Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப வழிபாடு—அதை எப்படி சுவாரஸ்யமாக்கலாம்?

குடும்ப வழிபாடு—அதை எப்படி சுவாரஸ்யமாக்கலாம்?

“நாங்க குடும்ப வழிபாட்டை ஆரம்பிச்சோம்னா நேரம் போறதே தெரியாதளவுக்கு அதில் மூழ்கிடுவோம். ராத்திரி ரொம்ப நேரம்வரைக்கும் பேசிகிட்டே இருப்போம். கடைசியில, நான்தான் ‘போதும் முடிக்கலாம்’னு சொல்லுவேன்” என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவர். ஜப்பானைச் சேர்ந்த ஓர் அப்பா, குடும்ப வழிபாட்டின்போது தன்னுடைய பத்து வயது மகன் நேரத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டுமென நினைப்பதாகச் சொல்கிறார். “பேசற விஷயங்களெல்லாம் அவனுடைய ஆர்வத்தை தூண்டுறதுனால ரொம்ப சந்தோஷமாயிடுறான்” என்கிறார் அவர்.

எல்லாப் பிள்ளைகளுமே இந்த மாதிரி ஆர்வமாக இருப்பதில்லை. சொல்லப்போனால், சிலருக்கு குடும்ப வழிபாடு என்றாலே அலுப்புதட்டுகிறது. ஏன்? ஒருவேளை, குடும்ப வழிபாடு நடத்தப்படும் விதம் அதற்குக் காரணமாக இருக்கலாம். “யெகோவாவை வழிபடுறது நமக்கு சலிப்பா இருக்கக் கூடாது” என்கிறார் டோகோ குடியரசைச் சேர்ந்த ஓர் அப்பா. ஓய்வுநாள், “மனமகிழ்ச்சி” தரும் நாள் என்று ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிட்டது போல குடும்ப வழிபாடும் இருக்க வேண்டும் என்றே பலர் விரும்புகிறார்கள்.—ஏசா. 58:13, 14.

சாவகாசமான, ரம்மியமான சூழல் இருந்தால்தான் குடும்ப வழிபாட்டை அனுபவித்து மகிழ முடியும் என்பதாக கிறிஸ்தவ தகப்பன்மார்கள் சொல்கிறார்கள். ஒருவர் கேள்வி கேட்டு மற்றவர்கள் பதில் சொல்வதுபோல் இல்லாமல் குடும்ப வழிபாட்டில் எல்லோருமே கலந்துகொண்டு சுவாரஸ்யமாக பேசுவதாக மூன்று மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் அப்பாவான ரால்ஃப் சொல்கிறார். குடும்பத்தார் ஒவ்வொருவருடைய ஆர்வத்தையும் ஈர்த்துப் பிடிப்பது உண்மையிலேயே ஒரு சவால்தான். “குடும்ப வழிபாடு சுவாரஸ்யமா இருக்கணும்னுதான் ஆசைப்படுறேன். ஆனா, அப்படி செய்றதுக்கு சில சமயத்துல எனக்கு சக்தியே இருக்காது” என்கிறார் ஓர் அம்மா. இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கலாம்?

வளைந்து கொடுங்கள் வித்தியாசமாக நடத்துங்கள்

“கெடுபிடியா இல்லாம, ஒவ்வொருத்தருடைய தேவைக்கும் ஏற்ற மாதிரி வளைஞ்சு கொடுக்கணும்”  என்கிறார் ஜெர்மனியில் இருக்கும் இரண்டு பிள்ளைகளையுடைய அப்பா. “வித்தியாச வித்தியாசமா நடத்துனாதான் பிள்ளைகளுக்கு சுவாரஸ்யமா இருக்கும்” என்கிறார் இரண்டு மகள்களுக்கு அம்மாவான நட்டாலியா. அநேக குடும்பங்கள் தங்களுடைய ஒவ்வொரு குடும்ப வழிபாட்டிலும் ஒரே விஷயத்தைப் பேசாமல் அதைப் பல பகுதிகளாக பிரித்துக்கொள்கிறார்கள். “அப்படி செய்யும்போது எல்லாரும் உற்சாகமா கலந்துக்குவாங்க” என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த இரண்டு பருவவயது பிள்ளைகளுக்கு அப்பாவான கிளேட்டன். இப்படிப் பல பகுதிகளாகப் பிரித்து நடத்தும்போது பிள்ளைகள் ஒவ்வொருவருடைய வயதுக்கு ஏற்ற மாதிரி அவர்களுடைய தேவைகளை பெற்றோரால் பூர்த்தி செய்ய முடியும். அதோடு, குடும்ப வழிபாட்டில் எதைப் படிக்கலாம் எவ்விதத்தில் படிக்கலாம் என்பதில் வளைந்துகொடுக்கவும் முடியும்.

குடும்ப வழிபாட்டை வித்தியாசமாக நடத்துவதற்கு சில குடும்பங்கள் என்ன செய்கிறார்கள்? சிலர், யெகோவாவுக்குத் துதிப் பாடல்களைப் பாடி ஆரம்பிக்கிறார்கள். “இது நல்ல சூழல உருவாக்குது. குடும்ப வழிபாட்டுக்கு மனதளவுல தயாராகுறதுக்கும் உதவுது” என்கிறார் மெக்சிகோவிலுள்ள குவான். குடும்ப வழிபாட்டிற்குப் பொருத்தமான பாடல்களை அவர்கள் தேர்ந்தெடுத்துப் பாடுகிறார்கள்.

இலங்கை

நிறைய குடும்பங்கள் பைபிளிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்து வாசிக்கிறார்கள். இதை வித்தியாசமாகச் செய்வதற்கு, ஆளுக்கொரு கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். “இப்படி வாசிக்கிறது எங்களுக்கு புதுசா இருந்துச்சு” என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு பையன்களின் அப்பா. ஆனால், அந்தப் பிள்ளைகளுக்கு பெற்றோரோடு சேர்ந்து அப்படி வாசித்தது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. இன்னும் சில குடும்பங்கள், பைபிள் கதைகளை அப்படியே நடித்து காட்டுகிறார்கள். “பைபிளை படிக்கும்போது, நாங்க கவனிக்காத விஷயங்கள பிள்ளைங்க கவனிச்சு சொல்வாங்க” என்கிறார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு மகன்களுக்கு அப்பாவான ராஜர்.

தென் ஆப்பிரிக்கா

சிலர், குடும்ப வழிபாட்டை இன்னும் வித்தியாசமாக நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு, நோவாவின் பேழை, சாலொமோனின் ஆலயம் போன்ற ஒன்றை உருவாக்குகிறார்கள். இதற்காக ஆராய்ச்சி செய்வது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்! ஆசியாவிலுள்ள ஐந்து வயது சிறுமி, தன் பெற்றோருடனும் பாட்டியுடனும் சேர்ந்து பவுலின் மிஷனரி பயணத்தை அடிப்படையாக வைத்து “போர்ட் கேம்” ஒன்றை (ஒரு வகையான பலகை விளையாட்டு) உண்டாக்கினாள். இன்னும் சில குடும்பங்கள், யாத்திராகமப் பதிவுகளின் அடிப்படையில் “போர்ட் கேம்” செய்திருக்கிறார்கள். “வித்தியாச வித்தியாசமா நிறைய செய்றதுனால எங்க குடும்ப வழிபாடு இப்போ உயிரோட்டமா இருக்கு” என்கிறார் டோகோவிலுள்ள 19 வயது டானல்டு. உங்கள் குடும்ப வழிபாட்டை சுவாரஸ்யமாக்க நீங்களும் இதே மாதிரி புது விதமாக யோசியுங்கள்.

அமெரிக்கா

தயாரிப்பு அத்தியாவசியம்

குடும்ப வழிபாடு சுவாரஸ்யமாக இருக்க வளைந்துகொடுப்பதும், வித்தியாசமாக நடத்துவதும் அவசியம்தான். ஆனாலும் அது அறிவொளியூட்டுவதாக இருப்பதற்கு எல்லோருமே நன்றாகத் தயாரிப்பது மிக முக்கியம். சில நேரங்களில், பிள்ளைகள் ரொம்ப களைப்பாக இருப்பார்கள். ஆகவே, படிக்கப்போகும் விஷயங்களைப் பெற்றோர் யோசித்து தேர்ந்தெடுப்பதும் நேரமெடுத்து நன்கு தயாரிப்பதும் அவசியம். “நான் நல்லா தயாரிச்சிருந்தா எல்லோருமே ஆர்வமா கலந்துக்குவாங்க” என்கிறார் ஓர் அப்பா. குடும்ப வழிபாட்டில் சிந்திக்கப் போகும் விஷயத்தைத் தன் குடும்பத்தாரிடம் சில வாரங்களுக்கு முன்பே சொல்லிவிடுகிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவர். பெனினைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் (12 வயதுக்குட்பட்டவர்கள்) அப்பா, குடும்ப வழிபாட்டில் பைபிள் சார்ந்த டிவிடி-யைப் பார்ப்பதாக இருந்தால் அது சம்பந்தமான கேள்விகளை முன்னதாகவே பிள்ளைகளிடம் சொல்லிவிடுகிறார். இப்படி நன்கு தயாரிக்கும்போது குடும்ப வழிபாடு நிச்சயம் தரமானதாக இருக்கும்.

குடும்ப வழிபாட்டில் சிந்திக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தால், அதைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளவும் முடியும். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் நியமிப்பு இருக்கும்போது, ‘இது என்னோட குடும்ப வழிபாடு’ என்பதுபோல் ஒவ்வொருவரும் உணர்வார்கள்.

தவறாமல் நடத்துங்கள்

குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்துவது அநேக குடும்பங்களுக்குச் சவாலாக இருக்கிறது.

குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக அநேக குடும்பத் தலைவர்கள் மணிக்கணக்காக உழைக்கிறார்கள். மெக்சிகோவிலுள்ள ஒரு தகப்பன் காலை ஆறு மணிக்கு கிளம்பினால் இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார். சில சமயத்தில், வட்டார கண்காணியின் சந்திப்பு, நினைவு நாள் அனுசரிப்பு போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்காக குடும்ப வழிபாட்டுக்குரிய நேரத்தை மாற்ற வேண்டியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்தத் தீர்மானமாய் இருக்க வேண்டும். “சில நேரத்துல பகல்ல ஏதாவது வேலை வந்துடும். அதனால குடும்ப வழிபாட்டை ஆரம்பிப்பதற்கு ரொம்ப தாமதமாயிடும். அதுக்காக நடத்தாம இருக்க மாட்டோம்” என்று சொல்கிறாள் டோகோவில் வசிக்கும் 11 வயது லோயஸ். சில குடும்பங்கள் குடும்ப வழிபாட்டை வாரத்தின் ஆரம்பத்திலேயே நடத்துகிறார்கள். அப்போதுதான், எதிர்பாராமல் ஏதாவது வேலை வந்துவிட்டால், அதே வாரத்தில் வேறொரு நாளில் அதை நடத்த முடியும்.

“குடும்ப வழிபாடு” என்ற வார்த்தை, அது உங்கள் வழிபாட்டின் பாகம் என்பதைக் காட்டுகிறது. ஆகவே, ஒவ்வொரு வாரமும், குடும்பமாக ‘உதடுகளின் காளைகளைச் செலுத்துவீர்களாக.’ (ஓசி. 14:2) உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அது மகிழ்ச்சி தரும் சமயமாக இருப்பதாக. ஏனென்றால், “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.”—நெ. 8:9, 10.