Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்”

“ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்”

“தெளிந்த புத்தியுடன் இருங்கள்; ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்.”—1 பே. 4:7.

1, 2. (அ) ‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருப்பது’ ஏன் முக்கியம்? (ஆ) நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

 “பொழுது விடியும் அதிகாலை நேரத்தில் தூங்காமல் கண்விழித்திருப்பது ரொம்பக் கஷ்டம்” என்று இரவுநேர வேலையைப் பார்த்த ஒருவர் சொல்கிறார். இரவு முழுக்க கண்விழித்து வேலை பார்க்கும் எல்லோருமே இதை நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள். இன்றைய கிறிஸ்தவர்கள்கூட ஆன்மீக ரீதியில் கண்விழித்திருக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், சாத்தானின் இந்த இருண்ட உலகம் அதன் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. (ரோ. 13:12) இப்படிப்பட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டிருப்பது எவ்வளவு ஆபத்தானது! எனவே, நாம் ‘தெளிந்த புத்தியுடன் இருப்பதும்,’ ‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருப்பதும்’ மிக மிக முக்கியம்.—1 பே. 4:7.

2 சாத்தானின் உலகம் வெகு சீக்கிரத்தில் அழியப்போவதால் நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘ஜெபம் செய்ய நான் விழிப்புடன் இருக்கிறேனா? எல்லா விதமான ஜெபங்களையும் செய்கிறேனா, தொடர்ந்து ஜெபம் செய்கிறேனா? மற்றவர்களுக்காக எப்போதும் ஜெபம் செய்கிறேனா, அல்லது என்னுடைய தேவைகளுக்காக ஆசைகளுக்காக மட்டுமே ஜெபம் செய்கிறேனா? நான் மீட்புப் பெற ஜெபம் செய்வது எந்தளவு முக்கியம்?’

எல்லா விதமான ஜெபங்களையும் ஏறெடுங்கள்

3. எவ்வகையான ஜெபங்களை ஏறெடுக்கலாம்?

3 அப்போஸ்தலன் பவுல் எபேசியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘எல்லா விதமான ஜெபங்கள்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். (எபே. 6:18) ஜெபம் செய்யும்போது, நம் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் உதவுமாறு அடிக்கடி யெகோவாவிடம் விண்ணப்பம் செய்கிறோம். ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ நம் வேண்டுதல்களுக்கு அன்புடன் செவிசாய்க்கிறார். (சங். 65:2) என்றாலும், நாம் வேறு விதமான ஜெபங்களையும் ஏறெடுக்க முயற்சி செய்ய வேண்டும். யெகோவாவைத் துதிப்பது, அவருக்கு நன்றி சொல்வது, அவரிடம் மன்றாடுவது ஆகியவை அவற்றில் சில.

4. நம் ஜெபங்களில் நாம் ஏன் யெகோவாவை அடிக்கடி துதிக்க வேண்டும்?

4 நம் ஜெபங்களில் யெகோவாவைத் துதிப்பது, அதாவது போற்றிப் புகழ்வது ஏன் முக்கியம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ‘அவருடைய வல்லமையுள்ள கிரியைகளை’ நினைக்கும்போது, ‘மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்தை’ நினைக்கும்போது அவரைத் துதிக்க தூண்டப்படுகிறோம். (சங்கீதம் 150:1-6-ஐ வாசியுங்கள்.) 150-வது சங்கீதத்தில் உள்ள ஆறு வசனங்களில் மட்டுமே 11 முறை யெகோவாவைத் துதிக்கும்படி சங்கீதக்காரன் நம்மை ஊக்குவிக்கிறார். மற்றொரு சங்கீதத்தை இயற்றியவர் பயபக்தியோடு இப்படிப் பாடினார்: “உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழு தரம் உம்மைத் துதிக்கிறேன்.” (சங். 119:164) யெகோவா நிச்சயமாகவே நம் துதிக்குப் பாத்திரர். எனவே, “ஏழு தரம்,” அதாவது அடிக்கடி, அவரைத் துதித்து ஜெபம் செய்ய வேண்டும்.

5. ஜெபத்தில் நன்றி சொல்வது நமக்கு எப்படிப் பாதுகாப்பு தரும்?

5 நன்றி சொல்வது இன்னொரு விதமான ஜெபமாகும். பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலி. 4:6) ஏனென்றால், இந்தப் பொல்லாத உலகில் நம்மை சுற்றி ‘நன்றிகெட்டவர்களே’ அதிகமாக இருக்கிறார்கள். அவர்களைப்போல் ஆகாதிருக்க யெகோவா தந்திருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் நாம் அவருக்கு நன்றி சொல்வது முக்கியம். (2 தீ. 3:1, 2) உண்மைதான், இந்த உலகம் நன்றியுணர்வில்லாத ஆட்களால் நிரம்பியிருக்கிறது. நாம் கவனமாக இல்லாவிட்டால், அந்த கெட்ட மனப்பான்மை நம்மையும் தொற்றிக்கொள்ளும். ஜெபத்தில் யெகோவாவுக்கு நன்றி சொல்வது மனநிறைவை தரும், அதோடு ‘முறுமுறுக்கிறவர்களாகவும் வாழ்க்கையைப் பற்றிக் குறைகூறுகிறவர்களாகவும்’ ஆகாதபடி நம்மைப் பாதுகாக்கும். (யூ. 16) முக்கியமாக, கணவர்கள் குடும்பமாக யெகோவாவுக்கு நன்றி சொல்லி ஜெபம் செய்யும்போது, அவர்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் அதே நல்ல குணத்தை வளர்த்துக்கொள்வார்கள்.

6, 7. மன்றாடுவது என்றால் என்ன, எந்தெந்த விஷயங்களுக்காக நாம் யெகோவாவிடம் மன்றாடலாம்?

6 மன்றாடுவது என்றால் ஊக்கமாகவும் உருக்கமாகவும் ஜெபம் செய்வதாகும். எந்தெந்த விஷயங்களுக்காக நாம் யெகோவாவிடம் மன்றாடலாம்? துன்புறுத்தப்படும்போதோ உயிருக்கு உலைவைக்கும் கொடிய வியாதியினால் அவதிப்படும்போதோ நிச்சயமாகவே அவரிடம் மன்றாடலாம். இப்படிப்பட்ட சமயங்களில் யெகோவாவிடம் உதவி கேட்டு கெஞ்சுவது இயல்புதான். ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மட்டும்தான் யெகோவாவிடம் நாம் மன்றாட வேண்டுமா?

7 கடவுளுடைய பெயரை, அவருடைய அரசாங்கத்தை, அவருடைய சித்தத்தை குறித்து, மாதிரி ஜெபத்தில் இயேசு என்ன சொன்னார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (மத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.) இந்த உலகம் அக்கிரமத்தில் மூழ்கிக்கிடக்கிறது; மனித அரசாங்கங்கள் குடிமக்களுடைய அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்திசெய்வதில்லை. எனவே, நம் பரலோகத் தகப்பனின் பெயர் பரிசுத்தப்படுவதற்காகவும் அவருடைய அரசாங்கம் சாத்தானின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காகவும் நாம் நிச்சயம் ஜெபம் செய்ய வேண்டும். அதோடு, அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதற்காக கெஞ்சி மன்றாட வேண்டும். ஆக, எல்லா விதமான ஜெபங்களையும் ஏறெடுக்க எப்போதுமே விழிப்புடன் இருப்போமாக!

“தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்”

8, 9. கெத்செமனே தோட்டத்தில் தூங்கிவிட்ட பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் நாம் ஏன் குறை சொல்லக் கூடாது?

8 “ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்” என்று ஊக்கப்படுத்திய அப்போஸ்தலன் பேதுருவே ஒரு முறை ஜெபம் செய்யத் தவறிவிட்டார். ஆம், இயேசு கெத்செமனே தோட்டத்தில் ஜெபம் செய்தபோது தூங்கிவிட்ட சீடர்களில் இவரும் ஒருவர். “விழிப்புடன் இருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று இயேசு அந்தச் சீடர்களிடம் சொல்லியிருந்தபோதிலும் அவர்கள் தூங்கிவிட்டார்கள்.மத்தேயு 26:40-45-ஐ வாசியுங்கள்.

9 பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் குறை சொல்வதற்குப் பதிலாக அவர்களுடைய சூழ்நிலையை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாள் முழுக்க பல வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் மிகவும் களைப்பாக இருந்தார்கள். பஸ்கா பண்டிகைக்குத் தேவையானவற்றை அவர்கள் தயார் செய்தார்கள், மாலையில் அதைக் கொண்டாடினார்கள். பின்பு, எஜமானரின் இரவு விருந்தை இயேசு ஆரம்பித்து வைத்தார். அது சம்பந்தமான அறிவுரைகளைச் சீடர்களுக்குக் கொடுத்தார். (1 கொ. 11:23-25) அதன்பின், அவர்கள் “கடவுளைப் புகழ்ந்து பாடல்கள் பாடிவிட்டு,” எருசலேமின் குறுகலான வீதிகளின் வழியே நடந்து ‘ஒலிவ மலைக்குப் போனார்கள்.’ (மத். 26:30, 36) அதற்குள் நள்ளிரவு தாண்டியிருக்கும். ஒருவேளை நாம் அன்றிரவு அந்தத் தோட்டத்தில் இருந்திருந்தால், நாமும்கூட தூங்கி விழுந்திருப்போம். களைத்துப்போயிருந்த அப்போஸ்தலர்களை இயேசு திட்டவில்லை, மாறாக அவர்களது “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்பதைப் புரிந்துகொண்டார்.

பேதுரு இடறலடைந்தாலும், ‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருந்தார்’ (பாராக்கள் 10, 11)

10, 11. (அ) கெத்செமனே தோட்டத்தில் நடந்த சம்பவத்திலிருந்து பேதுரு என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டார்? (ஆ) பேதுருவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

10 கெத்செமனே தோட்டத்தில் நடந்த சம்பவத்திலிருந்து பேதுரு கசப்பான, ஆனால் முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டார். சற்று நேரத்திற்கு முன்னர்தான் இயேசு தம் சீடர்களிடம், “இன்றிரவு எனக்கு நடக்கப்போவதைப் பார்த்து நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள்” என்று சொல்லியிருந்தார். அப்போது பேதுரு, “உங்களுக்கு நடக்கப்போவதைப் பார்த்து மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் நிச்சயமாக ஓடிப்போக மாட்டேன்” என்று உறுதியோடு கூறியிருந்தார். அதற்கு இயேசு மூன்று முறை பேதுரு தம்மை மறுதலிப்பார் என்று பதிலளித்திருந்தார். ஆனாலும் பேதுரு விடாமல், “நான் உங்களோடு சாக வேண்டியிருந்தாலும் உங்களைத் தெரியாதென ஒருபோதும் சொல்ல மாட்டேன்” என்று உறுதி அளித்திருந்தார். (மத். 26:31-35) ஆனால், இயேசு சொன்னபடியே, பேதுரு அவரை மறுதலித்தார். மூன்றாவது முறையாக அவரை மறுதலித்தபோது, மிகுந்த துக்கத்தில் “மனங்கசந்து அழுதார்.”—லூக். 22:60-62.

11 மிதமிஞ்சிய தன்னம்பிக்கை கூடாது என்ற பாடத்தை பேதுரு இந்தச் சம்பவத்திலிருந்து கற்றுக்கொண்டதோடு, அந்தக் கெட்ட மனப்பான்மையை அவர் மேற்கொண்டார். நிச்சயமாகவே, இதற்கு ஜெபம் அவருக்கு உதவியிருக்கும். சொல்லப்போனால், “ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்” என்ற அறிவுரையை அவரே கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். பேதுருவின் இந்த அறிவுரைக்கு நாம் செவிசாய்க்கிறோமா? ‘தொடர்ந்து ஜெபம் செய்வதன்’ மூலம் யெகோவாமீது சார்ந்திருப்பதைக் காட்டுகிறோமா? “நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையையும் நாம் மனதில் வைப்போமாக!—1 கொ. 10:12.

நெகேமியாவின் ஜெபங்களுக்குப் பதில் கிடைத்தது

12. நெகேமியா நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி என ஏன் சொல்லலாம்?

12 கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், பெர்சிய ராஜாவாகிய அர்தசஷ்டாவின் பானபாத்திரக்காரனாக இருந்த நெகேமியாவைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். ஊக்கமாக ஜெபம் செய்வதில் அவர் நல்ல முன்மாதிரி. எருசலேமிலிருந்த யூதர்களுடைய நிலைமையை நினைத்து பல நாட்கள் தொடர்ந்து “உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி” ஜெபம் செய்தார். (நெ. 1:4) அவர் ஏன் துக்க முகமாக இருக்கிறார் என்று ராஜா அவரிடம் கேட்டபோது, உடனடியாக அவர் ‘பரலோகத்தின் தேவனிடம் ஜெபம்பண்ணினார்.’ (நெ. 2:2-4) விளைவு? யெகோவா அவருடைய ஜெபத்திற்குப் பதிலளித்தார், தம் மக்களுக்கு நன்மை உண்டாகும் விதத்தில் காரியங்களை வழிநடத்தினார். (நெ. 2:5, 6) அந்தச் சம்பவம் நெகேமியாவின் விசுவாசத்தை எந்தளவு பலப்படுத்தியிருக்கும்!

13, 14. நாம் மனச்சோர்வடைய சாத்தான் எடுக்கும் முயற்சிகளைத் தகர்க்கவும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்தவும் என்ன செய்ய வேண்டும்?

13 நெகேமியாவைப் போல நாமும் தொடர்ந்து ஜெபம் செய்தோமென்றால், விசுவாசத்தில் பலப்பட்டவர்களாக இருப்போம். சாத்தான் ஈவிரக்கமற்றவன், பலவீனமாக இருக்கும்போதுதான் பெரும்பாலும் நம்மைத் தாக்குவான். உதாரணத்திற்கு, ஒரு நோயோடு நாம் போராடிக்கொண்டு இருக்கலாம் அல்லது மனச்சோர்வில் தத்தளித்துக்கொண்டு இருக்கலாம். அச்சமயங்களில், நாம் ஊழியத்தில் செலவிட்ட நேரத்தைக் கடவுள் அற்பமாக கருதுகிறார் என்று நினைக்கலாம். சிலர் கடந்தகால கசப்பான அனுபவங்களை நினைத்து நினைத்து வேதனைப்படலாம். சாத்தான் இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி எதற்கும் லாயக்கற்றவர்கள் என்ற உணர்வை நமக்குள் விதைப்பான். நம் உணர்ச்சிகளோடு விளையாடி, நம் விசுவாசத்தை ஆட்டங்காணச் செய்வது அவனுக்குக் கைவந்த கலை. ஆனால், ‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருப்பதன்’ மூலம் நம் விசுவாசத்தை பலமாக வைத்துக்கொள்ள முடியும்.ஆம், ‘பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைத்துவிடுவதற்கு விசுவாசம் என்ற பெரிய கேடயம்’ நமக்கு நிச்சயம் கைகொடுக்கும்.—எபே. 6:16.

‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருப்பது’ பல்வேறு சவால்களைச் சந்திக்க நம்மைப் பலப்படுத்துகிறது (பாராக்கள் 13, 14)

14 ‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருந்தோமென்றால்,’ திடீரென ஒரு பிரச்சினை வரும்போது விசுவாசத்தில் நிலைகுலைந்துபோக மாட்டோம். எனவே, விசுவாசப் பரீட்சைகளை எதிர்ப்படும்போது, நெகேமியாவின் உதாரணத்தை நினைவில்வைத்து உடனடியாக கடவுளிடம் ஜெபம் செய்வோமாக! யெகோவாவின் உதவியோடுதான் சபலங்களையும் விசுவாசப் பரீட்சைகளையும் நம்மால் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

மற்றவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்

15. மற்றவர்களுக்காக ஜெபம் செய்கிற விஷயத்தில், என்ன கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்?

15 பேதுரு விசுவாசத்தை விட்டுவிடாதிருப்பதற்காக கடவுளிடம் இயேசு மன்றாடினார். (லூக். 22:32) முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான எப்பாப்பிரா இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, கொலோசெ நகரத்திலிருந்த சகோதரர்களுக்காக ஊக்கமாய் ஜெபம் செய்தார். “இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்” என்று அவர்களுக்குக் பவுல் கடிதம் எழுதினார். (கொலோ. 4:12, தமிழ் யூனியன் மொழிப்பெயர்ப்பு) எனவே, நம்மை நாமே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘உலகிலுள்ள என் சகோதரர்கள் எல்லோருக்காகவும் நான் ஊக்கமாக ஜெபம் செய்கிறேனா? இயற்கைப் பேரழிவுகளில் சிக்கித் தவிக்கிற சகோதரர்களுக்காக எவ்வளவு அடிக்கடி ஜெபம் செய்கிறேன்? யெகோவாவின் அமைப்பில் பெரிய பொறுப்புகளைச் சுமப்பவர்களுக்காக நான் எப்பொழுது கடைசியாக ஊக்கத்துடன் ஜெபம் செய்தேன்? என் சபையில், கஷ்டங்களோடு போராடுகிற சகோதர சகோதரிகளுக்காகச் சமீபத்தில் நான் ஜெபம் செய்திருக்கிறேனா?’

16. மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டுமா? விளக்குங்கள்.

16 மற்றவர்களுக்காக நாம் செய்யும் ஜெபங்கள் அவர்களுக்கு உண்மையிலேயே பிரயோஜனமாய் இருக்கும். (2 கொரிந்தியர் 1:11-ஐ வாசியுங்கள்.) ஒருவருக்காக நிறைய பேர் திரும்பத் திரும்ப ஜெபம் செய்கிறார்கள் என்பதற்காக யெகோவா பதிலளிப்பதில்லை; மாறாக, அவர்கள் எந்தளவு ஆத்மார்த்தமாகவும் ஆழ்ந்த அக்கறையோடும் ஜெபம் செய்கிறார்கள் என்பதை மனதில் வைத்து பதிலளிக்கிறார். எனவே, மற்றவர்களுக்காக ஜெபம் செய்யும் பொறுப்பை முக்கியமாகக் கருத வேண்டும். எப்பாப்பிராவைப் போலவே, நம் சகோதர சகோதரிகளுக்காக ஊக்கமாய் ஜெபம் செய்வதன் மூலம் அவர்கள்மீதுள்ள இருதயப்பூர்வ அன்பையும் அக்கறையையும் வெளிக்காட்ட வேண்டும். அப்படிச் செய்தோமென்றால், நம் இருதயம் சந்தோஷத்தால் நிரம்பிவழியும். ஆம், “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது.”—அப். 20:35.

“மீட்பு வெகு அருகில்”

17, 18. ‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருப்பது’ நமக்கு எப்படி உதவும்?

17 “இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கிவிட்டது” என்று குறிப்பிடுவதற்குமுன், பவுல் இவ்வாறு எழுதினார்: “எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறீர்களென்று, அதாவது தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று, நீங்கள் அறிந்திருப்பதாலும் இப்படி நடந்துகொள்ளுங்கள். நாம் கிறிஸ்தவர்களான சமயத்தில் இருந்ததைவிட இப்போது மீட்பு வெகு அருகில் இருக்கிறது.” (ரோ. 13:11, 12) ஆம், கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகம் வெகு சீக்கிரத்தில் வரப்போகிறது; மீட்பு நாம் நினைப்பதைவிட வெகு அருகில் இருக்கிறது. எனவே, ஆன்மீக ரீதியில் நாம் தூங்கிவிடக் கூடாது; யெகோவாவுடன் தனிமையில் ஜெபம் செய்வதற்கான நேரத்தை வேறெந்த காரியமும் விழுங்கிவிடுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. மாறாக, ‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருக்க’ வேண்டும். அப்படி இருந்தால், யெகோவாவின் நாளுக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில் “பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும்” இருப்போம். (2 பே. 3:11, 12) அப்போது, ஆன்மீக ரீதியில் நாம் விழிப்புடன் இருப்பதையும் இந்தப் பொல்லாத உலகம் சீக்கிரத்தில் அழியப்போகிறதென்று முழுமையாக நம்புவதையும் வெளிக்காட்டுவோம். எனவே, நாம் ‘இடைவிடாமல் ஜெபம் செய்வோமாக!’ (1 தெ. 5:17) இயேசுவைப் போல தனிமையில் ஜெபம் செய்ய முயலுவோமாக. அவசரப்படாமல், நேரமெடுத்து ஜெபம் செய்தோமென்றால், யெகோவாவிடம் மிக நெருக்கமாக இருப்போம். (யாக். 4:7, 8) இது, எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!

18 “கிறிஸ்து மனிதராயிருந்த நாட்களில் தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கிக் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்; அவருடைய பயபக்தியின் காரணமாகக் கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 5:7) இயேசு பூமியிலிருந்தபோது மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார், கடைசிவரை யெகோவாவுக்கு விசுவாசமாய் இருந்தார். இதனால், அவரை யெகோவா மரணத்திலிருந்து விடுவித்து, பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கையை பரிசளித்தார். சோதனைகளோ கஷ்டங்களோ வரும்போது நாமும் இயேசுவைப் போல நம் பரலோகத் தகப்பனுக்கு விசுவாசமாய் இருக்க முடியும். ‘ஜெபம் செய்ய விழிப்புடன்’ இருந்தோமென்றால் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.