Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதிர்ச்சியுள்ளவராக ஆவதற்கு முயற்சி செய்யுங்கள்

முதிர்ச்சியுள்ளவராக ஆவதற்கு முயற்சி செய்யுங்கள்

‘கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு நாம் முழு வளர்ச்சி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.’—எபே. 4:13.

பாடல்கள்: 69, 70

1, 2. ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் எப்படிப்பட்ட நபராக ஆக வேண்டும் என்று நினைப்பார்? உதாரணம் சொல்லுங்கள்.

நாம் பழம் வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு போனால் எப்படிப்பட்ட பழத்தை வாங்குவோம்? இருப்பதிலேயே பெரிய பழத்தை அல்லது விலை குறைவாக இருக்கும் பழத்தை வாங்க வேண்டும் என்று நினைப்போமா? இல்லை! நல்ல வாசனை உள்ள, சுவையான பழத்தை வாங்க வேண்டும் என்றுதான் நினைப்போம். பழம் வாங்கும்போது அது முழு வளர்ச்சி அடைந்திருக்கிறதா, அதாவது, நன்றாக பழுத்திருக்கிறதா என்று பார்த்துதான் வாங்குவோம்!

2 ஒருவர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, ஞானஸ்நானம் எடுத்த பிறகு யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பு தொடர்ந்து வளர்கிறது. ஞானஸ்நானம் எடுத்த அந்த நபர், ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக வேண்டும் என்று நினைப்பார். இங்கு, ‘முதிர்ச்சியுள்ள’ என்ற வார்த்தை ஒருவருக்கு வயதாவதை அர்த்தப்படுத்துவது இல்லை. யெகோவாவோடு ஒருவருக்கு இருக்கும் நெருக்கமான பந்தத்தைதான் அர்த்தப்படுத்துகிறது. எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்கள் முதிர்ச்சியுள்ளவர்களாக ஆக வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் விரும்பினார். அதனால், அவர்கள் எல்லாரும் ‘விசுவாசத்திலும் கடவுளுடைய மகனைப் பற்றிய திருத்தமான அறிவிலும் ஒன்றுபட வேண்டும் என்றும், கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு அவர்கள் முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றும்’ பவுல் அவர்களுக்கு எழுதினார்.—எபே. 4:13.

3. எபேசு சபையில் இருந்த என்ன சூழ்நிலை இன்று நம்முடைய சபையிலும் இருக்கிறது?

3 எபேசு சபை உருவாகி சில வருஷங்கள் ஆகியிருந்தன. அந்த சமயத்தில்தான், பவுல் அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினார். அந்த சபையில் இருந்த நிறைய பேர் ஏற்கெனவே அனுபவமுள்ளவர்களாக, முதிர்ச்சியுள்ளவர்களாக இருந்தார்கள். இருந்தாலும், சிலர் யெகோவாவோடு இருந்த பந்தத்தை இன்னும் பலப்படுத்த வேண்டியிருந்தது. இன்றும், நம்முடைய சபையில் முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவுக்குப் பல வருஷங்களாக சேவை செய்திருக்கிறார்கள். ஆனால், இன்னும் சிலர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆக வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். அவர்களில் சிலர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியென்றால், உங்களைப் பற்றி என்ன?—கொலோ. 2:6, 7.

எப்படி முதிர்ச்சியுள்ளவர்களாக ஆகலாம்?

4, 5. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் எப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள், இருந்தாலும் அவர்களுக்குள் பொதுவாக இருக்கும் விஷயம் என்ன? (ஆரம்பப் படம்)

4 பழம் பழுத்திருக்கிறதா என்று பார்த்து வாங்கும்போது, ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். பழுத்த எல்லா பழங்களும் ஒரே மாதிரி இருக்காது. இருந்தாலும், அந்தப் பழம் பழுத்திருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு சில பொதுவான விஷயங்கள் இருக்கும். முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் விஷயத்திலும் இதுதான் உண்மை. ஒவ்வொருவரும் வித்தியாசமான நாடு, பின்னணியிலிருந்து வருகிறார்கள். அவர்களுடைய வயதும் வித்தியாசப்படுகிறது. அவர்களுடைய விருப்பு வெறுப்புகள்கூட வித்தியாசப்படுகின்றன. இருந்தாலும், இந்த முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் சில விஷயங்கள் பொதுவாக இருக்கின்றன. அது என்ன?

5 ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் இயேசுவைப் போல நடந்துகொள்வார்; அவருடைய “அடிச்சுவடுகளை நெருக்கமாக” பின்பற்றுவார். (1 பே. 2:21) யெகோவாமீது முழு இருதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்டுவது ரொம்ப முக்கியம் என்று இயேசு சொன்னார். நம்மீது அன்பு காட்டுவதுபோல் மற்றவர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்று சொன்னார். (மத். 22:37-39) ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் இயேசு சொன்ன இந்த விஷயங்களுக்குக் கீழ்ப்படிய கடினமாக முயற்சி செய்வார். யெகோவாவோடு இருக்கிற பந்தமும் மற்றவர்கள்மீது காட்டும் அன்பும்தான் எல்லாவற்றையும்விட முக்கியம் என்பதை அவர் வாழும் விதம் காட்டும்.

பொறுப்புகளை ஏற்று செய்யும் இளம் கிறிஸ்தவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதன் மூலம், வயதான கிறிஸ்தவர்கள் இயேசுவைப்போல் மனத்தாழ்மையாக நடந்துகொள்ளலாம் (பாரா 6)

6, 7. (அ) ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் என்ன குணங்களை எல்லாம் காட்டுவார்? (ஆ) நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

6 ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் நிறைய நல்ல குணங்களைக் காட்டுவார். முக்கியமாக, அன்பாக நடந்துகொள்வார். (கலா. 5:22, 23) பொறுமையாகவும் சாந்தமாகவும் இருப்பார். அதோடு, சுயக்கட்டுப்பாட்டோடும் நடந்துகொள்வார். எரிச்சலடையாமல் கஷ்டங்களை சகிக்க இந்தக் குணங்கள் அவருக்கு உதவி செய்யும்; நம்பிக்கையை இழந்துவிடாமல் ஏமாற்றங்களை சமாளிக்கவும் உதவி செய்யும். எது சரி, எது தவறு என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் பைபிளையும் நம் பத்திரிகைகளையும் எப்போதும் ஆராய்ச்சி செய்வார். பிறகு, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை வைத்து, அதாவது பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து அவர் நல்ல தீர்மானங்களை எடுப்பார். ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் மனத்தாழ்மையாக இருப்பார். அவருடைய யோசனைகளையும் எண்ணங்களையும்விட யெகோவாவுடைய வழிகளும் சட்டங்களும்தான் சரியாக இருக்கும் என்று நம்புவார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை சுறுசுறுப்பாகப் பிரசங்கிப்பார். சபை ஒற்றுமையாக இருக்க அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார்.

7 நாம் எவ்வளவு வருஷங்களாக யெகோவாவுக்கு சேவை செய்தாலும் சரி, இந்தக் கேள்வியை நாம் எல்லாரும் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இயேசுவை இன்னும் நெருக்கமா பின்பற்ற நான் ஏதாவது மாற்றம் செய்யணுமா? நான் இன்னும் என்னென்ன விதங்கள்ல முன்னேற்றம் செய்யணும்?’

பைபிளை ஆழமாகப் படித்து புரிந்துகொள்ளுங்கள்

8. இயேசு பைபிளை எந்தளவு புரிந்துவைத்திருந்தார்?

8 இயேசு கிறிஸ்து கடவுளுடைய வார்த்தையில் இருந்த விஷயங்களை நன்றாகப் புரிந்துவைத்திருந்தார். அவருக்கு 12 வயது இருந்தபோதே, பைபிளைப் பயன்படுத்தி ஆலயத்தில் இருந்த போதகர்களிடம் பேசினார். “அவருடைய புத்திக்கூர்மையைக் கண்டும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் அங்கிருந்த எல்லாருமே மலைத்துப்போனார்கள்.” (லூக். 2:46, 47) இயேசு அவருடைய எதிரிகளிடம் பிரசங்கிக்கும்போதும், பைபிளைத் திறமையாகப் பயன்படுத்தினார். அவர் பேசியதைக் கேட்டு அவர்களால் ஒரு வார்த்தைகூட சொல்ல முடியவில்லை.—மத். 22:41-46.

9. (அ) ஒருவர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கு எப்படிப்பட்ட படிப்பு பழக்கம் இருக்க வேண்டும்? (ஆ) நாம் ஏன் பைபிளைப் படிக்க வேண்டும்?

9 ஒருவர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கு இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவார். பைபிளை மேலோட்டமாக படிப்பதற்குப் பதிலாக, அதை நன்றாகப் படித்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்வார். “திட உணவோ முதிர்ச்சி அடைந்தவர்களுக்கே உரியது” என்பதால் பைபிளை நன்றாக ஆராய்ச்சி செய்வார்; ஆழமான பைபிள் உண்மைகளைத் தெரிந்துகொள்வார். (எபி. 5:14) பைபிளைப் பற்றிய ‘திருத்தமான அறிவை’ பெற்றுக்கொள்ள ஆசைப்படுவார். (எபே. 4:13) ‘நான் தினமும் பைபிளை படிக்கிறேனா? நம்மளோட பிரசுரங்களை ஆராய்ச்சி செஞ்சு படிக்க அட்டவணை போடுறேனா? ஒவ்வொரு வாரமும் குடும்ப வழிபாடு செய்றேனா?’ என்று உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். யெகோவா எப்படி யோசிக்கிறார், எப்படி உணர்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் விதத்தில் பைபிளை ஆராய்ச்சி செய்து படியுங்கள். இந்த விஷயங்களை வைத்து நல்ல தீர்மானம் எடுங்கள். யெகோவாவுடைய நெருங்கிய நண்பராவதற்கு இது உங்களுக்கு உதவி செய்யும்.

10. கடவுளுடைய ஆலோசனைகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் எப்படி உணருவார்?

10 ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர், பைபிள் சொல்வதைத் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. கடவுளுடைய சட்டங்களையும் ஆலோசனைகளையும் அவர் நேசிக்க வேண்டும். அதை செயலிலும் காட்ட வேண்டும். தான் விரும்புகிறபடி நடப்பதைவிட யெகோவா விரும்புகிறபடி நடப்பதன் மூலம் அதை செயலில் காட்டலாம். வாழும் விதத்திலும், யோசிக்கும் விதத்திலும், நடந்துகொள்ளும் விதத்திலும் அவர் மாற்றங்கள் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் இயேசுவைப் போல நடந்துகொள்வார். “கடவுளுடைய சித்தத்தின்படி, உண்மையான நீதிக்கும் பற்றுறுதிக்கும் இசைவாக உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை” வளர்த்துக்கொள்வார். (எபேசியர் 4:22-24-ஐ வாசியுங்கள்.) பைபிள் கடவுளுடைய சக்தியால் எழுதப்பட்டிருக்கிறது. அதனால், ஒரு கிறிஸ்தவர் பைபிளைப் படிக்கும்போது அவருடைய பைபிள் அறிவும் பைபிள் சட்டங்கள்மீது அவருக்கு இருக்கும் அன்பும் அதிகமாவதற்கு கடவுளுடைய சக்தி அவருக்கு உதவி செய்யும். அதோடு, யெகோவாவோடு அவருக்கு இருக்கும் பந்தம் பலப்படவும் அந்த சக்தி உதவி செய்யும்.

சபை ஒற்றுமையாக இருக்க உதவி செய்யுங்கள்

11. இயேசு பூமியில் இருந்தபோது எப்படிப்பட்ட மக்கள் அவரை சுற்றி இருந்தார்கள்?

11 இயேசு எந்தத் தவறும் செய்யாதவராக இருந்தார். ஆனால் அவர் பூமியில் இருந்தபோது, அவரை சுற்றி இருந்தவர்கள் தவறு செய்யும் இயல்புடையவர்களாக இருந்தார்கள். அவருடைய அப்பா-அம்மா, தம்பி-தங்கை எல்லாரும் தவறு செய்பவர்களாக இருந்தார்கள். அவருடைய சீடர்கள்கூட சில நேரங்களில் சுயநலக்காரர்களாக, பெருமைபிடித்தவர்களாக நடந்துகொண்டார்கள். உதாரணத்துக்கு இயேசு இறப்பதற்கு முந்தின இரவு, அவருடைய சீடர்கள் “தங்களில் யார் மிக உயர்ந்தவர்” என்று வாக்குவாதம் செய்தார்கள். (லூக். 22:24) சீடர்கள் அப்படி நடந்துகொண்டாலும், அவர்கள் முதிர்ச்சியுள்ள நபர்களாக ஆவார்கள், ஒற்றுமையான ஒரு சபையை உருவாக்குவார்கள் என்று இயேசு நம்பினார். அவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இயேசு அன்று இரவே யெகோவாவிடம் இப்படி ஜெபம் செய்தார்: “நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.”—யோவா. 17:21, 22.

12, 13. (அ) நம் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்? (ஆ) சபை ஒற்றுமையாக இருக்க உதவி செய்ய வேண்டும் என்பதை ஒரு சகோதரர் எப்படிக் கற்றுக்கொண்டார்?

12 சபை ஒற்றுமையாக இருக்க ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் உதவி செய்வார். (எபேசியர் 4:1-6, 15, 16-ஐ வாசியுங்கள்.) நாம் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே நம் குறிக்கோளாக இருக்கிறது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், ஒரு கிறிஸ்தவர் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும். ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர், மற்றவர்கள் தன்னை காயப்படுத்தினாலும் சபை ஒற்றுமையாக இருக்க கடினமாக முயற்சி செய்வார். அதனால், உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒரு சகோதரரோ சகோதரியோ எனக்கு விரோதமா ஏதாவது செஞ்சா நான் என்ன செய்றேன்? என்னை யாராவது காயப்படுத்திட்டா நான் எப்படி உணர்றேன்? அந்த நபரோடு பேசுறதையே நிறுத்திடுறேனா? இல்லன்னா அந்த நபரோடு சமாதானம் ஆகுறதுக்கு முயற்சி செய்றேனா?’ ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் பிரச்சினைகளை சரி செய்ய முயற்சி செய்வார், மற்றவர்களுக்கு பிரச்சினையாக இருக்க மாட்டார்.

13 யூவா என்ற சகோதரருடைய உதாரணத்தைக் கவனியுங்கள். முன்பெல்லாம், சகோதர சகோதரிகள் அவரை வேதனைப்படுத்தும்போது அவருக்குக் கஷ்டமாக இருக்கும். ஒருநாள், பைபிளிலிருந்தும் வேதாகமங்களின்பேரில் உட்பார்வை என்ற ஆங்கில புத்தகத்திலிருந்தும் தாவீதுடைய வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நினைத்தார். ஏன் தாவீதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நினைத்தார்? அதைப் பற்றி யூவா இப்படி சொல்கிறார்: “கடவுளோட ஊழியர்களால தாவீதுக்கும் நிறைய பிரச்சினை வந்தது. உதாரணத்துக்கு, சவுல் ராஜா தாவீதை கொலை செய்ய முயற்சி செஞ்சார். சிலர் அவர்மேல கல்லெறிய நினைச்சாங்க. அவரோட மனைவிகூட அவரை பார்த்து ஏளனமா சிரிச்சாங்க. (1 சா. 19:9-11; 30:1-6; 2 சா. 6:14-22) மத்தவங்க என்ன செஞ்சாலும் தாவீது யெகோவாவை தொடர்ந்து நேசிச்சார், அவர் மேல நம்பிக்கை வைச்சார். தாவீது மத்தவங்க மேல இரக்கம் காட்டுனார். நானும் தாவீதை போல மத்தவங்க மேல இரக்கம் காட்டணும்னு கத்துக்கிட்டேன். தப்பு செய்ற இயல்புடைய சகோதரர்களை எப்படி பார்க்கணும்னு பைபிளை படிச்சதுனால தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க செய்ற தப்பை எல்லாம் ஞாபகத்தில வைக்கிறதுக்கு பதிலா, சபை ஒற்றுமையா இருக்க முயற்சி செய்யணும்னு புரிஞ்சிக்கிட்டேன்.” சபை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது உங்களுடைய குறிக்கோளாகவும் இருக்கிறதா?

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்

14. இயேசு யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தார்?

14 இயேசு கிறிஸ்து எல்லாரிடமும் அன்பாகப் பழகினார். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என எல்லாரும் அவரோடு பழக ஆசைப்பட்டார்கள். இருந்தாலும், நெருங்கிய நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் கவனமாக இருந்தார். இயேசு அவருடைய சீடர்களிடம், “நான் உங்களுக்குக் கட்டளையிடுவதைச் செய்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்” என்று சொன்னார். (யோவா. 15:14) இயேசு யாரை அவருடைய நெருங்கிய நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தார்? அவரை உண்மையோடு பின்பற்றியவர்களை... யெகோவாவை நேசித்தவர்களை... யெகோவாவுக்கு முழுமனதோடு சேவை செய்தவர்களை... இயேசு நெருங்கிய நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தார். யெகோவாவை முழுமனதோடு நேசிப்பவர்களை உங்களுடைய நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறீர்களா? அப்படி செய்வது ஏன் முக்கியம்?

15. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களோடு பழகுவதால் இளம் கிறிஸ்தவர்களுக்கு என்ன நன்மை?

15 கதகதப்பான சூரிய ஒளி இருக்கும்போது பழங்கள் நன்றாகப் பழுக்கும். அதேபோல், சகோதர சகோதரிகளுடைய அன்பு இருந்தால் நீங்கள் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக முடியும். நீங்கள் ஒரு இளைஞரா? உங்கள் வாழ்க்கையில் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவைப் பல வருஷங்களாக சேவை செய்பவர்களை... சபை ஒற்றுமையாக இருக்க உதவி செய்பவர்களை... உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். அப்படிப்பட்டவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பதுதான் சரியானதாக இருக்கும்! ஏனென்றால், வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு இவர்கள் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்து வருகிறார்கள். வாழ்க்கையின் மிகச் சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்க இவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். இப்படிப்பட்ட நண்பர்களோடு நேரம் செலவிடுங்கள். அப்படி செய்யும்போது, நீங்கள் நல்ல தீர்மானம் எடுக்கவும் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆகவும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.எபிரெயர் 5:14-ஐ வாசியுங்கள்.

16. சபையில் இருந்த வயதானவர்கள் ஒரு இளம் சகோதரிக்கு எப்படி உதவி செய்தார்கள்?

16 ஹெல்கா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். அவருடைய பள்ளிப்படிப்பின் கடைசி வருஷத்தில் மாணவர்கள் எல்லாரும் வாழ்க்கையின் லட்சியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, நிறைய பேர் மேற்படிப்பு படிக்கப் போவதாக சொன்னார்கள். ஹெல்கா, இதைப் பற்றி சபையில் இருந்த முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடம் பேசினார். ஹெல்கா சொல்கிறார், “அவங்க எல்லாரும் என்னைவிட பெரியவங்க. எனக்கு நிறைய உதவி செஞ்சாங்க. முழுநேர ஊழியம் செய்றதுக்கு என்னை உற்சாகப்படுத்துனாங்க. அதனாலதான், என்னால 5 வருஷம் முழுநேர ஊழியம் செய்ய முடிஞ்சது. என்னோட இளமை காலத்தை யெகோவாவுக்கு சேவை செய்ய பயன்படுத்துனத நினைச்சு இப்போ ரொம்ப சந்தோஷப்படுறேன். இதுக்காக நான் ஒருநாள்கூட வருத்தப்பட்டதே இல்ல.”

17, 18. நாம் எப்படி யெகோவாவுக்கு மிகச் சிறந்த விதத்தில் சேவை செய்ய முடியும்?

17 இயேசுவைப் போல நடந்துகொண்டால், நாம் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆக முடியும். அதோடு, யெகோவாவோடு நல்ல நண்பர்களாகவும் ஆக முடியும்; அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நம்முடைய ஆசையும் அதிகமாகும். ஒரு கிறிஸ்தவர் முதிர்ச்சியுள்ளவராக ஆகும்போது, அவரால் யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க முடியும். இயேசு அவரைப் பின்பற்றியவர்களை இப்படி உற்சாகப்படுத்தினார்: “உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள். அப்போது, அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு உங்கள் பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.”—மத். 5:16.

18 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரால் சபைக்கு எப்படிப் பக்கபலமாக இருக்க முடியும் என்று பார்த்தோம். மனசாட்சியைப் பயன்படுத்தும் விதத்திலும், ஒரு கிறிஸ்தவர் முதிர்ச்சியுள்ள நபராக இருப்பதைக் காட்ட முடியும். நல்ல தீர்மானங்கள் எடுக்க நம்முடைய மனசாட்சி நமக்கு எப்படி உதவும்? மற்றவர்களுடைய மனசாட்சிக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 6 உதாரணத்துக்கு அனுபவமுள்ள, வயதான சகோதரர்கள் அவர்கள் செய்துகொண்டிருக்கும் நியமிப்பை மற்ற இளம் சகோதரர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அந்த நியமிப்பை இளம் சகோதரர்கள் நன்றாக செய்வதற்கும் உதவி செய்ய வேண்டியிருக்கும்.