Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

“விசுவாசத்தினால்தான் மோசே, வளர்ந்து ஆளானபோது பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை விரும்பாதிருந்தார்.”எபி. 11:24.

1, 2. (அ) மோசே தன்னுடைய 40 வயதில் என்ன தீர்மானம் எடுத்தார்? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.) (ஆ) மோசே ஏன் அடிமையாக வாழத் தீர்மானித்தார்?

எகிப்திலேயே இருந்தால் ராஜபோக வாழ்க்கை வாழலாம் என்பதை மோசே அறிந்திருந்தார். செல்வச்சீமான்கள் மாட மாளிகைகளில் வாழ்வதைப் பார்த்திருந்தார். ராஜாவின் வீட்டில் வளர்ந்த அவர் கலை, வானியல், கணிதம், அறிவியல் என ‘எகிப்தியருடைய எல்லாத் துறைகளிலும் பயிற்சி பெற்றிருந்தார்.’ (அப். 7:22) எகிப்திலிருந்த சாதாரண குடிமகனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வசதிவாய்ப்புகள், அதிகாரம், செல்வாக்கு என எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்பு மோசேக்கு இருந்தது.

2 இத்தனை வசதிகள் இருந்தபோதிலும், 40 வயதில் மோசே எடுத்த ஒரு தீர்மானம் அவரை வளர்த்து ஆளாக்கிய ராஜ குடும்பத்தை குழப்பத்தில் ஆழ்த்தியது. சாதாரண எகிப்தியனாக வாழ்வதைக்கூட உதறித்தள்ளிவிட்டு, அடிமைகளோடு அடிமையாக வாழ அவர் தீர்மானித்தது ஏன் என்று யோசிக்கிறீர்களா? விசுவாசம்தான் அதற்குக் காரணம். (எபிரெயர் 11:24-26-ஐ வாசியுங்கள்.) அந்த விசுவாசத்தால், தன்னைச் சுற்றியிருந்தவற்றைவிட மேலான ஒன்றைப் பார்த்தார். ‘காணமுடியாத’ கடவுளாகிய யெகோவாமீதும் அவருடைய வாக்குறுதிகள்மீதும் விசுவாசம் வைத்தார்.—எபி. 11:27.

3. என்ன மூன்று கேள்விகளைச் சிந்திப்போம்?

3 மோசேயைப் போல, நாமும் நம்மைச் சுற்றியிருப்பவற்றைப் பார்க்காமல் மேலானவற்றைப் பார்க்க வேண்டும். அதற்கு நாம் ‘விசுவாசமுள்ளவர்களாக’ இருக்க வேண்டும். (எபி. 10:38, 39) நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள, எபிரெயர் 11:24-26-லுள்ள மோசேயின் பதிவை ஆராயலாம். அப்படி  ஆராயும்போது, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்: மோசேக்கு இருந்த விசுவாசம் பாவ ஆசைகளை ஒதுக்கித்தள்ள அவருக்கு எப்படி உதவியது? பழித்துப்பேசப்பட்டபோதும் யெகோவாவின் சேவையை உயர்வாய்க் கருத விசுவாசம் அவருக்கு எப்படி உதவியது? மோசே ஏன் தனக்கு “கிடைக்கவிருந்த பலன்மீது கண்களை ஒருமுகப்படுத்தினார்”?

பாவ ஆசைகளை நிராகரித்தார்

4. ‘பாவத்தினால் வரும் சந்தோஷங்களை’ பற்றி மோசே என்ன உணர்ந்திருந்தார்?

4 ‘பாவத்தினால் வரும் சந்தோஷங்கள்’ தற்காலிகமானவை என்பதை மோசே தன்னுடைய விசுவாசக் கண்களால் உணர்ந்துகொண்டார். ஆனால், சிலை வழிபாட்டிலும் ஆவியுலகத் தொடர்பிலும் ஊறிப்போயிருந்த எகிப்து ஓர் உலக வல்லரசாக வளர்ந்திருக்கிறதே, யெகோவாவின் மக்கள் அங்கே அடிமைகளாகத்தானே இருக்கிறார்கள் என மற்றவர்கள் நினைத்திருக்கலாம். என்றாலும், கடவுளால் நிலைமையைத் தலைகீழாக மாற்ற முடியும் என்பதை மோசே அறிந்திருந்தார். சுகபோகமாக வாழ்பவர்கள் கொடிகட்டிப் பறப்பதுபோல் தெரிந்தாலும், அவர்கள் சீக்கிரத்தில் மண்ணோடு மண்ணாகி விடுவார்கள் என்ற விசுவாசம் மோசேக்கு இருந்தது. அதனால், ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களில்’ அவர் மயங்கிவிடவில்லை.

5. ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களில்’ மயங்கிவிடாதிருக்க நாம் என்ன செய்யலாம்?

5 ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களில்’ மயங்கிவிடாதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்? இப்படிப்பட்ட சிற்றின்பங்கள் பனித்துளிபோல் சட்டென மறைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். ‘உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோவதை’ உங்களுடைய விசுவாசக் கண்களால் பாருங்கள். (1 யோ. 2:15-17) மனந்திரும்பாமல் தொடர்ந்து பாவத்தில் ஈடுபடுவோரின் கதியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ‘சறுக்கலான இடங்களில் நிற்கிறவர்கள் . . . அழிந்து நிர்மூலமாவார்கள்.’ (சங். 73:18, 19) ஆகவே, ‘பாவம் செய்ய வேண்டுமென்ற ஆசைக்கு அடிபணிந்தால் என் கதி என்னவாகும்’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

6. (அ) மோசே ஏன் “பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை விரும்பாதிருந்தார்”? (ஆ) மோசே சரியான தீர்மானம் எடுத்தார் என்று நாம் எப்படிச் சொல்லலாம்?

6 எதிர்காலத்தைப் பற்றிய சரியான தீர்மானம் எடுக்க விசுவாசமே மோசேக்கு உதவியது. “விசுவாசத்தினால்தான் மோசே, வளர்ந்து ஆளானபோது பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை விரும்பாதிருந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 11:24) எகிப்தின் அரசவையில் இருந்துகொண்டே கடவுளுக்குச் சேவை செய்யலாம் என்றோ தன்னுடைய செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தன் சகோதரர்களான இஸ்ரவேலருக்கு உதவலாம் என்றோ மோசே நினைக்கவில்லை. மாறாக, யெகோவாவை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழுப் பலத்தோடும் நேசிக்க வேண்டும் என்பதில் அவர் திடத் தீர்மானமாய் இருந்தார். (உபா. 6:5) இதனால், பல பிரச்சினைகளை அவரால் தவிர்க்க முடிந்தது. எப்படியென்றால், எகிப்தியரிடமிருந்த பெரும்பாலான செல்வங்கள் இஸ்ரவேலர்களால் பிற்பாடு கொள்ளையடிக்கப்பட்டன. (யாத். 12:35, 36) பார்வோன் அவமானப்பட்டு அழிந்துபோனான். (சங். 136:15) ஆனால், மோசேக்கு என்ன நடந்தது? கடவுள் அவரைக் காப்பாற்றினார். இஸ்ரவேலர்கள் எல்லோரையும் பத்திரமாக வழிநடத்துவதற்கு தலைவராகவும் நியமித்தார். ஆம், அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்தது.

7. (அ) மத்தேயு 6:19-21-ன்படி நாம் ஏன் எதிர்காலத்தைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும்? (ஆ) உலகம் தரும் பொக்கிஷத்திற்கும் ஆன்மீக பொக்கிஷத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உதாரணத்துடன் விளக்குங்கள்.

7 நீங்கள் ஓர் இளம் யெகோவாவின் சாட்சியாக இருந்தால், உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க விசுவாசம் எப்படி உங்களுக்கு உதவும்? எதிர்காலத்திற்காக முன்கூட்டியே திட்டமிடுவது ஞானமானது. கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பது, தற்கால வாழ்க்கைக்காக அல்ல நித்தியகால வாழ்க்கைக்காக பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க உங்களுக்கு உதவும். (மத்தேயு 6:19-21-ஐ வாசியுங்கள்.) பாலே நடனத்தில் திறமைபெற்ற சோஃபி இதைத்தான் செய்தாள். அமெரிக்கா எங்குமுள்ள பாலே நடன நிறுவனங்கள் அவளுக்கு உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கியதோடு நல்ல வேலைவாய்ப்புகளையும் அளிக்க முன்வந்தன. “எனக்கு அத்தனை ரசிகர்கள் இருந்தத நெனச்சு உச்சிகுளிர்ந்து போனேன். சொல்லப்போனா, என் ஃபிரெண்ட்ஸ் மத்தியில நான்தான் பெரிய ஆளுனு நெனச்சேன். ஆனா, மனசு சந்தோஷமாவே இல்ல” என்று அவள் சொல்கிறாள். அதன் பிறகு, இளைஞர் கேட்கின்றனர்—வாழ்க்கையில் என் லட்சியம் என்ன? என்ற ஆங்கில வீடியோவை அவள் பார்த்தாள். அதைப் பார்த்த பிறகு, “யெகோவாவ முழு மனசோட வணங்கறதவிட இந்த உலகம் தர்ற பேரும் புகழும் ரசிகர்களும்தான் எனக்கு பெருசா இருந்தத புரிஞ்சுகிட்டேன். அதனால, உருக்கமா யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். பிறகு, நடனம் ஆடுறதையே விட்டுட்டேன்” என்று அவள் சொல்கிறாள். இப்போது அவள் என்ன நினைக்கிறாள்? “என்னோட பழைய வாழ்க்கையெல்லாம் போச்சேனு நெனச்சு கவலப்படல. இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் கணவரோட  சேர்ந்து பயனியர் ஊழியம் செய்றேன். எங்களுக்கு பேரும் புகழும் வசதியும் இல்லைதான். ஆனா, யெகோவா எங்களோட இருக்குறாரு. எங்களுக்கு நிறைய பைபிள் படிப்புகள் இருக்கு, நிறைய ஆன்மீக இலக்குகளும் வெச்சிருக்கோம். நாங்க எதை நினைச்சும் வருத்தப்படல” என்று சொல்கிறாள்.

8. எதிர்காலத்தைப் பற்றித் தீர்மானிக்க இளைஞர்களுக்கு எந்த பைபிள் ஆலோசனை உதவும்?

8 நமக்கு எது மிகச் சிறந்தது என்பது யெகோவாவுக்குத் தெரியும். “உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” என்று மோசே சொன்னார். (உபா. 10:12, 13) ஆகவே, இளம் வயதிலேயே ‘முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும்’ யெகோவாமீது அன்பு வைத்து வாழ்க்கை முழுவதும் அவருக்குச் சேவை செய்யத் தீர்மானியுங்கள். அது உங்களுக்கு ‘நன்மையை’ தரும் என்பது உறுதி.

கடவுளுடைய சேவையை உயர்வாய்க் கருதினார்

9. யெகோவா கொடுத்த வேலையை ஏற்றுக்கொள்வது மோசேக்கு ஏன் கஷ்டமாக இருந்திருக்கலாம்?

9 மோசே, ‘எகிப்தின் பொக்கிஷங்களைவிட, கடவுளால் நியமிக்கப்படுவதன் பொருட்டு வரும் அவதூறையே மேலான செல்வமென்று கருதினார்.’ (எபி. 11:26) இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவிப்பதற்காகவே யெகோவா அவரை ‘நியமித்தார்.’ இது மிகவும் கடினமான வேலை என்பதையும் இதன் நிமித்தம் மற்றவர்கள் தன்னை ‘அவதூறாக’ பேசுவார்கள் என்பதையும்கூட அவர் அறிந்திருந்தார். ஏற்கெனவே இஸ்ரவேலர்களில் ஒருவன் அவரிடம், “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?” என்று கேட்டிருந்தான். (யாத். 2:13, 14) பிற்பாடு, மோசேயும்கூட “பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்?” என்று யெகோவாவிடம் கேட்டார். (யாத். 6:12) அவதூறான பேச்சுகளையெல்லாம் சமாளிப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்தார்; தன் மனதிலுள்ள பயத்தையும் கவலைகளையும் அவரிடம் தெரிவித்தார். இந்தக் கடினமான வேலையைச் செய்து முடிக்க மோசேக்கு யெகோவா எப்படி உதவினார்?

10. மோசேக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடிக்க அவருக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவினார்?

10 முதலாவதாக, “நான் உன்னோடே இருப்பேன்” என்று மோசேக்கு யெகோவா உறுதியளித்தார். (யாத். 3:12) இரண்டாவதாக, கடவுள் தமது பெயரின் ஒரு அர்த்தத்தை, அதாவது “[நான்] இருக்கிறவராக இருக்கிறேன்” என்ற அர்த்தத்தை விளக்கியதன் மூலம் அவருக்கு நம்பிக்கை அளித்தார். * (யாத். 3:14) மூன்றாவதாக, மோசேக்கு அற்புதங்களைச் செய்ய சக்தியளித்தார்; அது அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கு அத்தாட்சி அளித்தது. (யாத். 4:2-5) நான்காவதாக, மோசேயின் சார்பில் பேசுவதற்கு ஆரோனைத் துணையாக நியமித்தார். (யாத். 4:14-16) யெகோவா தம்முடைய ஊழியர்களுக்குக் கொடுக்கிற வேலையைச் செய்து முடிக்க நிச்சயம் உதவுவார் என்பதை மோசே தன் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் முழுமையாகப் புரிந்துகொண்டார். அதனால்தான், தனக்குப் பின் இஸ்ரவேலர்களை வழிநடத்தப்போகும் யோசுவாவிடம், “கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” என்று அவரால் உறுதியோடு சொல்ல முடிந்தது.—உபா. 31:8.

11. மோசே தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஏன் உயர்வாய் மதித்தார்?

11 மோசேக்கு யெகோவாவின் ஆதரவு இருந்ததால் இந்தக் கடினமான வேலையை “எகிப்தின் பொக்கிஷங்களைவிட” மேலானதாக நினைத்தார். சொல்லப்போனால், சர்வவல்ல கடவுளுக்குச் செய்யும் வேலையோடு ஒப்பிட பார்வோனிடம் வேலை செய்வது ஒன்றுமே இல்லையே! எகிப்தின் இளவரசராக இருப்பதற்கும் யெகோவாவால் நியமிக்கப்பட்ட ஊழியராக இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்! யெகோவா கொடுத்த வேலையை மோசே உயர்வாய்க் கருதியதால் அவருக்கு கைமேல் பலன் கிடைத்தது. யெகோவாவோடு அவருக்கு விசேஷித்த பந்தம் இருந்தது. இஸ்ரவேலர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தியபோது ‘மகா பயங்கரமான செய்கைகளை’ செய்ய யெகோவா அவருக்கு உதவினார்.—உபா. 34:10-12.

12. யெகோவாவிடமிருந்து என்ன அருமையான வேலையைப் பெற்றிருக்கிறோம்?

12 நமக்கும்கூட ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. யெகோவா தம்முடைய மகனின் மூலமாக அப்போஸ்தலன் பவுலுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்த ஊழிய வேலையே அது. (1 தீமோத்தேயு 1:12-14-ஐ  வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் அந்தப் பாக்கியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. (மத். 24:14; 28:19, 20) சிலர் முழுநேர ஊழியர்களாக அந்த வேலையைச் செய்கிறார்கள். ஞானஸ்நானம் பெற்ற தகுதிவாய்ந்த சகோதரர்கள் சபையில் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்கிறார்கள். ஆனால், சத்தியத்தில் இல்லாத உங்கள் வீட்டாரும் மற்றவர்களும் இந்த வேலையை அற்பமாக நினைக்கலாம்; நீங்கள் செய்யும் தியாகங்களைப் பற்றி அவதூறாகப் பேசலாம். (மத். 10:34-37) அதைக் கேட்டு நீங்கள் சோர்ந்துபோனால், ‘நான் செய்த தியாகங்கள் எல்லாம் வீண்தானோ’ என்று நினைக்க ஆரம்பிக்கலாம். அல்லது ‘இதை என்னால் தொடர்ந்து செய்ய முடியுமா’ என்று நினைக்கலாம். ஆனால், அந்த வேலையைத் தொடர்ந்து செய்ய விசுவாசம் எப்படி உங்களுக்குக் கைகொடுக்கும்?

13. யெகோவா நமக்குக் கொடுத்த வேலையைச் செய்துமுடிக்க எப்படி உதவுகிறார்?

13 யெகோவாவின் உதவிக்காக விசுவாசத்தோடு அவரிடம் மன்றாடுங்கள். உங்களுடைய பயத்தையும் கவலைகளையும் அவரிடம் தெரிவியுங்கள். இது யெகோவா கொடுத்த வேலை என்பதை நினைவில் வையுங்கள், இதைத் தொடர்ந்து செய்ய அவர் உங்களுக்கு நிச்சயம் உதவுவார். எப்படி? மோசேக்கு உதவியது போலவே உங்களுக்கும் உதவுவார். முதலாவதாக, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று யெகோவா உங்களுக்கு உறுதியளிக்கிறார். (ஏசா. 41:10) இரண்டாவதாக, அவர் தம்முடைய வாக்குறுதிகள் நம்பகமானவை என்பதை இந்த வார்த்தைகள் மூலம் நினைவுபடுத்துகிறார்: “அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.” (ஏசா. 46:11) மூன்றாவதாக, ஊழியத்தைச் செய்துமுடிக்க ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ அருளுகிறார். (2 கொ. 4:7) நான்காவதாக, ‘எப்போதும் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டும் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டும் இருக்கிற’ சர்வதேச சகோதரத்துவத்தைத் தந்திருக்கிறார். (1 தெ. 5:11) ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய இவ்விதங்களில் யெகோவா உங்களுக்கு உதவும்போது அவர்மீதுள்ள உங்கள் விசுவாசம் பலப்படும். அதோடு, உலகம் தருகிற எந்தவொரு பொக்கிஷத்தையும்விட யெகோவா தரும் வேலையை உயர்வாய்க் கருதுவீர்கள்.

“தனக்குக் கிடைக்கவிருந்த பலன்மீது கண்களை ஒருமுகப்படுத்தினார்”

14. எதிர்காலத்தில் தனக்கு பலன் கிடைக்கும் என்று மோசே ஏன் உறுதியாக நம்பினார்?

14 மோசே “தனக்குக் கிடைக்கவிருந்த பலன்மீது கண்களை ஒருமுகப்படுத்தினார்.” (எபி. 11:26) எதிர்காலத்தைப் பற்றிய தகவல்கள் அவருக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலும், தனக்குத் தெரிந்த சில தகவல்களை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுத்தார். முற்பிதாவான ஆபிரகாமைப் போலவே மோசேயும், இறந்தவர்களை யெகோவா உயிர்த்தெழுப்புவார் என்று நம்பினார். (லூக். 20:37, 38; எபி. 11:17-19) எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள்மீது அவருக்கு அந்தளவு நம்பிக்கை இருந்ததால், மீதியானில் நாடோடியாக 40 வருடங்களையும் வனாந்தரத்தில் 40 வருடங்களையும் வீணடித்துவிட்டதாக அவர் நினைக்கவில்லை. கடவுள் தம் நோக்கத்தை  எப்படி நிறைவேற்றுவார் என்பதைப் பற்றி அவருக்கு விலாவாரியாகத் தெரியாவிட்டாலும் விசுவாசக் கண்களால் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பலனைக் கண்டார்.

15, 16. (அ) நமக்குக் கிடைக்கப் போகும் பலன்மீது ஏன் கண்களை ஒருமுகப்படுத்த வேண்டும்? (ஆ) கடவுளுடைய அரசாங்கத்தில் என்னென்ன விஷயங்களை அனுபவித்து மகிழ ஆசையோடு காத்திருக்கிறீர்கள்?

15 உங்களுக்குக் கிடைக்கப்போகும் பலன்மீது நீங்களும் ‘கண்களை ஒருமுகப்படுத்துகிறீர்களா’? மோசேயைப் போல நமக்கும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி முழுமையாகத் தெரியாது. உதாரணத்திற்கு, மிகுந்த உபத்திரவம் ‘வரப்போகிற காலம் நமக்குத் தெரியாது.’ (மாற். 13:32, 33) ஆனாலும், பூஞ்சோலை பூமி பற்றி மோசேக்குத் தெரிந்திருந்ததைவிட நமக்கு அதிகம் தெரியும். புதிய உலகில் அனுபவிக்கப்போகும் வாழ்க்கைமீது நம் ‘கண்களை ஒருமுகப்படுத்துவதற்கு,’ அதாவது நம் மனக்கண்களால் பார்ப்பதற்கு, போதுமான வாக்குறுதிகளை யெகோவா அளித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் நம் மனதில் பசுமையாக இருந்தால், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடுவதே நம் லட்சியமாக இருக்கும். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: ஒரு வீட்டைப் பற்றி எந்த விவரமும் தெரியாதென்றால் அதை வாங்க நம் பணத்தை விரயம் செய்ய மாட்டோம், அல்லவா? அதே போல எந்த எதிர்கால நம்பிக்கையையும் தராத இந்த உலகிற்காக நம் சக்தியை விரயம் செய்ய மாட்டோம். கடவுள்மீது நமக்கு விசுவாசம் இருப்பதால், அவருடைய அரசாங்கத்தில் கிடைக்கப் போகும் வாழ்க்கைமீது நம் கண்களைப் பதிக்கிறோம்.

மோசேயைப் போன்ற உண்மை ஊழியர்களிடத்தில் பேசுவது எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்! (பாரா 16)

16 கடவுளுடைய அரசாங்கத்தை மனக்கண்களில் தெளிவாகப் பார்க்க வேண்டுமென்றால், பூஞ்சோலை பூமியில் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதன்மீது உங்கள் ‘கண்களை ஒருமுகப்படுத்துங்கள்.’ அதைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள். உதாரணத்திற்கு, முற்காலங்களில் வாழ்ந்த உண்மை ஊழியர்களைப் பற்றி பைபிளில் வாசிக்கையில், அவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது அவர்களிடம் நீங்கள் என்ன கேட்கலாம் எனச் சிந்தித்துப் பாருங்கள். அதே சமயத்தில், அவர்களும் ‘கடைசி நாட்களை எப்படிச் சமாளித்தீர்கள்’ என உங்களிடம் கேட்கலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த உங்களுடைய உறவினர்களைச் சந்தித்து, அவர்களுக்காக கடவுள் செய்த எல்லாவற்றையும் பற்றி சொல்லித் தரும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! எந்தவொரு பயமும் இல்லாமல் காட்டு மிருகங்களின் பக்கத்திலேயே இருந்து அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஆனந்தம் பெருக்கெடுக்கும். படிப்படியாக பரிபூரணத்தை எட்டும்போது யெகோவாவுடன் நீங்கள் எந்தளவு நெருக்கமாவீர்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

17. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய காட்சிகளை மனதில் பசுமையாக வைத்திருப்பது நமக்கு எப்படி உதவும்?

17 எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய காட்சிகள் நம் மனதில் எப்போதுமே பசுமையாக இருந்தால், சோர்ந்துவிடாமல் மகிழ்ச்சியோடிருக்கவும் முடிவில்லா வாழ்வை மனதில் வைத்து தீர்மானங்கள் எடுக்கவும் முடியும். “கண்களுக்குத் தெரியாததை நாம் எதிர்பார்த்தால்தான், சகிப்புத்தன்மையோடு அதற்காகக் காத்துக்கொண்டிருப்போம்” என்று பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். (ரோ. 8:25) முடிவில்லா வாழ்வைப் பெறும் நம்பிக்கையுள்ள அனைவருக்குமே அந்த வார்த்தைகள் பொருந்தும். நமக்கு உறுதியான விசுவாசம் இருந்தால் ‘கிடைக்கவிருக்கும் பலனுக்காக’ பொறுமையோடு காத்திருப்போம். மோசேயைப் போலவே நாமும் யெகோவாவின் சேவையில் செலவிடும் காலத்தை வீண் என நினைக்க மாட்டோம். மாறாக, “காணப்படுகிறவை தற்காலிகமானவை, காணப்படாதவையோ என்றென்றும் நிலைத்திருப்பவை” என்பதை உறுதியாக நம்புவோம்.2 கொரிந்தியர் 4:16-18-ஐ வாசியுங்கள்.

18, 19. (அ) விசுவாசத்தைவிட்டு விலகாதபடி நாம் ஏன் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதை ஆராய்வோம்?

18 ‘பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண’ விசுவாசம் நமக்கு உதவும். (எபி. 11:1) உலகச் சிந்தையுள்ள மனிதனால், யெகோவாவுக்குச் சேவை செய்வதன் மதிப்பை உணர முடியாது. அப்படிப்பட்டவருக்கு ஆன்மீக பொக்கிஷங்களெல்லாம் “முட்டாள்தனமாக” தெரியும். (1 கொ. 2:14) முடிவில்லா வாழ்வைப் பெறவும் உயிர்த்தெழுதலைக் கண்ணாரக் காணவும் நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். இவற்றையெல்லாம் மற்ற மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! பவுலின் காலத்திலிருந்த தத்துவஞானிகள் சிலர் அவரை முட்டாள்தனமாகப் பேசுகிற “வாயாடி” என அழைத்தது போல, இன்றும் பலர் நாம் நற்செய்தியைச் சொல்லும்போது நம்மைப் பைத்தியக்காரர்களாக நினைக்கிறார்கள்.—அப். 17:18.

19 விசுவாசமற்ற மக்கள் மத்தியில் நாம் வாழ்வதால், விசுவாசத்தைவிட்டு விலகிவிடாதபடி நாம் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். “விசுவாசத்தை விட்டுவிடாதிருக்க” யெகோவாவிடம் மன்றாடுங்கள். (லூக். 22:32) மோசேயைப் போல, பாவத்தினால் வரும் விளைவுகளையும் யெகோவாவுக்குச் சேவை செய்வதன் மதிப்பையும் முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கையையும் பற்றி எப்போதும் யோசித்துப் பாருங்கள். விசுவாசத்தால் மோசே இவையெல்லாவற்றையும்விட மேலான ஒன்றை, அதாவது “காணமுடியாதவரை”, கண்டார். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் ஆராயலாம்.—எபி. 11:27.

^ பாரா. 10 யாத்திராகமம் 3:14-ல் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தைகளைப் பற்றி பைபிள் அறிஞர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “அவர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. . . . இந்தப் பெயர் [யெகோவா] இஸ்ரவேலர்களின் கோட்டையாக இருந்தது.” இது அவர்களுக்குத் தேவையான நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது.