Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தாராள குணமுள்ளவர், நியாயமானவர்

யெகோவா தாராள குணமுள்ளவர், நியாயமானவர்

“கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர். அவர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.”—சங். 145:9, ஈஸி டு ரீட் வர்ஷன்.

1, 2. யெகோவாவின் நண்பர்களுக்கு என்ன வாய்ப்பு காத்திருக்கிறது?

 “எங்களுக்குக் கல்யாணமாகி கிட்டத்தட்ட 35 வருஷம் ஆகுது. நாங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு வெச்சிருக்கோம். ஆனா, இத்தன வருஷம் ஆகியும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் இன்னும் புதுசு புதுசா ஏதாவது தெரிஞ்சிக்கிட்டேதான் இருக்கோம்!” என்று மானிக்கா என்ற சகோதரி சொல்கிறார். தம்பதிகள், நண்பர்கள் பலருடைய விஷயத்திலும் இதுவே உண்மை.

2 பொதுவாக, நாம் நேசிக்கிறவர்களைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோம். இந்தப் பூலோகத்தில் இருக்கும் எந்த நட்பையும்விட தலைசிறந்த நட்பு யெகோவாவோடு நாம் அனுபவிக்கும் நட்புதான். யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள காலங்கள் போதாது. (ரோ. 11:33) யெகோவாவின் அருமையான பண்புகளைப் பற்றி நித்திய நித்தியமாக அறிந்துகொள்ளவும் அவற்றைப் பொன்னென போற்றவும் வாய்ப்பு காத்திருக்கிறது.—பிர. 3:11, NW.

3. இந்தக் கட்டுரையில் எதைப் படிப்போம்?

3 யெகோவா அணுகத்தக்கவராகவும் பாரபட்சமற்றவராகவும் இருப்பதை மதித்துணர முந்தின கட்டுரை உதவியது. இந்தக் கட்டுரையில் யெகோவாவின் இன்னும் இரண்டு அருமையான குணங்களைப் பற்றிப் பார்க்கலாம். அவை தாராள குணம், நியாயத்தன்மை. இதைத் தெரிந்துகொள்வதால், “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர் [நல்லவர், NW]; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது” என்பதை நன்றாகப் புரிந்துகொள்வோம்.—சங். 145:9.

யெகோவா தாராள குணமுடையவர்

4. தாராள குணத்தின் சாராம்சம் என்ன?

4 தாராள குணம் என்றால் என்ன? அப்போஸ்தலர் 20:35-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் இதற்குப் பதிலளிக்கின்றன: “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது.” தாராள குணத்தின் சாராம்சத்தை இந்த ஒரே வாக்கியத்தில் ரத்தின சுருக்கமாக விளக்கிவிட்டார். தாராள குணம் படைத்த ஒருவர் தன் நேரம், சக்தி, வளங்கள் என அனைத்தையும் அடுத்தவர்களின் நன்மைக்காக அள்ளிக்கொடுப்பார், அதுவும் மனதாரக் கொடுப்பார். ஆம், ஒருவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பது முக்கியமல்ல, என்ன மனநிலையோடு கொடுக்கிறார் என்பதே முக்கியம். (2 கொரிந்தியர் 9:7-ஐ வாசியுங்கள்.) தாராள குணத்தைக் காட்டுவதில், நம் “சந்தோஷமுள்ள கடவுள்” யெகோவாவுக்கு நிகர் யெகோவாவே.—1 தீ. 1:11.

5. யெகோவா தாராள குணத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார்?

5 தாராள குணத்தை யெகோவா எப்படிக் காட்டுகிறார்? அவர் மனிதர்கள் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்; ஏன், அவரை வணங்காதவர்களைக்கூட கவனித்துக்கொள்கிறார். ‘கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.’ “நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்.” (மத். 5:45) அதனால்தான், அப்போஸ்தலன் பவுல், யெகோவாவை வணங்காத மக்களிடம் இப்படிச் சொன்னார்: “வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்.” (அப். 14:17) ஆம், தாராள குணத்தைக் காட்டுவதில் யெகோவாவிடம் ஓரவஞ்சனையே கிடையாது.—லூக். 6:35.

6, 7. (அ) யாருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் யெகோவா மகிழ்ச்சி காண்கிறார்? (ஆ) யெகோவா தம் வணக்கத்தாரை கவனித்துக்கொள்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.

6 குறிப்பாக, தம்முடைய வணக்கத்தாரின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் யெகோவா சந்தோஷப்படுகிறார். தாவீது ராஜா சொன்னார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.” (சங். 37:25) உண்மையுள்ள ஊழியர்கள் நிறைய பேர் இதைத் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறார்கள். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்.

7 சில வருடங்களுக்கு முன்பு, நான்ஸி என்ற முழுநேர ஊழியருக்கு தர்மசங்கடமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. “வாடகை பணம் 66 டாலரை (சுமார் 3,600 ரூபாய்) மறுநாளே கட்ட வேண்டியிருந்தது. அவ்ளோ பணத்துக்கு எங்க போறதுன்னு தெரியல. அத பற்றி ஜெபம் செஞ்சிட்டு வேலைக்கு போயிட்டேன். ஒரு ரெஸ்டாரென்ட்ல பணிப்பெண்ணா வேலை பார்த்தேன். பொதுவா அந்த நாள்ல அவ்வளவா யாரும் ரெஸ்டாரென்ட்டுக்கு வரமாட்டாங்க. அன்னைக்குன்னு பார்த்து அவ்ளோ பேரு வந்திருந்தாங்க. எனக்கு நிறைய டிப்ஸ் கிடைச்சது. வேலை முடிச்சு பணத்தை எண்ணி பார்த்தா, சரியா 66 டாலர் இருந்துச்சு!” நமக்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுக்க யெகோவாவால் முடியும் என்பதை நான்ஸி நன்கு புரிந்துகொண்டார்.—மத். 6:33.

8. யெகோவா தந்த மிகச் சிறந்த பரிசு என்ன?

8 யெகோவா எல்லோருக்கும் மிகச் சிறந்த ஒரு பரிசைக் கொடுத்திருக்கிறார். அது என்ன? அவருடைய மகனின் மீட்கும் பலி. இயேசு சொன்னார்: “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்.” (யோவா. 3:16) இந்த வசனத்தில் ‘உலகம்’ என்பது மனிதகுலத்தைக் குறிக்கிறது. ஆம், இந்த மாபெரும் பரிசை ஏற்றுக்கொள்கிற அனைவருக்கும் யெகோவா அதைத் தாராளமாகத் தருகிறார். இயேசுமீது விசுவாசம் வைக்கிற அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பரிசாகப் பெறுவார்கள். (யோவா. 10:10) யெகோவா தாராள குணமுடையவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

யெகோவாவின் தாராள குணத்தைப் பின்பற்றுங்கள்

யெகோவாவின் தாராள குணத்தைப் பின்பற்றும்படி இஸ்ரவேலர்களுக்குச் சொல்லப்பட்டது ( பாரா 9)

9. யெகோவாவின் தாராள குணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

 9 யெகோவாவின் தாராள குணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? யெகோவா, “நம்முடைய மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் அள்ளி வழங்குகிற கடவுள்.” எனவே, நாமும் மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்காக ‘பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாக இருக்க’ வேண்டும். (1 தீ. 6:17-19) நம் அன்பானவர்களுக்கும் உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் நம் வளங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாகப் பரிசுகளை அளிக்கிறோம். (உபாகமம் 15:7, 8-ஐ வாசியுங்கள்.) தாராள குணத்தை மறக்காமல் காட்ட எது நமக்கு உதவும்? சில கிறிஸ்தவர்கள் எப்போதெல்லாம் பரிசைப் பெறுகிறார்களோ அப்போதெல்லாம் யாருக்காவது பரிசு கொடுக்க முயற்சி எடுக்கிறார்கள். இப்படித் தாராள குணத்தைத் தாராளமாகக் காட்டும் சகோதர சகோதரிகள் நிறைய பேர் சபையில் இருக்கிறார்கள்.

10. தாராள குணத்தைக் காட்ட மிகச் சிறந்த வழி எது?

10 தாராள குணத்தைக் காட்ட மிகச் சிறந்த வழி, நம் சொல்லாலும் செயலாலும் மற்றவர்களுக்கு உதவுவது. இதை எப்படிச் செய்யலாம்? மற்றவர்களை உற்சாகப்படுத்த நம் நேரத்தையும் சக்தியையும் அள்ளி வழங்க வேண்டும். (கலா. 6:10) இந்த விஷயத்தில் அவ்வப்போது நம்மையே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘மற்றவர்கள் சொல்வதைக் கேட்க என் காதை எப்போதும் திறந்து வைத்திருக்கிறேன் என்பது அவர்களுக்குப் பளிச்சென்று தெரிகிறதா? ஒருவர், தான் செய்கிற வேலையில் உதவும்படி கேட்டாலோ வேறு ஏதாவது செய்யச் சொன்னாலோ என் சூழ்நிலை அனுமதிக்கும்போதெல்லாம் உதவுகிறேனா? குடும்பத்தாரையோ சபையில் உள்ளவர்களையோ கடைசியாக எப்போது மனதாரப் பாராட்டினேன்?’ ‘கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டால்,’ யெகோவாவிடமும் நண்பர்களிடமும் நிச்சயம் நெருங்கிச் செல்வோம்.—லூக். 6:38; நீதி. 19:17.

11. யெகோவாவுக்குக் கொடுப்பதில் தாராள குணத்தை எந்தெந்த வழிகளில் காட்டலாம்?

 11 யெகோவாவுக்குக் கொடுப்பதிலும் தாராள குணத்தைக் காட்டலாம். ‘உன் [மதிப்புமிக்க, NW] பொருள்களால் . . . கர்த்தரைக் கனம்பண்ணு’ என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 3:9) ‘மதிப்புமிக்க பொருள்’ என்ற வார்த்தை யெகோவாவின் சேவைக்காக நாம் தாராளமாகச் செலவிடுகிற நேரம், சக்தி, வளங்கள் ஆகிய எல்லாவற்றையும் குறிக்கிறது. சிறு பிள்ளைகள்கூட யெகோவாவுக்குத் தாராளமாகக் கொடுக்கப் பழகிக்கொள்ளலாம். “நாங்க நன்கொடை பணத்த பிள்ளைங்க கையில கொடுத்து ராஜ்ய மன்றத்துல இருக்குற நன்கொடை பெட்டில போடச் சொல்வோம். அவங்களும் ‘யெகோவாவுக்கு கொடுக்கிறோம்’ங்கிற சந்தோஷத்தோட அத செய்வாங்க” என்று இரு பிள்ளைகளுக்குத் தகப்பனான ஜேசன் சொல்கிறார். யெகோவாவுக்குக் கொடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தைச் சிறு வயதிலேயே ருசிப்பவர்கள் பெரியவர்களான பிறகும் அதை விடாதிருப்பார்கள்.—நீதி. 22:6.

யெகோவா நியாயமானவர்

12. நியாயமாக நடந்துகொள்வது என்றால் என்ன?

12 யெகோவாவிடம் நம்மை ஈர்க்கும் இன்னொரு அருமையான குணம் அவருடைய நியாயத்தன்மை. நியாயமாக நடந்துகொள்வது என்றால் என்ன? ‘நியாயமாக நடந்துகொள்வது’ என புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூலமொழி வார்த்தையின் நேர்பொருள் ‘வளைந்துகொடுப்பது.’ (தீத். 3:1, 2, அடிக்குறிப்பு) நியாயமாக நடந்துகொள்பவர் எப்போதும் சட்டம் பேசிக்கொண்டிருக்க மாட்டார். கறாராக, கெடுபிடியாக, கடுமையாக நடந்துகொள்ள மாட்டார். மாறாக, மற்றவர்களுடைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மென்மையாக நடந்துகொள்வார். மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பார். தேவைப்படும்போது, அவர்களுடைய விருப்பங்களுக்கு வளைந்துகொடுப்பார்.

13, 14. (அ) யெகோவா எப்படி நியாயமாக நடந்துகொள்கிறார்? (ஆ) லோத்துவிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து நியாயத்தன்மையைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

13 யெகோவா எப்படி நியாயமாக நடந்துகொள்கிறார்? அவருடைய ஊழியர்களின் உணர்ச்சிகளை மனதில் வைத்து, அவர்கள் விரும்பும் விதமாகவே காரியங்களைச் செய்ய நிறைய சமயங்களில் யெகோவா அனுமதித்திருக்கிறார். நீதிமானாகிய லோத்துவிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்பதைக் கவனியுங்கள். சோதோம், கொமோரா பட்டணங்களை அழிக்க யெகோவா தீர்மானித்தபோது மலைகளுக்கு ஓடிப்போகும்படி லோத்துவிடம் திட்டவட்டமாகச் சொன்னார். ஆனால், ஏதோவொரு காரணத்திற்காக வேறொரு இடத்திற்கு ஓடிப்போக அனுமதிக்கும்படி லோத்து கெஞ்சினார். அதாவது, யெகோவா கொடுத்த அறிவுரையையே மாற்றச் சொன்னார்!ஆதியாகமம் 19:17-20-ஐ வாசியுங்கள்.

14 இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போது லோத்துவிற்குக் கடவுள்மீது அந்தளவிற்கு விசுவாசம் இல்லை, கீழ்ப்படிதலும் இல்லை என்று சிலர் நினைக்கலாம். லோத்துவை யெகோவா காப்பாற்றப் போவது உறுதி; அதனால், லோத்து அப்படிப் பயந்ததில் அர்த்தமே இல்லை என்று நினைக்கலாம். இருந்தாலும், லோத்து பயந்தார். அதை யெகோவா புரிந்துகொண்டு, வளைந்துகொடுத்தார். ஆம், யெகோவா அழிக்கத் தீர்மானித்திருந்த பட்டணத்துக்கு ஓடிப்போக லோத்துவை அனுமதித்தார். (ஆதியாகமம் 19:21, 22-ஐ வாசியுங்கள்.) யெகோவா கறாரானவரும் அல்ல, கெடுபிடியானவரும் அல்ல. வளைந்துகொடுப்பவர், நியாயமானவர்.

15, 16. யெகோவா நியாயமானவர் என்பதைத் திருச்சட்டம் எப்படிக் காட்டுகிறது? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்)

15 யெகோவா நியாயமானவர் என்பதற்குத் திருச்சட்டமும் ஓர் அத்தாட்சி. ஓர் இஸ்ரவேலருக்கு, செம்மறியாட்டையோ வெள்ளாட்டையோ பலி செலுத்துமளவுக்கு வசதி இல்லையென்றால் இரண்டு காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது பலி செலுத்தலாம். புறாக்களைக்கூட பலி செலுத்த முடியாதளவுக்கு பரம ஏழையாக இருந்தால் என்ன செய்வது? அவர்கள் கொஞ்சம் மாவை காணிக்கையாகச் செலுத்தலாம். ஆனால், ஏதோ கையில் கிடைத்த மாவை அல்ல, விருந்தினரை கௌரவிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ‘மெல்லிய மாவைத்தான்’ பலியாகச் செலுத்த வேண்டும். (ஆதி. 18:6) ஏன் அப்படி?லேவியராகமம் 5:7, 11-ஐ வாசியுங்கள்.

16 நீங்கள் ஓர் ஏழை இஸ்ரவேலன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பலி செலுத்துவதற்காகக் கொஞ்சம் மாவை எடுத்துக்கொண்டு ஆசரிப்புக் கூடாரத்திற்குப் போகிறீர்கள். பணக்கார இஸ்ரவேலர்கள் ஆடுமாடுகளை கொண்டுவருவதைப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு எப்படி இருக்கும்? வெறும் மாவை கொண்டுவந்திருப்பதை நினைத்து கூனிக்குறுகி நிற்பீர்கள். ஆனால், யெகோவா உங்களுடைய பலியை உயர்வாய் மதிக்கிறார் என்பது பொறி தட்டுகிறது. ஏன்? ஏனென்றால், உயர்தரமான மாவைத்தான் கொடுக்கும்படி யெகோவா கேட்டிருக்கிறார். ‘மத்தவங்க கொடுக்குற அளவுக்கு உன்னால கொடுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, உன்கிட்ட இருக்கிறதுலேயே நல்லதைத்தான் நீ கொடுக்குற!’ என்று யெகோவாவே சொல்வதுபோல் இருக்கிறது. ஆம், யெகோவா தம்முடைய ஊழியர்களின் வரம்புகளையும் சூழ்நிலையையும் புரிந்துகொண்டு அவர்களிடம் நியாயமாக நடந்துகொள்கிறார்.—சங். 103:14.

17. யெகோவா எப்படிப்பட்ட சேவையை ஏற்றுக்கொள்கிறார்?

 17 ஆம், யெகோவா நியாயமானவர். நம்மாலான சிறந்ததைத் தரும்போது நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார். இது எவ்வளவு ஆறுதலளிக்கிறது! (கொலோ. 3:23) இத்தாலியில் வசிக்கும் கான்ஸ்டன்ஸ் என்ற வயதான சகோதரி சொன்னார்: “என்னை படைச்ச கடவுள பற்றி மத்தவங்ககிட்ட பேசறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அதனாலதான், ஊழியத்துக்கு போறதையும் பைபிள் படிப்பு நடத்துறதையும் விடுறதே இல்லை. என்னோட உடல்நிலை காரணமா நிறைய செய்ய முடியலையேன்னு சில நேரம் வருத்தப்படுவேன். ஆனா, என்னால இவ்வளவுதான் செய்ய முடியும்னு யெகோவாவுக்கு தெரியும். நான் செய்ற சேவையை அவர் பெருசா நினைக்கிறாரு.”

யெகோவாவைப் போல நியாயமாக நடந்துகொள்ளுங்கள்

18. யெகோவாவின் முன்மாதிரியைப் பெற்றோர் எப்படிப் பின்பற்றலாம்?

18 யெகோவாவைப் போல நாமும் எப்படி நியாயமாக நடந்துகொள்ளலாம்? லோத்துவிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்தை யோசித்துப் பாருங்கள். யெகோவாவுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. ஆனாலும், லோத்து தன் கவலையைத் தெரிவித்தபோது, யெகோவா கனிவோடு அதைக் கேட்டார். விரும்பிய இடத்துக்குப் போக லோத்துவை அனுமதித்தார். நீங்கள் ஒரு பெற்றோரென்றால், யெகோவாவின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்? உங்கள் பிள்ளைகள் ஏதாவது கேட்கும்போது செவிகொடுக்கிறீர்களா, அவர்களுடைய நியாயமான விருப்பங்களுக்கு வளைந்துகொடுக்கிறீர்களா? பெற்றோர் சிலர், வீட்டில் சில கட்டுப்பாடுகளை வைப்பதற்கு முன்பு அதைக் குறித்து பிள்ளைகளுடன் கலந்துபேசுகிறார்கள் என்று செப்டம்பர் 1, 2007 காவற்கோபுரம் குறிப்பிட்டது. உதாரணமாக, பிள்ளைகள் எத்தனை மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை பெற்றோருக்கு இருக்கிறது; இருந்தாலும், அந்த நேரத்தைப் பற்றிய பிள்ளைகளுடைய அபிப்பிராயத்தையும் கேட்கலாம். சில சமயங்களில், பைபிள் நியமங்கள் மீறப்படாதவரை பிள்ளைகளுடைய விருப்பத்திற்குக் கொஞ்சம் வளைந்துகொடுக்கலாம். பெற்றோர் தங்களுடைய விருப்பங்களுக்கு மதிப்பு கொடுப்பதைப் பிள்ளைகள் பார்க்கும்போது, அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பிள்ளைகள் நன்றாகப் புரிந்துகொண்டு சந்தோஷமாகக் கீழ்ப்படிவார்கள்.

19. மூப்பர்கள் எப்படி யெகோவாவைப் போல் நியாயமாக நடந்துகொள்ளலாம்?

19 மூப்பர்கள் எப்படி யெகோவாவைப் போல் நியாயமாக நடந்துகொள்கிறார்கள்? சபையில் உள்ளவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதன் மூலம். ஏழை இஸ்ரவேலர்கள் கொடுத்த காணிக்கையைக்கூட யெகோவா உயர்வாக மதித்தார் என்பதை மனதில் வையுங்கள். சபையிலும், ஊழியத்தில் குறைவாக ஈடுபடும் சில சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். உடல்நலப் பிரச்சினை அல்லது வயோதிபம் அதற்குக் காரணமாக இருக்கலாம். தங்களால் அதிகம் செய்ய முடியவில்லையே என்று இந்த அன்பான சகோதர சகோதரிகள் வருத்தப்பட்டால் என்ன செய்வது? தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுப்பதால் யெகோவா அவர்களை நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள மூப்பர்கள் அவர்களுக்கு உதவலாம்.—மாற். 12:41-44.

20. ஊழியத்தில் குறைவாக ஈடுபடுவது நியாயமாக நடந்துகொள்வதை அர்த்தப்படுத்துமா? விளக்கவும்.

20 ‘இந்தக் கஷ்டங்கள் நமக்கு வேண்டாம்’ என்று ஊழியத்தில் குறைவாக ஈடுபடுவது நியாயமாக நடந்துகொள்வதை அர்த்தப்படுத்தாது. (மத். 16:22) ஆம், நம்மால் நிறைய செய்ய முடிந்திருந்தும் குறைவாக செய்யக் கூடாது. மாறாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேச நாம் எல்லோருமே “தீவிரமாக முயற்சி” எடுக்க வேண்டும். (லூக். 13:24) இரண்டு நியமங்களை மனதில் வைத்து சமநிலையோடு செயல்பட வேண்டும். ஒன்று, யெகோவாவுக்குச் சேவை செய்யத் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும். இரண்டு, நம்மால் முடியாததை யெகோவா நம்மிடம் எதிர்பார்க்க மாட்டார். நம்மால் முடிந்த சிறந்ததைக் கொடுக்கும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். இப்படி நியாயமாக நடந்துகொள்ளும் ஒருவருக்குச் சேவை செய்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! யெகோவாவிடம் நம்மை ஈர்க்கும் இன்னும் இரண்டு குணங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.—சங். 73:28.

‘உன் [மதிப்புமிக்க, NW] பொருள்களால் . . . கர்த்தரைக் கனம்பண்ணு.’—நீதி. 3:9 ( பாரா 11)

“நீங்கள் எதைச் செய்தாலும் . . . முழுமூச்சோடு செய்யுங்கள்.”—கொலோ. 3:23 ( பாரா 17)