Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

குற்றவாளிகளை இஸ்ரவேலர்கள் கழுமரத்தில் அறைந்து கொன்றார்களா?

பூர்வ காலத்திலிருந்த நிறைய தேசங்களில், குறிப்பிட்ட சில குற்றங்கள் செய்தவர்களை கழுமரத்திலோ கம்பத்திலோ அறைந்து கொல்வது வழக்கம். ரோமர்கள் குற்றவாளிகளை இதுபோன்ற கழுமரத்தில் கட்டிப்போடுவார்கள் அல்லது ஆணி அடிப்பார்கள். அதில் அவர்கள் சில நாட்கள் உயிரோடு கிடப்பார்கள். வலி, பசி, தாகம், மழை, வெயில் என அவஸ்தைப்பட்டு கடைசியில் இறந்துபோவார்கள். மிகவும் மோசமான தவறு செய்த ஒரு குற்றவாளியை அவமதிப்பதற்காகக் கொடுக்கப்படும் ஒரு தண்டனையாக ரோமர்கள் இதை நினைத்தார்கள்.

தண்டனை கொடுக்கும் விஷயத்தில் பூர்வ இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள்? அவர்களும் இதேபோல் கழுமரத்தில் அறைந்து கொன்றார்களா? திருச்சட்டம் சொல்வதைக் கவனியுங்கள்: “சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு, ஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக் கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும்.” (உபா. 21:22, 23, பொது மொழிபெயர்ப்பு) அப்படியானால், எபிரெய வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில், மரண தண்டனைக்கு ஏதுவான ஒருவன் முதலில் சாகடிக்கப்பட்ட பிறகே கழுவில் அல்லது மரத்தில் தொங்கவிடப்பட்டான் என்பது தெரிய வருகிறது.

இதைக் குறித்து லேவியராகமம் 20:2 இப்படிச் சொல்கிறது: “இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்பட வேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறிய வேண்டும்.” ‘அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களும்’ கொலைசெய்யப்பட வேண்டும். எப்படி? அவர்கள்மேல் ‘கல்லெறிந்து’ கொலை செய்ய வேண்டும்.—லேவி. 20:27.

உபாகமம் 22:23, 24 சொல்கிறது: “கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால், அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.” படுபயங்கரமான குற்றம் செய்த ஒருவரை கல்லெறிந்து கொல்வதுதான் பூர்வ இஸ்ரவேலர்கள் கொடுத்த முக்கிய தண்டனை. *

எபிரெய வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில், குற்றவாளியை முதலில் சாகடித்த பிறகே கம்பத்திலோ மரத்திலோ தொங்க விட்டார்கள்

“தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்” என்று உபாகமம் 21:23 சொல்கிறது. “தேவனால் சபிக்கப்பட்ட” ஒருவனை இப்படிக் கழுமரத்தில் தூக்கிப்போட்டதைப் பார்த்து இஸ்ரவேலர்கள் பாடம் கற்றிருப்பார்கள். அவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருந்திருக்கும்.

^ யூதர்கள், திருச்சட்டத்தின்படி குற்றவாளியை முதலில் சாகடித்த பிறகே கம்பத்திலோ மரத்திலோ தொங்கவிட்டார்கள் என்பதை நிறைய அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இருந்தாலும் முதல் நூற்றாண்டுகளில், சில குற்றவாளிகளை உயிரோடு கம்பத்தில் அறைந்து சாகடித்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.