Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘யெகோவாமீது அன்பு காட்டுங்கள்’

‘யெகோவாமீது அன்பு காட்டுங்கள்’

“உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.”—மத். 22:37.

1. கடவுளுக்கும் அவருடைய மகனுக்கும் அன்பு எப்படி அதிகமானது?

“தகப்பன்மீது நான் அன்பு வைத்திருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவா. 14:31) ‘என்மீது தகப்பன் பாசம் வைத்திருக்கிறார்’ என்றும் சொன்னார். (யோவா. 5:20) இயேசு பூமிக்கு வருவதற்குமுன் யுகா யுகங்களாக, ‘திறமையுள்ள வேலைக்காரராக’ கடவுளோடு இருந்தார். (நீதி. 8:30) யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்ததால், அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டார். அவர்மீது அன்பு வைக்க இயேசுவுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. அவர்களிடையே இருந்த நட்புதான் அன்பு அதிகரிக்கக் காரணமாக இருந்தது.

2. (அ) அன்பு என்றால் என்ன? (ஆ) என்ன கேள்விகளைக் கலந்தாலோசிப்போம்?

2 ஒருவர்மீது காட்டுகிற அளவுகடந்த பாசம்தான் அன்பு. “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்” என்று தாவீது சொன்னார். (சங். 18:1) நாமும் யெகோவாவை நேசிக்க வேண்டும். ஏனென்றால் அவர் நம்மை நேசிக்கிறார். அவருக்குக் கீழ்ப்படியும்போது நம்மேல் அன்பு காட்டுகிறார். (உபாகமம் 7:12, 13-ஐ வாசியுங்கள்.) நம்மால் கடவுளைப் பார்க்க முடியாவிட்டாலும் அவர்மீது அன்பு காட்ட முடியுமா? யெகோவாமீது எந்தளவு அன்பு காட்ட வேண்டும்? ஏன் அவர்மேல் அன்பு காட்ட வேண்டும்? எப்படி அன்பு காட்டுவது?

கடவுள்மீது அன்பு காட்ட முடியுமா?

3, 4. நம்மால் யெகோவாவின்மீது அன்பு காட்ட முடியுமா?

3 “கடவுள் காணமுடியாத உருவத்தில் இருக்கிறார்.” (யோவா. 4:24)  இருந்தாலும் நம்மால் அவர்மீது அன்பு காட்ட முடியும். அதைத்தான் பைபிளும் சொல்கிறது. இஸ்ரவேலர்களிடம் மோசே சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.”—உபா. 6:5.

4 யெகோவாமீது நாம் ஏன் அன்பு காட்ட வேண்டும்? அவரைச் சார்ந்திருக்கும் விதத்தில்தான் நம்மைப் படைத்திருக்கிறார். அன்பு காட்டும் விதத்திலும் படைத்திருக்கிறார். அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும்போது அவர்மீது அன்பு அதிகரிக்கும். அது நமக்குச் சந்தோஷத்தைத் தரும். “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுக்குரியது” என்று இயேசு சொன்னார். (மத். 5:3) ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: “நமக்குமேல் ஓர் அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்று எல்லா மக்களுமே நம்புகிறார்கள், அந்தச் சக்தியைத் தேடுகிறார்கள். இது எப்பேர்ப்பட்ட ஆச்சரியமான விஷயம்!”—மேன் டஸ் நாட் ஸ்டேன்டு அலோன், ஏ. சி. மோரிஸன் எழுதிய புத்தகம்.

5. கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியுமா?

5 கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். நாம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவரே விரும்புகிறார். அரியோபாகுவில் கூடிவந்த மக்களிடம் பவுல் இதைத்தான் விளக்கினார். அந்தப் பட்டணம், அத்தீனாள் (அத்தேனே மக்களின் காவல் தெய்வம்) தெய்வத்திற்குக் கட்டப்பட்ட பார்த்தினான் கோயில் அருகே இருந்தது. அவர்களிடம் பவுல் இதைத்தான் சொன்னார்: “உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த கடவுள், . . . மனிதருடைய கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. . . . ஒரே மனிதனிலிருந்து எல்லாத் தேசத்தாரையும் உண்டு பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்திருக்கிறார்; குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு வரையறுத்திருக்கிறார். உண்மையில் அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லாதபோதிலும், அவரை நாம் நாடித்தேட வேண்டும் என்பதற்காக, அதுவும் தட்டித் தடவியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்.” (அப். 17:24-27) கடவுளைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள முடியும். 75,00,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் அவரைப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். யெகோவாவை உண்மையில் நேசிக்கிறார்கள்.

எந்தளவு அன்பு காட்ட வேண்டும்?

6. இயேசு சொன்ன “தலைசிறந்த கட்டளை” எது?

6 யெகோவாமீது இருதயத்திலிருந்து அன்பு காட்ட வேண்டும். ஒரு பரிசேயனுக்கு இயேசு இப்படி விளக்கினார்: “‘போதகரே, திருச்சட்டத்தில் தலைசிறந்த கட்டளை எது?’ என்று அவரிடம் கேட்டான். அதற்கு அவர், ‘“உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.” இதுதான் தலைசிறந்த கட்டளை, முதலாம் கட்டளை.’”—மத். 22:34-38.

7. யெகோவாமீது (அ) “முழு இருதயத்தோடு” (ஆ) “முழு மூச்சோடு” (இ) “முழு மனதோடு” எப்படி அன்பு காட்டுவது?

7 யெகோவாமீது “முழு இருதயத்தோடு” அன்பு காட்ட நம் எண்ணங்கள், ஆசைகள், உணர்ச்சிகள் அனைத்தும் அவருக்குப் பிடித்த விதத்தில் இருக்க வேண்டும். யெகோவாமீது “முழு மூச்சோடு” அன்பு காட்ட நம் வாழ்வு முழுவதையும் அவருக்கே கொடுக்க வேண்டும். “முழு மனதோடு” அன்பு காட்ட நம் திறமைகள் அனைத்தையும் அவருக்கே கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்யும்போது யெகோவாமேல் நாம் அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறோம்.

8. யெகோவாமீது நாம் எப்படி அன்பு காட்டலாம்?

8 முழு இருதயத்தோடும், முழு மூச்சோடும், முழு மனதோடும் யெகோவாமீது அன்பு காட்டுகிறோம் என்றால் அவருடைய வார்த்தையைத் தவறாமல் படிப்போம், அவருக்குப் பிடித்தமாதிரி நடந்துகொள்வோம், அவருடைய அரசாங்கத்தின் நற்செய்தியை முழுமையாகப் பிரசங்கிப்போம். (மத். 24:14; ரோ. 12:1, 2) அவர்மீது நாம் வைத்திருக்கும் அன்பு அவரிடம் இன்னும் நெருங்கிச் செல்ல நம்மைத் தூண்டும். (யாக். 4:8) அவர்மீது அன்பு காட்ட இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

 ஏன் அன்பு காட்ட வேண்டும்?

9. யெகோவாமீது நாம் ஏன் அன்பு காட்ட வேண்டும்?

9 யெகோவா நம் படைப்பாளர், கொடைவள்ளல். “அவராலேயே நாம் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” என்று பவுல் சொன்னார். (அப். 17:28) பூமியை நமக்காகவே கொடுத்திருக்கிறார். (சங். 115:16) உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவையும் மற்ற எல்லாவற்றையும் நமக்குத் தந்திருக்கிறார். உயிருள்ள கடவுள் “தம்மைப் பற்றிச் சாட்சி கொடுக்காமல் இருந்ததில்லை; எப்படியென்றால், வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்” என்று லீஸ்திரா மக்களிடம் பவுல் சொன்னார். (அப். 14:15-17) நம் மகத்தான படைப்பாளரை நேசிக்க இதைவிட ஒரு சிறந்த காரணம் வேண்டுமா?—பிர. 12:1.

10. மீட்பு பலிக்காக நாம் ஏன் நன்றியோடு இருக்கலாம்?

10 ஆதாமிடமிருந்து வந்த பாவத்தையும் மரணத்தையும் கடவுள் ஒழித்துக்கட்ட ஏற்பாடு செய்திருக்கிறார். (ரோ. 5:12) “நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்.” (ரோ. 5:8) நாம் செய்த தவறை நினைத்து மனந்திரும்பும்போதும், இயேசுவின் பலியில் விசுவாசம் வைக்கும்போதும் யெகோவா நம் பாவங்களை மன்னிக்கிறார். இதை நினைக்கும்போது அவர்மீது அன்பு ஆறாகப் பெருக்கெடுக்கவில்லையா?—யோவா. 3:16.

11, 12. யெகோவா நமக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொடுக்கப் போகிறார்?

11 யெகோவா கொடுக்கும் ‘நம்பிக்கை நம்மை சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புகிறது.’ (ரோ. 15:13) கடவுள்மீது நம்பிக்கை வைத்தால் கஷ்டங்களைச் சகிக்க முடியும். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ‘சாகும்வரை உண்மையுடன் இருந்தால், வாழ்வெனும் கிரீடத்தை’ பெறுவார்கள். (வெளி. 2:10) பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்கள் முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள். (லூக். 23:43) இதைக் கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! ‘நல்ல பரிசுகளையும், தலைசிறந்த அன்பளிப்புகளையும்’ தருகிற யெகோவாமீது நம் அன்பு அதிகரிக்கிறது, அல்லவா?—யாக். 1:17.

12 உயிர்த்தெழுதல் நம்பிக்கையைத் தந்திருக்கிறார். (அப். 24:15) மரணத்தில் ஒருவரை இழக்கும்போது நமக்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது. ஆனாலும், உயிர்த்தெழுதல் ‘நம்பிக்கையில்லாதவர்கள் துக்கப்படும்’ அளவுக்கு நாம் வருந்துவது கிடையாது. (1 தெ. 4:13) இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப யெகோவா தேவன் ஆவலோடு இருக்கிறார். முக்கியமாக, யோபு போன்ற உண்மையுள்ள மக்களை உயிர்த்தெழுப்ப ஆசையாகக் காத்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பே. (யோபு 14:15) பூஞ்சோலை பூமியில் நம் நேச நெஞ்சங்களை உயிரோடு பார்க்கும்போது எப்படி இருக்கும்! இவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் யெகோவாவை நினைக்கும்போது நம் உள்ளத்தில் அன்பு பொங்கி வழிகிறது.

13. கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?

13 யெகோவா நம்மேல் அக்கறை வைத்திருக்கிறார். (சங்கீதம் 34:6, 18, 19; 1 பேதுரு 5:6, 7-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு உண்மையோடு இருக்கிறவர்களுக்கு அவர் உதவி செய்வார்; அதனால் அவருடைய ‘மேய்ச்சலின் ஆடுகளாய்’ இருப்பது நமக்குப் பாதுகாப்பு தருகிறது. (சங். 79:13) மேசியானிய அரசாங்கத்தின் மூலமாக இன்னும் எத்தனை எத்தனையோ ஆசீர்வாதங்களைக் கடவுள் தரப்போகிறார். அவை எல்லாவற்றிலும் அவருடைய அன்பு பளிச்சிடும். அந்த அரசாங்கத்தின் ராஜாவான இயேசு கிறிஸ்து, பூமியிலிருந்து வன்முறை, கொடுமை, அநீதி அனைத்தையும் நீக்கிவிடுவார். அவருக்குக் கீழ்ப்படியும் மக்கள் சமாதானமாகவும் செழிப்பாகவும் வாழ்வார்கள். (சங். 72:7, 12-14, 16) இவை எல்லாவற்றையும் தரப்போகிற கடவுள்மீது, முழு இருதயத்தோடும், முழு மூச்சோடும், முழு மனதோடும் அன்பு காட்டாமல் இருக்க முடியுமா?—லூக். 10:27.

14. என்ன அருமையான பாக்கியத்தை யெகோவா தந்திருக்கிறார்?

14 அவருடைய சாட்சிகளாக இருக்கும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 43: 10-12) அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பை யெகோவா நமக்குத் தந்திருக்கிறார். இந்தப் பாக்கியத்தைத் தந்ததற்காக யெகோவாமீது இன்னும் அன்பு அதிகரிக்கிறது. பிரச்சினை நிறைந்த இந்த உலகில் அருமையான எதிர்காலத்தைப் பற்றி பைபிளிலிருந்து சொல்கிறோம். யெகோவாவுடைய வார்த்தைகள் ஒன்றுகூட நிறைவேறாமல் போனதில்லை. அதனால், நாம் தைரியத்தோடும் நம்பிக்கையோடும் இந்த வேலையைச் செய்கிறோம். (யோசுவா 21:45; 23:14-ஐ வாசியுங்கள்.) யெகோவா இன்னும் நிறைய ஆசீர்வாதங்களைத் தரப்போகிறார். அவர்மீது அன்பு காட்ட இன்னும் எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்மீது நாம் வைத்திருக்கும் அன்பை எப்படிக் காட்டுவது?

எப்படி அன்பு காட்டுவது?

15. பைபிளைப் படித்து, அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?

15 கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படித்து, வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். யெகோவாமீது அன்பு இருந்தால் பைபிளைப் படிப்போம், அப்போது பைபிள் நம் ‘பாதைக்கு வெளிச்சமாயிருக்கும்.’ (சங். 119:105) நாம் கஷ்டத்தில் இருக்கும்போது அவருடைய வார்த்தை நமக்கு ஆறுதலாக இருக்கிறது. உதாரணத்திற்கு, “தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” “உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங். 51:17; 94:18, 19) கஷ்டத்தில் வாடும் மக்களைக் கண்டு யெகோவாவும் இயேசுவும் மனதுருகுகிறார்கள். (ஏசா. 49:13; மத். 15:32) பைபிளைப் படிக்கும்போது நாம் படும் கஷ்டங்களைப் பார்த்து யெகோவா எவ்வளவு வருத்தப்படுகிறார் என்று தெரிந்துகொள்ள முடியும். அப்போது அவர்மீது நம் அன்பு அதிகரிக்கும்.

16. யெகோவாமீது இருக்கும் அன்பு அதிகரிக்க ஜெபம் எப்படி உதவும்?

16 “இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்.” யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’ ஜெபம் செய்யும்போது அவருடன் நம் நட்பு வளரும். (சங். 65:2) நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும்போது அவர்மீது நம் அன்பு இன்னும் ஆழமாகிறது. நம்மால் தாங்க முடியாத அளவுக்குச் சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார். (1 கொ. 10:13) கஷ்டப்படும்போது உதவிக்காக யெகோவாவிடம் மன்றாடினால், மன “சமாதானம்” கொடுப்பார். (பிலி. 4:6, 7) சில சமயங்களில் நெகேமியா செய்ததுபோல் அமைதியாக மனதிற்குள் ஜெபம் செய்தால்கூட  கேட்பார். (நெ. 2:1-6) இடைவிடாமல் ஜெபம் செய்யும்போதும், அதற்கு யெகோவா பதிலளிக்கும்போதும் அவர்மீது அன்பு ஊற்றெடுக்கும். பிரச்சினைகளைச் சகிக்க அவர் நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையும் அதிகரிக்கும்.—ரோ. 12:12.

17. கூட்டங்களை ஏன் தவறவிடக் கூடாது?

17 கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். (எபி. 10:24, 25) யெகோவாவைப் பற்றியும் அவருடைய சட்டங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள இஸ்ரவேலர்கள் ஒன்றுகூடி வந்தார்கள். (உபா. 31:12) அவர்மேல் அன்பு இருந்தால் அவருடைய விருப்பப்படி நடப்பது நமக்குக் கஷ்டமாக இருக்காது. (1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.) அதனால், நாம் எந்தக் கூட்டங்களையும் தவறவிடக் கூடாது. யெகோவாமேல் ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பு குறைந்துபோக நாம் அனுமதிக்கக் கூடாது.—வெளி. 2:4.

18. கடவுள்மீதுள்ள அன்பு எதைச் செய்ய நம்மைத் தூண்டும்?

18 சுறுசுறுப்பாக ‘நற்செய்தியைப் பற்றி’ சாட்சி கொடுங்கள். (கலா. 2:5) மேசியானிய அரசாங்கத்தைப் பற்றி சாட்சி கொடுக்க கடவுள்மீது இருக்கும் அன்பு நம்மைத் தூண்டும். அந்த அரசாங்கத்தின் ராஜாவான இயேசு, அர்மகெதோனில் ‘சத்தியத்தினிமித்தம்’ போரிடுவார். (சங். 45:4; வெளி. 16:14, 16) கடவுளுடைய அன்பைப் பற்றியும் பூஞ்சோலை பூமியைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்கிறோம்; அவர்கள் சீடர்களாக ஆவதற்கு உதவுகிறோம். இது எல்லையில்லா சந்தோஷத்தைத் தருகிறது.—மத். 28:19, 20.

19. மேய்ப்பர்களுக்கு நாம் ஏன் மதிப்புக் காட்ட வேண்டும்?

19 யெகோவா நியமித்திருக்கும் மேய்ப்பர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். (அப். 20:28) மூப்பர்கள் மூலம் யெகோவா நம் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார். மூப்பர்கள் ‘காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருக்கிறார்கள்.’ (ஏசா. 32:1, 2) புயல் அடிக்கும்போது பாதுகாப்பான இடம் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்! உச்சி வெயில் சுட்டெரிக்கும்போது நிழலான ஓர் இடத்தைப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதேபோல் மூப்பர்களும் நமக்குத் தேவையான புத்துணர்ச்சியையும் ஆன்மீக உதவியையும் தருகிறார்கள். ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருக்கும் மூப்பர்களுக்குக் கீழ்ப்படியும்போது அவர்களுக்கு மதிப்புக் காட்டுகிறோம்; யெகோவாவையும் சபைக்குத் தலைவரான இயேசுவையும் நேசிப்பதைக் காட்டுகிறோம்.—எபே. 4:8; 5:23; எபி. 13:17.

யெகோவா நியமித்திருக்கும் மேய்ப்பர்கள் மந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள் (பாரா 19)

தொடர்ந்து அன்பு காட்டுங்கள்

20. யெகோவாமீது அன்பு இருப்பதை ஒருவர் எப்படிக் காட்டலாம்?

20 யெகோவாமேல் உங்களுக்கு அன்பிருந்தால் அவருடைய ‘வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டுமல்லாமல் அதன்படி செய்கிறவர்களாகவும் இருப்பீர்கள்.’ (யாக்கோபு 1:22-25-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய வார்த்தையின்படி “செய்கிற” ஒருவருக்கு உறுதியான விசுவாசம் இருப்பதால் சுறுசுறுப்பாகப் பிரசங்கிப்பார்; கூட்டங்களையும் தவறவிட மாட்டார். ஏனென்றால், அவர் யெகோவாமீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார், அவருடைய ‘பரிபூரணமான சட்டத்திற்கு’ கீழ்ப்படிகிறார்.—சங். 19:7-11.

21. ஜெபங்களை எதற்கு ஒப்பிடலாம்?

21 நமக்கு யெகோவாமீது அன்பிருந்தால் நாம் அவரிடம் அடிக்கடி பேசுவோம். திருச்சட்டத்தின்படி இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குத் தினமும் தூபம் காட்ட வேண்டியிருந்தது. அதை மனதில் வைத்து தாவீது இப்படிச் சொன்னார்: “என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.” (சங். 141:2; யாத். 30:7, 8) மனத்தாழ்மையான மன்றாடல்... ஊக்கமான விண்ணப்பம்... இதயம் கனிந்த போற்றுதல்... நன்றி சொல்லும் ஜெபம்... இவை எல்லாம் யெகோவாவுக்கு மணம் கமழும் தூபங்களைப்போல் இருக்கின்றன.—வெளி. 5:8.

22. அடுத்தக் கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?

22 நாம் கடவுளையும் சக மனிதர்களையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். (மத். 22:37-39) நாம் யெகோவாவை நேசித்தால், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், சக மனிதர்கள்மீதும் அன்பு காட்டுவோம். அதை எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்தக் கட்டுரையில் சிந்திப்போம்.