Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையாக இருங்கள்

கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையாக இருங்கள்

“மிகச் சிறியோரான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்தீர்கள்.”—மத். 25:40.

1, 2. (அ) இயேசு அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் என்னென்ன உதாரணங்களை சொன்னார்? (ஆரம்பப் படம்) (ஆ) செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணத்தை நாம் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

இயேசு அவருடைய நெருங்கிய நண்பர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவானிடம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். உண்மையும் விவேகமும் உள்ள அடிமை, பத்து கன்னிகைகள், தாலந்து பற்றிய உதாரணங்களை அப்போதுதான் சொல்லி முடித்தார். இப்போது இன்னொரு உதாரணத்தையும் அவர்களிடம் சொல்கிறார். அந்த உதாரணத்தில் “மனிதகுமாரன்,” ‘எல்லா தேசத்தாரையும்’ நியாயந்தீர்க்கப் போகிற சமயத்தைப் பற்றி விவரிக்கிறார். அந்த சமயத்தில் “மனிதகுமாரன்,” மக்களை இரண்டு தொகுதிகளாகப் பிரிப்பார். அதாவது, செம்மறியாடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் பிரிப்பார் என்று சொல்கிறார். அதோடு, முக்கியமான மூன்றாவது தொகுதியைப் பற்றியும் அதாவது, ராஜாவின் ‘சகோதரர்களை’ பற்றியும் சொல்கிறார்.மத்தேயு 25:31-46-ஐ வாசியுங்கள்.

2 அன்றிருந்த அப்போஸ்தலர்களைப் போலவே இன்று இருக்கிற யெகோவாவின் சாட்சிகளும் செம்மறியாடு-வெள்ளாடு உதாரணத்தைப் பற்றி புரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனென்றால், கொஞ்சம் பேருக்கு முடிவில்லா வாழ்க்கை கிடைக்கும் என்றும் மற்றவர்கள் அழிந்து போய்விடுவார்கள் என்றும் இயேசு அந்த உதாரணத்தில் சொன்னார். இந்த உதாரணத்தின் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொண்டு அதன்படி நடந்தால்தான் நமக்கு முடிவில்லா வாழ்க்கை கிடைக்கும். இந்த கட்டுரையில் நாம் 4 கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ளப் போகிறோம். (1) இந்த உதாரணத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள யெகோவா நமக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்? (2) பிரசங்க வேலையைப் பற்றித்தான் இந்த உதாரணம் சொல்கிறது என்று எப்படி தெரிந்துகொள்கிறோம்? (3) யார் பிரசங்க வேலையை செய்ய வேண்டும்? (4) இந்த கடைசி நாட்களில் ‘ராஜாவுக்கும்’ அவருடைய ‘சகோதரர்களுக்கும்’ உண்மையாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

இந்த உதாரணத்தை புரிந்துகொள்ள யெகோவா எப்படி உதவி செய்திருக்கிறார்?

3, 4. (அ) இந்த உதாரணத்தை புரிந்துகொள்ள நாம் என்ன விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்? (ஆ) 1881-ல் வந்த காவற்கோபுரம் இந்த உதாரணத்தை எப்படி விளக்கியது?

3 செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் மூன்று விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். (1) “மனிதகுமாரன்” அதாவது “ராஜா” யார், செம்மறியாடும் வெள்ளாடும் யார், ராஜாவின் ‘சகோதரர்கள்’ யார்? (2) மக்களை செம்மறியாடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் “மனிதகுமாரன்” எப்போது பிரிப்பார், அதாவது நியாயந்தீர்ப்பார்? (3) சிலர் செம்மறியாடு என்றும் சிலர் வெள்ளாடு என்றும் ஏன் அழைக்கப்படுகிறார்கள்?

4 இயேசுதான், “மனிதகுமாரன்” என்று அதாவது “ராஜா” என்று 1881-ல் வந்த காவற்கோபுரம் சொன்னது. இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்ய போகிறவர்களும் பூமியில் முடிவில்லா வாழ்க்கையை அனுபவிக்க போகிறவர்களும்தான் ராஜாவுடைய ‘சகோதரர்கள்’ என்று அந்த பத்திரிகை சொன்னது. கிறிஸ்துவின் 1,000 வருட ஆட்சியில்தான் பிரிக்கும் வேலை நடக்கும் என்று சொன்னது; யாரெல்லாம் அவர்களுடைய வாழ்க்கையில் யெகோவாவைப் போல் அன்பு காட்டி இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் செம்மறியாடு என்று இயேசு நியாயந்தீர்ப்பார் என்றும் அந்த பத்திரிகை சொன்னது.

5. 1923-ல் வெளிவந்த காவற்கோபுரம் இந்த உதாரணத்தை எப்படி விளக்கியது?

5 சில வருடங்களுக்குப் பிறகு இந்த உதாரணத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள யெகோவா உதவி செய்தார். அக்டோபர் 15, 1923-ல் வந்த காவற்கோபுரம், இந்த உதாரணத்தை இப்படி விளக்கியது: இயேசுதான் அந்த “மனிதகுமாரன்.” ஆனால், இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்ய போகிறவர்கள் மட்டும்தான் கிறிஸ்துவின் ‘சகோதரர்கள்.’ 1,000 வருட ஆட்சியில் அவர்கள் எல்லாரும் பரலோகத்தில் இருப்பார்கள். இயேசுவும் அவருடைய சகோதரர்களும் ஆட்சி செய்யும்போது பூமியில் வாழப்போகிற மக்கள்தான் செம்மறியாடாக இருப்பார்கள். அப்படியென்றால், மக்களை செம்மறியாடாகவும் வெள்ளாடாகவும் பிரிக்கிற வேலை எப்போது நடக்கும்? செம்மறியாட்டைப் போல் இருக்கிறவர்கள் ராஜாவின் சகோதரர்களுக்கு உதவி செய்வார்கள் என்று இயேசு அந்த உதாரணத்தில் சொன்னார். அப்படியென்றால், கிறிஸ்துவின் சகோதரர்கள் பூமியில் இருக்கும்போதுதான் ‘செம்மறியாடுகளால்’ அவர்களுக்கு உதவி செய்ய முடியும். அதனால், அந்த பிரிக்கும் வேலை கிறிஸ்துவின் 1,000 வருட ஆட்சிக்கு முன்பே நடக்கும். யார் செம்மறியாடு என்று நியாயந்தீர்க்கப்படுவார்கள்? இயேசுவை நம்புகிறவர்களும்... கடவுளுடைய அரசாங்கம்தான் மனிதர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும் என்று நம்புகிறவர்களும்... செம்மறியாடு என்று நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

6. 1995-ல் இந்த உதாரணம் எப்படி விளக்கப்பட்டது?

6 கடைசி நாட்களில் நடக்கிற பிரசங்க வேலையை வைத்துத்தான் மக்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று நாம் ரொம்ப வருடங்களாக நினைத்துக்கொண்டு இருந்தோம். அதாவது யாரெல்லாம் நற்செய்தியை கேட்கிறார்களோ அவர்கள் எல்லாரும் செம்மறியாடு என்றும் யாரெல்லாம் கேட்கவில்லையோ அவர்கள் எல்லாரும் வெள்ளாடு என்றும் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், 1995-ல் வந்த காவற்கோபுரம் இதற்கு சரியான விளக்கத்தை தந்தது. மத்தேயு 24:29-31-ஐயும் மத்தேயு 25:31, 32-ஐயும் (வாசியுங்கள்) ஒப்பிட்டு பார்க்கும்போது, ‘மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் வருகிற’ சமயத்தில், அதாவது மிகுந்த உபத்திரவம் சமயத்தில், இயேசு மக்களை நியாயந்தீர்ப்பார் என்று அந்த பத்திரிகை சொன்னது. *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

7. செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணத்தின் அர்த்தம் என்ன?

7 இன்று நாம் செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணத்தை தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறோம். இயேசுதான் “மனிதகுமாரன்” அதாவது, “ராஜா.” இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்ய கடவுளுடைய சக்தியால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்தான் ராஜாவின் ‘சகோதரர்கள்.’ (ரோ. 8:16, 17) எல்லா தேசத்தையும் சேர்ந்த மக்கள்தான் செம்மறியாடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் இருக்கிறார்கள். இயேசு அவர்களை, மிகுந்த உபத்திரவத்தின் கடைசியில்தான் நியாயந்தீர்ப்பார். சீக்கிரத்தில் மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கப் போகிறது. இப்போது பூமியில் வாழ்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை மக்கள் எப்படி நடத்துகிறார்களோ அதை வைத்துத்தான் இயேசு அவர்களை நியாயந்தீர்க்கப் போகிறார். இந்த உதாரணத்தையும் மத்தேயு 24, 25 அதிகாரங்களில் இருக்கிற மற்ற உதாரணங்களையும் யெகோவா நமக்கு தெளிவாகப் புரிய வைத்ததற்காக அவருக்கு ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும்!

பிரசங்க வேலை ரொம்ப முக்கியம்

8, 9. செம்மறியாடு போல் இருக்கிறவர்களை இயேசு ஏன் ‘நீதிமான்’ என்று அழைக்கிறார்?

8 செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணத்தில் ‘பிரசங்க வேலை,’ ‘பிரசங்கியுங்கள்’ என்ற வார்த்தைகளை இயேசு பயன்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது பிரசங்க வேலைதான் ரொம்ப முக்கியமான வேலை என்று இந்த உதாரணத்தில் இருந்து எப்படி தெரிந்துகொள்கிறோம்?

9 இந்த கேள்விக்கு பதில் தெரிந்துகொள்வதற்கு முன்பு நாம் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும்: நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் இயேசு இந்த உதாரணத்தை சொன்னார். இதில் அவர் நிஜமான செம்மறியாடுகளை பற்றியோ வெள்ளாடுகளை பற்றியோ சொல்லவில்லை. அதேபோல், செம்மறியாடு என்று நியாயந்தீர்க்கப்படுகிற ஒவ்வொருவரும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு நிஜமாகவே சாப்பாடும் துணிமணியும் கொடுக்க வேண்டும்... உடம்பு சரியில்லாமல் இருக்கிறவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்... சிறையில் இருக்கிறவர்களைப் போய் பார்க்க வேண்டும்... என்றும் சொல்லவில்லை. அப்படியென்றால் இயேசு இந்த உதாரணத்தில் என்ன சொல்கிறார்? செம்மறியாடு போல் இருக்கிறவர்கள், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை இயேசுவின் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டு, இந்த கடைசி காலத்தில் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று சொல்கிறார். அப்படி இருக்கிறவர்களை அவர் ‘நீதிமான்’ என்று அழைக்கிறார்.—மத். 10:40-42; 25:40, 46; 2 தீ. 3:1-5.

10. கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு செம்மறியாடு போல் இருக்கிறவர்கள் எப்படி உதவி செய்யலாம்?

10 கடைசி நாட்களில் நடக்கப் போகிற சம்பவங்களைப் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கும்போதுதான் இயேசு செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணத்தையும் சொல்கிறார். (மத். 24:3) உதாரணத்திற்கு கடைசி நாட்களில், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று சொன்னார். (மத். 24:14) அதோடு, செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணத்தை சொல்வதற்கு முன்பு தாலந்து உதாரணத்தை சொன்னார். பிரசங்க வேலையில் கடினமாக உழைக்க வேண்டும் என்ற குறிப்பை உணர்த்துவதற்காகத்தான் தாலந்து உதாரணத்தையே அவர் சொன்னார். ஆனால், இன்று பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் கொஞ்சம் பேர்தான் இந்தப் பூமியில் இருக்கிறார்கள். முடிவும் சீக்கிரத்தில் வரப் போகிறது. அப்படி இருக்கும்போது அவர்களால் எப்படி உலகம் முழுவதும், அதாவது “எல்லாத் தேசத்தாருக்கும்” பிரசங்கிக்க முடியும்? இந்த உதாரணத்தில் ஏற்கெனவே பார்த்ததுபோல், “செம்மறியாடு” போன்றவர்கள் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவி செய்கிறார்கள். அவர்கள் நிறைய விதங்களில் உதவி செய்தாலும், பிரசங்க வேலையில் அவர்களுக்கு உதவி செய்வதுதான் ரொம்ப முக்கியம். ஆனால், பிரசங்க வேலைக்காக பண உதவி செய்வது, கிறிஸ்துவின் சகோதரர்களை உற்சாகப்படுத்துவது மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?

யார் பிரசங்க வேலையை செய்ய வேண்டும்?

11. சிலர் எப்படி யோசிக்கலாம், ஏன்?

11 இன்று பூமியில் இயேசுவின் சீடர்கள் 80 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் நிறையப் பேர் பூமியில் வாழ்கிற நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள். ஆனால், இவர்களிடம் இயேசு தாலந்தை கொடுக்கவில்லை, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிடம்தான் கொடுத்தார். (மத். 25:14-18) அதனால் சிலர் இப்படி யோசிக்கலாம்: ‘பூமியில வாழ்ற நம்பிக்கை இருக்குறவங்ககிட்ட இயேசு தாலந்தை கொடுக்கலையே, அப்படீனா அவங்க நற்செய்திய பிரசங்கிக்கணுமா?’ இந்த கேள்விக்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

12. மத்தேயு 28:19, 20-ல் இயேசு சொன்ன விஷயத்தில் இருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

12 பிரசங்க வேலையை செய்ய வேண்டுமென்ற கட்டளையை தம்முடைய சீடர்கள் எல்லாருக்கும் இயேசு கொடுத்தார். உயிர்த்தெழுந்ததற்குப் பிறகு இயேசு தம்மை பின்பற்றியவர்களிடம், ‘எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்’ என்று சொன்னார். அதோடு, “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்” என்றும் சொன்னார். அப்படியென்றால், புதிதாக சீடராகும் எல்லாரும் இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும், பிரசங்க வேலையை செய்ய வேண்டும். (மத்தேயு 28:19, 20-ஐ வாசியுங்கள்.) நமக்கு பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, நாம் எல்லாருமே நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும்.—அப். 10:42.

13. யோவான் பார்த்த தரிசனத்தில் இருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

13 பரலோக நம்பிக்கை உள்ளவர்களும் பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்களும் பிரசங்க வேலை செய்ய வேண்டுமென்று வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்கிறோம். அப்போஸ்தலன் யோவானுக்கு இயேசு கிறிஸ்து மூலமாக ஒரு தரிசனம் கிடைத்தது. அந்த தரிசனத்தில், வாழ்வளிக்கும் தண்ணீரை குடிக்க சொல்லி ‘மணமகள் [மக்களை] அழைக்கிறாள்.’ இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேர்தான் அந்த ‘மணமகள்.’ (வெளி. 14:1, 3; 22:17) இயேசுவின் மீட்பு பலிதான் அந்த வாழ்வளிக்கும் தண்ணீர். அதுதான் பாவத்தில் இருந்தும் மரணத்தில் இருந்தும் மக்களை விடுதலை செய்ய போகிறது. (மத். 20:28; யோவா. 3:16; 1 யோ. 4:9, 10) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் மீட்பு பலியை பற்றியும் அதனால் கிடைக்கப்போகிற நன்மைகளைப் பற்றியும் மக்களுக்கு சுறுசுறுப்பாக பிரசங்கித்துக்கொண்டு வருகிறார்கள். (1 கொ. 1:23) ஆனால் அந்த தரிசனத்தில், வேறொரு மக்கள் தொகுதியை பற்றியும் இயேசு சொன்னார். அவர்கள் பூமியில் வாழ்கிற நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள். மற்றவர்களை “வருக, வருக” என்று அழைக்க சொல்லி அவர்களுக்கும் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவர்கள் எல்லாருக்கும் நற்செய்தியை சொல்கிறார்கள். அப்படியென்றால் “வருக, வருக” என்ற அழைப்பை ஏற்றுக்கொள்கிற எல்லாருமே பிரசங்க வேலையை செய்ய வேண்டுமென்று இந்த தரிசனத்தில் இருந்து தெரிந்துகொள்கிறோம்.

14. ‘கிறிஸ்துவின் சட்டத்திற்கு’ நாம் எப்படி கீழ்ப்படியலாம்?

14 ‘கிறிஸ்துவின் சட்டத்திற்கு’ கீழ்ப்படிகிற எல்லாருமே பிரசங்க வேலையை செய்ய வேண்டும். (கலா. 6:2) தம்மை வணங்குகிற எல்லாரும் அவர் கொடுத்த சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். உதாரணத்திற்கு, இஸ்ரவேலர்களும் அவர்களோடு வாழ்ந்த மற்ற நாட்டு மக்களும், அவர் கொடுத்த சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்று எதிர்பார்த்தார். (யாத். 12:49; லேவி. 24:22) இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த எல்லா சட்டங்களுக்கும் இன்று நாம் கீழ்ப்படிய வேண்டியதில்லை. ஆனால், நாம் எல்லாருமே ‘கிறிஸ்துவின் சட்டத்திற்கு’ கீழ்ப்படிய வேண்டும். நமக்கு பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, இந்த சட்டத்திற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அதற்கு கீழ்ப்படிய வேண்டுமென்றால் நாம் அன்பு காட்ட வேண்டுமென்று இயேசு சொல்லியிருக்கிறார். (யோவா. 13:35; யாக். 2:8) அப்படியென்றால், நாம் யெகோவாமீது... இயேசுமீது... மக்கள்மீது... அன்பு காட்ட வேண்டும். அப்படி அன்பு காட்ட ஒரு சிறந்த வழி, நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதுதான்.—யோவா. 15:10; அப். 1:8.

15. இயேசுவின் சீடர்கள் எல்லாருமே பிரசங்கிக்க வேண்டுமென்று எப்படி சொல்லலாம்?

15 சீடர்கள் சிலரிடம் இயேசு சொன்ன விஷயம் சிலசமயம் எல்லா சீடர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு, இயேசு தம்முடைய 11 சீடர்களோடுதான் ஒப்பந்தம் செய்தார். பரலோகத்தில் தம்மோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள் என்று அவர்களிடம்தான் வாக்குக் கொடுத்தார். ஆனால், அவர்களை சேர்த்து மொத்தம் 1,44,000 பேர் பரலோகத்தில் இயேசுவோடு ஆட்சி செய்யப் போகிறார்கள். (லூக். 22:29, 30; வெளி. 5:10; 7:4-8) இன்னொரு உதாரணத்தையும் கவனியுங்கள். இயேசு உயிர்த்தெழுந்ததற்குப் பிறகு, பிரசங்க வேலையை செய்ய வேண்டுமென்று சில சீடர்களிடம்தான் கட்டளை கொடுத்தார். (அப். 10:40-42; 1 கொ. 15:6) ஆனால், முதல் நூற்றாண்டில் இருந்த எல்லா சீடர்களுமே அவர் கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்கள். (அப். 8:4; 1 பே. 1:8) இன்றும் பிரசங்க வேலையை செய்ய வேண்டுமென்று இயேசு நம்மிடம் நேரடியாக சொல்லவில்லை. இருந்தாலும் நாம் பிரசங்க வேலையை செய்கிறோம். சொல்லப்போனால், இயேசுவின் சீடர்கள் 80 லட்சம் பேரும் இந்த வேலையை செய்கிறார்கள். பிரசங்க வேலை செய்வதன் மூலமாக நாம் இயேசுமீது விசுவாசம் வைத்திருக்கிறோம் என்பதை காட்டுகிறோம்.—யாக். 2:18.

உண்மையாக இருக்க இதுதான் சமயம்

16-18. கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம், அதை இப்போதே செய்வது ஏன் முக்கியம்?

16 ‘தனக்குக் கொஞ்சக் காலமே இருக்கிறது’ என்று சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், பூமியில் இருக்கிற கிறிஸ்துவின் சகோதரர்களை அவன் பயங்கரமாக எதிர்க்கிறான். (வெளி. 12:9, 12, 17) சாத்தான் என்ன பிரச்சனை கொண்டுவந்தாலும் சரி, பிரசங்க வேலையை பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் வழிநடத்திக்கொண்டு வருகிறார்கள். அதனால், இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு நிறையப் பேர் நற்செய்தியை கேட்கிறார்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு இயேசு இருக்கிறார்... அவர்களை வழிநடத்துகிறார்... என்பது இதிலிருந்து பளிச்சென தெரிகிறது!—மத். 28:20.

17 பிரசங்க வேலையை செய்வதன் மூலமாக கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவி செய்வதை நாம் பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். நன்கொடை கொடுப்பதன் மூலமாகவும் நாம் உதவி செய்கிறோம். ராஜ்ய மன்றம், மாநாட்டு மன்றம், கிளை அலுவலகம் எல்லாம் கட்டுவதற்கும் உதவி செய்கிறோம். உண்மையுள்ள அடிமை நியமிக்கிற சகோதரர்களுக்கும் மூப்பர்களுக்கும் உண்மையாக இருப்பதன் மூலமாக கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு நாம் உதவி செய்கிறோம்.—மத். 24:45-47; எபி. 13:17.

செம்மறியாடு போல் இருக்கிறவர்கள் கிறிஸ்துவின் சகோதரர்களுக்குப் பல வழிகளில் உதவி செய்கிறார்கள் (பாரா 17)

18 பூமியில் வாழ்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு சீக்கிரத்தில் கடைசி முத்திரை கிடைக்கப் போகிறது. அதற்குப் பிறகு, தேவதூதர்கள் “பூமியின் நான்கு காற்றுகளை” அவிழ்த்துவிட போகிறார்கள்; அப்போது மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும். (வெளி. 7:1-3) அர்மகெதோன் ஆரம்பிப்பதற்கு முன்பே பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை இயேசு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்புவார். (மத். 13:41-43) இயேசு வரும்போது, அவர் நம்மை செம்மறியாடு என்று நியாயந்தீர்க்கவே விரும்புவோம். அப்படியென்றால், கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவி செய்ய இதுதான் சரியான நேரம்!

^ பாரா. 6 இந்த உதாரணத்தைப் பற்றி அக்டோபர் 15, 1995-ல் வெளிவந்த காவற்கோபுர கட்டுரைகளைப் பாருங்கள். அந்த கட்டுரைகளின் தலைப்பு: “நியாயாசனத்திற்கு முன்பு நீங்கள் எவ்வாறு நிற்பீர்கள்?,” “செம்மறியாடுகளுக்கும் வெள்ளாடுகளுக்கும் என்ன எதிர்காலம் உள்ளது?