Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

ஜலப்பிரளயத்திற்கு முன் வாழ்ந்ததாக ஆதியாகமம் 6:2, 4-ல் சொல்லப்பட்டிருக்கும் “தேவகுமாரர்” யார்?

இவர்கள் தேவதூதர்கள்தான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அவை யாவை?

ஆதியாகமம் 6:2 இவ்வாறு சொல்கிறது: “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.”

எபிரெய வேதாகமத்தில், “தேவகுமாரர்” “தேவபுத்திரர்” “தெய்வ மைந்தர்” போன்ற வார்த்தைகள் ஆதியாகமம் 6:2, 4; யோபு 1:6; 2:1; 38:7; சங்கீதம் 89:6-ல் [பொது மொழிபெயர்ப்பு] காணப்படுகின்றன. இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள “தேவகுமாரர்” யார்?

யோபு 1:6-ல் சொல்லப்பட்டுள்ள “தேவபுத்திரர்,” பரலோகத்தில் கடவுளுக்கு முன் கூடிவந்த தேவதூதர்களைக் குறிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. “பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து” வந்த சாத்தானும் அவர்கள் நடுவே நின்றான். (யோபு 1:7; 2:1, 2) அதேபோல், பூமியின் “கோடிக்கல்லை” கடவுள் வைத்தபோது “தேவபுத்திரர்” ‘கெம்பீரித்தார்கள்’ என்று யோபு 38:4-7-ல் நாம் வாசிக்கிறோம். இவர்கள் பரலோகத்தில் இருக்கும் தேவதூதர்களையே குறிக்க வேண்டும், ஏனென்றால், அந்தச் சமயத்தில் மனிதர்கள் படைக்கப்படவில்லை. சங்கீதம் 89:6 [பொ.மொ.] குறிப்பிடுகிற “தெய்வ மைந்தர்” நிச்சயம் பரலோகத்தில் இருக்கும் தேவதூதர்களையே குறிக்கிறார்கள், மனிதர்களை அல்ல.

அப்படியென்றால், ஆதியாகமம் 6:2, 4-ல் சொல்லப்பட்டுள்ள “தேவகுமாரர்” யார்? இதுவரை சிந்தித்த பைபிள் வசனங்களின் அடிப்படையில் இந்த ‘தேவகுமாரரும்’ பரலோகத்தில் இருக்கும் தேவதூதர்களையே குறிக்கிறார்கள். இவர்கள்தான் பூமிக்கு வந்தார்கள்.

தேவதூதர்கள் பாலுறவு கொள்ள ஆசைப்பட்டார்கள் என சொல்வது நம்புவதுபோல் இல்லை என்று சிலர் சொல்லலாம். மத்தேயு 22:30-ல் இயேசு சொன்னதுபோல் பரலோகத்தில் திருமணமும் இல்லை, தாம்பத்திய உறவும் இல்லை. இருந்தாலும், சில சமயங்களில் தேவதூதர்கள் மனித உருவெடுத்து வந்தபோது சாப்பிட்டதாகவும் குடித்ததாகவும் பைபிளில் வாசிக்கிறோம். (ஆதி. 18:1-8; 19:1-3) எனவே, இப்படி மனித உருவெடுக்க முடிந்த தேவதூதர்களால் பெண்களோடு பாலுறவுகொள்ளவும் முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தேவதூதர்கள் சிலர் அப்படிச் செய்தார்கள் என்பதற்கு பைபிளில் ஆதாரங்கள் இருக்கின்றன. ‘சில தேவதூதர்கள் ஆரம்பத்தில் தங்களுக்கிருந்த ஸ்தானத்தைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்கு ஏற்ற குடியிருப்பை விட்டுவிட்டதை’ போலவே சோதோம் நகரத்தில் வசித்துவந்த மக்களும் இயற்கைக்கு மாறான பாலியல் பழக்கங்களில் ஈடுபட்டதாக யூதா 6, 7 சொல்கிறது. தேவதூதர்களும் சரி சோதோம் மக்களும் சரி, ‘பாலியல் முறைகேட்டில் மூழ்கியிருந்தார்கள், இயற்கைக்கு மாறான பாலியல் பழக்கங்களில் ஈடுபட்டார்கள்’ என்று அந்த வசனம் சொல்கிறது. அதேபோல், கீழ்ப்படியாத தேவதூதர்களை ‘நோவாவின் நாட்களோடு’ சம்பந்தப்படுத்தி 1 பேதுரு 3:19, 20 பேசுகிறது. (2 பே. 2:4, 5) எனவே, நோவா வாழ்ந்த காலத்தில் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போன தேவதூதர்கள் சோதோம் கொமோரா நகரத்தில் வாழ்ந்த மக்கள் செய்த அதே தவறைத்தான் செய்தார்கள்.

எனவே, ஆதியாகமம் 6:2, 4-ல் சொல்லப்பட்டுள்ள “தேவகுமாரர்,” மனித உருவெடுத்து பெண்களோடு பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட தேவதூதர்களையே குறிக்கிறார்கள்.

இயேசு, “காவலிலுள்ள தேவதூதர்களிடம் போய்ப் பிரசங்கித்தார்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 3:19) இதன் அர்த்தம் என்ன?

“முற்காலத்தில் நோவா பேழையைக் கட்டிக்கொண்டிருந்த நாட்களிலே, கடவுள் நீடிய பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தபோது கீழ்ப்படியாமல் போயிருந்தவர்கள்” என்று அந்தத் தேவதூதர்களைப் பற்றிப் பேதுரு சொல்கிறார். (1 பே. 3:20) சாத்தானோடு சேர்ந்து கலகம் செய்த தேவதூதர்களைப் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். “ஆரம்பத்தில் தங்களுக்கிருந்த ஸ்தானத்தைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்கு ஏற்ற குடியிருப்பை விட்டுவிட்டதால்” கடவுள் “அவர்களை மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார்” என்று அந்தத் தேவதூதர்களைப் பற்றி யூதா சொல்கிறார்.—யூ. 6.

நோவாவின் நாட்களில் அவர்கள் எப்படிக் கீழ்ப்படியாமல் போனார்கள்? ஜலப்பிரளயத்துக்கு முன் அந்தப் பொல்லாத தேவதூதர்கள் மனித உருவெடுத்தார்கள்; இது கடவுளுடைய நோக்கத்திற்கு எதிரான செயல். (ஆதி. 6:2, 4) அதோடு, பெண்களுடன் அவர்கள் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டது இயற்கைக்கு மாறான செயல். அந்த நோக்கத்தோடு கடவுள் அவர்களைப் படைக்கவே இல்லை. (ஆதி. 5:2) அந்தப் பொல்லாத, கீழ்ப்படியாத தேவதூதர்கள் கடவுள் குறித்த காலத்தில் நிச்சயம் அழிக்கப்படுவார்கள். ஆனால், இப்போதோ யூதா சொல்வது போல் அவர்கள் ‘காரிருளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்,’ அதாவது, ஆன்மீகச் சிறையில் இருக்கிறார்கள்.

அப்படியென்றால், “காவலிலுள்ள தேவதூதர்களிடம்” இயேசு எப்போது, எப்படி பிரசங்கித்தார்? ‘பரலோகத்திற்குரிய உடலில் உயிர்ப்பிக்கப்பட்ட’ பிறகு இயேசு இதைச் செய்ததாக பேதுரு எழுதுகிறார். (1 பே. 3:18, 19) “பிரசங்கித்தார்” என்று இறந்தகாலத்தில் எழுதியிருக்கிறார். அப்படியானால், இயேசு தாம் உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு, ஆனால் பேதுரு முதல் கடிதத்தை எழுதுவதற்கு முன்பு, பிரசங்கித்திருக்க வேண்டும். அந்தப் பொல்லாத தூதர்களுக்கு எதிராக கடவுள் நிர்ணயித்த முற்றிலும் நியாயமான தண்டனைத் தீர்ப்பை இயேசு அறிவித்தார். அது நம்பிக்கை அளிக்கும் செய்தி அல்ல, தண்டனைத் தீர்ப்பின் செய்தி. (யோனா 1:1, 2) இயேசு இறுதி மூச்சுவிடும்வரை உண்மையோடு விசுவாசத்தைக் கைவிடாமல் இருந்ததால், யெகோவா அவரை உயிர்த்தெழுப்பி, பிசாசுக்கு அவர்மேல் அதிகாரம் இல்லை என்பதை நிரூபித்தார். அதனால்தான் இந்தக் கண்டனத்தீர்ப்பை இயேசுவால் சொல்ல முடிந்தது.—யோவா. 14:30; 16:8-11.

இயேசு, எதிர்காலத்தில் சாத்தானையும் அவனைச் சேர்ந்த தூதர்களையும் கட்டி அதலபாதாளத்தில் தள்ளிவிடுவார். (லூக். 8:30, 31; வெளி. 20:1-3) அதுவரை இந்தக் கீழ்ப்படியாத தூதர்கள் ஆன்மீக ரீதியில் காரிருளில் கிடப்பார்கள். அவர்களுக்கு அழிவு நிச்சயம்!—வெளி. 20:7-10.