Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 நம் வரலாற்றுச் சுவடுகள்

நூறு வயதைத் தொட்ட விசுவாசக் காவியம்!

நூறு வயதைத் தொட்ட விசுவாசக் காவியம்!

“அவரைப் பார்த்தால் சகோதரர் ரஸல் மாதிரியே இருக்கு. ஆனா, அவர் இல்ல!”—1914-ல் “ஃபோட்டோ டிராமா”-வைப் பார்த்த ஒருவர்.

“ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்!” பைபிளில் விசுவாசத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு படைப்பு. இது அரங்கேறி நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. பரிணாமவாதிகள், பைபிள் விமர்சகர்கள், சந்தேகவாதிகள் என மக்களின் விசுவாசத்தைப் பலர் குலைத்துக்கொண்டிருந்த சமயத்தில் யெகோவாவே படைப்பாளர் என்பதைப் பறைசாற்றிய அற்புத காவியம் இது.

அன்று பைபிள் மாணாக்கர்களை சார்ல்ஸ் டி. ரஸல் வழிநடத்தி வந்தார். சத்தியத்தை அறிவிப்பதற்காக, அவர்கள் ஏற்கெனவே 30 வருடங்களுக்கும் மேலாக பிரசுரங்களைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனாலும், எல்லா மக்களுக்கும் பைபிள் சத்தியம் விரைவாகச் சென்றெட்டுவதற்கான மிகச் சிறந்த வழியைப் பற்றியே சகோதரர் ரஸல் சதா யோசித்துக்கொண்டிருந்தார். இப்போது அவர்களுக்கு ஒரு புதிய வழி திறந்தது; அதுதான் இயங்கும் படங்கள்.

நற்செய்தியை எங்கும் பறைசாற்றிய இயங்கும் படங்கள்

1890-களில் ஊமைப் படங்கள் உலகில் அறிமுகமாயின. 1903-ன் உதயத்தில், நியு யார்க் சிட்டியிலுள்ள ஒரு சர்ச்சில் மத சம்பந்தமான படம் ஒன்று காட்டப்பட்டது. 1912-ல் இயங்கும் திரைப்படங்கள் உலகில் அடியெடுத்து வைத்த சமயத்திலேயே சகோதரர் ரஸல் “ஃபோட்டோ டிராமா” தயாரிப்புக்காகத் துணிவுடன் களமிறங்கினார். பிரசுரங்களோடு இந்தப் புதிய படைப்பும் கைகோர்த்துக்கொண்டால், பைபிள் சத்தியம் மக்களுக்கு மிக விரைவாகச் சென்றெட்டும் என அவர் நம்பினார்.

எட்டு மணிநேரத்திற்கு ஓடிய இந்த “ஃபோட்டோ டிராமா,” நான்கு பகுதிகளாகக் காட்டப்பட்டது. பேச்சாற்றல்மிக்க ஒருவருடைய குரலில் பதிவு செய்யப்பட்ட 96 சுருக்கமான பைபிள் சொற்பொழிவுகளும் ரம்மியமான இசையுடன்கூடிய நிறைய காட்சிகளும் அதில் இடம்பெற்றன. திறமையான ஆப்பரேட்டர்கள் அதை இயக்கினார்கள். கலர் ஸ்லைடுகளும் பிரபல பைபிள் கதைகளின் படங்களும் காட்டப்பட்டபோது, அதற்கேற்றாற்போல் அவர்கள் ஒலி மற்றும் இசைப் பதிவுகளை ஃபோனோகிராஃபில் இயக்கினார்கள்.

“நட்சத்திரங்களின் படைப்பு முதல் கிறிஸ்துவின் மகத்தான ஆயிர வருட ஆட்சிவரை எல்லாவற்றையும் உள்ளடக்கிய படம்.”—பி. ஸ்டுவர்ட் பார்ன்ஸ், வயது 14, 1914-ல்

பெரும்பாலான படக்காட்சிகளின் சுருள்களையும் கண்ணாடி ஸ்லைடுகளையும் ஸ்டுடியோக்களிலிருந்து வாங்கினார்கள். இவற்றிலிருந்த ஒவ்வொரு படங்களும் பிலடெல்ஃபியா, நியு யார்க், பாரிஸ், லண்டன் ஆகிய இடங்களைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்களால் வண்ணம் தீட்டப்பட்டவை. பெத்தேல் கலைத் துறையைச் சேர்ந்த குழுக்களும்  வண்ணம் தீட்டும் வேலையில் பெரும் பங்காற்றின. குறிப்பாக, உடைந்துபோன ஸ்லைடுகளுக்குப் பதிலாக புதிய ஸ்லைடுகளை அவர்கள் உருவாக்கினர். படச்சுருள்களை வெளியேயிருந்து வாங்கியதோடு, ஆபிரகாம், ஈசாக்கு, ஆபிரகாமைத் தடுத்த தேவதூதர் ஆகியோரைப் போல பெத்தேல் அங்கத்தினர்களை நடிக்க வைத்து நியு யார்க்கிலுள்ள யாங்கர்ஸ் நகரில் படம் பிடித்தனர்.—ஆதி. 22:9-12.

இதைப் பற்றி சகோதரர் ரஸலுடைய நண்பர் ஒருவர் செய்தியாளர்களிடம், “மதத்தின் வளர்ச்சிக்காக இதுவரை பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் இவற்றையெல்லாம் விஞ்சுமளவுக்கு இந்தப் படைப்பு எண்ணற்றோரை பைபிளிடமாக ஈர்க்கும்” என்று சொன்னார். மக்களின் ஆன்மீகப் பசியைப் போக்குவதற்கு எடுக்கப்பட்ட இந்தப் புதுமையான முயற்சியை மத குருமார்கள் வரவேற்றார்களா? இல்லை! “ஃபோட்டோ டிராமாவிற்கு,” குருமார் எல்லோரும் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தார்கள். அதோடு, மக்கள் அதைப் பார்ப்பதைத் தடுப்பதற்காக, அவர்களில் சிலர் சூழ்ச்சி செய்தார்கள். ஒரு சமயம் “ஃபோட்டோ டிராமாவை” மக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, சர்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மின்சாரத்தைத் துண்டித்தார்கள்.

 

இருந்தாலும், “ஃபோட்டோ டிராமாவை” இலவசமாகப் பார்ப்பதற்கு திரை அரங்குகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது. அமெரிக்காவிலுள்ள 80 நகரங்களில், ஒவ்வொரு நாளும் “ஃபோட்டோ டிராமா” திரையிடப்பட்டது. அந்த ‘பேசும் படத்தை’ முதல் முறையாக பார்த்த அநேகர் வியப்படைந்தார்கள். ‘டைம்-லாப்ஸ் ஃபோட்டோகிராஃபி’ மூலம் உருவாக்கப்பட்ட பூ விரியும் காட்சியையும் குஞ்சு பொரிக்கும் காட்சியையும் மக்கள் பார்த்து ரசித்தார்கள். அதில் காட்டப்பட்ட அறிவியல் பூர்வமான விஷயங்கள், யெகோவாவின் வியக்கவைக்கும் ஞானத்தைப் படம்பிடித்துக் காட்டின. ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, “ஃபோட்டோ டிராமாவின்” அறிமுகக் காட்சியில் வந்த சகோதரர் ரஸலைப் பார்த்தவுடன் “அவரைப் பார்த்தால் சகோதரர் ரஸல் மாதிரியே இருக்கு. ஆனா, அவர் இல்ல!” என்று ஒருவர் நினைத்தார்.

பைபிள் கல்வியைப் புகட்டுவதில் ஒரு மைல்கல்

சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் சங்கத்திற்குச் சொந்தமாயிருந்த நியு யார்க் சிட்டி தியேட்டரில், ஜனவரி 11, 1914-ல் “ஃபோட்டோ டிராமா” திரையிடப்பட்டது

எழுத்தாளரும் திரைப்பட சரித்திராசிரியருமான டிம் டெர்க்ஸ், “ஃபோட்டோ டிராமாவை” பற்றி இப்படி விவரித்தார்: “ஒலி (பதிவு செய்யப்பட்ட பேச்சு), இயங்கும் படங்கள், வண்ண வண்ண ஸ்லைடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான்.” இதற்குமுன் வெளியான படங்களில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இதிலுள்ள எல்லா அம்சங்களும் ஒருசேர பயன்படுத்தப்படவில்லை; அதுவும் பைபிள் சம்பந்தப்பட்ட படத்தில்! முதல் வருடத்தில் மட்டுமே வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து ஆகிய நாடுகளில் சுமார் 90 லட்சம் மக்கள் இதைப் பார்த்து ரசித்தார்கள். எந்தப் படத்திற்கும் இத்தனை பேர் திரண்டுவந்திருக்க மாட்டார்கள்!

இந்த “ஃபோட்டோ டிராமா” ஜனவரி 11, 1914-ல் நியு யார்க் சிட்டியில் திரையிடப்பட்டு, ஏழு மாதங்களுக்குப் பிறகு உலகையே உலுக்கிய முதல் உலகப் போர் வெடித்தது. ஆனாலும், “ஃபோட்டோ டிராமாவை” பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது; பூஞ்சோலை பூமியைப் பற்றிய தத்ரூபமான காட்சிகளை அதில் கண்டு ஆறுதல் அடைந்தார்கள். 1914-ல் நிலைமை மோசமாக இருந்தபோதிலும், இந்தப் படம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது!

வட அமெரிக்கா எங்கும், இருபது “ஃபோட்டோ டிராமா” பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன

[பக்கம் 32-ன் படம்]

சுமார் 3 கி.மீ. நீளமுள்ள படங்கள், 26 ஃபோனோகிராஃப் ரெக்கார்டுகள், சுமார் 500 ஸ்லைடுகள் கொண்ட படைப்பை, திறமைவாய்ந்த ஆப்பரேட்டர்கள் துல்லியமான நேரத்திற்குள் இயக்கினார்கள்

[பக்கம் 31-ன் படம்]

உள்ளூர் சபைகளிலிருந்த வரவேற்பாளர்கள், “ஃபோட்டோ டிராமா” பற்றிய லட்சக்கணக்கான சிறுபுத்தகங்களை இலவசமாய் கொடுத்தார்கள்

‘சமாதானத்தின் மகனாக’ திகழ, சிறுவன் இயேசுவின் படம் பொறித்த “பேட்ஜ்” அனைவருக்கும் கொடுக்கப்பட்டது

[பக்கம் 31-ன் படம்]

சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் சங்கத்திற்குச் சொந்தமாயிருந்த நியு யார்க் சிட்டி தியேட்டரில், ஜனவரி 11, 1914-ல் “ஃபோட்டோ டிராமா” திரையிடப்பட்டது