Skip to content

உங்க கேள்விக்கு பதில்...

கடவுள் ஏன் கஷ்டங்கள அனுமதிக்கிறாரு?

கடவுள் ஏன் கஷ்டங்கள அனுமதிக்கிறாரு?

யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களிடம் எப்படிப் பேசுவார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இது. மரியா என்ற ஒரு யெகோவாவின் சாட்சி சோஃபியா என்ற பெண்ணைச் சந்தித்துப் பேசுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

நாம் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கடவுளுக்கு எப்படி இருக்கும்?

மரியா: ஹலோ, சோஃபியா. எப்படி இருக்கீங்க?

சோஃபியா: நான் நல்லாருக்கேன், தேங்ஸ்.

மரியா: போன தடவை வந்தப்போ, நாம கஷ்டப்படுறத பாக்குறப்போ கடவுளுக்கு எப்படி இருக்கும்னு பேசுனோம். அத பத்திதான் ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்குறதா நீங்களும் சொன்னீங்க. அதுவும் ஒரு கார் விபத்துல உங்க அம்மாக்கு அடிபட்டதுக்கு அப்புறம் அத பத்தி ரொம்பவே யோசிச்சதா சொன்னீங்க. ஆமா... அம்மா இப்ப எப்படி இருக்காங்க?

சோஃபியா: கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்காங்க, ஆனா இன்னைக்கு கொஞ்சம் பரவால.

மரியா: ஓ அப்படியா? இந்த மாதிரி சூழ்நிலைய சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்தான்.

சோஃபியா: ஆமா, இன்னும் எவ்ளோ காலம்தான் இவங்க இந்த மாதிரி கஷ்டப்படணுமோ தெரியல.

மரியா: யாரா இருந்தாலும் இப்படி யோசிக்கிறது சகஜம்தான். கடவுளுக்கு சக்தி இருந்தா ஏன் இவ்ளோ காலம் கஷ்டத்தயெல்லாம் தீர்க்காம இருக்காருங்கறத பத்தி இந்த தடவை பேசலாம்னு சொல்லியிருந்தேன்.

சோஃபியா: ஆ... ஞாபகம் இருக்கு.

மரியா: இத பத்தி பைபிள் என்ன சொல்லுதுனு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, போன தடவை நாம பேசுன விஷயங்கள கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாக்கலாம்.

சோஃபியா: ஓகே.

மரியா: அந்த காலத்துல வாழ்ந்த கடவுள்பக்தியுள்ள ஒருத்தர்கூட, கடவுள் ஏன் கஷ்டத்த விட்டுவெச்சிருக்காருனு கேட்டாரு. அப்படி கேட்டதுக்காக கடவுள் அவர திட்டவும் இல்ல, அவருக்கு விசுவாசம் கம்மியா இருக்குன்னும் சொல்லல.

சோஃபியா: ஆமா, அந்த விஷயம் எனக்கு ரொம்ப புதுசா இருந்துச்சு.

மரியா: அதோட, நாம கஷ்டப்படணும்னு யெகோவா நெனைக்கறதே இல்லனுகூட பாத்தோம். அவரோட மக்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் ‘அவரும் வேதனைப்பட்டார்’னு பைபிள் சொல்லுது. * நாம கஷ்டப்படுறத பாத்து கடவுளும் வருத்தப்படுறாருனு தெரிஞ்சுக்கறது மனசுக்கு ஆறுதலா இருக்கு, இல்லீங்களா?

சோஃபியா: ஆமா, கண்டிப்பா.

மரியா: கடைசியா, கடவுளுக்கு எல்லா சக்தியும் இருக்குறதுனால, அவரு நெனைச்சா எப்ப வேணாலும் நம்ம கஷ்டத்துக்கு முடிவுகட்ட முடியுங்கறதயும் நாம பாத்தோம்.

சோஃபியா: அதுதான் எனக்கு புரியல. பிரச்சினைகள தடுத்து நிறுத்துற சக்தி கடவுளுக்கு இருக்குனா அவரு ஏன் தடுக்க மாட்டேங்குறாரு?

சாத்தான் சொன்ன பொய்

மரியா: அதுக்கான பதில இப்ப நாம பாக்கலாம். பைபிளோட முதல் புத்தகம் ஆதியாகமத்த எடுத்துக்குறீங்களா? ஆதாம் ஏவாள் ஒரு பழத்த சாப்பிட்ட கதை உங்களுக்கு தெரியும்தானே?

சோஃபியா: ஆமாமா, சண்டே ஸ்கூல்ல அத படிச்சிருக்கேன். ஒரு மரத்துல இருக்குற பழத்த சாப்பிட கூடாதுனு கடவுள் சொல்லுவாரு, ஆனா அவங்க அவரோட பேச்ச கேக்காம அந்த பழத்த சாப்பிட்டுருவாங்க.

மரியா: கரெக்ட்டா சொன்னீங்க. அவங்க அந்த பழத்த சாப்பிடறதுக்கு முன்னாடி என்னெல்லாம் நடந்துச்சுனு இப்ப பாக்கலாம். அந்த சம்பவங்களுக்கும், நாம ஏன் கஷ்டப்படுறோம் அப்படிங்கற கேள்விக்கும் நேரடியான சம்பந்தம் இருக்கு. ஆதியாகமம் 3-வது அதிகாரம் 1-5 வசனங்கள கொஞ்சம் வாசிக்கிறீங்களா?

சோஃபியா: சரி. “கடவுளாகிய யெகோவா படைத்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட பாம்பு மிகவும் ஜாக்கிரதையானதாக இருந்தது. அது அந்தப் பெண்ணிடம், ‘தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?’ என்று கேட்டது. அதற்கு அந்தப் பெண், ‘தோட்டத்தில் இருக்கிற மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம். ஆனால், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்’ என்றாள். அப்போது அந்தப் பாம்பு அவளிடம், ‘நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள். நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்’ என்று சொன்னது.”

மரியா: தேங்ஸ் சோஃபியா. இப்ப இந்த வசனங்கள்ல இருக்குற சில குறிப்புகள பாக்கலாம். உண்மைல அந்த பாம்ப பயன்படுத்தி சாத்தான்தான் ஏவாள்கிட்ட பேசுனாங்கறத இன்னொரு வசனம் காட்டுது. * ஒரு மரத்தோட பழத்த சாப்பிட கூடாதுனு கடவுள் சொல்லியிருந்தத பத்தி சாத்தான் ஏவாள்கிட்ட கேட்டான். அந்த வசனத்துல கவனிச்சீங்களா, ஆதாமும் ஏவாளும் அந்த பழத்த சாப்பிட்டா கடவுள் என்ன தண்டனை கொடுப்பாருனு சொன்னாரு?

சோஃபியா: அவங்க செத்துப்போயிடுவாங்கனு சொன்னாரு.

மரியா: கரெக்ட். ஆனா சாத்தான், ‘நீங்க கண்டிப்பா செத்துப்போக மாட்டீங்க’னு சொன்னான். அப்படினா, கடவுள்தான் ஏதோ பொய் சொல்றதா அவர்மேல ஒரு பெரிய பழிய போட்டான்.

சோஃபியா: இந்த விஷயத்த பத்தி இப்போதான் நான் கேள்விப்படறேன்.

மரியா: கடவுள் பொய் சொல்றாருனு சாத்தான் சொன்னப்போ புதுசா ஒரு பிரச்சினைய கிளப்புனான். அத தீர்க்குறதுக்கு காலம் தேவைப்படுது. ஏன் தெரியுங்களா?

சோஃபியா: தெரியலயே.

மரியா: சரி, இப்ப ஒரு உதாரணத்த பாக்கலாம். திடீர்னு ஒருநாள் நான் உங்ககிட்ட வந்து, உங்களவிட நான்தான் பலசாலினு சொல்றேனு வெச்சுக்குவோம். அப்படி இல்லங்கறத நீங்க எப்படி நிரூபிப்பீங்க?

சோஃபியா: ஏதாவது ஒரு டெஸ்ட் வெச்சு பாக்க வேண்டியதுதான்.

மரியா: கரெக்ட்டா சொன்னீங்க. நம்ம ரெண்டு பேர்ல யாரால ஒரு பெரிய வெயிட்டை தூக்க முடியுதுனு பாத்தா அது தெரிஞ்சுபோயிடும். யாருக்கு பலம் ஜாஸ்தினு தெரிஞ்சுக்குறது ரொம்ப சிம்பிள்தான்.

சோஃபியா: ம்... புரியுது.

மரியா: ஆனா, நான் உங்களவிட பலசாலினு சொல்றதுக்கு பதிலா உங்களவிட ரொம்ப நேர்மையானவனு சொல்றேனு வெச்சுக்கோங்க. அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு, இல்லீங்களா?

சோஃபியா: ம்... ஆமா.

மரியா: அதுக்கு டெஸ்ட் வெச்ச மாதிரியே இதுக்கும் ஒரு சின்ன டெஸ்ட் வெச்சு நிரூபிக்க முடியாது, இல்லீங்களா?

சோஃபியா: ஆமா.

மரியா: நம்ம ரெண்டு பேர்ல யார் ரொம்ப நேர்மையானவங்கனு மத்தவங்க கவனிச்சு சொல்றதுக்கு நெறைய டைம் கொடுக்கணும். உண்மைய நிரூபிக்குறதுக்கு அதுதான் ஒரே வழி.

சோஃபியா: கரெக்ட்தான்.

மரியா: இப்ப மறுபடியும் ஆதியாகமத்துக்கு வரலாம். ‘கடவுளவிட நான்தான் பலசாலி’ அப்படினா சாத்தான் சொன்னான்?

சோஃபியா: இல்ல.

மரியா: அப்படி சொல்லியிருந்தா, அவன் சொன்னது தப்புனு கடவுள் உடனே நிரூபிச்சிருப்பாரு. ஆனா, கடவுளவிட தான்தான் ரொம்ப நேர்மையானவன்னு சாத்தான் சொன்னான். ஏவாள்கிட்ட, ‘கடவுள் உங்ககிட்ட பொய் சொல்றாரு, நான்தான் உண்மைய சொல்றேன்’ அப்படிங்கற மாதிரி சொன்னான்.

சோஃபியா: இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு.

மரியா: கடவுளுக்கு நெறைய ஞானம் இருக்கு. அதனால, சாத்தான் எழுப்புன பிரச்சினைய தீர்க்குறதுக்கு ஒரே வழி டைம் கொடுக்குறதுதான் அப்படினு கடவுள் முடிவு பண்ணுனாரு. யாரு உண்மை பேசுறது, யாரு பொய் பேசுறது அப்படிங்கறது கடைசில தெரியவந்துடும்.

ஒரு முக்கியமான சவால்

சோஃபியா: ஏவாள் செத்துப்போனப்பவே கடவுள்தான் உண்மை சொல்றாருங்கறது தெரிஞ்சுடுச்சு, இல்லையா?

மரியா: ஆமா, ஆனா அது மட்டுமே சாத்தானோட சவால் கிடையாது. 5-வது வசனத்த மறுபடியும் பாருங்க. ஏவாள்கிட்ட சாத்தான் வேற என்னவும் சொன்னான்?

சோஃபியா: அந்த பழத்த சாப்பிட்டா ஏவாளோட கண்கள் தெறந்திடும்னு சொன்னான்.

மரியா: ஆமா, கரெக்ட். ‘நீங்க அந்த பழத்த சாப்பிட்டா நன்மை தீமைய தெரிஞ்சுகிட்டு கடவுள் மாதிரி ஆயிடுவீங்கனு கடவுளுக்கு தெரியும்’னு சொன்னான். அப்படினா, கடவுள் மனுஷங்களுக்கு ஏதோவொரு நல்லதை தராம வெச்சிருக்காருனு மறைமுகமா சொன்னான்.

சோஃபியா: ஓ..

மரியா: இதுவும் ஒரு பெரிய சவாலா இருந்துச்சு.

சோஃபியா: அது எப்படி?

மரியா: ஏவாளும் சரி, மத்த எல்லா மனுஷங்களும் சரி, கடவுளோட ஆட்சி இல்லாமலேயே நல்லா வாழ முடியும்னு சாத்தான் மறைமுகமா சொல்லவந்தான். இந்த விஷயத்திலயும் அவன் சொல்றத நிரூபிக்குறதுக்கு டைம் கொடுக்குறதுதான் சரியா இருக்கும்னு யெகோவாவுக்கு தெரியும். அதனால, கொஞ்ச காலத்துக்கு இந்த உலகத்த ஆட்சி செய்ய சாத்தானை அவரு அனுமதிச்சிருக்காரு. இந்த உலகத்துல ஏன் இவ்ளோ கஷ்டம் இருக்குனு இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும். சாத்தான்தான் இந்த உலகத்த ஆட்சி பண்ணிட்டு இருக்கான், கடவுள் கிடையாது. * இது ஒருபக்கம் இருந்தாலும், சில நல்ல விஷயங்களும் இருக்கு.

சோஃபியா: அது என்னது?

மரியா: கடவுள பத்தி ரெண்டு அருமையான விஷயங்கள பைபிள் சொல்லுது. முதல் விஷயம் என்னென்னா, நாம கஷ்டப்படுறப்போ யெகோவா நமக்கு துணையா இருக்காரு. உதாரணத்துக்கு, தாவீது ராஜா என்ன சொன்னாருனு சங்கீதம் 31:7-ல பாக்கலாம். தாவீது எக்கச்சக்கமான கஷ்டங்கள அனுபவிச்சாரு. ஆனாலும், கடவுள்கிட்ட அவரு என்ன சொல்றாருனு பாருங்க. அந்த வசனத்த நீங்க வாசிக்கிறீங்களா?

சோஃபியா: ஓகே. “நீங்கள் காட்டும் மாறாத அன்பினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.”

மரியா: தாவீது எவ்வளவோ கஷ்டத்த அனுபவிச்சாலும், அதயெல்லாம் யெகோவா பாக்குறாரு அப்படிங்கறது அவருக்கு தெரியும். அது அவருக்கு ஆறுதலா இருந்துச்சு. நம்ம படுற கஷ்டங்கள்கூட யெகோவாவுக்கு நல்லா தெரியும். நம்ம வேதனைகள மத்த மனுஷங்களால புரிஞ்சுக்க முடியாட்டியும் யெகோவா நல்லா புரிஞ்சுக்குறாரு. இத தெரிஞ்சுக்குறது உங்களுக்கும் ஆறுதலா இருக்கா?

சோஃபியா: ஆமா, ரொம்ப ஆறுதலாதான் இருக்கு.

மரியா: ரெண்டாவது விஷயம் என்னென்னா, நாம எப்பவும் கஷ்டப்பட்டுட்டே இருக்குறதுக்கு கடவுள் விட மாட்டாரு. சாத்தானோட ஆட்சிக்கு அவரு சீக்கிரம் ஒரு முடிவுகட்டப்போறதா பைபிள் சொல்லுது. எல்லா பிரச்சினைகளயும் அவரு மொத்தமா சரிசெஞ்சிடுவாரு. உங்க கஷ்டத்தயும் உங்க அம்மாவோட கஷ்டத்தயும்கூட அவரு தீர்த்துவெச்சிடுவாரு. கடவுள் கண்டிப்பா எல்லா கஷ்டத்துக்கும் சீக்கிரத்துல முடிவுகட்டப்போறாருனு நாம ஏன் நம்பலாம் தெரியுமா? இத பத்தி அடுத்த வாரம் வந்து சொல்லட்டுமா? *

சோஃபியா: சரி, வாங்க.

பைபிள் சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது ஒரு கேள்வி இருக்கிறதா? யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ அவர்கள் செய்யும் விஷயங்களைப் பற்றியோ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவின் சாட்சிகள் யாரிடமாவது தயங்காமல் கேளுங்கள். அதைப் பற்றி அவர்கள் சந்தோஷமாக உங்களோடு பேசுவார்கள்.

^ பாரா. 17 ஏசாயா 63:9-ஐப் பாருங்கள்.

^ பாரா. 55 யோவான் 12:31-ஐயும் 1 யோவான் 5:​19-ஐயும் பாருங்கள்.

^ பாரா. 61 கூடுதல் விவரங்களுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 9-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது. இது www.pr418.com வெப்சைட்டிலும் கிடைக்கும்.