Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளைக் கொடூரமானவர் போல் காட்டும் பொய்

கடவுளைக் கொடூரமானவர் போல் காட்டும் பொய்

அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்

நிறைய பேர் என்ன நம்புகிறார்கள்:

“ஒருவர் இறப்பதற்கு முன்னால் மோசமான பாவம் செய்திருந்தால், அவர் நரகத்திற்கு போவார்; அங்கே ‘நெருப்பில்’ வதைக்கப்படுவார்” என்று கேட்டகிஸம் ஆஃப் தி கேத்தலிக் சர்ச் சொல்கிறது. இன்னும் சில மதத் தலைவர்கள் நரகம் என்பது கடவுளிடமிருந்து முழுமையாக பிரிந்து இருக்கும் ஒரு நிலையைத்தான் அர்த்தப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள்.

பைபிள் சொல்லும் உண்மை:

“பாவம் செய்கிற எவனும் செத்துப்போவான்.” (எசேக்கியேல் 18:4) இறந்தவர்களுக்கு, ”எதுவுமே தெரியாது.” (பிரசங்கி 9:5) இறந்துபோன ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்றால், அவரால் எப்படி “நெருப்பில் வதைக்கப்படும்” வலியை உணர முடியும்? எப்படி கடவுளிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து இருக்கும் வலியை உணர முடியும்?

பைபிளில் ”நரகம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் மனிதகுலத்தின் பொதுவான கல்லறையை அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்துக்கு, யோபு ஒரு மோசமான வியாதியால் கஷ்டப்பட்டபோது இப்படி ஜெபம் செய்தார்: “நீங்கள் என்னைக் கல்லறையில் [“நரகத்தில்,” டுவே ரீம்ஸ் வர்ஷன்] மறைத்துவைத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்.” (யோபு 14:13, ஈஸி-டு-ரீட் வர்ஷன்) கடவுளிடமிருந்து பிரிந்து இருக்கும் ஓர் இடத்திலோ, பயங்கரமாக வேதனையை அனுபவிக்கும் ஓர் இடத்திலோ யோபு இருக்க ஆசைப்பட்டிருக்க மாட்டார். கல்லறையில் இருக்க வேண்டும் என்றுதான் அவர் நினைத்தார்.

இது ஏன் முக்கியம்:

கடவுளைக் கொடூரமானவராக நினைத்தால் நம்மால் அவரிடம் நெருங்கிப்போக முடியாது. அவரை வெறுக்க ஆரம்பித்து விடுவோம். மெக்சிகோவில் வாழும் ரோசியோ இப்படிச் சொல்கிறார்: “சின்ன வயசுலயிருந்தே எனக்கு நரகத்த பத்திதான் சொல்லிக்கொடுத்தாங்க, அத பத்தி கேட்டப்போ நான் ரொம்ப பயந்துட்டேன். கடவுள்கிட்ட எந்த நல்ல குணமும் இருக்காதுனு நினைச்சேன். அவரு ரொம்ப கோவமானவரு, தப்பு செஞ்சா பொறுத்துக்கவே மாட்டாருனு நினைச்சேன்.”

கடவுள் எவ்வளவு நீதியானவர் என்றும் இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்றும் ரோசியோ பைபிளிலிருந்து தெரிந்துகொண்டபோது அவர் யோசிக்கும் விதம் மாறியது. “எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு, என் மனசுல இருந்த பெரிய பாரத்த இறக்கி வெச்ச மாதிரி இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். அதோடு, “கடவுள் நம்மமேல அன்பு வைச்சிருக்காரு, எப்போமே நமக்கு சிறந்தத கொடுக்க ஆசைப்படுறாருனு புரிஞ்சுக்கிட்டேன். நானும் அவர்மேல அன்பு காட்ட முடியும்னு நம்புறேன். ஒரு அன்பான அப்பா அவரோட குழந்தயோட கைய பிடிச்சிட்டு போற மாதிரி, கடவுளும் நம்மள அன்பா பார்த்துக்குறாரு, எப்போமே நமக்கு சிறந்தத கொடுக்க ஆசைப்படுறாரு” என்றும் ரோசியோ சொல்கிறார்.”​—ஏசாயா 41:13.

நரகத்தை நினைத்து நிறையப் பேர் பயப்படுவதால் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், நாம் பயத்தினால் கடவுளைக் வணங்க வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மாற்கு 12:​29, 30) இன்று கடவுள் அநியாயமாக நடந்துகொள்வது இல்லை என்று தெரிந்துகொள்ளும்போது, எதிர்காலத்திலும் அவர் நியாயமாக நடந்துகொள்வார் என்று முழுமையாக நம்புவோம். யோபுவின் நண்பர் எலிகூ மாதிரி நாமும் நம்பிக்கையோடு இப்படிச் சொல்லலாம்: “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.”​—யோபு 34:10.