Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாலந்து உதாரணம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

தாலந்து உதாரணம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

“ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்தும், மற்றொருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு . . . போனார்.” —மத். 25:15.

1, 2. இயேசு ஏன் தாலந்து உதாரணத்தை சொன்னார்?

பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. அதை புரிய வைப்பதற்காகத்தான் இயேசு தாலந்து உதாரணத்தை சொன்னார். இருந்தாலும் அவர் சொன்ன உதாரணம் நம் எல்லாருக்குமே பொருந்தும். நமக்கு பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, இந்த உதாரணத்தில் இருந்து நாம் எல்லாருமே முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.

2 இயேசு இந்த உதாரணத்தை எந்த சமயத்தில் சொன்னார்? ‘அவருடைய பிரசன்னத்திற்கும் இந்த சகாப்தத்தின் இறுதி கட்டத்திற்குமான’ அடையாளத்தை பற்றி சீடர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்த சமயத்தில்தான் இந்த உதாரணத்தை சொன்னார். (மத். 24:3) அப்படியென்றால் தாலந்து உதாரணம், கடைசி நாட்களுக்கான அடையாளத்தின் பாகமாக இருக்கிறது. இந்த உதாரணத்தில் சொல்லியிருக்கிற விஷயங்கள் நம் காலத்தில்தான் நிறைவேறிக்கொண்டு வருகிறது.

3. இயேசு சொன்ன நான்கு உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

3 தாலந்து உதாரணத்தோடு சேர்த்து மொத்தம் நான்கு உதாரணங்களை இயேசு சொன்னார். இந்த உதாரணங்கள், மத்தேயு 24:45-ல் இருந்து மத்தேயு 25:46 வரையுள்ள வசனங்களில் இருக்கிறது. இது எல்லாமே கடைசி நாட்களுக்கான அடையாளத்தின் பாகமாக இருக்கிறது. இந்த நான்கு உதாரணத்தில் இருந்தும் நாம் முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ளலாம். முதல் உதாரணத்தில், உண்மையுள்ள அடிமையைப் பற்றி இயேசு சொன்னார். யெகோவாவின் மக்களுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக் கொடுக்கிற பொறுப்பு இவர்களுக்கு இருக்கிறது. அதனால் இவர்கள் உண்மையாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இரண்டாவதாக, பத்து கன்னிகைகள் உதாரணத்தை சொன்னார். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயேசு ‘வரப்போகிற’ நாளும் நேரமும் தெரியாது. அதனால் அவர்கள் எப்போதுமே விழிப்பாக, தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு எச்சரித்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) மூன்றாவதாக, தாலந்து உதாரணத்தை சொன்னார். அதில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுடைய பொறுப்பை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டும் என்று சொன்னார். நான்காவதாக, செம்மறியாடு-வெள்ளாடு உதாரணத்தை சொன்னார். பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிறவர்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும், அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று சொன்னார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இந்த கட்டுரையில் தாலந்து உதாரணத்தை பற்றி பார்க்கலாம்.

எஜமான் தன்னுடைய அடிமைகளுக்கு நிறைய பணம் கொடுக்கிறார்

4, 5. தாலந்து பற்றிய உதாரணத்தில் சொல்லப்பட்ட அந்த மனிதன் யார், ஒரு தாலந்தின் மதிப்பு என்ன?

4 மத்தேயு 25:14-30-ஐ வாசியுங்கள். தாலந்து உதாரணத்தில் தூரதேசத்திற்குப் போன ஒரு மனிதனைப் பற்றி இயேசு சொன்னார். இன்னொரு உதாரணத்தில், ராஜ அதிகாரத்தை பெறுவதற்காக தூரதேசத்திற்குப் போன ஒரு மனிதனைப் பற்றியும் இயேசு சொன்னார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (லூக். 19:12) இந்த இரண்டு உதாரணத்திலும் வருகிற அந்த மனிதன், அதாவது அந்த எஜமான், இயேசு என்று நம் பத்திரிகைகளில் பல வருடங்களாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். கி.பி. 33-ல் இயேசு பரலோகத்திற்கு போனார். ஆனால் போன உடனேயே அவர் ராஜாவாக ஆகிவிடவில்லை. ‘எதிரிகளை அவருக்கு கால்மணையாக்கி போடும்வரை’ காத்துக்கொண்டு இருந்தார். 1914-ல்தான் அவர் ராஜாவாக ஆனார்.—எபி. 10:12, 13.

5 அந்த உதாரணத்தில் வருகிற எஜமானிடம் 8 தாலந்து இருப்பதாக இயேசு சொன்னார். 8 தாலந்து என்பது ஒரு பெரிய தொகை. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அந்த எஜமான் தூரதேசத்திற்கு போவதற்கு முன்பு அவருடைய அடிமைகளிடம் அந்த பணத்தை கொடுத்துவிட்டு போனார். அதை வைத்து வியாபாரம் செய்து அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொன்னார். அந்த எஜமானிடம் இருந்த பணம் பெரிய தொகையாக இருந்ததால் அது அவருக்கு மதிப்புள்ளதாக இருந்தது. அதேபோல் இயேசுவிடமும் மதிப்புள்ள ஒன்று இருந்தது. அது என்ன? பூமியில் இருந்தபோது அவர் செய்த முக்கியமான வேலைதான் அது!

6, 7. தாலந்து எதை குறிக்கிறது?

6 இயேசுவுக்கு பிரசங்க வேலை ரொம்ப முக்கியமானதாக இருந்தது. அவர் செய்த ஊழியத்தினால் நிறையப் பேர் அவருடைய சீடர்களாக ஆனார்கள். (லூக்கா 4:43-ஐ வாசியுங்கள்.) ஆனால், பிரசங்க வேலையை இன்னும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கும் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். நிறையப் பேர் அவருடைய சீடர்களாக ஆவார்கள் என்றும் தெரியும். அதனால்தான் சீடர்களிடம், “வயல்களை ஏறிட்டுப் பாருங்கள்; அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக” இருக்கிறது என்று இயேசு சொன்னார். (யோவா. 4:35-38) ஒரு நல்ல விவசாயி அறுவடைக்கு தயாராக இருக்கிற வயலை அப்படியே விட்டுட்டு போக வேண்டும் என்று நினைக்க மாட்டார். இயேசுவும் அப்படித்தான்! அதனால்தான் பரலோகத்திற்கு போவதற்கு கொஞ்சம் முன்பு சீடர்களிடம், ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்’ என்று சொன்னார். (மத். 28:18-20) விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷத்தை, அதாவது பிரசங்க வேலையை, இயேசு அவருடைய சீடர்களுக்கு கொடுத்தார்.—2 கொ. 4:7.

7 தாலந்து உதாரணத்தில், அந்த எஜமான் தன்னுடைய அடிமைகளுக்கு நிறைய பணம் கொடுத்தது போல் இயேசுவும் பரலோக நம்பிக்கையுள்ள சீடர்களுக்கு பிரசங்க வேலையை கொடுத்தார். (மத். 25:14) அதனால், பிரசங்கித்து சீடராக்கும் வேலைதான் அந்த உதாரணத்தில் சொல்லப்பட்ட தாலந்து.

8. அந்த எஜமான் ஒவ்வொரு அடிமைக்கும் ஒவ்வொரு தொகையை கொடுத்திருந்தாலும், அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்த்தார்?

8 தாலந்து உதாரணத்தில் வருகிற எஜமான் முதல் அடிமைக்கு 5 தாலந்தையும், இரண்டாவது அடிமைக்கு 2 தாலந்தையும், மூன்றாவது அடிமைக்கு 1 தாலந்தையும் கொடுத்தார். (மத். 25:15) ஒவ்வொரு அடிமைக்கும் வித்தியாசமான தொகையை கொடுத்தாலும் அதை வைத்து அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவர்களால் எந்தளவு முடியுமோ அந்தளவு கடினமாக உழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அதேபோல், பிரசங்க வேலை செய்வதில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் அவர்களால் எந்தளவு முடியுமோ அந்தளவு கடினமாக உழைக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்த்தார். (மத். 22:37; கொலோ. 3:23) இயேசுவின் சீடர்கள் கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாள் அன்று பிரசங்க வேலையை ஆரம்பித்தார்கள். அப்போஸ்தலர் புத்தகத்தை படிக்கும்போது, சீடர்கள் எந்தளவு கடினமாக வேலை செய்திருந்தார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—அப். 6:7; 12:24; 19:20.

கடைசி நாட்களில் அடிமைகள் தாலந்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்?

9. (அ) இரண்டு அடிமைகளும் அவர்களுக்கு கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்தார்கள், இதில் இருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? (ஆ) பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?

9 எஜமான் கொடுத்த பணத்தை நன்றாக பயன்படுத்திய முதல் இரண்டு அடிமைகள், இந்த கடைசி நாட்களில் உண்மையாக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள சகோதர சகோதரிகளை குறிக்கிறார்கள். இவர்கள் 1919-ல் இருந்து பிரசங்க வேலை செய்வதில் அவர்களால் முடிந்தளவு கடினமாக உழைக்கிறார்கள். அந்த இரண்டு அடிமைகளுக்கும் வித்தியாசமான தொகை கிடைத்ததால் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் இரண்டு தொகுதிகளாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இந்த உதாரணத்தில் வரும் இரண்டு அடிமைகளும் கடினமாக உழைத்தார்கள், அவர்களிடம் இருந்த பணத்தை இரண்டு மடங்காக ஆக்கினார்கள். அதேபோல், பிரசங்க வேலையில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டும்தான் கடினமாக உழைக்கிறார்களா? இல்லை! பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிற கிறிஸ்தவர்களும் அவர்களோடு சேர்ந்து கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதை பெருமையாக நினைக்கிறார்கள். எப்படி சொல்லலாம்? இதற்கான பதிலை செம்மறியாடு-வெள்ளாடு உதாரணத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்கள் பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு பிரசங்க வேலையில் உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று இயேசு அந்த உதாரணத்தில் சொன்னார். பூமியில் வாழ்கிற நம்பிக்கையுள்ளவர்கள் இன்று அதைத்தான் செய்கிறார்கள். அதனால்தான், யெகோவாவின் மக்கள் ‘ஒரே மந்தையாக’ இருக்கிறார்கள். பிரசங்க வேலையில் எல்லாருமே கடினமாக உழைக்கிறார்கள்.—யோவா. 10:16.

10. எது கடைசி நாட்களின் அடையாளத்தின் ஒரு பாகமாக இருக்கிறது?

10 தம்முடைய சீடர்கள் எல்லாருமே நிறையப் பேரை சீடர்களாக்க வேண்டும், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். அதனால்தான், முதல் நூற்றாண்டில் இருந்த சீடர்கள் கடினமாக உழைத்தார்கள். ஆனால் தாலந்து உதாரணம் நிறைவேறி வருகிற இந்த கடைசி நாட்களிலும், இயேசுவின் சீடர்கள் கடினமாக உழைக்கிறார்களா? நிச்சயமாக உழைக்கிறார்கள் என்று சொல்லலாம். இதுவரை இல்லாத அளவுக்கு நிறைய பேர் சீடர்களாக ஆகியிருக்கிறார்கள்! இயேசுவின் சீடர்கள் செய்கிற கடின உழைப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். இப்படி ஞானஸ்நானம் எடுக்கிறவர்களும் பிரசங்க வேலையை செய்கிறார்கள். இந்த பிரசங்க வேலை, கடைசி நாட்களின் அடையாளத்தின் ஒரு பாகமாக இருக்கிறது என்பதை இதெல்லாம் காட்டுகிறது. பிரசங்க வேலையில் கடினமாக உழைக்கிற தம்முடைய சீடர்களைப் பார்த்து இயேசு நிச்சயம் சந்தோஷப்படுவார்!

பிரசங்க வேலை என்ற பொக்கிஷத்தை இயேசு நம்மிடம் கொடுத்திருக்கிறார்(பாரா 10)

எஜமான் எப்போது வருவார்?

11. மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில்தான் இயேசு கணக்கு கேட்க வருவார் என்று எப்படி சொல்லலாம்?

11 “வெகு காலத்திற்குப்பின் அந்த அடிமைகளுடைய எஜமான் திரும்பி வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்” என்று இயேசு சொன்னார். (மத். 25:19) எஜமானரான இயேசு மிகுந்த உபத்திரவம் முடிய போகிற சமயத்தில் வந்து கணக்கு கேட்பார். இதை எப்படி சொல்லலாம்? மத்தேயு 24, 25 அதிகாரங்களில் இருக்கிற தீர்க்கதரிசனத்தில், நிறைய தடவை தம்முடைய ‘வருகையை’ பற்றி இயேசு சொல்லி இருக்கிறார். உதாரணத்திற்கு, “மனிதகுமாரன் . . . வானத்து மேகங்கள்மீது வருவதை அவர்கள் பார்ப்பார்கள்” என்று சொன்னார். மிகுந்த உபத்திரவத்தின்போது மக்களை நியாயந்தீர்க்க இயேசு வரப்போகிற சமயத்தை இது அர்த்தப்படுத்துகிறது. கடைசி நாட்களில் தம்முடைய சீடர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்கிற எச்சரிப்பையும் இயேசு கொடுத்தார். அதனால்தான், “உங்கள் எஜமானர் எந்த நாளில் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது,” “நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வரப்போகிறார்” என்று இயேசு சொன்னார். (மத். 24:30, 42, 44) அப்படியென்றால், தாலந்து உதாரணத்தில் சொல்லப்பட்ட எஜமானருடைய வருகை எப்போது இருக்கும்? இயேசு மக்களை நியாயந்தீர்க்கவும், சாத்தானுடைய உலகத்தை அழிக்கவும் வரும் சமயத்தில்தான் இது இருக்கும். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

12, 13. (அ) முதல் இரண்டு அடிமைகளிடம் எஜமான் என்ன சொன்னார், ஏன் அப்படி சொன்னார்? (ஆ) பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு எப்போது கடைசி முத்திரை கிடைக்கும்? (“ எப்போது கணக்கு கொடுப்பார்கள்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.) (இ) ‘செம்மறியாடு’ என்று நியாயந்தீர்க்கப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?

12 அந்த உதாரணத்தில், எஜமான் தூரதேசத்திற்கு போய்விட்டு திரும்பி வருகிறார். அப்போது 5 தாலந்தை வைத்திருந்த அடிமை இன்னும் 5 தாலந்தை சம்பாதித்து இருந்ததையும், 2 தாலந்தை வைத்திருந்த அடிமை இன்னும் 2 தாலந்தை சம்பாதித்து இருந்ததையும் பார்த்தார். “சபாஷ்! உண்மையுள்ள நல்ல அடிமையே, நீ கொஞ்சக் காரியங்களில் உண்மையுள்ளவனாக இருந்ததால் நிறைய காரியங்களைக் கவனித்துக்கொள்ள உன்னை நியமிப்பேன்” என்று எஜமான் அந்த அடிமைகளிடம் சொன்னார். (மத். 25:21, 23) அப்படியென்றால், அந்த எஜமான் மாதிரியே இயேசுவும் எதிர்காலத்தில் ‘வரும்போது’ என்ன செய்வார்?

13 மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்பு, பூமியில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடைசி முத்திரை கிடைத்திருக்கும். (வெளி. 7:1-3) அர்மகெதோனுக்கு முன்பு இயேசு அவர்களை பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்புவார். இப்படி அவர்களுக்கு பலன் அளிப்பார். பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ததால், இயேசு அவர்களை ‘செம்மறியாடுகள்’ என்று நியாயந்தீர்த்து இருப்பார். அதனால், கடவுளுடைய ஆட்சியில் அவர்களுக்கு முடிவில்லா வாழ்க்கை கிடைக்கும்.—மத். 25:34.

‘பொல்லாத அடிமையே, சோம்பேறியே!’

14, 15. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் நிறையப் பேர் பொல்லாதவர்களாக, சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள் என்று இயேசு சொன்னாரா? விளக்குங்கள்.

14 ஒரேவொரு தாலந்தை வைத்திருந்த அடிமையைப் பற்றியும் அந்த உதாரணத்தில் வாசிக்கிறோம். அந்த அடிமை அவனுக்கு கிடைத்த பணத்தை வைத்து வியாபாரமும் செய்யவில்லை, அதை வட்டிக்கும் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அதை புதைத்து வைத்திருக்கிறான். அவனை பொல்லாதவன் என்றும் சோம்பேறி என்றும் அவனுடைய எஜமான் சொன்னார். பொல்லாத அடிமையிடம் இருந்த பணத்தை எடுத்து, முதல் அடிமையிடம் அவர் கொடுத்தார். பிறகு, அவனை ‘இருளில் வீசியெறிய’ சொன்னார். அதனால், அந்த அடிமை அழுது புலம்பினான்.—மத். 25:24-30; லூக். 19:22, 23.

15 மூன்று அடிமைகளில் ஒரு அடிமையை பொல்லாதவன் என்றும் சோம்பேறி என்றும் இயேசு சொன்னார். அதற்காக பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு பொல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள் என்று அவர் அர்த்தப்படுத்தவில்லை. இயேசு சொன்ன மற்ற உதாரணங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இது தெளிவாக தெரிகிறது. உண்மையும் விவேகமும் உள்ள அடிமையைப் பற்றிய உதாரணத்தில், தீய அடிமை மற்ற அடிமைகளை கொடுமைப்படுத்துவான் என்று இயேசு சொன்னார். அதற்காக உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக இருக்கிறவர்களில் சிலர் தீய அடிமையாக மாறுவார்கள் என்று இயேசு சொல்லவில்லை. ஆனால் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், தீய அடிமையாக மாறிவிடாமல் இருக்க வேண்டுமென்று எச்சரிக்கத்தான் அப்படி சொன்னார். அடுத்ததாக, பத்து கன்னிகைகள் உதாரணத்தில், 5 கன்னிகைகள் புத்தியில்லாமல் நடந்துகொண்டார்கள் என்று சொன்னார். அதற்காக பரலோக நம்பிக்கை உள்ளவர்களில் பாதிப் பேர் புத்தி இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள் என்று இயேசு சொல்லவில்லை. அவர்கள் தயாராகவும் விழிப்பாகவும் இருக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று எச்சரிக்கத்தான் அப்படி சொன்னார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதேபோல், தாலந்து உதாரணத்திலும் பரலோக நம்பிக்கை உள்ளவர்களில் நிறைய பேர் கடைசி நாட்களில் பொல்லாதவர்களாக, சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள் என்று இயேசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் தீய அடிமையாக மாறிவிடக் கூடாது என்று எச்சரிக்கத்தான் அப்படி சொன்னார். அதேபோல் பிரசங்க வேலையை செய்வதில் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற விஷயத்தை புரிய வைப்பதற்காகவும் இயேசு அப்படி சொன்னார்.—மத். 25:16.

 16. (அ) என்ன இரண்டு பாடங்களை தாலந்து உதாரணத்தில் இருந்து கற்றுக்கொள்கிறோம்? (ஆ) தாலந்து உதாரணத்தை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இந்த கட்டுரை எப்படி உதவி செய்திருக்கிறது? (“ தாலந்து உதாரணத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

16 தாலந்து உதாரணத்தில் இருந்து நாம் இரண்டு விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். ஒன்று, பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷத்தை இயேசு கொடுத்தார். அதாவது, பிரசங்கித்து சீடராக்குகிற முக்கிய பொறுப்பை அவர்களுக்கு கொடுத்தார். இரண்டு, ஊழியத்தில் நாம் எல்லாரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்; அவர் கொடுத்த பிரசங்க வேலையை கடைசிவரைக்கும் உண்மையாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் நமக்கு அளவில்லா ஆசீர்வாதம் கிடைக்கும்.—மத். 25:21, 23, 34.

^ பாரா. 3 உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார் என்று தெரிந்துகொள்ள, ஜூலை 15, 2013 காவற்கோபுரம் பக்கம் 21-22, பாரா 8-10-ஐ பாருங்கள்.

^ பாரா. 3 கன்னிகைகள் யார் என்று தெரிந்துகொள்ள, முந்தின கட்டுரையை பாருங்கள்.

^ பாரா. 3 செம்மறியாடு-வெள்ளாடு உதாரணத்தை பற்றி தெரிந்துகொள்ள, அடுத்த கட்டுரையை பாருங்கள். அதோடு, அக்டோபர் 15, 1995 காவற்கோபுரம் பக்கம் 23-28-யும் பாருங்கள்.

^ பாரா. 5 இயேசு வாழ்ந்த காலத்தில், ஒருவர் 20 வருடங்கள் வேலை செய்தால்தான் ஒரு தாலந்தை சம்பாதிக்க முடியும்.

^ பாரா. 8 அப்போஸ்தலர்கள் இறந்ததற்கு பிறகு, விசுவாச துரோகம் எல்லா சபைகளுக்கும் பரவ ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, பல வருடங்களுக்கு பிரசங்க வேலை அவ்வளவாக நடக்கவில்லை. ஆனால் “அறுவடை” சமயத்தில், அதாவது கடைசி நாட்களில், பிரசங்க வேலை மறுபடியும் ஆரம்பமானது. (மத். 13:24-30, 36-43) ஜுலை 15, 2013 காவற்கோபுரம், பக்கங்கள் 9-12-ஐ பாருங்கள்.

^ பாரா. 15 “நீங்கள் ‘விழிப்புடன்’ இருப்பீர்களா?” என்ற முந்தின கட்டுரையில் பாரா 13-ஐ பாருங்கள்.