Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

யோவான் 11:35 குறிப்பிடுகிறபடி, லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன் இயேசு ஏன் கண்ணீர் விட்டார்?

அன்பானவர்கள் யாராவது இறந்துபோனால், அவர்களைப் பிரிந்த துக்கத்தில் நாம் கண்ணீர்விட்டு அழுவது இயல்புதான். லாசரு இறந்த சமயத்தில், இயேசுவும்கூட கண்ணீர்விட்டு அழுதார். ஆனால், லாசரு இறந்ததற்காக அல்ல, மாறாக அவரை இழந்த துக்கத்தில் வாடியவர்கள் மீதிருந்த கரிசனையால்தான் அழுதார். யோவானின் பதிவிலுள்ள சூழமைவு இதைக் காட்டுகிறது.—யோவா. 11:36.

லாசரு வியாதியாக இருந்ததை இயேசு கேள்விப்பட்டபோது அவரைக் குணப்படுத்துவதற்காக உடனடியாக அங்கு செல்லவில்லை. “லாசரு நோய்வாய்ப்பட்டிருப்பதைக் கேட்ட பின்பும் [இயேசு] தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாட்கள் தங்கினார்” என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 11:6) இயேசு ஏன் தாமதித்தார்? அதற்கு ஒரு காரணம் இருந்தது. “இந்த நோயின் இறுதிமுடிவில் மரணமல்ல, கடவுளுக்கு மகிமையே உண்டாகும்; இதன் மூலம் மனிதகுமாரன் மகிமைப்படுத்தப்படுவார்” என்று அவர் சொன்னார். (யோவா. 11:4) லாசருவுக்கு வந்த வியாதி மரணத்தில் ‘முடிவு’ பெற வேண்டும் என்பதல்ல, மாறாக அவருடைய மரணம் ‘கடவுளுக்கு மகிமை உண்டாக்க’ வேண்டும் என்பதே இயேசுவின் நோக்கம். எப்படி? கல்லறையில் வைக்கப்பட்டிருந்த தம்முடைய ஆருயிர் நண்பனை உயிர்த்தெழுப்புவதன் மூலம் வியப்பூட்டும் ஓர் அற்புதத்தைச் செய்யவிருந்தார்.

இதைக் குறித்து தம்முடைய சீடர்களிடம் பேசும்போது மரணத்தைத் தூக்கத்திற்கு ஒப்பிட்டார். “லாசரு தூங்குகிறான், அவனை எழுப்புவதற்காக நான் அங்கு போகப் போகிறேன்” என்றார். (யோவா. 11:11) இயேசுவைப் பொறுத்ததில், லாசருவை மரணத்திலிருந்து எழுப்புவது, தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஓர் அப்பா தட்டி எழுப்புவது போலவே இருந்தது. எனவே, லாசரு இறந்ததை நினைத்து இயேசு வேதனைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

அப்படியானால், இயேசு கண்ணீர்விட்டதற்குக் காரணம் என்ன? இதற்கும் அந்தச் சூழமைவு பதிலளிக்கிறது. லாசருவின் சகோதரியான மரியாளும் மற்றவர்களும் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்து, அவர் “உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார்.” அவர்களுடைய வேதனை இயேசுவின் மனதை அந்தளவு பாதித்ததாலேயே “உள்ளம் குமுறினார்.” அதனால்தான் “இயேசு கண்ணீர்விட்டார்.” ஆம், தம்முடைய அன்பு நண்பர்கள் துக்கத்தில் துவண்டு போயிருந்ததைப் பார்த்தது இயேசுவுக்கு தாங்க முடியாத வேதனையைத் தந்தது.—யோவா. 11:33, 35.

நம்முடைய அன்பானவர்களைப் புதிய உலகத்தில் பூரண சுகத்தோடு மீண்டும் உயிர்த்தெழுப்ப இயேசுவுக்குச் சக்தியும் திறமையும் இருப்பதை இப்பதிவு காட்டுகிறது. மேலும், பிரியமானவர்களை மரணத்தில் பறிகொடுத்துத் தவிப்போர்மீது இயேசுவுக்கு அனுதாபம் இருப்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. துக்கத்தில் இருப்பவர்களுக்கு கரிசனை காட்ட வேண்டும் என்ற பாடத்தையும் இப்பதிவு புகட்டுகிறது.

லாசருவை உயிர்த்தெழுப்பப் போவதைப்பற்றி இயேசு அறிந்திருந்தார். என்றாலும், தம்முடைய நண்பர்கள்மீது ஆழமான அன்பும் கரிசனையும் இருந்ததால் அவர் கண்ணீர்விட்டார். அதேபோல், நமக்கும் மற்றவர்கள்மீது அனுதாபம் இருந்தால் ‘அழுகிறவர்களோடு நாமும் அழுவோம்.’ (ரோ. 12:15) அப்படி அழுவதால் உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் நமக்கு விசுவாசம் இல்லை என்று அர்த்தமாகிவிடாது. ஆகவே, லாசருவை உயிர்த்தெழுப்பப் போகிறோம் என்று தெரிந்திருந்தும், துக்கத்திலிருந்தவர்கள் மீதிருந்த கரிசனையால் இயேசு கண்ணீர்விட்டது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி.