Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பண்டைய காலங்களில், ஒருவர் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டது எதை வெளிக்காட்டியது?

மக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டதாக பைபிள் சொல்கிறது. இன்று பைபிளை வாசிப்போருக்கு இது ஒரு விநோத செயலாகத் தெரியலாம். ஆனால், யூதர்களுக்கு இது தங்களுடைய உணர்ச்சிகளை, அதாவது மனக்கசப்பை, துக்கத்தை, அவமானத்தை, கோபத்தை அல்லது துயரத்தை வெளிக்காட்டும் செயலாக இருந்தது.

உதாரணத்திற்கு, ரூபன் தன்னுடைய தம்பி யோசேப்பைக் காப்பாற்ற முயன்றும், அவன் அடிமையாக விற்கப்பட்டதைக் கேள்விப்பட்டபோது தன் ‘வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்.’ யோசேப்பு ஒரு காட்டு மிருகத்தின் வாயில் சிக்கி இறந்திருக்கலாம் என நினைத்து அவருடைய அப்பா யாக்கோபும் ‘தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்.’ (ஆதி. 37:18-35) தன்னுடைய பிள்ளைகள் எல்லோரும் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டபோது யோபு ‘தன் சால்வையைக் கிழித்துக்கொண்டார்.’ (யோபு 1:18-20) இஸ்ரவேலரில் ஒருவர் ‘தன் வஸ்திரங்களைக் கிழித்தவாறு’ தலைமைக் குருவான ஏலியிடம் வந்து இஸ்ரவேலர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டதாகவும், ஏலியின் இரண்டு மகன்கள் கொல்லப்பட்டதாகவும், உடன்படிக்கைப் பெட்டியை பெலிஸ்தர் கைப்பற்றியதாகவும் சொன்னார். (1 சா. 4:12-17) யோசியாவுக்குத் திருச்சட்டம் வாசித்துக்காட்டப்பட்ட சமயத்தில் மக்கள் செய்த தவறுகள் அவருக்குத் தெரியவந்ததும் அவர் ‘தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்.’—2 இரா. 22:8-13.

விசாரணையின்போது இயேசு சொன்னதை தெய்வநிந்தனை என தவறாக எடுத்துக்கொண்ட தலைமைக் குரு காய்பா ‘தன் மேலங்கியைக் கிழித்துக்கொண்டார்.’ (மத். 26:59-66) கடவுளுடைய பெயர் பழித்துப் பேசப்படுவதை யாராவது கேட்டால், அவர்கள் தங்களுடைய உடையைக் கிழிக்க வேண்டுமென ரபீக்களின் பாரம்பரியம் குறிப்பிட்டது. ஆனால், எருசலேம் ஆலயத்தின் அழிவுக்குப் பிறகு, ரபீக்களின் மத்தியில் நிலவிய கருத்து இதுதான்: “கடவுளுடைய பெயர் பழித்துப் பேசப்படுவதைக் கேட்பவர் இனி தன் உடையைக் கிழித்துக்கொள்ள வேண்டியதில்லை; அப்படிக் கிழித்தால் உடை ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் கந்தலாகிவிடும்.”

ஒருவர் தன்னுடைய ஆடையைக் கிழிக்கும்போது அவருடைய துக்கம் உள்ளப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தச் செயல் கடவுளுக்கு முன் மதிப்புள்ளதாக இருக்கும். அதனால்தான், ‘நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து என்னிடத்தில் திரும்புங்கள்’ என்று யெகோவா தம் மக்களிடம் சொன்னார்.—யோவே. 2:13.