Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் “காணமுடியாதவரை” காண்கிறீர்களா?

நீங்கள் “காணமுடியாதவரை” காண்கிறீர்களா?

“அவர் . . . காணமுடியாதவரைக் காண்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார்.”—எபி. 11:27.

1, 2. (அ) மோசே ஏன் ஆபத்தான சூழ்நிலையில் இருந்ததுபோல் தெரிந்தது? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.) (ஆ) மோசே ஏன் ராஜாவின் கோபத்திற்குப் பயப்படவில்லை?

பார்வோன் பலம் படைத்த ஆட்சியாளன். எகிப்தியருக்கு அவன் கண்கண்ட தெய்வம். “ஞானத்திலும் அதிகாரத்திலும் யாருமே அவரை விஞ்ச முடியாது” என அவர்கள் நினைத்ததாக கிழக்கத்திய நாடுகளை எகிப்து ஆண்டபோது என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. தன்னைப் பார்த்து மக்கள் பயப்பட வேண்டுமென்பதற்காக, தீண்டும் நாகத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கிரீடத்தை அவன் அணிந்திருந்தான். எதிரிகள் இமைப்பொழுதில் செத்துமடிவார்கள் என்பதை அது நினைப்பூட்டியது. அப்படியிருக்க, மோசேயிடம் “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன்” என்று யெகோவா சொன்னபோது மோசேக்கு எப்படி இருந்திருக்கும்!—யாத். 3:10.

2 யெகோவா சொன்னபடியே மோசே எகிப்துக்குப் போய் கடவுளுடைய செய்தியை பார்வோனிடம் அறிவித்தார். அதைக் கேட்டதும் பார்வோனின் கோபம் பற்றியெரிந்தது. எகிப்தின்மீது யெகோவா ஒன்பது வாதைகளைக் கொண்டுவந்த பிறகு, மோசேயை பார்வோன் இப்படி எச்சரித்தான்: “நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்.” (யாத். 10:28) பார்வோனிடமிருந்து போகும்முன், அவனுடைய தலைமகன் சாவான் என்று மோசே முன்னறிவித்தார். (யாத். 11:4-8) ஒரு வெள்ளாட்டுக்கடாவை அல்லது செம்மறியாட்டுக்கடாவை (இது எகிப்தியரின் ரா என்ற கடவுளுக்குப் புனிதமாக இருந்தது) அடித்து அதன் இரத்தத்தை வாசலின் நிலைக்கால்களிலும் மேற்சட்டத்திலும் தெளிக்கும்படி ஒவ்வொரு இஸ்ரவேல் குடும்பத்திற்கும் மோசே கட்டளையிட்டார்.  (யாத். 12:5-7) அப்போது, பார்வோன் எந்தளவு ஆத்திரமடைந்திருப்பான்! ஆனால், மோசே துளியும் பயப்படவில்லை. ஏன்? விசுவாசத்தினால் அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்; “ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் . . . காணமுடியாதவரைக் காண்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார்.”எபிரெயர் 11:27, 28-ஐ வாசியுங்கள்.

3. என்ன கேள்விகளை இக்கட்டுரையில் சிந்திக்கப்போகிறோம்?

3 காணமுடியாத ‘கடவுளைக் காணும்’ அளவுக்கு உங்களுடைய விசுவாசம் பலமாக இருக்கிறதா? (மத். 5:8) நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கு மோசேயின் உதாரணத்தை ஆராயலாம். யெகோவாமீது மோசேக்கு இருந்த விசுவாசம் அவரை எப்படி மனித பயத்திலிருந்து பாதுகாத்தது? கடவுளுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் இருந்ததை அவர் எப்படிக் காட்டினார்? மோசேயும் அவருடைய மக்களும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தபோது ‘காணமுடியாதவர்மீது’ அவருக்கு இருந்த விசுவாசம் அவரை எப்படிப் பலப்படுத்தியது?

அவர் ‘ராஜாவின் கோபத்திற்குப் பயப்படவில்லை’

4. விசுவாசமில்லாத மக்கள் மோசேயைப் பற்றி என்ன நினைத்திருக்கலாம்?

4 பலம்படைத்த பார்வோனுக்கு முன்னால் மோசே கால்தூசி என விசுவாசமில்லாத மக்கள் நினைத்திருக்கலாம். மோசேயின் எதிர்காலமே பார்வோன் கையில் இருந்ததுபோல் தெரிந்தது. சொல்லப்போனால் மோசே யெகோவாவிடம், “பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்” என்று கேட்டார். (யாத். 3:11) சுமார் 40 வருடங்களுக்கு முன்னால், மோசே எகிப்திலிருந்து தப்பியோடி வந்திருந்தார். ‘திரும்பவும் அங்கே போனால் ராஜாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்குமே’ என அவர் யோசித்திருக்கலாம்.

5, 6. பார்வோனுக்குப் பயப்படாமல் யெகோவாவுக்குப் பயப்பட மோசேக்கு எது உதவியது?

5 மோசே எகிப்திற்குப் போகும்முன் கடவுள் அவருக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். “ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்” என்ற இந்த முக்கிய பாடத்தைப் பிற்பாடு யோபு புத்தகத்தில் மோசே பதிவு செய்தார். (யோபு 28:28) மோசே கடவுளுக்குப் பயந்து ஞானமாய் நடந்துகொள்வதற்காக தமக்கும் மனிதர்களுக்குமுள்ள வித்தியாசத்தை யெகோவா விளக்கிக் காட்டினார். “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?” என்று கேட்டார்.—யாத். 4:11.

6 இதிலிருந்து மோசே என்ன கற்றுக்கொண்டார்? அவர் பயப்படுவதற்கான அவசியமே இல்லை. தான் யெகோவாவால் அனுப்பப்பட்டவர் என்பதால், பார்வோனிடம் போய் பேசுவதற்குத் தேவையான சக்தியை அவர் கொடுப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல, யெகோவாவுக்கு முன் பார்வோன் ஒன்றுமே இல்லை என்பதையும் புரிந்துகொண்டார். சொல்லப்போனால், எகிப்தில் கடவுளுடைய ஜனங்கள் இப்படி ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது முதல் தடவை அல்ல. எகிப்தை முன்பு ஆண்ட ராஜாக்களின் ஆட்சியில் ஆபிரகாம், யோசேப்பு, ஏன் தன்னையும்கூட யெகோவா எப்படிக் காப்பாற்றினார் என்பதைப் பற்றி மோசே யோசித்திருக்கலாம். (ஆதி. 12:17-19; 41:14, 39-41; யாத். 1:22–2:10) ‘காணமுடியாதவர்மீது’ விசுவாசம் இருந்ததால், யெகோவா சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தைரியமாகப் பார்வோனிடம் அறிவித்தார்.

7. யெகோவாமீதிருந்த விசுவாசம் ஒரு சகோதரிக்கு எப்படி உதவியது?

7 மனித பயத்தைப் போக்குவதற்கு ஏல்லா என்ற சகோதரிக்கும் கடவுள்மீதிருந்த விசுவாசமே கைகொடுத்தது. 1949-ல், கேஜிபி (சோவியத் அரசின் பாதுகாப்புக் குழு) ஏல்லாவை எஸ்டோனியாவில் கைது செய்து, அவரை நிர்வாணப்படுத்தியது. அங்கிருந்த இளம் போலீஸ் அதிகாரிகள் அவரை வெறித்துப் பார்த்தார்கள். “நான் அப்படியே கூனிக்குறுகி போய்ட்டேன். இருந்தாலும், யெகோவாகிட்ட ஜெபம் செஞ்ச பிறகு பயமெல்லாம் போய் மனசு அப்படியே அமைதியாயிடுச்சு” என்று ஏல்லா சொல்கிறார். பின்பு, அவரை ஒரு தனிச்சிறையில் மூன்று நாட்கள் அடைத்து வைத்தார்கள். “‘எஸ்டோனியாவுல ஒருத்தர்கூட யெகோவாங்கிற பெயரை சொல்லாதபடி செய்துடுவோம்! உன்னை முகாமிற்கும் மற்றவங்கள சைபீரியாவுக்கும் அனுப்பப்போறோம்’னு என்னை பார்த்து கத்துனாங்க. அதுவும் இல்லாம ‘உன்னோட யெகோவா எங்க இருக்குறாருனு பார்க்கலாம்’னு ஏளனமா சொன்னாங்க” என்கிறார் ஏல்லா. இந்தச் சகோதரி யாருக்குப் பயப்படுவார், கடவுளுக்கா மனிதருக்கா? விசாரணையின்போது, அந்த அதிகாரிகளிடம் தைரியமாக இப்படிச் சொன்னார்: “இத பற்றி நல்லா யோசிச்சு பார்த்துட்டேன். சிறையிலிருந்து விடுதலையாகி கடவுளுடைய நட்பை இழக்கிறதவிட இங்கேயே இருந்து கடவுளோடு ஒரு நல்ல நட்பை  வெச்சுக்கத்தான் விரும்புறேன்.” ஏல்லாவுக்கு யெகோவா ஒரு நிஜமான நபராகத் தெரிந்தார். யெகோவாமீதிருந்த விசுவாசம் உத்தமத்தை விட்டுவிடாமல் இருக்க அவருக்கு உதவியது.

8, 9. (அ) மனித பயத்தைப் போக்குவதற்கான ஒரே வழி எது? (ஆ) மனித பயம் உங்களைக் கவ்விக்கொள்வதுபோல் தெரிந்தால் யாரை நினைத்துப் பார்க்க வேண்டும்?

8 யெகோவாமீதுள்ள விசுவாசம் பயத்தை விரட்டியடிக்க உங்களுக்கும் உதவும். பலம்படைத்த அதிகாரிகள் கடவுளைச் சேவிக்க விடாமல் தடுக்கும்போது, உங்களுடைய எதிர்காலம் மனிதருடைய கையில் இருப்பதுபோல் தெரியலாம். யெகோவாவைத் தொடர்ந்து வணங்குவதன் மூலம் அந்த அதிகாரிகளின் கோபத்தைக் கிளறிவிடுவது சரிதானா என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். ஆனால், மனித பயத்தைப் போக்குவதற்கு ஒரே வழி கடவுள்மீது விசுவாசம் வைப்பதுதான் என்பதை நினைவில் வையுங்கள். (நீதிமொழிகள் 29:25-ஐ வாசியுங்கள்.) “சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும்” ஏன் பயப்பட வேண்டும்? என்று யெகோவா கேட்கிறார்.—ஏசா. 51:12, 13.

9 சர்வவல்லமையுள்ள பரம தந்தை நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதை மனதில் வையுங்கள். கொடுங்கோல் ஆட்சியாளர்கள் கையில் அநியாயமாக ஒடுக்கப்படும் ஒவ்வொருவரையும் அவர் பார்க்கிறார், மனதுருகி அவர்களுக்கு உதவுகிறார். (யாத். 3:7-10) உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி செல்வாக்குமிக்க அதிகாரிகள்முன் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால், “எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் பேச வேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.” (மத். 10:18-20) மனித ஆட்சியாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் யெகோவாவுக்குமுன் ஒன்றுமே இல்லை. யெகோவாமீதுள்ள விசுவாசத்தை இப்போதே பலப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது யெகோவா, உங்களுக்கு உதவ ஆவலோடு காத்திருக்கும் நிஜமான நபராகத் தெரிவார்.

கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்தார்

10. (அ) கி.மு. 1513, நிசான் மாதத்தில் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா என்ன அறிவுரைகளைக் கொடுத்தார்? (ஆ) மோசே ஏன் கடவுளுடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்தார்?

10 கி.மு. 1513, நிசான் மாதத்தில், மோசே மற்றும் ஆரோன் மூலமாக இஸ்ரவேலர்களுக்கு யெகோவா அறிவுரைகளைக் கொடுத்தார். பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவை அல்லது செம்மறியாட்டுக்கடாவை அடித்து அதன் இரத்தத்தை வீட்டுவாசல் நிலையின் மேற்சட்டத்தில் தெளிக்கும்படி சொன்னார். (யாத். 12:3-7) மோசே என்ன செய்தார் என்பதை பவுல் இப்படி எழுதினார்: “விசுவாசத்தினால்தான் அவர், இஸ்ரவேலரின் தலைப்பிள்ளைகளைக் கடவுளுடைய தூதன் கொல்லாதபடிக்குப் பஸ்காவைக் கொண்டாடி, கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளித்தார்.” (எபி. 11:28) யெகோவாவின் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதை மோசே அறிந்திருந்தார். எகிப்தியரின் தலைமகன்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள் என்று யெகோவா சொன்னதை அவர் உறுதியாக நம்பினார்.

11. மோசே ஏன் இஸ்ரவேலர்களை எச்சரித்தார்?

11 எகிப்தின் தலைமகன்களை அழிப்பதற்கு யெகோவா தம்முடைய ‘தூதனை’ அனுப்பிய சமயத்தில், மோசேயின் மகன்கள் மீதியானில் பாதுகாப்பாக இருந்தார்கள். (யாத். 18:1-6) ஆனால், இஸ்ரவேலர்களுடைய தலைமகன்களின் உயிர் ஆபத்திலிருந்ததால் அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரவேலர்களை எச்சரித்தார். மோசே தன்னுடைய மக்களை நேசித்தார்; அவர்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமென நினைத்ததால், உடனடியாக ‘இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: . . . பஸ்காவை [ஆட்டுக்குட்டியை] அடிக்கும்படி’ சொன்னார்.—யாத். 12:21.

12. என்ன முக்கியமான செய்தியை அறிவிக்கும்படி யெகோவா நமக்குச் சொல்லியிருக்கிறார்?

12 “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு அளிக்கும் வேளை வந்துவிட்டது; அதனால், வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் படைத்தவரை வணங்குங்கள்” என்ற முக்கியமான செய்தியை யெகோவாவின் மக்கள் தூதர்களின் உதவியோடு அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். (வெளி. 14:7) இதை அறிவிப்பதற்கான சமயம் இதுவே. மகா பாபிலோனுக்கு ‘வரப்போகும் கேடுகளிலிருந்து’ தப்பித்துக்கொள்வதற்காக அதைவிட்டு வெளியே வரும்படி நாம் மற்றவர்களை எச்சரிப்பது அவசியம். (வெளி. 18:4) ‘வேறே ஆடுகள்’ பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்து ‘கடவுளோடு சமரசமாகுங்கள்’ என்று மற்றவர்களைக் கெஞ்சிக் கேட்கிறார்கள்.—யோவா. 10:16; 2 கொ. 5:20.

கடவுளுடைய வாக்குறுதிகள்மீதுள்ள விசுவாசம் பிரசங்க வேலையில் முழுமூச்சுடன் ஈடுபட நம்மைத் தூண்டும் (பாரா 13)

13. நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்க எது உங்களுக்கு உதவும்?

13 “நியாயத்தீர்ப்பு . . . வேளை” வந்துவிட்டது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். அதோடு, பிரசங்கித்து சீடராக்கும் வேலையை அவசர உணர்வோடு செய்வதன் அவசியத்தை யெகோவா மிகைப்படுத்தி  சொல்லவில்லை என்பதையும் நாம் புரிந்திருக்கிறோம். இதை எப்படிச் சொல்கிறோம்? அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில், “பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தேவதூதர்கள் நின்றுகொண்டு . . . பூமியின் நான்கு காற்றுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருப்பதை” பார்த்தார். (வெளி. 7:1) மிகுந்த உபத்திரவத்தின்போது அழிவுண்டாக்கும் காற்றுகளை விடுவிப்பதற்கு அந்தத் தேவதூதர்கள் தயாராயிருப்பதை உங்கள் விசுவாசக் கண்களால் பார்க்கிறீர்களா? அப்படிப் பார்க்கும்போதுதான், நற்செய்தியை முழு நம்பிக்கையோடு உங்களால் பிரசங்கிக்க முடியும்.

14. ‘துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியிலிருந்து’ திரும்பும்படி எச்சரிக்க எது நம்மைத் தூண்டுகிறது?

14 நாம் ஏற்கெனவே யெகோவாவோடு நட்பு வைத்திருக்கிறோம்; முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. அதே சமயத்தில், ‘துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிப்பதற்கும் அவனை உயிரோடே காப்பதற்குமான’ பொறுப்பு நமக்கு இருப்பதை அறிந்திருக்கிறோம். (எசேக்கியேல் 3:17-19-ஐ வாசியுங்கள்.) இரத்தப்பழியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மட்டுமே நாம் பிரசங்கிப்பதில்லை. யெகோவாவையும் அவருடைய மக்களையும் நேசிப்பதாலேயே நாம் பிரசங்கிக்கிறோம். அன்பும் கருணையும் காட்டுவதன் அவசியத்தை, சமாரியனைப் பற்றிய உவமையின் மூலம் இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். எனவே, நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் அந்த சமாரியனைப் போல “மனதுருகி” மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிறேனா?’ அந்த உவமையில் சொல்லப்பட்ட ஆலயகுருவையோ லேவியரையோ போல ஏதாவது சாக்குபோக்கு சொல்லி ‘மறுபக்கமாக விலகிப்போக’ நாம் நிச்சயம் விரும்ப மாட்டோம். (லூக். 10:25-37) கடவுளுடைய வாக்குறுதிகள்மீதுள்ள விசுவாசமும் மற்றவர்கள்மீதுள்ள அன்பும் எஞ்சியிருக்கிற இந்தக் கொஞ்ச காலத்தில் பிரசங்க வேலையில் முழுமூச்சுடன் ஈடுபட நம்மைத் தூண்டுகிறது.

“செங்கடலில் நடந்து போனார்கள்”

15. தாங்கள் வசமாக மாட்டிக்கொண்டதாக இஸ்ரவேலர்கள் ஏன் நினைத்தார்கள்?

15 எகிப்தைவிட்டு வெளியே வந்த  இஸ்ரவேலர்கள் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் ‘காணமுடியாதவர்மீதிருந்த’ விசுவாசமே மோசேயைப் பலப்படுத்தியது. “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யாத். 14:10-12) இது ஒன்றும் அவர்கள் எதிர்பார்க்காத விஷயம் அல்ல. ஏனென்றால், “பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்று யெகோவா முன்னறிவித்திருந்தார். (யாத். 14:4) இருந்தாலும், இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண் முன்னால் இருந்தவற்றையே பார்த்தார்கள்; கடக்கமுடியாத சிவந்த சமுத்திரம்... பின்னால் விரைந்து வந்துகொண்டிருந்த பார்வோனின் போர் ரதங்கள்... தங்களை வழிநடத்துகிற 80 வயதான மேய்ப்பர்... இவையெல்லாம்தான் அவர்களுடைய கண்களுக்குத் தெரிந்தது. அதனால், தாங்கள் வசமாக மாட்டிக்கொண்டதாக நினைத்தார்கள்.

16. செங்கடலைக் கடக்கும் சூழ்நிலையில் மோசேக்கு இருந்த விசுவாசம் அவரை எப்படிப் பலப்படுத்தியது?

16 இருந்தாலும், மோசே கொஞ்சம்கூட பயப்படவில்லை. ஏனென்றால் அவர் தன்னுடைய விசுவாசக் கண்களால் கொந்தளிக்கும் கடலையும் பாய்ந்துவரும் படையையும்விட வலிமைமிக்க ஒன்றைப் பார்த்தார். ஆம், யெகோவா தரப்போகும் ‘இரட்சிப்பைப் பார்த்தார்.’ இஸ்ரவேலர்களுக்காக யெகோவா யுத்தம்பண்ணுவார் என்பதை அறிந்திருந்தார். (யாத்திராகமம் 14:13, 14-ஐ வாசியுங்கள்.) மோசேயின் விசுவாசம் கடவுளுடைய மக்களை உற்சாகப்படுத்தியது. “விசுவாசத்தினால்தான் அவர்கள், வறண்ட தரையில் நடப்பதுபோல் செங்கடலில் நடந்து போனார்கள்; எகிப்தியர் அதைக் கடக்கத் துணிந்தபோதோ அதில் அமிழ்ந்துபோனார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 11:29) அப்போது, “ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.”—யாத். 14:31.

17. நம் விசுவாசத்தை உரசிப்பார்க்கும் என்ன சம்பவம் எதிர்காலத்தில் நடக்கும்?

17 நாமும் ஆபத்திலிருப்பதுபோல் தோன்றும் ஒரு சூழ்நிலை சீக்கிரத்தில் வரும். அர்மகெதோன் ஆரம்பிப்பதற்குள், நம்மைவிட பெரிய பெரிய மத அமைப்புகளையெல்லாம் இந்த உலகின் அரசாங்கங்கள் முற்றிலுமாக அழித்திருக்கும். (வெளி. 17:16) அப்போது, நாம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுபோல் தெரியும். அதைப் பற்றி யெகோவா இவ்வாறு முன்னறிவிக்கிறார்: ‘மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்தில் . . . குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை.’ (எசே. 38:10-12, 14-16) நம்முடைய கண்களுக்கு, தப்பிக்க வழியே இல்லாததுபோல் தெரியலாம். அப்போது நாம் என்ன செய்வோம்?

18. மிகுந்த உபத்திரவத்தின்போது நாம் ஏன் பயப்படத் தேவையில்லை?

18 நாம் பயந்து நடுங்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், தம்முடைய மக்களை எதிரிகள் தாக்குவார்கள் என்றும் அப்போது என்ன நடக்கும் என்றும் கடவுள் முன்னறிவித்திருக்கிறார். ‘இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகக் கோகு வரும்காலத்தில் என் உக்கிரம் என் நாசியில் ஏறும் . . . என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்’ என்று அவர் சொல்கிறார். (எசே. 38:18-23) தம்முடைய மக்களுக்கு தீங்கு செய்கிற எல்லோரையும் யெகோவா அழித்துவிடுவார். அவர் தம்முடைய ‘பெரிதும் பயங்கரமுமான நாளில்’ நம்மைக் காப்பாற்றுவார் என்ற விசுவாசம் இருந்தால், அவர் ‘செய்யும் இரட்சிப்பைப் பார்க்கவும்’ எப்போதும் அவருக்கு உத்தமமாய் இருக்கவும் முடியும்.—யோவே. 2:31, 32.

19. (அ) யெகோவாவுக்கும் மோசேக்கும் இடையே எப்படிப்பட்ட நட்பு இருந்தது? (ஆ) யெகோவாவுக்கு எல்லா வழிகளிலும் கீழ்ப்படிந்து நடந்தால் என்ன ஆசீர்வாதத்தை அனுபவிப்பீர்கள்?

19 சீக்கிரத்தில் நடக்கப்போகும் சிலிர்ப்பூட்டும் சம்பவங்களுக்கு இப்போதே உங்களைத் தயார்படுத்துங்கள். ‘காணமுடியாதவரைக் காண்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருங்கள்.’ யெகோவா தேவனோடுள்ள நட்பைப் பலப்படுத்த தவறாமல் படியுங்கள், ஜெபம் செய்யுங்கள். யெகோவாவிடம் மோசே நெருங்கிய நட்பு வைத்திருந்ததால் பல அரிய செயல்களைச் செய்ய யெகோவா அவரைப் பயன்படுத்தினார். யெகோவா அவரை “முகமுகமாய்” அறிந்திருந்ததாக பைபிள் சொல்கிறது. (உபா. 34:12) மோசே ஒரு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார். விசுவாசம் இருந்தால், நாமும் யெகோவாவை முகமுகமாய்ப் பார்ப்பதுபோல் அவருடன் ஒரு நெருக்கமான நட்பை அனுபவிக்க முடியும். நம்முடைய “வழிகளிலெல்லாம்” யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் ‘அவர் நம்முடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.’—நீதி. 3:6.