Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் அன்பை ஆழமாக யோசித்துப் பாருங்கள்

யெகோவாவின் அன்பை ஆழமாக யோசித்துப் பாருங்கள்

உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானிப்பேன்.’—சங். 77:12.

பாடல்கள்: 18, 61

1, 2. (அ) யெகோவாவுக்கு தம் மக்கள்மீது அன்பு இருக்கிறது என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்? (ஆ) கடவுள் நம்மை எப்படிப் படைத்திருக்கிறார்?

நம்மேல் யெகோவாவுக்கு அன்பு இருக்கிறது என்று எப்படி சொல்லலாம்? இந்த உதாரணங்களைக் கவனியுங்கள். டேலென் என்ற சகோதரி சோர்ந்து போகும்போதெல்லாம் சகோதர சகோதரிகள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். ‘செய்ய முடியாததை நினைச்சு அதிகமா கவலைப்பட வேண்டாம்’ என்று சொன்னார்கள். “யெகோவாவுக்கு என்மேல ரொம்ப அன்பு இருக்கிறனாலதான் அவர் எனக்கு எப்பவும் ஆலோசனை கொடுக்குறார்” என்று டேலென் சொல்கிறார். ப்ரிஜிட் என்ற சகோதரியின் கணவர் இறந்துவிட்டார். அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “சாத்தானோட இந்த உலகத்துல பிள்ளைங்கள வளர்க்கிறது ரொம்ப கஷ்டம். அதுவும் கணவன் இல்லாம வளர்க்கிறது ரொம்பவே கஷ்டம். ஆனா, பிரச்சனைகளை சமாளிக்க யெகோவா உதவி செய்றார். அவர் என்னை எப்போதும் வழிநடத்துறார். தாங்க முடியாத அளவுக்கு என்னை கஷ்டப்பட விட்டதே இல்ல.” (1 கொ. 10:13) சான்ட்ரா என்ற சகோதரிக்கு ஒரு தீராத வியாதி இருந்தது. ஒருசமயம், அவர் மாநாட்டுக்கு போயிருந்தபோது, ஒரு சகோதரி அவரிடம் அக்கறையாக நடந்துகொண்டதைப் பற்றி சான்ட்ராவின் கணவர் இப்படி சொல்கிறார்: “முன்னப்பின்ன தெரியாத அந்த சகோதரி எங்கமேல அன்பு காட்டுனத நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருந்தது. சகோதர சகோதரிகள் இப்படி அன்பா நடந்துக்கிறத பார்க்குறப்போ யெகோவாவுக்கு எங்கமேல எவ்ளோ அன்பு இருக்குனு புரிஞ்சிக்க முடியுது.”

2 மற்றவர்கள்மேல் நாம் அன்பு காட்டுகிறோம்; மற்றவர்களும் நம்மேல் அன்பு காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஏனென்றால், யெகோவா நம்மை அப்படித்தான் படைத்திருக்கிறார். சிலசமயம், பணப் பிரச்சினையோ நோயோ வரும்போது நாம் சோர்ந்துவிடலாம். ஊழியத்தில் நல்ல பலன் கிடைக்காமல் போகும்போது நாம் சோர்ந்துவிடலாம். ‘யெகோவாவுக்கு என்மேல அன்பே இல்ல’ என்றும் நினைக்கலாம். ஆனால், நாம் யெகோவாவுக்கு ஒரு பொக்கிஷம் போல் இருக்கிறோம்; நம் வலது கையைப் பிடித்து உதவி செய்ய அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் அவருக்கு உண்மையோடு இருந்தால் அவர் நம்மை ஒருபோதும் மறக்க மாட்டார்.—ஏசா. 41:13; 49:15.

3. யெகோவா நம்மேல் எப்போதும் அன்பு காட்டுகிறார் என்று எப்படி சொல்லலாம்?

3 கஷ்டம் வரும்போது யெகோவா அவர்களோடு இருந்ததாக இந்த சகோதர சகோதரிகள் உறுதியாக நம்பினார்கள். யெகோவா நம்மோடு இருப்பார் என்று நாமும் நம்பலாம். (சங். 118:6, 7) யெகோவா நம்மை எப்போதும் நேசிக்கிறார். அதனால் நமக்கு நிறைய பரிசுகள் கொடுத்திருக்கிறார். அதில் 4 பரிசுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்: (1) அவருடைய படைப்பு, (2) பைபிள், (3) ஜெபம், (4) மீட்கும் பலி. யெகோவா நமக்கு செய்திருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்தால் அவர் நம்மேல் எப்போதும் அன்பு காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு நன்றிகாட்டவும் முடியும்.சங்கீதம் 77:11, 12-ஐ வாசியுங்கள்.

யெகோவாவின் படைப்பு

4. யெகோவாவின் படைப்பிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

4 யெகோவாவுக்கு நம்மேல் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை அவருடைய படைப்புகளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். (ரோ. 1:20) நாம் வெறுமனே வாழ வேண்டும் என்பதற்காக அல்ல சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவே யெகோவா இந்தப் பூமியைப் படைத்திருக்கிறார். அதோடு, நாம் ரசித்து ருசித்து சாப்பிடுவதற்கு நிறைய உணவு வகைகளையும் கொடுத்திருக்கிறார். (பிர. 9:7) கனடாவை சேர்ந்த கேத்ரின் என்ற சகோதரிக்கு இயற்கையை ரசிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் கனடாவின் வசந்தக் காலத்தை ரசிக்க அவருக்கு ரொம்பவே பிடிக்கும். ‘யெகோவாவோட படைப்பை பார்க்க ரொம்ப பிரமிப்பா இருக்கு. அழகழகா பூக்கிற பூக்கள்... வித்தியாசமான இடங்கள்ல இருந்து வர்ற பறவைகள்... என் சமையல் அறைகிட்ட வர்ற சிட்டுகுருவிகள்... இதெல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. யெகோவாவுக்கு நம்மமேல நிறைய அன்பு இருக்கிறனாலதான் நாம சந்தோஷமா வாழணும்னு இதெல்லாம் படைச்சிருக்கார்’ என்று கேத்ரின் சொல்கிறார். யெகோவா அவர் படைத்த எல்லாவற்றையும் பார்த்து சந்தோஷப்படுகிறார். மனிதர்கள் அவருடைய படைப்பை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.—அப். 14:16, 17.

5. நாம் படைக்கப்பட்ட விதத்திலிருந்து யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்று எப்படி சொல்லலாம்?

5 நாம் திருப்தியாக வேலை செய்ய வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (பிர. 2:24) அவர் படைத்த மனிதர்களிடம் ஆரம்பத்தில் ஒரு கட்டளையைக் கொடுத்தார். பூமியை மனிதர்களால் நிரப்ப வேண்டும்... அதைப் பண்படுத்த வேண்டும்... மீன்கள், பறவைகள், பூமியில் வாழும் உயிரினங்கள் எல்லாவற்றையும் பராமரிக்க வேண்டும்... என்று சொன்னார். (ஆதி. 1:26-28) அதோடு, அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நல்ல நல்ல குணங்களோடு யெகோவா நம்மை படைத்திருக்கிறார்.—எபே. 5:1.

கடவுளுடைய வார்த்தை

6. யெகோவா நமக்கு பைபிளை கொடுத்ததற்காக நாம் ஏன் நன்றியோடு இருக்க வேண்டும்?

6 நம்மேல் அன்பு இருப்பதால்தான் யெகோவா நமக்கு பைபிளை கொடுத்திருக்கிறார். நாம் யெகோவாவைப் பற்றி பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதோடு, மனிதர்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது அவர் எப்படி உணர்ந்தார் என்று பைபிள் நமக்கு சொல்கிறது. “அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார். அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்” என்று சங்கீதம் 78:38 சொல்கிறது. இந்த வசனத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது யெகோவா உங்கள்மேல் எந்தளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். யெகோவாவுக்கு நீங்கள் ரொம்பவே முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்!1 பேதுரு 5:6, 7-ஐ வாசியுங்கள்.

7. பைபிள் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று ஏன் சொல்லலாம்?

7 பைபிள் நமக்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். ஏனென்றால், பைபிள் மூலமாகத்தான் யெகோவா நம்மோடு பேசுகிறார். ஒரு அப்பாவும் பிள்ளையும் மனம்விட்டு பேசும்போது அவர்களுக்குள் இருக்கும் அன்பு அதிகமாகும். ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் பலப்படும். யெகோவா நம் அன்பான அப்பாவாக இருந்து நம்மை வழிநடத்துகிறார், பாதுகாக்கிறார். அவரை நாம் பார்த்ததில்லை, அவர் பேசுவதைக் கேட்டதில்லை. இருந்தாலும், பைபிள் மூலமாக யெகோவா நம்மிடம் நேரடியாக பேசுகிறார். அதனால், அவர் பேசுவதை நாம் எப்போதும் கேட்க வேண்டும். (ஏசா. 30:20, 21) பைபிளை வாசிக்கும்போது அவரைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வோம், அவர்மேல் நம்பிக்கை வைப்போம்.சங்கீதம் 19:7-11; நீதிமொழிகள் 1:33-ஐ வாசியுங்கள்.

யோசபாத் செய்த தவறை யெகூ சுட்டிக்காட்டினாலும், யெகோவா அந்த ராஜாவிடம் உள்ள நல்லதைப் பார்த்தார் (பாராக்கள் 8, 9)

8, 9. நாம் எந்த விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்? ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்.

8 நம்மேல் யெகோவா நிறைய அன்பு வைத்திருக்கிறார். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நம்மிடம் இருக்கும் குறைகளை மட்டும் பார்க்காமல் நம்மிடம் இருக்கும் நல்லதையும் பார்க்கிறார். (2 நா. 16:9) இதற்கு ஒரு உதாரணத்தை கவனியுங்கள். யூதாவை ஆட்சி செய்த யோசபாத் ராஜா ஒரு தவறான தீர்மானம் எடுத்தார். கீலேயாத்திலுள்ள ராமோத்தில், சீரியர்களை எதிர்த்து சண்டைபோட இஸ்ரவேலின் ராஜா ஆகாபோடு சேர்ந்துகொண்டார். அவர்கள் போரில் ஜெயிப்பார்கள் என்று 400 பொய் தீர்க்கதரிசிகள் ஆகாபிடம் சொன்னார்கள். ஆனால், அவர்கள் போரில் ஜெயிக்க மாட்டார்கள் என்று யெகோவாவின் தீர்க்கதரிசி மிகாயா யோசபாத்திடமும் ஆகாபிடமும் சொன்னார். போரில் ஆகாப் இறந்துவிட்டார். ஆனால், யோசபாத் உயிர் தப்பினார். அவர் செய்த தவறை புரிய வைக்க யெகோவா யெகூவை அனுப்பினார். அவருடைய தவறை யெகூ சுட்டிக்காட்டினாலும், “நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது” என்று அவர் சொன்னார். (2 நா. 18:4, 5, 18-22, 33, 34; 19:1-3) யோசபாத்திடம் யெகோவா என்ன நல்ல விஷயத்தைப் பார்த்தார்?

9 பல வருடங்களுக்கு முன்பு, மக்கள் எல்லாரும் யெகோவாவின் சட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று யோசபாத் நினைத்தார். அதற்காக பிரபுக்கள், லேவியர்கள், ஆசாரியர்கள் எல்லாரையும் யூதாவில் இருந்த எல்லா நகரங்களுக்கும் அனுப்பினார். யெகோவாவின் சட்டத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க சொன்னார். இதனால் மற்ற நாடுகளில் இருந்தவர்களும் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டார்கள். (2 நா. 17:3-10) சீரியர்களோடு போர் செய்யும் விஷயத்தில் யோசபாத் ஒரு தவறான தீர்மானம் எடுத்தாலும் பல வருடங்களுக்கு முன்பு அவர் செய்த இந்த நல்ல விஷயத்தை யெகோவா மறக்கவில்லை. நாமும் சில நேரங்களில் தவறு செய்வதால் இந்த உதாரணத்தைப் படிப்பது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. யெகோவாவை சேவிக்க நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை செய்யும்போது, யெகோவா நம்மை எப்போதும் நேசிப்பார். நாம் செய்யும் நல்ல விஷயங்களை மறக்கவே மாட்டார்.

ஜெபம்

10, 11. (அ) ஜெபம் செய்வது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) நம் ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதிலளிக்கிறார்? (ஆரம்பப் படம்)

10 பிள்ளைகள் பேசுவதை ஒரு அன்பான அப்பா பொறுமையாகக் கேட்பார். அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புவார். ஏனென்றால், பிள்ளைகள்மேல் அவருக்கு அன்பும் அக்கறையும் இருக்கிறது. யெகோவா அப்பாவும் அப்படித்தான். நாம் செய்யும் ஜெபத்தை அவர் பொறுமையாகக் கேட்கிறார். யெகோவாவிடம் பேசுவது நமக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்!

11 நாம் எப்போது வேண்டுமானாலும் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். அவர் நம் நண்பராக இருப்பதால், நாம் செய்யும் ஜெபத்தைக் கேட்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். ஆரம்பத்தில் பார்த்த டேலென் சொல்கிறார், “ஜெபத்தில யெகோவாகிட்ட என்ன வேணும்னாலும் சொல்லலாம்.” யெகோவாவிடம் நம் மனதில் உள்ளதை கொட்டும்போது, அவர் பைபிள் மூலமாகவோ பத்திரிகைகள் மூலமாகவோ சகோதர சகோதரியின் மூலமாகவோ நம்மை உற்சாகப்படுத்தலாம். நாம் செய்யும் உருக்கமான ஜெபங்களை யெகோவா கேட்கிறார். மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லை என்றாலும் யெகோவா நம்மை புரிந்துகொள்கிறார். நம் ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுக்கும்போது அவர் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

12. கடவுளுடைய மக்கள் செய்த ஜெபங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

12 கடவுளுடைய மக்கள் செய்த ஜெபங்களைப் பற்றி பைபிளில் படிக்கும்போது நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். இதைக் குடும்ப வழிபாட்டில் படிக்கும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ஜெபங்களைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போது நம்மால் இன்னும் நன்றாக ஜெபம் செய்ய முடியும். உதாரணத்துக்கு, மீனின் வயிற்றில் இருந்தபோது யோனா செய்த ஜெபத்தைப் பற்றி படியுங்கள். (யோனா 1:17–2:10) சாலொமோன் ஆலயத்தை அர்ப்பணித்தபோது செய்த ஜெபத்தை ஆராய்ந்து பாருங்கள். (1 இரா. 8:22-53) அதோடு, இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தையும் வாசியுங்கள். (மத். 6:9-13) ‘உங்கள் விண்ணப்பங்களைத் தொடர்ந்து கடவுளுக்குத் தெரியப்படுத்துவது’ ரொம்பவே முக்கியம். அப்படி செய்தால், “எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்.” யெகோவா நம்மேல் வைத்திருக்கும் அன்புக்கு நாம் நன்றியோடு இருப்போம்.—பிலி. 4:6, 7.

மீட்கும் பலி

13. மீட்கும் பலியினால் என்ன நன்மை?

13 ‘நாம் வாழ்வு பெற’ வேண்டும் என்பதற்காகவே யெகோவா மீட்கும் பலியைக் கொடுத்திருக்கிறார். (1 யோ. 4:9) “தேவபக்தியற்ற எல்லா மனிதர்களுக்காகவும் குறித்த காலத்தில் கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவர் உயிரைக் கொடுப்பது அரிது; ஒருவேளை நல்லவனுக்காக யாராவது தன் உயிரைக் கொடுக்கத் துணியலாம். என்றாலும், நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்” என்று பவுல் சொன்னார். (ரோ. 5:6-8) யெகோவா நம்மேல் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மீட்கும் பலியிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. நாம் அவரோடு நண்பர்களாக ஆவதற்கு இந்த மீட்கும் பலி உதவியாக இருக்கிறது.

14, 15. மீட்கும் பலி மூலமாக (அ) பரலோகத்தில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன பலன்? (ஆ) பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன பலன்?

14 கிறிஸ்தவர்கள் கொஞ்சம் பேர், யெகோவாவின் அன்பை ஒரு விசேஷ விதத்தில் அனுபவிக்கிறார்கள். (யோவா. 1:12, 13; 3:5-7) இவர்கள் கடவுளுடைய சக்தி மூலமாக அபிஷேகம்பண்ணப்பட்டு, கடவுளுடைய பிள்ளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். (ரோ. 8:15, 16) இவர்களில் சிலர் இன்னும் பூமியில் இருக்கிறார்கள். இருந்தாலும் இவர்கள் இயேசு கிறிஸ்துவோடு ‘உன்னதங்களில் [பரலோகங்களில்] அமர்ந்திருக்கிறார்கள்’ என்று பவுல் சொன்னார். (எபே. 2:6) ஏனென்றால், பரலோகத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கையை யெகோவா இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.—எபே. 1:13, 14; கொலோ. 1:5.

15 பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மீட்கும் பலி மூலமாக நிறைய நன்மைகள் இருக்கின்றன. அவர்கள் கடவுளுடைய நண்பர்களாகவும் பிள்ளைகளாகவும் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு, பூமியில் முடிவில்லாமல் வாழும் வாய்ப்பும் இருக்கிறது. யெகோவா இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கிறார். அதனால்தான் மீட்கும் பலியைக் கொடுத்திருக்கிறார். (யோவா. 3:16) யெகோவாவுக்கு நாம் உண்மையோடு இருந்தால் புதிய உலகத்தில் மிகச் சிறந்த வாழ்க்கையை அவர் நமக்குக் கொடுப்பார். யெகோவா நம்மேல் வைத்திருக்கும் அன்பின் மிகப் பெரிய அத்தாட்சிதான் மீட்கும் பலி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதை மதிக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும்.

அன்பு காட்டுங்கள்

16. யெகோவா நம்மேல் வைத்திருக்கும் அன்பைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது நாம் என்ன செய்வோம்?

16 எண்ண முடியாத இன்னும் எத்தனையோ விதங்களில் யெகோவா நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார். “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப் பார்க்கிலும் அதிகமாம்” என்று தாவீது பாடினார். (சங். 139:17, 18) யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது நாமும் அவர்மேல் அன்பு காட்டுவோம்; அவருக்கு நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை செய்வோம்.

17, 18. யெகோவாமீது அன்பு காட்டுவதற்கு சில வழிகள் என்ன?

17 நாம் யெகோவாமீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட நிறைய வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் ஆர்வமாக சொல்லலாம். (மத். 24:14; 28:19, 20) கஷ்டமான சூழ்நிலையில் சகித்திருப்பதன் மூலம் யெகோவாமீது இருக்கும் அன்பைக் காட்டலாம். (சங்கீதம் 84:11; யாக்கோபு 1:2-5-ஐ வாசியுங்கள்.) பிரச்சினைகள் வரும்போது, நாம் எந்தளவு கஷ்டப்படுகிறோம் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு உதவி செய்ய அவர் தயாராக இருக்கிறார். ஏனென்றால், நாம் அவருக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கிறோம்.—சங். 56:8.

18 யெகோவாமீது அன்பு இருப்பதால் அவருடைய படைப்புகளை ரசிக்கிறோம், அதைப் பற்றி ஆழமாக யோசிக்கிறோம். பைபிளை ஆர்வமாகப் படிக்கிறோம். யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்த அவரிடம் தவறாமல் ஜெபம் செய்கிறோம். மீட்கும் பலியைப் பற்றி யோசித்துப் பார்ப்பதால் யெகோவாமீது நமக்கிருக்கும் அன்பு இன்னும் அதிகமாகிறது. (1 யோ. 2:1, 2) யெகோவா நம்மீது நிறைய வழிகளில் தொடர்ந்து அன்பு காட்டுகிறார். நாம் யெகோவாமீது அன்பு காட்ட இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் நான்கு வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம்.