Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுடன் நம் பந்தத்தைப் பலப்படுத்தும் பயனியர் சேவை

யெகோவாவுடன் நம் பந்தத்தைப் பலப்படுத்தும் பயனியர் சேவை

“நம்முடைய தேவனைக் கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது.”—சங். 147:1.

1, 2. (அ) பாசத்துக்கும் நேசத்துக்குமுரிய ஒருவரைப் பற்றிச் சிந்திப்பதாலும் பேசுவதாலும் கிடைக்கிற பலன் என்ன? (முதல் படத்தைக் காண்க.) (ஆ) என்னென்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

 பாசத்துக்கும் நேசத்துக்குமுரிய ஒருவரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதும் பேசிக் கொண்டிருப்பதும் அவருடன் நம் பந்தத்தைப் பலப்படுத்தும். அதேபோல், யெகோவா தேவனைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தால் அவருடன் நம் பந்தம் பலப்படும். தாவீது மேய்ப்பனாக இருந்தபோது, நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பல இரவுகள் பார்த்து ரசித்தார், தன்னிகரற்ற படைப்பாளரைப் பற்றித் தியானித்தார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று எழுதினார். (சங். 8:3, 4) அடையாளப்பூர்வ இஸ்ரவேலருக்காக யெகோவா வைத்திருந்த நோக்கம் அற்புதமாய் நிறைவேறி வருவதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் விளக்கிய பின்பு, “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை!” என்று வியப்புடன் சொன்னார்.—ரோ. 11:17-26, 33.

2 நாம் ஊழியத்தில் ஈடுபடும்போது, யெகோவாவைப் பற்றி யோசிக்கிறோம், பேசுகிறோம். இதனால் நமக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஊழியத்தில் அதிகமதிகமாக ஈடுபடும்போது கடவுள்மீது நாம் வைத்திருக்கிற அன்பு ஆழமாகிறது; முழுநேர ஊழியர்கள் பலர் இதை அனுபவப்பூர்வமாய் அறிந்திருக்கிறார்கள். தற்போது நீங்கள் முழுநேர ஊழியம் செய்துவந்தாலும் சரி அதற்காக முயன்றுவந்தாலும் சரி, ‘முழுநேர ஊழியத்தில் இறங்குவதால் யெகோவாவுடன் என் பந்தம் எப்படிப் பலப்படும்?’ எனக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் ஒரு பயனியராய் ஆகாதிருந்தால், ‘அதற்காக நான் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். முழுநேர சேவை செய்யும்போது கடவுளுடன் நம் பந்தம் எப்படியெல்லாம் பலப்படும் என்பதை இப்போது சிந்திப்போம்.

முழுநேர சேவையும் கடவுளுடன் நம் பந்தமும்

3. யெகோவாவின் அரசாங்கம் தரும் ஆசீர்வாதங்களைப் பற்றி ஊழியத்தில் பேசுவதால் கிடைக்கிற நன்மை என்ன?

3 யெகோவாவின் அரசாங்கம் தரும் ஆசீர்வாதங்களைப் பற்றிப் பேசுவதால் அவரிடம் நெருங்கிவருகிறோம். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது எந்த வசனத்தைப் பயன்படுத்த விரும்புவீர்கள்? சங்கீதம் 37:10, 11; தானியேல் 2:44; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4 ஆகியவற்றில் எது உங்களுக்கு ரொம்பப் பிடித்த வசனம்? இப்படிப்பட்ட வாக்குறுதிகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போதெல்லாம், நம் கடவுள் ஒரு கொடைவள்ளல்... “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், தலைசிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” அவரிடமிருந்து வருகின்றன... என்பது நம்முடைய நினைவுக்கு வருகிறது. இதனால் நாம் அவரிடம் இன்னும் நெருங்கிவிடுகிறோம்.—யாக். 1:17.

4. ஆன்மீக ரீதியில் மக்கள் பரிதாபமாக இருப்பதைப் பார்க்கும்போது கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்?

4 மக்கள் ஆன்மீக ரீதியில் பரிதாபமாக இருப்பதைப் பார்க்கும்போது சத்தியத்தின் மீது நம் நன்றியுணர்வு பொங்குகிறது. வாழ்வில் வெற்றி பெறவும் சந்தோஷம் காணவும் இந்த உலக மக்களுக்கு நம்பகமான வழிகாட்டி எதுவும் இல்லை. பலர் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படுகிறார்கள், நம்பிக்கையில்லாமல் தவிக்கிறார்கள், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடி அலைகிறார்கள். மதப்பற்றுள்ள பலரும்கூட பைபிளைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கிறார்கள். பூர்வகால நினிவே மக்களைப் போலத்தான் இருக்கிறார்கள். (யோனா 4:11-ஐ வாசியுங்கள்.) நாம் ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடும்போது, யெகோவாவின் மக்கள் ஆன்மீகச் செழிப்பில் மிதப்பதையும் உலக மக்கள் ஆன்மீக வறுமையில் வாடுவதையும் இன்னும் தெளிவாகப் பார்க்கிறோம். (ஏசா. 65:13) யெகோவா நம்முடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், எல்லா மக்களுமே ஆன்மீகப் புத்துணர்ச்சியையும் அருமையான நம்பிக்கையையும் பெற வாய்ப்பு தருகிறார்; அவர் எவ்வளவு நல்லவர் என்பதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது.—வெளி. 22:17.

5. மற்றவர்களுக்கு ஆன்மீக ரீதியில் உதவும்போது நம்முடைய பிரச்சினைகள் நமக்கு எப்படித் தெரியும்?

5 ஆன்மீக ரீதியில் மற்றவர்களுக்கு உதவும்போது நம் சொந்த பிரச்சினைகளில் மூழ்கிவிடாமல் இருக்க முடிகிறது. இது உண்மை என்பதை திரிஷா புரிந்துகொண்டாள்; அவள் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறாள்; அவளுடைய பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டபோது அவள் மனதளவில் சுக்குநூறாக உடைந்துபோனாள். ஒருநாள் அவள் மிகவும் சோகமாக இருந்ததால், வீட்டைவிட்டு வெளியே போகவே பிடிக்கவில்லை. இருந்தாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்தச் சென்றாள்; அந்தப் பிள்ளைகளுடைய வீட்டு நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. அவர்களுடைய அப்பா அவர்களை அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார். அவர்களுடைய அண்ணன் அவர்களைக் கொடூரமாக நடத்தினான். திரிஷா சொல்கிறாள்: “அவங்களோட பிரச்சினையையும் கஷ்டத்தையும் பார்த்தபோதுதான் என்னோட பிரச்சினை ஒன்னுமே இல்லனு தோனிச்சு. பைபிளிலிருந்து சொல்லிக் கொடுத்தப்ப அந்தக் குட்டிப் பிள்ளைகளோட முகத்தில அவ்வளவு பிரகாசம், அவங்களுக்கு ஒரே குஷி, சிரிப்பு. அந்தக் குழந்தைங்க யெகோவா தந்த பரிசு, அதுவும் அந்த நாள்ல எனக்கு அப்படித்தான் ரொம்பவே தோனிச்சு.”

6, 7. (அ) பைபிள் சத்தியங்களைக் கற்பிக்கும்போது நம் விசுவாசம் எப்படிப் பலப்படுகிறது? (ஆ) பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேறுவதைப் பார்க்கும்போது கடவுளுடைய ஞானத்தின் மதிப்பை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்?

6 பைபிளைக் கற்பிக்கும்போது நம் விசுவாசம் பலப்படுகிறது. ஊருக்குத்தான் உபதேசம் என வாழ்ந்த சில யூதர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “மற்றவர்களுக்குக் கற்பிக்கிற நீங்களே உங்களுக்குக் கற்பிக்காமல் இருக்கலாமா?” (ரோ. 2:21) ஆனால், இன்றைய பயனியர்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள்! பொதுவாக, சத்தியத்தைக் கற்பிப்பதற்கு... பைபிள் படிப்புகள் நடத்துவதற்கு... அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதைத் திறம்படச் செய்வதற்காக ஒவ்வொரு படிப்புக்கும் நன்றாகத் தயாரிக்க வேண்டியிருக்கிறது; ஒருவேளை மாணவர் கேள்விகள் கேட்டால் அதற்காக ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஜனீன் என்ற பயனியர் சொல்கிறாள்: “சத்தியத்தை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறப்போ அது என்னோட மனசுலயும் இதயத்துலயும் ஆழமா பதிஞ்சிடுது. என்னோட விசுவாசமும் வளர்ந்துட்டே இருக்கு.”

7 பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேறுவதைப் பார்க்கும்போது கடவுளுடைய ஞானத்தின் மதிப்பை நாம் புரிந்துகொள்கிறோம். (ஏசா. 48:17, 18) இதனால் நம் வாழ்க்கையில் அந்த நியமங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்று தீர்மானமாக இருக்கிறோம். அட்ரியானா என்ற மற்றொரு பயனியர் சொல்கிறாள்: “மனுஷங்க அவங்கவங்க சொந்த புத்தியில நடந்தா வாழ்க்கை தாறுமாறா ஆயிடும். ஆனா யெகோவா தர்ற ஞானத்தின்படி நடந்தா நல்ல பலன்கள் உடனே கிடைக்கும்.” அதேபோல், பில் என்ற பயனியர் சொல்கிறார்: “ஒருத்தரு தன்ன மாத்திக்க சொந்தமா முயற்சி பண்ணும்போது தோல்விதான் மிஞ்சுது; ஆனா அதே நபர் யெகோவாவோட உதவியால மாறுவத பாக்கும்போது ஆச்சரியமா இருக்கு.”

8. சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது நாம் எப்படி நன்மை பெறுகிறோம்?

8 சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது ஆன்மீக ரீதியில் தெம்படைகிறோம். (நீதி. 13:20) பெரும்பாலும் பயனிர்கள் சக ஊழியர்களோடு சேர்ந்து நிறைய நேரம் ஊழியம் செய்கிறார்கள். இதனால், “ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற” நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. (ரோ. 1:12; நீதிமொழிகள் 27:17-ஐ வாசியுங்கள்.) லிசா என்ற பயனியர் சொல்கிறாள்: “வேல செய்யற இடத்துல போட்டியும் பொறாமையும்தான் இருக்கும். தினமும் நம்பள பத்தி மத்தவங்க கிசுகிசுக்கிறதையும் கேவலமா பேசறதையும் சகிக்க வேண்டியிருக்கு. மத்தவங்க எக்கேடு கெட்டுப்போனாலும் சரி, தான் முன்னுக்கு வரனும்னுதான் எல்லாரும் குறியா இருப்பாங்க. ஒரு கிறிஸ்தவரா ஒழுக்கமா நடக்கறத பாத்து சிலசமயம் கேலி கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, நம்ம சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்யறப்ப மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கும். அன்னைக்கு ஊழியம் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது, உடம்புக்கு எவ்வளோ களைப்பா இருந்தாலும் சரி, மனசுக்கு ரொம்ப தெம்பா இருக்கும்.”

9. மணத்துணையோடு சேர்ந்து பயனியர் ஊழியம் செய்யும்போது திருமண பந்தம் எப்படிப் பலப்படுகிறது?

9 மணத்துணையோடு சேர்ந்து பயனியர் ஊழியம் செய்வது திருமண பந்தத்தைப் பலப்படுத்துகிறது. (பிர. 4:12) கணவரோடு சேர்ந்து பயனியர் ஊழியம் செய்கிற மேடிலைன் என்ற சகோதரி சொல்கிறாள்: “ஒவ்வொரு நாளும் ஊழியத்தில எங்களுக்கு கிடைச்ச அனுபவங்கள பத்தி பேசுவோம்; சேர்ந்து பைபிள் வாசிக்கும்போது படிச்ச ஒரு வசனத்த ஊழியத்தில எப்படி பொறுத்தலாம்னு கலந்துபேசுவோம். ரொம்ப வருஷமா நாங்க ஒண்ணுசேர்ந்து பயனியர் செய்யறதால ஒருத்தருக்கொருத்தர் நெருங்கிவருகிறோம்.” அதேபோல, திரிஷா சொல்லும்போது, “கடன் வாங்கக் கூடாதுங்கிறதுல நாங்க ரெண்டு பேருமே கவனமா இருக்கோம். அதனால பண விஷயத்துக்காக சண்ட போட மாட்டோம். ஊழியத்துக்காக ரெண்டு பேருமே ஒரே மாதிரி அட்டவணை போட்டிருக்கோம்; மறுசந்திப்புக்கும் பைபிள் படிப்புக்கும் நாங்க சேர்ந்தே போவோம்; நாங்க ரெண்டு பேரும் மனசளவில நெருங்கி வர்றதுக்கு... கடவுள்கிட்ட நெருங்கி வர்றதுக்கு... இது உதவுது.”

முழுநேர ஊழியம் ஆத்ம திருப்தியைத் தருகிறது (பாரா 9)

10. நாம் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுத்து அவருடைய ஆதரவை அனுபவிக்கும்போது அவர் மீதுள்ள நம் நம்பிக்கை எப்படிப் பலப்படுகிறது?

10 கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்கும்போது... யெகோவாவின் ஆதரவை அனுபவிக்கும்போது... நம் ஜெபத்துக்கு அவர் பதிலளிப்பதைப் பார்க்கும்போது... அவர்மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை அதிகரிக்கிறது. உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருமே யெகோவாமீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பயனியர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைத்தால்தான் அந்தச் சேவையில் நிலைத்திருக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். (மத்தேயு 6:30-34-ஐ வாசியுங்கள்.) பயனியராகவும் உதவி வட்டாரக் கண்காணியாகவும் சேவை செய்கிற கர்ட் என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். ஒருசமயம் அவருடைய வீட்டிலிருந்து இரண்டரை மணிநேர தூரத்தில் இருந்த ஒரு சபையை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. அவரும் அவருடைய மனைவியும் (இவரும் ஒரு பயனியர்) அங்கு போய்த் திரும்பி வருமளவுக்கு காரில் பெட்ரோல் இல்லை; சம்பளமும் ஒரு வாரம் கழித்துதான் அவருக்குக் கிடைக்கும். “போவதா வேண்டாமானு எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு” என கர்ட் சொல்கிறார். ஜெபம் செய்த பின்பு, தங்களுடைய தேவைகளை யெகோவா எப்படியும் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை மனதில் ஏற்பட்டதால் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் கிளம்பத் தயாரானபோது, ஒரு சகோதரி அவர்களுக்குப் போன் செய்து, ஒரு அன்பளிப்பு தருவதாகச் சொன்னார். அவர் அன்பளிப்பாய்க் கொடுத்த பணம் பயணத்தை முடித்துத் திரும்பி வருவதற்குப் போதுமானதாய் இருந்தது. “இந்த மாதிரி அனுபவம் அடிக்கடி வருகிறப்போ யெகோவாதான் நமக்குத் தேவையானத தர்றார்னு நல்லா தெரியும்” என்று கர்ட் சொல்கிறார்.

11. பயனியர்கள் அனுபவிக்கும் சில ஆசீர்வாதங்கள் என்ன?

11 யெகோவாவுக்கு அதிகமாக ஊழியம் செய்யும்போதும் அவரிடம் அதிகமாக நெருங்கும்போதும் அளவிலா ஆசீர்வாதங்கள் கிடைப்பதாக பயனியர்கள் சொல்கிறார்கள். (உபா. 28:2) ஆனாலும், பயனியர் ஊழியத்தில் பல சவால்கள் இருக்கின்றன. அபூரணத்தின் காரணமாகவும் பொல்லாத உலகத்தின் காரணமாகவும் நாம் அனைவரும் துன்பப்படுகிறோம். சிலசமயங்களில், பிரச்சினைகளின் காரணமாக பயனியர்கள் தங்கள் ஊழியத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருக்கலாம். என்றாலும், அவற்றைப் பெரும்பாலும் தீர்க்க முடியும், சொல்லப்போனால் தவிர்க்கவும் முடியும். இந்த விசேஷ ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய பயனியர்களுக்கு எது உதவும்?

முழுநேர ஊழியத்தில் நிலைத்திருத்தல்

12, 13. (அ) மணிநேரத்தை எட்டுவது ஒரு பயனியருக்குப் பெரும்பாடாக இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்? (ஆ) பைபிள் வாசிப்பு, தனிப்பட்ட படிப்பு, தியானம் ஆகியவற்றுக்கு நேரம் செலவிடுவது ஏன் முக்கியம்?

12 பயனியர்கள் பெரும்பாலும் பம்பரமாகச் சுழல வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் செய்து முடிக்க அவர்கள் திக்குமுக்காடலாம். ஆகவே, நன்கு திட்டமிட்டுச் செய்வது அவசியம். (1 கொ. 14:33, 40) மணிநேரத்தை எட்டுவது ஒரு பயனியருக்குப் பெரும்பாடாக இருந்தால் நேரத்தை எப்படிச் செலவிடுகிறார் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (எபே. 5:15, 16) ‘பொழுதுபோக்குக்காக எவ்வளவு நேரம் செலவழிக்கிறேன்? நான் வேலை செய்யும் நேரத்தைக் குறைக்க முடியுமா? வீணான காரியங்களுக்கு நிறைய நேரத்தைச் செலவழிக்கிறேனா?’ என்றெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் போட்ட அட்டவணையோடு ஏதாவது புதிது புதிதாக சேர்ந்துகொண்டே இருக்கும் என்பதை நாம் எல்லோரும் ஒத்துக்கொள்வோம். முழுநேர ஊழியர்கள் அடிக்கடி இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

13 பயனியர்கள் தினமும் பைபிள் வாசிக்க வேண்டும், தனிப்பட்ட படிப்பு படிக்க வேண்டும், தியானிக்க வேண்டும். இந்த முக்கியமான காரியங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை முக்கியமற்ற காரியங்கள் எடுத்துக்கொள்ளாதபடி கவனமாயிருக்க வேண்டும். (பிலி. 1:10) உதாரணத்துக்கு, ஒரு பயனியர் நாள்முழுக்க ஊழியம் செய்துவிட்டு வீடு திரும்புகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். மாலையில் கூட்டத்துக்குத் தயாரிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், முதலில் தனக்கு வந்திருக்கும் கடிதங்களைப் படிக்கிறார். அதன்பின் கம்ப்யூட்டரை ஆன் செய்து ஈமெயில்களை வாசிக்கிறார், பதில் அனுப்புகிறார். பின்பு, தான் வாங்க விரும்பும் பொருளின் விலை குறைந்திருக்கிறதா என வெப்சைட்டில் அலசிப் பார்க்கிறார். அப்படியே இரண்டு மணிநேரம் பறந்துவிடுகிறது. மொத்தத்தில், நினைத்தபடி கூட்டத்துக்குத் தயாரிக்க தொடங்கக்கூட இல்லை. இது ஒரு பிரச்சினை என்று ஏன் சொல்லலாம்? ஒரு விளையாட்டு வீரர் தனது துறையில் நீடிக்க வேண்டுமானால் ஊட்டச்சத்துள்ள உணவைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதேபோல் பயனியர்கள் தனிப்பட்ட படிப்புக்காக நல்ல அட்டவணைபோட்டு தவறாமல் படித்தால்தான் முழுநேர ஊழியத்தில் நிலைத்திருக்க முடியும்.—1 தீ. 4:16.

14, 15. (அ) பயனியர்கள் ஏன் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும்? (ஆ) பிரச்சினைகளைச் சந்திக்கும்போது பயனியர்கள் என்ன செய்ய வேண்டும்?

14 வெற்றிகரமான பயனியர்கள் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார்கள். கண்களைத் தெளிவாக வைக்கும்படி இயேசு தம் சீடர்களுக்குச் சொன்னார். (மத். 6:22) கவனச்சிதறல் இல்லாமல் ஊழியத்தைச் செய்து முடிப்பதற்காக அவரேகூட எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். “குள்ளநரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குத் தங்குமிடங்களும் உள்ளன, மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்று சொன்னார். (மத். 8:20) இயேசுவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள விரும்புகிற பயனியர் ஒரு விஷயத்தை மனதில் வைக்க வேண்டும்: பொருள் அதிகமாய்ச் சேரச் சேர அவற்றைப் பாதுகாக்க... பராமரிக்க... மாற்ற... அதிக நேரமும் பணமும் செலவழிக்க வேண்டியிருக்கும்.

15 ஏதோ விசேஷத் தகுதியோ திறமையோ இருப்பதால்தான் முழுநேர ஊழியம் செய்யும் பாக்கியம் கிடைத்திருப்பதாக பயனியர்கள் நினைப்பதில்லை. எந்தவொரு திறமையும் விசேஷப் பொறுப்பும் யெகோவாவின் அளவற்ற கருணையால்தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, பயனியர் ஊழியத்தில் நிலைத்திருக்க ஒவ்வொருவரும் யெகோவாமீது சார்ந்திருக்க வேண்டும். (பிலி. 4:13) பிரச்சினைகளும் கஷ்டங்களும் வரும்தான். (சங். 34:19) அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பயனியர்கள் வழிநடத்துதலுக்காக யெகோவாவை நாட வேண்டும். சட்டென பயனியர் ஊழியத்தை நிறுத்திவிடுவதற்குப் பதிலாகத் தங்களுக்கு உதவும் வாய்ப்பை யெகோவாவுக்குத் தர வேண்டும். (சங்கீதம் 37:5-ஐ வாசியுங்கள்.) கரிசனைமிக்க பரலோகத் தகப்பனின் அன்பான உதவியை அவர்கள் ருசிக்கும்போது அவரிடம் நெருங்கிவருவார்கள்.—ஏசா. 41:10.

நீங்கள் பயனியர் சேவை செய்ய முடியுமா?

16. பயனியர் சேவையை ஆரம்பிக்க விரும்பினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

16 முழுநேர ஊழியர்களைப் போல் நீங்களும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க விரும்பினால் உங்கள் ஆசையை யெகோவாவிடம் சொல்லுங்கள். (1 யோ. 5:14, 15) தற்போது பயனியர் சேவை செய்கிறவர்களிடம் பேசுங்கள். பயனியர் ஊழியத்தில் அடியெடுத்து வைக்க இலக்குகள் வையுங்கள். கீத், எரிக்கா தம்பதியர் இதைத்தான் செய்தார்கள். அவர்கள் இருவருமே வேலை பார்த்துவந்தார்கள். அவர்களுடைய வயதிலுள்ள தம்பதியர்களைப் போலவே அவர்களும் திருமணம் செய்த கையோடு ஒரு வீடும் காரும் வாங்கினார்கள். “இதெல்லாம் இருந்தால் நிம்மதியா திருப்தியா வாழலாம்னு நினைச்சோம். ஆனா அப்படி எதுவும் நடக்கல” என்று அவர்கள் சொல்கிறார்கள். வேலை பறிபோனதும் கீத் துணைப் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். “ஊழியத்தில் கிடைக்கிற சந்தோஷமே தனி... பயனியர் சேவை செய்தப்பதான் எனக்கு அது புரிஞ்சது” என்று அவர் சொல்கிறார். பயனியர் சேவை செய்யும் இன்னொரு தம்பதியின் நட்பு அவர்களுக்குக் கிடைத்தது. எளிமையான வாழ்க்கை வாழும்போதும் பயனியர் ஊழியம் செய்யும்போதும் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அந்தத் தம்பதி அவர்களுக்கு உதவினார்கள். அதன்பின் கீத்தும் எரிக்காவும் என்ன செய்தார்கள்? “நாங்க வைச்ச ஆன்மீக இலக்குகளை ஒரு பேப்பரில் எழுதி அதை ஃப்ரிட்ஜில் ஒட்டிவைச்சோம். ஒவ்வொரு இலக்காக எட்ட எட்ட அதை டிக் செய்துட்டே வந்தோம்” என்று சொல்கிறார்கள். ஒருநாள் அவர்களும் பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்க முடிந்தது.

17. பயனியர் ஊழியம் ஆரம்பிக்க உங்கள் அட்டவணையை அல்லது வாழ்க்கைப் பாணியை மாற்றுவது ஏன் ஞானமானது?

17 உங்களால் பயனியராக முடியுமா? இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் ஊழியத்தில் இன்னும் மும்முரமாய் ஈடுபடுவதன் மூலம் யெகோவாவிடம் இன்னும் நெருங்கிவர முழுமுயற்சி செய்யுங்கள். ஜெபம் செய்துவிட்டு யோசித்துப் பார்த்தால் உங்கள் அட்டவணையில் அல்லது வாழ்க்கைப் பாணியில் சில மாற்றங்களைச் செய்து பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். பயனியர் ஊழியத்திற்காக நீங்கள் தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தாலும், அள்ள அள்ளக் குறையாத சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். உங்களுடைய விருப்பங்களைவிட கடவுளுடைய விருப்பங்களுக்கு முதலிடம் கொடுக்கும்போது ஆத்ம திருப்தியைக் காண்பீர்கள். (மத். 6:33) அடுத்தவர்களுக்குக் கொடுப்பதால் வரும் அளவில்லா ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். அதுமட்டுமல்ல, யெகோவாவைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் நிறைய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அதனால் கடவுள்மீது உங்களுடைய அன்பு பெருகும், அவருடைய உள்ளமும் குளிரும்.