Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராயிருங்கள்

கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராயிருங்கள்

“கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் [அதாவது, கஷ்டங்களைச்] சந்தித்தே தீர வேண்டும்.”—அப். 14:22.

1. நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்?

முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்குமுன் நமக்குப் பல கஷ்டங்கள் வரும். ஏனென்றால், இந்த உலகம் சாத்தானின் கையில் இருக்கிறது. (வெளி. 12:12) நீங்கள் பல வருடங்களாக யெகோவாவின் சாட்சியாக இருந்தாலும் சரி, சமீபத்தில் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் சரி, சாத்தானின் ஆட்சி முடிவுக்கு வரும்வரை கஷ்டங்களை அனுபவித்தே ஆக வேண்டும்.

2. (அ) யெகோவாவின் சாட்சிகள் வேறெந்த விதத்திலும் சோதிக்கப்படுகிறார்கள்? (படத்தைப் பாருங்கள்.) (ஆ) நாம் துன்புறுத்தப்படுவதற்கு யார் காரணம்?

2 பொதுவாகவே எல்லா மனிதர்களுக்கும் பல சோதனைகள் வருகின்றன. (1 கொ. 10:13) யெகோவாவின் சாட்சிகள் இன்னொரு விதத்திலும் சோதிக்கப்படுகிறார்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதால் துன்புறுத்தப்படுகிறார்கள். “அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் அல்ல. அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 15:20) நாம் துன்புறுத்தப்படுவதற்கு யார் காரணம்? சாத்தான்தான் காரணம். “கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று [சாத்தான்] அலைந்து திரிகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 5:8) கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்க அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று கவனியுங்கள்.

 பவுல் துன்புறுத்தப்பட்டார்

3-5. (அ) லீஸ்திராவில் பவுல் எப்படித் துன்புறுத்தப்பட்டார்? (ஆ) அவர் சொன்ன வார்த்தைகள் சீடர்களை எப்படிப் பலப்படுத்தியது?

3 கடவுளுக்கு உண்மையாக இருந்ததால், பவுலுக்கு பல கஷ்டங்கள் வந்தன. (2 கொ. 11:23-27) லீஸ்திராவில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். பிறந்ததிலிருந்தே நடக்க முடியாமல் ஊனமாக இருந்த ஒருவனை பவுலும் பர்னபாவும் குணப்படுத்தினார்கள். அதைப் பார்த்த மக்கள் அவர்களைத் தெய்வங்கள் என்று நினைத்து வணங்க ஆரம்பித்தார்கள். அப்படிச் செய்ய வேண்டாம் என்று பவுலும் பர்னபாவும் அவர்களைக் கெஞ்சி கேட்டார்கள். அப்போது, சில யூதர்கள் அங்கு வந்து பவுலையும் பர்னபாவையும் பற்றிப் பொய்களைச் சொன்னார்கள். உடனே அந்த மக்கள் பவுலைக் கல்லெறிந்து கொல்ல முயற்சி செய்தார்கள். பிறகு, அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து, அங்கிருந்து போய்விட்டார்கள்.—அப். 14:8-19.

4 பவுலும் பர்னபாவும் அதன்பிறகு தெர்பை நகரத்தில் இருந்தவர்களைச் சந்தித்தார்கள். அங்கிருந்து லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிப்போனார்கள். “அங்கிருந்த சீடர்களைப் பலப்படுத்தினார்கள்; ‘கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்’ என்று சொல்லி, விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.” (அப். 14:21, 22) இந்த வார்த்தைகள் சீடர்களை எப்படிப் பலப்படுத்தியிருக்கும்? ‘உங்களுக்கு நிறைய கஷ்டங்கள் வரும்’ என்று யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்னும் கவலையாகத்தான் இருக்கும். அப்படியென்றால், பவுலும் பர்னபாவும் சொன்ன வார்த்தைகள் ‘சீடர்களைப் பலப்படுத்தியது’ என்று எப்படிச் சொல்ல முடியும்?

5 “பல உபத்திரவங்களைச் சகித்துக்கொள்ளுங்கள்” என்று பவுல் சொல்லவில்லை. “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்” என்று சொன்னார். கடவுளுக்கு உண்மையாக இருப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றிதான் அவர் சொன்னார். இதைக் கேட்ட சீடர்கள் நிச்சயம் பலப்பட்டிருப்பார்கள். கடவுளுடைய அரசாங்கத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் வெறும் கனவோ வீண் ஆசையோ கிடையாது. கடைசிவரை கடவுளுக்கு உண்மையோடு இருப்பவர்கள் நிச்சயம் ‘மீட்புப் பெறுவார்கள்.’மத். 10:22.

6. ‘முடிவுவரை சகித்திருப்பவர்களுக்கு’ என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

6 ‘முடிவுவரை சகித்திருந்தால்’ நாமும் ஆசீர்வாதங்களைப் பெறுவோம். பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால் சாவாமையுள்ள வாழ்க்கையைப் பெறுவோம்; இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வோம். ‘வேறே ஆடுகளாக’ இருந்தால், அதாவது பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால், “நீதி குடிகொண்டுள்ள புதிய” பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம். (யோவா. 10:16; 2 பே. 3:13) ஆனால், அதுவரை “நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்.” நமக்கு வரும் இரண்டு விதமான சோதனைகளைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.

நேரடித் தாக்குதல்

7. நேரடித் தாக்குதல் என்றால் என்ன?

7 “மக்கள் உங்களை உள்ளூர் நீதிமன்றங்களில் நிறுத்துவார்கள், ஜெபக்கூடங்களில் உங்களை அடிப்பார்கள், ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்” என்று இயேசு சொன்னார். (மாற். 13:9) இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோல் நாமும் சாத்தானுடைய நேரடித் தாக்குதலுக்கு ஆளாகலாம், துன்புறுத்தப்படலாம். மதத் தலைவர்கள் அல்லது அரசியல் தலைவர்களின் தூண்டுதலினால் நாம் துன்புறுத்தப்படலாம். (அப். 5:27, 28) பவுலுக்கு இப்படிப்பட்ட துன்புறுத்துதல் வந்தபோது அவர் பயப்படவே இல்லை; தைரியமாக இருந்தார்.அப்போஸ்தலர் 20:22, 23-ஐ வாசியுங்கள்.

8, 9. துன்புறுத்துதல் வந்தபோதிலும் பவுல் எப்படிக் கடவுளுக்கு உண்மையாக இருந்தார்? நம் காலத்திலும் யெகோவாவின் சாட்சிகள் எப்படிக் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறார்கள்?

8 சாத்தானின் நேரடித் தாக்குதல்களை பவுல் தைரியமாகச் சமாளித்தார். “என் உயிர் எனக்கு முக்கியமல்ல, எஜமானராகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தைச் செய்து முடிப்பதே எனக்கு முக்கியம்; கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுத்து என் ஓட்டத்தை முடிப்பதே  எனக்கு முக்கியம்” என்று அவர் சொன்னார். (அப். 20:24) துன்புறுத்துதல்கள் வரும் என்று நினைத்து பவுல் கவலைப்படவில்லை. எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்; “முழுமையாகச் சாட்சி” கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

9 இன்று நிறைய சகோதர சகோதரிகள் பவுலைப் போல் தைரியமாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் சிலர், ராணுவத்தில் சேர மறுத்ததால் சிறையில் போடப்பட்டார்கள். குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமலேயே, விசாரணை செய்யப்படாமலேயே அவர்கள் 20 வருடங்களாக சிறையில் இருந்தார்கள். அவர்கள் கொடூரமாக அடிக்கப்பட்டிருக்கிறார்கள், பலவிதமான சித்திரவதைகளையும் அனுபவித்திருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க யாரையுமே அனுமதிக்கவில்லை; குடும்பத்தாரைக்கூட அனுமதிக்கவில்லை.

10. எதிர்பாராத நேரத்தில் துன்புறுத்துதல் வந்தால் நாம் ஏன் பயப்படக்கூடாது?

10 இன்னும் எத்தனையோ நாடுகளில் இருக்கும் சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கும் துன்புறுத்துதல் வரலாம். அப்படி வந்தால் பயந்துவிடாதீர்கள். யோசேப்பின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். சொந்த அண்ணன்களே அவரை அடிமையாக விற்றார்கள். ஆனால், ‘எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் அவரை [யெகோவா] விடுவித்தார்.’ (அப். 7:9, 10) நம்மையும் யெகோவா விடுவிப்பார். “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்க . . . யெகோவா அறிந்திருக்கிறார்.” (2 பே. 2:9) அதனால் யெகோவாவை முழுமையாக நம்பியிருங்கள்; துன்புறுத்துதல்களைத் தைரியத்தோடு சகித்திருங்கள். இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து காப்பாற்றி யெகோவா உங்களுக்கு முடிவில்லா வாழ்வைக் கொடுப்பார்.—1 பே. 5:8, 9.

மறைமுகத் தாக்குதல்

11. நேரடித் தாக்குதலுக்கும் மறைமுகத் தாக்குதலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

11 சாத்தான் நம்மை மறைமுகமாகவும் தாக்கலாம். நேரடித் தாக்குதலுக்கும் மறைமுகத் தாக்குதலுக்கும் என்ன வித்தியாசம்? நேரடித் தாக்குதல் சூறாவளி காற்றைப் போன்றது. காற்று பலமாக அடித்தால் வீட்டை ஒரேயடியாக நாசமாக்கிவிடும். ஆனால், மறைமுகத் தாக்குதல் கரையானைப் போன்றது. கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து நாசமாக்கும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியாது.

12. (அ) மறைமுகமாகத் தாக்குவதற்கு சாத்தான் பயன்படுத்தும் ஒரு வழி என்ன? (ஆ) பவுல் ஏன் சோர்ந்துபோனார்?

12 யெகோவாவோடு இருக்கும் நம் பந்தத்தை எப்படியாவது குலைத்துப்போட வேண்டும் என்று சாத்தான் முயற்சி செய்கிறான். அதற்கு அவன் நேரடியாகத் தாக்கலாம் அல்லது மறைமுகமாகத் தாக்கலாம். கரையான் அரிப்பதுபோல், சாத்தானின் மறைமுகத் தாக்குதல் நம்மை யெகோவாவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துவிடும். மறைமுகமாகத் தாக்குவதற்கு அவன் பயன்படுத்தும் ஒரு வழி நம்மைச் சோர்ந்துபோகச் செய்வது. சில நேரங்களில் அப்போஸ்தலன் பவுலும் சோர்ந்துபோனார். (ரோமர் 7:21-24-ஐ வாசியுங்கள்.) பவுல் யெகோவாவோடு நெருங்கிய பந்தம் வைத்திருந்தார்; முதல் நூற்றாண்டு ஆளும் குழுவில் ஒருவராக இருந்தார். அப்பேர்ப்பட்ட ஒருவரே வாழ்க்கையில் சோர்ந்துபோனார்; “இக்கட்டான நிலையில் இருக்கிறேன்” என்று சொன்னார். ஏனென்றால் அவரும் நம்மைப்போல் பாவமுள்ள மனிதன்தான். “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்து வருகிறேன்” என்று அவர் சொன்னார். நாமும் சில நேரம் பவுலைப் போல சோர்ந்துபோகலாம். அப்படிப்பட்ட நேரங்களில் பவுலின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்.

13, 14. (அ) யெகோவாவின் ஊழியர்கள் ஏன் சோர்ந்துபோகலாம்? (ஆ) யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிக்க நினைப்பது யார், ஏன்?

13 நிறைய சகோதர சகோதரிகள் சில நேரங்களில் சோர்ந்துபோகிறார்கள்; எதற்குமே லாயக்கில்லாதவர்கள் போல் உணர்கிறார்கள். டெப்ரா என்ற ஒரு பயனியர் சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் செஞ்ச தப்ப நினைச்சு நினைச்சு ரொம்ப வேதனைப்படுறேன். அத யோசிச்சு பார்க்கும்போது என்னை யாருக்குமே பிடிக்காதுனு தோணும். யெகோவாவுக்குக்கூட என்னை பிடிக்காதுனு தோணும்.”

14 யெகோவாவின் ஊழியர்களில் சிலர் இந்தச் சகோதரியைப் போல் சோர்ந்துபோகிறார்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சிலர் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை நினைத்து சோர்ந்துபோகலாம். (நீதி. 15:15) சிலர்  அவர்களுக்கு வந்த வியாதியை நினைத்து மனமுடைந்து போகலாம். நாம் இப்படிச் சோர்ந்துபோக வேண்டும் என்று ஆசைப்படுவது யார்? நாம் யெகோவாவுக்குச் சேவை செய்யக் கூடாது என்று நினைக்க வைப்பது யார்? சாத்தான்தான். அவன் நிச்சயமாக அழிந்துபோவான் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் நம்மையும் அப்படி நினைக்க வைக்கிறான்; ‘நான் எதுக்குமே லாயக்கில்ல, யெகோவா என்னை நிச்சயம் அழிச்சிடுவார்’ என்று நினைக்க வைக்கிறான். (வெளி. 20:10) யெகோவாவுக்குச் சேவை செய்வதை நாம் நிறுத்திவிட வேண்டும் என்றும் சோர்ந்துபோய்விட வேண்டும் என்றும் சாத்தான் ஆசைப்படுகிறான். அதனால், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கு நாம் ஒவ்வொரு நாளும் போராட வேண்டியிருக்கிறது.

15. சாத்தானை எதிர்த்துப் போராட எது நமக்கு உதவும்?

15 தொடர்ந்து சாத்தானை எதிர்த்துப் போராடுங்கள். “நாம் சோர்ந்துபோவதில்லை; நம்முடைய உடல் அழிந்து வந்தாலும், நம்முடைய உள்ளம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நமக்கு வரும் உபத்திரவம் நொடிப்பொழுதே நீடிக்கக்கூடியது, அற்பமானது; அந்த உபத்திரவத்தால் நமக்கு வரும் மேன்மையோ என்றென்றும் நிலைத்திருக்கக்கூடியது, மகத்தானது” என்று பவுல் சொன்னார். (2 கொ. 4:16, 17) எனவே, எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களை நினைத்துப் பார்த்தால் சாத்தானை எதிர்த்துப் போராட முடியும்.

இப்போதே தயாராகுங்கள்

தைரியமாகச் சாட்சி கொடுக்கத் தயாராய் இருங்கள் (பாரா 16)

16. சோதனைகளைச் சமாளிக்க ஏன் இப்போதே தயாராக வேண்டும்?

16 இதுவரை நாம் பார்த்தபடி, சாத்தான் நமக்கு எதிராக பலவிதமான “சூழ்ச்சிகளை” செய்கிறான். (எபே. 6:11) அதனால்தான், “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, [சாத்தானை] எதிர்த்து நில்லுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 5:9) யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்ய நம்முடைய மனதையும் இருதயத்தையும் நாம் இப்போதே தயார்ப்படுத்த வேண்டும். பொதுவாக, போர் வீரர்கள் போருக்கான அறிகுறி இல்லையென்றாலும், ஒவ்வொரு நாளும் கடுமையாகப் பயிற்சி செய்வார்கள். ஒருவிதத்தில் நாமும் போர் வீரர்கள்தான்; சாத்தானை எதிர்த்து தினம் தினம் போராடுகிறோம். எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சோதனைகள் வரப்போகிறது என்று நமக்குத்  தெரியாது. அதனால், எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதைச் சமாளிக்க இப்போதே தயாராக வேண்டும். விசுவாசத்தில் உறுதியாக இருப்பதற்கு இப்போதே நாம் கடும் முயற்சி எடுக்க வேண்டும். “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே எப்போதும் சோதித்துப் பாருங்கள்; நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள உங்களை நீங்களே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்” என்று பவுல் சொன்னார்.—2 கொ. 13:5.

17-19. (அ) நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்? (ஆ) பைபிளைப் பற்றி பிள்ளைகள் தைரியமாகப் பேச என்ன செய்யலாம்?

17 பவுல் கொடுத்த ஆலோசனையை நாம் எப்படிப் பின்பற்றலாம்? அதற்கு இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் தவறாம ஜெபம் செய்றேனா? யெகோவாவுக்கு பிடிக்காததை செய்ய சொல்லி யாராவது வற்புறுத்துனா அவங்க சொல்றத கேட்குறேனா, யெகோவாவுக்கு கீழ்ப்படியிறேனா? தவறாம கூட்டங்களுக்கு போறேனா? பைபிள பத்தி தைரியமா சாட்சி கொடுக்குறேனா? இல்லை, மத்தவங்க என்னை மன்னிக்கிற மாதிரி நான் மத்தவங்கள மன்னிக்கிறேனா? மூப்பர்களுக்கு கீழ்ப்படியிறேனா? அமைப்பு சொல்ற மாதிரி நடக்குறேனா?’

18 யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்யும்படி நம்மை யாராவது வற்புறுத்தலாம். விசேஷமாக, பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு அடிக்கடி இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் எத்தனையோ பிள்ளைகள் வெட்கப்படாமல், பயப்படாமல் பைபிளைப் பற்றி தைரியமாகப் பேசியிருக்கிறார்கள். தைரியமாகப் பேசுவதற்கு நம் பத்திரிகைகளில் நிறைய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, பரிணாமத்தைப் பற்றிக் கேட்பவர்களிடம் எப்படிப் பேசலாம் என்று அக்டோபர் 2009, விழித்தெழு!-வில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘நீ ஏன் பரிணாமத்தை நம்புறதில்ல’-னு யாராவது கேட்டால், இப்படிச் சொல்லலாம்: ‘நான் ஏன் அதை நம்பணும்? விஞ்ஞானிகளே நிறைய பேர் இதை நம்புறதில்லயே!’ எப்படிப் பேசுவதென்று, பெற்றோர்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வீட்டிலேயே நடித்துப் பார்க்கலாம்.

19 பைபிளைப் பற்றி தைரியமாகப் பேசுவதும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடப்பதும் எப்போதுமே சுலபம் கிடையாது. உதாரணத்திற்கு, நாள்முழுக்க வேலை செய்துவிட்டு, கூட்டங்களுக்குப் போவது ரொம்பக் கஷ்டமாக இருக்கலாம். அல்லது காலையில் எழுந்து ஊழியத்துக்குப் போவது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இப்போதே யெகோவாவுடைய சேவைக்கு முதலிடம் கொடுத்தால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளைச் சமாளிக்கத் தயாராக முடியும்.

20, 21. (அ) மீட்பு பலியைப் பற்றி யோசித்துப் பார்ப்பது நமக்கு எப்படி உதவும்? (ஆ) நாம் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும்?

20 சோர்ந்துபோகச் செய்வதன் மூலம் சாத்தான் நம்மை மறைமுகமாகத் தாக்கலாம். அதை நாம் எப்படிச் சமாளிப்பது? இயேசு நமக்காக தம் உயிரையே கொடுத்திருப்பதைப் பற்றி யோசித்துப் பார்ப்பது உதவும். அப்போஸ்தலன் பவுல் இதைத்தான் செய்தார். பவுல் சில நேரங்களில் தான் செய்த தவறுகளை நினைத்து வேதனைப்பட்டார். ஆனால், தன்னைப்போன்ற பாவிகளுக்காகத்தான் கிறிஸ்து உயிரைக் கொடுத்தார் என்பதை யோசித்துப் பார்த்தது பவுலுக்கு உதவியது. “நான் வாழும் வாழ்க்கை கடவுளுடைய மகன் மீதுள்ள விசுவாசத்தினால்தான்; அவரே என்மீது அன்பு வைத்து எனக்காகத் தம்மையே தியாகம் செய்தார்” என்று அவர் சொன்னார். (கலா. 2:20) பவுல் இயேசுவின் மீட்பு பலியை உயர்வாக மதித்தார். அவருக்காகவே இயேசு உயிரைக் கொடுத்ததைப் போல் உணர்ந்தார்.

21 எனக்காகவே யெகோவா இந்த மீட்பு பலியை ஏற்பாடு செய்திருக்கிறார்’ என்று பவுலைப் போலவே நாமும் யோசித்துப் பார்த்தால் சோர்ந்துபோக மாட்டோம். ஆனால், இப்படிச் செய்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்காதீர்கள். பூஞ்சோலை பூமி வரும்வரை பிரச்சினையை நாம் சகித்துக்கொள்ள வேண்டும். கடைசிவரை சகித்திருப்பவர்கள் மட்டுமே ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கம் இந்த முழு பூமியையும் பூஞ்சோலையாக மாற்றப்போகிறது. அந்த நாள் நெருங்கிவிட்டது. அதனால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சகித்திருப்போமாக! கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போகத் தயாராய் இருப்போமாக!!