Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ளுங்கள்

நம்பிக்கையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ளுங்கள்

‘மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருக்கட்டும்.’—பிர. 11:8.

1. நம் சந்தோஷத்திற்காக யெகோவா பொழிந்திருக்கும் ஆசீர்வாதங்கள் யாவை?

வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நம் எல்லோர்மீதும் யெகோவா ஏராளமான ஆசீர்வாதங்களைப் பொழிகிறார். உதாரணமாக, நமக்கு உயிரைக் கொடுத்திருக்கிறார். அதனால், உண்மை வழிபாட்டுக்கு ஈர்த்த அவரை நாம் போற்றிப் புகழ்கிறோம். (சங். 144:15; யோவா. 6:44) அவர் நம்மீது அளவற்ற அன்பு காட்டுகிறார்; அவருடைய சேவையில் நிலைத்திருக்க உதவுகிறார். (எரே. 31:3; 2 கொ. 4:16) அதுமட்டுமா, ஆன்மீகப் பூஞ்சோலையை நாம் அனுபவித்து மகிழ்கிறோம். இந்தப் பூஞ்சோலையில் ஏராளமான ஆன்மீக உணவையும், சகோதரர்களின் அன்பையும் ருசிக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் பெற்றிருக்கிறோம்.

2. உண்மையுள்ள ஊழியர்கள் சிலருக்கு என்ன தவறான மனப்பான்மை இருக்கிறது?

2 சந்தோஷமாக வாழ இப்படி எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும், கடவுளுடைய உண்மை ஊழியர்கள் சிலர் நம்பிக்கையற்ற மனப்பான்மையால் சந்தோஷத்தைத் தொலைத்துவிடுகிறார்கள். ‘யெகோவா என்னையும் என் சேவையையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்’ என்று நினைக்கிறார்கள். இப்படித் தங்களை எப்போதும் தவறாக எடைபோடுகிறவர்களுக்கு, “அநேக வருஷம்” மகிழ்ச்சியோடு வாழ்வது, ஒரு கனவாகவே இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஓர் இருண்ட உலகம்.—பிர. 11:8.

3. நம்பிக்கையற்ற மனப்பான்மைக்கு காரணமாய் இருப்பவை எவை?

 3 ஏமாற்றங்கள், நோய்நொடிகள், முதுமையால் வரும் பலவீனங்கள் போன்றவை நம்பிக்கையற்ற மனப்பான்மைக்குக் காரணமாக இருக்கலாம். (சங். 71:9; நீதி. 13:12; பிர. 7:7) நம் இருதயம் வஞ்சகமானது என்பதை மறந்துவிடக்கூடாது. கடவுள் நம்மீது அன்பாக இருந்தாலும் நம் இருதயம் நம்மைக் குற்றப்படுத்திக்கொண்டே இருக்கலாம். (எரே. 17:9; 1 யோ. 3:20) அதோடு, சாத்தானும் கடவுளுடைய ஊழியர்களைப் பற்றிப் பல பொய்களை பரப்புகிறான். சாத்தானுடைய மனப்பான்மையைக் காட்டுகிறவர்கள், யோபுவிடம் விசுவாசமற்ற எலிப்பாஸ் சொன்னது போல கடவுளுக்குமுன் நாம் லாயக்கற்றவர்கள் என்ற எண்ணத்தை விதைக்கலாம். யோபுவின் காலத்தில் மட்டுமல்ல நம்முடைய காலத்திலும் சாத்தான் இந்தத் தவறான எண்ணத்தைப் பரப்புகிறான்.—யோபு 4:18, 19.

4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோம்?

4 ‘இருளின் பள்ளத்தாக்கிலே நடப்பவர்களோடு’ தாம் இருப்பதாக யெகோவா உறுதியளிக்கிறார். (சங். 23:4) எப்படி? தம்முடைய வார்த்தையின் மூலமாக நம் கூடவே இருக்கிறார். நமக்குள் ‘ஆழமாக வேரூன்றியிருக்கும்’ தவறான எண்ணங்களையும் நம்பிக்கையற்ற மனப்பான்மையையும் தகர்த்தெறியும் “வல்லமை” கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிறது. (2 கொ. 10:4, 5) ஆகவே, நம்பிக்கையான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும் அதைக் காத்துக்கொள்ளவும் பைபிளை எப்படிப் பயன்படுத்தலாம் என இப்போது பார்க்கலாம். இப்படிச் செய்வதால் நீங்களும் பயனடையலாம், மற்றவர்களும் பயன்பெறலாம்.

நம்பிக்கையான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள பைபிளைப் பயன்படுத்துங்கள்

5. நம்பிக்கையான மனப்பான்மையோடு இருக்க எது நமக்கு உதவும்?

5 நம்பிக்கையான மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதற்கு அப்போஸ்தலன் பவுல் சில அறிவுரைகளைக் கொடுக்கிறார். கொரிந்திய கிறிஸ்தவர்களிடம், “விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே எப்போதும் சோதித்துப் பாருங்கள்” என்று சொன்னார். (2 கொ. 13:5) ‘விசுவாசம்’ என்பது, பைபிளிலுள்ள எல்லா கிறிஸ்தவ போதனைகளையும் குறிக்கிறது. நம்முடைய சொல்லும் செயலும் அந்தப் போதனைகளுக்கு ஏற்ப இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் ‘விசுவாசத்தில்’ நிலைத்திருக்கிறோம் என்று அர்த்தம். நமக்குப் பிடித்த போதனைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடக் கூடாது. அந்தப் போதனைகள் எல்லாவற்றையும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.—யாக். 2:10, 11.

6. ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா’ என்று நம்மை நாமே ஏன் சோதித்துப் பார்க்க வேண்டும்? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.)

6 அப்படிச் சோதித்துப் பார்க்க ஒருவேளை நீங்கள் தயங்கலாம், அதுவும் தோற்றுவிடுவோமோ என்று பயப்படும்போது. ஆனால், நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதைவிட யெகோவா நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம். ஏனென்றால், நம்முடைய நினைவுகளைவிட அவரது நினைவுகள் உயர்ந்தவை. (ஏசா. 55:8, 9) அவர் நம்மைக் குற்றப்படுத்துவதற்கு அல்ல, நம்மிடமுள்ள நல்ல குணங்களைக் கண்டுபிடித்து நமக்கு உதவுவதற்காகவே நம்மை ஆராய்கிறார். நாம் பைபிளைப் பயன்படுத்தி ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா’ என்று சோதித்துப் பார்க்கும்போது, கடவுள் நம்மைப் பார்க்கும் விதமாகவே நம்மை நாம் பார்க்க முடியும். அப்போது, நாம் லாயக்கற்றவர்கள் என்ற எந்தவொரு எண்ணத்தையும் களைந்து, யெகோவாவின் பார்வையில் நாம் அருமையானவர்கள் என்பதை உணர முடியும். அதன் பலன்? ஜன்னல் திரைகளை விலக்கும்போது இருள் சூழ்ந்த ஓர் அறை எப்படி சூரிய ஒளியால் பிரகாசமடைகிறதோ, அதேபோல் நம் மனதும் பிரகாசமடையும்.

7. பைபிளிலுள்ள உண்மை ஊழியர்களின் உதாரணங்களிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?

7 நம்மை நாமே சோதித்துப் பார்ப்பதற்கு சிறந்த வழி, பைபிளில் உள்ள உண்மை ஊழியர்களின் உதாரணங்களைச் சிந்தித்துப் பார்ப்பதாகும். அவர்களுடைய சூழ்நிலைகளையும் உணர்ச்சிகளையும் உங்கள் சூழ்நிலைகளோடும் உணர்ச்சிகளோடும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இப்போது மூன்று பைபிள் உதாரணங்களைக் கவனிக்கலாம். பைபிளைப் பயன்படுத்தி நாம் ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா’ என்பதைச் சோதித்துப் பார்த்து, நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள இவை உதவும்.

ஏழை விதவையின் உதாரணம்

8, 9. (அ) ஏழை விதவையின் சூழ்நிலை எப்படி இருந்தது? (ஆ) எப்படிப்பட்ட எண்ணங்கள் அந்த ஏழை விதவையை அலைக்கழித்திருக்கும்?

8 எருசலேம் ஆலயத்தில், இயேசு ஓர் ஏழை விதவையைக் கவனித்தார். கஷ்டங்களின் மத்தியிலும்  நம்பிக்கையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ள அந்த விதவையின் உதாரணம் நமக்கு உதவும். (லூக்கா 21:1-4-ஐ வாசியுங்கள்.) அந்த விதவையின் சூழ்நிலையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவள் ஏற்கெனவே கணவனை இழந்த துக்கத்தில் தவித்துக்கொண்டிருந்தாள். அதோடு, அவளைப் போன்று கஷ்டத்தில் வாடுபவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்களுடைய ‘சொத்துக்களை விழுங்கிக்கொண்டிருந்த’ மதத் தலைவர்களின் தொல்லைகளையும் அவள் சகிக்க வேண்டியிருந்தது. (லூக். 20:47) பரம ஏழையாக இருந்ததால், குறைந்த மதிப்புள்ள இரண்டு காசைத்தான் அவளால் காணிக்கையாகப் போட முடிந்தது. அன்றைய தொழிலாளிகள் இந்தக் காசை சில நிமிடங்களிலேயே சம்பாதித்து விடுவார்கள்.

9 குறைந்த மதிப்புள்ள இரண்டு காசை எடுத்துக்கொண்டு ஆலய முற்றத்தில் அடியெடுத்து வைத்தபோது அவளுடைய மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கணவன் உயிரோடிருந்த சமயத்தில் போட்ட காணிக்கையோடு ஒப்பிட இந்தக் காசு அற்பமானது என்று நினைத்திருப்பாளா? மற்றவர்கள் நிறைய காணிக்கைகள் போடுவதைப் பார்த்து சங்கோஜப்பட்டிருப்பாளா? அவர்களுடைய காணிக்கைகளுக்குமுன் தன்னுடைய காசு ஒன்றுமே இல்லை என்று நினைத்திருப்பாளா? இதுபோன்ற எண்ணங்களால் அவள் அலைக்கழிக்கப்பட்டிருந்தாலும், உண்மை வழிபாட்டிற்காகத் தன்னால் முடிந்ததைச் செய்தாள்.

10. அந்த ஏழை விதவை கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்கவள் என்பதை இயேசு எப்படி சுட்டிக்காட்டினார்?

10 அந்த விதவையையும் அவளுடைய காணிக்கையையும் யெகோவா உயர்வாக மதித்தார் என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். அவள் “மற்ற எல்லாரையும்விட [பணக்காரர்களைவிட] அதிகமாகப் போட்டாள்” என்று சொன்னார். அவள் போட்ட காசுகள் மற்றவர்கள் போட்ட காணிக்கையோடு காணிக்கையாக கலந்திருந்தாலும், அவளை மட்டும் இயேசு மெச்சிப் பேசினார். காணிக்கைகளை எண்ணுபவர்கள் அந்த இரண்டு சிறிய காசுகளையும் பார்த்திருப்பார்கள். ஆனால், அந்தக் காசுகளையும் அதைப் பெட்டியில் போட்டவரையும் யெகோவா எத்தனை உயர்வாக மதிக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. மற்றவர்கள் அந்த விதவையைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பதோ, அந்த விதவை தன்னைப் பற்றி என்ன நினைத்தாள் என்பதோ முக்கியமல்ல. யெகோவா அவளைப் பற்றி என்ன நினைத்தார் என்பதே முக்கியம். இந்தப் பதிவை அடிப்படையாக வைத்து நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களையே சோதித்துப் பார்க்கலாம், அல்லவா?

ஏழை விதவையின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (பாராக்கள் 8-10)

11. ஏழை விதவையின் பதிவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

 11 உங்களுடைய சூழ்நிலைகள் யெகோவாவுக்கு நீங்கள் செய்யும் சேவையைப் பாதிக்கலாம். முதுமையாலோ முதுமையின் பாதிப்புகளாலோ சிலரால் ஊழியத்தில் குறைவாகவே ஈடுபட முடிகிறது. அப்படிப்பட்டவர்கள் ‘இந்தக் கொஞ்ச நேரத்தைப் போய் அறிக்கை செய்வதா’ என நினைக்கலாம். ஒருவேளை, நீங்கள் இளைஞராக, திடகாத்திரமாக இருந்தாலும் ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியாதிருக்கலாம். உலகம் முழுவதுமுள்ள கடவுளுடைய மக்கள் ஊழியத்தில் செலவிடும் மணிநேரங்களோடு ஒப்பிட ‘நான் செய்வது எந்த மூலைக்கு’ என நினைக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு, ஏழை விதவையின் உதாரணம் ஓர் அருமையான பாடத்தைக் கற்றுத்தருகிறது. கஷ்டமான சூழ்நிலைகளிலும் யெகோவாவுக்காக நாம் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர் கவனிக்கிறார், அதைப் பொக்கிஷமாகப் போற்றுகிறார். கடந்த வருடத்தில் நீங்கள் யெகோவாவுக்குச் செய்த சேவையைக் கொஞ்சம் மனத்திரையில் ஓடவிடுங்கள். ஒருவேளை, அரை மணிநேரமோ ஒரு மணிநேரமோ ஊழியத்தில் ஈடுபடுவதற்காக நீங்கள் நிறைய தியாகம் செய்திருப்பீர்கள்; அந்தக் குறைவான நேரத்தைக்கூட யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த ஏழை விதவையைப் போல, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்களென்றால், நீங்கள் ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்கள்’ என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

“என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள்”

12-14. (அ) நம்பிக்கையற்ற மனப்பான்மை எலியாவை எப்படி ஆட்டிப்படைத்தது? (ஆ) எலியா அப்படி உணர்ந்ததற்கு எது காரணமாக இருக்கலாம்?

12 தீர்க்கதரிசியான எலியாவுக்கு யெகோவாமீது மிகுந்த பற்றும் விசுவாசமும் இருந்தது. ஆனாலும், ஒரு சமயம் அவர் மனதளவில் மிகவும் சோர்வடைந்தார். அப்போது யெகோவாவிடம், “போதும் யெகோவாவே, என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். (1 இரா. 19:4, NW) அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை வாழ்க்கையில் சந்தித்திராத ஒருவருக்கு, எலியா பேசியது “மூடத்தனமாக” தெரியலாம். (யோபு 6:3, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆனால், அவருடைய உணர்ச்சிகள் நியாயமானவை. அவர் அப்படிப் பேசியதற்காக யெகோவா அவரைக் கண்டிக்கவில்லை. மாறாக, அவருக்கு உதவினார்.

13 எலியா அப்படிப் பேசியதற்கு என்ன காரணம்? யெகோவாதான் உண்மைக் கடவுள் என்பதை நிரூபிக்க எலியா சற்று முன்புதான் ஓர் அற்புதத்தைச் செய்திருந்தார். அதன் பிறகு, பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேரை அவர் கொன்று போட்டார். (1 இரா. 18:37-40) அந்த அற்புதத்தைப் பார்த்த கடவுளுடைய மக்கள் உண்மை வழிபாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என எலியா எதிர்பார்த்தார், ஆனால் அது நடக்கவில்லை. தன்னைக் கொல்லப்போவதாக பொல்லாத யேசபேல் ராணி அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் மரண பயத்தில் தெற்கே யூதாவைச் சேர்ந்த வனாந்தரத்துக்குத் தப்பியோடினார்.—1 இரா. 19:2-4.

14 உணவுக்கும் தண்ணீருக்கும் வழியில்லாத வனாந்தரத்தில் தன்னந்தனியாக இருந்த எலியா, தான் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து என்ன பிரயோஜனம் என நினைத்தார். “நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல” என்று யெகோவாவிடம் சொன்னார். அதாவது, எலும்புகளாகவும் மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிட்ட தன்னுடைய முன்னோர்களைப் போல தானும் பிரயோஜனமற்றவன் என்றார். எலியா தன்னுடைய நெறிமுறைகளை அடிப்படையாக வைத்து தன்னைச் சோதித்துப் பார்த்ததால் தான் தோல்வியடைந்து விட்டதாக... யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதாக... நினைத்தார்.

15. எலியாவைக் கடவுள் உயர்வாகக் கருதியதை அவருக்கு எப்படி உறுதிப்படுத்தினார்?

15 ஆனால், யெகோவா அவரை வேறுவிதமாகப் பார்த்தார். எலியாவை அவர் உயர்வாகக் கருதினார்; அதை அவருக்கு உறுதிப்படுத்தினார். எப்படி? அவரைப் பலப்படுத்த ஒரு தேவதூதனை அனுப்பினார். அதோடு, அவருக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து ஆதரித்தார். 40 நாட்கள் பயணித்து தெற்கே ஓரேப் மலையை அடைய அது அவருக்குத் தெம்பளித்தது. இஸ்ரவேலில் யெகோவாவுக்கு உண்மையாய் இருப்பவர்கள் யாருமே இல்லை என்ற தவறான எண்ணத்தை எடுத்துப்போட கடவுள் அவருக்கு அன்போடு உதவினார். மிக முக்கியமாக, எலியாவுக்கு புதிய நியமிப்புகளைக் கொடுத்தார்; அதை அவர் ஏற்றுக்கொண்டார். யெகோவா அளித்த உதவியால் புத்துயிரடைந்த எலியா, மீண்டும் தீர்க்கதரிசியாக தன்னுடைய சேவையைத் தொடர்ந்தார்.—1 இரா. 19:5-8, 15-19.

16. கடவுள் எந்தெந்த வழிகளில் உங்களை ஆதரித்து வந்திருக்கிறார்?

16 எலியாவின் உதாரணம், நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவும் நம்பிக்கையான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும் உங்களுக்கு உதவும். எப்படி? முதலாவது, யெகோவா உங்களை எந்தெந்த வழிகளிலெல்லாம் ஆதரித்து வந்திருக்கிறார் என்பதை  யோசித்துப் பாருங்கள். மூப்பரோ முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவரோ சரியான சமயத்தில் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கலாம். (கலா. 6:2) பைபிள், பிரசுரங்கள், கூட்டங்கள் ஆகியவை உங்களுக்கு ஆன்மீக பலத்தை அளித்திருக்கலாம். அடுத்த முறை இதுபோன்ற ஏதாவது உதவியைப் பெறும்போது, யெகோவாதான் இவற்றை அளிக்கிறார் என்பதை அறிந்து ஜெபத்தில் அவருக்கு நன்றி சொல்லுங்கள்.—சங். 121:1, 2.

17. யெகோவா எதை உயர்வாகக் கருதுகிறார்?

17 அடுத்ததாக, நம்பிக்கையற்ற மனப்பான்மை நம்மை வஞ்சித்துவிடும் என்பதை மனதில் வையுங்கள். நம்மைப் பற்றி நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதைவிட கடவுள் நம்மை எவ்வாறு கருதுகிறார் என்பதே முக்கியம். (ரோமர் 14:4-ஐ வாசியுங்கள்.) நாம் பக்தியோடும் உண்மையோடும் நடந்துகொள்வதை அவர் உயர்வாகக் கருதுகிறார். அவருடைய சேவையில் நாம் எந்தளவு சாதிக்கிறோம் என்பதை வைத்து அவர் நம்மை எடை போடுவதில்லை. எலியாவைப் போல உங்களுக்கே தெரியாமல் நீங்கள் நிறைய சாதித்திருக்கலாம். உதாரணத்திற்கு, சபையிலுள்ள மற்றவர்களுக்கு உதவியிருக்கலாம். நீங்கள் எடுத்த முயற்சியால் பிராந்தியத்தில் உள்ளவர்கள் சத்தியத்தைப் பற்றி தெரிந்திருக்கலாம்.

18. யெகோவாவிடமிருந்து நீங்கள் பெறும் நியமிப்புகள் எதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன?

18 அதோடு, நீங்கள் பெறும் ஒவ்வொரு நியமிப்பையும் யெகோவா உங்களோடு இருப்பதற்கான அத்தாட்சியாகக் கருதுங்கள். (எரே. 20:11) எலியாவைப் போல, நீங்களும் கடவுளுடைய சேவையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றோ விரும்பிய ஆன்மீக இலக்குகளை எட்ட முடியவில்லை என்றோ நினைத்து சோர்வடையலாம். ஆனாலும், நாம் யெகோவாவுக்குச் சாட்சியாக இருப்பதும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்! ஆகவே, விசுவாசத்தில் நிலைத்திருங்கள். அப்போது “உன் எஜமானோடு சேர்ந்து நீயும் சந்தோஷப்படு” என்று சொல்லப்பட்ட வார்த்தைகள் உங்கள் விஷயத்திலும் உண்மையாகும்.—மத். 25:23.

‘துயரப்படுகிறவரின் விண்ணப்பம்’

19. சங்கீதம் 102-ஐ எழுதியவர் என்ன சூழ்நிலையில் இருந்தார்?

19 சங்கீதம் 102-ஐ எழுதியவர் நம்பிக்கை இழந்திருந்தார். உடல்நலப் பிரச்சினையாலோ உணர்ச்சிப்பூர்வ வேதனையாலோ ‘துயரப்பட்டிருந்தார்.’ அவற்றைச் சமாளிக்க பலம் இல்லாதிருந்தார். (சங். 102, மேற்குறிப்பு) வேதனை, தனிமை, உணர்ச்சிப் போராட்டங்கள் ஆகியவற்றால் அவர் துவண்டு போயிருந்ததை அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன. (சங். 102:3, 4, 6, 11) யெகோவா தன்னைத் தாழத் தள்ளப்போவதாக நினைத்தார்.—சங். 102:9.

20. நம்பிக்கையற்ற மனப்பான்மையோடு போராடுபவர்களுக்கு ஜெபம் எப்படி உதவும்?

20 இருந்தாலும், சங்கீதக்காரனால் யெகோவாவைத் தொடர்ந்து துதிக்க முடிந்தது. (சங்கீதம் 102:19, 20, 22-ஐ வாசியுங்கள்.) விசுவாசத்தோடு இருப்பவர்களும்கூட சில சமயங்களில் வேதனை அடையலாம், எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் தவிக்கலாம் என்பதை 102-ஆம் சங்கீதம் காட்டுகிறது. “வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல்” பிரச்சினைகளோடு தனிமையில் வாடுவதாக சங்கீதக்காரன் உணர்ந்தார். (சங். 102:7) ஒருவேளை நீங்கள் அப்படி உணர்ந்தால், சங்கீதக்காரனைப் போல ஜெபத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள். அப்படிப்பட்ட ஜெபம், நம்பிக்கையற்ற மனப்பான்மையை எதிர்த்துப்போராட உங்களுக்கு உதவும். ‘திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதாக’ யெகோவா வாக்குக் கொடுக்கிறார். (சங். 102:16) அந்த வாக்குறுதியை நம்புங்கள்.

21. ஒருவர் நம்பிக்கையான மனப்பான்மையை எப்படித் தொடர்ந்து காத்துக்கொள்ள முடியும்?

21 நம்பிக்கையான மனப்பான்மையை விட்டுவிடாமல் அதைத் தொடர்ந்து காத்துக்கொள்ளவும் 102-ஆம் சங்கீதம் நமக்கு உதவுகிறது. சங்கீதக்காரன் துயரத்தில் வாடினாலும் யெகோவாவுடன் வைத்திருந்த நல்லுறவைப் பற்றி நினைத்துப் பார்த்தார். (சங். 102:12, 27) துன்ப துயரங்களைச் சகிக்க தம் மக்களுக்கு யெகோவா எப்போதும் உதவுவார் என்பதை அறிந்து அவர் ஆறுதல் அடைந்தார். நம்பிக்கையற்ற மனப்பான்மையால் சில காலத்திற்கு உங்களால் கடவுளுடைய சேவையில் அதிகம் ஈடுபட முடியாமல் போனால், அதைப் பற்றி ஜெபம் செய்யுங்கள். உங்களுடைய துயரங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, ‘கர்த்தருடைய நாமத்தை . . . பிரஸ்தாபப்படுத்துவதற்காகவும்’ ஜெபம் செய்யுங்கள்.—சங். 102:19, 22.

22. நாம் ஒவ்வொருவரும் எப்படி யெகோவாவைச் சந்தோஷப்படுத்தலாம்?

22 ஆக, நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோம் என்பதையும் யெகோவாவின் பார்வையில் மதிப்புள்ளவர்கள் என்பதையும் பைபிளின் அடிப்படையில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சீர்கெட்ட இந்த உலகத்தில் நம்பிக்கையற்ற மனப்பான்மையை நம்மால் முற்றிலுமாக விட்டொழிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், யெகோவாவின் சேவையில் நாம் ஒவ்வொருவரும் உண்மையாய் நிலைத்திருந்தால், அவரைச் சந்தோஷப்படுத்தலாம், மீட்பையும் பெறலாம்.—மத். 24:13.