Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மூப்பர்களே, பெரிய மேய்ப்பர்களைப் பின்பற்றுங்கள்!

மூப்பர்களே, பெரிய மேய்ப்பர்களைப் பின்பற்றுங்கள்!

“கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.”—1 பே. 2:21.

1, 2. (அ) ஆடுகளை நன்கு பராமரிப்பதன் பலன் என்ன? (ஆ) இயேசுவின் காலத்தில் மக்கள் ஏன் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் இருந்தார்கள்?

 அக்கறையுள்ள ஒரு மேய்ப்பனின் கவனிப்பில் ஆடுகள் நலமாக இருக்கும். ஆடுகளை வளர்ப்பது பற்றி ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: “ஒரு மேய்ப்பன் ஆடுகளை வெறுமென புல்வெளியில் மேயவிட்டுவிட்டு, பிறகு அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், சில வருடங்களிலேயே அவை பலவீனமடைந்து நோயில் விழுந்துவிடும்.” ஆனால், ஆடுகள் ஒவ்வொன்றையும் நன்கு காத்துப் பராமரிக்கும்போது முழு மந்தையும் திடமாக, ஆரோக்கியமாக இருக்கும்.

2 கிறிஸ்தவ சபையைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை! கிறிஸ்தவ மேய்ப்பர்கள், சபையார் ஒவ்வொருவரையும் கண்ணும் கருத்துமாக கவனிக்கும்போது முழு சபையும் ஆன்மீக ரீதியில் ஆரோக்கியமாக இருக்கும். “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் . . . கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்” இருந்த மக்கள்மீது இயேசு மனதுருகியதைப் பற்றி நீங்கள் பைபிளில் வாசித்திருக்கலாம். (மத். 9:36) அவர்களுடைய பரிதாப நிலைக்குக் காரணம் என்ன? திருச்சட்டத்தைக் கற்பிக்கும் பொறுப்பிலிருந்தவர்கள் அவர்களை அடக்கி ஒடுக்கினார்கள், ஆட்டிப்படைத்தார்கள், கபட நாடகம் ஆடினார்கள். மக்களை நேசித்து பேணிக்காப்பதற்குப் பதிலாக அந்த மதத்தலைவர்கள் அவர்களுடைய தோள்கள்மீது ‘பாரமான சுமைகளைச் சுமத்தினார்கள்.’—மத். 23:4.

3. மூப்பர்கள் தங்களுடைய பொறுப்பை நிறைவேற்றுகையில் எதை மனதில் வைக்க வேண்டும்?

3 இன்றுள்ள கிறிஸ்தவ மேய்ப்பர்களான மூப்பர்களுக்கு கனத்த பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால், அவர்களுடைய கவனிப்பில் விடப்பட்டுள்ள ஆடுகள் யெகோவாவுக்கும் ‘நல்ல மேய்ப்பரான’ இயேசுவுக்கும் சொந்தமானவர்கள். (யோவா. 10:11) இந்த ஆடுகள், இயேசுவின் “விலைமதிப்புள்ள இரத்தத்தினால்” ‘விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள்.’ (1 கொ. 6:20; 1 பே. 1:18, 19) ஆடுகள்மீது இயேசுவுக்கு அந்தளவு அன்பு இருப்பதால், அவர்களுக்காக தம்முடைய உயிரையே மனதார கொடுத்தார். மூப்பர்கள், “ஆடுகளின் பெரிய மேய்ப்பரான” இயேசு கிறிஸ்துவின் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.—எபி. 13:20.

4. இந்தக் கட்டுரையில் எந்தக் கேள்விக்கு பதிலைக் காண்போம்?

4 கிறிஸ்தவ மூப்பர்கள் ஆடுகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ‘தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி’ சபையாருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், ‘மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருக்கும்படி’ மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுக்கப்படுகிறது. (எபி. 13:17; 1 பேதுரு 5:2, 3-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், மூப்பர்கள் மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் எப்படி அவர்களை வழிநடத்தலாம்? அதாவது, தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறாமல் எப்படி மந்தையைக் கவனித்துக்கொள்ளலாம்?

‘ஆட்டுக்குட்டிகளைத் தமது மார்பிலே சுமப்பார்’

5. ஏசாயா 40:11-ல் கொடுக்கப்பட்டுள்ள வர்ணனை யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?

5 ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்: “மேய்ப்பனைப் போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே [“மார்பிலே,” NW] சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.” (ஏசா. 40:11) பலவீனமான, ஆதரவற்ற சகோதர சகோதரிகளின் தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஒரு மேய்ப்பன், ஒவ்வொரு ஆட்டின் தேவையையும் உணர்ந்து அவற்றிற்கு உதவி செய்ய ஓடோடி வருவதுபோல, யெகோவாவும் சபையாரின் தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்ய எப்போதும் தயாராய் இருக்கிறார். புதிதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டியைத் தன்னுடைய ஆடையின் மடிப்பிலே சுமக்கும் மேய்ப்பனைப் போல, துன்ப வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நம்மை ‘கனிவும் இரக்கமும் உள்ள தகப்பனாகிய’ யெகோவா தூக்கிச் சுமக்கிறார். வாழ்க்கையில் பெரும் சோதனைகளைச் சந்திக்கையில், ஆறுதலின் கடவுளான அவர் நம்மை விசேஷமாக கவனித்துக்கொள்கிறார்.—2 கொ. 1:3, 4.

6. மூப்பர்கள் எப்படி யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

6 மூப்பர்கள் கற்றுக்கொள்வதற்கு இது ஓர் அருமையான பாடம், அல்லவா? யெகோவாவைப் போல இவர்களும் சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரின் தேவைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். சபையார், என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்கள், எவ்விதமான பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தால்தான் தேவையான உற்சாகத்தையும் உதவியையும் உடனடியாக அளிக்க முடியும். (நீதி. 27:23) இதற்கு மூப்பர்கள் சகோதர சகோதரிகளிடம் நல்ல பேச்சுத்தொடர்பு வைத்திருக்க வேண்டும். அதற்காக, அவர்களுடைய சொந்த விஷயங்களில் தலையிட வேண்டியதில்லை. அதே சமயத்தில், சபையில் ஏதாவது விஷயத்தைப் பார்க்கும்போதோ கேள்விப்படும்போதோ அதை மனதில்கொண்டு “பலவீனருக்கு உதவி செய்ய” தயாராக இருக்க வேண்டும்.—அப். 20:35; 1 தெ. 4:11.

7. (அ) எசேக்கியேல் மற்றும் எரேமியாவின் காலத்தில் மேய்ப்பர்கள் கடவுளுடைய மந்தையை எப்படி நடத்தினார்கள்? (ஆ) கடமை தவறிய மேய்ப்பர்களை யெகோவா நிராகரித்ததிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

7 எசேக்கியேல் மற்றும் எரேமியாவின் காலத்திலிருந்த மேய்ப்பர்களின் மனப்பான்மையைக் கவனியுங்கள். தங்களுடைய பொறுப்பிலிருந்த ஆடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டதால் யெகோவா அவர்களை நிராகரித்தார். கேட்பாரற்று கிடந்த அந்த ஆடுகள் கொடிய விலங்குகளுக்கு இரையாயின, சிதறடிக்கப்பட்டன. அவர்கள் மந்தையை மேய்க்காமல் “தங்களையே மேய்த்தார்கள்,” அவற்றைச் சுரண்டிப்பிழைத்தார்கள். (எசே. 34:7-10; எரே. 23:1) கிறிஸ்தவமண்டல தலைவர்களுக்கு இது ஏக பொருத்தம். கிறிஸ்தவ மேய்ப்பர்கள்கூட யெகோவாவின் மந்தையை அன்பாகவும் சரிவரவும் கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.

“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்”

8. தவறான மனப்பான்மையைச் சரிசெய்வதில் இயேசு எப்படித் தலைசிறந்த முன்மாதிரி வைத்தார்?

8 அபூரணத்தின் காரணமாக சபையார் சிலரால், யெகோவா எதிர்பார்க்கும் காரியங்களை உடனடியாக புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஒருவேளை, அவர்களுடைய தீர்மானங்கள் பைபிள் ஆலோசனைகளின்படி இல்லாதிருக்கலாம் அல்லது அவர்கள் ஆன்மீக முதிர்ச்சி இல்லாமல் நடந்துகொள்ளலாம். அப்போது மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்? கடவுளுடைய அரசாங்கத்தில் யார் பெரியவனாக இருப்பான் என்று விதண்டாவாதம் செய்துகொண்டிருந்த சீடர்களிடம் இயேசு பொறுமையாக நடந்துகொண்டார். அவர் பொறுமையிழந்து விடாமல், தொடர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார், மனத்தாழ்மை காட்டும்படி அன்போடு ஆலோசனை வழங்கினார். (லூக். 9:46-48; 22:24-27) அவர்களுடைய பாதங்களைக் கழுவுவதன் மூலம் மனத்தாழ்மை காட்டுவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்பித்தார். மூப்பர்களும் இதே குணத்தை வெளிக்காட்ட வேண்டும்.யோவான் 13:12-15-ஐ வாசியுங்கள்; 1 பே. 2:21.

9. எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்க வேண்டுமென தம் சீடர்களிடம் இயேசு சொன்னார்?

9 ஒரு கண்காணியின் பொறுப்பைப் பற்றி யாக்கோபும் யோவானும் கருதிய விதத்திற்கும் இயேசு கருதிய விதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த இரண்டு அப்போஸ்தலர்களும் கடவுளுடைய அரசாங்கத்தில் பெரிய ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களுடைய மனப்பான்மையைச் சரிசெய்ய இயேசு இப்படிச் சொன்னார். “யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்களின்மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் அப்படி இருக்கக்கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும்.” (மத். 20:25, 26, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆம், சக கிறிஸ்தவர்கள்மீது ‘ஆதிக்கம் செலுத்த’ அல்லது ‘அதிகாரம் செலுத்த’ விரும்பும் மனப்பான்மையை அப்போஸ்தலர்கள் தவிர்க்க வேண்டியிருந்தது.

10. மந்தையிடம் மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார், இந்த விஷயத்தில் பவுல் என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்?

10 மந்தையிடம் தாம் நடந்துகொண்டதைப் போலவே கிறிஸ்தவ மூப்பர்களும் நடந்துகொள்ள வேண்டுமென இயேசு எதிர்பார்க்கிறார். ஆகவே, அவர்கள் சக கிறிஸ்தவர்கள்மீது அதிகாரம் செலுத்தாமல் வேலைக்காரர்களைப் போல அவர்களுக்கு உதவ மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்போஸ்தலன் பவுலுக்கு அப்படிப்பட்ட தாழ்மையான குணம் இருந்தது; அதனால்தான், எபேசு சபையிலிருந்த மூப்பர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் ஆசிய மாகாணத்திற்கு வந்து உங்களோடிருந்த நாள்முதல் எப்படி நடந்துகொண்டேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். . . . மிகுந்த மனத்தாழ்மையோடு . . . எஜமானருக்கு ஊழியம் செய்தேன்.” அந்த மூப்பர்கள் மிகுந்த ஆர்வத்தோடும் மனத்தாழ்மையோடும் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் ஆசைப்பட்டார். “கடினமாக உழைத்துப் பலவீனருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்கு எல்லாவற்றிலும் காண்பித்திருக்கிறேன்” என்றும் அவர்களிடம் கூறினார். (அப். 20:18, 19, 35) கொரிந்து கிறிஸ்தவர்களிடம் பேசுகையில், தான் அவர்களுடைய விசுவாசத்திற்கு அதிகாரி அல்ல, மாறாக அவர்களுடைய சந்தோஷத்திற்காக தாழ்மையோடு உழைக்கும் சக வேலையாள் என்றார். (2 கொ. 1:24) மனத்தாழ்மை காட்டுவதிலும் கடினமாக உழைப்பதிலும் இன்றுள்ள மூப்பர்களுக்கு பவுல் ஒரு சிறந்த முன்மாதிரி.

‘உண்மையுள்ள வார்த்தையை உறுதியுடன் பற்றிக்கொண்டிருங்கள்’

11, 12. தீர்மானம் எடுக்க ஒரு கிறிஸ்தவருக்கு மூப்பர் எப்படி உதவலாம்?

11 மூப்பர்கள் ‘கற்பிக்கும்போது உண்மையுள்ள வார்த்தையை உறுதியுடன் பற்றிக்கொண்டிருக்க’ வேண்டும். (தீத். 1:9) அதே சமயத்தில், அதை “சாந்தமாக” செய்ய வேண்டும். (கலா. 6:1) ஒரு சிறந்த மூப்பர், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென சகோதர சகோதரிகளை வற்புறுத்த மாட்டார், மாறாக அவர்களுடைய இருதயத்தைத் தொடும் விதத்தில் பேசுவார். ஒரு சகோதரர் முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தால், அதற்கு உதவுகிற பைபிள் நியமத்தை அவருக்கு எடுத்துக்காட்டுவார்; அது சம்பந்தமாக வெளிவந்துள்ள ஏதாவது கட்டுரையையும் அவரோடு கலந்தாலோசிப்பார். அதோடு, அவர் எடுக்கும் தீர்மானம் யெகோவாவோடுள்ள பந்தத்தை எப்படிப் பாதிக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவும் உதவுவார். மேலும், தீர்மானம் எடுப்பதற்கு முன் உதவிக்காக கடவுளிடம் ஜெபிப்பதன் அவசியத்தை அவருக்கு உணர்த்துவார். (நீதி. 3:5, 6) இப்படியெல்லாம் செய்தாலும், தீர்மானம் எடுக்கும் விஷயத்தை அவரிடமே விட்டுவிடுவார்.—ரோ. 14:1-4.

12 கிறிஸ்தவ மூப்பர்கள் இந்தப் பொறுப்பை பைபிளின் அடிப்படையிலேயே செய்ய வேண்டும். ஆகவே, அவர்கள் பைபிள் சொல்வதன்படி நடப்பதும் அதைத் திறம்பட பயன்படுத்துவதும் முக்கியம். அப்படிச் செய்தால், தங்களுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கலாம். சபையிலுள்ள சகோதர சகோதரிகள் மூப்பர்களுக்கு அல்ல, யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் சொந்தமானவர்கள். எனவே, சபையார் ஒவ்வொருவரும் தாங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு இவர்கள் இருவருக்கும் கணக்கு கொடுக்க வேண்டும்.—கலா. 6:5, 7, 8.

“மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்”

மூப்பர்கள் ஊழியத்திற்குத் தயாரிக்க தங்கள் குடும்பத்தாருக்கு உதவுகிறார்கள் (பாரா 13)

13, 14. எந்தெந்த விஷயங்களில் மூப்பர்கள் மந்தைக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்?

13 “மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல்” இருங்கள் என்று சபையிலுள்ள மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுத்ததோடு, “மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்” என்றும் அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பே. 5:2, 3) ஒரு மூப்பர், எப்படி மந்தைக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்? “கண்காணியாவதற்குத் தகுதிபெற முயலுகிற” ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் இரண்டை கவனியுங்கள். அவர் “தெளிந்த புத்தியுள்ளவராக,” “குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராக” இருக்க வேண்டும். ஒரு மூப்பர் குடும்பஸ்தனாக இருந்தால், அவர் தன் குடும்பத்தை நன்றாக கவனிக்க வேண்டும். ‘தன்னுடைய குடும்பத்தையே நடத்தத் தெரியாதிருந்தால் கடவுளுடைய சபையை அவரால் எப்படிக் கவனித்துக்கொள்ள முடியும்?’ (1 தீ. 3:1, 2, 4, 5) அப்படியானால், அவர் தெளிந்த புத்தியுள்ளவராக, அதாவது பைபிள் நியமங்களை நன்கு அறிந்தவராகவும் அவற்றை வாழ்க்கையில் எப்படிப் பின்பற்றுவதென தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர், கஷ்டமான சூழ்நிலையிலும் நிலைதடுமாற மாட்டார். நிதானமாக யோசித்து செயல்படுவார். இந்தக் குணங்களைப் பார்க்கும்போது சபையாருக்கு அவர்மீது நம்பிக்கை பிறக்கும்.

14 வெளி ஊழியத்தை முன்நின்று வழிநடத்துவதிலும் கண்காணிகள் சக கிறிஸ்தவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இந்த விஷயத்திலும் கண்காணிகளுக்கு இயேசு ஒரு முன்மாதிரி. இயேசு பூமியில் வாழ்ந்தபோது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதே அவருக்கு முக்கியமாக இருந்தது. இந்த வேலையை எப்படிச் செய்வதென தம்முடைய சீடர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார். (மாற். 1:38; லூக். 8:1) பிரஸ்தாபிகள் மூப்பர்களோடு சேர்ந்து சந்தோஷமாக ஊழியம் செய்யும்போது, அவர்களுடைய பக்திவைராக்கியத்தைப் பார்க்கிறார்கள், அவர்கள் கற்பிக்கும் விதத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். பல வேலைகளின் மத்தியிலும் நற்செய்தியை அறிவிப்பதற்காக மூப்பர்கள் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதைப் பார்த்து சபையார் எல்லோருமே அதே போன்ற பக்திவைராக்கியத்தைக் காட்ட தூண்டப்படுகிறார்கள். கூட்டங்களுக்குத் தயாரிப்பது, குறிப்புகள் சொல்வது, ராஜ்யமன்றத்தைச் சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற மற்ற வேலைகளிலும் மூப்பர்கள் சபையாருக்கு முன்மாதிரி வைக்கலாம்.—எபே. 5:15, 16; எபிரெயர் 13:7-ஐ வாசியுங்கள்.

கண்காணிகள் ஊழியத்தில் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள் (பாரா 14)

“பலவீனமானவர்களுக்கு ஆதரவாக இருங்கள்”

15. மூப்பர்கள் ஏன் மேய்ப்பு சந்திப்பு செய்கிறார்கள்?

15 ஓர் ஆட்டிற்கு காயம் ஏற்பட்டால் அல்லது அது நோய்வாய்ப்பட்டால், ஒரு நல்ல மேய்ப்பன் உடனடியாகச் சென்று அதற்கு உதவுவார். அது போல, சபையில் யாராவது வேதனையில் தவித்தால் அல்லது அவர்களுக்கு ஆன்மீக உதவி தேவைப்பட்டால் மூப்பர்கள் உடனடியாகச் சென்று கவனிக்கிறார்கள். வயதானவர்களுக்கும் வியாதிப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய அன்றாட தேவைகளைக் கவனித்துக்கொள்ள உதவி தேவைப்படலாம். மிக முக்கியமாக, அவர்களுக்குத் தேவைப்படுவது ஆன்மீக உதவியும் உற்சாகமுமே. (1 தெ. 5:14) சபையிலுள்ள இளம் சகோதர சகோதரிகள், “இளமைப் பருவத்திற்குரிய ஆசைகளிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கலாம். (2 தீ. 2:22) ஆகவே, சபையாருக்கு உதவுவதற்காக மூப்பர்கள் அவ்வப்போது மேய்ப்பு சந்திப்பு செய்கிறார்கள். அந்தச் சமயத்தில், அவர்களுடைய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவும் தேவையான பைபிள் ஆலோசனைகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தவும் முடிகிறது. இதனால், பிரச்சினைகள் கைமீறி போகாதபடி அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய முடிகிறது.

16. சபையிலுள்ள ஒருவருக்கு ஆன்மீக உதவி தேவைப்படும்போது மூப்பர்கள் எப்படி உதவலாம்?

16 சபையில் ஒருவருடைய ஆன்மீக நலனுக்கு பேராபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? பைபிள் எழுத்தாளரான யாக்கோபு, “உங்களில் எவனாவது வியாதிப்பட்டிருக்கிறானா?” என்ற கேள்வியை எழுப்புகிறார். “அப்படியானால், சபையின் மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும். அவர்கள் யெகோவாவின் பெயரில் அவனுக்கு எண்ணெய் பூசி அவனுக்காக ஜெபம் செய்யட்டும். விசுவாசத்தோடு ஏறெடுக்கப்படுகிற ஜெபம் சுகமில்லாதவனைச் சுகப்படுத்தும், யெகோவா அவனை எழுந்திருக்கச் செய்வார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்” என்று அவர் பதிலளிக்கிறார். (யாக். 5:14, 15) ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டிருப்பவர் ‘மூப்பர்களை வரவழைக்காமல்’ போனாலும், அவருடைய சூழ்நிலையை அறிந்தவுடனே மூப்பர்கள் அவருக்கு உதவ விரைந்தோட வேண்டும். கஷ்டத்திலிருக்கும் சகோதரர்களோடு சேர்ந்து அவர்களுக்காக ஜெபம் செய்யும்போதும் உதவிக்கரம் நீட்டும்போதும் அவர்கள் ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் அடைவார்கள்.ஏசாயா 32:1, 2-ஐ வாசியுங்கள்.

17. ‘பெரிய மேய்ப்பரை’ மூப்பர்கள் பின்பற்றும்போது என்ன நன்மைகள் விளைகின்றன?

17 யெகோவாவின் அமைப்பிலுள்ள கிறிஸ்தவ மேய்ப்பர்கள் “பெரிய மேய்ப்பரான” இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியே எல்லாவற்றையும் செய்கிறார்கள். பொறுப்பான இந்தச் சகோதரர்கள், சபையாருக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பதால் மந்தை பெரிதும் பயனடைகிறது, செழித்தோங்குகிறது. இந்த எல்லாப் புகழும் நம் ஒப்பற்ற மேய்ப்பரான யெகோவாவையே சேரும்!