Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்—இன்று யார்?

ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்—இன்று யார்?

“ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.”—மீ. 5:5.

1. சீரியா-இஸ்ரவேல் ராஜாக்களின் திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை?

 கி.மு. 762-க்கும் 759-க்கும் இடைப்பட்ட ஒரு சமயத்தில், இஸ்ரவேலின் ராஜாவும் சீரியாவின் ராஜாவும் யூதாவுக்கு விரோதமாக எழுந்தார்கள். அவர்களது திட்டம்? எருசலேமைக் கைப்பற்றி, ஆகாஸ் ராஜாவுக்குப் பதிலாக வேறு ஒருவரை ராஜாவாக்கவேண்டும் என்பதே. ஒருவேளை, தாவீதின் வம்சாவளியைச் சேராத ஒருவரை ராஜாவாக்க அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். (ஏசா. 7:5, 6) இந்தத் திட்டம் வெற்றி பெறாது என்பதை இஸ்ரவேல் ராஜா அறிந்திருக்க வேண்டும். எப்படிச் சொல்கிறோம்? தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தம்முடைய சிங்காசனத்தில் அமர முடியும் என்று யெகோவா முன்னறிவித்திருந்தாரே! அவருடைய வார்த்தை கண்டிப்பாக நிறைவேறும் அல்லவா?—யோசு. 23:14; 2 சா. 7:16.

2-4. ஏசாயா 7:14, 16 எவ்வாறு நிறைவேறியது? (அ) கி.மு. 8-ஆம் நூற்றாண்டில். (ஆ) கி.பி 1-ஆம் நூற்றாண்டில்.

2 ஆரம்பத்தில், சீரியா-இஸ்ரவேல் கூட்டணியின் கை மேலோங்கி இருந்தது. ஒரே போரில் ஆகாசின் படையைச் சேர்ந்த 1,20,000 போர்வீரர்களைக் கொன்று குவித்தார்கள். அவருடைய “குமாரனாகிய மாசேயாவையும்” கொன்றுபோட்டார்கள். (2 நா. 28:6, 7) இதையெல்லாம் யெகோவா பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அதனால், தாவீதுக்குத் தாம் கொடுத்திருந்த வாக்கை நினைவுகூர்ந்து, ஊக்கமளிக்கும் ஒரு செய்தியை அறிவிக்கும்படி ஏசாயா தீர்க்கதரிசியை அனுப்பினார்.

3 “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் [சீரியா, இஸ்ரவேல்] அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.” (ஏசா. 7:14, 16) மிகச் சரியாகவே, இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் பாகம் மேசியாவின் பிறப்போடு சம்பந்தப்பட்டது. (மத். 1:23) ஆனால், தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்டுள்ள ‘இரண்டு ராஜாக்கள்,’ அதாவது சீரியாவின் ராஜாவும் இஸ்ரவேலின் ராஜாவும், இயேசு பிறந்த சமயத்தில் யூதா தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அப்படியானால், இம்மானுவேல் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றம் ஏசாயாவின் நாட்களில் நடந்திருக்க வேண்டும். எப்படி?

4 ஒரு குமாரன் பிறப்பான் என்ற அறிவிப்பைச் செய்த சில காலத்துக்குள் ஏசாயாவின் மனைவி கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று பெயர் வைத்தார்கள். இந்த மகன்தான் ஏசாயா குறிப்பிட்ட ‘இம்மானுவேலாக’ இருக்க வேண்டும். * பைபிள் காலங்களில், குழந்தை பிறந்ததுமே ஒரு பெயர் வைப்பது வழக்கமாக இருக்கலாம்; ஒரு விசேஷ சம்பவம் ஒன்றை நினைவுகூர அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், பெற்றோரும் உறவினரும் வேறு பெயரால்தான் அந்தக் குழந்தையை அழைத்தார்கள். (2 சா. 12:24, 25) இயேசுவை இம்மானுவேல் என்று யாரும் கூப்பிட்டதாக எந்தப் பதிவும் இல்லை.—ஏசாயா 7:14; 8:3, 4-ஐ வாசியுங்கள்.

5. ஆகாஸ் என்ன முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தான்?

5 இஸ்ரவேலும் சீரியாவும் யூதாவை குறிவைத்துக் கொண்டு இருந்த அதே சமயத்தில், அசீரியாவும் யூதாமீது தன் பார்வையைப் பதித்தது. ஆனால், ஏசாயா 8:3, 4-ன் படி ‘தமஸ்குவின் ஆஸ்தியையும், சமாரியாவின் கொள்ளையையும்’ அசீரியா சூறையாடின பிறகுதான் யூதா பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். ஏசாயா மூலம் கடவுள் சொன்ன வார்த்தைமீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக அசீரிய ராஜாவுடன் ஆகாஸ் கைகோர்த்துக் கொண்டான். என்னே முட்டாள்தனம்! கடைசியில் கொடூரமான அசீரியர்கள் கையில் யூதா சிக்கித் தவித்ததற்கு இந்தக் கூட்டணிதான் காரணம். (2 இரா. 16:7-10) ஒரு மேய்ப்பனாக, ஆகாஸ் தன் கடமையை செய்யத் தவறினான். நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது நான் யார்மீது நம்பிக்கை வைக்கிறேன்? கடவுள்மீதா மனிதர்கள்மீதா?’—நீதி. 3:5, 6.

புதிய மேய்ப்பர் வித்தியாசமாகச் செயல்படுகிறார்

6. ஆகாசைப் போலில்லாமல் எசேக்கியா எப்படி வித்தியாசமானவராகச் செயல்பட்டார்?

6 கி.மு. 746-ல் ஆகாஸ் மரித்தபோது அவனுடைய மகன் எசேக்கியா ராஜாவானார். அச்சமயத்தில் யூதாவின் பொருளாதார நிலையும் ஆன்மீக நிலையும் படுமோசமாக இருந்தது. இளம் ராஜாவான எசேக்கியா என்ன செய்வார்? யூதாவை மீண்டும் செல்வச் செழிப்பான தேசமாக்க முயற்சி செய்வாரா? இல்லை. தேவபயமுள்ள அவர், மக்களை வழிநடத்தத் தெரிந்த தகுதியுள்ள மேய்ப்பராக இருந்தார். உண்மை வழிபாட்டை நிலைநாட்டுவதும் வழிதப்பிப்போன யூதா தேசத்தை மீண்டும் யெகோவாவுடன் நல்ல பந்தத்திற்குள் கொண்டுவருவதுமே அவருடைய முதல்கட்ட நடவடிக்கையாக இருந்தது. கடவுளுடைய சித்தத்தை உணர்ந்ததும் அவர் செயலில் இறங்கினார். நாம் பின்பற்ற என்னே சிறந்த முன்மாதிரி!—2 நா. 29:1-19.

7. லேவியர்களுக்கு புதிய ராஜாவின் ஆதரவு ஏன் தேவைப்பட்டது?

7 உண்மை வழிபாட்டை நிலைநாட்டுவதில் லேவியருக்கு முக்கிய பொறுப்பு இருந்தது. ஆகவே, எசேக்கியா அவர்களைக் கூடிவரச் செய்து தன்னுடைய ஆதரவு அவர்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்தினார். ‘நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்க உங்களை அவர் தெரிந்துகொண்டார்’ என்று அவர்களைப் பார்த்து ராஜா சொன்னபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விசுவாசமுள்ள லேவியர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்ததைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! (2 நா. 29:11) ஆம், உண்மை வழிபாட்டை முன்னேற்றுவிக்க லேவியர்களுக்குத் தெளிவான கட்டளை கொடுக்கப்பட்டது.

8. மக்கள் யெகோவாவைச் சேவிக்க எசேக்கியா வேறு என்ன படிகளை எடுத்தார், விளைவு என்ன?

8 பஸ்காவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடுவதற்கு யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ள அனைவரையும் எசேக்கியா அழைத்தார். இதைத் தொடர்ந்து புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஏழு நாட்களுக்குக் கொண்டாடினார்கள். மக்கள் சந்தோஷத்தில் திளைத்ததால் இன்னும் ஏழு நாட்களுக்குப் பண்டிகை நீட்டிக்கப்பட்டது. “எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.” (2 நா. 30:25, 26) எப்பேர்ப்பட்ட ஊக்கத்தை அந்த ஆன்மீக விருந்து அளித்திருக்கும்! அடுத்து என்ன நடந்தது என்பதை 2 நாளாகமம் 31:1 சொல்கிறது: “இவையெல்லாம் முடிந்த பின்பு . . . சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்.” இவ்வாறு மக்கள் மனந்திரும்பி மீண்டும் யெகோவாவைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். வரவிருந்த ஆபத்திலிருந்து விடுபட இந்த ஆன்மீகச் சுத்திகரிப்பு அவர்களுக்குப் பேருதவியாக இருந்திருக்கும்.

பிரச்சினைகளைச் சமாளிக்க ராஜா தயாராகிறார்

9. (அ) இஸ்ரவேலின் திட்டம் எப்படித் தவிடுபொடியானது? (ஆ) ஆரம்பத்தில், யூதாவைக் கைப்பற்றுவதில் சனகெரிப் எப்படி வெற்றி கண்டான்?

9 ஏசாயா சொன்னபடியே அசீரியர்கள் இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைக் கைப்பற்றி மக்களை நாடு கடத்தினார்கள். இவ்வாறு தாவீதின் சிங்காசனத்தை அபகரிக்க இஸ்ரவேல் போட்ட திட்டம் தவிடுபொடியானது. ஆனால், அசீரியாவின் திட்டங்கள் என்ன ஆனது? அது யூதாவின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியது. “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.” சனகெரிப் மொத்தம் 46 பட்டணங்களைக் கைப்பற்றினான். முன்னேறி வந்த அசீரிய படைகள், யூதாவின் பட்டணங்களை ஒவ்வொன்றாக முறியடித்தன. நீங்கள் அச்சமயத்தில் எருசலேமில் வாழ்ந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பீர்கள்?—2 இரா. 18:13.

10. மீகா 5:5, 6 எசேக்கியாவை ஏன் உற்சாகப்படுத்தியிருக்கும்?

10 வரவிருந்த ஆபத்தை எசேக்கியா அறிந்திருந்தாலும் பதற்றமடைந்து தன் அப்பாவைப்போல் புற தேசத்தாரின் உதவியை நாடாமல் யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்தார். (2 நா. 28:20, 21) எசேக்கியாவின் காலத்தில் வாழ்ந்த மீகா தீர்க்கதரிசி, அசீரியாவை குறித்து முன்னறிவித்த வார்த்தைகள் அவர் நினைவுக்கு வந்திருக்கலாம்: “ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு [அசீரியாவுக்கு] விரோதமாக நிறுத்துவேன். . . . இவர்கள் அசீரியா தேசத்தை . . . பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்.” (மீ. 5:5, 6) கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் எசேக்கியாவை நிச்சயம் உற்சாகப்படுத்தியிருக்கும். ஏனென்றால், அசீரியாவைத் தோற்கடிக்க யெகோவா ஒரு வித்தியாசமான சேனையை எழும்பச் செய்வார் என்று அந்த வார்த்தைகள் காட்டின.

11. ஏழு மேய்ப்பர்களையும் எட்டு அதிபதிகளையும் பற்றிய தீர்க்கதரிசனத்தின் முக்கிய நிறைவேற்றம் எப்போது நடைபெறும்?

11 ஏழு மேய்ப்பர்களையும் எட்டு அதிபதிகளையும் பற்றிய அந்தத் தீர்க்கதரிசனத்தின் முக்கிய நிறைவேற்றம் “இஸ்ரவேலை ஆளப்போகிற” இயேசுவின் பிறப்புக்குப் பல வருடங்களுக்குப் பிறகே நிறைவேறவிருந்தது. (மீகா 5:1, 2-ஐ வாசியுங்கள்.) ஆம், நவீன கால “அசீரியன்”, யெகோவாவின் மக்களை துடைத்தழிக்க நினைக்கும் காலத்தில் அந்த வார்த்தைகள் நிறைவேறும். இந்தத் திகிலூட்டும் எதிரியை எதிர்க்க யெகோவா என்ன செய்வார்? இயேசுவின் தலைமையில் எந்தச் சேனையை யெகோவா ஏற்பாடு செய்வார்? இப்போது பார்க்கலாம். ஆனால், அசீரியர்களுக்கு விரோதமாக எசேக்கியா எடுத்த நடவடிக்கைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று முதலில் பார்க்கலாம்.

எசேக்கியா எடுத்த நடவடிக்கைகள்

12. கடவுளுடைய மக்களைப் பாதுகாக்க எசேக்கியாவும் அவரோடிருந்த மற்றவர்களும் என்ன செய்தார்கள்?

12 நம்மால் செய்ய முடியாததை யெகோவா நமக்காக செய்யத் தயாராக இருக்கிறார். ஆனால், முடிந்ததைச் செய்ய நாம் முயற்சிக்கிறோமா என்று அவர் கவனிக்கிறார். எசேக்கியா ‘தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினார்.’ பிறகு, அனைவரும் சேர்ந்து ‘நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட்டார்கள் . . . அவர் [எசேக்கியா] திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி . . . திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும் பண்ணினார்.’ (2 நா. 32:3-5) எசேக்கியா, அவருடைய பிரபுக்கள், விசுவாசமுள்ள தீர்க்கதரிசிகள் போன்ற அநேக பராக்கிரமசாலிகளைப் பயன்படுத்தி யெகோவா தம்முடைய மக்களை அன்று பாதுகாத்தார், வழிநடத்தினார்.

13. வரவிருந்த தாக்குதலை முன்னிட்டு எசேக்கியா என்ன மிக முக்கியமான நடவடிக்கை எடுத்தார்? விளக்குங்கள்.

13 ஊற்றுகளை அடைப்பதையும் மதிலைக் கட்டுவதையும்விட எசேக்கியா அடுத்து செய்ததுதான் மிக முக்கியமானது. அக்கறையுள்ள மேய்ப்பனாக இருந்ததால் தன்னுடைய மக்களை ஒன்றுகூட்டி பின்வரும் வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: “அசீரியா ராஜாவுக்கு . . . பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே.” ஆம், யெகோவா தம்முடைய மக்களுக்காகப் போர் செய்வார். விசுவாசத்தைப் பலப்படுத்தும் எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் இவை! “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.” ‘அந்த வார்த்தைகள்’ மக்களை பலப்படுத்தின. தம்முடைய தீர்க்கதரிசி மூலம் யெகோவா முன்னறிவித்தபடியே எசேக்கியா, அவருடைய பிரபுக்கள், மற்ற பராக்கிரமசாலிகள், தீர்க்கதரிசிகளான மீகா, ஏசாயா போன்றவர்கள் தாங்கள் சிறந்த மேய்ப்பர்கள் என்பதை நிரூபித்தார்கள்.—2 நா. 32:7, 8; மீகா 5:5, 6-ஐ வாசியுங்கள்.

எசேக்கியாவின் வார்த்தைகள் மக்களை பலப்படுத்தின (பாராக்கள் 12, 13)

14. ரப்சாக்கே என்ன சூழ்ச்சிகளைக் கையாண்டான், அதற்கு மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?

14 எருசலேமுக்குத் தென்மேற்கே லாகீஸ் என்ற இடத்தில் அசீரிய ராஜா முகாமிட்டான். அங்கிருந்து எருசலேமுக்குத் தூதுவர்களை அனுப்பி, சரணடையச் சொல்லி மூன்று முறை கட்டளையிட்டான். ரப்சாக்கே என்ற பட்டப்பெயரைக் கொண்ட அவனுடைய பிரதிநிதி பல சூழ்ச்சிகளைக் கையாண்டான். யூதர்களின் சொந்த மொழியான எபிரெய பாஷையில் பேசி மக்களை ஏமாற்ற நினைத்தான். எசேக்கியாவின் பேச்சைக் கேட்காமல், அசீரியரின் பக்கம் சேர்ந்துகொள்ளும்படி யூதர்களை ஊக்குவித்தான். அவர்களை வேறு இடத்திற்கு மாற்றி வசதியாக வாழ வைப்பதாகப் பொய் சொல்லி, ஆசை காட்டி மோசம்போக்க நினைத்தான். (2 இராஜாக்கள் 18:31, 32-ஐ வாசியுங்கள்.) மற்ற தேசங்களின் தெய்வங்கள் எப்படி அசீரியாவின் பிடியிலிருந்து அவர்களது பக்தர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதோ அப்படியே யெகோவாவும் யூதர்களைக் காப்பாற்ற முடியாது என்று ரப்சாக்கே சொன்னான். இன்று போலவே அன்றும் யெகோவாவின் மக்கள் ஞானமாகச் செயல்பட்டு இப்படிப்பட்ட பொய் பிரச்சாரத்திற்கு மௌனம் சாதித்தார்கள்.2 இராஜாக்கள் 18:35, 36-ஐ வாசியுங்கள்.

15. எருசலேமில் இருந்தவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது, அவர்களுக்கு யெகோவா எப்படி வெற்றி அளித்தார்?

15 எசேக்கியா கலக்கம் அடைந்திருந்தாலும் வேறொரு நாட்டின் உதவியை நாடுவதற்குப் பதிலாக ஏசாயா தீர்க்கதரிசியை வரவழைத்தார். எசேக்கியாவிடம் ஏசாயா இவ்வாறு சொன்னார்: “அவன் [சனகெரிப்] இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை.” (2 இரா. 19:32) எருசலேமில் இருந்தவர்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தாலே போதும், யெகோவா அவர்களுக்குப் பதிலாக போர் புரிவார், அவ்வாறே போர் புரிந்தார். ‘அன்று இராத்திரியில் . . . கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தி எண்பத்தைந்தாயிரம் பேரைச் சங்கரித்தார்.’ (2 இரா. 19:35) ஆம், யூதாவுக்கு வெற்றி கிடைத்தது. எசேக்கியா ஊற்றுகளை அடைத்ததாலும் மதிலை உயரமாக உயர்த்தியதாலும் அல்ல, யெகோவா தேவனால்தான் வெற்றி கிடைத்தது.

நமக்கு என்ன பாடம்?

16. இன்று இவர்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்: (அ) எருசலேமின் குடிகள் (ஆ) “அசீரியன்” (இ) ஏழு மேய்ப்பரும் எட்டு அதிபதிகளும்?

16 ஏழு மேய்ப்பர்களையும் எட்டு அதிபதிகளையும் பற்றிய தீர்க்கதரிசனத்தின் முக்கிய நிறைவேற்றம் நம் நாளில் நடைபெறும். பூர்வ எருசலேமின் குடிகள் அசீரியர்களால் தாக்கப்பட்டார்கள். அதேபோல், யெகோவாவின் மக்களை நவீனகால “அசீரியன்”, மிக விரைவில் துடைத்தழிக்கப் பார்ப்பான். அந்த அசீரியனின் தாக்குதலோடு, ‘மாகோகு தேசத்தானான கோகின்’ தாக்குதல்... ‘வடதிசை ராஜாவின்’ தாக்குதல்... ‘பூமியின் ராஜாக்கள்’ நடத்தும் தாக்குதல்... பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது. (எசே. 38:2, 10-13; தானி. 11:40, 44, 45; வெளி. 17:14; 19:19) இவை நான்கு வெவ்வேறு தாக்குதல்களைக் குறிக்கிறதா? இதற்கான பதில் இப்போது தெரியாது. ஒரே தாக்குதலை பல பெயர்களால் பைபிள் அழைத்திருக்கலாம். அந்தக் கொடூரமான ‘அசீரியனுக்கு’ விரோதமாக யெகோவா எழுப்பப்போகும் ‘ரகசிய ஆயுதம்’ எது? ‘ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளுமே’ அது. (மீ. 5:5) இவர்கள் சபை மூப்பர்களைக் குறிக்கிறார்கள். (1 பே. 5:2) இன்று, யெகோவா தம்முடைய மக்களை வழிநடத்தவும் “அசீரியன்” தாக்குவதற்கு முன் அவர்களைப் பலப்படுத்தவும் ஏராளமான ஆன்மீக மேய்ப்பர்களை ஏற்படுத்தியிருக்கிறார். * மீகா தீர்க்கதரிசனத்தின்படி அவர்கள் ‘அசீரியா தேசத்தை . . . பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்.’ (மீ. 5:6) ஆம், எதிரியைத் தோற்கடிக்க உதவும் ‘போராயுதங்களில்’ ஒன்றான ‘வாளை’, அதாவது ‘கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கிற’ அவரது வார்த்தையை, அவர்கள் பயன்படுத்துவார்கள்.—2 கொ. 10:4; எபே. 6:17.

17. இந்தக் கட்டுரையிலிருந்து மூப்பர்கள் என்ன நான்கு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

17 இந்தக் கட்டுரையிலிருந்து மூப்பர்கள் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்: (1) ‘அசீரியனுடைய’ தாக்குதலுக்குத் தயாராக வேண்டுமானால், கடவுள்மீது தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தையும் சபையார் வைத்திருக்கும் விசுவாசத்தையும் பலப்படுத்த வேண்டும். (2) “அசீரியன்” தாக்கும்போது யெகோவா நிச்சயம் விடுவிப்பார் என்று உறுதியாக நம்ப வேண்டும். (3) அந்தச் சமயத்தில், யெகோவாவின் அமைப்பிடமிருந்து கிடைக்கும் வழிநடத்துதல் நடைமுறைக்கு ஒத்துவராததாகத் தோன்றினாலும், அதற்குக் கீழ்ப்படிய மூப்பர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். (4) உலகக் கல்வி, சொத்துபத்து, மனித அமைப்புகள் போன்றவற்றில் நம்பிக்கை வைப்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம். எனவே, விசுவாசத்தில் தள்ளாடுவோருக்கு உதவ மூப்பர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

18. எசேக்கியாவின் நாட்களில் நடந்த சம்பவத்தை யோசித்துப் பார்ப்பது எதிர்காலத்தில் நமக்கு எப்படி உதவும்?

18 எசேக்கியாவின் நாட்களில் எருசலேமிலிருந்த யூதர்களைப்போல், இன்று கடவுளுடைய மக்களாகிய நாமும் ஆதரவற்றவர்கள் போல இருக்கும் காலம் வரும். அப்போது எசேக்கியாவின் வார்த்தைகளிலிருந்து நாம் ஊக்கம் பெறலாம். நம்முடைய எதிரிகளிடம் இருப்பது ‘மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW]’ என்று நாம் ஒருபோதும் மறந்துவிடாதிருப்போமாக!—2 நா. 32:8.

^ ஏசாயா 7:14-ல் “கன்னிகை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை திருமணமான பெண்ணுக்கும் பொருந்தும், கன்னிப் பெண்ணுக்கும் பொருந்தும். ஆக, இதே வார்த்தை ஏசாயாவின் மனைவிக்கும் பொருந்தும், கன்னியாக இருந்த மரியாளுக்கும் பொருந்தும்.

^ பைபிளில் ஏழு என்ற எண் முழுமையைக் குறிக்கிறது. எட்டு என்ற எண் (ஏழைவிட ஒன்று அதிகம்) சிலசமயங்களில் செழுமையைக் குறிக்கிறது.