Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் மக்கள் அன்று

யெகோவாவின் மக்கள் அன்று

‘யெகோவாவை வணங்குகிற மக்கள் சந்தோஷமுள்ளவர்கள்.’ —சங். 144:15, NW.

1. எப்படிப்பட்ட மக்களை கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்று சிலர் நினைக்கிறார்கள்?

“மதத்தினால எந்தப் பிரயோஜனமும் இல்ல” என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். “கடவுள் பெயர சொல்லி இன்னிக்கு நிறைய பேர் மக்கள ஏமாத்துறாங்க. கடவுள் யாரு, அவர் எப்படிப்பட்டவர் என்பத பத்தி அவங்க சொல்லி கொடுக்கிறதில்ல. அதனால இந்த மதங்களை எல்லாம் கடவுள் ஏத்துக்க மாட்டாரு” என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நல்ல மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் கடவுள் அவர்களை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால், எல்லா மதத்தில் இருக்கும் நல்ல மக்களையும் யெகோவா ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது அவர்கள் பொய் மதத்தைவிட்டு வெளியே வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? பதிலைத் தெரிந்துகொள்ள, யெகோவாவை வழிபட்ட மக்களைப் பற்றி பைபிளிலிருந்து பார்க்கலாம்.

யெகோவா செய்த ஒப்பந்தம்

2. யெகோவா யாரை அவருடைய மக்களாக தேர்ந்தெடுத்தார்? அவர்கள் கடவுளுடைய மக்கள் என்பதற்கு எது அடையாளமாக இருந்தது? (ஆரம்பப் படம்.)

2 கிட்டத்தட்ட 4,000 வருஷங்களுக்கு முன்பு ஆபிரகாம் வாழ்ந்தார். அவருக்கு ஒரு பெரிய குடும்பம் இருந்தது. நிறைய வேலைக்காரர்களும் இருந்தார்கள். (ஆதி. 14:14) கானான் நாட்டில் இருந்த மக்கள் அவருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தார்கள். (ஆதி. 21:22; 23:6) ஆபிரகாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அதனால்தான்,  ‘கடவுள்மீது விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் அவர் தகப்பன் ஆனார்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 4:11) ஆபிரகாமோடும் அவருடைய வம்சத்தோடும் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்தார். (ஆதி. 17:1, 2, 19) ‘நான் உன்னோடும் உன்னுடைய வம்சத்தோடும் செய்கிற என் ஒப்பந்தம் இதுவே: உங்களில் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்திற்கு இது அடையாளமாக இருக்கும்’ என்று யெகோவா அவரிடம் சொன்னார். (ஆதி. 17:10, 11, NW) அதனால், ஆபிரகாமும் அவர் வீட்டில் இருந்த எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். (ஆதி. 17:24-27) ஆபிரகாமோடும் அவருடைய வம்சத்தோடும் யெகோவா செய்த ஒப்பந்தத்திற்கு விருத்தசேதனம் அடையாளமாக இருந்தது. இப்படியாக யெகோவா அவருக்கென்று மக்களைத் தேர்ந்தெடுத்தார்.

3. ஆபிரகாமின் வம்சம் எப்படி பெருகியது?

3 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார், ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார். யாக்கோபுடைய பெயரை இஸ்ரவேல் என்று யெகோவா மாற்றினார். இவருக்கு 12 மகன்கள் பிறந்தார்கள். (ஆதி. 35:10, 23-26) இவர்கள்தான் பின்னர் இஸ்ரவேலின் 12 வம்சத் தலைவர்களாக ஆனார்கள். (அப். 7:8) யாக்கோபின் மகன் யோசேப்பு எகிப்துக்கு அடிமையாகக் கொண்டுபோகப்பட்டார். சில வருஷங்களுக்கு பிறகு எகிப்து நாட்டின் ராஜா அவருக்கு மிகப்பெரிய பதவியைக் கொடுத்தார். எகிப்திலும் அதைச் சுற்றியிருந்த தேசங்களிலும் பஞ்சம் வந்தபோது எல்லா மக்களுக்கும் உணவு கொடுக்கும் அதிகாரம் யோசேப்புக்கு இருந்தது. பஞ்சத்தின் காரணமாக யாக்கோபும் அவருடைய குடும்பத்தார் எல்லாரும் கானான் தேசத்தைவிட்டு எகிப்துக்குப் போனார்கள். (ஆதி. 41:39-41; 42:6) எகிப்தில் யாக்கோபுடைய குடும்பத்தாரின் எண்ணிக்கை பல லட்சங்களாக அதிகரித்தது.—ஆதி. 48:4; அப்போஸ்தலர் 7:17-ஐ வாசியுங்கள்.

யெகோவா அவருடைய மக்களைக் காப்பாற்றுகிறார்

4. ஆரம்பத்தில் எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களோடு எப்படி இருந்தார்கள்?

4 யோசேப்பை எகிப்து நாட்டின் ராஜா உயர்வாக மதித்ததால், அவருடைய குடும்பத்தாரை எகிப்திலேயே வாழ சொன்னார். (ஆதி. 47:1-6) இஸ்ரவேலர்கள் 200 வருஷங்களுக்கு அதிகமாக எகிப்திலிருந்த கோசேன் என்ற இடத்தில் வாழ்ந்தார்கள். (ஆதி. 45:9, 10) அவர்கள் ஆடு மேய்ப்பவர்களாக இருந்ததால் எகிப்தியர்களுக்கு அவர்களைக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. (ஆதி. 46:31-34) இருந்தாலும், ராஜாவுக்கு பயந்து இஸ்ரவேலர்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்காமல் இருந்தார்கள். கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு இஸ்ரவேலர்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள்.

5, 6. (அ) இஸ்ரவேலர்களின் நிலைமை எப்படித் தலைகீழாக மாறியது? (ஆ) மோசே குழந்தையாக இருந்தபோது எப்படிக் காப்பாற்றப்பட்டார், அவருக்கு யெகோவா என்ன முக்கியமான பொறுப்பைக் கொடுத்தார்?

5 இஸ்ரவேலர்களின் நிலைமை போகப்போக தலைகீழாக மாறியது. ‘யோசேப்பைப் பற்றித் தெரியாத ஒரு புதிய ராஜா எகிப்தை ஆட்சி செய்ய தொடங்கினான். அவன் தன் மக்களிடம், “பாருங்கள்! இஸ்ரவேல் மக்கள் நம்மைவிட அதிகமாகவும், பலசாலிகளாகவும் ஆகியிருக்கிறார்கள்” என்றான். அதனால், இஸ்ரவேலரை எகிப்தியர் அடிமையாக நடத்தினார்கள். கடுமையாக வேலை வாங்கி அவர்கள் வாழ்க்கையே வெறுத்துப்போகும்படி செய்தார்கள்; செங்கல் தயாரிக்கிற வேலைகளையும், எல்லாவித வயல் வேலைகளையும் செய்யும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களை அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தினார்கள்.’—யாத். 1:8, 9, 13, 14, NW.

6 இஸ்ரவேலர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகளைக் கொலை செய்யும்படியும் ராஜா கட்டளையிட்டார். (யாத். 1:15, 16) அந்தச் சமயத்தில்தான் மோசே பிறந்தார். அவர் 3 மாத குழந்தையாக இருந்தபோது அவருடைய அம்மா யோகெபேத், அவரை ஒரு கூடையில் வைத்து நைல் நதியின் ஓரத்திலிருந்த செடிகள் நடுவே மறைத்து வைத்தார். கூடையிலிருந்த அழகான குழந்தையை ராஜாவின் மகள் பார்த்தார். அந்தக் குழந்தையைத் தன்னுடைய மகனாகத் தத்தெடுத்தார். ஆனால், அதைக் கவனித்துக்கொள்ளும்படி யோகெபேத்திடமே கொடுத்தார். யோகெபேத் நிச்சயம் யெகோவாவைப் பற்றி மோசேக்கு சொல்லிக்கொடுத்திருப்பார். அதனால், மோசே யெகோவாவுக்கு உண்மையுள்ள நபராக வளர்ந்தார். (யாத். 2:1-10; எபி. 11:23-25) இஸ்ரவேலர்கள் பட்ட எல்லா கஷ்டங்களையும் யெகோவா பார்த்ததால் அவர்களை மோசே மூலம் விடுதலை செய்தார். (யாத். 2:24, 25; 3:9, 10) இப்படி, இஸ்ரவேலர்களை  அவர் காப்பாற்றினார்.—யாத். 15:13; உபாகமம் 15:15-ஐ வாசியுங்கள்.

யெகோவா சட்டங்களைக் கொடுக்கிறார்

7, 8. யெகோவாவின் மக்கள் எப்படி “பரிசுத்த தேசமாக” ஆனார்கள்?

7 யெகோவா இஸ்ரவேலர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே அவர்களை சொந்த மக்களாகத்தான் பார்த்தார். அதனால்தான், மோசேயையும் ஆரோனையும் எகிப்து ராஜாவிடம் இப்படிச் சொல்லச் சொன்னார்: “‘வனாந்தரத்தில் எனக்குப் பண்டிகை கொண்டாட என் மக்களை அனுப்பி வை’ என்று இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்கிறார்.”—யாத். 5:1, NW.

8 ஆனால், இஸ்ரவேலர்களை அனுப்பிவைக்க முடியாது என்று அந்த ராஜா சொன்னார். அதனால் யெகோவா 10 விதமான தண்டனைகளைக் கொடுத்தார். கடைசியில், ராஜாவையும் அவனுடைய ஆட்களையும் செங்கடலில் அழித்தார். (யாத். 15:1-4) இந்தச் சம்பவங்கள் நடந்து மூன்று மாதத்தில் யெகோவா இஸ்ரவேலர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்தார். “நீங்கள் என் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து என் ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால், மற்றெல்லா மக்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக ஆவீர்கள் . . . பரிசுத்த தேசமாகவும் ஆவீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.—யாத். 19:5, 6, NW.

9, 10. (அ) உபாகமம் 4:5-8-ன்படி இஸ்ரவேலர்கள் மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் எப்படி வித்தியாசமாக இருந்தார்கள்? (ஆ) இஸ்ரவேலர்கள் ‘யெகோவாவின் பரிசுத்த மக்கள்’ என்பதைக் காட்ட என்ன செய்ய வேண்டியிருந்தது?

9 எகிப்தில் அடிமைகளாக ஆவதற்கு முன்புவரை இஸ்ரவேலர்களுடைய 12 வம்சங்களை, அந்தந்த வம்சத் தலைவர்கள் வழிநடத்தி வந்தார்கள். இவர்கள் ராஜாக்களைப் போலவும் நீதிபதிகளைப் போலவும் குருமார்களைப் போலவும் இருந்தார்கள். நோவா, ஆபிரகாம், யோபு போன்றவர்கள்கூட இப்படித்தான் தங்களுடைய குடும்பங்களை வழிநடத்தினார்கள். (ஆதி. 8:20; 18:19; யோபு 1:4, 5) ஆனால், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்த பிறகு யெகோவா அவர்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். இந்தச் சட்டங்களை அவர்கள் கடைப்பிடித்ததால் மற்ற எல்லா தேசத்திலிருந்தும் அவர்கள் வித்தியாசமாக இருந்தார்கள். (உபாகமம் 4:5-8-ஐ வாசியுங்கள்; சங். 147:19, 20.) யெகோவா தம்மைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்கும் பலிகளைச் செலுத்துவதற்கும் குருமார்களை நியமித்தார். இஸ்ரவேலர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ‘மூப்பர்களை’ நியமித்தார். இந்த மூப்பர்கள், அவர்களை ஞானமாக வழிநடத்தினார்கள். அதனால், மக்கள் எல்லாரும் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தார்கள். (உபா. 25:7, 8) யெகோவாவுக்குப் பிரியமாக வாழவும் அவரை வணங்கவும் இந்தச் சட்டங்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தது.

10 இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள் போவதற்குமுன் யெகோவா இந்தச் சட்டங்களை திரும்பவும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். அதன்பின் மோசே அவர்களிடம் இப்படிச் சொன்னார்: ‘யெகோவா வாக்கு கொடுத்தபடியே, நீங்கள் அவருடைய மக்களாக, விசேஷச் சொத்தாக, இருப்பீர்கள் என்றும் அவருடைய எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவீர்கள் என்றும் இன்று அவரிடம் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்த மக்களாக இருந்தால், அவர் வாக்குறுதி அளித்தபடியே, அவர் உண்டாக்கிய மற்றெல்லாத் தேசத்தாரையும்விட உங்களை உயர்த்தி, பேரும் புகழும் சிறப்பும் கொடுப்பார் என இன்று அவரிடம் சொல்லியிருக்கிறீர்கள்.’—உபா. 26:18, 19, NW.

மற்ற நாட்டு மக்களையும் ஏற்றுக்கொள்கிறார்

11-13. (அ) யெகோவாவுடைய மக்களோடு யாரெல்லாம் சேர்ந்துகொண்டார்கள்? (ஆ) இவர்கள் யெகோவாவை வணங்க என்ன செய்ய வேண்டியிருந்தது?

11 யெகோவா மற்ற நாட்டு மக்களையும் இஸ்ரவேலர்களோடு வாழ அனுமதித்தார். உதாரணத்திற்கு, எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையாகி வந்தபோது மற்ற ‘நாட்டு மக்களும்’ அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். (யாத். 12:38) சில எகிப்தியர்கள்கூட அவர்களோடு வந்தார்கள். ஏனென்றால், எகிப்தியர்களுக்கு யெகோவா ஏழாவது தண்டனை கொடுத்தபோது அவர்களில் சிலர் மோசேயின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள்.—யாத். 9:20.

12 கானான் நாட்டிற்குள் போவதற்கு முன் மோசே இஸ்ரவேலர்களிடம், ‘உங்களோடு வாழும் மற்ற நாட்டு மக்கள்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்று சொன்னார். (உபா. 10:17-19, NW) இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டங்களில் சில அடிப்படை சட்டங்களுக்கு, மற்ற நாட்டு மக்கள் கீழ்ப்படிந்தால் அவர்களை தங்களோடு வாழ அனுமதிக்க வேண்டும் என்று யெகோவா சொன்னார்.  (லேவி. 24:22) இப்படி இஸ்ரவேலர்களோடு வாழ்ந்த சிலர் யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்கள். ஆண்கள் விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். (யாத். 12:48, 49) அவர்கள் பொய் மதத்தைவிட்டு உண்மை மதத்திற்கு மாறினார்கள். உதாரணத்திற்கு, மோவாப் நாட்டை சேர்ந்த ரூத் யெகோவாவை வணங்க விரும்பினார். இஸ்ரவேலை சேர்ந்த நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று ரூத் சொன்னார். (ரூத் 1:16) இப்படிப்பட்ட ஆட்களையும் யெகோவா தம்முடைய சொந்த மக்களாக ஏற்றுக்கொண்டார்.—எண். 15:14, 15.

இஸ்ரவேலர்கள் மற்ற நாட்டு மக்கள்மீது அன்பு காட்டினார்கள்(பாராக்கள் 11-13)

13 யெகோவா மற்ற நாட்டு மக்களை ஏற்றுக்கொண்டார் என்பதை சாலொமோனின் ஜெபமும் காட்டியது. யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தை கட்டி அதை அவருக்கு அர்ப்பணம் செய்தபோது சாலொமோன் இப்படி ஜெபம் செய்தார்: “வெகு தூரத்திலுள்ள நாட்டில் குடியிருக்கிற இஸ்ரவேலர் அல்லாத ஒருவர் உங்களுடைய மிகப்பெரிய பெயரையும் மகா வல்லமையையும் பலத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே வந்து இந்த ஆலயத்தை நோக்கி ஜெபம் செய்தால், நீங்கள் குடிகொண்டிருக்கிற பரலோகத்திலிருந்து கேளுங்கள். அந்த நபர் கேட்பதையெல்லாம் தாருங்கள். அப்போது, இஸ்ரவேலர்களைப் போலவே உலகத்தில் இருக்கிற எல்லா மக்களும் உங்களுடைய பெயரைத் தெரிந்துகொண்டு உங்களுக்குப் பயப்படுவார்கள். நான் கட்டிய இந்த ஆலயம் உங்கள் பெயரைத் தாங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.” (2 நா. 6:32, 33, NW) இயேசுவின் காலத்திலும் யெகோவா மற்ற நாட்டு மக்களை தம்முடைய மக்களாக ஏற்றுக்கொண்டார். ஆனால், அவர்கள் பொய் மதத்தைவிட்டு யெகோவாவுடைய மக்களோடு சேர்ந்து அவரை வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.—யோவா. 12:20; அப். 8:27.

யெகோவாவுக்குச் சாட்சிகள்

14-16. (அ) இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு எப்படி சாட்சிகளாக இருந்தார்கள்? (ஆ) கடைசி நாட்களில் வாழும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார்?

14 இஸ்ரவேலர்கள் யெகோவாவை வணங்கினார்கள். ஆனால், மற்ற நாட்டு மக்கள் தங்களுடைய கடவுளை வணங்கினார்கள். இப்போது யார் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. யெகோவா இந்த சூழ்நிலையை நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்குக்கு ஒப்பிட்டார். மற்ற கடவுள்கள் உண்மையாக இருந்தால் அதை அந்த கடவுள்களே நிரூபிக்க வேண்டும், அதற்கு ‘அவர்கள் சாட்சிகளை கொண்டுவர’ வேண்டும் என்று யெகோவா சொன்னார்.—ஏசா. 43:9.

15 அந்தக் கடவுள்களால் இதை நிரூபிக்க முடியவில்லை, தங்களுக்கென்று சாட்சிகளையும்  கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் உயிரில்லாத சிலைகள். அந்தச் சிலைகளால் பேசவும் முடியாது, நடக்கவும் முடியாது. (ஏசா. 46:5-7) ஆனால், யெகோவா அவர்களைப் போல் அல்ல. இஸ்ரவேலர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்: ‘நீங்களே எனது சாட்சிகள். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, நான்தான் உண்மையான தேவன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு முன்பாக வேறு தேவன் இருந்ததில்லை, எனக்கு பிறகும் வேறு தேவன் இருக்கப் போவதில்லை. நானே கர்த்தர்! என்னை தவிர வேறு இரட்சகர் இல்லை! நீங்கள் என்னுடைய சாட்சிகள், நான் தேவன்!’—ஏசா. 43:10-12, ஈஸி டு ரீட் வர்ஷன்.

16 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருந்தார்கள். யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள் என்று சாட்சி சொல்ல வேண்டிய முக்கியமான பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அதனால்தான், “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” என்று யெகோவா சொன்னார். (ஏசா. 43:21) இஸ்ரவேலர்கள் யெகோவாவுடைய சொந்த மக்களாக இருந்தார்கள். எகிப்திலிருந்து யெகோவா அவர்களை விடுதலை செய்ததால் தம்முடைய சட்டங்களுக்கு அவர்கள் முழு மனதோடு கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவரைத் தங்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். மீகா தீர்க்கதரிசி இப்படிச் சொன்னார்: “எல்லா மக்களும் அவரவர் தெய்வத்தின் வழியில் நடப்பார்கள், நாமோ நம் கடவுளாகிய யெகோவாவின் வழியில் என்றென்றும் நடப்போம்.” (மீ. 4:5, NW) இந்த வார்த்தைகள் கடைசி நாட்களில் வாழும் நமக்கு முக்கியமாக பொருந்தும். இதேபோல்தான் இஸ்ரவேலர்களும் நினைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி நினைத்தார்களா?

இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள்

17. இஸ்ரவேலர்கள், எதற்கும் உதவாத திராட்சை செடியைப் போல் எப்படி ஆனார்கள்?

17 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனதால் அவருக்கு சாட்சிகளாக இருக்கும் வாய்ப்பை இழந்தார்கள். மற்ற நாட்டு மக்களைப் போலவே இவர்களும் பொய் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார்கள். அந்தக் கடவுள்களுக்கு பலிபீடங்களைக் கட்டினார்கள். சுமார் 2,800 வருஷங்களுக்கு முன்பு, ஓசியா தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களைப் பற்றி இப்படிச் சொன்னார்: “இஸ்ரவேலர்கள், தரங்கெட்ட பழங்களைக் கொடுக்கும் திராட்சைக் கொடி போன்றவர்கள் . . . அவர்களுடைய பலிபீடங்களும் பெருகுகின்றன; . . . அவர்கள் வெளிவேஷம் போடுகிறார்கள்; இப்போது கையும் களவுமாகப் பிடிபடுவார்கள்.” (ஓசி. 10:1, 2, NW) யெகோவா தமக்கு கீழ்ப்படியாமல்போன இஸ்ரவேலர்களைப் பற்றி எரேமியா மூலம் இப்படிச் சொன்னார்: “நான் உன்னைச் சிறப்பான திராட்சைப்போன்று நட்டேன். நீங்கள் அனைவரும் நல்ல விதைகளைப் போன்றிருந்தீர்கள், நீங்கள் தீய பழத்தைக் கொடுக்கும் வேறுபட்ட திராட்சையாக எப்படி மாறினீர்கள்? . . . நீங்களாகச் செய்த அந்த விக்கிரகங்கள் எங்கே? நீங்கள் துன்பப்படும்போது அந்த விக்கிரகங்கள் வந்து உங்களைக் காப்பாற்றுக்கிறதா என்று பார்க்கலாம்! . . . என் ஜனங்கள் பலமுறை என்னை மறந்துவிட்டார்கள்.”—எரே. 2:21, 28, 32, ஈஸி டு ரீட் வர்ஷன்.

18, 19. (அ) யெகோவா எரேமியா மூலம் என்ன சொன்னார்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி படிப்போம்?

18 யெகோவாவுக்கு சாட்சிகளாக இருப்பதற்குப் பதிலாக இஸ்ரவேலர்கள் பொய் கடவுள்களை வணங்கினார்கள். அதனால்தான், யூத மதத் தலைவர்களிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய அரசாங்கத்தில் இருக்கிற வாய்ப்பு உங்களிடமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகிற வேறு மக்களிடம் கொடுக்கப்படும்.” (மத். 21:43) யாரையெல்லாம் யெகோவா தேர்ந்தெடுக்கிறாரோ அவர்கள் மட்டும்தான் அவருடைய மக்களாக இருப்பார்கள். அவர்களோடு யெகோவா ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்வார் என்று எரேமியா மூலமாகச் சொன்னார். ‘நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள்’ என்று யெகோவா சொன்னார்.—எரே. 31:31-33.

19 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனதால் யெகோவா அவர்களை ஒதுக்கிவிட்டார். அவர்களுக்குப் பதிலாக முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களை அவருடைய மக்களாக தேர்ந்தெடுத்தார். அப்படியென்றால், இன்று யெகோவாவின் மக்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரையில் பதில்களைப் பார்க்கலாம்.