Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட கட்டுரை | ஆறுதல் தேடி எங்கே போவது?

கடவுள் எப்படி ஆறுதல் தருகிறார்

கடவுள் எப்படி ஆறுதல் தருகிறார்

‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள் எங்களுடைய எல்லா உபத்திரவங்களிலும் . . . எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்’ என்று யெகோவாவை * பற்றி அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார். (2 கொரிந்தியர் 1:3, 4) கடவுளுடைய உதவியைப் பெற முடியாதவர் யாருமே கிடையாது... நம் பரலோக தகப்பனால் ஆறுதல் தர முடியாத அளவுக்கு பயங்கரமான சோகம் எதுவுமே கிடையாது... என்பதாக பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.

அதேசமயத்தில், கடவுள் தருகிற ஆறுதலைப் பெற வேண்டுமானால் நாமும் ஒன்றை செய்ய வேண்டும். டாக்டரைப் பார்க்க ‘அப்பாய்ண்ட்மெண்டே’ வாங்காமல் இருந்தால், அவரால் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்? “முன்கூட்டியே பேசி வைத்துக்கொள்ளாமல் இரண்டு பேரால் சேர்ந்து நடக்க முடியுமா?” என்று ஆமோஸ் தீர்க்கதரிசி கேட்கிறார். (ஆமோஸ் 3:3, NW) அதனால், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று வேதவசனம் சொல்கிறது.—யாக்கோபு 4:8.

கடவுள் நம்மிடம் நெருங்கி வருவார் என்று எப்படி நாம் உறுதியாக நம்ப முடியும்? முதலாவதாக, கடவுள் நமக்கு உதவி செய்ய விரும்புவதாக அடிக்கடி நம்மிடம் சொல்கிறார். ( அடுத்த பக்கத்தில் இருக்கிற பெட்டியைப் பாருங்கள்.) இரண்டாவதாக, கடவுளிடமிருந்து ஆறுதலைப் பெற்றவர்களின் பதிவு நம்மிடம் இருக்கிறது; அவர்கள் நிஜமான ஆட்கள், கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல. அப்படிப்பட்டவர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள், இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள்.

இன்று கடவுளிடமிருந்து உதவியைப் பெற விரும்புகிற பலரைப் போலவே, அன்று தாவீது ராஜாவும் வாழ்க்கையில் துன்பங்களை எதிர்ப்பட்டபோது யெகோவாவிடம் உதவி கேட்டார். “உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்” என்று சொல்லி மன்றாடினார். கடவுள் அவருக்கு பதில் அளித்தாரா? ஆம், தாவீது சொன்னார்: “அவர் எனக்கு உதவி செய்தார், அதனால் என் இதயம் சந்தோஷப்படுகிறது.”—சங்கீதம் 28:2, 7, NW.

துக்கப்படுகிறவர்களுக்கு இயேசு ஆறுதல் அளிக்கிறார்

இயேசுவின் மூலமாகவும் கடவுள் நமக்கு ஆறுதல் தருகிறார், அது அவருடைய விருப்பமும்கூட. இயேசுவுக்குக் கடவுள் கொடுத்த பல வேலைகளில் ஒன்று, ‘உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவது,’ ‘துக்கப்படுகிற எல்லாருக்கும் ஆறுதல் சொல்வது.’ (ஏசாயா 61:1, 2, NW) இயேசுவை பற்றி பைபிள் முன்பு சொன்னபடி, ‘உழைத்துக் களைத்துப் போனவர்கள் மீதும், பெருஞ்சுமை சுமக்கிறவர்கள் மீதும்’ அவர் விசேஷ அக்கறை காட்டினார்.—மத்தேயு 11:28-30.

மக்களுக்கு ஞானமான அறிவுரை கொடுத்து... அவர்களை அன்புடன் நடத்தி... சில சமயங்களில் அவர்களுடைய வியாதியைக் குணப்படுத்தி... இயேசு ஆறுதல்படுத்தினார். ஒருநாள் தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து, “உங்களுக்கு மனமிருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று சொல்லிக் கெஞ்சினான். இயேசு மனதுருகி, “எனக்கு மனமிருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். (மாற்கு 1:40, 41) அந்தத் தொழுநோயாளி குணமானார்.

இன்று, நம் பக்கத்தில் இருந்து நம்மை ஆறுதல்படுத்துவதற்கு கடவுளுடைய மகன் பூமியில் இல்லை. இருந்தாலும், அவருடைய அப்பா யெகோவா, ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாக’ இருக்கிறார். அதனால் கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு எப்போதும் உதவி செய்கிறார். (2 கொரிந்தியர் 1:3) மக்களை கடவுள் ஆறுதல்படுத்துவதற்கு பயன்படுத்துகிற நான்கு வழிகளை இப்போது பார்க்கலாம்.

  • பைபிள். “வேதவசனங்களின் மூலம் உண்டாகிற சகிப்புத்தன்மையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை பெறும்படி, முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்தும் நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன.”—ரோமர் 15:4.

  • கடவுளுடைய சக்தி. இயேசு இறந்து கொஞ்ச காலத்துக்குப் பிறகு, எல்லா கிறிஸ்தவ சபைகளும் சமாதானத்தை அனுபவித்தன. எப்படி? “யெகோவாவுக்குப் பயந்து நடந்ததாலும், அவருடைய சக்தியின் மூலம் ஆறுதலைப் பெற்றதாலும் பெருகிக்கொண்டே இருந்தது.” (அப்போஸ்தலர் 9:31) கடவுளுடைய சக்தியைப் போல வலிமை வாய்ந்தது வேறு எதுவுமில்லை. யாராக இருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அவரை ஆறுதல்படுத்துவதற்கு கடவுளால் தன் சக்தியைப் பயன்படுத்த முடியும்.

  • ஜெபம். “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்” என்று பைபிள் அறிவுரை கொடுக்கிறது. அதற்குப் பதிலாக, “எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என்று சொல்கிறது.—பிலிப்பியர் 4:6, 7.

  • சக கிறிஸ்தவர்கள். உண்மையான நண்பர்கள் ஒரு பாதுகாப்பு வளையம் போல் இருந்து, நமக்கு ஆறுதல் தருகிறார்கள். அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய நண்பரை... ‘இக்கட்டுகள், உபத்திரவங்கள்’ மத்தியில் ‘எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறவர்’ என்று வர்ணித்தார்.—கொலோசெயர் 4:11; 1 தெசலோனிக்கேயர் 3:7.

இதெல்லாம் நடைமுறையில் எப்படி சாத்தியம் என்று நீங்கள் யோசிக்கலாம். முந்தின கட்டுரையில் நாம் பார்த்த நபர்கள் எப்படி பிரச்சினைகளைச் சமாளித்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள அவர்களுடைய அனுபவங்களை இப்போது சற்று கூர்ந்து ஆராயலாம். அப்போது, “ஒரு தாய் தன் மகனை ஆறுதல்படுத்துவது போல, நான் உங்களை எப்போதும் ஆறுதல்படுத்துவேன்” என்று கடவுள் சொன்ன இதயத்துக்கு இதமளிக்கும் வாக்குறுதியை இன்றும் நிறைவேற்றுகிறார் என்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.—ஏசாயா 66:13, NW. (wp16-E No. 5)

^ பாரா. 3 யெகோவா என்பது பைபிளில் கடவுளுடைய பெயர்.