Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

கடவுளுடைய மக்கள் எந்த சமயத்திலிருந்து மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்?

கி.பி. 2-வது நூற்றாண்டிலிருந்து 1919 வரை கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள். இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட விளக்கத்தில் இப்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏன்?

பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் 1919-ல் பொய் மதத்திலிருந்து விடுதலையானார்கள் என்பதற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. அந்த சமயத்தில் அவர்கள் பொய் மதத்திலிருந்து விடுதலையாகி, சுத்திகரிக்கப்பட்ட ஒரு சபையாக கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள். இதை கொஞ்சம் கவனியுங்கள்: 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்த உடனேயே கடவுளுடைய மக்கள் சோதனை செய்யப்பட்டு பொய் மதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுத்திகரிக்கப்பட்டார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (மல். 3:1-4) பிறகு சுத்திகரிக்கப்பட்ட கடவுளுடைய மக்களுக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிப்பதற்காக’ 1919-ல் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ இயேசு நியமித்தார். (மத். 24:45-47) அதே வருஷத்தில் மகா பாபிலோனிலிருந்து கடவுளுடைய மக்கள் விடுதலையானார்கள். (வெளி. 18:4) ஆனால், கடவுளுடைய மக்கள் எந்த சமயத்திலிருந்து மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்?

1918-லிருந்து கொஞ்ச காலத்துக்கு கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்று இதற்கு முன்பு விளக்கப்பட்டது. இஸ்ரவேலர்கள் எப்படி பாபிலோனுக்கு அடிமைகளாக போனார்களோ அதேபோல் 1918-ல் யெகோவாவின் மக்களும் மகா பாபிலோனுக்கு அடிமைகளாக ஆனார்கள் என்று மார்ச் 15, 1992 காவற்கோபுரம் விளக்கியது. ஆனால் பைபிளை ஆராய்ச்சி செய்ததிலிருந்து அவர்கள் பல நூறு வருஷங்களுக்கு முன்பிருந்தே அடிமைகளாக இருந்தார்கள் என்று தெரிந்துகொள்கிறோம்.

கடவுளுடைய மக்கள் அடிமைகளாக இருந்து, அதன்பின் விடுதலையாவார்கள் என்று எசேக்கியேல் 37:1-14-ல் சொல்லப்பட்டிருக்கிறது. எசேக்கியேல் ஒரு தரிசனத்தில் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை பார்த்தார். “இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே” என்று யெகோவா சொன்னார். (வசனம் 11) இந்த வார்த்தைகள் முதலில் இஸ்ரவேல் மக்களையும் அதற்கு பிறகு, ‘கடவுளுடைய இஸ்ரவேலர்களாக’ இருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது. (கலா. 6:16; அப். 3:21) எசேக்கியேல் பார்த்த தரிசனத்தில், அந்த எலும்புகள் உயிர் பெற்று “மகா பெரிய சேனையாய்” ஆனது. 1919-ல் கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனில் இருந்து விடுதலையான விதத்தை இது விளக்குகிறது. ஆனால், அவர்கள் பல நூறு வருஷங்களாக அடிமைகளாக இருந்தார்கள் என்பதை இந்த தீர்க்கதரிசனம் எப்படி விளக்குகிறது?

முதலாவதாக, எசேக்கியேல் அந்த தரிசனத்தில் பார்த்த இறந்துபோனவர்களுடைய எலும்புகள் “உலர்ந்ததுமாயிருந்தது,” அதாவது காய்ந்துபோயிருந்தது. (எசே. 37:2, 11) அப்படியென்றால், அவர்கள் இறந்துபோய் ரொம்ப நாட்கள் ஆகியிருந்தது. இரண்டாவதாக, இறந்துபோனவர்கள் திடீரென்று உயிர் பெறாமல் கொஞ்ச கொஞ்சமாக உயிர் பெறுவதை எசேக்கியேல் பார்த்தார். அப்போது, “ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன் தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.” அதன்பின் “அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது.” பிறகு ‘ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்தார்கள்.’ கடைசியில் அவர்கள் உயிரோடு வந்த பிறகு “உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்” என்று யெகோவா சொன்னார். இதெல்லாம் நடக்க நிச்சயம் நிறைய நாட்கள் எடுத்திருக்கும்.—எசே. 37:7-10, 14.

இந்த தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டதுபோல் இஸ்ரவேலர்கள் பல வருஷங்கள் அடிமைகளாக இருந்தார்கள். கி.மு. 740-ல் பத்து கோத்திர இஸ்ரவேலர்கள் (வடக்கு ராஜ்யம்) அவர்களுடைய நாட்டை விட்டு அடிமைகளாக கொண்டுபோகப்பட்டார்கள். பிறகு கி.மு. 607-ல் எருசலேம் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டதால் இரண்டு கோத்திரத்தை சேர்ந்தவர்களும் (தெற்கு ராஜ்யம்) அடிமைகளாக கொண்டுபோகப்பட்டார்கள். அதன்பின் கி.மு. 537-ல் பாபிலோனிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அப்போது ஆலயத்தை திரும்ப கட்டவும் யெகோவாவை வணங்கவும் சில யூதர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்.

இதுவரை பார்த்த விஷயங்களில் இருந்து பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் 1918-1919 வரை மட்டுமல்ல, நிறைய வருஷங்களாக அவர்கள் மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்திருக்க வேண்டும். இந்த நீண்ட காலப்பகுதியை பற்றி இயேசுவும் ஒரு உதாரணத்தில் சொல்லியிருக்கிறார். களைகளைப் போல் இருக்கிற பொய்க் கிறிஸ்தவர்களும் கோதுமையை போன்று இருக்கிற ‘கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளும்’ சேர்ந்தே வளருவார்கள் என்று சொன்னார். (மத். 13:36-43) அந்தச் சமயத்தில் சில உண்மைக் கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட நிறையப் பேர் பொய் போதனைகளை நம்பி விசுவாசதுரோகிகளாக ஆனார்கள். அதனால்தான் கிறிஸ்தவ சபை மகா பாபிலோனுக்கு, அதாவது பொய் மதத்துக்கு, அடிமையாக இருந்தது என்று சொல்லலாம். இந்த அடிமைத்தனம் கிட்டத்தட்ட கி.பி. 2-வது நூற்றாண்டில் ஆரம்பித்து கடைசி நாட்களில் யெகோவா அவருடைய ஆலயத்தை சுத்திகரித்த சமயம்வரை நீடித்தது.—அப். 20:29, 30; 2 தெ. 2:3, 6; 1 யோ. 2:18, 19.

இந்த நீண்ட காலப்பகுதியில் சர்ச் பாதிரிகளும் அரசியல் தலைவர்களும் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்தார்கள். உதாரணத்துக்கு, மக்கள் சொந்தமாக ஒரு பைபிளை வைத்துக்கொள்ளவோ அல்லது சொந்த மொழியில் பைபிளைப் படிக்கவோ அவர்கள் அனுமதிக்கவில்லை. பைபிளைப் படித்த சிலரை கம்பத்தில் கட்டி எரித்தார்கள். சர்ச் பாதிரிகள் போதித்த விஷயங்களுக்கு எதிராகப் பேசியவர்களுக்கு கடுமையான தண்டனையைக் கொடுத்தார்கள். அதனால், யாராலும் பைபிளில் இருக்கும் உண்மைகளைக் தெரிந்துகொள்ளவோ அதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவோ முடியவில்லை.

எசேக்கியேலின் தரிசனத்தில் இருந்து, கடவுளுடைய மக்கள் திரும்பவும் உயிர் பெற்றார்கள் என்றும் பொய் மதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தார்கள் என்றும் தெரிந்துகொள்கிறோம். இதெல்லாம் எப்போது ஆரம்பித்தது, எப்படி நடந்தது? “ஒரு இரைச்சல்” சத்தத்தைப் பற்றி அந்தத் தரிசனம் சொல்கிறது. இது, கடைசி நாட்கள் ஆரம்பிப்பதற்கு சில நூறு வருஷங்கள் முன்பு ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் பைபிளில் இருக்கும் உண்மைகளை தெரிந்துகொள்ள உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் விரும்பினார்கள். எல்லா இடத்திலும் பொய் போதனைகள் பரவி இருந்தாலும் இவர்கள் கடவுளுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டார்கள். பைபிளை படித்து, அதில் இருக்கும் விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்ல அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள். சிலர் மக்களுக்கு புரியும் மொழியில் பைபிளை மொழிபெயர்க்க கடுமையாக முயற்சி செய்தார்கள்.

அந்தத் தரிசனத்தில் பார்த்ததுப் போலவே 1870-களில் எலும்புகளின்மீது சதையும் தோலும் வந்ததுபோல் இருந்தது. சார்ல்ஸ் டேஸ் ரஸலும் அவருடைய நண்பர்களும் பைபிளில் இருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் யெகோவாவுக்கு சேவை செய்யவும் கடுமையாக முயற்சி செய்தார்கள். பைபிளில் இருக்கும் உண்மைகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள சீயோனின் காவற்கோபுரத்தையும் மற்ற புத்தகங்களையும் பயன்படுத்தினார்கள். 1914-ல் “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷனையும்” 1917-ல் நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (The Finished Mystery) என்ற புத்தகத்தையும் பயன்படுத்தி யெகோவாவின் மக்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தினார்கள். 1919-ல், அந்தத் தரிசனத்தில் பார்த்த மாதிரி கடவுளுடைய மக்கள் உயிர் பெற்று புது தேசத்தை பெற்றுக்கொண்டது போல் இருந்தது. அந்த சமயத்திலிருந்து பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்கினார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து “மகா பெரிய சேனையாய்” ஆனார்கள்.—எசே. 37:10; சக. 8:20-23. *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

கி.பி. 2-வது நூற்றாண்டில் இருந்து கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த காலப்பகுதியில்தான் நிறையப் பேர் பைபிளில் இருக்கும் உண்மைகளை ஒதுக்கிவிட்டு பொய் போதனைகளை ஏற்றுக்கொண்டார்கள், விசுவாசதுரோகிகளாக மாறினார்கள். அடிமைகளாக இருந்தபோது யெகோவாவை வணங்குவது இஸ்ரவேலர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்ததோ அதேபோல்தான் இந்த காலப்பகுதியில் இருந்தவர்களுக்கும் யெகோவாவை வணங்குவது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் இன்று நற்செய்தி எல்லாருக்கும் பிரசங்கிக்கப்படுகிறது. ‘ஞானவான்கள் ஒளியைப்போல பிரகாசிக்கும்’ காலப்பகுதியில் வாழ்வதற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்பட வேண்டும்! அதனால் இப்போது அநேகரால் யெகோவாவை ஏற்றுக்கொண்டு ‘சுத்தமாக்கப்பட்டவர்களாய், புடமிடப்பட்டவர்களாய்’ இருக்க முடிகிறது.—தானி. 12:3, 10.

இயேசுவை சாத்தான் சோதித்தபோது உண்மையிலேயே அவரை ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போனானா அல்லது ஆலயத்தை ஒரு தரிசனத்தில் காட்டினானா?

இயேசுவுக்கு அந்த ஆலயத்தை சாத்தான் எப்படி காட்டினான் என்று நமக்கு சரியாகத் தெரியாது.

இந்த சம்பவத்தைப் பற்றி மத்தேயுவும் லூக்காவும் எழுதியிருக்கிறார்கள். மத்தேயு பதிவில் நாம் இப்படி வாசிக்கிறோம்: ‘பின்பு, பிசாசு அவரைப் பரிசுத்த நகருக்கு அழைத்துக்கொண்டுபோய், ஆலய மதிலின் மேல்மாடத்தில் அவரை நிறுத்தினான்,’ அதாவது ஆலயத்தில் இருந்த உயரமான இடத்துக்கு அவரை கொண்டுபோனான். (மத். 4:5) லூக்கா பதிவில் இப்படி வாசிக்கிறோம்: ‘பிசாசு இயேசுவை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுபோய், ஆலய மதிலின் மேல்மாடத்தில் அவரை நிறுத்தினான்.’லூக். 4:9.

சாத்தான் இயேசுவை நிஜமாகவே ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போயிருக்க மாட்டான் என்று நம் பத்திரிகையில் இதற்கு முன்பு விளக்கப்பட்டது. இதைப் பற்றி மார்ச் 1, 1961-ல் வெளிவந்த காவற்கோபுரம் இப்படி சொன்னது: ‘இயேசுவை சோதிப்பதற்காக ஒரு உயரமான மலைக்கு கொண்டுபோய் இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் சாத்தான் காட்டினான். ஆனால், இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் பார்க்கும் அளவுக்கு உயரமான மலை எதுவுமே இல்லை. அப்படியென்றால், சாத்தான் இயேசுவை நிஜமாகவே ஆலயத்துக்கு கொண்டுபோகவில்லை.’ ஆனால், சாத்தான் சொன்னதை கேட்டு இயேசு அந்த ஆலயத்தில் இருந்த குதித்திருந்தால் நிச்சயம் இறந்துபோயிருப்பார் என்று அதற்கு பிறகு வந்த காவற்கோபுர கட்டுரைகளில் சொல்லப்பட்டது.

இயேசு ஒரு லேவியனாக இல்லாததால் ஆலயத்துக்கு மேலே நிற்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். அதனால், சாத்தான் இயேசுவுக்கு ஒரு தரிசனத்தில்தான் ஆலயத்தை காட்டியிருப்பான் என்று நம்புகிறார்கள். பல நூறு வருஷங்களுக்கு முன்பு எசேக்கியேலும் தரிசனத்தில் ஒரு ஆலயத்துக்கு கொண்டுபோகப்பட்டார்.—எசே. 8:3, 7-10; 11:1, 24; 37:1, 2.

ஒருவேளை சாத்தான் இயேசுவுக்கு ஒரு தரிசனத்தில் ஆலயத்தை காட்டியிருந்தால் சிலர் இப்படி யோசிக்கலாம்:

  • ஆலயத்தில் இருந்து குதிக்க சொன்னது இயேசுவுக்கு உண்மையிலேயே ஒரு சோதனையாக இருந்திருக்குமா?

  • கற்களை ரொட்டிகளாக்கும்படியும் தன்னை வணங்கும்படியும் சாத்தான் நிஜமாகவே சொன்னான் என்றால் ஆலயத்தில் இருந்து குதிக்க சொன்னதும் நிஜமாகத்தானே இருக்க வேண்டும்?

ஒருவேளை சாத்தான் நிஜமாகவே இயேசுவை ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தால் சிலர் இப்படி யோசிக்கலாம்:

  • ஆலயத்தின் மேல்மாடத்தில் இயேசு நிற்பதால் அவர் திருச்சட்டத்தை மீறிவிட்டாரா?

  • வனாந்தரத்தில் இருந்து இயேசு எப்படி எருசலேம் ஆலயத்துக்கு வந்திருப்பார்?

இந்த 2 கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள உதவும் சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மத்தேயு மற்றும் லூக்கா புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட ‘ஆலயம்’ என்ற கிரேக்க வார்த்தை லேவியர்கள் மட்டுமே போவதற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை குறிப்பதில்லை. அதற்குப் பதிலாக ஆலயப் பகுதி முழுவதையும் குறிக்கிறது என்று பேராசிரியர் டி. எ. கார்சன் சொல்கிறார். ஆலயத்தின் தென்கிழக்கு பகுதிதான் மிக உயரமான இடமாக இருந்தது. ஒருவேளை இயேசு அங்குதான் நின்றிருக்க வேண்டும். அங்கிருந்து கீதரோன் பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 450 அடி (140 மீட்டர்) ஆழத்தில் இருந்தது. இந்த உயரமான இடத்தில் நின்று ஒருவர் கீழே பார்த்தால் “அவருக்கு தலை சுற்றும்” என்று சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் சொல்கிறார். இயேசு ஒரு லேவியராக இல்லாததால் அவர் இந்த இடத்தில் நின்றிருக்கலாம். அதை யாரும் தடுத்திருக்க மாட்டார்கள்.

ஆனால், வனாந்தரத்தில் இருந்து இயேசு எப்படி எருசலேம் ஆலயத்துக்கு வந்திருப்பார்? எப்படி அங்கு வந்தார் என்று நமக்கு சரியாக தெரியாது. இயேசு எருசலேமுக்கு கொண்டுபோகப்பட்டார் என்று மட்டுமே பைபிள் சொல்கிறது. ஆனால் இயேசு எருசலேமில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தார், எவ்வளவு நேரம் சாத்தான் அவரை சோதித்தான் என்பதை பற்றி பைபிள் சொல்வதில்லை. ஒருவேளை, எருசலேமுக்கு இயேசு நடந்தே போயிருக்கலாம், அதற்கு ரொம்ப நேரம் எடுத்திருக்கலாம்.

உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் சாத்தான் ஒரு தரிசனத்தில் இயேசுவுக்கு காட்டியிருக்கலாம். ஏனென்றால், அந்த எல்லா ராஜ்யங்களையும் பார்க்கிற அளவுக்கு உயரமான மலை இந்தப் பூமியில் இல்லை. படத்தின் மூலமாக ஒரு ஊரில் இருக்கிற இடங்களை நாம் மற்றவர்களுக்கு காட்டுவதுபோல் சாத்தானும் இயேசுவுக்கு தரிசனத்தின் மூலமாக காட்டியிருக்கலாம். அவன் தரிசனத்தை காட்டியிருந்தாலும் இயேசு அவன் முன் விழுந்து நிஜமாகவே வணங்க வேண்டும் என்று விரும்பினான். (மத். 4:8, 9) அப்படியானால் ஆலயத்தில் இருந்து இயேசுவை குதிக்க சொன்னதும் நிஜமாகத்தான் இருந்திருக்கும். ஒருவேளை ஆலயத்தை தரிசனத்தில் காட்டியிருந்தால் அங்கிருந்து குதிக்க சொன்னது இயேசுவுக்கு ஒரு சோதனையாகவே இருந்திருக்காது, இல்லையா?

நாம் இதுவரைக்கும் பார்த்ததில் இருந்து இயேசு ஆலயத்தில் இருந்த உயரமான இடத்துக்கு போயிருக்க வேண்டும். இருந்தாலும் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் இதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், ஒன்றை மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியும். சாத்தான் கொடுத்த இந்த சோதனைகள் ஒவ்வொன்றும் நிஜமானது, ஆனால், அந்த சோதனைகளுக்கு இயேசு சரியான பதிலடி கொடுத்தார்.

^ பாரா. 1 1919-ல் நடந்த சம்பவங்கள்தான் எசேக்கியேல் 37:1-14-லிலும் வெளிப்படுத்துதல் 11:7-12-லிலும் சொல்லப்பட்டிருக்கிறது. எசேக்கியேல் 37:1-14-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், பல நூறு வருஷங்களுக்கு அடிமைகளாக இருந்து, பிறகு 1919-ல் உண்மை வணக்கத்துக்கு திரும்பிய கடவுளுடைய மக்கள் எல்லாரையும் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் 11:7-12-ல் சொல்லப்பட்ட விஷயம், கடவுளுடைய மக்களை வழிநடத்துவதற்கு 1919-ல் திரும்பவும் உயிர் பெற்ற பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சிறு தொகுதியை குறிக்கிறது. முன்பு இந்த சகோதரர்கள், கடவுளுடைய சேவையை கொஞ்ச காலத்துக்கு சுறுசுறுப்பாக செய்ய முடியாத நிலையில் இருந்தார்கள்.