெரியுதா? அன்னைக்கு பஸ்ல டிக்கெட் எடுக்குறத பத்தி பேசிட்டிருந்தோமே, ஞாபகம் இருக்கா? உங்க நல்ல நடத்தையை பார்த்த பிறகு, யெகோவாவின் சாட்சிகள்கிட்ட பைபிள் படிக்கணும்னு முடிவு பண்ணேன்” என்று சொன்னார். நாம் நேர்மையாக நடந்துகொள்வதைப் பார்ப்பவர்கள், நாம் நம்பகமானவர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.

கடவுளுக்கு மகிமை சேர்க்கும் குணங்கள்

16. அன்பு, கருணை, நீடிய பொறுமை போன்ற குணங்கள் ஏன் மக்களின் மனதைக் கவருகின்றன? உதாரணம் கொடுங்கள்.

16 அன்பு, கருணை, நீடிய பொறுமை போன்ற குணங்களைக் காட்டுவதன் மூலமும் மற்றவர்களை யெகோவாவிடம் ஈர்க்கிறோம். நம்மைக் கவனிக்கிற சிலர் யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் அவரை வழிபடுகிற மக்களையும் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பலாம். வெளிவேஷம் போடுகிற சில மதத்தலைவர்களின் மத்தியில் உண்மைக் கிறிஸ்தவர்களின் மனப்பான்மையும் நடத்தையும் தனியாகத் தெரிகிறது. மதத்தலைவர்கள் சிலர் மக்களின் பணத்தை சுரண்டி பெரிய பங்களா, சொகுசான கார் என்று சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். அதிலும் ஒருவர், தன் வீட்டு நாய்க்குக்கூட ‘ஏசி’ வசதி செய்து கொடுத்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கு ‘இலவசமாய்க் கொடுக்கும்’ எண்ணமே கிடையாது. (மத். 10:8) இவர்கள், பூர்வ இஸ்ரவேலில் இருந்த ஏறுமாறான குருமார்களைப் போலவே “கூலிக்கு உபதேசிக்கிறார்கள்.” பெரும்பாலும், பைபிளில் இல்லாத விஷயங்களையே போதிக்கிறார்கள். (மீ. 3:11) இதுபோன்ற மாய்மாலமான நடத்தையால் ஒருவரையும் கடவுளுடன் சமரசமாக்க முடியாது.

17, 18. (அ) யெகோவாவுடைய குணங்களை நாம் வெளிக்காட்டுவது அவருக்கு எப்படி மகிமை சேர்க்கிறது? (ஆ) நற்காரியங்களைத் தொடர்ந்து செய்ய எது உங்களைத் தூண்டுகிறது?

17 பைபிளில் உள்ள உண்மையான சத்தியங்களைப் போதிக்கும்போதும் கனிவாக உதவும்போதும் மக்களின் இருதயத்தைக் கவர முடியும். ஓர் உதாரணம்: ஒரு பயனியர் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது, வயதான ஒரு விதவை அவர் சொல்ல வந்ததைக் கேட்கவில்லை; உடனடியாக மறுத்துவிட்டார். அந்தச் சகோதரர் அழைப்பு மணியை அடித்தபோது சமயலறையிலிருந்த ‘பல்பை’ மாற்ற ஏணிமேல் ஏறி நின்றுகொண்டிருந்ததாக அந்த விதவை சொன்னார். அந்த பயனியர் “நீங்க அத தனியா மாத்துறது பாதுகாப்பா இருக்காது” என்று சொல்லி, அவரே ‘பல்ப்’ மாற்றிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அந்த விதவையின் மகன் இதைக் கேள்விப்பட்டதும், அந்தச் சகோதரரை எப்படியாவது பார்த்து நன்றி சொல்ல ஆசைப்பட்டார். பிறகு, அந்த மகன் பைபிள் படிக்க ஆரம்பித்தார்.

18 நற்காரியங்கள் செய்வதை விட்டுவிடக் கூடாது என்பதில் நீங்கள் ஏன் உறுதியாய் இருக்கிறீர்கள்? ஏனென்றால், ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபட்டால்... நல்நடத்தையைக் காத்துக்கொண்டால்... யெகோவாவுக்கு மகிமை சேர்க்க முடியும், மற்றவர்கள் மீட்படைய உதவ முடியும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 10:31-33-ஐ வாசியுங்கள்.) அதோடு, கடவுள்மீதும் சக மனிதர்கள்மீதும் அன்பு காட்ட விரும்புகிறீர்கள். (மத். 22:37-39) நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமாக ஈடுபட்டால் இப்போதே அளவிலா சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும். அதோடு, மனிதர் எல்லோரும் படைப்பாளரான யெகோவாவை ஆனந்தமாக வழிபட்டு, அவருக்கு மகிமை சேர்க்கும் நாளுக்காக ஆவலோடு எதிர்பார்க்க முடியும்.