Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நீங்கள் எனக்கு சாட்சிகள்’

‘நீங்கள் எனக்கு சாட்சிகள்’

‘நீங்கள் எனக்கு சாட்சிகளாக இருப்பீர்கள் என்று [யெகோவா] சொல்கிறார்.’—ஏசா. 43:10.

1, 2. (அ) சாட்சி என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன, மீடியாக்கள் எதைச் செய்யத் தவறியிருக்கிறார்கள்? (ஆ) யெகோவா ஏன் மீடியாக்களை நம்பியில்லை?

சாட்சி என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? “நடந்த சம்பவத்தை நேரில் பார்த்து, அதைத் தெரிவிப்பவர்” என்று ஓர் அகராதி சொல்கிறது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு நகரத்தில் 160 வருடங்களாக ஒரு செய்தித்தாள் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர் த விட்னஸ் (சாட்சி); இந்தப் பெயர் அதற்குப் பொருத்தமானது. ஏனென்றால், உலகில் நடக்கும் சம்பவங்களைப் பற்றித் துல்லியமான தகவல்களைக் கொடுப்பதுதான் அதன் லட்சியம். “[இந்தச் செய்தித்தாள்] சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று அதன் முதல் பதிப்பாசிரியர் சொன்னார்.

2 ஆனால், நிறைய சம்பவங்களைப் பற்றி மீடியாக்கள் துல்லியமாகச் சொல்வதில்லை, உண்மையை மறைத்திருக்கின்றன; சில நேரங்களில் பொய்களைக்கூட பரப்பியிருக்கின்றன. முக்கியமாக, சர்வவல்லமையுள்ள கடவுளான யெகோவாவைப் பற்றிய உண்மைகளைத் தெரிவிக்கத் தவறியிருக்கின்றன. “நானே [யெகோவா] என்பதை நாடுகள் அறியும்” என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக கடவுள் சொன்னார். (எசே. 39:7, ஈஸி டு ரீட் வர்ஷன்) எல்லாவற்றையும் படைத்தவருக்குத் தம் பெயரை அறிவிக்க மீடியாக்கள் தேவையில்லை. தம்மைப் பற்றி அறிவிக்க கிட்டத்தட்ட 80 லட்சம் சாட்சிகளை அவர் பயன்படுத்துகிறார். மனிதர்களுக்காக அவர் செய்த, செய்கிற, செய்யப்போகிற விஷயங்களைப் பற்றி பூமி முழுவதும் அவர்கள் சாட்சி கொடுக்கிறார்கள். இப்படித் தம்மைப் பற்றி சாட்சி கொடுக்கிறவர்களைப் பார்த்து: “நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச்  சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று [யெகோவா] சொல்லுகிறார்.”—ஏசா. 43:10.

3, 4. (அ) யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை பைபிள் மாணாக்கர்கள் எப்போது ஏற்றுக்கொண்டார்கள், அதைப்பற்றி எப்படி உணர்ந்தார்கள்? (ஆரம்பப் படத்தைப் பாருங்கள்.) (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?

3 ‘நித்திய ராஜாவான’ யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருப்பது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ‘என் பெயரும் எப்பொழுதும் யெகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள்’ என்று யெகோவாவே சொல்கிறார். (1 தீ. 1:17; யாத். 3:15, ஈஸி டு ரீட் வர்ஷன்; பிர. 2:16-ஐ ஒப்பிடுக.) பைபிள் மாணாக்கர்கள் 1931-லிருந்து யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்கள். இதைப் பாராட்டி நிறைய கடிதங்கள் காவற்கோபுர பத்திரிகையில் வந்திருக்கின்றன. “‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டதில் எங்களுக்கு எல்லையில்லா சந்தோஷம்! அந்தப் பெயருக்கேற்ற விதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானம் எடுத்திருக்கிறோம்” என்று கனடா நாட்டிலிருந்து ஒரு சபை எழுதியது.

4 யெகோவா நம்மை அவருடைய சாட்சியாகத் தேர்ந்தெடுத்ததற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை எப்படி விளக்குவீர்கள்?

கடவுளுடைய சாட்சிகள் பூர்வ காலத்தில்

5, 6. (அ) இஸ்ரவேல பெற்றோர்கள் எப்படி யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருந்தார்கள்? (ஆ) அவர்கள் வேறு என்ன செய்ய வேண்டியிருந்தது, இன்றுள்ள பெற்றோர் எப்படி அவர்களைப் பின்பற்றலாம்?

5 யெகோவா இஸ்ரவேலர்களைத் தம்முடைய சாட்சிகளாகத் தேர்ந்தெடுத்தார். யெகோவாவைப் பற்றிச் சாட்சி கொடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு இஸ்ரவேலனுக்கும் இருந்தது. (ஏசா. 43:10, பொது மொழிபெயர்ப்பு) யெகோவா என்னவெல்லாம் செய்தார் என்பதைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதன் மூலம் சாட்சிகளாக இருந்தார்கள். உதாரணமாக, “உங்கள் பிள்ளைகள், ‘நீங்கள் ஏன் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள்?’ என்று உங்களைக் கேட்டால் நீங்கள், ‘இந்த பஸ்கா பண்டிகை [யெகோவாவை] மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில்,  நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்’” என்று பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்படி மோசே சொன்னார். (யாத். 12:26, 27) யெகோவாவைச் சேவிப்பதற்காக இஸ்ரவேலரை விடுவிக்கும்படி பார்வோனிடம் மோசே கேட்டபோது, “யார் அந்த [யெகோவா]? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்?” என்று அவன் கேட்டான். (யாத். 5:2, பொ.மொ.) அதன்பிறகு, எகிப்தியரை பத்து வாதைகள் தாக்கின; செங்கடலில் எகிப்திய சேனை சமாதியானது. இதிலிருந்து யெகோவா யார் என்பதை பார்வோனுக்கு நிரூபித்தார். இதையெல்லாம் இஸ்ரவேலர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருப்பார்கள். யெகோவாதான் உண்மையான கடவுள், தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர், சர்வவல்லமையுள்ளவர் என்பதற்கு இஸ்ரவேலர்கள் கண்கண்ட சாட்சிகள்.

6 இப்படி யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருப்பதை இஸ்ரவேலர்கள் பெரிய பாக்கியமாக நினைத்தார்கள். அதனால், யெகோவாவின் மாபெரும் செயல்களைத் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்களிடம் அடிமைகளாக இருந்த அந்நியர்களுக்கும் சொன்னார்கள். அதோடு, அவர்கள் எல்லா விஷயத்திலும் பரிசுத்தமாக இருக்க வேண்டியிருந்தது. அதனால், யெகோவாவின் நெறிகளையும் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். “உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்று யெகோவா சொன்னார். (லேவி. 19:2; உபா. 6:6, 7) இன்றுள்ள பெற்றோர்கள் இவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். யெகோவாவின் நெறிகளைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான், பிள்ளைகள் பரிசுத்தமாக இருப்பார்கள்; கடவுளுடைய பெயருக்குப் புகழ் சேர்ப்பார்கள்.நீதிமொழிகள் 1:8-ஐயும் எபேசியர் 6:4-ஐயும் வாசியுங்கள்.

பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லிக் கொடுப்போம்; யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்ப்போம் (பாரா 5, 6)

7. (அ) இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த வரைக்கும் சுற்றியுள்ள தேசங்கள் எப்படி உணர்ந்தார்கள்? (ஆ) நாம் என்ன முக்கிய விஷயத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

7 யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த வரைக்கும் இஸ்ரவேலர்கள் அவருக்குச் சாட்சிகளாக இருந்தார்கள்; யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். அதனால் சுற்றியுள்ள தேசங்கள் அவர்களைப் பார்த்து பயந்தார்கள். (உபா. 28:10) ஆனால், அவர்கள் பலமுறை யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்; சிலைகளை வழிபட்டார்கள். தாங்கள் வணங்கிய கானானிய தெய்வங்களைப் போலவே அவர்களும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார்கள், அவர்களுடைய பிள்ளைகளை பலி செலுத்தினார்கள், ஏழை எளியோரை ஒடுக்கினார்கள். ஆனால், நாம் இஸ்ரவேலர்களைப் போல் இருக்கக் கூடாது. பரிசுத்தமான கடவுளாகிய யெகோவாவை வணங்குவதால் நாமும் அவரைப் போலவே இருக்க வேண்டும்.

மாபெரும் விடுதலை

8. யெகோவா ஏசாயாவுக்கு என்ன கட்டளை கொடுத்தார், அதற்கு ஏசாயா என்ன சொன்னார்?

8 இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனதால் அடிமைகளாகக் கொண்டு செல்லப்படுவார்கள் என்று ஏசாயா மூலம் யெகோவா எச்சரித்தார். ஏசாயா புத்தகத்தின் முதல் ஆறு அதிகாரங்கள் எருசலேமுக்கும் சுற்றியிருந்த தேசங்களுக்கும் வரப்போகிற அழிவைப்பற்றி எச்சரித்தன. மக்கள் அலட்சியப்படுத்தினாலும் தொடர்ந்து எச்சரிக்க வேண்டும் என்று ஏசாயாவிடம் யெகோவா சொன்னார். இதைக் கேட்ட ஏசாயா, ‘எதுவரைக்கும் மக்கள் மனந்திரும்பாமல் இருப்பார்கள்’ என்று கேட்டார். அதற்கு யெகோவா, ‘பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகும்’ வரைக்கும் என்றார். (ஏசாயா 6:8-11-ஐ வாசியுங்கள்.) எருசலேம் அழியும்வரை ஏசாயா எச்சரிப்பின் செய்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. அவர்கள் மனந்திரும்பும்போது அவர்களுக்கு மாபெரும் விடுதலையை அளிக்கப்போவதாகவும் யெகோவா முன்னறிவித்தார்.—ஏசா. 43:19.

9. (அ) எருசலேமைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறியது? (ஆ) இன்று என்ன செய்தி அறிவிக்கப்படுகிறது?

9 உசியா ராஜா ஆட்சி செய்த கடைசி வருடத்தில், அதாவது சுமார் கி.மு. 778-ல், ஏசாயாவுக்கு இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது. 46 வருடங்களாக ஏசாயா தொடர்ந்து எச்சரித்து வந்தார். எசேக்கியாவின் ஆட்சி காலம் வரை, அதாவது கி.மு. 732 வரை, எச்சரித்தார்.  கி.மு. 607-ல்தான் எருசலேம் அழிக்கப்பட்டது. ஆக, 125 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் நடக்கப்போகிற விஷயங்களைத் தம்முடைய சாட்சிகள் மூலம் இன்றும் யெகோவா எச்சரித்து வருகிறார். சாத்தானுடைய ஆட்சிக்கு முடிவு கட்டப்போவதையும் இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி ஆரம்பிக்கப்போவதையும் பற்றி காவற்கோபுர பத்திரிகை 135 வருடங்களாக அறிவித்து வருகிறது.—வெளி. 20:1-3, 6.

10, 11. ஏசாயா மூலம் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?

10 யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த யூதர்கள் உயிர்த்தப்பினார்கள். எருசலேம் அழிந்தபோது பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். (எரே. 27:11, 12) யெகோவா சொன்ன இன்னொரு தீர்க்கதரிசனம் 70 வருடங்களுக்குப் பிறகு நிறைவேறியதை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள்: “இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் சொல்கிறார், ‘நான் உங்களுக்காகப் படைகளை பாபிலோனுக்கு அனுப்புவேன்.”—ஏசா. 43:14, ஈஸி டு ரீட் வர்ஷன்.

11 இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள், கி.மு. 539 அக்டோபர் மாதத்தில் நிறைவேறின. ஒருநாள், பாபிலோனின் ராஜாவும் பிரபுக்களும் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்துவந்த பரிசுத்தமான பாத்திரங்களில் திராட்சமது குடித்துக்கொண்டிருந்தார்கள். அதுமட்டுமா, பொய் தெய்வங்களைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருந்தார்கள். அன்றிரவு, கோரேசின் தலைமையில் மேதிய பெர்சிய படை பாபிலோனைக் கைப்பற்றியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கோரேசு யூதர்களை விடுவித்தார்; எருசலேம் ஆலயத்தைத் திரும்பக் கட்டச் சொன்னார். எருசலேமுக்குத் திரும்பிப் போகிறவர்களை யெகோவா பாதுகாப்பார், பராமரிப்பார் என்பதையெல்லாம் ஏசாயா முன்னறிவித்தார். “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” என்று ஏசாயா மூலம் யெகோவா சொன்னார். (ஏசா. 43:21; 44:26-28) யெகோவா சொன்னபடியே, அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று ஆலயத்தைக் கட்டினார்கள். இப்படி, யெகோவாவே உண்மையான கடவுள், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்பதற்கு உயிருள்ள சாட்சிகளானார்கள்.

12, 13. (அ) இஸ்ரவேலர்களோடு யாரெல்லாம் சேர்ந்துகொண்டார்கள்? (ஆ) ‘வேறே ஆடுகள்’ என்ன பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள், எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?

12 வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் யூதர்களோடு திரும்பி வந்தார்கள். சில காலத்திற்கு பிறகு, நிறைய புறதேசத்தாரும் யூத மதத்திற்கு மாறினார்கள். (எஸ்றா 2:58, 64, 65; எஸ்தர் 8:17) இன்று, ‘வேறே ஆடுகளாகிய’ ‘திரளான ஜனங்கள்,’ ‘தேவனுடைய இஸ்ரவேலரான’ பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு சேர்ந்து யெகோவாவைச் சேவிக்கிறார்கள். (வெளி. 7:9, 10; யோவா. 10:16; கலா. 6:16) இவர்கள் எல்லோரும் யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருக்கும் மாபெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

13 பூஞ்சோலை பூமியில், உயிர்த்தெழுந்து வருபவர்களிடம் சாத்தானின் உலகம் அழிந்ததைப்  பற்றித் தெரிவிக்கும் அருமையான வாய்ப்பு இந்தத் திரளான ஜனங்களுக்கு இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளாக கடைசிவரை உண்மையோடு இருந்தால் மட்டுமே, இந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அப்படி இருப்பது எப்போதுமே சுலபமல்ல. நாம் பாவிகளாக இருப்பதால் பலமுறை தவறு செய்கிறோம். தினம் தினம் யெகோவாவிடம் மன்னிப்பு கேட்கிறோம். இருந்தாலும், யெகோவா நம்மை சாட்சிகளாகத் தேர்ந்தெடுத்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!1 யோவான் 1:8, 9-ஐ வாசியுங்கள்.

கடவுளுடைய பெயரின் அர்த்தம்

14. யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன?

14 கடவுளுடைய பெயரின் முழு அர்த்தத்தைத் தெரிந்துகொண்டால்தான் அவருடைய சாட்சிகளாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கடவுளுடைய பெயர் செயலைக் குறிக்கும் ஒரு எபிரெய வினைச்சொல்லிலிருந்து வருகிறது. யெகோவா என்றால் “நினைத்ததைச் செய்பவர்” என்று அர்த்தம். இந்தப் பெயர் அவருக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால், அவர் வானத்தையும், பூமியையும் அதிலிருக்கும் எல்லாவற்றையும் படைத்தவர்; எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுபவர். பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார். அதைக் கண்டிப்பாகச் செய்வார், யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சாத்தான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவனால் தடுக்க முடியாது. யெகோவா நினைத்ததை நிச்சயம் செய்து முடிப்பார்.

15. யெகோவா எந்த விதத்தில் தம் பெயருக்கேற்ப நடந்துகொண்டார்? (“ அர்த்தமுள்ள ஒரு பெயர்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

15 எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்க மோசேயை யெகோவா அனுப்பினார். அப்போது மோசேயிடம், “நான் எப்படியெல்லாம் ஆக வேண்டுமென நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்று சொன்னார். அதோடு, “நீ இஸ்ரவேலரிடம், ‘ஆவேன்’ என்பவர் உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார் என்று சொல்” என்றார். (யாத். 3:14, NW) இதிலிருந்து யெகோவாவைப் பற்றி ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்கிறோம். யெகோவா எதையெல்லாம் செய்ய வேண்டுமென நினைக்கிறாரோ அதையெல்லாம் செய்வார். உதாரணத்திற்கு, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்தார்... பாதுகாத்தார்... வழிநடத்தினார். அவர்களுடைய எல்லா தேவைகளையும் பார்த்துக்கொண்டார்.

நன்றியோடிருங்கள்

16, 17. (அ) யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருப்பதற்கு எப்படி நன்றி காட்டலாம்? (ஆ) அடுத்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?

16 இன்றும் யெகோவா நமக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் செய்கிறார். உதாரணத்திற்கு, நாம் உயிர் வாழ தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார். நம் விசுவாசத்தைப் பலப்படுத்த ஒவ்வொரு நாளும் உதவி செய்கிறார். “நினைத்ததைச் செய்பவர்” என்ற அவருடைய பெயருக்கேற்ப நடந்துகொள்கிறார். அவருடைய பெயரின் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் நினைப்பதை நிறைவேற்ற தம் படைப்புகளையும் எதை வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும். உதாரணத்திற்கு, பூமி முழுவதும் நற்செய்தியை அறிவிக்க இன்று நம்மைப் பயன்படுத்துகிறார். இதைத் தெரிந்துகொள்ளும்போது அவரைப்பற்றி இன்னும் அதிகமாகச் சாட்சி கொடுக்க நாம் தூண்டப்படவில்லையா? 70 வருடங்களாக யெகோவாவைச் சேவிக்கும் நார்வே நாட்டைச் சேர்ந்த கோரா (84 வயது) என்ற சகோதரர் சொல்கிறார்: “நித்திய ராஜாவான யெகோவாவை சேவிக்கிறதையும் அவரோட சாட்சிகளில் ஒருத்தரா இருக்கிறதையும் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். பைபிள் சத்தியங்களை மக்கள் ஏத்துக்கும்போது சந்தோஷமா இருக்கு. முக்கியமாக, முடிவில்லா வாழ்க்கையைப் பெற கிறிஸ்துவின் மரணம் எப்படி உதவுதுனு மக்களுக்குக் சொல்லிக்கொடுக்கும்போது ரொம்ப திருப்தியா இருக்கு.”

17 இன்று சில இடங்களில் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் ஆட்களைப் பார்ப்பதே கடினம். இருந்தாலும், ஆர்வமுள்ள ஒருவரைப் பார்க்கும்போது இந்தச் சகோதரரைப் போலவே நீங்களும் சந்தோஷப்பட்டிருப்பீர்கள். இதுவரை, யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருப்பதைப் பற்றி பார்த்தோம். ஆனால், நாம் எப்படி இயேசுவுக்கும் சாட்சிகளாக இருக்க முடியும்? அடுத்தக் கட்டுரை இதற்குப் பதிலளிக்கும்.