Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்

நீங்கள் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்

“[நீங்கள்] கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்.” —1 கொ. 6:11.

1. எருசலேமுக்குத் திரும்பிவரும் நெகேமியா என்ன மோசமான விஷயங்களைப் பார்க்கிறார்? (இதே பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.)

 எருசலேமிலிருக்கும் மக்கள் பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏன்? யெகோவாவை வெளிப்படையாக எதிர்க்கும் ஒருவன் ஆலயத்தின் ஓர் அறையில் தங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறான். லேவியர்கள் தங்களுடைய வேலையைச் செய்வதில்லை. மூப்பர்களோ, யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்காமல் ஓய்வு நாளில் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இஸ்ரவேலர் பலர் மற்ற தேசத்து மக்களை மணம் முடித்திருக்கிறார்கள். கி.மு. 443-க்குப் பின் எருசலேமுக்குத் திரும்பிவரும்போது நெகேமியா பார்க்கும் சில மோசமான விஷயங்களே இவை.—நெ. 13:6.

2. இஸ்ரவேலர்கள் எப்படிப் பரிசுத்த ஜனமாக ஆனார்கள்?

2 இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஜனமாக இருந்தார்கள். கி.மு. 1513-ல், யெகோவாவின் சித்தத்தைச் செய்ய மனதார ஒப்புக்கொண்டார்கள். “கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று சொன்னார்கள். (யாத். 24:3) எனவே, கடவுள் அவர்களைப் பரிசுத்தமாக்கினார், அதாவது மற்ற ஜனங்களிலிருந்து அவர்களைத் தம்முடைய சொந்த ஜனமாகப் பிரித்தெடுத்தார். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! நாற்பது வருடங்களுக்குப் பிறகு மோசே இதை அவர்களுக்கு நினைப்பூட்டினார்: “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.”—உபா. 7:6.

3. நெகேமியா இரண்டாவது முறையாக எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது யூதர்களின் ஆன்மீக நிலை எப்படி இருந்தது?

3 ஆனால், ஆர்வம்பொங்க சொன்ன இந்த வார்த்தைகளை இஸ்ரவேலர்கள் நாளடைவில் காப்பாற்றாமல் போய்விட்டார்கள். என்றாலும், கடவுளை உண்மையோடு வழிபட்ட சிலர் எப்போதும் இருந்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான யூதர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குப் பதிலாக தங்களைப் பரிசுத்தமானவர்களாக, அதாவது பக்திமான்களாக காட்டிக்கொள்ளவே விரும்பினார்கள். பாபிலோனிலிருந்த உண்மையுள்ள மீதியானோர் மெய் வழிபாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்காகவே எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். ஆனால் சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு, நெகேமியா இரண்டாவது முறையாக எருசலேமுக்கு வந்த சமயத்தில், ஆன்மீக விஷயங்களில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் முற்றிலுமாகத் தணிந்திருந்தது.

4. எப்போதும் பரிசுத்தமானவர்களாக இருப்பதற்கு உதவும் என்ன விஷயங்களை ஆராயப் போகிறோம்?

4 இஸ்ரவேலர்களைப் போலவே, இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகளும் கடவுளால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களே. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் ‘திரள் கூட்டத்தாரும்’ பரிசுத்தமானவர்கள், புனித சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். (வெளி. 7:9, 14, 15; 1 கொ. 6:11) காலப்போக்கில் இஸ்ரவேலர்கள் பரிசுத்தமற்ற ஜனமாக மாறி கடவுளோடிருந்த நல்லுறவை இழந்தார்கள்; நாம் அவர்களைப்போல் இருக்க விரும்பமாட்டோம். யெகோவாவின் சேவையில் எப்போதும் பயனுள்ளவர்களாக... பரிசுத்தமானவர்களாக... இருப்பதற்கு எது நமக்கு உதவும்? நெகேமியா 13-ஆம் அதிகாரத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள நான்கு விஷயங்களை இக்கட்டுரையில் கவனிக்கலாம்: (1) கெட்ட சகவாசத்தைத் தவிர்ப்பது; (2) ஆன்மீக ஏற்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பது; (3) ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பது; (4) கிறிஸ்தவ அடையாளத்தைக் காத்துக்கொள்வது. இவற்றை ஒவ்வொன்றாக இப்போது ஆராயலாம்.

கெட்ட சகவாசத்தைத் தவிர்ப்பது

நெகேமியா எவ்வாறு யெகோவாவுக்கு உண்மையுள்ளவராய் நடந்துகொண்டார்? (பாராக்கள் 5, 6)

5, 6. எலியாசிப் மற்றும் தொபியா யார், எலியாசிப் ஏன் தொபியாவின் பேச்சைக் கேட்டு நடந்திருக்கலாம்?

5 நெகேமியா 13:4-9-ஐ வாசியுங்கள். நம்மைச் சுற்றி கெட்ட ஆட்களும் கெட்ட காரியங்களுமே இருப்பதால் பரிசுத்தமானவர்களாக இருப்பது கஷ்டம்தான். எலியாசிப்பையும் தொபியாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். எலியாசிப் ஒரு பிரதான ஆசாரியர்; தொபியாவோ (அம்மோனியன்) யூதேயாவிலுள்ள பெர்சிய நிர்வாகத்தில் ஒரு சாதாரண அதிகாரியாக இருந்திருக்கலாம். எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவதற்காக நெகேமியா எடுத்த முயற்சியை தொபியாவும் அவனுடைய ஆட்களும் எதிர்த்தார்கள். (நெ. 2:10) அம்மோனியர்களுக்கு ஆலய வளாகத்திற்குள் வர அனுமதியில்லை. (உபா. 23:3) அப்படியிருக்க, தொபியாவை பிரதான ஆசாரியர் எலியாசிப் ஏன் ஆலயத்தின் ஓர் உணவறையில் தங்கவைத்தார்?

6 அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன: ஒன்று, தொபியாவும் எலியாசிப்பும் நெருங்கிய நண்பர்கள். இரண்டு, தொபியாவும் அவனுடைய மகன் யோகனானும் யூத பெண்களை மணம் முடித்திருந்தார்கள்; யூதர்கள் பலர் தொபியாவைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். (நெ. 6:17-19) மூன்று, எலியாசிப்பின் பேரன் ஒருவன், ஆளுநரான சன்பல்லாத்தின் மகளைத் திருமணம் செய்திருந்தான். சமாரியனான சன்பல்லாத், தொபியாவின் நெருங்கிய நண்பன். (நெ. 13:28) பிரதான ஆசாரியரான எலியாசிப், உண்மைக் கடவுளை வழிபடாதவனும் எதிர்ப்பவனுமான தொபியாவின் பேச்சைக் கேட்டு நடந்ததற்கு இவையே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், நெகேமியா யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்ததால் அந்த உணவறையிலிருந்து தொபியாவின் தட்டுமுட்டு பொருள்களை எல்லாம் வெளியே எறிந்துவிட்டார்.

7. மூப்பர்களும் மற்றவர்களும் எப்படி யெகோவாவுக்கு முன் எப்போதும் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள்?

7 கடவுளுக்கு அர்ப்பணித்திருக்கிற மக்களான நாம் முதலில் யெகோவாவுக்கு எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். சில சமயங்களில் நம் குடும்பத்தாருக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பதற்காக கடவுளுடைய நீதியான நெறிகளை விட்டுவிட நினைக்கலாம். அப்படிச் செய்தால், அவருக்கு முன் பரிசுத்தமானவர்களாக இருக்க முடியாது. கிறிஸ்தவ மூப்பர்கள், தங்களுடைய சொந்தக் கருத்துக்களின்படி அல்ல, யெகோவாவுடைய சிந்தையின்படியே தீர்மானங்கள் எடுக்கிறார்கள். (1 தீ. 5:21) கடவுளுக்கு முன் எப்போதும் சுத்த மனசாட்சியுள்ளவர்களாய் நிலைத்திருக்க அவர்கள் கவனமாய் இருக்கிறார்கள்.—1 தீ. 2:8.

8. நம்முடைய சகவாசத்தைப் பற்றி நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?

8 “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்” என்று பைபிள் சொல்வதை மறந்துவிடாதீர்கள். (1 கொ. 15:33) நம் உறவினர்கள் சிலரும்கூட தவறு செய்ய நம்மைத் தூண்டலாம். எருசலேமின் மதில்களை திரும்பக் கட்டுவதில் நெகேமியாவுக்கு எலியாசிப் முழு ஆதரவு கொடுத்தார்; இப்படி ஜனங்களுக்கு நல்ல முன்மாதிரி வைத்தார். (நெ. 3:1) ஆனால், பிற்பாடு தொபியாவோடும் மற்றவர்களோடும் சகவாசம் வைத்துக்கொண்டதால் அவர்களுடைய பேச்சைக் கேட்டு யெகோவாவுக்கு முன் பரிசுத்தமற்ற காரியங்களைச் செய்தார். நல்ல நண்பர்களோ எப்போதும் பைபிள் வாசிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது, ஊழியத்தில் ஈடுபடுவது போன்ற நல்ல காரியங்களைச் செய்யும்படி நம்மை உற்சாகப்படுத்துவார்கள். நல்லதைச் செய்ய உற்சாகப்படுத்துகிற குடும்பத்தார் நம் அன்புக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

ஆன்மீக ஏற்பாடுகளுக்கு ஆதரவு

9. ஆலயத்தின் நிலைமை எப்படி இருந்தது, அதற்கு நெகேமியா யாரைக் குற்றப்படுத்தினார்?

9 நெகேமியா 13:10-13-ஐ வாசியுங்கள். எருசலேமுக்கு நெகேமியா திரும்பி வந்த சமயத்தில் ஆலயத்திற்கு வரும் காணிக்கைகள் ஏறக்குறைய நின்றுவிட்டிருந்தது. அதனால், லேவியர்கள் ஆலயப் பணிகளை விட்டுவிட்டு வயல் வேலைகளுக்குப் போய்விட்டார்கள். இந்த நிலைமைக்கு அதிகாரிகளே காரணமென்று நெகேமியா சொன்னார். அவர்கள் தங்களுடைய கடமைகளைச் சரிவர செய்யவில்லை. ஒருவேளை மக்களிடமிருந்து தசமபாகத்தை வாங்காமல் இருந்திருக்கலாம் அல்லது அதை ஆலயத்திற்குக் கொண்டுவராமல் இருந்திருக்கலாம். (நெ. 12:44) எனவே, தசமபாகத்தைத் திரட்ட நெகேமியா நடவடிக்கை எடுத்தார். பொக்கிஷ அறைகளைக் காவல் காக்கவும் காணிக்கைகளைப் பகிர்ந்தளிக்கவும் நம்பகமான ஆட்களை நியமித்தார்.

10, 11. உண்மை வழிபாட்டை நாம் எப்படி ஆதரிக்கலாம்?

10 இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியுமா? முடியும். ஏனென்றால், நம்மிடமுள்ள மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவைக் கனம்பண்ணும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. (நீதி. 3:9) அவருடைய வேலையை ஆதரிப்பதற்காக நாம் நன்கொடைகளைக் கொடுக்கும்போது, உண்மையில் அவரிடமிருந்து பெற்றதையே அவரிடம் திரும்பக் கொடுக்கிறோம். (1 நா. 29:14-16) கொடுப்பதற்கு நம்மிடம் அதிகம் இல்லையே என யோசித்தாலும் விருப்பப்பட்டு கொடுக்கிற எதையும் யெகோவா சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.—2 கொ. 8:12.

11 பல வருடங்களாக ஒரு பெரிய குடும்பம், வயதான ஒரு விசேஷ பயனியர் தம்பதியை வாரம் ஒருமுறை சாப்பாட்டிற்கு அழைத்தது. அந்தக் குடும்பத்தில் மொத்தம் எட்டு பிள்ளைகள் இருந்தாலும், “கூட ரெண்டு பேருக்கு சேர்த்து சமைப்பதில் என்ன ஆகப்போகிறது?” என அவர்களுடைய அம்மா அடிக்கடி சொல்வார். வாரத்தில் ஒருமுறை சாப்பாடு கொடுப்பது ஒரு பெரிய விஷயம் இல்லையென தோன்றலாம். ஆனாலும் அந்த பயனியர்கள் அதற்கு அதிக நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள். அதே சமயத்தில், அந்தக் குடும்பத்தாரும் அதைப் பெரிய பாக்கியமாக நினைத்தார்கள். அந்தத் தம்பதி அருமையான அனுபவங்களைச் சொல்லி உற்சாகப்படுத்தியதால் அந்தப் பிள்ளைகள் ஆன்மீக முன்னேற்றம் செய்தார்கள். பிற்பாடு அவர்கள் எல்லோருமே முழுநேர ஊழியர்களானார்கள்.

12. மூப்பர்களும் உதவி ஊழியர்களும் என்ன முன்மாதிரி வைக்கிறார்கள்?

12 நாம் கற்றுக்கொள்ளும் மற்றொரு பாடம்: நெகேமியாவைப் போலவே இன்றுள்ள மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஆன்மீக ஏற்பாடுகளை ஆதரிப்பதில் நல்ல முன்மாதிரி வைக்கிறார்கள். இதனால் சபையிலுள்ள மற்றவர்கள் பயனடைகிறார்கள். இந்த விஷயத்தில், மூப்பர்கள் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியையும் பின்பற்றுகிறார்கள். அவர் உண்மை வழிபாட்டை ஆதரித்தார், நல்ல ஆலோசனைகளைக் கொடுத்தார். உதாரணமாக, நன்கொடைகளை எப்படி அளிக்கலாம் என்பதற்கு நிறைய நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுத்தார்.—1 கொ. 16:1-3; 2 கொ. 9:5-7.

ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பது

13. யூதர்கள் சிலர் ஓய்வுநாளில் என்ன செய்தார்கள்?

13 நெகேமியா 13:15-21-ஐ வாசியுங்கள். பொருள்களைச் சேர்ப்பதிலேயே குறியாய் இருந்தால், ஆன்மீக விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பின்தங்கிவிடுவோம். யாத்திராகமம் 31:13 சொல்கிறபடி, வாராவாரம் ஓய்வுநாளை அனுசரித்தது தாங்கள் பரிசுத்தமான மக்கள் என்பதை இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டியது. குடும்ப வழிபாடு, ஜெபம், திருச்சட்டத்தைத் தியானிப்பது போன்ற காரியங்களையே அந்நாளில் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், நெகேமியாவின் காலத்தில் வாழ்ந்த சிலர் ஓய்வுநாளை மற்ற நாட்களைப் போலவே கருதி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். ஆன்மீக விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளினார்கள். இதையெல்லாம் கவனித்த நெகேமியா, ஆறாம் நாள் சாயங்காலம் நகரத்தின் வாயிற்கதவுகளைப் பூட்டிவைப்பதற்கும் அயல்நாட்டு வியாபாரிகளை ஓய்வுநாள் ஆரம்பிப்பதற்குமுன் விரட்டிவிடுவதற்கும் ஏற்பாடு செய்தார்.

14, 15. (அ) நாம் ஒரேயடியாக வியாபார விஷயங்களில் மூழ்கிவிட்டால் என்ன நடக்கும்? (ஆ) கடவுளோடு சேர்ந்து நாம் எப்படி ஓய்வை அனுபவிக்கலாம்?

14 நெகேமியாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் ஒரேயடியாக வியாபார விஷயங்களில் மூழ்கிவிடக் கூடாது என கற்றுக்கொள்கிறோம். அப்படி வேலையில் மூழ்கிவிட்டால், அதுவும் நமக்குப் பிடித்த வேலையில் மூழ்கிவிட்டால், எளிதில் வழிவிலகிப் போவோம். இரு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது என்று இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள். (மத்தேயு 6:24-ஐ வாசியுங்கள்.) செல்வந்தராக இருந்த நெகேமியா எருசலேமில் எப்படிக் காலத்தைக் கழித்தார்? (நெ. 5:14-18) அவர் தீரு நாட்டவருடனோ மற்றவர்களுடனோ வியாபாரத்தில் ஈடுபடவில்லை. மாறாக, தன் சகோதரர்களுக்கு உதவுவதிலும் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிற காரியங்களைச் செய்வதிலுமே முழுமையாக ஈடுபட்டார். அதேபோல், கிறிஸ்தவ மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபையாருக்கு பயன்தரும் காரியங்களைச் செய்வதிலேயே கவனமாய் இருக்கிறார்கள். இதற்காக சக கிறிஸ்தவர்கள் அவர்கள்மீது அன்பு காட்டுகிறார்கள். இதன் காரணமாக, கடவுளுடைய மக்கள் மத்தியில் அன்பும் சமாதானமும் பாதுகாப்பும் நிலவுகின்றன.—எசே. 34:25, 28.

15 கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றாலும், “கடவுளுடைய மக்களுக்கு இனிமேல்தான் ஓய்வுகாலம் வரப்போகிறது . . . கடவுள் தமது வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுப்பது போலவே அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்பவனும் தனது வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுக்கிறான்” என்று பவுல் சொல்கிறார். (எபி. 4:9, 10) நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய நோக்கத்திற்கு இசைய செயல்படும்போது அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்போம். குடும்ப வழிபாடு, சபைக் கூட்டம், ஊழியம் ஆகியவற்றிற்கு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் முதலிடம் கொடுக்கிறீர்களா? நம்முடைய முதலாளி அல்லது கூட வேலை பார்ப்பவர்கள் இதை முக்கியமில்லாத காரியங்களாக நினைக்கலாம். ஆனால் யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் மிக முக்கியமான வேலை என்பதை அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். ஒருவிதத்தில், பரிசுத்தமான காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்காக ‘நகரத்தின் வாசல் கதவுகளை பூட்டி தீருவின் வியாபாரிகளைத் துரத்திவிட’ வேண்டும். நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருப்பதால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவாவுக்கே முதலிடம் கொடுக்கிறேன் என்பதை என் வாழ்க்கை காட்டுகிறதா?’—மத். 6:33.

கிறிஸ்தவ அடையாளத்தைக் காத்துக்கொள்வது

16. நெகேமியாவின் காலத்தில், இஸ்ரவேலர்கள் எப்படிக் கடவுளுடைய பரிசுத்த மக்கள் என்ற அடையாளத்தை இழந்துவிடும் நிலையில் இருந்தார்கள்?

16 நெகேமியா 13:23-27-ஐ வாசியுங்கள். நெகேமியாவின் காலத்தில், இஸ்ரவேலர்கள் புறதேசத்துப் பெண்களை மணந்தார்கள். நெகேமியா எருசலேமுக்கு முதல் முறை வந்திருந்தபோது, புறதேசத்துப் பெண்களை மணம் முடிக்க மாட்டோம் என்று ஆணையிட்டு கையெழுத்திட்ட ஓர் ஒப்பந்தத்தை மூப்பர்களிடமிருந்து வாங்கியிருந்தார். (நெ. 9:38; 10:30) ஆனால், அவர் இரண்டாவது முறை எருசலேமுக்கு வந்தபோது யூத ஆண்கள் புறதேசத்துப் பெண்களை மணந்தது மட்டுமல்லாமல் கடவுளுடைய பரிசுத்த மக்கள் என்ற அடையாளத்தையே இழந்துவிடும் நிலையில் இருந்ததைப் பார்த்தார். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் எபிரெய மொழியை வாசிக்கவும் பேசவும் இல்லை. இந்தப் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு தங்களை இஸ்ரவேலர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்வார்களா? அல்லது தங்களை அஸ்தோத்தியர், அம்மோனியர், மோவாபியர் என்று நினைத்துக்கொள்வார்களா? எபிரெய மொழி தெரியாமல், திருச்சட்டத்தைப் எப்படிப் புரிந்துகொள்வார்கள்? அவர்களுடைய அம்மாக்கள் வழிபடுகிற பொய் கடவுள்களை விட்டுவிட்டு அவர்களால் எப்படி யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவரை வழிபடவும் முடியும்? ஆகவே, உடனடியாக, உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. நெகேமியா அதையே செய்தார்.—நெ. 13:28.

யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வளர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள் (பாராக்கள் 17, 18)

17. பிள்ளைகள் யெகோவாவோடு தனிப்பட்ட பந்தத்தை வளர்த்துக்கொள்ள பெற்றோர் என்ன செய்யலாம்?

17 இன்று, நம் பிள்ளைகள் கிறிஸ்தவ அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரே உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பைபிள் சத்தியம் எனும் “சுத்தமான பாஷையை” என்னுடைய பிள்ளைகள் எந்தளவு தெளிவாகப் பேசுகிறார்கள்? (செப். 3:9) என்னுடைய பிள்ளைகளின் பேச்சு கடவுளுக்குப் பிரியமானதாக இருக்கிறதா அல்லது உலகத்தாரைப் போல் இருக்கிறதா?’ அதில் அவர்கள் குறைவுபடுவதைப் பார்த்தால் சோர்ந்துவிடாதீர்கள். பொதுவாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள காலம் எடுக்கும்; அதுவும் நிறைய கவனச்சிதறல்கள் இருக்கும்போது அதைவிட அதிக காலம் எடுக்கும். கடவுளுக்குக் கீழ்ப்படியாதபடி இந்த உலகம் உங்கள் பிள்ளைகளை நெருக்குகிறது. எனவே பொறுமையாக இருங்கள், யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவும் விஷயங்களை குடும்ப வழிபாட்டிலும் மற்ற சமயங்களிலும் உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள். (உபா. 6:6-9) சாத்தானுடைய உலகிலிருந்து வித்தியாசமாக இருப்பதால் வரும் நன்மைகளை எடுத்துச்சொல்லுங்கள். (யோவா. 17:15-17) அவர்களுடைய இதயத்தில் பதியும் விதமாகச் சொல்லுங்கள்.

18. யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிக்க, பிள்ளைகளுக்கு ஏன் பெற்றோரால் மட்டுமே சிறந்த விதத்தில் உதவ முடியும்?

18 யெகோவாவைச் சேவிப்பதா வேண்டாமா என்ற தீர்மானத்தை உங்கள் பிள்ளைகள்தான் எடுக்க வேண்டும். ஆனாலும், பெற்றோராக நீங்கள் பல வழிகளில் அவர்களுக்கு உதவலாம். முதலில், நீங்கள் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும்; தவறான விஷயங்கள் எவை என்றும் அவற்றைச் செய்வதால் வரும் பின்விளைவுகளைப் பற்றியும் பிள்ளைகளுக்குத் தெளிவாக விளக்க வேண்டும். பெற்றோரே, கிறிஸ்தவ அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள... அதைக் காத்துக்கொள்ள... யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிக்க... உங்கள் பிள்ளைகளுக்கு உதவி தேவை; உங்களைவிட வேறு யாராலும் சிறந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியாது. சொல்லப்போனால், நாம் எல்லோருமே நம்முடைய அடையாள அர்த்தமுள்ள “அங்கிகளை” அதாவது, கிறிஸ்துவின் சீடர்களாக நம்மை அடையாளம் காட்டும் பண்புகளையும் நெறிகளையும், காத்துக்கொள்ள வேண்டும்.—வெளி. 3:4, 5; 16:15.

“நன்மையுண்டாக நினைவுகூருகிறார்”

19, 20. “நன்மையுண்டாக” யெகோவா நம்மை நினைவுகூருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

19 நெகேமியாவின் காலத்தில் வாழ்ந்தவர்தான் மல்கியா தீர்க்கதரிசி; “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது” என்று அவர் தெரியப்படுத்தினார். (மல். 3:16, 17) தேவபயமுள்ளவர்களையும் தம்முடைய பெயருக்கு அன்பு காட்டுகிறவர்களையும் கடவுள் ஒருபோதும் மறப்பதில்லை.—எபி. 6:10.

20 “தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்” என்று நெகேமியா ஜெபம் செய்தார். (நெ. 13:31) கெட்ட சகவாசத்தைத் தவிர்ப்பது... ஆன்மீக ஏற்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பது... ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பது... நம்முடைய கிறிஸ்தவ அடையாளத்தைக் காத்துக்கொள்வது... போன்ற காரியங்களை எப்போதும் செய்து வந்தால் நெகேமியாவைப் போல நம்முடைய பெயர்களும் கடவுளுடைய ஞாபகப் புஸ்தகத்தில் இருக்கும். ஆகவே, ‘நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்று நம்மை நாமே எப்போதும் சோதித்துப் பார்ப்போமாக.’ (2 கொ. 13:5) யெகோவாவுக்கு முன் பரிசுத்தமானவர்களாக நிலைத்திருந்தால், “நன்மையுண்டாக” அவர் நம்மை நினைவுகூருவார்.