Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட கட்டுரை | ஆறுதல் தேடி எங்கே போவது?

நம் அனைவருக்கும் ஆறுதல் தேவை

நம் அனைவருக்கும் ஆறுதல் தேவை

நீங்கள் சின்ன பிள்ளையாக இருந்தபோது கீழே விழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒருவேளை கையிலோ காலிலோ கீறல் ஏற்பட்டிருக்கலாம். அப்போது உங்களுடைய அம்மா உங்களை ஆறுதல்படுத்தியது நினைவிருக்கிறதா? காயத்துக்கு மருந்து தடவி, பேன்டேஜ் போட்டிருப்பார்கள். அடிபட்டபோது நீங்கள் அழுதிருப்பீர்கள், ஆனால் அம்மா உங்களைக் கனிவுடன் கட்டியணைத்து அன்புடன் பேசியது உங்களுடைய இதயத்துக்கு இதமாக இருந்திருக்கும். அந்தச் சமயத்தில், உங்களுக்கு ஆறுதல் அருகிலேயே இருந்தது!

ஆனால் நாம் வளர வளர... வாழ்க்கை சிக்கலாகிக்கொண்டே போகிறது. பிரச்சனைகள் பூதாகரமாக ஆகின்றன. ஆறுதல் கிடைப்பதே அபூர்வமாகிவிடுகிறது. பெரியவர்களுடைய பிரச்சனைகளை பேன்டேஜோ அம்மாவின் அரவணைப்போ தீர்க்க முடியாது. இப்போது, சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

  • என்றைக்காவது உங்களுடைய வேலை பறிபோயிருக்கிறதா? அதனால் நீங்கள் அப்படியே இடிந்துபோய்விட்டீர்களா? ஹூலியன் சொல்கிறார்... ‘என்னை வேலையவிட்டு தூக்குனப்போ ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. இனிமே, என் குடும்பத்தை எப்படித்தான் கவனிக்க போறேனோ... எனக்குத் தெரியல. இவ்ளோ வருஷமா மாடு மாதிரி உழைச்சேனே, கம்பெனி என்னை ஏன் தூக்கியெறிஞ்சுட்டாங்க?’

  • உங்களுடைய மணவாழ்வு முறிந்துபோய்விட்டதா? அதனால் உங்களுடைய வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? ரேக்கல் சொல்கிறார்... “ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி என்னோட புருஷன் என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரு, என் நெஞ்சே வெடிச்ச மாதிரி இருந்துச்சு. அப்போ... என் உடம்பும் சரி, மனசும் சரி, வலியில துடிச்சிச்சு, என் வாழ்க்கைய நினைச்சு பயப்பட ஆரம்பிச்சிட்டேன்.”

  • தீராத வியாதியால் அவதிப்படுகிறீர்களா? குணமாகும் என்ற நம்பிக்கையே இல்லாமல் துவண்டுபோய்விட்டீர்களா? முன்னொரு காலத்தில் வாழ்ந்த யோபுவைப் போல உங்களுடைய வாழ்க்கையிலும் சூறாவளி வீசியிருக்கலாம். அந்த மனிதர் இப்படித்தான் புலம்பினார்: “எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை.” (யோபு 7:16, NW) ஒருவேளை... சுமார் 80 வயதுடைய லூயிசைப் போல நீங்களும் உணரலாம், “சிலசமயத்துல... என்னைக்குத்தான் எனக்கு சாவு வருமோ-னு காத்துக்கிட்டு இருக்கேன்.”

  • பாசமுள்ளவரைப் பறிகொடுத்ததால் நீங்கள் ஆறுதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? ராபர்ட் சொல்கிறார்... “என்னோட மகன் பிளைன் ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்னு கேள்விப்பட்டப்போ அத என்னால நம்பவே முடியல. அந்த சமயத்துல எனக்கு ஏற்பட்ட வலி எப்படி இருந்துச்சுனா... ‘ஒரு நீளமான வாள் என் நெஞ்சுல ஊடுருவின மாதிரி இருந்துச்சு.’”—லூக்கா 2:35.

ராபர்ட், லூயிஸ், ரேக்கல், ஹூலியன்... இவர்கள் எல்லாருக்கும், வேதனையான சூழ்நிலைகள் வந்தபோதிலும்கூட, ஆறுதல் கிடைத்தது. யார் நமக்கு நன்றாக ஆறுதல் தர முடியுமோ அவரால் அந்த ஆறுதல் கிடைத்தது, ஆம் அவர் வேறு யாருமல்ல, சர்வவல்லமையுள்ள கடவுள்தான். அவர் எப்படி ஆறுதல் தருகிறார்? உங்களுக்கும் அதேபோல் அவர் ஆறுதல் தருவாரா? (wp16-E No. 5)