Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சபைநீக்கம் ஓர் அன்பான செயல்

சபைநீக்கம் ஓர் அன்பான செயல்

“என் மகன் சபைநீக்கம் செய்யப்பட்டதை கேட்டப்ப என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு. அவன்தான் என்னோட மூத்த பையன். என்மேல அவ்வளவு உயிரா இருப்பான். எதுவா இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் செய்வோம். அவன் ரொம்ப தங்கமான பையன். ஆனா என்னமோ தெரியல... திடீர்னு அவன் போக்கே சரியில்லாம போயிடுச்சு. அவன் இனிமே ஒரு யெகோவாவின் சாட்சி இல்லைங்கிறத நினைச்சு நினைச்சு என் மனைவி அழுதுகிட்டே இருப்பா. அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனே எனக்கு தெரியல. நாங்கதான் அவனை ஒழுங்கா வளர்க்காம போயிட்டோமோனு கவலைப்பட்டுட்டே இருந்தோம்” என்று ஜூலியன் சொல்கிறார்.

சபைநீக்கம் செய்யும்போது எல்லாருக்கும் ரொம்ப வேதனையாகத்தானே இருக்கும், அப்படியிருக்கும்போது அதை ஒரு அன்பான செயல் என்று எப்படி சொல்ல முடியும்? இப்படிக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பைபிள் என்னென்ன காரணங்களை சொல்கிறது? ஒருவர் ஏன் சபை நீக்கம் செய்யப்படுகிறார்?

ஒருவர் ஏன் சபைநீக்கம் செய்யப்படுகிறார்?

ஒருவரை சபைநீக்கம் செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவர் படுமோசமான பாவம் செய்திருப்பார். இரண்டு, அவர் மனந்திரும்பாமல் இருந்திருப்பார்.

நாம் எல்லாவற்றையும் நூற்றுக்கு நூறு சரியாக செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பது இல்லை. இருந்தாலும் நாம் ஒழுக்கமாக வாழ சில சட்டதிட்டங்களைக் கொடுத்திருக்கிறார். அதன்படி நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். உதாரணமாக, பாலியல் முறைகேடு, சிலை வழிபாடு, திருட்டு, கொலை, கொள்ளை, ஆவியுலக தொடர்பு... இந்த மாதிரி படுமோசமான பாவங்களை செய்யவே கூடாது என்று யெகோவா சொல்லியிருக்கிறார்.—1 கொ. 6:9, 10; வெளி. 21:8.

யெகோவா கொடுத்த சட்டதிட்டங்கள் எல்லாமே நியாயமானதுதான், நம்முடைய நல்லதுக்குத்தான், இல்லையா? சமாதானமாக, ஒழுக்கமாக இருக்கிற ஜனங்களோடு வாழ்வதற்கும், நம்பகமான ஜனங்களோடு பழகுவதற்கும் தானே நாம் எல்லாரும் ஆசைப்படுவோம்? இந்த மாதிரி ஜனங்களை நம்முடைய சபையில் மட்டும்தான் பார்க்க முடியும். யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்து, பைபிளில் சொல்லியிருக்கிற மாதிரி நடப்பதால்தான் நம்முடைய சபையில் அன்பான சூழல் இருக்கிறது.

ஆனால், சபையில் இருக்கிற ஒருவர் ஏதோ பலவீனத்தால் படுமோசமான பாவத்தை செய்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அப்போது என்ன செய்வது? யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஜனங்கள்கூட படுமோசமான பாவத்தை செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை கடவுள் ஒரேயடியாக ஒதுக்கிவிடவில்லை. இதற்கு, தாவீது ராஜாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இன்னொருவரின் மனைவியிடம் அவர் உறவு வைத்துக்கொண்டார், அவளுடைய கணவனை கொலை செய்தார். இருந்தாலும், “யெகோவா உங்கள் பாவத்தை மன்னித்துவிட்டார்” என்று நாத்தான் தீர்க்கதரிசி அவரிடம் சொன்னார்.—2 சா. 12:13, NW.

தாவீது உண்மையிலேயே மனந்திரும்பினார், அதனால்தான் கடவுள் அவரை மன்னித்தார். (சங். 32:1-5) திருந்தாமல் இருந்திருந்தால், அவருக்கு மன்னிப்பு கிடைத்திருக்காது. அதேமாதிரி, யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒருவர் தவறு செய்துவிட்டு மனந்திரும்பாமல் இருந்தால்... தொடர்ந்து அதே தவறை செய்துகொண்டே இருந்தால்... அவருக்கு மன்னிப்பு கிடைக்காது. அவரை சபைநீக்கம்தான் செய்வார்கள். (அப். 3:19; 26:20) அவர் உண்மையிலேயே மனந்திரும்பி இருக்கிறாரா என்று நீதி விசாரணை குழுவில் இருக்கிற மூப்பர்கள் பார்ப்பார்கள், மனந்திரும்பாத சமயத்தில்தான் அவரை சபைநீக்கம் செய்வார்கள்.

ஒருவரை சபைநீக்கம் செய்யும்போது, ‘அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனையா’ என்று நாம் நினைக்கலாம், ‘ஈவிரக்கமில்லாம இப்படி பண்ணிட்டாங்களே’ என்றும்கூட யோசிக்கலாம். அதுவும், அவர் நமக்கு நெருக்கமானவராக இருந்தால் சொல்லவே வேண்டாம்! இருந்தாலும், இப்படி செய்வது ஒரு அன்பான செயல். இதற்கு பைபிளில் நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

சபைநீக்கம் செய்வதால் எல்லாருக்கும் நன்மை கிடைக்கிறது—எப்படி?

“ஞானம் அதன் செயல்களால் [அதாவது, பலன்களால்] நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத். 11:19, அடிக்குறிப்பு) மனந்திரும்பாத ஒருவரை சபைநீக்கம் செய்வது ஞானமான முடிவு. அப்படி செய்வதால் கிடைக்கிற பலன்கள் நீதியாக, அதாவது நல்லதாக இருக்கும். மூன்று பலன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்:

யெகோவாவுடைய பெயருக்கு புகழ் சேர்கிறது. நமக்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற பெயர் இருக்கிறது. அதனால் நாம் நடந்துகொள்கிற விதம் கண்டிப்பாக கடவுளுடைய பெயருக்குப் புகழையோ களங்கத்தையோ கொண்டுவரும். (ஏசா. 43:10) அப்பா-அம்மாவுக்கு நல்ல பெயர் கிடைக்கிறதும் கெட்ட பெயர் கிடைக்கிறதும் பிள்ளை நடந்துகொள்கிறதை வைத்துதான் இருக்கிறது. அதேமாதிரி, யெகோவாவுக்கு நல்ல பெயர் கிடைக்கிறதும் கெட்ட பெயர் கிடைக்கிறதும் ஓரளவுக்கு நம் கையில்தான் இருக்கிறது. யெகோவாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், அவர் கொடுத்திருக்கிற சட்டங்கள்படி நாம் வாழ வேண்டும். எசேக்கியேல் வாழ்ந்த காலத்தில், யூதர்கள் என்று சொன்னாலே அவர்கள் ‘யெகோவாவுடைய ஜனங்கள்’ என்பதை சுற்றியிருந்த தேசத்தார் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால், யூதர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளாத சமயத்தில் யெகோவாவுக்குதான் கெட்ட பெயர் வந்தது.—எசே. 36:19-23.

ஒழுக்கங்கெட்ட காரியங்களை செய்துகொண்டு இருந்தால் கடவுளுடைய பெயருக்கு களங்கம்தான் வரும். இதைத்தான் அப்போஸ்தலன் பேதுரு அன்றிருந்த கிறிஸ்தவர்களிடம் சொன்னார். “கடவுளை அறியாத காலத்தில் உங்களுக்கு இருந்த இச்சைகளின்படி நடப்பதை விட்டுவிட்டு, கீழ்ப்படிகிற பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்; உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருப்பது போலவே நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தராக இருங்கள். ‘நான் பரிசுத்தர், அதனால் நீங்களும் பரிசுத்தராக இருக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டுள்ளதே” என்று அவர்களிடம் சொன்னார். அதனால், நாம் பரிசுத்தமாக நடந்துகொள்ளும்போது கடவுளுடைய பெயருக்கு புகழ் சேர்கிறது.

யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒருவர் தவறான வழியில் போவது அவருடைய நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தெரிய வரலாம். அவரை சபைநீக்கம் செய்யும்போது, யெகோவாவுடைய ஜனங்கள் ஒழுக்கமானவர்கள், பைபிளில் சொல்லியிருக்கிற மாதிரி நடக்கிறவர்கள் என்று அவர்களும் தெரிந்துகொள்வார்கள். உதாரணமாக, சுவிட்சர்லாந்தில் இருக்கிற ஒரு ராஜ்ய மன்றத்துக்கு ஒருவர் வந்து, ‘நானும் உங்க சபையில சேர்ந்துக்கிறேன்’ என்று சொன்னார். ஏன் தெரியுமா? அவருடைய சகோதரி ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதால் அவரை சபையைவிட்டு நீக்கியிருந்தார்கள். அதைக் கேள்விப்பட்டு அவருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ‘ஒழுக்கமில்லாம நடந்துக்கிறவங்கள உங்க சபையில வச்சுக்க மாட்டீங்க. இப்படிப்பட்ட சபையிலதான் நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்’ என்று சொன்னார்.

சபை பாதுகாக்கப்படுகிறது. வேண்டுமென்றே தவறு செய்கிறவர்களை சபையில் விட்டுவைப்பது ஆபத்தானது என்று கொரிந்து சபையில் இருந்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். ‘கொஞ்சம் புளித்த மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைச்சிடுற’ மாதிரி, இவர்களும் சபையில் இருக்கிற மற்றவர்களைக் கெடுத்துவிடுவார்கள் என்று சொன்னார். அதனால், “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று அவர் சொன்னார்.

அந்தப் ‘பொல்லாத மனிதன்’, கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி ஒழுக்கக்கேடாக வாழ்ந்துகொண்டு இருந்தான். அவன் செய்த காரியத்தை சரி என்றுகூட சபையில் இருந்த மற்றவர்கள் நியாயப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். (1 கொ. 5:1, 2) ஏற்கெனவே, கொரிந்து நகரம் ஒழுக்கக்கேட்டுக்கு பேர் போனதாக இருந்தது. சபையிலும் இந்த மாதிரி படுமோசமான பாவத்தைக் கண்டும்காணாமல் விட்டுவிட்டால், மற்றவர்களும் அப்படி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதோடு, கடவுள் தந்திருக்கிற சட்டங்களை ஏனோதானோ என்று எடுத்துக்கொள்வார்கள். (பிர. 8:11) மனந்திரும்பாமல் பாவம் செய்துகொண்டு இருக்கிறவர்கள், “நீருக்கடியில் மறைந்துள்ள பாறைகள்” மாதிரி இருக்கிறார்கள். சபையில் இருக்கிற மற்றவர்களுடைய விசுவாசக் கப்பலை இவர்கள் சேதப்படுத்திவிடுவார்கள்.—யூ. 4, 12.

தவறு செய்தவர் திருந்தி வருவதற்கு உதவி செய்கிறது. ஊதாரி மகன் ஒருவனைப் பற்றி இயேசு ஒரு தடவை சொன்னார். அவன் வீட்டைவிட்டு போனான், ஊதாரித்தனமாக செலவு பண்ணி சொத்தையெல்லாம் அழித்தான், ஒழுக்கக்கேடாகவும் வாழ்ந்தான். வெளி உலகம் எவ்வளவு மோசமானது என்று வாழ்க்கையில் அடிபட்டுதான் தெரிந்துகொண்டான். செய்த தவறை உணர்ந்து, மறுபடியும் அப்பாவிடம் திரும்பி வந்தான். (லூக். 15:11-24) அவன் திருந்தி வந்ததை பார்த்து அவனுடைய அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார் என்று இயேசு சொன்னார். தவறு செய்தவர்கள் திருந்தி வரும்போது யெகோவாவும் அப்படித்தான் சந்தோஷப்படுகிறார் என்று இதிலிருந்து தெரிகிறது. “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்” என்று யெகோவா தேவன் சொல்லியிருக்கிறார்.—எசே. 33:11.

அதேமாதிரி, கிறிஸ்தவ சபை என்ற குடும்பத்தைவிட்டு வெளியே போகிறவர்கள் எதையெல்லாம் இழந்திருக்கிறார்கள் என்று பிறகு உணர ஆரம்பிக்கலாம். யெகோவாவோடு நெருக்கமாக இருந்தபோது... சகோதர சகோதரிகளோடு பழகினபோது... அனுபவித்த சந்தோஷத்தையும் தவறான வழியில் போனதால் வந்த வேதனைகளையும் நினைத்துப் பார்த்து திருந்தி வரலாம்.

நாம் அன்பாக, அதேசமயத்தில் உறுதியாக இருந்தால்தான் அவர்கள் திருந்தி வருவார்கள். “நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்” என்று தாவீது சொன்னார். (சங். 141:5) உதாரணமாக, ஒருவர் சாப்பிடும்போது அவருடைய தொண்டையில் ஏதாவது சிக்கிவிட்டால் அவர் மூச்சு திணறி ஒருவேளை செத்தே போய்விடலாம். ஆனால், யாராவது ஒருவர் அவர் முதுகில் தட்டினால் தொண்டையில் சிக்கியது வெளியே வந்துவிடும். அப்படித் தட்டும்போது வலிக்கத்தான் செய்யும். ஆனால், அப்படி செய்யவில்லை என்றால் உயிரே போய்விடலாம். அதேமாதிரி நீதிமான் குட்டுவது கஷ்டமாக இருந்தாலும் அது நல்லதுக்குதான் என்று தாவீது புரிந்து வைத்திருந்தார்.

சபைநீக்கம் செய்ததால் நிறைய பேர் திருந்தி வந்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன ஜூலியனுடைய மகன், பத்து வருடங்களுக்குப் பிறகு மனம் மாறினார். செய்த தவறை விட்டுவிட்டு, சபைக்குத் திரும்பி வந்தார். இப்போது அவர் ஒரு மூப்பராக இருக்கிறார். “எனக்கு அந்த தண்டனை தேவைதான். ஏன்னா, என்னை சபைநீக்கம் செஞ்சதுக்கு அப்புறம்தான், நான் போயிட்டிருந்த தப்பான வழியை விட்டுட்டு திரும்பி வர்றதுக்கு முயற்சி எடுத்தேன்” என்று அவர் சொன்னார்.—எபி. 12:7-11.

சபைநீக்கம் செய்யப்பட்டவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

சபைநீக்கம் செய்யப்படும் ஒருவர் ஆன்மீக ரீதியில் தடுக்கி விழுகிறார். அதற்காக அவர் காலம் முழுதும் விழுந்தே கிடக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் மறுபடியும் எழுந்து வருவதற்கு நாம் ஒவ்வொருவரும் உதவி செய்ய வேண்டும்.

மனந்திரும்புகிறவர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு மூப்பர்கள் உதவுகிறார்கள்

மூப்பர்கள் எப்படி உதவி செய்கிறார்கள்? சபைநீக்கம் செய்யப்பட்ட விஷயத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் சொல்வது மூப்பர்களுடைய மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அன்பாக, அதேசமயத்தில் தெளிவாக சொல்கிறார்கள். இந்த விதத்தில் யெகோவாவை போல அன்பு காட்ட முயற்சி செய்கிறார்கள். சபைநீக்கம் செய்த கொஞ்ச காலத்திற்குப் பிறகு, அவர் மனம் மாறியிருப்பதற்கு ஏதாவது அறிகுறிகள் தெரிந்தால் அவரை சந்தித்து பேசுகிறார்கள், யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு உதவி செய்கிறார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

குடும்பத்தில் இருக்கிறவர்கள் எப்படி உதவி செய்யலாம்? மூப்பர்கள் எடுத்த தீர்மானத்தைக் குடும்பத்தில் இருக்கிறவர்கள் மதித்து நடக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், கிறிஸ்தவ சபையை உயர்வாக மதிப்பதையும் தவறு செய்தவர்மீது அன்பு வைத்திருப்பதையும் காட்டலாம். “இப்பவும் அவன் என்னோட மகன்தான். ஆனா, அவன் போன பாதை சரியில்லாதனாலதான் எங்களுக்கும் அவனுக்கும் இடைவெளி வந்துடுச்சு” என்று ஜூலியன் சொன்னார்.

சபையில் இருக்கிறவர்கள் எப்படி உதவி செய்யலாம்? சபைநீக்கம் செய்யப்பட்டவரிடம் எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது, அவரோடு வேறெந்த தொடர்பும் இருக்கக் கூடாது. அப்போதுதான் அவர்மீது உண்மையிலேயே அன்பு இருக்கிறது என்று அர்த்தம். (1 கொ. 5:11; 2 யோ. 10, 11) ஏனென்றால், மூப்பர்கள் மூலமாக யெகோவாதான் இந்தத் தண்டனையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு நாம் முழு ஆதரவு காட்ட வேண்டும். இந்த மாதிரி சமயத்தில், சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் மனம் உடைந்துபோய் இருப்பார்கள். ‘சபையில இருக்கிறவங்க இனிமே நம்மகிட்டயும் பேச மாட்டாங்களோ’ என்று அவர்கள் நினைக்கிற மாதிரி நாம் நடந்துக்கக்கூடாது. அவர்கள்மீது இன்னும் அதிகமாக அன்பும் அக்கறையும் காட்ட வேண்டும்.—ரோ. 12:13, 15.

ஜுலியன் சொல்கிறார்: “சபைநீக்கம் என்ற ஏற்பாடு கண்டிப்பா தேவை. ஏன்னா, யெகோவாவோட சட்டதிட்டங்கள்படி நடக்குறதுக்கு அது நமக்கு உதவி செய்யுது. அந்த சமயத்தில நமக்கு வேதனையா இருந்தாலும், பின்னால அது நல்ல பலனை கொடுக்குது. என் பையன் செஞ்ச தப்பை நான் பொறுத்துகிட்டு இருந்திருந்தா, அவன் இன்னைக்கு வரைக்கும் திருந்தியிருக்கவே மாட்டான்.”

^ பாரா. 24 காவற்கோபுரம் பிப்ரவரி 1, 1992, பக்கம் 19-21-ஐ பாருங்கள்.