Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் மாறிவிட்டீர்களா?

நீங்கள் மாறிவிட்டீர்களா?

“உங்கள் மனம் புதிதாக்கப்படுவதற்கும், அதன் மூலம் உங்கள் குணாதிசயம் மாற்றப்படுவதற்கும் இடங்கொடுங்கள்.” —ரோ. 12:2.

1, 2. நாம் வளர்ந்த விதமும் சூழலும் நம்மீது எப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

 நாம் வளர்ந்த விதமும் சூழலும் நம்மீது பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. அதனால்தான் நாம் எல்லோருமே ஒருவகை உணவை விரும்புகிறோம், ஒருவகை உடையை உடுத்துகிறோம், ஒருசில விதங்களில் நடந்துகொள்கிறோம். ஆம், நம்மைச் சுற்றியுள்ள மக்களும் நம் வாழ்க்கைச் சூழலும் நம்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

2 ஆனால், உணவையும் உடையையும்விட முக்கியமான விஷயங்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, சில விஷயங்கள் சரியானவை என்றும் சில விஷயங்கள் தவறானவை என்றும் நமக்குக் கற்றுத்தரப்பட்டிருக்கின்றன. சரி-தவறு பற்றிய கருத்துக்கள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. நாம் செய்யும் தெரிவுகளில் நம்முடைய மனசாட்சியும் பெரும் பங்கு வகிக்கிறது. ‘திருச்சட்டம் இல்லாத புறதேசத்தார் இயல்பாகவே திருச்சட்டத்தின்படி நடக்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 2:14) அப்படியானால், ஒரு விஷயத்தின் பேரில் திட்டவட்டமான சட்டத்தைக் கடவுள் கொடுக்காதபோது, நாம் வாழும் இடத்தில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் நெறிகளையும் வழிகளையும் பின்பற்றலாமா?

3. உலகத்தின் நெறிகளைக் கிறிஸ்தவர்கள் பின்பற்றாததற்குக் காரணம் என்ன?

3 கிறிஸ்தவர்கள் இப்படிச் செய்வதில்லை; அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று: “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதி. 16:25) ஆம், நாம் அபூரணராக இருப்பதால், வாழ்க்கையைச் சிறந்த விதத்தில் நடத்தும் திறமை நமக்கு இல்லை. (நீதி. 28:26; எரே. 10:23) இரண்டு, “இந்த உலகத்தின் கடவுள்” சாத்தானே என்று பைபிள் சொல்கிறது. இந்த உலகத்தின் பாணிகளும் நெறிகளும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன. (2 கொ. 4:4; 1 யோ. 5:19) எனவே, யெகோவாவின் ஆசீர்வாதமும் தயவும் வேண்டுமானால் ரோமர் 12:2-ல் (வாசியுங்கள்) சொல்லப்பட்டுள்ள ஆலோசனைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

4. இந்தக் கட்டுரையில் நாம் எதைச் சிந்திப்போம்?

4 ரோமர் 12:2-லுள்ள மூன்று முக்கியமான குறிப்புகளை இந்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போம். அவை: (1)  நம்மை ஏன் ‘மாற்றிக்கொள்ள’ வேண்டும்? (2)  மாற்றிக்கொள்வதில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளது? (3) நம்மை எப்படி மாற்றிக்கொள்ளலாம்?

ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்?

5. ரோமர் 12:2-லுள்ள ஆலோசனையை பவுல் யாருக்கு எழுதினார்?

5 அப்போஸ்தலன் பவுல் கி.பி. 56-ல் ரோமருக்கு எழுதிய கடிதத்தை அங்கிருந்த பொதுமக்களுக்கு அல்ல, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கே எழுதினார். (ரோ. 1:7) அந்தக் கிறிஸ்தவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ‘இந்த உலகத்தின் பாணியின்படி நடப்பதை விட்டுவிட’ வேண்டும் என்றும் பவுல் வலியுறுத்தினார். “உலகத்தின் பாணி” என்பது ரோமிலிருந்த நெறிகள், பழக்கவழக்கங்கள், நடைபாங்கு போன்றவற்றை அர்த்தப்படுத்தின. இவற்றை அங்கிருந்த சகோதர சகோதரிகள் சிலர் பின்பற்றி வந்தார்கள். அதனால்தான் அதை “விட்டுவிடுங்கள்” என்று பவுல் சொன்னார். அப்படியானால், உலகத்தின் பாணி அவர்கள்மீது எப்படிச் செல்வாக்கு செலுத்தியது?

6, 7. பவுலின் காலத்திலிருந்த ரோம கிறிஸ்தவர்களுக்கு அங்கிருந்த சூழ்நிலை எப்படிச் சவாலாக இருந்தது?

6 இன்று, ரோமுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்குள்ள பாழடைந்த கோயில்கள், கல்லறைகள், நினைவுச் சின்னங்கள், வட்டரங்குகள் போன்றவற்றை பார்ப்பது வழக்கம். அவற்றில் சில முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை, பூர்வ ரோம சமுதாயத்தையும் அதன் மத பின்னணியையும் பற்றித் தெரிந்துகொள்ள உதவுகின்றன. அங்கே பிரபலமாக இருந்த வன்முறை விளையாட்டுகள், ரத போட்டிகள், நாடகங்கள், இசை ஆகியவற்றைப் பற்றி சரித்திரப் புத்தகங்களில் வாசிக்கிறோம்; அவற்றில் சில நாடகங்களும் இசையும் கீழ்த்தரமாக இருந்தன. ரோம் ஒரு வணிக மையமாகவும் திகழ்ந்தது; அதனால், மக்கள் பணம் சம்பாதிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்தது.—ரோ. 6:21; 1 பே. 4:3, 4.

7 ரோமில் ஏகப்பட்ட கோயில்கள் இருந்தன. அங்குள்ள மக்கள் எக்கச்சக்கமான தெய்வங்களை வணங்கி வந்தார்கள்; ஆனாலும், அந்தத் தெய்வங்களோடு எந்தவொரு நட்புறவும் அவர்களுக்கு இருக்கவில்லை. பிறப்பு, திருமணம், இறப்பு என எல்லாவற்றிற்கும் சடங்குகளைச் செய்வதுதான் அவர்களுடைய வழிபாட்டின் முக்கிய பாகமாக இருந்தது. அது அவர்களுடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருந்தது. அவற்றையெல்லாம் முற்றிலுமாக விட்டொழிப்பது ரோம கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு பெரிய சவாலாக இருந்திருக்கும்! அவர்களில் நிறைய பேர் அப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர்களே. உண்மை கிறிஸ்தவர்களாவதற்கு அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட தொடர்ந்து மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

8. இன்று கிறிஸ்தவர்களுக்கு இந்த உலகம் எப்படி ஆபத்தான ஓர் இடமாக இருக்கிறது?

8 அன்றைய ரோம உலகத்தைப் போலவே இன்றைய உலகமும் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தான ஓர் இடமாக இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், இந்த உலகத்தின் மனப்பான்மை எங்கும் பரவியிருக்கிறது. (எபேசியர் 2:2, 3-ஐயும் 1 யோவான் 2:16-ஐயும் வாசியுங்கள்.) உலகத்தின் ஆசைகள், சிந்தைகள், நெறிமுறைகள், ஒழுக்க நெறிகள் எல்லாமே நம்மீது சதா செல்வாக்கு செலுத்துவதால் நாம் இந்த உலகத்தின் பாகமாகிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, ‘இந்த உலகத்தின் பாணியின்படி நடப்பதை விட்டுவிட்டு’ உங்களை ‘மாற்றிக்கொள்ளுங்கள்’ என்ற அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிவது மிக முக்கியம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

மாற்றங்கள் தேவைப்படும் விஷயங்கள்

9. ஞானஸ்நானம் எடுப்பதற்கு அநேகர் என்ன மாற்றங்களைச் செய்கிறார்கள்?

9 ஒருவர் பைபிளைப் படித்து, கற்றுக்கொண்டதை பின்பற்றும்போது ஆன்மீக ரீதியில் முன்னேற ஆரம்பிக்கிறார். பொய் மதத்தை விட்டுவிட்டு, தன்னுடைய பழைய சுபாவத்தை மாற்றிக்கொண்டு, கிறிஸ்துவின் சுபாவத்தை வளர்த்துக்கொள்கிறார். (எபே. 4:22-24) ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்து, யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். இது யெகோவாவின் இருதயத்தை நிச்சயம் சந்தோஷப்படுத்தும். (நீதி. 27:11) ஆனால் ஒரு கேள்வி: இந்த மாற்றங்கள் மட்டும் போதுமா?

அநேகர் சாத்தானுடைய உலகைவிட்டு வெளியேறி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது (பாரா 9)

10. மாற்றம் செய்வது ஏன் முன்னேற்றம் செய்வதை மட்டுமே அர்த்தப்படுத்தாது?

10 மாற்றம் செய்வது என்பது முன்னேற்றம் செய்வதை மட்டுமே அர்த்தப்படுத்தாது. ரோமர் 12: 2-ல் சொல்லப்பட்டுள்ள “மாற்றப்படுவது” என்ற வார்த்தை, கடவுளுடைய சக்தியின் மூலம் நம்முடைய சிந்தையை புதுப்பிப்பதை அல்லது மாற்றுவதை அர்த்தப்படுத்துவதாக ஒரு பைபிள் அகராதி குறிப்பிடுகிறது. எனவே, ஒரு கிறிஸ்தவர் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை, கெட்ட பேச்சை, தகாத நடத்தையை விட்டுவிட்டார் என்பதற்காக அவர் மாறிவிட்டார் என்று சொல்லிவிட முடியாது. பைபிளைப் பற்றியே தெரியாத சிலரும்கூட இந்தக் கெட்ட காரியங்களைத் தவிர்க்கிறார்களே! அப்படியிருக்க, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மை மாற்றிக்கொள்ள, அதாவது நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

11. ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென பவுல் சொன்னார்?

11 “உங்கள் மனம் புதிதாக்கப்படுவதற்கும், அதன் மூலம் உங்கள் குணாதிசயம் மாற்றப்படுவதற்கும் இடங்கொடுங்கள்” என்று பவுல் எழுதினார். பொதுவாக, “மனம்” என்ற வார்த்தை, சிந்திக்கும் திறனைக் குறிக்கிறது. ஆனால் பைபிளில், மனம் என்ற வார்த்தை நம்முடைய மனச்சாய்வையும் மனப்பான்மையையும் பகுத்தறியும் திறனையும் குறிக்கிறது. ரோமருக்கு எழுதிய கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஏற்கத் தகாத சிந்தையுள்ள’ ஜனங்களைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். அவர்கள் “அநீதியும், பொல்லாத குணமும், கட்டுக்கடங்கா பேராசையும், தீமையும் நிறைந்தவர்களாக இருந்தார்கள்; பொறாமை, கொலைவெறி, வஞ்சகம், குரோதம் ஆகியவை நிரம்பியவர்களாகவும், சண்டை சச்சரவு செய்கிறவர்களாகவும்” இருந்தார்கள். (ரோ. 1:28-31) அப்படிப்பட்ட சூழலிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களிடம் ‘உங்களை மாற்றிக்கொண்டு, மனதைப் புதிதாக்குங்கள்’ என்று பவுல் சொன்னதன் காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

‘எல்லா விதமான . . . சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.’—எபே. 4:31

12. இன்று அநேகருடைய மனப்பான்மை எப்படி இருக்கிறது, கிறிஸ்தவர்களுக்கு இது எப்படி ஆபத்தாக இருக்கலாம்?

12 இன்று உலகிலுள்ள அநேகர் பவுல் குறிப்பிட்ட ஆட்களைப் போலவே இருக்கிறார்கள். ‘நீதிநெறிகளின்படி வாழ்வதெல்லாம் அந்தக் காலம், இப்படித்தான் வாழ வேண்டுமென வற்புறுத்த யாருக்கும் உரிமை இல்லை’ என அவர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை அவர்களுடைய விருப்பப்படி செய்யவே ஊக்கப்படுத்துகிறார்கள். எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருப்பதாகவும் அதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்பதாகவும் அவர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். கடவுள் பக்தியுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள்கூட தங்களுக்குச் சரியெனப் படுவதைச் செய்யவே விரும்புகிறார்கள்; கடவுள் சொல்கிறபடி நடக்க வேண்டியதில்லை என நினைக்கிறார்கள். (சங். 14:1) இந்த மனப்பான்மை கிறிஸ்தவர்களையும் தொற்றிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. கவனமாக இல்லையென்றால், கடவுளுடைய அமைப்பு தரும் அறிவுரைகளுக்கு நம் காதை அடைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, சபையின் ஏற்பாடுகளுக்கு ஒத்துப்போக மாட்டோம், நமக்கு ஏதாவது விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றிக் குறைகூற ஆரம்பிப்போம். பொழுதுபோக்கு, இன்டர்நெட், உயர்கல்வி போன்ற விஷயங்களில் கொடுக்கப்படும் வேதப்பூர்வ ஆலோசனையை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

13. நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஏன் நேர்மையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்?

13 இந்த உலகத்தின் பாணியின்படி நடந்துகொள்வதை விட்டுவிடுவதற்கு, நம்முடைய மனப்பான்மையை, உணர்ச்சிகளை, லட்சியங்களை, நெறிகளை நேர்மையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நாம் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்வதாக மற்றவர்கள் நம்மைப் பாராட்டினாலும், உண்மையில் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்குத்தான் தெரியும். பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதன்படி நடக்கும்போது மட்டுமே உண்மையிலேயே நம்மை மாற்றிக்கொண்டோம் என்றும் அதைத் தொடர்ந்து செய்கிறோம் என்றும் சொல்ல முடியும்.யாக்கோபு 1:23-25-ஐ வாசியுங்கள்.

மாற்றம் செய்வது எப்படி?

14. மாற்றங்களைச் செய்ய எது நமக்கு உதவும்?

14 நம்மை மாற்றிக்கொள்வதற்கு, நம் இருதயத்தின் ஆழத்தில் வேரூன்றியிருப்பவற்றை நீக்குவது அவசியம். இதைச் செய்ய எது நமக்கு உதவும்? பைபிளைப் படிக்கும்போது நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்வோம். அதற்கு நாம் பிரதிபலிக்கும் விதம் நம் இருதயத்தில் இருப்பவற்றை அப்படியே படம்பிடித்துக் காட்டிவிடும். அப்போது, நாம் ‘கடவுளுடைய பரிபூரண சித்தத்தின்படி’ நடக்க என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வோம்.—ரோ. 12:2; எபி. 4:12.

15. யெகோவா நம்மை வடிவமைக்கும்போது என்ன மாற்றம் ஏற்படுகிறது?

15 ஏசாயா 64:8-ஐ வாசியுங்கள். இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள சொல்லோவியம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தருகிறது. குயவராகிய யெகோவா, களிமண்ணான நம்மை எப்படி வனைகிறார்? அவர் நம்முடைய புறத்தோற்றத்தை மெருகேற்றுவதற்காக அல்ல, அகத்தோற்றத்தை மெருகேற்றுவதற்காகவே வனைகிறார், அதற்காக ஆன்மீக பயிற்சி அளிக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளும்போது, நம் அகத்தை, அதாவது நம் சிந்தையை, உணர்ச்சிகளை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம். உலகத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராட இது மிகவும் அவசியம். நம்மை வடிவமைப்பதற்காக யெகோவா என்ன செய்கிறார்?

16, 17. (அ) ஒரு தரமான மண்பாத்திரத்தை வனைய குயவர் என்ன செய்ய வேண்டுமென விளக்குங்கள். (ஆ) கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்க பாத்திரமாக மாற அவருடைய வார்த்தை நமக்கு எப்படி உதவுகிறது?

16 ஒரு தரமான மண்பாத்திரத்தைச் செய்ய சிறந்த களிமண் தேவை. இருந்தாலும், இன்னும் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதலில் சிறிது தண்ணீர் ஊற்றி கற்கள் போன்ற ஏதாவது இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். பிறகு, அதில் சரியான அளவு தண்ணீர் ஊற்றி குழைக்க வேண்டும். அப்போதுதான் அதை வனையும்போது நினைத்த மாதிரியான வடிவம் கிடைக்கும்.

17 மண்ணைச் சுத்தப்படுத்துவதற்காக மட்டுமல்ல, அதை நன்கு வனைவதற்காகவும் தண்ணீர் சேர்க்கப்படுகிறது; அப்போதுதான் மெல்லிய பாத்திரத்தைக்கூட வடிவமைக்க முடியும். கடவுளுடைய வார்த்தையும் இதே போன்ற காரியங்களையே நம்முடைய வாழ்க்கையில் செய்கிறது. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது நமக்குள் இருந்த பழைய சிந்தையை நீக்கி, கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்க பாத்திரமாக மாற உதவுகிறது. (எபே. 5:26) கடவுளுடைய வார்த்தையைத் தினமும் வாசிக்கவும் தவறாமல் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் அடிக்கடி நினைப்பூட்டப்படுகிறது. ஏன் அவ்வாறு உற்சாகப்படுத்தப்படுகிறோம்? அப்படிச் செய்தால்தான் யெகோவாவால் நம்மை வடிவமைக்க முடியும்.—சங். 1:2; அப். 17:11; எபி. 10:24, 25.

உங்களை மாற்றிக்கொள்ளும்போது பிரச்சினைகளை முன்பைவிட சுலபமாகச் சமாளிக்க முடியும் (பாரா 18)

18. (அ) கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு நம்மை மாற்றிக்கொள்வதற்கு தியானிப்பது ஏன் முக்கியம்? (ஆ) இதற்கு உதவும் சில கேள்விகள் யாவை?

18 கடவுளுடைய வார்த்தை நம்மை மாற்றுவதற்கு, தவறாமல் பைபிளை வாசித்து அதிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. நிறைய பேருக்கு பைபிளை அடிக்கடி வாசிக்கும் பழக்கம் இருப்பதால் அதிலுள்ள அநேக விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஒருவேளை, ஊழியத்தில் அப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். சிலர் பைபிள் வசனங்களை மனப்பாடமாகக்கூட சொல்வார்கள். * ஆனால், அது அவர்களுடைய சிந்தையையும் வாழ்க்கையையும் மாற்றுவதில்லை. ஏன்? கடவுளுடைய வார்த்தையை ஒருவர் ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்வதற்கு, அவர் தன்னுடைய இருதயத்தில் அதை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். ஆகவே, நாம் கற்றுக்கொள்வதைச் சிந்தித்துப் பார்க்க நேரம் செலவிட வேண்டும். நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இது வெறுமனே ஒரு மதப் போதனை அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறேனா? இதுதான் சத்தியம் என்பதை ஆதாரப்பூர்வமாக நம்புகிறேனா? கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குச் சொல்வதோடு என் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேனா? கற்றுக்கொள்கிறவற்றை யெகோவா என்னிடம் நேரடியாக சொல்கிற விஷயங்களாக ஏற்றுக்கொள்கிறேனா?’ இந்தக் கேள்விகளைச் சிந்திப்பதும் தியானிப்பதும் யெகோவாவிடம் நெருங்கி வர நமக்கு உதவும். அவர்மீதுள்ள அன்பை அதிகரிக்கும். கற்றுக்கொண்ட விஷயங்கள் நம் இருதயத்தைத் தொடும்போது யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும் விதத்தில் மாற்றங்களைச் செய்வோம்.—நீதி. 4:23; லூக். 6:45.

19, 20. ஆசீர்வாதங்களை அள்ள என்ன பைபிள் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்?

19 “பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு, . . . புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்; அதாவது, திருத்தமான அறிவின் மூலம் [உங்களை] . . . தொடர்ந்து புதிதாக்குங்கள்” என்று பவுல் சொன்னதை நாம் ஓரளவுக்கு செய்திருக்கிறோம். (கொலோ. 3:9, 10) கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசிப்பதும் தியானிப்பதும் அதைத் தொடர்ந்து செய்ய நம்மைத் தூண்டும். ஆம், கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொண்டு அதைப் பின்பற்றும்போது புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள முடியும். சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும்.

20 “உங்களுக்கு இருந்த இச்சைகளின்படி நடப்பதை விட்டுவிட்டு, கீழ்ப்படிகிற பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்; . . . உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தராக இருங்கள்” என்று பேதுரு நமக்கு நினைப்பூட்டுகிறார். (1 பே. 1:14, 15) பழைய சிந்தையையும் மனப்பான்மையையும் விட்டுவிட்டு நம்மை மாற்றிக்கொள்வதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யும்போது ஆசீர்வாதங்களை அள்ளலாம். இதைக் குறித்து அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ காவற்கோபுரம் பிப்ரவரி 1, 1994, பக்கம் 9, பாரா 7-லுள்ள உதாரணத்தைப் பாருங்கள்.