Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்து, கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்

கிறிஸ்து, கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்

‘கிறிஸ்து, கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்.’—1 கொ. 1:24.

1. ‘கிறிஸ்து, கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’ என்று பவுல் ஏன் சொன்னார்?

யெகோவா தம் வல்லமையை இயேசு கிறிஸ்துவின் மூலம் பல வழிகளில் காட்டியிருக்கிறார். இதற்கு இயேசு செய்த அற்புதங்களே அத்தாட்சி! அவற்றில் சில அற்புதங்கள் மட்டும்தான் பைபிளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதை வாசிக்கும்போது நம் விசுவாசம் பலப்படுகிறது. (மத். 9:35; லூக். 9:11) இயேசுவுக்கு யெகோவா அதிக சக்தி கொடுத்து இருப்பதால்தான், ‘கிறிஸ்து, கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொ. 1:24) ஆனால், இயேசு செய்த அற்புதங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. இயேசு செய்த அற்புதங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

2 இயேசு நிறைய “அற்புதங்களை” செய்தார் என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (அப். 2:22) இந்த அற்புதங்களிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? இயேசு தம் 1,000 வருட ஆட்சியில் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அப்போது பூமியில் இருக்கும் எல்லா மனிதர்களும் நன்மை அடையும் விதத்தில் அவர் இன்னும் நிறைய அற்புதங்களை செய்வார். அதுமட்டும் இல்லாமல் அவர் செய்த அற்புதங்கள், அவரைப் பற்றியும் அவருடைய அப்பாவைப் பற்றியும் தெரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. இயேசு செய்த 3 அற்புதங்களைப் பற்றியும் அதனால் இன்றும் எதிர்காலத்திலும் கிடைக்கப்போகும் நன்மைகளைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

தாராள குணத்தை காட்டிய அற்புதம்

3. (அ) முதல் அற்புதத்தை இயேசு ஏன் செய்தார்? (ஆ) இயேசு எப்படித் தாராள குணத்தைக் காட்டினார்?

3 கானா ஊரில் நடந்த ஒரு கல்யாண விருந்தில் இயேசு கலந்துகொண்டார். என்ன காரணமென்று தெரியவில்லை, அந்த விருந்தில் திராட்சமது தீர்ந்து போனது. விருந்திற்கு வருபவர்களை உபசரிப்பது புதுமண தம்பதியின் கடமையாக இருந்ததால் அது அவர்களுக்கு தர்மசங்கடமாக இருந்திருக்கும். அந்த விருந்திற்கு இயேசுவின் தாய் மரியாளும் வந்திருந்தார். இயேசுவைப் பற்றி சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களை எல்லாம் மரியாள் பல வருடங்களாக யோசித்திருப்பார். அவர் “உன்னதமானவரின் மகன்” என்று அழைக்கப்படுவார் என்பதும் மரியாளுக்குத் தெரிந்திருந்தது. அதனால், இயேசு தம் வல்லமையைப் பயன்படுத்தி ஏதாவது செய்வார் என்று நினைத்து மரியாள் அவரிடம் உதவி கேட்டிருப்பாரா? (லூக். 1:30-32; 2:52) அது நமக்கு சரியாகத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: இயேசுவும் மரியாளும் அந்தத் தம்பதிக்கு உதவி செய்யவே விரும்பினார்கள். அதனால், இயேசு தம் முதல் அற்புதத்தை செய்தார். சுமார் 380 லிட்டர் தண்ணீரை ‘தரமான திராட்சமதுவாக’ மாற்றினார். (யோவான் 2:3, 6-11-ஐ வாசியுங்கள்.) இயேசு இந்த அற்புதத்தை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், அவர் ஏன் அதை செய்தார்? ஏனென்றால், அவருக்கு மக்கள்மீது அக்கறை இருந்தது. அதோடு, தம்முடைய அப்பாவைப் போலவே அவருக்கும் தாராள குணம் இருந்தது. அதனால்தான் அவர் அந்த அற்புதத்தை செய்தார்.

4, 5. (அ) இயேசுவின் முதல் அற்புதத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) இந்த அற்புதத்திலிருந்து எதிர்காலத்தைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

4 அந்தக் கல்யாண விருந்திற்கு நிறையப் பேர் வந்திருக்கலாம். இயேசு அவர்கள் எல்லாருக்கும் போதுமான அளவு திராட்சமதுவைக் கொடுத்தார். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? யெகோவாவும் இயேசுவும் கஞ்சத்தனமானவர்கள் இல்லை, தாராள குணமுள்ளவர்கள். அவர்கள் மனிதர்களுடைய உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல், பூஞ்சோலை பூமியில் நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, யெகோவா தம் சக்தியைப் பயன்படுத்தி எல்லாருக்கும் ஏராளமான உணவைக் கொடுப்பார்.ஏசாயா 25:6-ஐ வாசியுங்கள்.

5 சீக்கிரத்தில், நம் ஒவ்வொருவருக்கும் தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுக்கப்போகிறார். அப்போது, எல்லாருக்கும் நல்ல வீடு இருக்கும், சாப்பிடுவதற்கு சத்தான உணவு கிடைக்கும். பூஞ்சோலை பூமியில் நாம் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களைக் கற்பனை செய்து பார்க்கும்போது நம் இருதயத்தில் நன்றி பொங்குகிறது இல்லையா!

மற்றவர்களுக்காக நம் நேரத்தை தாராளமாகப் பயன்படுத்தும்போது நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம் (பாரா 6)

6. இயேசு தம் சக்தியை எப்படிப் பயன்படுத்தினார், அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

6 இயேசு தம் சக்தியை ஒருநாளும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தவில்லை. உதாரணத்திற்கு, கற்களை ரொட்டிகளாக மாற்றும்படி பிசாசு சொன்னபோது இயேசு அதை செய்ய மறுத்துவிட்டார். (மத். 4:2-4) மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே இயேசு தம் சக்தியைப் பயன்படுத்தினார்; தனக்காக ஒருபோதும் பயன்படுத்தவில்லை. நாம் எப்படி இயேசுவைப் போல் சுயநலமில்லாமல் நடந்துகொள்ளலாம்? “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 6:38) ஒருவேளை, மற்றவர்களை உணவிற்காக நம் வீட்டிற்கு அழைக்கலாம். கூட்டம் முடிந்த பிறகு, மற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யலாம். உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் தான் தயாரித்த பேச்சை உங்களிடம் சொல்லிக்காட்ட ஆசைப்பட்டால் அதை நீங்கள் கவனித்துக் கேட்கலாம். ஊழியத்தில் முன்னேற மற்றவர்களுக்கு நடைமுறையான உதவியையும் பயிற்சியையும் கொடுக்கலாம். நம்மால் முடிந்த போதெல்லாம் மற்றவர்களுக்கு இப்படி ஆர்வமாக உதவி செய்யும்போது நாம் இயேசுவைப் போலவே தாராள குணத்தைக் காட்டுகிறோம் என்று சொல்லலாம்.

“அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்”

7. சாத்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்யும்வரை என்ன பிரச்சினை இருக்கும்?

7 அன்று முதல் இன்று வரை வறுமை எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. “தேசத்தில் எப்போதுமே ஏழைகள் இருப்பார்கள்” என்று யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். (உபா. 15:11, NW) பல நூறு வருடங்களுக்குப் பிறகு இயேசுவும், “ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்” என்று சொன்னார். (மத். 26:11) அப்படியென்றால் இந்தப் பூமியில், எப்போதுமே ஏழைகள் இருப்பார்கள் என்று இயேசு சொன்னாரா? இல்லை. நாம் சாத்தானுடைய உலகத்தில் வாழும் வரை ஏழைகள் நிச்சயம் இருப்பார்கள் என்றே சொன்னார். ஆனால், பூஞ்சோலை பூமியில் யாருமே வறுமையில் கஷ்டப்பட மாட்டார்கள். அங்கே ஏராளமான உணவு கிடைக்கும்; எல்லாரும் திருப்தியாக சாப்பிடுவார்கள். அப்போது வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

8, 9. (அ) இயேசு ஏன் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தார்? (ஆ) இந்த அற்புதத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

8 “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்” என்று யெகோவாவைப் பற்றி சங்கீதக்காரன் சொன்னார். (சங். 145:16) இயேசு பூமியில் இருந்தபோது தம் அப்பாவை அச்சுப்பிசகாமல் அப்படியே பின்பற்றினார். மற்றவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவி செய்தார். தமக்கு சக்தி இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவா அப்படி செய்தார்? இல்லை. மக்கள்மீது அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்ததால்தான் அப்படி செய்தார். இதைப் பற்றி மத்தேயு 14:14-21-ல் பார்க்கலாம். (வாசியுங்கள்.) மற்ற நகரங்களில் இருந்த மக்கள், இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டதால் அவரைப் பார்க்க நடந்தே வந்தார்கள். (மத். 14:13) சாயங்காலமானபோது அவர்கள் பசியாக இருந்தார்கள், சாப்பிடுவதற்குக்கூட எதுவும் இல்லை. அதனால், சீடர்கள் இயேசுவிடம் வந்து கூட்டத்தாரை அனுப்பிவிடும்படி சொன்னார்கள். அப்போது, இயேசு என்ன செய்தார்?

9 இயேசு 5 ரொட்டிகளையும் 2 மீன்களையும் வைத்து சுமார் 5,000 ஆண்களுக்கு உணவளித்தார். இவர்களைத் தவிர பெண்களும் சிறுபிள்ளைகளும் சாப்பிட்டார்கள். இந்த அற்புதத்தை செய்ய இயேசுவை எது தூண்டியது? மக்கள்மீது இருந்த அன்பும் அக்கறையும்தான்! அங்கு வந்திருந்த எல்லாரும் ‘திருப்தியாகச் சாப்பிடும்’ அளவுக்கு ஏராளமான உணவு இருந்தது. மீதமான ரொட்டித் துண்டுகளை சீடர்கள் 12 கூடைகள் நிறைய சேகரித்தார்கள்! மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்ல ரொம்ப தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் எல்லாரும் வயிறார சாப்பிட்டதால்தான் திரும்பி செல்வதற்குத் தேவையான தெம்பு அவர்களுக்குக் கிடைத்தது.—லூக். 9:10-17.

10. வறுமையை என்ன செய்யப் போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்?

10 இந்த உலகத்தில் பேராசைப்பிடித்த, ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் இருப்பதால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். சில சமயங்களில், நம்முடைய சகோதரர்களுக்கும் போதுமான உணவு கிடைப்பதில்லை. ஆனால் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற மக்கள், சீக்கிரத்தில் வறுமை இல்லாத, ஊழல் இல்லாத காலத்தில் வாழ்வார்கள். யெகோவா சர்வ சக்தி படைத்தவர். மனிதர்களுடைய எல்லா தேவைகளையும் அவர் திருப்தி செய்வார். அப்படி செய்வதற்கான ஆசையும் அவருக்கு இருக்கிறது. சீக்கிரத்தில், துன்பத்திற்கு எல்லாம் முடிவுகட்டப் போவதாக யெகோவாவே வாக்குக் கொடுத்திருக்கிறார்.வெளிப்படுத்துதல் 7:16-ஐ வாசியுங்கள்.

11. சீக்கிரத்தில் கிறிஸ்து தம் சக்தியை நம் எல்லாருக்காகவும் பயன்படுத்துவார் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்? அதனால் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

11 இயேசு பூமியில் இருந்தபோது, ஒரு சிறிய பகுதியில்தான் அற்புதங்களை செய்தார். அதுவும், மூன்றரை வருடங்களுக்குத்தான் செய்தார். (மத். 15:24) ஆனால் சீக்கிரத்தில், இயேசு இந்த முழு பூமியையும் 1,000 வருடங்களுக்கு ஆட்சி செய்வார். (சங். 72:8) அப்போது, மக்கள் எல்லாருக்கும் நல்லது செய்வதற்காக தம் சக்தியைப் பயன்படுத்துவார். இதற்கு அவர் செய்த அற்புதங்களே அத்தாட்சி! அற்புதங்கள் செய்வதற்கான சக்தி நமக்கு இன்று இல்லை. இருந்தாலும், பைபிளில் சொல்லப்பட்டு இருக்கும் அருமையான எதிர்காலத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு நம் நேரத்தையும் சக்தியையும் நம்மால் பயன்படுத்த முடியும். சொல்லப்போனால், இது நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கிறது! (ரோ. 1:14, 15) அப்படியென்றால், கிறிஸ்து செய்யப்போகும் காரியங்களைப் பற்றி நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், அதைப் பற்றி மற்றவர்களிடம் ஆர்வமாகச் சொல்வோம்.—சங். 45:1; 49:3.

இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை

12. பூமியின் சுற்றுச்சூழலைப் பற்றி இயேசு அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கிறார் என்று எப்படி சொல்ல முடியும்?

12 யெகோவா இந்தப் பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் படைத்தபோது, இயேசு ‘அவர் அருகே கைதேர்ந்த வேலையாளாய்’ (NW) இருந்தார். (நீதி. 8:22, 30, 31; கொலோ. 1:15-17) அதனால், இந்தப் பூமியின் சுற்றுச்சூழலைப் பற்றி அவர் அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கிறார். அதோடு, பூமியின் வளங்களை சிறப்பாக பயன்படுத்தவும், இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தவும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.

இயேசு செய்த அற்புதங்களைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? (பாராக்கள் 13, 14)

13, 14. இயற்கை சக்தியைக் கட்டுப்படுத்தும் வல்லமை இயேசுவுக்கு இருக்கிறது என்று எப்படி சொல்வீர்கள்?

13 இயேசு பூமியில் இருந்தபோது இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் தமக்கு கடவுளுடைய வல்லமை இருந்தது என்பதை நிரூபித்துக் காட்டினார். உதாரணத்திற்கு, புயல்காற்றை இயேசு எப்படி அடக்கினார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். (மாற்கு 4:37-39-ஐ வாசியுங்கள்.) அந்தப் புயல்காற்றைப் பற்றி ஒரு பைபிள் அறிஞர் இப்படி சொல்கிறார்: ‘மாற்கு புத்தகத்தில் சொல்லியிருக்கும் “புயல்காற்று” என்ற கிரேக்க வார்த்தைக்கு, பலத்த சுழல்காற்று அல்லது சூறாவளி என்று அர்த்தம். இந்த மாதிரி ஒரு சூறாவளி ஏற்படும்போது, கருமேகங்கள் திரண்டு வரும், காற்று வேகமாக வீசும், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். சூறாவளிக்குப் பிறகு பெரும் சேதம் ஏற்படும், சொல்லப்போனால் அந்த இடமே தலைகீழாக மாறிவிடும்.’

14 இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: பலத்த புயல்காற்று வீசுகிறது. பெரிய அலைகள் எழும்பி படகை மோதிக்கொண்டிருக்கிறது. கடல் கொந்தளிப்பதால் படகு அலைக்கழிக்கப்படுகிறது. அப்போது படகு தண்ணீரால் நிரம்புகிறது. ஆனால், படகின் பின்புறத்தில் இயேசு நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கிறார். அவர் அந்தளவு களைப்பாக இருந்ததால்தான் சூறாவளியின் சத்தமும் அவர் காதில் விழவில்லை, அலைகளில் படகு சிக்கி தத்தளித்ததும் அவருக்குத் தெரியவில்லை. சீடர்கள் பயந்து போய் இயேசுவை எழுப்பி, “எஜமானே, எங்களைக் காப்பாற்றுங்கள், சாகப்போகிறோம்!” என்று அலறினார்கள். (மத். 8:25) அப்போது இயேசு எழுந்து, “காற்றை அதட்டினார்; கடலை நோக்கி, ‘உஷ்! அமைதியாக இரு!’” என்றார். (மாற். 4:39) அந்தப் புயல்காற்று அடங்கியதற்குப் பிறகு “மிகுந்த அமைதி உண்டானது.” இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு இயேசுவுக்கு இருக்கும் வல்லமையைப் பார்த்தீர்களா!

15. இயற்கை சக்திகளைத் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதை யெகோவா எப்படிக் காட்டியிருக்கிறார்?

15 யெகோவாதான் இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தும் வல்லமையை இயேசுவுக்கு கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், சர்வ சக்தி படைத்த யெகோவா தேவனால் நிச்சயம் இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணத்திற்கு, பெருவெள்ளம் வருவதற்கு முன்பு நோவாவிடம் யெகோவா, ‘இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணுவேன்’ என்று சொன்னார். (ஆதி. 7:4) அதேபோல் யாத்திராகமம் 14:21-ல், ‘கர்த்தர் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார்’ என்று வாசிக்கிறோம். அதோடு யோனா 1:4-ல், “கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று” என்றும் வாசிக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும்போது, புதிய உலகத்தில் யெகோவா இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்துவார் என்பதில் நிச்சயமாக இருக்கலாம்.

16. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு ஏன் ஆறுதலாக இருக்கிறது?

16 யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கிறிஸ்துவின் 1,000 வருட ஆட்சியில், பூமியில் வாழப் போகும் எல்லாரும் பாதுகாப்பாக இருப்பார்கள். அப்போது சுனாமி, எரிமலை, புயல்காற்று, பூமியதிர்ச்சி போன்ற இயற்கை பேரழிவுகளினால் யாரும் பாதிக்கப்படவும் மாட்டார்கள், இறந்துபோகவும் மாட்டார்கள். நாம் எந்தப் பேரழிவை பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால், “கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும்.” (வெளி. 21:3, 4) அதனால், 1,000 வருட ஆட்சியில் இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தும் வல்லமையை யெகோவா இயேசுவுக்குக் கொடுப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றுங்கள்

17. யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றுவதற்கு ஒரு வழி என்ன?

17 இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்கும் சக்தி யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் மட்டும்தான் இருக்கிறது, நமக்கு இல்லை. இருந்தாலும், ஒரு விஷயத்தை நம்மால் செய்ய முடியும். அது நீதிமொழிகள் 3:27-ல் இருக்கிறது. (வாசியுங்கள்.) பேரழிவுகளினால் நம் சகோதர சகோதரிகள் பாதிக்கப்படும்போது அவர்களுக்குத் தேவையான நடைமுறை உதவிகளை நம்மால் செய்ய முடியும், அவர்களுக்கு ஆறுதலையும் அளிக்க முடியும். (நீதி. 17:17) உதாரணத்திற்கு, கணவனை இழந்த ஒரு சகோதரியின் வீடு சூறாவளியில் சேதமடைந்தது. அவர் இப்படி சொன்னார்: ‘யெகோவாவோட அமைப்பில இருக்கிறதுக்காக நான் ரொம்ப நன்றியுள்ளவளா இருக்கேன். எனக்கு தேவையான எல்லா உதவிகளையும் சகோதரர்கள் செஞ்சாங்க.’ அதேபோல், கல்யாணமாகாத ஒரு சகோதரியின் வீடும் புயல்காற்றினால் சேதமடைந்தது. அதனால், அவர் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தார். அந்த சமயத்தில், நம் சகோதரர்கள் அவருடைய வீட்டை சரிசெய்து கொடுத்தார்கள். அதைப் பற்றி அந்த சகோதரி இப்படி சொன்னார்: ‘எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்ததுனு வார்த்தைகளால விவரிக்கவே முடியாது. யெகோவாவுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.’ மற்றவர்களுடைய தேவைகளை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொள்ளும் நம் சகோதர சகோதரிகளுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவும் இயேசுவும் நம்மை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கு நாம் இன்னும் எந்தளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

18. இயேசு என்ன காரணத்திற்காக அற்புதங்கள் செய்தார், இதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

18 இயேசு, “கடவுளுடைய வல்லமையாக” இருக்கிறார் என்பதை அவர் ஊழியம் செய்த காலமெல்லாம் நிரூபித்துக் காட்டினார். ஆனால், அவருடைய வல்லமையை ஒருபோதும் சுயநலத்திற்காகவோ மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காகவோ பயன்படுத்தவில்லை. மக்களை அவர் அதிகமாக நேசித்ததால் அற்புதங்கள் செய்வதற்காகவே தம்முடைய சக்தியைப் பயன்படுத்தினார். அடுத்த கட்டுரையில் இதைப் பற்றி இன்னும் அதிகமாகப் பார்ப்போம்.