Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆன்மீக பூஞ்சோலைக்கு அழகு சேர்ப்போம்!

ஆன்மீக பூஞ்சோலைக்கு அழகு சேர்ப்போம்!

“என் பாதஸ்தானத்தை [பாதம் இருக்கிற இடத்தை] மகிமைப்படுத்துவேன்.”—ஏசா. 60:13.

பாடல்கள்: 102, 75

1, 2. எபிரெய வேதாகமத்தில் “பாதபடி” என்ற வார்த்தை எதையெல்லாம் அர்த்தப்படுத்தலாம்?

ஏசாயா 66:1-ல், “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி” என்று யெகோவா சொன்னார். இன்னொரு இடத்தில், அவர் தம் ‘பாதபடியை’ பற்றி சொல்லும்போது, “என் பாதஸ்தானத்தை [பாதம் இருக்கிற இடத்தை] மகிமைப்படுத்துவேன்” என்று சொன்னார். (ஏசா. 60:13) யெகோவா எப்படித் தம் பாதபடியை மகிமைப்படுத்துவார், அதாவது அழகுபடுத்துவார்? அந்தப் பாதபடியில் வாழ்பவர்கள், அதாவது பூமியில் வாழ்பவர்கள், என்ன செய்ய வேண்டும்?

2 பூர்வ இஸ்ரவேலில் இருந்த கடவுளுடைய ஆலயத்தைப் பற்றி சொல்வதற்காகவும் “பாதபடி” என்ற வார்த்தை எபிரெய வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. (1 நா. 28:2; சங். 132:7) அந்த ஆலயம், உண்மை வணக்கத்தின் முக்கிய இடமாக இருந்ததால் அது யெகோவாவுடைய பார்வையில் ரொம்ப அழகாக இருந்தது. அது பூமியில் அவருக்குப் புகழ் சேர்த்தது.

3. எது இன்று உண்மை வணக்கத்தின் முக்கிய இடமாக இருக்கிறது? இந்த ஆலயம் எப்போது செயல்பட ஆரம்பித்தது?

3 அன்று இருந்த எருசலேம் ஆலயத்தைப் போன்ற ஒரு பெரிய ஆலயம் இன்று இல்லை. அதற்குப் பதிலாக ‘ஆன்மீக ஆலயம்’ இருக்கிறது. இதுதான், இன்று உண்மை வணக்கத்தின் முக்கிய இடம்! ஆன்மீக ஆலயம் என்றால் என்ன? மனிதர்கள் தம்மை வணங்குவதற்கும் தம்முடைய நண்பர்களாக ஆவதற்கும் யெகோவா செய்த ஏற்பாடுதான் ‘ஆன்மீக ஆலயம்!’ இயேசு அவருடைய உயிரை மீட்பு பலியாகக் கொடுத்ததால்தான் இந்த ஏற்பாட்டை செய்ய முடிந்தது. கி.பி. 29-ஆம் வருடத்தில் இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், ஆன்மீக ஆலயத்தின் தலைமை குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல், இந்த ஆலயம் செயல்பட ஆரம்பித்தது. (எபி. 9:11, 12) வேறு எந்த ஆலயத்தையும்விட இந்த ஆன்மீக ஆலயம்தான் யெகோவாவுக்கு அதிக புகழ் சேர்க்கிறது.

4, 5. (அ) சங்கீதம் 99-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டு இருப்பது போல் யெகோவாவின் மக்கள் எதை செய்ய விரும்புகிறார்கள்? (ஆ) நாம் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

4 உண்மை வணக்கத்துக்காக கடவுள் செய்திருக்கும் இந்த ஏற்பாட்டுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். யெகோவாவின் பெயரைப் பற்றியும் அவர் கொடுத்திருக்கும் மீட்புபலி என்ற பரிசைப் பற்றியும் எல்லாரிடமும் சொல்வதன் மூலம் நம் நன்றியை காட்டுகிறோம். இப்படி, பூமியில் இருக்கிற சுமார் 80 லட்ச உண்மை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் யெகோவாவைப் புகழ்கிறார்கள். இதைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! இறந்து பரலோகத்துக்குப் போன பிறகுதான் கடவுளைப் புகழ முடியும் என்று மற்ற மதத்தில் இருக்கும் நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால் யெகோவாவின் மக்கள் இன்றே, இந்தப் பூமியிலேயே அவரைப் புகழ விரும்புகிறார்கள்! அப்படிப் புகழ்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

5 சங்கீதம் 99:1-3, 5-7-ல் சொல்லப்பட்டு இருக்கும் உண்மை ஊழியர்களைப் போலவே நாமும் இருக்கிறோம். (வாசியுங்கள்.) யெகோவாவை வணங்குவதற்காக செய்யப்பட்டு இருந்த ஏற்பாட்டை மோசே, ஆரோன், சாமுவேல் போன்றவர்கள் முழு மனதோடு ஆதரித்தார்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவோடு பரலோகத்தில் குருமார்களாக சேவை செய்யப் போகிறார்கள். ஆனால் இன்றே, அவர்கள் ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய முற்றத்தில் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிறார்கள். லட்சக்கணக்கான “வேறே ஆடுகளும்” அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். (யோவா. 10:16) இந்த இரண்டு தொகுதிகளில் இருப்பவர்களும் யெகோவாவை ஒற்றுமையாக வணங்குகிறார்கள். அப்படியென்றால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘உண்மை வணக்கத்துக்காக யெகோவா செஞ்சிருக்கிற ஏற்பாட்டுக்கு நான் முழு ஆதரவு காட்டுறேனா?’

ஆன்மீக ஆலயத்தில் சேவை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்

6, 7. கிறிஸ்தவ சபை ஆரம்பமான கொஞ்ச காலத்தில் என்ன நடந்தது, 1919-ல் என்ன நடந்தது?

6 கிறிஸ்தவ சபை ஆரம்பமாகி கிட்டத்தட்ட 100 வருடங்களுக்குள் விசுவாசதுரோகம் தலைதூக்கியது. (அப். 20:28-30; 2 தெ. 2:3, 4) அதனால், உண்மை கிறிஸ்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. பல நூறு வருடங்களுக்குப் பிறகு, ஆன்மீக ஆலயத்தில் யாரெல்லாம் அவரை உண்மையோடு வணங்குகிறார்கள் என்பதை இயேசுவைப் பயன்படுத்தி யெகோவா அடையாளம் கண்டுகொண்டார்.

7 யெகோவா யாரை ஏற்றுக்கொண்டார்... அவருடைய ஆன்மீக ஆலயத்தில் யாரெல்லாம் அவருக்கு சேவை செய்கிறார்கள்... என்பது 1919-ல் தெளிவாகத் தெரிய வந்தது. யெகோவா விரும்பும் விதத்தில் அவரை வணங்க வேண்டும் என்பதற்காக இவர்கள் எல்லாரும் நிறைய மாற்றங்களை செய்திருந்தார்கள். (ஏசா. 4:2, 3; மல். 3:1-4) அப்போதுமுதல், அப்போஸ்தலன் பவுல் பல நூறு வருடங்களுக்கு முன் பார்த்த தரிசனம் நிறைவேற ஆரம்பித்தது.

8, 9. தரிசனத்தில் பவுல் பார்த்த “பூஞ்சோலை” எதைக் குறிக்கிறது?

8 தான் பார்த்த தரிசனத்தை 2 கொரிந்தியர் 12:1-4-ல் பவுல் பதிவு செய்திருக்கிறார். (வாசியுங்கள்.) அந்தத் தரிசனத்தில், எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களை யெகோவா பவுலுக்குக் காட்டினார். அதில் வரும் “பூஞ்சோலை” எதைக் குறிக்கிறது? அது, மூன்று விஷயங்களைக் குறிக்கலாம். ஒன்று, எதிர்காலத்தில் வரப்போகும் பூஞ்சோலை பூமியை அது குறிக்கலாம். (லூக். 23:43) இரண்டு, புதிய உலகத்தில் நாம் அனுபவிக்கப்போகும் முழுமையான ஆன்மீக பூஞ்சோலையைக் குறிக்கலாம். மூன்று, பரலோகத்தில் ‘கடவுளுடைய பூஞ்சோலையில்’ இருக்கிற அருமையான சூழ்நிலையைக் குறிக்கலாம்.—வெளி. 2:7.

9 ‘எந்த மனிதனும் உச்சரிக்கவோ பேசவோ கூடாத வார்த்தைகளைக் கேட்டேன்’ என்று பவுல் ஏன் சொன்னார்? ஏனென்றால், அந்தத் தரிசனத்தில் பார்த்த அருமையான விஷயங்களை விவரமாக விளக்குவதற்கான நேரம் அப்போது அவருக்கு வரவில்லை. ஆனால் இன்று, நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல யெகோவா நம்மை அனுமதித்திருக்கிறார்!

10. ஆன்மீக பூஞ்சோலையும் ஆன்மீக ஆலயமும் ஏன் ஒன்றல்ல?

10 ஆன்மீக பூஞ்சோலையைப் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால், ‘ஆன்மீக பூஞ்சோலை’ என்றால் என்ன? யெகோவாவை உண்மையோடு வணங்குபவர்கள் மத்தியில் இருக்கும் சமாதானமான சூழ்நிலைதான் ஆன்மீக பூஞ்சோலை. இந்த ஆன்மீக பூஞ்சோலையும் ஆன்மீக ஆலயமும் ஒன்றுதானா? இல்லை! ஏனென்றால், தம்மை உண்மையோடு வணங்குவதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுதான் ஆன்மீக ஆலயம். இந்த ஆன்மீக ஆலயத்தில் யாரெல்லாம் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிறார்கள்... அவர் யாரை எல்லாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்... என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள ஆன்மீக பூஞ்சோலை உதவுகிறது.—மல். 3:18.

11. இன்று நமக்கு என்ன பாக்கியம் இருக்கிறது?

11 யெகோவா 1919-லிருந்து தவறு செய்யும் இயல்புள்ள மனிதர்களைப் பயன்படுத்தி ஆன்மீக பூஞ்சோலையைப் பராமரிக்கிறார், பலப்படுத்துகிறார், விரிவாக்குகிறார். இந்த அருமையான வேலையை செய்ய நீங்கள் உதவுகிறீர்களா? யெகோவாவோடு சேர்ந்து இந்த வேலை செய்வதை... இப்படிப் பூமியில் அவருக்குப் புகழ் சேர்ப்பதை... நீங்கள் பாக்கியமாக நினைக்கிறீர்களா?

யெகோவா தம் அமைப்பை இன்னும் அழகாக்குகிறார்

12. ஏசாயா 60:17-ன் நிறைவேற்றத்தைப் பார்க்கும்போது நாம் எந்த விஷயத்தில் உறுதியாக இருக்கலாம்? (ஆரம்பப் படம்)

12 யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தில் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார். (ஏசாயா 60:17-ஐ வாசியுங்கள்.) புதியவர்களும் இளம் கிறிஸ்தவர்களும் இந்த மாற்றங்களைப் பற்றி எல்லாம் வாசித்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், நம் சகோதர சகோதரிகளில் நிறைய பேர் இந்த அருமையான மாற்றங்களை எல்லாம் நேரடியாக பார்த்திருக்கிறார்கள்! ராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருக்கும் இயேசுவின் மூலம்தான் யெகோவா தம் அமைப்பை வழிநடத்தி வருகிறார் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இவர்களுடைய அனுபவங்களை நாம் கேட்கும்போது, யெகோவாமீது நமக்கு இருக்கும் விசுவாசமும் நம்பிக்கையும் பலப்படும்.

13. சங்கீதம் 48:12-14-ல் சொல்லியிருப்பது போல் நாம் என்ன செய்ய வேண்டும்?

13 உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லோரும் யெகோவாவுடைய அமைப்பைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். உலகம் முழுவதும் இருக்கிற நம் சகோதர சகோதரிகள், சாத்தானுடைய இந்த உலகத்தில் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்! கடவுளுடைய அமைப்பைப் பற்றியும் ஆன்மீக பூஞ்சோலையைப் பற்றியும் “பின்வரும் சந்ததிக்கு” நாம் சந்தோஷமாக சொல்ல வேண்டும்.சங்கீதம் 48:12-14-ஐ வாசியுங்கள்.

14, 15. என்னென்ன மாற்றங்கள் 1970-க்கு பிறகு நடந்தன? அதனால் நம் அமைப்பு எப்படி நன்மை அடைந்திருக்கிறது?

14 நம் சபைகளில் இருக்கும் வயதான சகோதர சகோதரிகள் நிறைய பேர் நம் அமைப்பில் நடந்த மாற்றங்களை நேரடியாகப் பார்த்திருக்கிறார்கள். முன்பெல்லாம், மூப்பர் குழுவுக்குப் பதிலாக சபை ஊழியர் இருந்தார். கிளை அலுவலகக் குழுவுக்குப் பதிலாக கிளை அலுவலக ஊழியர் இருந்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவுக்குப் பதிலாக உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவர் வழிநடத்தி வந்தார். இந்த சகோதரர்களுக்கு உதவி செய்ய உண்மையுள்ள ஊழியர்கள் இருந்தாலும், உலக தலைமையகத்திலும் கிளை அலுவலகங்களிலும் சபைகளிலும் தீர்மானம் எடுப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் மட்டுமே இருந்தது. ஆனால் 1970-க்கு பிறகு, ஒருவர் தீர்மானம் எடுப்பதற்குப் பதிலாக மூப்பர்கள் ஒரு குழுவாக தீர்மானம் எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்திற்கு அழகுக்கு மேல் அழகு சேர்த்திருக்கிறது!

15 இந்த மாதிரியான மாற்றங்களினால் நம் அமைப்பு நன்மை அடைந்திருக்கிறது. ஏனென்றால், இந்த மாற்றங்கள் எல்லாம் பைபிள் வசனங்களின் அடிப்படையில் செய்யப்பட்டன. அதனால் இப்போது, எல்லா தீர்மானங்களையும் ஒருவரே எடுப்பதற்குப் பதிலாக மூப்பர்கள் எல்லாரும் சேர்ந்து தீர்மானம் எடுக்கிறார்கள். மூப்பர்கள் எல்லாரும் யெகோவா தந்த ‘பரிசுகள்.’ இவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிற நல்ல குணங்கள் நம் அமைப்புக்குப் பிரயோஜனமாக இருக்கிறது.—எபே. 4:8; நீதி. 24:6.

மக்களுக்குத் தேவையான ஆலோசனையை யெகோவா எல்லா இடங்களிலும் கொடுக்கிறார் (பாராக்கள் 16, 17)

16, 17. சமீபத்தில் நடந்த என்ன மாற்றங்கள் உங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, ஏன்?

16 நம் பிரசுரங்களில் வந்திருக்கும் மாற்றங்களைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மக்களுக்குப் பிரயோஜனமான இந்த அழகான பிரசுரங்களை ஊழியத்தில் கொடுப்பது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அதோடு, நற்செய்தியைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதற்காக, நாம் புதுப்புது தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறோம். உதாரணத்துக்கு, jw.org வெப்சைட்டை இன்று நிறைய பேர் பார்க்கிறார்கள். பிரச்சினைகளில் தவித்துக்கொண்டு இருக்கும் மக்களுக்குத் தேவையான ஆலோசனைகள் அதில் இருக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, மக்கள்மீது யெகோவாவுக்கு எந்தளவு அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

17 நம் சபை கூட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதனால் குடும்ப வழிபாட்டுக்கும் தனிப்பட்ட பைபிள் படிப்புக்கும் நமக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. ஒவ்வொரு வருடமும் நம் மாநாடுகளிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். அதோடு, பைபிள் பள்ளிகள் மூலமாக நமக்குப் பயிற்சியும் கிடைக்கிறது. இந்த எல்லா மாற்றங்களுக்காகவும் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! யெகோவாதான் அவருடைய அமைப்பை வழிநடத்தி வருகிறார் என்பதையும் ஆன்மீக பூஞ்சோலையைத் தொடர்ந்து அழகுபடுத்துகிறார் என்பதையும் இந்த மாற்றங்கள் காட்டுகின்றன.

ஆன்மீக பூஞ்சோலையை அழகுபடுத்த நாம் என்ன செய்யலாம்?

18, 19. ஆன்மீக பூஞ்சோலையின் அழகுக்கு அழகு சேர்க்க நாம் என்ன செய்யலாம்?

18 ஆன்மீக பூஞ்சோலையின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாக்கியத்தை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் எப்படி அதை செய்யலாம்? நற்செய்தியை மற்றவர்களுக்கு சுறுசுறுப்பாக பிரசங்கிக்கலாம், அவர்களை இயேசுவின் சீடர்களாக ஆக்கலாம். ஒருவர் கடவுளுடைய ஊழியராக ஆவதற்கு நாம் உதவும்போது, ஆன்மீக பூஞ்சோலை செழிப்பாக வளர நாம் உதவுகிறோம்!—ஏசா. 26:15; 54:2.

19 கிறிஸ்தவ குணங்களை நாம் தொடர்ந்து வளர்க்கும்போது ஆன்மீக பூஞ்சோலையின் அழகுக்கு அழகு சேர்க்கிறோம். அப்போது இந்தப் பூஞ்சோலை மற்றவர்களுடைய கண்களுக்கு இன்னும் அழகாகத் தெரியும். நமக்கு எந்தளவு பைபிள் அறிவு இருக்கிறது என்பதைவிட நாம் எந்தளவு ஒழுக்கம் உள்ளவர்களாக, சமாதானம் உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதை வைத்துதான் மக்கள் முதலில் நம் அமைப்பிடமும், பிறகு, யெகோவாவிடமும் இயேசுவிடமும் கவர்ந்து இழுக்கப்படுவார்கள்.

ஆன்மீக பூஞ்சோலையை விரிவாக்க உங்களால் உதவ முடியும் (பாராக்கள் 18, 19)

20. நீதிமொழிகள் 14:35-ல் சொல்லப்பட்டு இருப்பது போல் நாம் என்ன செய்ய வேண்டும்?

20 நம் ஆன்மீக பூஞ்சோலையைப் பார்க்கும்போது யெகோவாவும் இயேசுவும் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்! அதை அழகுபடுத்துவதில் இன்று நமக்கு கிடைக்கும் சந்தோஷம் வெறும் ஒரு எடுத்துக்காட்டுதான். எதிர்காலத்தில், இந்த முழு பூமியும் ஒரு பூஞ்சோலையாக மாறுவதற்கு நாம் உழைக்கும்போது நமக்கு அளவில்லா சந்தோஷம் கிடைக்கும். நீதிமொழிகள் 14:35-ல் இருக்கும் இந்த வார்த்தைகளை நாம் எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்: “ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்.” அதாவது, விவேகமாக நடந்துகொள்ளும் ஊழியனைப் பார்த்து ராஜா சந்தோஷப்படுவார். அதனால், ஆன்மீக பூஞ்சோலையை அழகுபடுத்துவதில் விவேகத்தோடு நடப்போம், அதற்காகக் கடினமாக உழைப்போம்!