Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் உயிர்த்தெழுதலினால் கிடைக்கும் நன்மைகள்

இயேசுவின் உயிர்த்தெழுதலினால் கிடைக்கும் நன்மைகள்

[இயேசு] உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்.”—மத். 28:6.

1, 2. (அ) மதத் தலைவர்கள் சிலர் பேதுருவிடம் என்ன கேட்டார்கள், அதற்கு பேதுரு என்ன சொன்னார்? (ஆரம்பப் படம்.) (ஆ) பேதுருவால் எப்படி தைரியமாகப் பேச முடிந்தது?

இயேசு இறந்து கொஞ்ச நாட்கள்தான் ஆகியிருந்தது. யூத மதத் தலைவர்கள்தான் அவருடைய சாவுக்கு காரணமாக இருந்தார்கள். இப்போது இயேசுவின் நெருங்கிய நண்பனான பேதுருமீது இவர்கள் பயங்கர கோபமாக இருக்கிறார்கள். ஏனென்றால், பிறவியிலிருந்தே ஊனமாக இருந்த ஒருவனை அவர் குணமாக்கினார். அதனால், அவரை கைது செய்து யூத நீதிமன்றத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இயேசுவையே கொலை செய்த மதத் தலைவர்களுக்கு பேதுருவை கொலை செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. பேதுருவிடம், ‘எந்த வல்லமையில், யாருடைய பெயரில் இதைச் செய்தாய்’ என்று கேட்டார்கள். அதற்கு பேதுரு, “நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் பெயரிலேயே இந்த மனிதன் குணமாகி உங்கள்முன் நிற்கிறான் . . . [இயேசுவை] நீங்கள் கழுமரத்தில் அறைந்தீர்கள்; ஆனால், அவரைக் கடவுள் உயிர்த்தெழுப்பினார்” என்று தைரியமாக சொன்னார்.—அப். 4:5-10.

2 கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் இயேசுவைத் தெரியவே தெரியாதென்று பேதுரு மூன்றுமுறை சொன்னார். (மாற். 14:66-72) இப்போது மட்டும் எப்படி அவரால் தைரியமாகப் பேச முடிந்தது? முதலாவதாக, கடவுளுடைய சக்தி அவருக்கு உதவியது. இரண்டாவதாக, இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற நம்பிக்கையும் அவருக்கு தைரியத்தைக் கொடுத்தது. இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை பேதுரு ஏன் நம்பினார்? நாம் ஏன் அதை நம்பலாம்?

3, 4. (அ) இயேசுவின் காலத்திற்கு முன்பு யாரெல்லாம் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள்? (ஆ) இயேசு யாரையெல்லாம் உயிரோடு எழுப்பினார்?

 3 இயேசு பிறப்பதற்கு பல வருஷங்களுக்கு முன்பு எலியாவும் எலிசாவும் கடவுளுடைய சக்தியின் உதவியால் இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார்கள். (1 இரா. 17:17-24; 2 இரா. 4:32-37) செத்துப்போன ஒருவனுடைய உடல், எலிசாவின் எலும்புகள்மீது பட்ட உடனே அவன் உயிரோடு எழுந்தான். (2 இரா. 13:20, 21) இது எல்லாம் முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இன்று பைபிளை நம்புவதுபோல் அவர்களும் இந்தப் பதிவுகளை உறுதியாக நம்பினார்கள்.

4 இறந்தவர்களை இயேசு உயிரோடு எழுப்பியதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு விதவையின் மகனை அவர் உயிரோடு எழுப்பியபோது அவனுடைய அம்மா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! (லூக். 7:11-15) ஒரு சின்ன பெண்ணை அவர் உயிரோடு எழுப்பியபோது அவளுடைய அப்பா-அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! (லூக். 8:49-56) லாசரு கல்லறையிலிருந்து உயிரோடு வந்ததைப் பார்த்தவர்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருந்திருக்கும்! இதை எல்லாம் பைபிளில் படிக்கும்போது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!—யோவா. 11:38-44.

இயேசுவின் உயிர்த்தெழுதல் ஏன் விசேஷமானது

5. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் மற்ற உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

5 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் அதற்குமுன் நடந்த உயிர்த்தெழுதல்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இயேசு பரலோகத்திற்குரிய உடலில் அதாவது, பார்க்க முடியாத உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டார்; மற்றவர்கள் மனித உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள். இயேசு இனி சாகவே மாட்டார், அவருக்கு அழிவே இல்லை. ஆனால், உயிர்த்தெழுந்த மற்றவர்கள் திரும்பவும் இறந்துபோனார்கள். (அப்போஸ்தலர் 13:34-ஐ வாசியுங்கள்.) இதெல்லாம் இயேசுவின் சீடர்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் இயேசுவைப் பற்றி பேதுரு இப்படிச் சொன்னார்: “அவர் பூமிக்குரிய உடலில் கொல்லப்பட்டு பரலோகத்திற்குரிய உடலில் உயிர்ப்பிக்கப்பட்டார். . . . கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இப்போது கடவுளுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்.” (1 பே. 3:18-22) இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்ற எல்லா உயிர்த்தெழுதல்களையும்விட விசேஷமானது.

6. இயேசுவின் உயிர்த்தெழுதல் சீடர்களை எப்படிப் பலப்படுத்தியது?

6 இயேசு இறந்த பிறகு சீடர்கள் ரொம்ப சோகமாக இருந்தார்கள். ஆனால், அவர் உயிரோடு எழுந்ததை கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அது அவர்களுக்கு புது தெம்பு கொடுத்தது. இயேசு கடவுளுடைய மகன்தான் என்பதை அவருடைய உயிர்த்தெழுதல் நிரூபித்தது. இயேசுவை யாராலும் எதுவும் செய்ய முடியாது, அவருக்கு தேவதூதர்களைவிட அதிக சக்தி இருக்கிறது என்ற விஷயங்கள் சீடர்களை பலப்படுத்தியது. அதனால், அவர்கள் தைரியமாகவும் உற்சாகமாகவும் நற்செய்தியை சொன்னார்கள். ஒருவேளை, இயேசு உயிரோடு எழுப்பப்படவில்லை என்றால் சீடர்கள் செய்த ஊழியத்துக்கு அர்த்தமே இல்லாமல் போயிருக்கும். யெகோவாவுடைய வாக்குறுதிகளும் நிறைவேறாமல் போய்விடும்.

7. இயேசு இன்று என்ன செய்துகொண்டிருக்கிறார், என்ன கேள்விகளுக்கு பதிலை பார்க்க போகிறோம்?

7 இன்று இயேசு கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருக்கிறார்; பிரசங்க வேலையை வழிநடத்துகிறார். சீக்கிரத்தில் கெட்ட மக்களை அழித்து, இந்தப் பூமியை அழகிய பூஞ்சோலையாக மாற்ற போகிறார். (லூக். 23:43) அதில் மக்கள் சாவே இல்லாமல் வாழ்வார்கள். இயேசுவை கடவுள் உயிரோடு எழுப்பவில்லை என்றால் இதில் எதுவுமே நடக்காது. ஆனால், இயேசு உயிரோடு இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அவர் உயிரோடு எழுந்ததினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?

இயேசுவை யெகோவா உயிர்த்தெழுப்புகிறார்

8, 9. (அ) இயேசுவின் கல்லறையைக் காவல் காக்க வேண்டும் என்று மத தலைவர்கள் ஏன் கேட்டார்கள்? (ஆ) மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் இயேசுவின் கல்லறைக்குப் போனபோது என்ன பார்த்தார்கள்?

8 இயேசு இறந்த பிறகு, யூத மத தலைவர்கள் பிலாத்துவிடம், “ஐயா, இந்த மோசக்காரன்  உயிருடன் இருந்தபோது, ‘மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிரோடு எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிருக்கிறது. அதனால், அவனுடைய சீடர்கள் வந்து அவன் உடலைத் திருடிச் சென்று, ‘அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்!’ என்று மக்களிடம் சொல்லிவிடாதபடி, மூன்று நாள்வரை கல்லறையைக் காவல்காப்பதற்குக் கட்டளையிடுங்கள்” என்றார்கள். அதற்கு பிலாத்து, “உங்களுக்காகக் காவலர்களை அனுப்புகிறேன். நீங்கள் போய், உங்களால் முடிந்தளவு அதைக் காவல் காத்துக்கொள்ளுங்கள்” என்றார். (மத். 27:62-66) பிலாத்து சொன்னபடியே இயேசு வைக்கப்பட்ட கல்லறையைக் காவல் காக்க அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

9 அந்த கல்லறையை ஒரு பெரிய கல்லால் மூடியிருந்தார்கள். இயேசுவை ஒரேயடியாக அழித்துவிட்டதாக யூத மத தலைவர்கள் நினைத்தார்கள். ஆனால், யெகோவா இயேசுவை மறுபடியும் உயிரோடு எழுப்பினார். இயேசு இறந்து மூன்றாம் நாள் மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் இயேசுவின் கல்லறைக்குப் போனபோது கல்லறையை மூடியிருந்த கல் விலகியிருந்தது. அதன்மேல் ஒரு தேவதூதர் உட்கார்ந்திருந்தார். தேவதூதர் அந்தப் பெண்களிடம், “[இயேசு] இங்கு இல்லை, அவர் . . . உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார். அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்று சொன்னார்.—மத். 28:1-6.

10. இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் இருந்தது?

10 இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவரை நிறைய சீடர்கள் பார்த்தார்கள். அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதற்கு இது ஒரு முக்கியமான ஆதாரம். இதைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “வேதவசனங்களில் எழுதப்பட்டுள்ளபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்; பின்பு அடக்கம் செய்யப்பட்டார்; ஆம், வேதவசனங்களில் எழுதப்பட்டுள்ளபடி, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்பட்டார்; பின்னர் கேபாவுக்கும், அதன்பின்பு 12 பேருக்கும் தோன்றினார். பின்பு, ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்குத் தோன்றினார்; . . . பின்பு யாக்கோபுக்கும், அதன்பின் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் தோன்றினார்; எல்லாருக்கும் கடைசியாக, . . . எனக்கும் தோன்றினார்.”—1 கொ. 15:3-8.

இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதற்கு என்ன ஆதாரம்?

11. இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி தாவீது என்ன சொன்னார்?

11 முதல் ஆதாரம்: இயேசு உயிர்த்தெழுப்பப்படுவார் என்று பைபிளில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. யெகோவா, தமக்கு உண்மையாக இருப்பவரை கல்லறையில் அழிந்துபோக விடமாட்டார் என்று தாவீது எழுதினார். (சங்கீதம் 16:10-ஐ வாசியுங்கள்.) இந்த வசனம், இயேசுவைப் பற்றிதான் சொல்கிறது என்று பேதுரு சொன்னார்: “கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து முன்கூட்டியே தெரிந்து, அவர் கல்லறையில் விட்டுவிடப்பட மாட்டார் என்றும், அவரது உடல் அழிவுக்குள்ளாகாது என்றும் [தாவீது] சொல்லியிருந்தார்.”—அப். 2:23-27, 31.

12. உயிர்த்தெழுந்த இயேசுவை யாரெல்லாம் பார்த்தார்கள்?

12 இரண்டாவது ஆதாரம்: உயிர்த்தெழுந்த பிறகு அவரை நிறைய பேர் பார்த்தார்கள். உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகுதான் இயேசு பரலோகத்துக்கு போனார். அந்த 40 நாட்களில் நிறைய சீடர்கள் அவரைப் பார்த்தார்கள், பேசினார்கள். கல்லறையில் மகதலேனா மரியாள் அவரை பார்த்தார், எம்மாவு ஊருக்குப் போகும் வழியில் இரண்டு சீடர்கள் அவரைப் பார்த்தார்கள். (லூக். 24:13-15) மற்றொரு சமயத்தில் 500-க்கும் அதிகமானவர்கள் அவரைப் பார்த்தார்கள். இப்படி பல இடங்களில் சீடர்கள் அவரைப் பார்த்தார்கள். இத்தனை பேர் இயேசுவை பார்த்திருக்கும்போது அவர் உயிர்த்தெழவில்லை என்று சொல்ல முடியுமா?

13. இயேசுவின் உயிர்த்தெழுதலை சீடர்கள் உறுதியாக நம்பினார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

13 மூன்றாம் ஆதாரம்: இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி சீடர்கள் வைராக்கியமாக சொன்னார்கள். இயேசுவைப் பற்றி பேசியதற்காக அவருடைய எதிரிகள் சீடர்களை கொடுமைப்படுத்தினார்கள், சிலரை கொலையும் செய்தார்கள். இயேசு உயிர்த்தெழுப்பப்படவில்லை  என்றால் மதத் தலைவர்களிடம் பேதுரு அவ்வளவு தைரியமாக பேசியிருப்பாரா? அதுவும் இயேசுவை கொலை செய்த அந்த தலைவர்களிடமே அவரைப் பற்றி தைரியமாகப் பேசியிருப்பாரா? இயேசு உயிரோடு இருக்கிறார் என்பதையும் பிரசங்க வேலையை வழிநடத்துகிறார் என்பதையும் பேதுருவும் மற்ற சீடர்களும் உறுதியாக நம்பினார்கள். இயேசுவைப் போல் தங்களையும் கடவுள் உயிர்த்தெழுப்புவார் என்று நம்பினார்கள். அதனால்தான், இயேசுவின் சீடரான ஸ்தேவான் சாகக்கூட பயப்படவில்லை.—அப். 7:55-60.

14. இயேசு உயிரோடு இருக்கிறார் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

14 நான்காம் ஆதாரம்: இப்போது இயேசு ராஜாவாகவும், கிறிஸ்தவ சபையின் தலைவராகவும் இருக்கிறார். இயேசு இன்று பிரசங்க வேலையை வழிநடத்துகிறார். அதனால்தான், யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒருவேளை இயேசு உயிரோடு எழுப்பப்படவில்லை என்றால் அவரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம். இயேசு உயிரோடு இருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக இருக்கிறது.

நமக்குக் கிடைக்கும் நன்மைகள்

15. நாம் ஏன் தைரியமாகப் பிரசங்கிக்கிறோம்?

15 இன்று இயேசு நம்மோடு இருப்பதால் தைரியமாகப் பிரசங்கிக்கிறோம். 2,000 வருஷங்களாக பிரசங்க வேலையை நிறுத்துவதற்கு சாத்தானும் அவனுடைய ஆட்களும் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். சபையில் உள்ள சிலரை பயன்படுத்தி பைபிளில் இருக்கிற விஷயங்களை தவறாக சொல்லிக்கொடுக்க தூண்டியிருக்கிறார்கள். அதோடு சாட்சிகளை கேவலமாக பேசியிருக்கிறார்கள், பிரசங்க வேலையை தடை செய்திருக்கிறார்கள், சித்திரவதை செய்திருக்கிறார்கள், சிலரை கொலையும் செய்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் பிரசங்க வேலையை நிறுத்த அவர்களால் முடியவில்லை. (ஏசா. 54:17) சாத்தானுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், இயேசு நம்மோடு இருக்கிறார். (மத். 28:20) அதனால், என்னதான் முயற்சி செய்தாலும் நம் எதிரிகளால் ஜெயிக்க முடியாது.

இயேசுவின் உயிர்த்தெழுதல் தைரியமாகப் பிரசங்கிக்க உதவுகிறது (பாரா 15)

16, 17. (அ) இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மை என்பதை அவருடைய உயிர்த்தெழுதல் எப்படி நிரூபிக்கிறது? (ஆ) இயேசுவுக்கு யெகோவா என்ன அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்?

16 இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மை என்பதை அவருடைய உயிர்த்தெழுதல் நிரூபிக்கிறது. “கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்படவில்லை என்றால், நாம் பிரசங்கிப்பது நிச்சயமாகவே வீணாக இருக்கும், நம்முடைய விசுவாசமும் வீணாக இருக்கும்” என்று பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 15:14, 15, 20-ஐ வாசியுங்கள்.) அதோடு, பைபிளிலுள்ள இயேசுவை பற்றிய பதிவுகள் எல்லாம் வெறும் கதையாக இருந்திருக்கும். அதாவது, எதிரிகளின் கையில் சிக்கி உயிரிழந்த ஒரு நல்ல மனிதனின் சோக கதையாகத்தான் இருந்திருக்கும். ஒரு பைபிள் ஆராய்ச்சியாளர் இப்படிச் சொன்னார்: ‘இயேசு உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவர்கள் ஒரு மிகப் பெரிய பொய்யை நம்பும் முட்டாள்களைப் போல் இருப்பார்கள்.’ ஆனால், இயேசு சொன்னபடியே உயிரோடு எழுந்தார். அதனால் அவர் சொன்ன எல்லா விஷயங்களும் உண்மை என்று நாம் உறுதியாக நம்பலாம்.

17 “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன். என்மீது விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்” என்று இயேசு சொன்னார். (யோவா. 11:25) இந்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும். ஏனென்றால் 1,44,000 பேரையும், பூமியில் வாழப்போகும் கோடிக்கணக்கான மக்களையும் உயிரோடு எழுப்பும் சக்தியை இயேசுவுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் நமக்கு சாவே இல்லாத வாழ்க்கை கிடைக்கும். அதனால் எந்தச் சோதனை வந்தாலும், சாவே வந்தாலும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

18. இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது?

18 இயேசு நீதியாக ஆட்சி செய்வார் என்று நாம் நம்பலாம். ‘[கடவுள்] தாம் நியமித்த ஒரு மனிதரைக் கொண்டு இந்த உலகத்தை  நீதியோடு நியாயந்தீர்க்க ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அந்த மனிதரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனிதருக்கும் அவர் அளித்திருக்கிறார்’ என்று பவுல் சொன்னார். (அப். 17:31) மக்களை நீதியாக ஆட்சி செய்ய கடவுள்தான் இயேசுவை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதனால், இயேசு நிச்சயம் நம்மை நீதியாகவும் அன்பாகவும் ஆட்சி செய்வார் என்று உறுதியாக நம்பலாம்.—ஏசாயா 11:2-4-ஐ வாசியுங்கள்.

19. இயேசுவின் உயிர்த்தெழுதல் என்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது?

19 இயேசுவின் உயிர்த்தெழுதல் யெகோவாவுக்குப் பிரியமாக வாழ நம்மைத் தூண்டுகிறது. இயேசு நமக்காக இறந்து உயிரோடு எழுந்ததால்தான், நமக்குப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை கிடைக்க போகிறது. இறந்தாலும் திரும்ப உயிரோடு வருவோம் என்ற நம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. (ரோ. 5:12; 6:23) இந்த உலக மக்களுக்கு இதுபோல் எந்த நம்பிக்கையும் கிடையாது. “சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்றுதான் இருக்கிறார்கள். (1 கொ. 15:32) ஆனால், நாம் இந்த உலக ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எல்லா விஷயத்திலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைக்கிறோம்.

20. இயேசுவின் உயிர்த்தெழுதலிலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

20 யெகோவா சக்தியுள்ளவர், ஞானமுள்ளவர், சொன்னதை செய்பவர் என்பதை இயேசுவின் உயிர்த்தெழுதல் நிரூபிக்கிறது. இயேசுவை உயிர்த்தெழுப்பி அவருக்கு சாவே இல்லாத வாழ்க்கையை யெகோவா கொடுத்தார். (எபி. 11:6) யெகோவாவுக்கு அளவில்லா சக்தியும் எல்லையில்லா ஞானமும் இருப்பதை இது காட்டுகிறது. அதோடு, யெகோவா என்ன சொல்கிறாரோ அதை நிச்சயம் செய்வார் என்பதையும் இது காட்டுகிறது. உதாரணத்திற்கு, இந்த பூமியை ஆட்சி செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது என்ற பிரச்சினையை யெகோவா ஒரு ‘வித்துவின்’ அதாவது, வாரிசின் மூலமாக தீர்க்க போவதாக வாக்குக் கொடுத்தார். அதற்கு அந்த வாரிசு (இயேசு) இறந்து மீண்டும் உயிரோடு வர வேண்டியிருந்தது.—ஆதி. 3:15.

21. உயிர்த்தெழுதல் நம்பிக்கையினால் உங்களுக்கு என்ன நன்மை?

21 உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நமக்குக் கொடுத்ததற்காக நாம் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியோடு இருக்கலாம்! “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்” என்று யோவான் எழுதினார். “இந்த வார்த்தைகள் உண்மையானவை, சத்தியமானவை, இவற்றை எழுது” என்று யோவானிடம் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவா சொன்னார்.—வெளி. 1:1; 21:3-5.