Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | கவலைகளை சமாளிக்க...

எங்கும் கவலை! எல்லாருக்கும் கவலை!!

எங்கும் கவலை! எல்லாருக்கும் கவலை!!

“சாப்பாடு வாங்க கடைக்கு போனா, பிஸ்கட்தான் இருந்தது. அதுவும், வாங்க முடியாத விலையில இருந்தது! அடுத்த நாள் அந்த கடையில அதுகூட இல்ல.”—பால், ஜிம்பாப்வே.

“என் வீட்டுக்காரர் என்கிட்ட வந்து, ‘உன்னையும் பிள்ளைங்களையும் விட்டுட்டு போறேன்’னு சொன்னார். இப்போ நான் என்ன பண்ணுவேன்?! என் பிள்ளைங்க வாழ்க்கை என்ன ஆகும்?”—ஜானட், அமெரிக்கா.

“சைரன் சத்தம் (எச்சரிப்பு சத்தம்) கேட்டதும் பாதுகாப்பான இடத்துக்கு ஓடிப்போவேன். குண்டு வெடிக்கும்போது அப்படியே தரையில படுத்துக்குவேன். ரொம்ப நேரத்துக்கு அப்புறமும் என் கையெல்லாம் நடுங்கிட்டே இருக்கும்.”—அலோனா, இஸ்ரேல்.

‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1) பணக் கஷ்டம், கணவன்-மனைவி பிரிந்து வாழ்வது, போர், உயிரைக் குடிக்கும் நோய்கள், பேரழிவுகள் எனப் பல பிரச்சினைகளால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அது போதாதென்று, சொந்த பிரச்சினைகள் வேறு. ‘என் உடம்புல இருக்கிற கட்டி, கேன்சர் கட்டியா இருக்குமோ?’ ‘என்னோட பேரப் பிள்ளைங்க வளர்ந்து ஆளாகும்போது இந்த உலக நிலைமை எப்படி இருக்குமோ?’ என்றெல்லாம் நினைத்து நிறையப் பேர் கவலைப்படுகிறார்கள்.

சில விஷயங்களுக்காக நாம் கவலைப்படுவது சகஜம்தான். உதாரணத்துக்கு, பரீட்சையின்போது, போட்டிகளில் கலந்துகொள்ளும்போது, வேலைக்காக ‘இன்டர்வியூவுக்கு’ போகும்போது நமக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கும். அதுமட்டுமல்ல, ஆபத்தில் சிக்கிக்கொள்ள கூடாது என்ற பயமும் நல்லதுதான்; அது நம்மை பாதுகாக்கும். ஆனால், ஒரு விஷயத்தை நினைத்து எப்போதும் கவலைப்படுவது அல்லது அளவுக்கு அதிகமாக கவலைப்படுவது ரொம்பவே ஆபத்தானது. 68,000-க்கும் அதிகமான ஆட்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில், சின்ன விஷயத்திற்குக்கூட சதா கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால் ஆயுசு குறையும் ஆபத்து இருப்பது தெரியவந்தது. “கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன் ஆயுளோடு ஒரு நொடியைக் கூட்ட முடியுமா?” என்று இயேசு சொன்னது எவ்வளவு உண்மை! அதனால்தான், “கவலைப்படுவதை நிறுத்துங்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:25, 27) ஆனால் கவலைப்படாமல் இருக்க முடியுமா?

முடியும்! அதற்கு நாம் ஞானமாக நடக்க வேண்டும், கடவுள்மீது உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும், சீக்கிரத்தில் உலக நிலைமைகள் மாறும் என்று நம்ப வேண்டும். ஒருவேளை இன்று நமக்கு அந்தளவு பிரச்சினைகள் இல்லையென்றாலும் எப்போது வேண்டுமானாலும் நிலைமை மாறலாம். ஆரம்பத்தில் பார்த்த பால், ஜானட், அலோனாவுக்கு இந்த மூன்று விஷயங்கள் எப்படி உதவியது என்று பார்க்கலாம். (w15-E 07/01)