Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பல தடவை தோல்வி அடைந்தேன்... கடைசியில் வெற்றி பெற்றேன்

பல தடவை தோல்வி அடைந்தேன்... கடைசியில் வெற்றி பெற்றேன்
  • பிறந்த வருடம்: 1953

  • பிறந்த நாடு: ஆஸ்திரேலியா

  • என்னைப் பற்றி: ஆபாசத்துக்கு அடிமை

முன்பு:

1949-ல் என் அப்பா ஜெர்மனியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிமாறி வந்தார். சுரங்க தொழிற்சாலைகளிலும், மின்சாரம் உற்பத்தி செய்கிற நிலையங்களிலும் வேலை தேடினார். கடைசியாக, விக்டோரியா என்ற கிராமத்துக்கு குடிவந்தார். அங்குதான் என் அம்மாவை கல்யாணம் செய்தார், அப்புறம் 1953-ல் நான் பிறந்தேன்.

சில வருஷங்களுக்குப் பிறகு, என் அம்மா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். அப்போது கேட்ட பைபிள் விஷயங்கள்தான் முதன்முதலில் என் மனதில் பதிந்த பசுமையான விஷயங்கள். ஆனால், என் அப்பாவுக்கு மதம் என்றாலே துளிகூட பிடிக்காது. என் அம்மாவை அடிப்பார், மிரட்டுவார். அதனால், அம்மா ரொம்ப பயப்பட்டார்கள். அப்போது, அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாக அம்மா பைபிள் படித்து வந்தார்கள். அதிலுள்ள விஷயங்கள் அம்மாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்பா வீட்டில் இல்லாதபோது, பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை எனக்கும் தங்கச்சிக்கும் அம்மா சொல்லிக்கொடுப்பார்கள். எதிர்காலத்தில் இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறும்... பைபிளில் கடவுள் சொல்லி இருக்கிறபடி வாழ்ந்தால் எப்படி சந்தோஷமாக இருக்கலாம்... என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.—சங்கீதம் 37:10, 29; ஏசாயா 48:17.

என் அப்பா கொடூரமானவராக இருந்ததால், வீட்டைவிட்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது, அப்போது எனக்கு 18 வயசு இருக்கும். அம்மா சொல்லிக்கொடுத்த விஷயங்களை நம்பினாலும், அதன் மதிப்பு எனக்கு தெரியாமல் போய்விட்டது. அதனால் அதன்படி நான் வாழவில்லை. நிலக்கரி சுரங்கத்தில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்தேன். எனக்கு 20 வயசானபோது கல்யாணம் செய்துகொண்டேன். மூன்று வருஷங்களுக்கு பின்னாடி, எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது, வாழ்க்கையில் எது முக்கியம் என்று மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தேன். பைபிளில் இருக்கிற விஷயங்கள் குடும்ப வாழ்க்கைக்கு ரொம்ப உதவியாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், அதனால் ஒரு யெகோவாவின் சாட்சியோடு பைபிளை படிக்க ஆரம்பித்தேன். ஆனால், என் மனைவிக்கு யெகோவாவின் சாட்சிகள் என்றால் அறவே பிடிக்காது. அவர்களுடைய கூட்டங்களுக்கு நான் போனதால், கடைசியாக அவள் இப்படி சொல்லிவிட்டாள் — ‘ஒன்னு... பைபிள் படிக்கிறத நிறுத்துங்க, இல்லனா... வீட்டைவிட்டு போய்டுங்க.’ அவளுடைய சொல்லுக்கு மறுபேச்சு பேச முடியாமல், யெகோவாவின் சாட்சிகளோடு வைத்திருந்த தொடர்பை விட்டுவிட்டேன். எது சரியோ அதை செய்ய தவறியதை நினைத்து பின்னாடி வருத்தப்பட்டேன்.

ஒரு நாள், என்கூட வேலை பார்க்கிற ஒருத்தர் ஆபாசப் படங்களை காட்டினார். அது பார்ப்பதற்கு ரொம்ப வசீகரமாக இருந்தது, அதே சமயத்தில் அருவருப்பாகவும் இருந்தது. அதை பார்த்ததால் குற்றவுணர்ச்சி என்னை வாட்டி வதைத்தது. பைபிளில் படித்த விஷயங்கள் என் ஞாபகத்தில் இருந்ததால், நிச்சயம் கடவுள் என்னை தண்டிப்பார் என்று நினைத்தேன். இருந்தாலும், அசிங்கமான படங்களை நிறைய பார்க்க ஆரம்பித்தேன். அதனால் ஆபாசத்தைப் பார்ப்பது தப்பு என்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது. நாளாக நாளாக... அதற்கு அடிமை ஆகிவிட்டேன்.

அடுத்துவந்த 20 வருஷங்களில், அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த நல்ல விஷயங்களைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, ரொம்ப தூரம் போய்விட்டேன். என்ன விஷயங்கள் என் மனசுக்குள் போனதோ அதைத்தான் செயலிலும் காட்டினேன். கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசினேன், ஆபாசமான ஜோக்குகளை ரசித்தேன். செக்ஸ் பற்றி சரியான கண்ணோட்டம் எனக்கு இல்லை. இன்னும் என் மனைவியோடுதான் வாழ்ந்து வந்தாலும், மற்ற பெண்களோடும் தொடர்பு வைத்திருந்தேன். ஒரு நாள் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று என் உள்மனசு சொல்வதைக் கேட்டேன். என்மீது எனக்கு இருந்த மரியாதைபோய் என்மீதே எனக்கு வெறுப்பு வந்துவிட்டது.

என் மணவாழ்வு முறிந்துபோனது, வாழ்க்கை கிழிந்து கந்தலாகிவிட்டது. அப்புறம், என் மனசில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டி ஜெபம் செய்தேன். பைபிள் படிப்பை நிறுத்தி 20 வருஷங்கள் ஓடியிருந்தாலும், நான் மறுபடியும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில், என் அப்பா உயிரோடு இல்லை, என் அம்மா ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகியிருந்தார்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது:

என்னுடைய வாழ்க்கைக்கும் கடவுள் சொன்ன விஷயங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது கடவுள் தருகிற மனநிம்மதியைப் பெற வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தேன். இனிமேல் ஆபாசமாகப் பேசக் கூடாது... கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்... என்று முடிவு செய்தேன். அதோடு, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை விட்டுவிட வேண்டும்... சூதாடுவதை... வெறித்தனமாகக் குடிப்பதை... வேலை செய்யும் இடத்தில் திருடுவதை... நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தேன்.

நான் ஏன் இவ்வளவு பெரிய மாற்றங்களைச் செய்கிறேன் என்பதை கூடவேலை செய்பவர்களால் துளியும் புரிந்துகொள்ள முடியவில்லை. மூன்று வருஷங்களாக, என்னுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்லி அவர்கள் என்னை சதா தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தார்கள். நான் கொஞ்சம் சறுக்கி விழுந்தால்கூட... அதாவது எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலோ ஏதாவது ஒரு கெட்ட வார்த்தையை நான் பேசினாலோ... அவர்கள் ஒரே குஷியாகிவிடுவார்கள். “ஹா... நம்ம பழைய ஜோ வந்துட்டாரு” என்று கிண்டலாகச் சொல்வார்கள். அதை கேட்டபோது எனக்கு எவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா! அப்படிப்பட்ட சமயத்தில் நான் தோற்றுவிட்டது போல் உணர்ந்தேன்.

நான் வேலை பார்க்கிற இடத்தில் ஆபாசப் படங்களுக்கு பஞ்சமே இல்லை. எலக்ட்ரானிக்கிலும் பிரிண்ட்டிலும் கிடைத்தது. நான் முன்னாடி செய்த மாதிரியே, கூடவேலை செய்பவர்கள் மோசமான படங்களை கம்ப்யூட்டர்கள் மூலம் எனக்கு தவறாமல் அனுப்பி வைத்தார்கள். இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர முயற்சி பண்ணிக்கொண்டிருந்தேன், ஆனால் நான் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவர்கள் என்னை தடுக்கிவிழ வைப்பதில் குறியாக இருந்தார்கள். அதனால், உதவிக்காகவும் சோர்ந்துபோகாமல் இருப்பதற்காகவும் எனக்கு பைபிள் படிப்பு நடத்துகிறவரை நாடிப்போனேன். என் மனசில் இருக்கிறதை எல்லாம் கொட்டியபோது பொறுமையாக காதுகொடுத்து கேட்டார். ஆபாசத்துக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதை எப்படி சமாளிக்கலாம் என்பதற்குப் பொருத்தமான பைபிள் வசனங்களை எடுத்துகாட்டினார். உதவிக்காக யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்ய சொல்லி உற்சாகப்படுத்தினார்.—சங்கீதம் 119:37.

ஒரு நாள் என்கூட வேலை செய்கிறவர்களிடம் பேசுவதற்காக அவர்கள் எல்லாரையும் கூப்பிட்டேன். அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவந்த பிறகு, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவர முயற்சி செய்துகொண்டிருந்த இரண்டு பேருக்கு ‘பீர்’ கொடுக்க சொன்னேன். “அவங்ககிட்ட போய் கொடுக்க சொல்ற? அவங்க ஏற்கெனவே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதுல இருந்து மீண்டுவர போராடிக்கிட்டு இருக்கிறாங்க” என்று கத்தினார்கள். அப்போது, நான் அவர்களிடம் “ஆமாம், நானும் அதே நிலைமையிலதான் இருக்குறேன்” என்று சொன்னேன். ஆபாசத்துக்கு அடிமையாக இருக்கிற நான், அதை விட்டுவிட போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு அதற்குப் பின்பு அவர்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை.

சில காலத்திற்கு பிறகு, யெகோவாவிடமிருந்து கிடைத்த பெரும் உதவியால் ஆபாசப் படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். 1999-ல் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக ஆனேன். ஒழுக்கமாக... சந்தோஷமாக... வாழ எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியோடு இருக்கிறேன்.

ரொம்ப காலமாக நான் செய்துவந்த பழக்கங்களை கடவுள் ஏன் வெறுக்கிறார் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். அவர் அன்பான கடவுளாக இருப்பதால், ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் வருகிற ஆபத்துகளிலிருந்து என்னை பாதுகாக்க விரும்பினார். நீதிமொழிகள் 3:5, 6 சொல்வது எவ்வளவு உண்மை! அந்த வசனங்கள் சொல்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” பைபிள் சட்டங்கள் எனக்கு பாதுகாப்பை தந்திருக்கிறது, நான் பல தடவை தோல்வி அடைந்தாலும் கடைசியில் வெற்றி பெற எனக்கு உதவி செய்திருக்கிறது.—சங்கீதம் 1:1-3.

எனக்குக் கிடைத்த நன்மை:

ஒரு காலத்தில், என்னை நினைத்தாலே எனக்கு அருவருப்பாக இருந்தது. ஆனால் இப்போது எனக்கு சுயமரியாதையும் மனநிம்மதியும் கிடைத்திருக்கிறது. நான் சுத்தமான வாழ்க்கை வாழ்கிறேன், யெகோவாவுடைய மன்னிப்பும் ஆதரவும் எனக்குக் கிடைத்திருக்கிறது. 2000-ல் கரோலின் என்ற பெண்ணை கல்யாணம் செய்துகொண்டேன். என்னைப் போல் கடவுளை நேசிக்கிற ஒரு அழகிய கிறிஸ்தவ பெண் அவள். எங்கள் வீட்டில் இப்போது சமாதானம் குடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் இருக்கிற ஒழுக்கமான... அன்பான... கிறிஸ்தவ சகோதரர்களில் ஒருவனாக இருப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். ▪ (wp16-E No. 4)