Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நெஞ்சை தொட்ட ஒரு பரிசு, ஜப்பானுக்கு!

நெஞ்சை தொட்ட ஒரு பரிசு, ஜப்பானுக்கு!

2013, ஏப்ரல் 28-ம் தேதி, ஜப்பானில் நாகொயா என்ற இடத்தில் ஒரு விசேஷ கூட்டம் நடந்தது. அப்போது, நம் சகோதர சகோதரிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது! ஆளும் குழு அங்கத்தினராக இருக்கிற ஆன்டனி மாரிஸ், தி பைபிள்—தி காஸ்பல் அக்கார்டிங் டு மேத்யூ (The Bible—The Gospel According to Matthew) என்ற புதிய புத்தகத்தை அப்போது வெளியிட்டார். இதை வெளியிட்டதும், சகோதர சகோதரிகள் எல்லாரும் சந்தோஷத்தில் ரொம்ப நேரம் கை தட்டிக்கொண்டே இருந்தார்கள். 2,10,000-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். கொஞ்சம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்; மற்றவர்களுக்கு இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கிற மத்தேயு புத்தகத்தை மட்டும் ஒரு தனி புத்தகமாக வெளியிட்டிருந்தார்கள். இதில் மொத்தம் 128 பக்கங்கள் இருக்கின்றன. ஜப்பானிலுள்ள மக்களுக்கு இந்த புத்தகத்தை ஊழியத்தில் கொடுப்பதற்காகத்தான் இதை தயாரித்து இருப்பதாக சகோதரர் மாரிஸ் சொன்னார். இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? எதற்காக இதை தயாரித்தார்கள்? இந்த புத்தகம் கிடைத்ததும், மக்கள் என்ன சொன்னார்கள்?

இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்ட விதம்தான் எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதில் எழுத்துக்கள், மேலிருந்து கீழாக (vertical) எழுதப்பட்டு இருந்தது. அதனால் நிறையப் பேரால் சுலபமாக வாசிக்க முடியும். பொதுவாக, ஜப்பான் மொழி எழுத்துக்களை இரண்டு விதமாக எழுதலாம். ஒன்று, இடமிருந்து வலமாக எழுதலாம் (horizontal). மற்றொன்று, மேலிருந்து கீழாக எழுதலாம். மற்றவர்கள் வெளியிடுகிற நிறைய புத்தகங்களும் நம் அமைப்பு வெளியிடுகிற பிரசுரங்களும்கூட இடமிருந்து வலம்தான் எழுதப்படுகிறது. ஆனால், ஜப்பான் நாட்டில் இருக்கிற நிறைய செய்தித்தாள்களும் மற்ற இலக்கிய புத்தகங்களும் மேலிருந்து கீழாக எழுதப்படுகிறது. இப்படி எழுதுவதால், ஜப்பானில் இருக்கிற நிறையப் பேரால் இதை ரொம்ப சுலபமாக வாசிக்க முடிகிறது. அதனால்தான், புதிதாக வெளியிட்ட மத்தேயு புத்தகத்தை மேலிருந்து கீழாக எழுதியிருக்கிறார்கள். அதோடு, ஒவ்வொரு பக்கத்தின் மேலும் வருகிற தலைப்பு வாசகங்களை (Page headings) இதில் உபதலைப்புகளாக கொடுத்திருக்கிறார்கள்.

இந்த மத்தேயு புத்தகம் கையில் கிடைத்ததுமே நம் சகோதர சகோதரிகள் அதைப் படித்து முடித்துவிட்டார்கள். 80 வயதான ஒரு சகோதரி என்ன சொல்கிறார் என்றால், “நான் எத்தனையோ தடவ மத்தேயு புத்தகத்த படிச்சிருக்கேன். ஆனா, இந்த புத்தகத்த படிச்சதுக்கு அப்புறம்தான், இயேசுவோட மலைப்பிரசங்கத்த நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது. அதுக்கு காரணமே, மேலிருந்து கீழாக எழுதப்பட்டு இருக்கிற விதமும், அதுல இருக்கிற உபதலைப்புகளும்தான்.” ஒரு இளம் சகோதரி இப்படி சொன்னார், “புத்தகம் கையில கிடைச்சதும், நான் ஒரே மூச்சுல அதை படிச்சு முடிச்சுட்டேன். இடமிருந்து வலம் எழுதியிருக்கிற புத்தகங்களதான் நான் பொதுவா படிச்சிருக்கேன். ஆனா, நிறைய பேர் மேலிருந்து கீழாக எழுதுறததான் விரும்புறாங்க.”

ஜப்பான் நாட்டு மக்களுக்காகவே!

ஜப்பான் நாட்டில் இருக்கிற நிறையப் பேர் பைபிளைப் பார்த்ததே இல்லை. சிலர் பைபிளைப் பார்த்து இருந்தாலும் அவர்களுக்கு அதைப் பற்றி அவ்வளவாக தெரியாது. இருந்தாலும், அவர்கள் பைபிளை வாசிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு அருமையான பரிசு! ஏனென்றால், பைபிளில் இருக்கிற ஒரு புத்தகத்தையாவது இப்போது அவர்களால் வாசிக்க முடிகிறது.

மத்தேயு புத்தகத்தை மட்டும் வெளியிட ஏன் முடிவு செய்தார்கள்? “பைபிள்” என்று சொன்னாலே அவர்கள் ஞாபகத்திற்கு வருவது இயேசு கிறிஸ்துதான். இயேசுவின் பிறப்பை பற்றியும், அவர் எந்த வம்சத்தில் வந்தார் என்பதைப் பற்றியும் மத்தேயு புத்தகத்தில் இருக்கிறது. அதோடு உலகப் புகழ் பெற்ற மலைப் பிரசங்கமும், உலக முடிவைப் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்களும் அதில் இருக்கின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் ஜப்பான் நாட்டு மக்களுக்கு ரொம்ப ஆர்வமாக இருக்கும். அதனால்தான் இந்த புத்தகத்தை வெளியிட்டார்கள்.

இந்த புத்தகம் கிடைத்த உடனேயே சகோதர சகோதரிகள், வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் மறுசந்திப்பிலும் இதை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘இந்த புத்தகத்த எங்க ஏரியாவுல இருக்கிற நிறைய பேருக்கு இனி தாராளமா கொடுக்க முடியும். அந்த புத்தகத்த வெளியிட்ட அன்னைக்கு மத்தியானமே நான் அதை ஒருத்தருக்கு கொடுத்தேன்னா பாருங்களேன்!’ என்று ஒரு இளம் சகோதரி சொன்னார்.

மக்கள் என்ன சொன்னார்கள்?

ஜப்பான் நாட்டு மக்கள் நிறையப் பேருக்கு, “இடுக்கமான வாசல்,” “முத்துக்களைப் பன்றிகளுக்குமுன் போடாதீர்கள்,” “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்” போன்ற வார்த்தைகள் எல்லாம் பழக்கமானதுதான். (மத். 6:34; 7:6, 13) ஆனால், இதெல்லாம் பைபிளில் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகள் என்று அவர்களுக்கு தெரியாது. பைபிளில் இதையெல்லாம் பார்த்தபோது அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! மத்தேயு புத்தகத்தில் இந்த வார்த்தைகளை காட்டும்போது, “ஒரு தடவையாவது பைபிளை படிக்கணும்னு ஆசைப்பட்டு இருக்கேன்” என்று நிறையப் பேர் சொல்கிறார்கள்.

சகோதர சகோதரிகள், இந்த மத்தேயு புத்தகத்தை முதல் சந்திப்பிலேயே ஊழியத்தில் கொடுத்திருக்கிறார்கள். அவர்களை மறுபடியும் சந்திக்கும்போது இந்த புத்தகத்தை சிலர் முழுமையாக படித்திருந்தார்கள், இன்னும் சிலர் முழுமையாக படிக்கவில்லை என்றாலும் கொஞ்சமாவது படித்திருந்ததாக சொன்னார்கள். 60 வயதான ஒரு பெரியவர், “இதை நான் நிறைய தடவை படிச்சுட்டேன், மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது. தயவு செஞ்சு பைபிளை பத்தி எனக்கு இன்னும் அதிகமா சொல்லிக்கொடுங்க” என்று சொன்னார்.

சகோதர சகோதரிகள் இந்த புத்தகத்தை பொது ஊழியத்திலும் கொடுக்கிறார்கள். ஒருசமயம், இந்த புத்தகத்தை ஒரு இளம் பெண்ணிடம் நம் சகோதரி ஒருவர் கொடுத்தார். தன்னுடைய ஈ-மெயில் அட்ரஸையும் கொடுத்தார். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, அந்த இளம் பெண் நம் சகோதரிக்கு ஈ-மெயில் அனுப்பினாள். அந்த புத்தகத்தில் சில பக்கங்களைப் படித்துவிட்டதாகவும் அதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னாள். ஒரு வாரத்திற்குப் பிறகு அந்தப் பெண் பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தார், சீக்கிரத்திலேயே கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தார்.

இதுவரைக்கும், 16 லட்சம் பிரதிகள் ஜப்பானில் இருக்கிற சபைகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும், இந்த புத்தகத்தை ஆயிரக்கணக்கில் யெகோவாவின் சாட்சிகள் ஊழியத்தில் கொடுக்கிறார்கள். இந்த புத்தகத்தின் அறிமுகக் குறிப்பில், “பைபிளை நீங்கள் இன்னும் நன்றாகப் படிப்பதற்கு, இந்த புத்தகம் உங்கள் ஆர்வத்தை தூண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று இந்த புத்தகத்தின் பிரசுரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.