Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தரும் சிட்சை உங்களை வடிவமைக்கட்டும்

யெகோவா தரும் சிட்சை உங்களை வடிவமைக்கட்டும்

“உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.”—சங். 73:24.

1, 2. (அ) யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தைக் காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? (ஆ) கடவுள் அளித்த சிட்சைக்கு மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள் என்பதைப் படிப்பதால் எப்படிப் பயனடைவோம்?

 “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.” (சங். 73:28) சங்கீதக்காரனுக்கு கடவுள்மீது எவ்வளவு நம்பிக்கை! சரி, இந்த முடிவுக்கு வர எது அவருக்கு உதவியது? முதலில், கெட்ட ஜனங்கள் சந்தோஷமாக, நிம்மதியாக இருப்பதைப் பார்த்து அவர் வெறுப்படைந்தார். “நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்” என்று புலம்பினார். (சங். 73:2, 3, 13, 21) ஆனால், “தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள்” வந்தபோது, தன் மனநிலையை மாற்றிக்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு யெகோவாவோடுள்ள தன் உறவைப் பலப்படுத்திக்கொண்டார். (சங். 73:16-18) கடவுள் பயமுள்ள அவர் இதிலிருந்து நல்ல பாடம் கற்றுக்கொண்டார்: யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தைக் காத்துக்கொள்ள அவருடைய ஜனங்களோடு நட்புகொள்ள வேண்டும், ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை வாழ்வில் கடைப்பிடிக்கவும் வேண்டும்.—சங். 73:24.

2 உயிருள்ள, உண்மையுள்ள தேவனோடு நெருங்கிய நட்புறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றுதான் நாமும் ஆசைப்படுகிறோம். அப்படியென்றால், அவர் கொடுக்கும் ஆலோசனையையும் சிட்சையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்விதமாக யெகோவா நம்மை வடிவமைக்கிறார், அதாவது, அவருக்குப் பிரியமான நபர்களாக ஆவதற்கு உதவுகிறார். கடந்த காலங்களில், தனிநபர்களுக்கும் தேசங்களுக்கும் யெகோவா சிட்சை அளித்திருக்கிறார். அதற்கு அவர்கள் பிரதிபலித்த விதத்தையும் பைபிளில் பதிவு செய்திருக்கிறார். அவை “நம்முடைய அறிவுரைக்காகவே” எழுதப்பட்டிருக்கின்றன; ஆம், “இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நமக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி எழுதப்பட்டிருக்கின்றன.” (ரோ. 15:4; 1 கொ. 10:11) அந்தப் பதிவுகளை ஆழ்ந்து படித்தால், யெகோவாவின் மனப்பான்மையைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்வோம்; அவர் நம்மை வடிவமைக்கும்போது எப்படிப் பிரதிபலித்தால் நன்மையடையலாம் என்பதையும் கற்றுக்கொள்வோம்.

குயவர் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்

3. ஏசாயா 64:8-லும் எரேமியா 18:1-6-லும் மக்கள்மீது யெகோவாவுக்கு இருக்கும் அதிகாரம் எப்படி விளக்கப்பட்டிருக்கிறது? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்)

3 தனிநபர்கள்மீதும் தேசங்கள்மீதும் யெகோவாவுக்கு இருக்கும் அதிகாரத்தை ஓர் அருமையான உதாரணத்தோடு ஏசாயா 64:8 வர்ணிக்கிறது: “இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.” ஒரு களிமண் உருண்டையை என்ன பாத்திரமாக வடிவமைக்கலாமென முடிவெடுக்கும் முழு அதிகாரமும் குயவனுக்கே இருக்கிறது. களிமண்ணுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நம்முடைய விஷயத்திலும் இதுவே உண்மை. நாம் எல்லோரும் கடவுளின் கையில் இருக்கும் களிமண். தமக்குப் பிடித்த விதத்தில் நம்மை வடிவமைக்க யெகோவாவுக்கு முழு உரிமை இருக்கிறது. எந்த மனிதனும் கேள்வி கேட்க முடியாது.எரேமியா 18:1-6-ஐ வாசியுங்கள்.

4. மக்களைக் கடவுள் தம் இஷ்டத்திற்கு வடிவமைக்கிறாரா? விளக்கவும்.

4 குயவர் களிமண்ணை வடிவமைப்பது போல யெகோவா இஸ்ரவேல் ஜனங்களை வடிவமைத்தார். ஆனால், மனித குயவருக்கும் யெகோவாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. குயவன் களிமண்ணை வைத்து எப்படிப்பட்ட பாத்திரத்தை வேண்டுமானாலும் செய்யலாம். அப்படியென்றால், தம் இஷ்டத்திற்கு சிலரை நல்லவர்களாகவும் சிலரைக் கெட்டவர்களாகவும் யெகோவா வடிவமைக்கிறாரா? இல்லவே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் அருமையான பரிசை யெகோவா தந்திருக்கிறார். அதுதான், தீர்மானம் எடுக்கும் உரிமை. அந்தப் பரிசை நாம் பயன்படுத்தாதபடி யெகோவா நம்மீது தம்முடைய சர்வ அதிகாரத்தையும் செலுத்துவதில்லை. யெகோவா தங்களை வடிவமைக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மனிதர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.எரேமியா 18:7-10-ஐ வாசியுங்கள்.

5. யெகோவா வடிவமைக்கும்போது விடாப்பிடியாக எதிர்ப்பவர்களை அவர் என்ன செய்கிறார்?

5 மாபெரும் குயவர் தங்களை வடிவமைக்க வேண்டாம் என்று மக்கள் பிடிவாதமாக மறுக்கும்போது, யெகோவா தம் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துவார்? ஒரு பாத்திரத்தைச் செய்ய முயற்சிக்கும்போது களிமண் வளைந்துகொடுக்கவில்லை என்றால் குயவர் என்ன செய்வார் என்று யோசித்துப் பாருங்கள். அதில் வேறொரு பாத்திரத்தைச் செய்வார் அல்லது அந்தக் களிமண்ணை தூக்கி எறிந்துவிடுவார்! பெரும்பாலும் இதற்குக் காரணம் குயவன் அந்தக் களிமண்ணை சரியான விதத்தில் வடிவமைக்காததுதான். ஆனால், மாபெரும் குயவர் விஷயத்தில் இது உண்மை அல்ல. (உபா. 32:4) யெகோவா வடிவமைக்கும்போது ஒருவர் வளைந்துகொடுக்கவில்லை என்றால் அதற்கு அந்த நபர்தான் முழு காரணம். மனிதர்கள் வளைந்துகொடுக்கும் விதத்தை வைத்து யெகோவா வடிவமைக்கும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்கிறார். அதற்கு ஒத்துப்போகிறவர்களை அழகாக வடிவமைக்கிறார். உதாரணத்திற்கு, ‘இரக்கத்திற்குரிய பாத்திரங்களாக’ இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை ‘கண்ணியமான காரியத்திற்கான பாத்திரங்களாக’ வடிவமைத்திருக்கிறார். ஆனால், கடவுளை விடாப்பிடியாக எதிர்க்கும் ஆட்கள் ‘கடுங்கோபத்திற்கும் அழிவுக்குமுரிய பாத்திரங்களாக’ ஆகிவிடுகிறார்கள்.—ரோ. 9:19-23.

6, 7. தாவீது ராஜாவும் சவுல் ராஜாவும் யெகோவாவின் ஆலோசனைக்கு எப்படிப் பிரதிபலித்தார்கள்?

 6 யெகோவா மக்களை வடிவமைக்கிற ஒரு வழி ஆலோசனையோ சிட்சையோ கொடுப்பதாகும். இஸ்ரவேலின் முதல் இரண்டு ராஜாக்களான சவுலையும் தாவீதையும் யெகோவா எப்படி வடிவமைத்தார் என்று பார்க்கலாம். தாவீது ராஜா பத்சேபாளோடு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டது அவரையும் மற்றவர்களையும் ரொம்பவே பாதித்தது. ராஜாவாயிற்றே என்று யெகோவா அவருக்குச் சிட்சை கொடுக்காமல் இருந்துவிடவில்லை. தாவீது செய்த தவறை உணர்த்துவதற்காக நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார். (2 சா. 12:1-12) தாவீது எப்படிப் பிரதிபலித்தார்? இருதயத்திலே குத்தப்பட்டு மனந்திரும்பினார். அதனால் கடவுளுடைய இரக்கத்தைப் பெற்றார்.2 சாமுவேல் 12:13-ஐ வாசியுங்கள்.

 7 ஆனால், தாவீதுக்குமுன் ராஜாவாக இருந்த சவுல் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் யெகோவா சவுலுக்கு திட்டவட்டமான கட்டளை கொடுத்திருந்தார். எல்லா அமலேக்கியர்களையும் அவர்களுடைய ஆடுமாடுகளையும் அழித்துப்போடச் சொன்னார். ஆனால், ஆகாஸ் ராஜாவையும் முதல் தரமான ஆடுமாடுகளையும் அழிக்காமல் பிடித்துக்கொண்டு வந்தார். ஏன்? ஒருவிதத்தில் தனக்குப் பெருமை தேடிக்கொள்வதற்காக அப்படிச் செய்தார். (1 சா. 15:1-3, 7-9, 12) ஆலோசனை கொடுத்தபோது சவுல் தன் மனதை மாற்றியிருக்க வேண்டும். மாபெரும் குயவர் தன்னை வடிவமைக்க வளைந்துகொடுத்திருக்க வேண்டும். ஆனால், சவுல் அப்படிச் செய்யவில்லை. தன் செயலை நியாயப்படுத்தினார். ஆடுமாடுகளை பலி கொடுக்க வைத்துக்கொள்ளலாமே என்று சொல்லி தான் செய்ததில் தவறு ஏதுமில்லை என நிரூபிக்கப் பார்த்தார். அதனால், சவுல் ராஜாவை யெகோவா நிராகரித்தார். யெகோவாவோடு திரும்பவும் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள சவுல் முயற்சி செய்யவே இல்லை.1 சாமுவேல் 15:13-15, 20-23-ஐ வாசியுங்கள்.

ஆலோசனையை சவுல் அற்பமாக நினைத்து நிராகரித்தார், வளைந்துகொடுக்கவில்லை ( பாரா 7)

தாவீது, இருதயத்தில் குத்தப்பட்டு, அறிவுரையை ஏற்றுக்கொண்டார், வளைந்துகொடுத்தார். நீங்கள் எப்படி? (  பாரா 6)

யெகோவா பாரபட்சமற்றவர்

8. யெகோவா வடிவமைத்தபோது ஒரு தேசமாக இஸ்ரவேலர் பிரதிபலித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

8 யெகோவா வடிவமைத்தபோது தேசங்கள் எப்படிப் பிரதிபலித்தன என்று இப்போது பார்க்கலாம். எகிப்திலிருந்து விடுதலையாகி வந்த இஸ்ரவேலர்கள், கி.மு. 1513-ல் யெகோவாவோடு ஓர் ஒப்பந்த உறவுக்குள் வந்தார்கள். இஸ்ரவேலர் யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமாக, ஒரு தேசமாக அவரால் வடிவமைக்கப்படும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள். இருந்தாலும், அந்த ஜனங்கள் தொடர்ந்து யெகோவாவுக்குப் பிடிக்காததையே செய்து வந்தார்கள். சுற்றியிருந்த தேசங்களின் கடவுட்களைக்கூட வணங்கினார்கள். யெகோவா, தீர்க்கதரிசிகளை அனுப்பி திரும்பத் திரும்ப எச்சரித்தார். ஆனாலும், அவர்கள் மனம் மாறவே இல்லை. (எரே. 35:12-15) இப்படித் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டதால் கடுமையான சிட்சையைப் பெற்றார்கள். அவர்கள் அழிவுக்குரிய பாத்திரமாக இருந்தார்கள். பத்து கோத்திர வடக்கு ராஜ்யத்தை அசீரியர்கள் கைப்பற்றினார்கள். இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தை பாபிலோனியர்கள் கைப்பற்றினார்கள். இது நமக்கு எச்சரிப்பூட்டும் உதாரணம், அல்லவா? யெகோவா வடிவமைக்கும்போது அதற்கேற்ப வளைந்துகொடுத்தால்தான் பயனடைவோம்.

9, 10. கடவுள் கொடுத்த எச்சரிப்புக்கு நினிவே மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?

9 அசீரியாவின் தலைநகரமான நினிவேக்கும்கூட யெகோவா ஒரு எச்சரிப்பு கொடுத்தார். “நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது” என்று யோனாவிடம் சொன்னார். நினிவே மக்கள் அழிவுக்குரிய பாத்திரமாக இருந்தார்கள்.—யோனா 1:1, 2; 3:1-4.

10 ஆனால், அழிவின் செய்தியை யோனா அறிவித்தபோது, “நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.” நினிவே மக்கள் யெகோவாவுக்கு வளைந்து கொடுத்தார்கள், மனந்திரும்பினார்கள். அதனால், யெகோவா அவர்களை அழிக்கவில்லை.—யோனா 3:5-10.

11. இஸ்ரவேலர்களையும் நினிவே மக்களையும் யெகோவா நடத்திய விதத்தில் அவருடைய எந்த குணம் பளிச்சிடுகிறது?

11 இஸ்ரவேலர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசமாக இருந்தார்கள் என்பதற்காக யெகோவா அவர்களை சிட்சிக்காமல் விடவில்லை. அதேசமயம், நினிவே மக்கள் யெகோவாவோடு ஒப்பந்த உறவுக்குள் இல்லாதிருந்தாலும், அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவித்தார்; அவர்கள் களிமண்ணைப்போல வளைந்துகொடுத்தபோது அவர்களுக்கு இரக்கம் காண்பித்தார். யெகோவா தேவன் யாரிடமும் ‘பட்சபாதம் பண்ணுகிறவர் அல்ல’ என்பதை இந்த இரண்டு உதாரணங்களும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன.—உபா. 10:17.

யெகோவா நியாயமானவர், வளைந்துகொடுப்பவர்

12, 13. (அ) மக்களின் பிரதிபலிப்பைப் பொறுத்து யெகோவா ஏன் தம் மனப்பான்மையை மாற்றிக்கொள்கிறார்? (ஆ) சவுல் மற்றும் நினிவே மக்கள் விஷயத்தில் யெகோவா ‘மனஸ்தாபப்பட்டார்’ என்பதன் அர்த்தம் என்ன?

12 நம்மை வடிவமைப்பதற்கு கடவுள் தயாராய் இருப்பது, அவர் நியாயமானவர், வளைந்துகொடுப்பவர் என்பதைக் காட்டுகிறது. சில சூழ்நிலைகளில் கடவுள் நீதியாக நியாயம் தீர்த்து ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தாலும் மக்கள் மனம் மாறும்போது தம் மனதை மாற்றிக்கொள்கிறார். இஸ்ரவேலின் முதல் ராஜா ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாமல் போனபோது: “சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது” என்று யெகோவா சொன்னார். (1 சா. 15:11) நினிவே மக்கள் மனந்திரும்பி தங்களை மாற்றிக்கொண்டபோது, “தேவன் . . . அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.”—யோனா 3:10.

13 “மனஸ்தாபப்பட்டு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையின் அர்த்தம், மனப்பான்மையை அல்லது நோக்கத்தை மாற்றிக்கொள்வது. முன்பு சவுலை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தவர், இப்போது தன் மனநிலையை மாற்றிக்கொண்டு அவரை நிராகரித்தார். அதற்காக, சவுல் ராஜாவை யோசிக்காமல் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று அர்த்தமில்லை. சவுல், விசுவாசத்தை இழந்து கீழ்ப்படியாமல் போனதால்தான் யெகோவா தம் மனதை மாற்றிக்கொண்டார். அதேபோல், நினிவேயைக் குறித்தும் யெகோவா மனஸ்தாபப்பட்டார் என்று சொல்லும்போது, அவர்களைக் குறித்த தம் மனப்பான்மையை மாற்றிக்கொண்டார் என்றே அர்த்தம். ஆம், நம்முடைய குயவரான யெகோவா நியாயமானவர், வளைந்துகொடுப்பவர், இனியவர், இரக்கமுள்ளவர், தவறு செய்தவர் மனந்திரும்பும்போது தாம் செய்ய நினைத்த தீங்கை மாற்றிக்கொள்ள மனமுள்ளவர். இதைப் படிக்கும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

யெகோவாவின் சிட்சையைத் தள்ளிவிடாதீர்கள்

14. (அ) இன்று நம்மை யெகோவா எப்படி வடிவமைக்கிறார்? (ஆ) கடவுள் வடிவமைக்கும்போது நாம் எப்படிப் பிரதிபலிக்க வேண்டும்?

14 இன்று தம்முடைய வார்த்தையாகிய பைபிள் மூலமாகவும், தம் அமைப்பின் மூலமாகவும் யெகோவா நம்மை வடிவமைக்கிறார். (2 தீ. 3:16, 17) இவ்வழிகளில் கடவுள் தரும் ஆலோசனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லவா? ஞானஸ்நானம் எடுத்து எவ்வளவு காலம் ஆகியிருந்தாலும் சரி எவ்வளவு பொறுப்புகள் கிடைத்திருந்தாலும் சரி, தொடர்ந்து யெகோவா கொடுக்கும் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது யெகோவா நம்மை மகிமையான பாத்திரமாக வடிவமைக்க நாம் அனுமதிப்போம்.

15, 16. (அ) சிட்சையினால் சில பொறுப்புகளை இழக்கும்போது எப்படிப்பட்ட உணர்ச்சிகள் வரலாம்? உதாரணம் கொடுங்கள். (ஆ) சிட்சையின்போது நம் மனப்போராட்டத்தைச் சமாளிக்க எது உதவும்?

15 சில நேரங்களில் அறிவுரையும் ஆலோசனையும் தந்து யெகோவா நம்மைச் சிட்சிக்கிறார். சரியானதைச் செய்யாதபோது நமக்குக் கடும் சிட்சையும் தேவைப்படலாம். அப்போது, ஒருவேளை சபையில் பொறுப்புகளை இழக்கலாம். மூப்பராகச் சேவை செய்த டென்னிஸ் * என்பவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். இவர் வியாபார விஷயத்தில் சில ஞானமற்ற தீர்மானங்கள் எடுத்து தவறு செய்ததால் தனிமையில் கண்டிக்கப்பட்டார். அவர் இனி மூப்பராகச் சேவை செய்யமாட்டார் என்று சபையில் அறிவித்த நாளில் அவருக்கு எப்படி இருந்தது? அவர் சொல்கிறார்: “வாழ்க்கையில தோற்று போயிட்ட மாதிரி இருந்தது. 30 வருஷமா எத்தனையோ சேவைகள செஞ்சிருக்கேன். ஒழுங்கான பயனியரா சேவை செஞ்சேன், பெத்தேல்ல சேவை செஞ்சேன், உதவி ஊழியனானேன், அப்புறம் மூப்பரானேன். இப்பதான் முதல் தடவையா மாவட்ட மாநாட்டுல பேச்சும் கொடுத்தேன். எல்லாம் போச்சு. அவமானமா இருந்துச்சு, கூனிக் குறுகிப் போனேன். இதுக்குமேல இந்த அமைப்புல இருக்கறதுக்கு எனக்கு தகுதியே இல்லன்னு நினைச்சேன்.”

16 டென்னிஸ் மனந்திரும்பி, தன் தவறை மாற்றிக்கொண்டார். ஆனால், மனப்போராட்டத்தைச் சமாளிக்க அவருக்கு எது உதவியது? “ஆன்மீக காரியங்கள விட்டுட கூடாதுன்னு நான் உறுதியா இருந்தேன். கிறிஸ்தவ சகோதரர்கள் கொடுத்த ஆதரவும், பிரசுரங்கள்ல வந்த விஷயங்களும் எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. ஆகஸ்ட் 15, 2009 காவற்கோபுரத்துல வந்த, ‘நீங்கள் முன்பு சேவை செய்தவரா? மீண்டும் சேவை செய்ய முடியுமா?’ என்ற கட்டுரை என்னோட ஜெபத்துக்கு யெகோவா போட்ட பதில் கடிதம் மாதிரியே இருந்துச்சு. ‘சபைப் பொறுப்புகள் அதிகம் இல்லாத இச்சமயத்திலே யெகோவாவோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்துவதற்குத் தீவிர கவனம் செலுத்துங்கள்’ என்ற வரிகள் என் மனச தொட்டுச்சு.” இந்தச் சிட்சையிலிருந்து டென்னிஸ் எப்படிப் பயனடைந்தார்? சில வருடங்களுக்குப் பிறகு அவர் சொல்கிறார்: “திரும்பவும் ஒரு உதவி ஊழியராக சேவை செய்யும் பாக்கியத்தை யெகோவா எனக்குக் கொடுத்திருக்கிறார்.”

17. தவறு செய்தவர் மனந்திரும்பி வருவதற்கு சபை நீக்கம் செய்வது எப்படித் துணைபுரியும்? உதாரணம் கொடுங்கள்.

17 சபைநீக்கம் செய்யப்படுவதும் ஒருவகை சிட்சைதான். அது சபையின் சுத்தத்தைக் காக்கிறது. அதோடு, தவறு செய்தவர் மனந்திரும்புவதற்கும் வாய்ப்பளிக்கிறது. (1 கொ. 5:6, 7, 11) ராபர்ட் சபை நீக்கம் செய்யப்பட்டு 16 வருடங்கள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களாக அவருடைய பெற்றோரும் கூடப்பிறந்தவர்களும் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவரோடு எந்த ஒட்டுறவும் வைத்துக்கொள்ளவில்லை. அவரை விசாரிக்கவுமில்லை. சில வருடங்களுக்குமுன் அவர் மீண்டும் சபையில் சேர்க்கப்பட்டார். ஆன்மீக விஷயங்களில் நன்கு முன்னேறி வருகிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, யெகோவாவிடமும் அவரை வழிபடுவோரிடமும் திரும்பி வர எது தூண்டியது என அவரிடம் கேட்டபோது, குடும்பத்தார் பேசாமல் உறுதியோடு இருந்ததுதான் அதற்குக் காரணம் என்று சொன்னார். “நான் மனசு மாறிட்டேனான்னு தெரிஞ்சிக்கிறதுக்குகூட அவங்க என்கிட்ட பேசல, அப்படி கொஞ்சம் பேசியிருந்தாலும், அதுவே போதும்னு நினைச்சுகிட்டு இருந்திருப்பேன். கடவுள்கிட்ட திரும்பி வரணுங்கற எண்ணமே வந்திருக்காது.”

18. மாபெரும் குயவர் கைகளில் நாம் எப்படிப்பட்ட களிமண்ணாக இருக்க வேண்டும்?

18 இதேபோன்ற சிட்சை நமக்குத் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், மாபெரும் குயவர் கைகளில் நாம் எப்படிப்பட்ட களிமண்ணாக இருக்கிறோம்? சிட்சை கிடைக்கும்போது எப்படிப் பிரதிபலிப்போம்? தாவீதைப் போல இருப்போமா அல்லது சவுலைப் போல இருப்போமா? நம் பரம தகப்பனே மாபெரும் குயவர். “தகப்பன் தாம் நேசிக்கிற மகனைச் சிட்சிக்கிறதுபோல, யெகோவாவும் யாரிடத்தில் அன்பு வைத்திருக்கிறாரோ அவரைச் சிட்சிக்கிறார்” என்பதை மனதில் வையுங்கள். எனவே, ‘யெகோவாவுடைய சிட்சையைத் தள்ளிவிடாதீர்கள், அவருடைய கடிந்துகொள்ளுதலை வெறுக்காதீர்கள்.’—நீதி. 3:11, 12, NW. 

^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.