Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் தரும் பதில்கள்

பைபிள் தரும் பதில்கள்

உலக சமாதானம் ஏன் வெறும் கனவாகவே இருக்கிறது?

மக்களின் மனப்பான்மையை மாற்ற முடிந்த அரசாங்கத்தால் மட்டுமே உலக சமாதானத்தைக் கொண்டுவர முடியும்

இதற்கு பைபிள் இரண்டு முக்கியக் காரணங்களை அளிக்கிறது. ஒன்று, மனிதர்கள் பல சாதனைகளைப் படைத்தாலும், தங்களைத் தாங்களே வழிநடத்துகிற திறமை அவர்களுக்கு இல்லை. இரண்டாவது, ‘இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய [அதாவது, பிசாசாகிய சாத்தானுடைய] கைக்குள் கிடப்பதால்’ மனிதர்களுடைய முயற்சியெல்லாம் தோல்வியையே தழுவியிருக்கிறது. எனவே, மனிதர்களால் உலகத்தில் சமாதானத்தைக் கொண்டுவர முடியவில்லை.—எரேமியா 10:23-ஐயும் 1 யோவான் 5:19-ஐயும் வாசியுங்கள்.

மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பதவி வெறி பிடித்தவர்களாக இருப்பதாலும் உலக சமாதானம் வெறும் கனவாகவே இருக்கிறது. சரியானதைச் செய்ய, ஒருவர்மீது ஒருவர் அக்கறை காட்ட எந்த உலக அரசாங்கம் மக்களுக்குக் கற்பிக்கிறதோ அந்த அரசாங்கத்தால் மட்டுமே உலகில் சமாதானத்தைக் கொண்டுவர முடியும்.—ஏசாயா 32:17, 18; 48:18, 22-ஐ வாசியுங்கள்.

இந்த உலகில் சமாதானத்தை யாரால் நிலைநாட்ட முடியும்?

முழு மனிதகுலத்தின்மீது ஆட்சி செய்ய ஒரேவொரு அரசாங்கத்தை நிறுவப்போவதாகச் சர்வசக்தி படைத்த கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த அரசாங்கம் மனித அரசாங்கங்களையெல்லாம் நீக்கிவிடும். (தானியேல் 2:44) கடவுளுடைய மகனும் சமாதானப் பிரபுவுமான இயேசுதான் அந்த அரசாங்கத்தில் ராஜாவாக இருப்பார். உலகிலுள்ள எல்லாத் தீமையையும் அவர் துடைத்தழித்துவிடுவார். சமாதானமாய் நடக்க மக்களுக்குக் கற்பிப்பார்.—ஏசாயா 9:6, 7; 11:4, 9-ஐ வாசியுங்கள்.

இயேசுவின் வழிநடத்துதலில் இப்போதே உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானோர் சமாதானமாய் இருக்க பைபிளிலிருந்து மக்களுக்குக் கற்பிக்கிறார்கள். இன்று கனவாக இருக்கும் உலக சமாதானம் சீக்கிரத்தில் நனவாகப்போகிறது.—ஏசாயா 2:3, 4; 54:13-ஐ வாசியுங்கள். (w13-E 06/01)