Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவாவைச் சார்ந்திருந்ததால் ஆசீர்வாதத்தை அனுபவித்தோம்

யெகோவாவைச் சார்ந்திருந்ததால் ஆசீர்வாதத்தை அனுபவித்தோம்

வாழ்க்கை என்பது நிச்சயமற்றது; அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் கஷ்டமாகக்கூட இருக்கலாம். ஆனால், தங்களுடைய சுய புத்தியின்மீது சார்ந்திராமல் யெகோவாமீது முழுமையாக சார்ந்திருப்பவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். எங்களுடைய நீண்ட கால வாழ்க்கையில் நானும் என் மனைவியும் கண்ட உண்மை இது. எங்களுடைய கதையைக் கொஞ்சம் சொல்கிறேன், கேளுங்கள்.

1919-ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள சீடர் பாயிண்ட், ஒஹாயோவில் நடந்த பைபிள் மாணாக்கர்களுடைய சர்வதேச மாநாட்டில்தான் என்னுடைய அப்பாவும் அம்மாவும் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள். அதே வருடத்தின் கடைசியில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். 1922-ஆம் ஆண்டு நான் பிறந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் தம்பி பால் பிறந்தான். என் மனைவி கிரேஸ், 1930-ஆம் ஆண்டு பிறந்தாள். அவளுடைய அப்பா ராய் ஹாவல், அம்மா ரூத் இருவருமே பைபிள் மாணாக்கர்களாக வளர்க்கப்பட்டவர்கள். அவளுடைய தாத்தா பாட்டியும்கூட பைபிள் மாணாக்கர்களாக இருந்தார்கள்; சகோதரர் சார்ல்ஸ் டேஸ் ரஸலின் நண்பர்களாகவும் இருந்தார்கள்.

கிரேஸை 1947-ல் சந்தித்தேன். நாங்கள் இருவரும் ஜூலை 16, 1949-ல் மணம் செய்துகொண்டோம். திருமணத்துக்கு முன்பே எங்களுடைய எதிர்காலத் திட்டங்களைப் பற்றி மனந்திறந்து பேசினோம். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் முழு நேர ஊழியம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அக்டோபர் 1, 1950-ல் பயனியர் சேவையை ஆரம்பித்தோம். 1952-ஆம் ஆண்டு, வட்டார ஊழியம் செய்ய அழைக்கப்பட்டோம்.

வட்டார ஊழியமும் கிலியட் பயிற்சியும்

இந்தப் புதிய நியமிப்பைச் சிறப்பாகச் செய்வதற்கு நாங்கள் இருவருமே நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக அனுபவமிக்க சகோதரர்களிடமிருந்து உதவி பெற்றேன்; கிரேஸூக்கும் ஏற்பாடு செய்தேன். பயணக் கண்காணியாகச் சேவை செய்த என்னுடைய நீண்டகால குடும்ப நண்பர் மார்வன் ஹோலினை அணுகி, “கிரேஸ் சின்ன பொண்ணு, அவளுக்கு அந்தளவுக்கு அனுபவம் இல்ல. அவளுக்கு கற்றுக்கொடுக்குறதுக்கு யாராவது இருந்தா சொல்லுங்களேன்” என்று கேட்டேன். “எட்னா விங்க்கள்-னு ஒரு சகோதரி இருக்காங்க, பயனியர் ஊழியத்தில கரைகண்டவங்க, கிரேஸூக்கு ரொம்ப உதவியா இருப்பாங்க” என்று சொன்னார். பிற்பாடு எட்னாவைப் பற்றி கிரேஸ் இப்படிச் சொன்னாள்: “ஊழியத்துல படபடப்பில்லாம நிதானமா பேச எட்னா எனக்கு உதவுனாங்க. மறுப்பு தெரிவிக்கிறவங்ககிட்ட எப்படி பேசணும்னு நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க. வீட்டுக்காரங்க பேசறப்போ நல்லா காது கொடுத்து கேட்கணுங்கறத சொல்லிக் கொடுத்தாங்க; அதனால வீட்டுக்காரங்களுக்கு ஏற்ற மாதிரி என்னால பேச முடிஞ்சுது. எனக்கு ஏற்ற ஆளு அவங்கதான்.”

இடமிருந்து: நேதன் நார், மால்கெம் ஏலென், ஃபிரெட் ரஸ்க், லில் ரூஷ், ஆன்ட்ரூ வாக்னர்

அயோவா மாகாணத்தில் இருந்த இரண்டு வட்டாரங்களில் சேவை செய்தோம். அந்த வட்டாரத்தில், மினிசோடா மற்றும் தென் டகோட்டா மாகாணத்தைச் சேர்ந்த சில பகுதிகளும் இருந்தன. பின்பு நியு யார்க் வட்டாரம் 1-க்கு மாற்றப்பட்டோம். அந்த வட்டாரத்தில் புருக்லின் மற்றும் க்வின்ஸ் பகுதிகளும் இருந்தன. அந்த வட்டாரத்தில் சேவை செய்யுமளவுக்கு அனுபவம் இல்லாததாக உணர்ந்தோம். அதை எங்களால் மறக்கவே முடியாது. ஏனென்றால், அந்த வட்டாரத்தில் புருக்லின் ஹைட்ஸ் சபையும் இருந்தது. பெத்தேலிலிருந்த ராஜ்ய மன்றத்தில் கூடிவந்த அந்தச் சபையில், அனுபவமுள்ள நிறைய பெத்தேல் அங்கத்தினர்கள் இருந்தார்கள். அங்கு, முதல் ஊழியப் பேச்சைக் கொடுத்து முடித்தபின், சகோதரர் நேதன் நார் என்னிடம், “மால்கம், நாங்க எந்த விஷயத்தில முன்னேறணும்னு நீங்க சொன்னது ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. ஒரு விஷயத்தை எப்பவும் மறந்துறாதீங்க. அன்பான அறிவுரைகளை கொடுக்கலைனா, அமைப்புக்கு உங்களால எந்த பிரயோஜனமும் இருக்காது. நல்லா செய்றீங்க, தொடர்ந்து இப்படியே செய்யுங்க” என்றார். கூட்டம் முடிந்தவுடன் கிரேஸிடம் இதைச் சொன்னேன். அந்த வாரம் தங்குவதற்கு பெத்தேலில் கொடுக்கப்பட்டிருந்த அறைக்குப் போனவுடன், மனதில் தேக்கி வைத்திருந்த கவலையெல்லாம் கண்ணீராய் வடிந்தது.

“அன்பான அறிவுரைகளை கொடுக்கலைனா, அமைப்புக்கு உங்களால எந்த பிரயோஜனமும் இருக்காது. நல்லா செய்றீங்க, தொடர்ந்து இப்படியே செய்யுங்க”

சில மாதங்களுக்குப் பின்பு, கிலியட் பள்ளியின் 24-ஆம் வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டோம். பிப்ரவரி 1955-ல் பட்டம் பெற்றோம். பட்டம் பெற்றபின் நாங்கள் மிஷனரிகளாக அனுப்பப்பட மாட்டோம் என்றும் மாறாக, பயண ஊழியத்தில் திறம்பட்டவர்களாக ஆவதற்கு இந்தப் பள்ளி எங்களுக்கு உதவும் என்றும் முன்கூட்டியே தெரியப்படுத்தினார்கள். அந்தப் பள்ளி ரொம்ப அருமையாக இருந்தது; மனத்தாழ்மையைக் கற்றுக்கொடுத்தது.

1954, கிலியட் பள்ளியில் கிரேஸோடும் என்னோடும் ஃபெர்ன் மற்றும் ஜார்ஜ் கௌச்

பள்ளி முடிந்தபின், மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். இண்டியானா, மிச்சிகன், ஒஹாயோ போன்ற மாகாணங்கள் அந்த மாவட்டத்தில் இருந்தன. டிசம்பர் 1955-ல் சகோதரர் நார் எங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதைப் படித்து ஆச்சரியப்பட்டோம். “உங்களால் பெத்தேலில் சேவை செய்ய முடியுமா என்பதைச் சொல்லுங்கள் . . . அல்லது கொஞ்ச காலம் பெத்தேலில் இருந்துவிட்டு பின்பு மிஷனரிகளாகப் போக விரும்பினால், அதையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள். வட்டார கண்காணியாகவோ மாவட்டக் கண்காணியாகவோ சேவை செய்ய விருப்பம் இருந்தால் அதையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்” என்று அதில் எழுதியிருந்தது. எந்த நியமிப்பு கொடுத்தாலும் அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம் என்று பதில் அனுப்பினோம். உடனடியாக, பெத்தேலுக்கு வருமாறு அழைக்கப்பட்டோம்.

பெத்தேலில் அனுபவித்து மகிழ்ந்த வருடங்கள்

பெத்தேலில் பல வேலைகளைச் செய்தேன். அமெரிக்கா முழுவதும் உள்ள சபைகளில் பேச்சுகள் கொடுப்பதும் கற்றுக்கொடுப்பதும் அவற்றில் அடங்கும். இளம் சகோதரர்கள் நிறைய பேருக்கு பயிற்சி அளித்தேன். அவர்கள் பிற்பாடு யெகோவாவின் அமைப்பில் பெரிய பொறுப்புகளைப் பெற்றார்கள். அதன் பிறகு, உலகம் முழுவதும் பிரசங்க வேலையை ஒழுங்கமைக்கும் பணியைக் கவனித்து வந்த அலுவலகத்தில் சகோதரர் நாருக்கு செயலராகச் சேவை செய்தேன்.

ஊழிய இலாகாவில் வேலை, 1956

ஊழிய இலாகாவில் சேவை செய்த அந்த வருடங்களை என்னால் மறக்கவே முடியாது. டி.ஜே. (பட்) சலவன் என்ற சகோதரரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பல வருடங்களாக அந்த இலாகாவின் கண்காணியாகச் சேவை செய்திருந்தார். அங்கிருந்த மற்ற சகோதரர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு பயிற்சி அளித்த ஃபிரெட் ரஸ்க் என்ற சகோதரரும் அவர்களில் ஒருவர். ஒருமுறை அவரிடம் “ஃபிரெட், நான் எழுதின கடிதங்கள்ல நீங்க ஏன் நிறைய திருத்தம் செய்றீங்க” என்று கேட்டது நினைவிருக்கிறது. அவர் சிரித்துக்கொண்டே இப்படிச் சொன்னார்: “மால்கெம், நீங்க எதையாவது சொல்றப்போ, அத தெளிவா புரிஞ்சுக்கிறதுக்கு கூடுதலா சில விஷயங்கள சொல்லுவீங்க. ஆனா எழுதுறப்போ, நாம சொல்ற கருத்தை படிக்கிறவங்க சரியா புரிஞ்சுக்கணும்னா, முடிஞ்சளவு தெளிவா இருக்கணும், அதுவும் இங்கிருந்து போற கடிதங்கள் தெளிவா, திருத்தமா இருக்கணும்.” பிறகு அன்போடு, “கவலப்படாதீங்க, இப்போ நல்லாதான் செய்யறீங்க. போகப் போக இன்னும் நல்லா செய்வீங்க” என்றார்.

கிரேஸுக்கும் பெத்தேலில் வித்தியாசப்பட்ட நியமிப்புகள் கிடைத்தன; தங்கும் அறைகளைச் சுத்தம் செய்யும் வேலையை அனுபவித்து மகிழ்ந்தாள். நாங்கள் பெத்தேலில் இருந்தபோது வாலிபர்களாக இருந்த சில சகோதரர்களை இப்போது பார்த்தால்கூட, “உங்ககிட்ட இருந்துதான் ‘பெட் மேக்கிங்’ கத்துக்கிட்டேன். நீங்க செஞ்சது என் அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு” என்று கிரேஸிடம் முகம் மலர சொல்வார்கள். பத்திரிகை, கடிதத்தொடர்பு, கேசட்டுகளை நகலெடுப்பது ஆகிய துறைகளிலும் சேவை செய்தாள். யெகோவாவின் அமைப்பில் எந்த வேலை செய்தாலும், அது ஒரு பெரிய பாக்கியம் என்பதையும் பெரிய ஆசீர்வாதம் என்பதையும் புரிந்துகொள்ள இவை கிரேஸுக்கு உதவின. இன்றும்கூட கிரேஸ் இப்படித்தான் உணருகிறாள்.

நாங்கள் செய்த மாற்றங்கள்

என்னுடைய பெற்றோர்களைக் கவனிக்க வேண்டியிருந்ததால், 1975 வாக்கில் ஒரு கஷ்டமான தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. பெத்தேலையும், அங்கிருந்த பாசத்துக்குரிய சகோதர, சகோதரிகளையும் பிரிய எங்களுக்கு மனமே இல்லை. இருந்தாலும், எங்களுடைய பெற்றோரை கவனிக்கும் கடமை இருப்பதை உணர்ந்தேன். அதனால், பெத்தேல் சேவையை விடவேண்டியதாயிற்று. சூழ்நிலை மாறும்போது மீண்டும் வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து சென்றோம்.

பொருளாதாரத் தேவைகளுக்காக இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு பயிற்சி கொடுக்கப்பட்டபோது ஒரு மேனேஜர் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கிறது. “இந்த வேலைய சாயங்காலத்துலதான் நல்லா செய்ய முடியும். அப்பதான் மக்கள பார்க்க முடியும். எல்லா நாளும் சாயங்காலத்துல ஆட்கள சந்திக்கிறத தவிர வேற எதுவும் நமக்கு முக்கியமில்ல” என்று சொன்னார். அதற்கு நான், “உண்மைதான், இத நீங்க உங்க அனுபவத்துல இருந்து சொல்றீங்க. ஆனா, எனக்கு சில ஆன்மீக பொறுப்புகள் இருக்கு. அத இதுவரை நான் தவறவிட்டதே இல்ல. இனிமேலும் தவறவிட விரும்பல. கண்டிப்பா சாயங்காலத்துல ஆட்கள சந்திக்கிறேன், ஆனா செவ்வாய்கிழமையும் வியாழக்கிழமையும் முக்கியமான கூட்டம் இருக்கிறதுனால அதுக்கு நான் போகணும்” என்று பதிலளித்தேன். வேலையைக் காரணங்காட்டி, கூட்டங்களைத் தவறவிடாமல் இருந்ததால் யெகோவா என்னை ஆசீர்வதித்தார்.

ஜூலை 1987-ல் ஒரு மருத்துவமனையில் என் அம்மா இறந்தபோது, அவர் அருகிலேயே இருந்தோம். ‘ஹெட் நர்ஸ்’ கிரேஸிடம் வந்து, “மிஸஸ் ஏலென், வீட்டுக்குப் போய் கொஞ்சம் ஓய்வெடுங்க. உங்க மாமியாருக்காக நீங்க எப்பவுமே இங்க இருந்தது எல்லாருக்கும் தெரியும். உங்க கடமைய சரியா செஞ்சிருக்கீங்க, சமாதானத்தோட போங்க” என்றார்.

டிசம்பர் 1987-ல் மீண்டும் பெத்தேல் சேவைக்கு விண்ணப்பித்தோம். ஆனால், சிறிது நாட்களுக்குள் கிரேஸூக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சைக்குப்பின், முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக சொன்னார்கள். இதற்கிடையில், நாங்கள் இருந்த சபையிலேயே எங்களுடைய ஊழியத்தைத் தொடருமாறு பெத்தேலிலிருந்து கடிதம் வந்தது. யெகோவாவுக்காகத் தொடர்ந்து ஊழியம் செய்ய தீர்மானமாய் இருந்தோம்.

பிறகு, எனக்கு டெக்ஸஸில் வேலை கிடைத்தது. அந்த இடத்தின் மிதமான வெப்பம் எங்களுக்கு ஒத்துப்போகும் என்பதால் அங்கே சென்றோம். 25 வருடங்களாக இங்குதான் இருக்கிறோம். இங்குள்ள சகோதர சகோதரிகள் எங்களை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள், அவர்களுடன் நல்ல நட்புறவை அனுபவித்து மகிழ்கிறோம்.

கற்றுக்கொண்ட பாடங்கள்

கடந்த சில வருடங்களில் பெருங்குடல், தைராய்டு, மற்றும் மார்பகப் புற்றுநோயால் கிரேஸ் கஷ்டப்பட்டாள். ஆனால், ஒரு நாள்கூட தன்னுடைய கஷ்டங்களைப் பற்றி அவள் புலம்பியதே இல்லை. எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறாள், குடும்பத் தலைவனாக என்னை எப்போதும் மதித்திருக்கிறாள். “உங்க மணவாழ்வு எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்குது? அந்த ரகசியத்த எங்களுக்கும் சொல்லுங்களேன்” என்று நிறைய பேர் கிரேஸிடம் கேட்பதுண்டு. அதற்கு அவள் சொல்லும் பதில்: “நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். ஒவ்வொரு நாளும் தவறாம பேசிக்குவோம். ஒன்னா சேர்ந்து நேரம் செலவிடுவோம். முக்கியமா ஒருநாள்கூட கோபத்தோட தூங்கப்போக மாட்டோம்.” உண்மைதான், எங்களுக்கிடையே பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால், நாங்கள் மன்னித்து மறந்துவிடுவோம்; இது மிகவும் பிரயோஜனமாக இருந்திருக்கிறது.

“எப்போதும் யெகோவாவைச் சார்ந்திருங்கள்; அவர் அனுமதிக்கிற எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்”

எங்களுக்கு வந்த பிரச்சினைகளிலிருந்து நிறைய நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டோம்:

  1. எப்போதும் யெகோவாவைச் சார்ந்திருங்கள்; அவர் அனுமதிக்கிற எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒருபோதும் நம் சுயபுத்தியின்மேல் சார்ந்திருக்கக் கூடாது.—நீதி. 3:5, 6; எரே. 17:7.

  2. என்ன நடந்தாலும், வழிநடத்துதலுக்காக பைபிளையே சார்ந்திருங்கள். யெகோவாவுக்கும் அவரது கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதே மிக முக்கியமானது. கீழ்ப்படிவதற்கும் கீழ்ப்படியாதிருப்பதற்கும் இடையே எந்தவொரு நடுநிலையும் கிடையாது.—ரோ. 6:16; எபி. 4:12.

  3. யெகோவாவிடம் நல்ல பெயர் சம்பாதிப்பதே வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு விஷயம். பொருளாதார காரியங்களுக்கு முக்கியத்துவம் தராமல் யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.—நீதி. 28:20; பிர. 7:1; மத். 6:33, 34.

  4. யெகோவாவின் சேவையைச் சுறுசுறுப்பாகவும் பலன் தரும் விதத்திலும் செய்ய எப்போதும் ஜெபம் செய்யுங்கள். நம்மால் செய்ய முடிந்ததில் முழு கவனம் செலுத்த வேண்டும்; செய்ய முடியாதவற்றைப் பற்றி கவலைப்படக் கூடாது.—மத். 22:37; 2 தீ. 4:2.

  5. யெகோவாவின் அமைப்பைத் தவிர வேறெந்த அமைப்பின்மீதும் அவருடைய ஆசீர்வாதமும் தயவும் இல்லை என்பதைத் தெரிந்து வைத்திருங்கள்.—யோவா. 6:68.

கிரேஸும் நானும் தனித்தனியாக 75 வருடங்களும், தம்பதியாக 65 வருடங்களும் யெகோவாவிற்கு சேவை செய்திருக்கிறோம். இத்தனை வருடங்களாக ஒன்று சேர்ந்து யெகோவாவைச் சேவித்து வருவது எங்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது. யெகோவாமீது சார்ந்திருந்ததால் வாழ்க்கையில் எத்தனையோ ஆசீர்வாதங்களை நாங்கள் அனுபவித்தோம்; மற்ற சகோதர சகோதரிகளும் அதை ருசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம், அதற்காக ஜெபிக்கிறோம்.