Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”

“இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”

“இதோ! இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்.”—மத். 28:20.

1. (அ) கோதுமை-களைகள் பற்றிய உவமையைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். (ஆ) இதன் அர்த்தத்தை இயேசு எப்படி விளக்கினார்?

 கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமாக இயேசு சொன்ன உவமைகளில் ஒன்று விதைக்கிறவனைப் பற்றியது. அவர் நல்ல கோதுமை விதைகளை விதைக்கிறார், ஆனால், எதிரி அதன் மத்தியில் களைகளை விதைக்கிறான். பயிர்களைவிட களைகள் மேலோங்கி நிற்கின்றன. என்றாலும், “அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்” என்று வேலைக்காரர்களிடம் எஜமான் சொல்கிறார். அறுவடைக் காலத்தில் களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் போடப்படுகின்றன, கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படுகின்றன. இந்த உவமையின் அர்த்தத்தை இயேசுவே விளக்கினார். (மத்தேயு 13:24-30, 37-43-ஐ வாசியுங்கள்.) இந்த உவமையிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (“கோதுமையும் களைகளும்” என்ற விளக்கப்படத்தைப் பாருங்கள்.)

2. (அ) வயலில் நடக்கும் சம்பவங்கள் எதைச் சித்தரிக்கின்றன? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோம்?

2 அந்த வயலில் நடக்கும் சம்பவங்கள், கோதுமை வகுப்பார் எல்லோரையும், அதாவது இயேசுவோடு அவரது அரசாங்கத்தில் ஆட்சி செய்யவிருக்கும் எல்லோரையும், மனிதரிலிருந்து எப்போது, எப்படி இயேசு பிரித்தெடுப்பார் என்பதைச் சித்தரிக்கின்றன. விதைப்பது, கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பமானது. இந்த உலகத்தின் முடிவு காலத்தில் உயிரோடிருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், முடிவான முத்திரையைப் பெற்று, அதன் பிறகு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படும்போது இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை முடிவடையும். (மத். 24:31; வெளி. 7:1-4) ஒரு மலைமேல் நின்று பார்க்கும்போது சுற்றியுள்ள இடங்கள் நன்றாகத் தெரிவதுபோல், சுமார் 2,000 வருட காலப்பகுதியில் படிப்படியாக நிகழவிருக்கும் சம்பவங்களை இந்த உவமையின் மூலம் நம்மால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. விதை விதைப்பது, பயிர் வளர்வது, அறுவடை செய்வது ஆகியவை நிகழும் காலத்தை இந்த உவமை விவரிக்கிறது. இந்தக் கட்டுரையில் முக்கியமாக, அறுவடைக் காலத்தைப் பற்றியே சிந்திக்கப் போகிறோம். *

இயேசுவின் கவனிப்பில்

3. (அ) இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் என்ன நடந்தது? (ஆ) மத்தேயு 13:28-ன்படி யார், என்ன கேள்வியைக் கேட்டார்கள்? (குறிப்பையும் பாருங்கள்.)

3 இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் “களைகள் வளர்ந்திருந்தன,” ஆம், உலகம் என்ற வயலில் போலி கிறிஸ்தவர்கள் தென்பட்டார்கள். (மத். 13:26) நான்காம் நூற்றாண்டிற்குள், களைகளைப் போன்ற இந்த கிறிஸ்தவர்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருந்தார்கள். உவமையில், களைகளைப் பிடுங்கிப் போட உத்தரவு தரும்படி எஜமானிடம் வேலைக்காரர்கள் கேட்டது நமக்கு நினைவிருக்கும். * (மத். 13:28) அதற்கு அந்த எஜமான் என்ன சொன்னார்?

4. (அ) எஜமானரான இயேசுவின் பதிலிலிருந்து என்ன தெரிகிறது? (ஆ) கோதுமையைப் போன்ற கிறிஸ்தவர்கள் எப்போது தெரிய ஆரம்பித்தார்கள்?

4 கோதுமை-களைகள் பற்றிப் பேசுகையில், “அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்” என்று இயேசு சொன்னார். முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையாக கோதுமையைப் போன்ற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சிலர், எப்போதும் பூமியில் இருந்திருக்கிறார்கள் என்பது இந்தப் பதிலிலிருந்து தெரிகிறது. பிற்பாடு சீடர்களிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகிறது: “இதோ! இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்.” (மத். 28:20) ஆம், இயேசு பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் பாதுகாப்பார். ஆனால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைவிட களைகளைப் போன்ற கிறிஸ்தவர்கள் மேலோங்கி வளர்ந்திருந்ததால், அந்த நீண்ட காலப்பகுதியில் கோதுமை வகுப்பைச் சேர்ந்தவர்கள் யார் என்பது நமக்குச் சரியாகத் தெரியவில்லை. என்றாலும், அறுவடைக் காலம் துவங்குவதற்குச் சுமார் 30 வருடங்களுக்கு முன் அவர்கள் யார் என்பது தெரிய ஆரம்பித்தது. எப்படி?

ஒரு தூதுவர் ‘வழியைத் தயார்படுத்துகிறார்’

5. மல்கியாவின் தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் எப்படி நிறைவேறியது?

5 கோதுமை-களைகள் பற்றிய உவமையை இயேசு சொன்னதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதிலுள்ள சில அம்சங்களை மல்கியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா முன்னுரைத்தார். (மல்கியா 3:1-4-ஐ வாசியுங்கள்.) ‘வழியைத் தயார்படுத்திய’ அந்தத் தூதுவர் யோவான் ஸ்நானகர். (மத். 11:10, 11) கி.பி. 29-ல் அவர் வந்தபோது இஸ்ரவேலரை நியாயந்தீர்ப்பதற்கான காலம் நெருங்கியிருந்தது. மல்கியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள அந்த இரண்டாவது தூதுவர் இயேசுதான். எருசலேம் ஆலயத்தை இரண்டு சமயங்களில் அவர் சுத்திகரித்தார்; அதாவது, தமது ஊழியத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் சுத்திகரித்தார். (மத். 21:12, 13; யோவா. 2:14-17) அப்படியானால், ஆலயத்தைச் சுத்திகரிக்கும் வேலை ஒரு காலப்பகுதியில் நடந்தேறியது.

6. (அ) மல்கியாவுடைய தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றம் எது? (ஆ) ஆன்மீக ஆலயத்தை எந்தக் காலப்பகுதியில் இயேசு சோதனையிட்டார்? (குறிப்பையும் பாருங்கள்.)

6 மல்கியாவுடைய தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றம் எது? 1914-க்கு முன்பு பல பத்தாண்டுகளாக சி.டி. ரஸலும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் யோவான் ஸ்நானகர் செய்ததைப் போன்ற ஒரு வேலையைச் செய்துவந்தார்கள். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதைக் கண்டறிய அதை ஆழ்ந்து படித்தார்கள். அந்த பைபிள் மாணாக்கர்கள், கிறிஸ்துவின் மீட்கும் பலியின் உண்மையான அர்த்தத்தை விளக்கினார்கள், நரக தண்டனை ஒரு பொய் போதனை என்பதை அம்பலப்படுத்தினார்கள், புறதேசத்தாரின் காலங்கள் முடிவடையவிருந்ததை அறிவித்தார்கள். இருந்தாலும், கிறிஸ்துவின் சீடர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்ட எண்ணற்ற மதத் தொகுதியினரும் இருந்தார்கள். அப்படியானால், அவர்களில் கோதுமையைப் போன்றிருந்தவர்கள் யார் என்ற முக்கியமான கேள்வி எழுந்தது. 1914-ல் இயேசு ஆன்மீக ஆலயத்தைச் சோதனையிட ஆரம்பித்தபோது அதற்குப் பதில் கிடைத்தது. அப்படிச் சோதனையிட்டு சுத்திகரிப்பதற்கு ஒரு காலப்பகுதி தேவைப்பட்டது. ஆம், 1914-லிருந்து 1919-ன் ஆரம்பம்வரையாக அதைச் செய்தார். *

சோதனையும் சுத்திகரிப்பும்

7. இயேசு, 1914-ல் சோதனையிட ஆரம்பித்தபோது எதைக் கண்டார்?

7 சோதனையிட ஆரம்பித்தபோது இயேசு எதைக் கண்டார்? ஒரு சிறிய தொகுதியாக இருந்த பக்திவைராக்கியமுள்ள பைபிள் மாணாக்கர்கள், 30 வருடங்களுக்கும் மேலாக தங்கள் சக்தியையும் வளங்களையும் பயன்படுத்தி பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததைக் கண்டார். * சாத்தானின் களைகளோடு ஒப்பிட, சொற்ப எண்ணிக்கையில் இருந்த கோதுமை வகுப்பார் அந்தக் களைகளால் நசுக்கப்படாமல் உறுதியாக இருந்ததைப் பார்த்து இயேசுவும் தூதர்களும் எவ்வளவாய் சந்தோஷப்பட்டிருப்பார்கள்! இருந்தாலும், “லேவியின் புத்திரரை,” அதாவது பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களைச் ‘சுத்திகரிக்க’ வேண்டிய தேவை ஏற்பட்டது. (மல். 3:2, 3; 1 பே. 4:17) ஏன்?

8. 1914-க்குப் பிறகு என்ன நடந்தது?

8 சில பைபிள் மாணாக்கர்கள், 1914-ன் இறுதியில் பரலோகத்திற்குப் போகாததை நினைத்து சோர்ந்துபோனார்கள். 1915-16-ல் அமைப்பிற்கு வெளியேயிருந்து எதிர்ப்பு வந்ததால் பிரசங்க வேலையில் மந்தமானார்கள். அக்டோபர் 1916-ல் சகோதரர் ரஸல் இறந்த பிறகு அமைப்பிற்கு உள்ளிருந்தே எதிர்ப்பு வந்ததால் நிலைமை இன்னும் மோசமானது. முன்நின்று வழிநடத்த சகோதரர் ரதர்ஃபோர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டபோது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியின் ஏழு இயக்குநர்களில் நான்கு பேர் அதை எதிர்த்தார்கள். சகோதரர்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்க முயன்றார்கள்; ஆனால், ஆகஸ்ட் 1917-ல் அவர்கள் பெத்தேலிலிருந்து வெளியேறியது உண்மையிலேயே ஒரு சுத்திகரிப்பாக இருந்தது. சில பைபிள் மாணாக்கர்கள் மனித பயத்துக்கும் ஆளானார்கள். இருந்தாலும், இயேசு சுத்திகரிப்பு செய்தபோது ஒரு தொகுதியாக அவர்கள் அதை மனமார ஏற்றுக்கொண்டு மாற்றங்களைச் செய்தார்கள். ஆகவே, இயேசு அவர்களைக் கோதுமையைப் போன்ற உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக நியாயந்தீர்த்தார். ஆனால், சபைக்குள் இருந்த போலி கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் இருந்த எல்லோரையும் அவர் நிராகரித்தார். (மல். 3:5; 2 தீ. 2:19) அடுத்து என்ன நடந்தது? அதை அறிய கோதுமை-களைகள் பற்றிய உவமையை மீண்டும் ஆராய்வோம்.

அறுவடைக் காலம் ஆரம்பித்த பின்

9, 10. (அ) அறுவடைக் காலத்தைப் பற்றி இப்போது என்ன கவனிப்போம்? (ஆ) அறுவடைக் காலத்தின்போது முதலில் என்ன நடக்கும்?

9 “அறுவடை, இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்” என்று இயேசு சொன்னார். (மத். 13:39) அறுவடைக் காலம் 1914-ல் ஆரம்பமானது. அந்தச் சமயத்தில் நடக்கும் ஐந்து சம்பவங்களைப் பற்றி இயேசு சொன்னார். அதை இப்போது கவனிக்கலாம்.

 10 முதலாவது, களைகளைப் பிடுங்குவது. “அறுவடைக் காலம் வந்ததும் அறுவடை செய்கிறவர்களை நோக்கி, “முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை . . . கட்டுகளாகக் கட்டுங்கள்” . . . என்று நான் சொல்லுவேன்” என்று இயேசு சொன்னார். 1914-க்குப் பிறகு, பரலோக நம்பிக்கையுள்ள “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” மத்தியிலிருந்து களைகளை, அதாவது போலி கிறிஸ்தவர்களை தேவதூதர்கள் ‘பிடுங்க’ ஆரம்பித்தார்கள்.—மத். 13:30, 38, 41.

11. இன்றுவரை, போலி கிறிஸ்தவர்களிலிருந்து உண்மை கிறிஸ்தவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவது எது?

11 களைகளைப் பிடுங்கப் பிடுங்க, இரண்டு வகுப்பாருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் பளிச்சென தெரிய ஆரம்பித்தது. (வெளி. 18:1, 4) 1919-ல் மகா பாபிலோன் வீழ்ந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. போலி கிறிஸ்தவர்களிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களை முக்கியமாக வித்தியாசப்படுத்திக் காட்டியது எது? பிரசங்க வேலை! பைபிள் மாணாக்கர்களை முன்நின்று வழிநடத்தியவர்கள், சபையிலுள்ள எல்லோரும் பிரசங்க வேலையில் ஈடுபடுவது முக்கியம் என்பதை வலியுறுத்த ஆரம்பித்தார்கள். உதாரணத்திற்கு, 1919-ல் பிரசுரிக்கப்பட்ட யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது (ஆங்கிலம்) என்ற கைப்பிரதி பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லோரையும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட உந்துவித்தது. “இது ஒரு மாபெரும் வேலையாகத் தெரிந்தாலும், இது எஜமானருடைய வேலை. அவருடைய பலத்தால் அதைச் செய்ய முடியும். அதைச் செய்ய நீங்கள் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள்” என்று அந்தக் கைப்பிரதி குறிப்பிட்டது. அதன் பலன்? அது முதற்கொண்டு பைபிள் மாணாக்கர்கள் பிரசங்க வேலையில் முழு மூச்சுடன் களமிறங்கினார்கள் என்று 1922-ல் த உவாட்ச் டவர் அறிக்கையிட்டது. சீக்கிரத்தில், வீட்டுக்கு வீடு ஊழியம் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளமாகவே ஆனது; இன்றும் இதுவே உண்மை.

12. கோதுமையைப் போன்றவர்கள் எப்போது முதற்கொண்டு சேர்க்கப்படுகிறார்கள்?

12 இரண்டாவது, கோதுமையைச் சேர்ப்பது. “கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்” என்று தேவதூதர்களுக்கு இயேசு கட்டளையிடுகிறார். (மத். 13:30) 1919 முதற்கொண்டு பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சுத்திகரிக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், இந்தப் பொல்லாத உலகின் முடிவின்போது உயிரோடிருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், மரித்து பரலோகத்திற்குச் சென்ற பிறகு கடைசியாக களஞ்சியத்தில் சேர்க்கப்படுவார்கள்.—தானி. 7:18, 22, 27.

13. விலைமகளின், அதாவது கிறிஸ்தவமண்டலம் உட்பட மகா பாபிலோனின், தற்போதைய மனப்பான்மையைப் பற்றி வெளிப்படுத்துதல் 18:7 என்ன சொல்கிறது?

 13 மூன்றாவது, அழுது அங்கலாய்ப்பது. தேவதூதர்கள் களைகளைக் கட்டுகளாகக் கட்டிய பிறகு என்ன நடக்கும்? களைகளைப் போன்றவர்களின் நிலைமையைப் பற்றி இயேசு இப்படிச் சொல்கிறார்: “அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்.” (மத். 13:42) இது இப்போது நடக்கிறதா? இல்லை. விலைமகளின் பாகமாக இருக்கும் கிறிஸ்தவமண்டலம், “நான் ஒரு ராணியாக வீற்றிருக்கிறேன், நான் விதவை அல்ல, நான் ஒருபோதும் துயரப்பட மாட்டேன்” என்றுதான் தன்னைப் பற்றி இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. (வெளி. 18:7) ஆம், கிறிஸ்தவமண்டலம் தனக்கு அதிகாரம் இருப்பதாக, அரசியல் தலைவர்களுக்கு மேல் ‘ஒரு ராணியாக வீற்றிருப்பதாக’ நினைத்துக்கொண்டிருக்கிறது. களைகளைப் போன்றவர்கள் இன்று அழுதுகொண்டில்லை, தற்பெருமையில் மிதந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்நிலை சீக்கிரத்தில் மாறும்.

அரசியல் தலைவர்களோடு கிறிஸ்தவமண்டலம் வைத்துள்ள நெருங்கியத் தொடர்பு சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் ( பாரா 13)

14. (அ) போலி கிறிஸ்தவர்கள் எப்போது “அங்கலாய்ப்பார்கள்”, ஏன்? (ஆ) மத்தேயு 13:42-ஐப் பற்றிய புதிய புரிந்துகொள்ளுதல் சங்கீதம் 112:10-ன் கருத்தோடு எப்படி ஒத்திருக்கிறது? (குறிப்பைப் பாருங்கள்.)

14 மிகுந்த உபத்திரவத்தின்போது, எல்லாப் பொய் மத அமைப்புகளும் அழிக்கப்பட்ட பிறகு, அதன் முன்னாள் ஆதரவாளர்கள் பாதுகாப்புக்காக மறைவான இடம்தேடி அலைவார்கள், ஆனால், அதை கண்டடைய மாட்டார்கள். (லூக். 23:30; வெளி. 6:15-17) தப்பிக்க வழியே இல்லை என்பதை அறிந்ததும் விரக்தியில் அழுவார்கள், கோபத்தில் “அங்கலாய்ப்பார்கள்.” இக்கட்டான அந்தக் கட்டத்தில் அவர்கள் “மாரடித்துப் புலம்புவார்கள்” என்று மிகுந்த உபத்திரவத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில் இயேசு குறிப்பிட்டார். *மத். 24:30; வெளி. 1:7.

15. களைகளைப் போன்றவர்களுக்கு என்ன நடக்கும், அது எப்போது நடக்கும்?

 15 நான்காவது, உலையில் வீசப்படுவது. களைகளின் கட்டுகள் என்ன செய்யப்படும்? அவற்றை தேவதூதர்கள் “கொழுந்துவிட்டு எரியும் உலையில் வீசிவிடுவார்கள்.” (மத். 13:42) அதாவது, முற்றிலுமாக அழிக்கப்படும். அப்படியானால், பொய் மத அமைப்புகளின் முன்னாள் ஆதரவாளர்கள், மிகுந்த உபத்திரவத்தின் உச்சக்கட்டமான அர்மகெதோன் யுத்தத்தில் பூண்டோடு அழிக்கப்படுவார்கள்.—மல். 4:1.

16, 17. (அ) இயேசு தமது உவமையில் குறிப்பிட்ட கடைசி சம்பவம் என்ன? (ஆ) அந்தச் சம்பவம் எதிர்காலத்தில்தான் நிறைவேறும் என்று ஏன் சொல்கிறோம்?

 16 ஐந்தாவது, சூரியனைப் போல் பிரகாசிப்பது. “அச்சமயத்திலே, நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்” என்று சொல்லி இயேசு அந்தத் தீர்க்கதரிசனத்தை முடித்தார். (மத். 13:43) அது எப்போது, எங்கே நிறைவேறும்? அது நிறைவேற இன்னும் காலம் இருக்கிறது. இப்போது நடந்துவரும் சம்பவத்தை அல்ல, எதிர்காலத்தில் பரலோகத்தில் நடக்கப்போகும் சம்பவத்தையே இயேசு முன்னுரைத்தார். * இதற்கான இரண்டு காரணங்களைக் கவனியுங்கள்.

17 முதலில், “எப்போது” நிறைவேறும் என்ற கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். “அப்பொழுது, நீதிமான்கள் . . . பிரகாசிப்பார்கள்” என்று இயேசு சொன்னார். “அப்பொழுது” என்ற வார்த்தை, ‘கொழுந்துவிட்டு எரியும் உலையில் களைகள் வீசப்படும்’ என சற்றுமுன் சொல்லப்பட்ட சம்பவத்தையே குறிக்க வேண்டும். இது மிகுந்த உபத்திரவத்தின் முடிவில் நடக்கும். எனவே, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ‘சூரியனைப் போல் பிரகாசிப்பது’ எதிர்காலத்தில்தான் நடக்க வேண்டும். அடுத்து, “எங்கே” என்ற கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். “நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில்” பிரகாசிப்பார்கள் என்று இயேசு சொன்னார். அதன் அர்த்தம் என்ன? மிகுந்த உபத்திரவத்தின் முதற்கட்டம் நடந்தேறிய பிறகும் பூமியில் மீந்திருக்கும் எல்லா பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் கடைசி முத்திரையைப் பெற்றிருப்பார்கள். பிறகு, மிகுந்த உபத்திரவம் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, அவர்கள் பரலோகத்தில் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். (மத். 24:31) அங்கே, “தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில்” பிரகாசிப்பார்கள்; அர்மகெதோன் யுத்தம் முடிந்தவுடன் நடைபெறும் ‘ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில்’ அவருடைய சந்தோஷமுள்ள மணமகளாக இருப்பார்கள்.—வெளி. 19:6-9.

நாம் எப்படிப் பயனடைகிறோம்?

18, 19. கோதுமை-களைகள் பற்றிய உவமையைப் புரிந்துகொண்டதால் நாம் ஒவ்வொருவரும் எவ்விதங்களில் பயனடைகிறோம்?

18 இந்த உவமையை முழுமையாகப் புரிந்துகொண்டதால், நாம் ஒவ்வொருவரும் மூன்று விதங்களில் பயனடைகிறோம். ஒன்று, நம்முடைய புரிந்துகொள்ளுதல் ஆழமாகிறது. அக்கிரமத்தை யெகோவா ஏன் இன்னமும் அனுமதித்திருக்கிறார் என்பதற்கான ஒரு முக்கிய காரணத்தை இந்த உவமை வெளிப்படுத்துகிறது. ‘இரக்கத்திற்குரிய பாத்திரங்களான’ கோதுமை வகுப்பாரைத் தயார்படுத்துவதற்காகவே ‘கடுங்கோபத்திற்குரிய பாத்திரங்களை’ யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். * (ரோ. 9:22-24) இரண்டு, இது நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. முடிவு நெருங்க நெருங்க, எதிரிகள் நம்மை அதிகமாகத் தாக்குவார்கள்; ‘ஆனாலும் [அவர்கள்] நம்மை மேற்கொள்ள மாட்டார்கள்.’ (எரேமியா 1:19-வாசியுங்கள்.) யெகோவா, கோதுமை வகுப்பாரை இத்தனை நூற்றாண்டுகளாக பாதுகாத்தது போலவே இயேசு மற்றும் தேவதூதர்கள் மூலமாக “எல்லா நாட்களிலும்” நம்மோடிருந்து நம்மையும் பாதுகாப்பார்.—மத்.28:20.

19 மூன்று, கோதுமை வகுப்பாரை அடையாளங்காண இந்த உவமை நமக்கு உதவுகிறது. இது ஏன் மிக முக்கியம்? கோதுமை போன்ற கிறிஸ்தவர்கள் யார் என்பதை அறிந்தால்தான் கடைசி நாட்களைப் பற்றிய விரிவான தீர்க்கதரிசனத்தில் இயேசு கேட்ட மற்றொரு கேள்விக்கான பதிலையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அந்தக் கேள்வி: “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?” (மத். 24:45) அடுத்த இரண்டு கட்டுரைகள் இதற்கு திருப்திகரமான பதிலை அளிக்கும்.

 

^ பாரா 2: இந்த உவமையிலுள்ள மற்ற அம்சங்களின் அர்த்தத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர காவற்கோபுரம் மார்ச் 15, 2010-லுள்ள “நீதிமான்கள் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா 3: இயேசுவின் அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு பூமியிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் வேலைக்காரர்களாக அல்ல, கோதுமையாகவே சித்தரிக்கப்படுவதால் வேலைக்காரர்கள் தேவதூதர்களையே குறிக்க வேண்டும். இதே உவமையின் பிற்பகுதியில், களைகளைப் பிடுங்குவோர் தேவதூதர்கள் என சொல்லப்படுகிறது.—மத். 13:39.

^ பாரா 6: இது நம் புரிந்துகொள்ளுதலில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம். 1918-ல் இயேசு ஆலயத்தைச் சோதனையிட்டார் என முன்பு நினைத்தோம்.

^ பாரா 7: பைபிள் மாணாக்கர்கள், 1910-லிருந்து 1914 வரை கிட்டத்தட்ட 40 லட்சம் புத்தகங்களையும் 20 கோடிக்கும் அதிகமான துண்டுப்பிரதிகளையும் கைப்பிரதிகளையும் வினியோகித்தார்கள்.

^ பாரா 14: இது மத்தேயு 13:42 பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம். “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்,” போலி கிறிஸ்தவர்களைத் தோலுரித்துக் காட்டியதால், அதாவது அவர்கள் “பொல்லாதவனின் பிள்ளைகள்” என்பதைக் காட்டியதால், அவர்கள் பல பத்தாண்டுகளாக ‘அழுது அங்கலாய்த்து’ புலம்பியதாக நம் பிரசுரங்கள் முன்பு குறிப்பிட்டன. (மத். 13:38) ஆனால், அழுது அங்கலாய்ப்பது, அதாவது பற்களைக் கடிப்பது பற்றி பைபிள் சொல்லும்போது அதை அழிவோடு சம்பந்தப்படுத்தியே பேசுகிறது.—சங். 112:10.

^ பாரா 16: “ஞானவான்கள் [பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்] ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போல . . . பிரகாசிப்பார்கள்” என்று தானியேல் 12:3 சொல்கிறது. அவர்கள் பூமியில் இருக்கும்போது பிரசங்க வேலையில் ஈடுபடுவதன் மூலம் இப்படிப் பிரகாசிக்கிறார்கள். இருந்தாலும், பரலோக அரசாங்கத்தில் சூரியனைப் போல பிரகாசிப்பதைப் பற்றியே மத்தேயு 13:43 சொல்கிறது. இரண்டு வசனங்களும் ஒரே விஷயத்தைத்தான், அதாவது, பிரசங்க வேலையைத்தான், குறிக்கிறதென முன்பு நினைத்தோம்.